1 May 2020

தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனாஎழுத்தளார் சாதனாவிடம் ஓரிரு முறைகள் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் “என் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கவில்லை. வாசிப்பேன் என்று நானும் கூறவில்லை. ஆயினும் ஒரு வாசகனாக நான் உங்களிடம் கூறுவதெல்லாம் தவறாமல் சாதனாவின் இந்தச் சிறுகதை தொகுப்பை வாசித்துவிடுங்கள் என்பதுதான்.

இருண்மையை பற்றிய கதைகள் என்று முன்னறிமுகம் இருந்ததால் ஒரு சிறு தயக்கத்துடனேயே இவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். இப்படியான என் எண்ணைத்தை தன் முதல் சிறுகதையிலேயே மாற்றிவிட்டார். முன்னுரையில் சாரு நிவேதிதா குறிப்பிட்டதை போல, இந்தக் கதைகள் வேறு தேசத்தில் நிகழ்ந்த, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கதைகளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் இவையனைத்துமே தமிழர் ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் என்பது சற்றே வியப்பாக இருக்கிறது. இதற்கு முன் நரனின் “இதோ என் சரீரம்” சிறுகதை இதேபோன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் சாதனாவோ தன் அத்தனை கதைகளின் மூலமும் இந்த உணர்வை ஏற்படுத்துகிறார்.

சாதனாவின் பெரிய பலம் மொழிவளமும் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்கிற திறமையும். தன் அத்தனை கதைகளிலும் மொழியை வைத்து விளையாடுகிறார். இதுதான் கதை இப்படித்தான் வளரப் போகிறது என்றெல்லாம் அத்தனை எளிதில் கதையின் போக்கை கணித்துவிட முடிவதில்லை. வழக்காமான கதையாடலுக்கு நடுவே, இந்த கதைகள் புது உற்சாகத்தை கொடுத்தன.

சுருங்கச் சொல்வதென்றால், கலைத்துப் போடப்பட்ட சித்திரம் ஒன்றை ஒட்ட வைக்கும் வேலையையே நம்மிடம் தருகிறார். அதனை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறதா என்பது அவர் நமக்கு விடும் சவால். இந்த சிறுகதைத் தொகுப்பில் உச்சம் பெற்ற கதைகள் என்று நான் நினைப்பது இரண்டு. முதலாவது சிறுமி கத்தலோனா. அடுத்தது இத்தொகுப்பின் தலைப்பான தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்.

சாதானாவின் கதைகள் பெரும்பாலும் இருண்மையையும், வாழ்வுக்கும் மரணத்திற்குமான பாதைகளையுமே பேசுகின்றன. என்றாலும் இருண்மையின் வலி தெரியாமல் நம்மை அதனுள் இழுத்துச் செல்லும் தன்மை அந்த எழுத்திற்கு இருக்கிறது.

சிறுமி கத்தலோனா சிறுகதை அவமானத்தையும் அவமானத்தின் தொடர்ச்சியாய் மரணத்தையும் பேசுகிறது. பிறப்பால் சிங்கள மருத்துவரான சிலோன் நாதன், யுத்தத்தின் இடையே கால் உடைந்த சிறுமி கத்தலோனாவிற்கு மருத்துவம் செய்ய முயல்வதன் மூலம் சிங்கள ராணுவ பெண் ஒருவரின் வசை சொல்லிற்கு ஆளாகிறார். பின்னர் சிறைபிடிக்கப் படுகிறார். அங்கே நிகழும் வன்கொடுமையில், அப்பெண் அவரை உத்தோ என்று திட்டுகிறாள். உத்தோ என்றாள் பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் வசைச்சொல்.

அந்த வசைச்சொல் சிலோன் நாதனைத் துரத்துகிறது. விடுதலைக்குப் பின் ஜெர்மனிக்குப் புலம் பெயர்கிறார். அங்கும் அவரை துரத்துகிறது அந்த வசைச்சொல். கூடவே அதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களும் அவரைத் துரத்துகின்றன. தொடர்ச்சியாக தற்கொலை சார்ந்த எண்ணங்கள் வந்து போகின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் அவருக்கு வேலை கொடுத்த அவருடைய உற்ற நண்பனும் இறந்துபோக, உன்மத்தம் தலைக்கேறி வேசியைத் தேடிச் செல்கிறார். அந்த ராணுவப் பெண் எதைக்கூறி தன்னை வெட்கித்தலை குனியச் செய்தாளோ அதே இடத்தில் தன் உன்மத்ததைத் தீர்த்துக்கொள்கிறார்.

சிலோன் நாதனைப் பொறுத்தவரையில் - மரணம், தற்கொலை என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மரணித்தபின் தன்னால் அதனை உணர முடியாதே, அதுதானே மரணத்தைக் காட்டிலும் கொடிய வலி என்று அந்த ஒரு காரணத்திற்காக தன் மரணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். உன்மத்தம் தீர்ந்த ஒருநாளில்...

*****

தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்

நாஜிக்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையே நிகழும் யுத்த காலத்து கதை இது. நாயகன் ரஷ்ய படையினருக்காக சண்டையிடும் பொருட்டு ராணுவத்தில் சேர்கிறான். அவனிடம் ஒரு சிறிய பைபிளும் தஸ்தயேவ்ஸ்கியின் சில புத்தகங்களும் இருக்கின்றன. தீவிர வாசிப்பாளன் என்றபோதிலும் யுத்த பயிற்சியும், யுத்த களமும் அவனுக்கு என்னவிதமான உளவியல் சிக்கக்ல்களை தோற்றுவிக்கின்றன என்பதே கதை.

இந்த கதையில் ஒன்றன்மேல் ஒன்றாக பல அடுக்குகள் இருக்கின்றன. முதலாவது - மனித நேயமிக்க, போர் என்றால் என்னவென்றே தெரியாத கதையின் நாயகன் என்ற அடுக்கு. கதையின் நாயகனுடன் ராணுவப் பயிற்சியில் சேரும் விளாடிமின் என்கிற பயிற்சி வீரனின் தற்கொலை அவனை மனதளவில் பாதிக்கிறது. விளாடிமின் எத்தனையோ முறை தன்னிடம் பேச முயன்றும், பேச வாய்ப்பளிக்காமல் போன கணத்தில் இந்த தற்கொலை முடிவை அவன் எடுத்திருக்கக்கூடும் என்று தன்னுள் அவன் உழல்கிறான். ஒரேயொருமுறை அவனோடு பேசியிருக்கலாமோ என்று வருந்துகிறான். இது ஒரு அடுக்கு.

ராணுவத்தின் அடுத்தபடிநிலையாக துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே விதி எனும் வட்டத்திற்குள் நடமாடும் கரடி குறித்தான அவன் சிந்தனைகள், அந்தக் கரடி வேட்டையை தவிர்க்கச் சொல்கிறது. தான் கொல்ல இருக்கும் அந்த கரடியை நினைத்துப் பெரிதும் துயருகிறான். ஒரு பாவமும் அறியாத அந்தக் கரடியைக் கொல்வதில் அவனுக்கு சிறிதும் உடன்பாடில்லை. கொல்லவில்லை என்றால் அவனுக்கு வேலை இல்லை. கதையின் மிகச் சிறந்த பகுதிகள் என்றால் இந்த உளவியல் ஓட்டங்கள்தாம். வரிசையாக வந்துவிழும் அத்தனை வரிகளையும் ஹைலைட் செய்து வைத்திருக்கிறேன். முன்னரையில் சாருவும் அதைத்தான் செய்திருக்கிறார். 

நாயகனுக்குப் பயிற்சி கொடுக்கும் பயிற்றுநர், நாயகனின் பிரச்னையை எளிதில் கண்டுகொண்டு கொல்வதன் நியாயத்தை கற்பிக்கிறார். எத்தனை காலம் கடத்தியும் கரடி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. நாயகன் நினைக்கிறான் – கரடி தன்னுடைய கடைசி விதிக்குள் நடமாடுவது போலவே அவனுக்குத் தோன்றியது என்று. இது ஒரு அடுக்கு.

மனித வேட்டைகள் நிரம்பிய போர்க்களம் அவனுக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறது. அவன் தன் ஓர் அடுக்கில் இருந்து பிறிதொரு அடுக்கு நோக்கி நகர்கிறான். போரில் காயம்பட்ட நாஜி வீரனுக்கு தாகம் தணிக்க நீர் கொடுக்க முடியும் அதே மனதால், அதே வீரனை குத்திக் கொல்லவும் முடிகிறது. பின் அங்கிருந்து ஒரு ஜெர்மானிய பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுபோடவும் முடிகிறது. இவ்வாறு அவனுக்குள் அவனே இரண்டாகப் பிரிந்து ஒரு யுத்தம் நிகழ்த்துகிறான். அந்த யுத்தத்தின் முடிவில் நாஜிக்களுடன் வெற்றிபெற முடிந்தாலும் அவனுள் இருக்கும் வேறொருவனால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தோற்கும் கணத்தில் அவனிடம் இருந்த சிறிய பைபிள் தோற்றுப்போனதையும் உணர்கிறான். அந்த உணர்வை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதோடு கதை முடிகிறது.

*****

மேற்கூறிய இரண்டிற்கும் அடுத்தபடியாக என்னை ஈர்த்த கதை – தாய். சற்றே வித்தியாசமான கதைசொல்லல் முறையைக் கொண்டது. யோகோவிச் என்ற மனிதனின் நனவோட்டமாக, கதை எங்கோ ஓரிடத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்கின்றது. காரணங்களற்று அநாதையாக்கப்படும் ஒரு தாய் குறித்த கதை. புரிந்துகொள்ள முடியாத நுட்பச்சிக்கல்களே வாழ்க்கை அதற்கு பலியாடு அந்தத் தாய் என்றளவில் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.  

*****

அக்கா என்கிற அந்த இரண்டாவது கதை எனக்குப் புரியவில்லை. கதை கூறப்பட்ட வகையில் தெளிவாக இருப்பது போல், புரிந்துகொள்வதற்கு சிரமம் இல்லாமல் இருப்பது போல் தோன்றினாலும் அதனை எப்படி டீகோட் செய்வது என்று தெரியவில்லை.

கதைசொல்லி ஒரு கதை எழுதுகிறான். இடையில் தன் கதையையும் கூறுகிறான். தன் கதையில் அவன் மிக தீவிர ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். அதேநேரம் தான் எழுதும் கதையில் ஜாதிப்பிரச்சனை காரணமாய்ப் பிரிந்துபோன தன் அக்காவிற்காக உருகும் பெண்ணியவாதியாய் இருக்கிறான். என்றளவில் மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. Sorry. My bad…

*****

இவை தவிர்த்து யூதாஸின் முத்தம் மற்றும் ஓ தாவீது ராஜாவே இவை இரண்டுமே பைபிளின் அடிநாதம் தொட்டு எழுதப்பட்ட கதைகள். கதையின் அழகியல் என்றளவில் அற்புதமான கதைகள் என்றபோதிலும், எனக்கு பைபிள் தெரியாது என்பதால் சற்றே அந்நியமாகத் தோன்றின. பைபிள் கதைகள் என்றபோதிலும் அவற்றில் பிரச்சார நெடி இல்லை என்பதும் மிக முக்கியமான விஷயம்.

*****

சாதனா தன்னுடைய கதைகளை வருடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் கடந்த ஆறு வருடங்களாக இவற்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். இவருடைய முதல் புத்தகம் என்றே கூறமுடியாத அளவிற்கு அசுரப் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தவறவிடாதீர்கள். (தஸ்தேயவ்ஸ்கி இவர் கதைளில் மாபெரும் ஆதிக்கம் பெறுகிறார். தஸ்தேயவ்ஸ்கியை நான் படித்ததில்லை என்றாலும் அதுதான் உண்மை)

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

வெளியீடு : எழுத்துப் பிரச்சுரம்
வாசிப்பு : கிண்டில்

2 comments:

  1. நன்று... புத்தகங்களும் நேரத்தை கடத்துகின்றன...

    ReplyDelete
  2. வாசிப்பை நேசிப்போம்.

    நல்லதொரு அறிமுகம் சீனு.

    ReplyDelete