22 May 2020

லாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி


வாழ்வின் மிகச்சிறந்த கொண்டாட்ட மனநிலையில் இருந்த நாட்கள் எப்போது என யோசித்துப் பார்த்தால் அவையனைத்தும் எனது பால்யகால தீபாவளிகளை சுற்றியே வலம் வருகின்றன. எதைப்பற்றிய கவலையும் இல்லாத வீட்டில், முழுக்க இனிப்பும் சந்தோஷங்களுமாக நிறைந்திருந்த நாட்கள் அவை. புத்தாடைகளும் பட்டாசுகளும் அதிரசம் சுடும் மணமும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பண்டிகையை நோக்கி நகர்த்திக் கொண்டிந்த நாட்கள்.வருடம் முழுக்க எத்தனை ஏக்கங்கள் நிறைந்திருந்தாலும் அவையனைத்தையும் கையில் கிடைத்த சரவெடியும் புதிதாக தைத்து வாங்கிய முழுக்கை சட்டையும் மறக்கடிக்கச் செய்திருக்கும். குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நமக்கான தீபாவளி நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு இருந்திருப்போம்! முதல் வாரத்தில் வரப்போகும் தீபாவளி நினைவுகளையும்; முடிந்த வாரத்தில் வந்துபோன தீபாவளி நினைவுகளையும் பேசிப்பேசி சலித்துவிட்டுத்தான் அதற்கு அடுத்த வாரத்தினுள் நுழைந்திருப்போம்.

எத்தனை உற்சாகமாக பண்டிகைகளில் தொலைந்து போயிருந்தோம். கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருந்தோம். இப்போதெல்லாம் தீபாவளிகள் வருகின்றன?

பால்யம் தொலைத்த நாளில் இருந்து அமெரிக்கா வந்து சேர்ந்த நாள் வரையுமே தீபாவளிகளை நினைவுகளில் மட்டுமே கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன். இருக்கிறோம் என்பதுகூட ஓரளவிற்குச் சரியாகத்தான் இருக்கும் இல்லையா? தீபாவளி மறந்து போனாலும் தீபாவளி கதைகள் மறந்து போகாமல் சுற்றி சற்றியேதான் வருகின்றன.

இனி ஒருபோதும் வாழ்க்கையில் தீபாவளியே இருக்கப் போவதில்லை என்று முடிவு செய்த நாளில்தான் வந்து சேர்ந்தது நான் காலடி எடுத்துவைத்த புதிய நிலமும் அந்த புதிய நிலத்தின் பாரம்பரிய வழக்கமான லாங் வீக்கென்ட் என்கிற திருவிழாவும். தீபாவளி என்ற வார்த்தையை நினைத்தால் எத்தனை எளிதாக ஒரு கொண்டாட்ட மனநிலையை அது சார்ந்த நினைவுகளை உருவாக்கிக்கொள்ள முடிகிறதோ அதற்கு இணையான ஒரு வார்த்தை இந்த லாங்-வீக்கென்ட்.

நமக்கு எந்த விதத்திலும் சம்மந்தமோ ஒட்டுதலோ இல்லாத ஓர் அந்நிய நிலத்தில் நம்மால் வெகு எளிதாக அவர்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையான சந்தோஷத்துடன் ஒரு பண்டிகையை கொண்டாட முடியும் என்றால் அது நிச்சயம் லாங் வீக்கென்ட்தான்.

லாங் வீக்கென்டின் வடிவமும் அதன் பரிமாணமும் தீபாவளியை ஒத்தே அமைந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. ஒரே வித்தியாசம் தீபாவளி முன்பைப் போல இல்லை என்பதும் லாங் வீக்கென்ட் முன்பைப் போலவே இருக்கிறது என்பதும்.

நம்முடைய நிலத்தில் விடுமுறை என்பது பண்டிகைக் காலங்களுக்கானது. கூடு அடைவதற்கானது. ஒருவருடத்தின் எந்தவொரு நாளில் வேண்டுமானாலும் ஊர் சுற்றத் தயாராய் இருக்கிறோம். ஆனால் பண்டிகை நாளை குடும்பத்தோடும் உறவுகளோடும் மட்டுமே கொண்டாட விரும்புகிறோம். இங்கே நிலமை அப்படியே நேரெதிர். இருக்கும் கூட்டை விட்டு - பறத்தலை பண்டிகையாக, மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கிடைக்கக்கூடிய விடுமுறை நாட்களை பறத்தலுக்கான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

ஆக நம் எதிரில் இருக்கும் லாங்-வீக்கென்ட்டை நாம் எப்படி கழிக்கப் போகிறோம் என்பது நம்முடைய சாமார்த்தியத்தில் இருக்கிறது. ஒருவேளை பயணம் என்று முடிவாகிவிட்டால் அதற்கான வேலைகளை எத்தனை துரிதமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறோமோ அத்தனை நல்லது.

பயணத்தின் முதல் கேள்வி டெஸ்டினேஷன். எங்கு செல்வது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். யாரெல்லாம் உடன் வருகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். எத்தனை நாடகள் நமக்கு விடுமுறை. அதிகபட்சமாக எத்தனை மணித்துளிகளை அடுத்த வேலை நாளில் இருந்து கடனாகப் பெறமுடியும் போன்ற விஷயங்கள் ஒரு பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகள்.

எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கு மொத்தமே மூன்று லாங் வீக்கென்டுகள்தாம். மே மாதத்தில் வரக்கூடிய மெமோரியல் தினம், ஜூலை மாதத்து சுதந்திர தினம் மற்றும் செப்டம்பர் மாதத்து தொழிலாளர்கள் தினம். நவம்பரும் டிசம்பரும் வியாபாரத்திற்கான மிகமுக்கியமான மாதங்கள் என்பதால் அந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய லாங் வீக்கென்ட் எதுவும் எங்களுக்கானதில்லை. அதுபோக இந்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிறுவனம் மற்றும் மாகாணங்களைப் பொறுத்தும் மாறும். எனவே எங்கள் கைகளில் இருப்பது மூன்றே மூன்று பொன் முட்டைகள்.

அதிலும் இந்த மே மாதத்து பொன் முட்டை மிக முக்கியமானது. பொக்கிஷம் போன்றது. ஓய்வற்ற பல வாரங்களுக்குப் பின் கிடைக்கும் முதல் லாங் வீக்கென்ட். அதனால்தான் இந்த தினத்தை தீபாவளி என்கிறேன்.  இந்த லாங் வீக்கெண்டில் எந்த ஒரு திசை நோக்கியும் பயணிக்கவில்லை என்றாலும் கூட அது மிக முக்கியமானது. காரணம் எவ்வித கவலையுமில்லாமல் கூட்டில் அடைந்து மூச்சுமுட்ட உறங்கித் திளைக்கலாம். இருப்பினும் ஊர் சுற்றக் கிளபுவதே உசிதம். அதுவே நம் எதிரில் இருக்கும் லாங் வீக்கெண்டிற்கு நாம் செய்யும் மரியாதை.

யாரெல்லாம் பயணிக்க இருக்கிறோம் என்ற பட்டியல் மிக முக்கியமானது. முதலில் ஆம் என்று சொல்லும் கூட்டம் - செல்லக்கூடிய இடத்தைக் கேட்டதும் இரண்டாகப் பிரியும். பின் மூன்றாகப் பிரியும். அப்படிப் பிரிந்தாலும் பரவாயில்லை ஆளுகொரு இடமாக போனாலும் பரவாயில்லை எங்காவது போக வேண்டும். அதுதான் குறிக்கோள்.

பொதுவாக கூட்டங்கள் உடைவது ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே. குழந்தை குட்டி இருக்கவன்லாம் ஒரு திசைக்கு போ. இந்த பேச்சிலர்ஸ்லாம் ஒரு திசைக்கு போ. இப்படியாகத்தான் இருக்கும்.

கணவன் மனைவிகளாக, குடும்பம் குட்டிகளாக மேற்கொள்ளும் பயணத்தில் ரிலாக்சேஷன் அதிகம் தேவை. குழந்தை அழுதால் வண்டியை நிறுத்த வேண்டும். மனைவி முறைத்தால் நிறுத்த வேண்டும். இது இந்த பேச்சிலர்ஸ் பசங்களுக்கு கோவத்தைக் கிளப்பக்கூடும். ஆக முதல் புரிந்துணர்விலேயே நீங்க தனி நாங்க தனி என்று முடிவெடுப்பது சாலச்சிறந்தது. இரண்டும் இணைந்து ஒன்றுகொன்று முட்டிக்கொண்ட பயணங்களும் உண்டு.

இந்த நிலப்பரப்பில் ஒரு குறுகிய வட்டத்தினுள் சிறுசிறு குழுக்களாக வசித்து வருவதால் பரஸ்பர புரிதல்களோடு காயை நகர்த்துவதே பிற்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும். நாளைக்கே ஒரே டீமில் ஒரே கிளையன்ட் மீட்டிங்கில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டுமே. பெரும்பாலும் இந்த பேச்சிலர் பையன்கள் குடும்பத்தோடு சேர மாட்டார்கள் என்பதால் இப்படியான பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் குறைவு.

ஒரு பயணத்தில் யாரேனும் நம்முடன் இணைந்து கொள்வதாகக் கூறினால் மறுக்காமல் அவர்களையும் இணைத்துக் கொள்வதே வழக்கம். காரணம் இது பயணத்திற்கான பருவம். யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்வது கொடுமையான ஒன்று. சிலருக்கு இயலாத ஒன்றும் கூட. கூட்டமாக செல்வது எல்லாவிதத்திலும் பாதுகாப்பு உணர்வை அளிக்கக்கூடியது. குறிப்பாக இந்த நிலம் குறித்த அறிமுகமில்லாத புதியவர்களுக்கு.

இடம் குறித்து முடிவு செய்யும்போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். சாலை மார்க்கமா இல்லை ஆகாய மார்க்கமா என்று. ஆகாய மார்க்கம் எப்போதுமே செலவு வைக்கும் ஒன்று. சாலை மார்க்கம் அதிக நேரத்தை குடிக்கக்கூடியது. அதிலும் டெக்சாஸ் போன்ற மாகாணத்தில் டெக்சாசின் எல்லையைக் கடப்பதற்கே ஆறேழு மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

ஆகாய மார்க்கம் என்றால் விமான டிக்கெட் லாங் வீக்கென்ட் வாரங்களில் அதிகமாக இருக்கும். அதற்கு நோ. ஆக சாலை பயணமே ராம்ராஜுக்கு சல்யூட்.

இருப்பதிலேயே பெரிய சிக்கல் எங்கே போகிறோம் என்பதை முடிவு செய்வது. ஏற்கனவே பயணம் செய்த இடத்திற்கு இரண்டாவது முறை பயணம் செய்வது அரிதினும் அரிது என்பதால், நமக்கான தேவைகளை நமக்கான ஆராய்சிகளை நாம்தான் செய்ய வேண்டும். அதாவது அனுபவஸ்தர்கள் என்று யாரும் நம்முடன் இருக்கப்போவதில்லை. ஆக முன்தயாரிப்புகள் மிக மிக அவசியம்.

இந்த டெக்சாஸ் மாகாணத்தில் சுற்றிப் பார்க்கும் இடங்கள் மிகக் குறைவு. காய்ந்து போன பாலைவனத்தில் பார்க்க வேண்டிய இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மாகாண எல்லையைக் கடந்தே ஆக வேண்டும். அப்படிக் கடந்து குறைந்தது பத்தில் இருந்து பன்னிரண்டு மணிநேரங்கள் பயணித்தால் மட்டுமே உருப்படியான ஒரு டெஸ்டினேஷனை அடைய முடியும்.

ஒருவழிப் பாதையாக பன்னிரண்டு மணிநேர பயணம் என்றால் ஒரு வாகனத்திற்கு கண்டிப்பாக இரண்டு டிரைவர்கள் தேவை. கடைசி நேரத்தில் சொதப்புவதற்கு என்றே டிரைவர்கள் சிலர் உண்டு, “எனக்கு திடிர்ன்னு இஸ்யூ வந்திருச்சு மாப்பு. அடுத்த டிரிப்ல ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று ஜகா வாங்கிவிடுவார்கள். ஆக அதற்கு ஏற்ற வகையில் நல்ல எண்ணிக்கையில் டிரைவர்கள் இருந்தால் பயணம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஒரு பயணம் எப்போது வேண்டுமானாலும் சொதப்பலாம். அதன் வடிவம் தலைகீழாக மாறலாம் என்ற பரபரப்பு கடைசி நிமிடம் வரைக்கும் இருந்துகொண்டே இருக்கும்.

“யாரெல்லாம்?”, “எங்கே?” போன்ற கேள்விகளுக்கு அடுத்ததாக எத்தனை டிரைவர்கள் என்பதை முடிவு செய்துவிட்டால் பாதி பிரச்சனை முடிந்தது. ஆனால் இதற்கே இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் மூச்சைத் தொலைக்க வேண்டி இருக்கும். ஒத்த கருத்துள்ள கூட்டத்தை சேர்ப்பதும், அவர்களுக்குள் எழும் கருத்து வேறுபாடுகளை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதிலும் பாதி நாட்கள் கழிந்திருக்கும். இதில் யாரேனும் ஒருவர் கையில் இந்தப் பயணத்தின் கடிவாளம் இருக்க வேண்டும். அந்த கடிவாளம் தன் இறுக்கத்தை தளர்த்துவிடாமல் கவனமாக பிடித்திருக்க வேண்டும். கழுத்தை நெரித்தாலும் ஆபத்து கொஞ்சம் தளர்வடைந்தாலும் ஆபத்து.

அடுத்தது ஹோட்டல் புக் செய்வது. கண்டிப்பாக அது பட்ஜெட் ஹோட்டலாக இருக்க வேண்டும். அதேநேரம் ஊரின் முக்கிய பகுதிகளின் அருகாமை ஹோட்டலாகவும் இருக்க வேண்டும். ஹோட்டல் புக் செய்யும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அங்கே அந்நியர்களின் தொல்லை இருக்குமா என்பதை கவனிப்பது. கொஞ்சம் தவறினாலும் நம் உயிர் நம் கையில் இல்லை.

இந்த நிலம் எத்தனைக்கு எத்தனை நம்மை பாதுகாப்பாக உணரச் செய்யுமோ அத்தனைக்கு அத்தனை பாதுகாப்பு இன்மையையும் உணரச் செய்யும். ஆக நம் இரவு நம் கையில் இருக்க வேண்டும் என்றால் நம் பாதுகாப்பு மிக முக்கியம்.

எங்கள் கூட்டத்திலேயே துப்பாக்கி முனையில் சிக்கி உயிர் பிழைத்தவர்களின் கதைகள் கண்ணுக்கு எதிரில் உலாவுவதால் It’s a serious business. No matter what, you should be more careful என்பது தாரக மந்திரம். குறிப்பாக பயணங்களின் போது. குழு மனநிலை இயல்பாகவே அந்த பாதுகாப்பு வளையத்தை நமக்கு ஏற்படுத்தி விடும் என்றாலும் எங்கே தங்க இருக்கிறோம் என்பது முக்கியமானது. இதையும் முடிவு செய்துவிட்டால் அடுத்த பெரிய வேலை முடிந்தது.

அடுத்தது நாம் பயணிக்க இருக்கும் புதிய நிலத்தில் எங்கெல்லாம் சுற்ற இருக்கிறோம் என்று முடிவெடுப்பது. வெயிட் வெயிட் வெயிட்...

கொஞ்சம் முன்னர்... அந்நிய நிலத்தில் அந்நியர் போல என்றேன் இல்லையா அது ஓரளவுக்கு உண்மை; ஓரளவுக்குப் பொய். ஊர் சுற்றுவதில் இந்த நிலத்துக்காரர்கள் காட்டும் அதே ஆர்வத்தை நாமும் காட்டுவோம் என்றாலும் அவர்கள் காட்டும் பொறுமை நம்மிடம் கிடையாது.

ஊர்சுற்றலைப் பொறுத்தவரையில் இவர்கள் மிக நிதானமானவர்கள். ஒரு வாரம் முழுவதையும்கூட ஒரு கடற்கரையிலோ அல்லது ஒரு மலைச்சரிவிலோ அல்லது ஆளற்ற புல்வெளியில் டென்ட் அடித்தோ கூட தங்கி விடுவார்கள். ஆனால் நம் மனநிலை அப்படி இல்லை. தேவைக்கு அதிகமாக நாம் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அடுத்த இடத்திற்கானது.

இதிலே நமக்கான நியாய தர்மங்கள் எப்போதும் ஒன்றுதான். அடுத்தவாட்டி இவ்ளோ காசு செலவழிச்சு இங்க வரவா போறோம். அதுனால எவ்ளோ பார்க்க முடியுமோ அவ்ளோ பார்ப்போம். (ஒருவேளை அதே இடத்திற்கு மீண்டும் ஒருமுறை செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் அதே மனநிலையில்தான் செல்வோம் என்பது வேறுவிஷயம்...)

இங்கிருக்கும் அமெரிக்க நிறுவனங்களில் நேரடி ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கும், எங்களைப் போன்ற ஒப்பந்த ஊதியர்களாக பணிபுரிபவர்களுக்குமான சலுகைகள் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டவை. நமக்கான பயண திட்டமிடல் அதன் உச்ச கட்டத்தை எட்டி, மிக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பயணிக்க வேண்டிய இடத்திற்கே சென்று சேர்ந்திருப்பார்கள். காரணம் அவர்களுக்கான விடுப்பு நாட்கள் அதிகம்.   

லாங் வீக்கென்ட்டை நெருங்க நெருங்க நம்மை நெருக்கும் பணி அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவு என்பதும் லாங் வீக்கென்ட் குறித்தான கொண்டாட்ட மனநிலைக்கு மிக முக்கிய காரணம். ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பெரும்பாலான கிளையன்ட்டுகள் அவர்களது டெஸ்க்கில் இருந்து பறந்திருப்பார்கள் என்பது எத்தனை ஆசுவாசமான தகவல் 😊 ( நான் கூறும் அத்தனை தகவல்களிலும் விதிவிலக்குகள் உண்டு என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.)     

ஆக நாம் தேர்வு செய்யும் இடம் பனிமலையாக இல்லாத பட்சத்தில் அந்த பிரதேசங்களில் சுற்றுவதற்கு குறைந்தது பத்து இடங்களையேனும் தேர்வு செய்ய வேண்டும். அதில் எட்டையேனும் பார்த்துவிட வேண்டும். மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் முடிவான பின், ஒவ்வொரு நாள் மாலையும் ஒவ்வொருவர் வீட்டில் கூட்டம் நடக்கும்.

அந்தக் கூட்டங்களில் லேப்டாப் ஒன்று தொலைக்காட்சியோடு இணைக்கப்பட்டு நாம் செல்லும் இடங்களுக்கு கூகுள் மேப் வழியாக பயணிக்க வேண்டும். அந்த மேப் நார்மல் டிராபிக்கில் எத்தனை காலத்தை குடிக்கும் அதிகபட்ச பீக் டிராபிக்கில் எத்தனை நேரத்தைக் குடிக்கும் போன்ற ஆராய்சிகள் மிக முக்கியம். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான நகர்வில் buffer டைமும் அடக்கம் என்றாலும் ஒருவேளை தவிர்க்க இயலா காரணத்தால் buffer டைமை இழந்துவிட்டோம் என்றால் Buffer இடம் ஒன்றையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அதை இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்கா மாகாணங்கள் அனைத்துமே சிலந்தி வலையைப் போன்ற நெடுஞ்சாலைகளின் மூலம் இணைக்கப்பட்ட ஒன்று என்பதால் இடையில் குறுக்கிடும் எந்த பெரிய ஊரில் இரவு தங்கல் என்பதையும் அந்த இடத்தில் கருத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நகர்விலும் ஒவ்வொரு ஆலோசனை மிக நீண்ட நேரம் பரிசீலிக்கப்படும். இதன் இறுதிகட்டமாக நம் பயணத்தின் வடிவம் கூகுள் மேப் துணையோடு விர்ச்சுவலாக தயாராகி இருக்கும். இப்போதே ஒரு டிரிப் சென்று வந்த மனநிலை நம்முள் ஏற்பட்டிருக்கும். உப்ப்ப்ப் எத்தனை ஆசுவாசம்.

ஒரு தீபாவளிக்குத் தயாராவதை போல் தயாராகியாயிற்று இல்லையா. புதுத்துணி எடுத்தாயிற்று, சீடை அதிரசம் முறுக்கு சுட்டாயிற்று. பட்டாசு வாங்கியாயிற்று அடுத்து? புத்தாடை உடுத்தி புதுபலகாரம் உண்டு வெடி வெடிக்க வேண்டும் இல்லையா? மூச்சை நன்றாக இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். விஷயத்திற்கு வருகிறேன். சரியாக பட்டாசு வெடிக்கும் போது மழை வந்துவிட்டால்?

பொதுவாக லாங் வீக்கென்ட் என்பது வெள்ளிகிழமையோ அல்லது திங்கட் கிழமையோ வரக்கூடிய ஒன்று. பெரும்பாலும் திங்கட்கிழமைகளில் வருவது என்பதால் அதற்குக் முந்தைய வெள்ளிக்கிழமை மதியத்தில் இருந்தே புறப்பாட்டிற்கான வேலைகளை துவக்கிவிட வேண்டும்.

பயணத்திற்கான திட்டமிடலில் ஒவ்வொரு நாளும் ஒரு சிக்கல் என்றால் உச்சபட்ச சிக்கல்கள் அனைத்தும் சரியாக இந்த வெள்ளிக்கிழமைகளில் வந்து நிற்கும். என்றைக்குமே வராத அத்தனை இஸ்யூவும் அன்றைக்கு வரும். இதயம் அன்றைக்கு மட்டும் இருமடங்கு வேகத்தில் துடிக்கும்.

சாலைவழிப் பயணம் என்பதால் ரெண்டல் கார் எடுக்கும் சம்பிரதாயம் மிக முக்கியமான ஒன்று. பல ரெண்டல் கார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் வாகனங்களை வாடகைக்கு விடுவதால் மிகத்தீவிரமாக களப்பணி செய்தால் நல்ல வாகனம் அடிமாட்டு விலைக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்த ரெண்டல் கார் எடுப்பதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நாம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் எடுப்பதைவிட அருகில் இருக்கும் விமான நிலைய ரெண்டல் கார் சென்டரில் எடுத்தால் விலை சல்லிசாக இருக்கும். தரமாகவும் இருக்கும். ஒரே விஷயம் தூரம் மற்றும் சென்றுவர ஆகும் நேரம். இவையனைத்தும் நம் பயணத்திட்டத்தின் குறிப்பிட்ட அம்சங்கள். எங்கே சொதப்பினாலும் ஒட்டுமொத்த திட்டமும் அடிவாங்கிவிடும்.

இந்த ரெண்டல் கார் எடுக்கப்போகும் சமயங்களில் கூட குளறுபடிகள் நேர்வதுண்டு. சரியாக அந்த நிமிடத்தில் யாருக்கேனும் வேலை வந்துவிட, நீங்க எடுத்துட்டு வாங்க நான் ட்ரிப்ல ஜாயின் பண்ணிக்கிறேன் என்று சொல்லக்கூடும். இப்படி சொல்வதில் சிக்கல் இல்லை. சிக்கல் எல்லாம் அந்த நபரை அடிஷனல் டிரைவராக சேர்ப்பதில் வந்து சேரும்.

ரெண்டல் வாகனத்தை எடுப்பதற்கு நம்முடைய ஓட்டுநர் உரிமம் அந்த வாகனத்துடன் இணைக்கபட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி குற்றம். இப்போது அப்படி ஒரு டிரைவர் வரமாட்டேன் என்று சூழ்நிலை காரணமாக அடம்பிடித்தால் அந்த சூழலை உங்களுக்கு சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அது உங்கள் சாமார்த்தியம். வெளிபட்டையாகச் சொன்னால் ஆள்மாறாட்டக் கேஸில் என்னை உள்ளே தள்ளிவிடுவார்கள் 😉 ஆகவே நீங்களாக புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டீர்கள்தானே?

ஆன்சைட் வந்த முதல் வருட முதல் லாங் வீக்கென்ட்டிற்கு கார் எடுக்க சென்றிருந்தபோது என் மானேஜரிடம் இருந்து ஒரு கால் வந்தது “எங்க இருக்க, நம்ம கிளையண்ட் ஒரு எஸ்டிமேட் கேக்கிறாங்க உடனே கொடுக்கணும். தர முடியுமா?” என்று. நல்லவேளையாக டிரிப்பிற்கு கிளம்பியிருக்கவில்லை. கிளம்பியிருந்தால்?

ஊரைவிட்டு வெளியே செல்கிறோம் என்று முடிவாகிவிட்டால் லேப்டாப்பை மடியில் கட்டிக்கொண்டேதான் அலைய வேண்டும். வேறுவழியே இல்லை. வேறுசில சந்தர்ப்பங்களில் பயணம் முழுக்க லேப்டாப்பும் கையுமாக வந்த நண்பர்களும் உண்டு.

ஒரேயொரு நல்லவிஷயம் எதிர்படும் அத்தனை உணவகங்களிலும் free wifi இருக்கும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கு அமர்ந்து ஒரு ஜாபை ரீஸ்டார்ட் செய்யவோ ஒரு இஸ்யூவிற்கு சொல்யூசன் கொடுக்கவோ முடியும். கெட்ட விஷயம் என்னவென்றால்... அதுதான் கெட்ட விஷயமும்.

ஒரு கூட்டம் ரெண்டல் கார் எடுக்கச் செல்லும் சம நேரத்தில் இன்னொரு கூட்டம் வால்மார்ட்டை நோக்கி ஓடியிருக்கும். பயணத்திற்கான நொறுக்குத் தீனிகள், தண்ணீர் புட்டிகள் என எதுவெல்லாம் தேவையோ அதையெல்லாம் வாங்கி நிரப்ப வேண்டியிருக்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு விடுதலை என்ற உணர்வே அலாதியாக இல்லை. அத்தனையும் தயார் என்று நம்மை தயார் செய்யும் மனநிலை காரை ஸ்டார்ட் செய்யும் வரையிலும் வந்திருக்காது.  

காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து மதியம் மூன்று மணிக்கு ஊரைவிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்து, மாலை ஆறு மணிக்கு “இன்னும் எவ்ளோ நேரம்”, என்று யாரேனும் ஒருவர் நெருப்பைக் கிள்ளி எறிந்து இரவு எட்டு மணிக்கு மிகப்பெரிய வெற்றிக்குறியோடு காரை ஸ்டார்ட் செய்தோம் என்றால்

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர்காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அடடா

நானே நானாய் இருப்பேன்
நாளில் போராய் வசிப்பேன்...

என்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அத்தனை நேரம் பட்ட கஷ்டமெல்லாம் மறைந்து

வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்ன்னு மனசு நிறைய ஒரு சந்தோசம். ப்ளோனோ கடந்து டாலஸ் கடந்து யூ எஸ் செவண்டி பைவில் ஏறி டேக் நெக்ஸ்ட் ரைட் ஆப்டர் டூ ஹன்டர்ன்ட் மைல்ஸ் என்று கூகுள் சொல்லும்போது   

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர்காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அடடா

லாங் வீக்கென்ட்டிற்கு சென்று வருவது அல்ல வெற்றி. செல்வதற்காக அந்த காரை ஸ்டார்ட் செய்வதே வெற்றி. 😊

*****

வெயிட் வெயிட் வெயிட் இவை அனைத்தும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் லாங் வீக்கென்ட் என்ற ஒன்று இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும். போனவாரத்தில் தற்செயலாக காலண்டர் பார்க்கும்போது தான் கவனித்தேன் வருகிற மே இருபத்தி ஐஞ்சு லாங் வீக்கென்ட் என்று. அப்டியிருக்க எங்க மேல சொன்னது அனைத்தையும் எப்படி நடத்திப் பார்ப்பது?

இந்த வருஷம் தீபாவளி இருக்கு கொண்டாட்டம் இல்லன்னு கம்முன்னு வீட்டிலேயே உக்கார வேண்டியதுதான். வேறுவழி.

ஒருவேள எல்லாம் ஒழுங்கா இருந்திருந்தா இந்நேரம் இந்த வெள்ளிக்கிழம சாயங்கலாம் புது டிரஸ்ஸு புதுப் பலகாரம் எல்லாம் சாப்பிட்டுட்டு பட்டாசா பட்டாசு வெடிக்க போயிருக்கலாம். ஹ்ம்ம்ம்.

Go Corona Go…

Go Corona Go…

9 May 2020

கொம்பு முளைத்தவன் - பா.ராகவன்
எழுத்தை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தாளனை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தை தனதாக்கிக்கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு...

மிக சிறிய புத்தகம் என்றாலும் இந்தப் புத்தகத்தின் வழியாக பா.ராகவன் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் ஏராளம். நிச்சயம் இது எனக்கான புத்தகம், எனக்கான வழிகாட்டிகளில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு புத்தகம் தனக்கானது என வாசகன் உணரும்போதே அது வெற்றிபெற்று விடுகிறது. (அவ்வகையில் இப்புத்தகம் எனக்கு மிக நெருக்கமானதாகிறது). அப்படி இல்லையென்றாலும் அது குறித்து கவலைகொள்ளும் ஆள் நான் இல்லை எனக்கு வேலைகள் ஏராளாம் இருக்கின்றன என்கிறார் பா.ரா. இந்த புத்தகத்தின் மூலம் அவர் கூற விரும்பும் உட்கருத்தும் அதுவே.சமீப காலங்களில் ஒன்றை பரிசோதித்துப் பார்த்தேன், எழுத்தின் முதல் புள்ளியை வைத்துவிட்டு அது எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது என்று பார்ப்பது. அந்த முதல் புள்ளி மட்டுமே என் சிந்தனையில் இருந்திருக்கும், அதன் பின் எழுதிய யாவும் மனம் போன போக்கில் எழுதியவையே. (நல்லவேளையாக அவற்றை பொதுவெளியில் வெளியிடவில்லை. பரிசோதனை முயற்சியை வெளியில் சொல்லலாம். சோதிக்கும் முயற்சிகளை கமுக்கமாக வைத்துக்கொள்வதே நலம்.)

மனம் போன போக்கில் எழுதாதே என்கிறார் பா.ரா. அசை போடுதல் எழுத்தாளனுக்கு எத்தனை முக்கியம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.

மனம் போன போக்கில் எழுதினேன் என்று கூறினேன் இல்லையா, அப்படி எழுதுவதற்காக ஆன கால அளவைவிட, இதைத்தான் எழுதப்போகிறேன் என்று ஆரம்பம் முதல் முடிவு வரை ஓட்டிப் பார்த்துவிட்டு எழுதிய பதிவுகளை மிகக் குறைந்த கால அளவில் நிறைவாகவும், நன்றாகவும், ஆத்மார்த்தமாகவும் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்க ஓர் (ஆரம்பநிலை) எழுத்தாளன் எதை செய்ய வேண்டும்; எதைவிட வேண்டும்; எழுத்தில் எத்தகைய பயிற்சி அவசியம் என்பதை கோடிட்டுக் காட்டுகிறார். அந்த கோடுகள் மிக முக்கியமானவை.
  
எஸ்.ரா.வினுடைய ஒருநாள் சிறுகதை முகாம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அது நடந்து பலவருடங்கள் ஆகியிருக்கும். அதில் எஸ்.ரா ஒன்றை கூறினார். எழுதும் தருணங்களில் என்னை யாரேனும் கவனித்தால் நிர்வாணமாக உணர்கிறேன் என்று. கிட்டத்தட்ட எனக்கு அதே போன்ற உணர்வுதான் இப்போது வரைக்கும் ஏற்படுகிறது. நான் எழுதும் தருணங்களில் யாரும் என்னை பார்த்துவிடக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் தொடர்ந்து என்னால் எழுத முடியாது. இதற்கே எனக்கும் அம்மாவுக்கும் பலமுறை சண்டை நடந்தது உண்டு. அந்த சிறுகதை முகாம் இன்று வரை எனக்கு மறக்காமல் இருப்பதற்கான காரணம் எஸ்.ரா கூறிய அந்த ஒரு வாசகம்.

அதேபோல் ஒரு எழுத்தாளனின் கணங்களை புத்தகம் முழுக்க பதிவு செய்திருக்கிறார் பா.ரா. என்னை கேட்டால் பா.ராகவன் கணித சூத்திரத்திற்கான எளிய புத்தகத்தை போல எழுத்திற்கான எளிய புத்தகமாக எனக்காக வடிவமைத்துக் கொடுத்ததைப் போலவே உணர்கிறேன். இதனை வாசித்ததும் ஒருவித கொண்டாட்டமான மனநிலை. எழுத்தின் மீது எண்ணத்த எழுதி எண்ணத்த கிழிச்சி என்ற சோர்வேற்படும் போதெல்லாம் இதனை ஒரு ரிப்ரெஷிங் கேப்ஸ்யூலாக உபயோகிக்கலாம் என்று இருக்கிறேன். வந்தனம் ஆசானே.
  
வித்தையை கற்றுக்கொடுக்கும் ஆசான் கிடைப்பது அரிதினும் அரிது. அதை புரியும்படி கற்றுக்கொடுப்பது அதைவிட அரிது. அவ்வகையில் இந்த புத்தகம் நிச்சயம் – அரிதாகக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமே. Feeling Blessed.    

1 May 2020

தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனாஎழுத்தளார் சாதனாவிடம் ஓரிரு முறைகள் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் “என் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கவில்லை. வாசிப்பேன் என்று நானும் கூறவில்லை. ஆயினும் ஒரு வாசகனாக நான் உங்களிடம் கூறுவதெல்லாம் தவறாமல் சாதனாவின் இந்தச் சிறுகதை தொகுப்பை வாசித்துவிடுங்கள் என்பதுதான்.

இருண்மையை பற்றிய கதைகள் என்று முன்னறிமுகம் இருந்ததால் ஒரு சிறு தயக்கத்துடனேயே இவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். இப்படியான என் எண்ணைத்தை தன் முதல் சிறுகதையிலேயே மாற்றிவிட்டார். முன்னுரையில் சாரு நிவேதிதா குறிப்பிட்டதை போல, இந்தக் கதைகள் வேறு தேசத்தில் நிகழ்ந்த, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கதைகளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் இவையனைத்துமே தமிழர் ஒருவரால் எழுதப்பட்ட கதைகள் என்பது சற்றே வியப்பாக இருக்கிறது. இதற்கு முன் நரனின் “இதோ என் சரீரம்” சிறுகதை இதேபோன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் சாதனாவோ தன் அத்தனை கதைகளின் மூலமும் இந்த உணர்வை ஏற்படுத்துகிறார்.

சாதனாவின் பெரிய பலம் மொழிவளமும் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்கிற திறமையும். தன் அத்தனை கதைகளிலும் மொழியை வைத்து விளையாடுகிறார். இதுதான் கதை இப்படித்தான் வளரப் போகிறது என்றெல்லாம் அத்தனை எளிதில் கதையின் போக்கை கணித்துவிட முடிவதில்லை. வழக்காமான கதையாடலுக்கு நடுவே, இந்த கதைகள் புது உற்சாகத்தை கொடுத்தன.

சுருங்கச் சொல்வதென்றால், கலைத்துப் போடப்பட்ட சித்திரம் ஒன்றை ஒட்ட வைக்கும் வேலையையே நம்மிடம் தருகிறார். அதனை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறதா என்பது அவர் நமக்கு விடும் சவால். இந்த சிறுகதைத் தொகுப்பில் உச்சம் பெற்ற கதைகள் என்று நான் நினைப்பது இரண்டு. முதலாவது சிறுமி கத்தலோனா. அடுத்தது இத்தொகுப்பின் தலைப்பான தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்.

சாதானாவின் கதைகள் பெரும்பாலும் இருண்மையையும், வாழ்வுக்கும் மரணத்திற்குமான பாதைகளையுமே பேசுகின்றன. என்றாலும் இருண்மையின் வலி தெரியாமல் நம்மை அதனுள் இழுத்துச் செல்லும் தன்மை அந்த எழுத்திற்கு இருக்கிறது.

சிறுமி கத்தலோனா சிறுகதை அவமானத்தையும் அவமானத்தின் தொடர்ச்சியாய் மரணத்தையும் பேசுகிறது. பிறப்பால் சிங்கள மருத்துவரான சிலோன் நாதன், யுத்தத்தின் இடையே கால் உடைந்த சிறுமி கத்தலோனாவிற்கு மருத்துவம் செய்ய முயல்வதன் மூலம் சிங்கள ராணுவ பெண் ஒருவரின் வசை சொல்லிற்கு ஆளாகிறார். பின்னர் சிறைபிடிக்கப் படுகிறார். அங்கே நிகழும் வன்கொடுமையில், அப்பெண் அவரை உத்தோ என்று திட்டுகிறாள். உத்தோ என்றாள் பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் வசைச்சொல்.

அந்த வசைச்சொல் சிலோன் நாதனைத் துரத்துகிறது. விடுதலைக்குப் பின் ஜெர்மனிக்குப் புலம் பெயர்கிறார். அங்கும் அவரை துரத்துகிறது அந்த வசைச்சொல். கூடவே அதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களும் அவரைத் துரத்துகின்றன. தொடர்ச்சியாக தற்கொலை சார்ந்த எண்ணங்கள் வந்து போகின்றன. இந்நிலையில் ஜெர்மனியில் அவருக்கு வேலை கொடுத்த அவருடைய உற்ற நண்பனும் இறந்துபோக, உன்மத்தம் தலைக்கேறி வேசியைத் தேடிச் செல்கிறார். அந்த ராணுவப் பெண் எதைக்கூறி தன்னை வெட்கித்தலை குனியச் செய்தாளோ அதே இடத்தில் தன் உன்மத்ததைத் தீர்த்துக்கொள்கிறார்.

சிலோன் நாதனைப் பொறுத்தவரையில் - மரணம், தற்கொலை என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மரணித்தபின் தன்னால் அதனை உணர முடியாதே, அதுதானே மரணத்தைக் காட்டிலும் கொடிய வலி என்று அந்த ஒரு காரணத்திற்காக தன் மரணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். உன்மத்தம் தீர்ந்த ஒருநாளில்...

*****

தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்

நாஜிக்களுக்கும் ரஷ்யர்களுக்கும் இடையே நிகழும் யுத்த காலத்து கதை இது. நாயகன் ரஷ்ய படையினருக்காக சண்டையிடும் பொருட்டு ராணுவத்தில் சேர்கிறான். அவனிடம் ஒரு சிறிய பைபிளும் தஸ்தயேவ்ஸ்கியின் சில புத்தகங்களும் இருக்கின்றன. தீவிர வாசிப்பாளன் என்றபோதிலும் யுத்த பயிற்சியும், யுத்த களமும் அவனுக்கு என்னவிதமான உளவியல் சிக்கக்ல்களை தோற்றுவிக்கின்றன என்பதே கதை.

இந்த கதையில் ஒன்றன்மேல் ஒன்றாக பல அடுக்குகள் இருக்கின்றன. முதலாவது - மனித நேயமிக்க, போர் என்றால் என்னவென்றே தெரியாத கதையின் நாயகன் என்ற அடுக்கு. கதையின் நாயகனுடன் ராணுவப் பயிற்சியில் சேரும் விளாடிமின் என்கிற பயிற்சி வீரனின் தற்கொலை அவனை மனதளவில் பாதிக்கிறது. விளாடிமின் எத்தனையோ முறை தன்னிடம் பேச முயன்றும், பேச வாய்ப்பளிக்காமல் போன கணத்தில் இந்த தற்கொலை முடிவை அவன் எடுத்திருக்கக்கூடும் என்று தன்னுள் அவன் உழல்கிறான். ஒரேயொருமுறை அவனோடு பேசியிருக்கலாமோ என்று வருந்துகிறான். இது ஒரு அடுக்கு.

ராணுவத்தின் அடுத்தபடிநிலையாக துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே விதி எனும் வட்டத்திற்குள் நடமாடும் கரடி குறித்தான அவன் சிந்தனைகள், அந்தக் கரடி வேட்டையை தவிர்க்கச் சொல்கிறது. தான் கொல்ல இருக்கும் அந்த கரடியை நினைத்துப் பெரிதும் துயருகிறான். ஒரு பாவமும் அறியாத அந்தக் கரடியைக் கொல்வதில் அவனுக்கு சிறிதும் உடன்பாடில்லை. கொல்லவில்லை என்றால் அவனுக்கு வேலை இல்லை. கதையின் மிகச் சிறந்த பகுதிகள் என்றால் இந்த உளவியல் ஓட்டங்கள்தாம். வரிசையாக வந்துவிழும் அத்தனை வரிகளையும் ஹைலைட் செய்து வைத்திருக்கிறேன். முன்னரையில் சாருவும் அதைத்தான் செய்திருக்கிறார். 

நாயகனுக்குப் பயிற்சி கொடுக்கும் பயிற்றுநர், நாயகனின் பிரச்னையை எளிதில் கண்டுகொண்டு கொல்வதன் நியாயத்தை கற்பிக்கிறார். எத்தனை காலம் கடத்தியும் கரடி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. நாயகன் நினைக்கிறான் – கரடி தன்னுடைய கடைசி விதிக்குள் நடமாடுவது போலவே அவனுக்குத் தோன்றியது என்று. இது ஒரு அடுக்கு.

மனித வேட்டைகள் நிரம்பிய போர்க்களம் அவனுக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறது. அவன் தன் ஓர் அடுக்கில் இருந்து பிறிதொரு அடுக்கு நோக்கி நகர்கிறான். போரில் காயம்பட்ட நாஜி வீரனுக்கு தாகம் தணிக்க நீர் கொடுக்க முடியும் அதே மனதால், அதே வீரனை குத்திக் கொல்லவும் முடிகிறது. பின் அங்கிருந்து ஒரு ஜெர்மானிய பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுபோடவும் முடிகிறது. இவ்வாறு அவனுக்குள் அவனே இரண்டாகப் பிரிந்து ஒரு யுத்தம் நிகழ்த்துகிறான். அந்த யுத்தத்தின் முடிவில் நாஜிக்களுடன் வெற்றிபெற முடிந்தாலும் அவனுள் இருக்கும் வேறொருவனால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தோற்கும் கணத்தில் அவனிடம் இருந்த சிறிய பைபிள் தோற்றுப்போனதையும் உணர்கிறான். அந்த உணர்வை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதோடு கதை முடிகிறது.

*****

மேற்கூறிய இரண்டிற்கும் அடுத்தபடியாக என்னை ஈர்த்த கதை – தாய். சற்றே வித்தியாசமான கதைசொல்லல் முறையைக் கொண்டது. யோகோவிச் என்ற மனிதனின் நனவோட்டமாக, கதை எங்கோ ஓரிடத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்கின்றது. காரணங்களற்று அநாதையாக்கப்படும் ஒரு தாய் குறித்த கதை. புரிந்துகொள்ள முடியாத நுட்பச்சிக்கல்களே வாழ்க்கை அதற்கு பலியாடு அந்தத் தாய் என்றளவில் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.  

*****

அக்கா என்கிற அந்த இரண்டாவது கதை எனக்குப் புரியவில்லை. கதை கூறப்பட்ட வகையில் தெளிவாக இருப்பது போல், புரிந்துகொள்வதற்கு சிரமம் இல்லாமல் இருப்பது போல் தோன்றினாலும் அதனை எப்படி டீகோட் செய்வது என்று தெரியவில்லை.

கதைசொல்லி ஒரு கதை எழுதுகிறான். இடையில் தன் கதையையும் கூறுகிறான். தன் கதையில் அவன் மிக தீவிர ஆணாதிக்கவாதியாக இருக்கிறான். அதேநேரம் தான் எழுதும் கதையில் ஜாதிப்பிரச்சனை காரணமாய்ப் பிரிந்துபோன தன் அக்காவிற்காக உருகும் பெண்ணியவாதியாய் இருக்கிறான். என்றளவில் மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. Sorry. My bad…

*****

இவை தவிர்த்து யூதாஸின் முத்தம் மற்றும் ஓ தாவீது ராஜாவே இவை இரண்டுமே பைபிளின் அடிநாதம் தொட்டு எழுதப்பட்ட கதைகள். கதையின் அழகியல் என்றளவில் அற்புதமான கதைகள் என்றபோதிலும், எனக்கு பைபிள் தெரியாது என்பதால் சற்றே அந்நியமாகத் தோன்றின. பைபிள் கதைகள் என்றபோதிலும் அவற்றில் பிரச்சார நெடி இல்லை என்பதும் மிக முக்கியமான விஷயம்.

*****

சாதனா தன்னுடைய கதைகளை வருடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் கடந்த ஆறு வருடங்களாக இவற்றை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். இவருடைய முதல் புத்தகம் என்றே கூறமுடியாத அளவிற்கு அசுரப் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தவறவிடாதீர்கள். (தஸ்தேயவ்ஸ்கி இவர் கதைளில் மாபெரும் ஆதிக்கம் பெறுகிறார். தஸ்தேயவ்ஸ்கியை நான் படித்ததில்லை என்றாலும் அதுதான் உண்மை)

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

வெளியீடு : எழுத்துப் பிரச்சுரம்
வாசிப்பு : கிண்டில்