16 Apr 2020

கற்றது கைமண்ணளவு - வேள்பாரி

மூவேந்தர்கள் குறித்த வரலாற்றில் நமக்குக் கற்றுத்தரப்பட்டவை அனைத்தும் அவர்களின் வீரமும் அவர்கள் அடைந்த பேரும் புகழும் மட்டுமே. தங்களுடைய அரசாட்சியில் அவர்கள் தவறவிட்ட இடம் என்ற ஒன்றை எங்குமே நமக்கு யாரும் கற்றுக் கொடுத்ததில்லை. ஆங்கிலேயரின் படையெடுப்பிற்கு முன் வரைக்குமாக, நம்முடைய அரசர்கள் குறித்தான தகவல்களாக நம்மை வந்தடைந்தவை அவர்கள் கொண்ட வெற்றிகள் மட்டுமே. ஆங்கிலேயரின் படையெடுப்பிற்குப் பின் நம்மிடம் இருந்த ஒற்றுமைக் குறைபாட்டின் மூலம் ஆங்கிலேயர்கள் நம்மைக் கைகொண்டார்கள் என்ற மிகப்பெரிய உண்மையை ஒன்றை வரியில் முடித்திருப்பார்கள். அதற்கான ஆதிவேர் எங்கோ எப்போதோ ஊன்றப்பட்ட ஒன்று என்பது நாம் அறியாத அல்லது நம்மை வந்து சேராத வரலாறு.

(கால்டுவெல் எழுதிய திருநெல்வேலியின் வரலாறு வாசித்த நாட்களில் நம் மண் சார்ந்த பெரும்பாலான தகவல்களை உண்மைத்தன்மையுடன் எழுதியிருப்பதைப்போல் தோன்றியது. கால்டுவெல் எழுதிய நேரடி மூலத்தை ஆங்கிலத்தில் வாசித்தாலும், கிண்டிலின் வழி வாசித்ததாலும் அந்தப் புத்தகம் வாசிக்கும் முயற்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டேன் என்பது வேறு விஷயம்.) 

கால்டுவெல் தன்னுடைய புத்தகத்தில், அரேபியர்கள் உடனான நமது குதிரை வாணிபத்தைப் பற்றி மிகத்தெளிவான ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் குதிரை வாணிபத்தின் மூலமாக அரேபியர்கள் நம் மன்னர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்பதை அடிக்கோடிட்டிருப்பார். நாம் அறிந்துகொள்ள வேண்டிய மிகமுக்கியமான தகவல் அது. நம் மன்னர்களின் குதிரைப்படை சார்ந்த ஒன்று. 

நம் மன்னர்களின் படையில் வீற்றிருந்தக் குதிரைகள் எந்த விதத்திலும் நம் நிலத்திற்குச் சம்மந்தம் இல்லாத விலங்கு. அதனால் அதனை வளர்க்கும் மற்றும் முறையாகப் பராமரிக்கும் முறைகள் நம் மன்னர்கள் யாருக்கும் முறையாகத் தெரிந்திருக்கவில்லை அதனைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் முயன்றதில்லை. இதன் காரணமாக குதிரைகள் விரைவில் நலிந்து போவதும் மாண்டு போவதும் தொடர் நிகழ்வுகளாக இருந்திருக்கின்றன. எத்தனை குதிரைகள் மாய்ந்து போன போதிலும், மேலும் மேலும் குதிரைகளை வாங்கிக் குவிப்பதற்கான செல்வம், முத்தும் பவளமுமாக மிளகும் மூலிகைகளுமாக நம்மிடையே கொட்டிக்கிடந்த காரணத்தால் செல்வம் இருக்கிறது என்கிற மமதையில் குதிரைகளாக வாங்கிக் குவித்து தம் படையைப் பெருக்கியிருக்கிறார்கள் நம் மன்னர்கள். மேலும் முறையற்ற பரமாரிப்பின் காரணமாகப் பல குதிரைகளை இழந்திருக்கிறார்கள். 

நம் நிலத்து மக்களுக்கு குதிரையின் கால்களில் எப்படி லாடம் அடிக்க வேண்டும் என்பது கூடத்தெரியாது என்று அராபிய வாணிகர்கள் கிண்டல் அடிக்கும் அளவில்தான் நம் நிலமை இருந்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மாட்டுக்கு அடிக்கும் லாடத்தைக் குதிரைகளுக்கு அடித்திருக்கிறார்கள். சில இடங்களில் அதுவும் கிடையாது. இதுதான் சாக்கு என குதிரை வளர்க்கும் வித்தையை கடைசி வரைக்கும் அரேபியர்களும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கவில்லை. நாமும் கற்றுக்கொள்ள முனைந்திருக்கவில்லை. 

மூவேந்தர்களின் பெரும்படைகளில் ஒன்றான குதிரைப்படையை எவ்வாறு கையாண்டார்கள் என்ற தகவலும் அதன் மூலம் நம்மிடம் கொட்டிக்கிடந்த பெருஞ்செல்வத்தை எப்படித் தவறவிட்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளும்போது சற்றே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இது நம்மை வந்து சேர்ந்த ஒரு தகவல். இதேபோல் இன்னும் எத்தனை எத்தனை இருக்கிறதோ? 

வேள்பாரிக்கும் மூவேந்தர்களுக்குமான இறுதிப்போரில் குதிரைப்படைக் காட்சி ஒன்று வருகிறது. அந்தப் போர்க்களத்தில் போர்க்களத்தின் கடினமான தன்மை காரணமாக மூவேந்தர்களின் குதிரைப்படை மிக எளிதில் மாபெரும் சவாலுக்குள்ளாக, பாரியின் குதிரைப்படை மட்டும் அந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்பத் தாக்குப்பிடித்துத் தங்களின் எதிர்த் தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தும். மிக வீரியமாகச் செயலாற்றும். அதற்குக் காரணம் பாரியின் பராமரிபில் வளர்ந்த குதிரைப்படையின் தன்மை. பாரி ஆளும் பறம்புகுடி மக்கள் குதிரை எனும் விலங்கின் தன்மை அறிந்து அதனை எத்தனைக் கச்சிதமாக தங்களின் நிலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைத்தனர் அதன் ஆயுளை நீடித்து அதன்மூலம் அதன் சந்ததிகளை எவ்வாறு வளர்த்தெடுத்தனர் என்கிற தகவல் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

ஒருவேளை சு.வெங்கடேசன் கூறியதைப் போல பாரி மிகச்சிறப்பாக தன் குதிரைப் படையைப் பராமரித்தான் என்பது உண்மையென்றால் அந்த ஒரு செயலே அவன் மற்ற அரசர்களில் இருந்து எத்தனைத் தனித்துவமானவன் என்பதை நமக்குக்கூறுகிறது. மேலும் மூவேந்தர்கள் குறித்துக் கால்டுவெல் கூறிய கருத்தையும் வேள்பாரி தனது குதிரைப்படையைப் பரமாரித்த கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது பாரியின் மீதான ஈடுபாடு தீவிரமாகிறது. அந்தத் தேடலின் மூலம் பாரி குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் அறியாத தகவலின் பின் ஒளிந்திருக்கும் வரலாறு கடலளவு என்பதும் அந்தக் கடலின் ஆழம் நம் கண்முன் விரியும்போது அவை பல்வேறு விதமான கொந்தளிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

1 comment:

  1. ஆகா
    எவ்வளவு நுட்பமான தகவல்

    ReplyDelete