26 Apr 2020

நியூயார்க் – Are you Lucky? - 2

நான் கொண்ட உச்சபட்ச அதிர்ச்சியில் என் முகம் மாறுவதை கவனித்து விட்டாள் வர்ஷனா. முதல் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னொன்றா. ஒருவனால் எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்க முடியும். 

“என்னாச்சு?”

“கேமரா பேக்க காணோம்?”

“என்னது காணோமோ?”, அவள் முகம் தீவிரமாவது தெரிந்தாலும் சூழ்நிலை காரணமாக அமைதியாக இருந்தாள். அடுத்து என்ன என்பதுபோல் பார்த்தாள். நல்லவேளையாக யோசிக்க நேரம் கொடுத்தாள். கேமரா தொலைந்த அதிர்ச்சியைவிட ‘எங்க இவன் இன்னொன்னு வாங்கனும்ன்னு சொல்லுவானோ’, என்ற அதிர்ச்சியும் அவளிடத்தில் இருந்திருக்க வேண்டும். நான் இன்னும் அந்தளவிற்கு யோசிக்கவில்லை. எனக்கு என் கேமரா வேண்டும். அதுவும் இதே கேமரா. கேமரா இல்லை. என் தங்கம் அது.

ரொம்ப ஆசை ஆசையாய் வாங்கிய கேமரா. பல வருடங்களாக நானும் கேமராவும் ஓருயிராக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் கேமராவை வாங்கிய நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. பீனிக்ஸ் மால் கேனான் ஷோ ரூமில் ஆவி, கௌதம் மற்றும் நான் என நாங்கள் மூவருமாக சென்று வாங்கினோம். ஐம்பத்தி ஐந்தாயிரம் என்று பில் வந்தபோதுகூட அது ஒரு சுமையாய்த் தெரியவில்லை. எட்டாக்கனி ஒன்றை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியில் இருந்தேன். என் சம்பாத்தியத்தில் நான் வாங்கும் இரண்டாவது பெரிய பொருள். (முதலில் வாங்கியது பைக்). இவ்ளோ காசு செலவு பண்ணி இந்த டப்பாவ வாங்கனுமா என்பதுவே அம்மாவின் கேள்வியாய் இருந்தது. அம்மாவின் முகம் நினைவுக்கு வந்து போனது. நல்லவேளை இங்கே இல்லை.

பரப்பரப்பான அந்த சூழலுக்கு மத்தியில் யோசிப்பது கடினமாக இருந்தது. டாலஸ் விமான நிலையத்தில் ஏறியதில் இருந்து நியூயார்க் மெட்ரோ வரைக்குமாக பல இடம் மாறியாகிவிட்டது. அத்தனை லக்கேஜும் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டது. எங்கே எப்படி?

“வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தீங்களா?”

“கடைசிய அத எங்க வச்சீங்க?”

“டாலஸ் ஏர்போர்ட்ல நாம உக்காந்த இடத்தில விட்டீங்களா?”

“ஸ்டார்பக்ஸ் போனீங்களே அங்க?”

“மெட்ரோ கார்ட் எடுக்க போகும்போது?”

நாங்கள் பயணித்த அதே காலக்கோட்டின் வழியே அவளும் பயணித்தாள். அவள் கூறிய ஒவ்வொரு இடமும் கூட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்முன் தோன்றி மறைந்தன. யாரோ ஒருவர் என் தங்கத்துடன் உறவாடுவது போல் காட்சிகள் உருவெடுத்தன. எதுவும் சொல்லாமல் அமைதியாக யோசிப்பது அவளுக்கு மேலும் பதற்றத்தைக் கொடுத்தது. விட்டால் போன பயணத்தின் சம்பவங்களுக்கும் செல்லக்கூடும். அவளுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று அந்த கேமரா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது. லட்சத்தைத் தொலைத்துவிட்டேன் என்பதையும் கடந்து என் தங்கத்தைத் தொலைத்துவிட்டேனே என்பதுதான் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. 

கேமராவின் கவரைப் பிரித்து முதன்முதலில் அதனைக் கையில் சுமந்தபோது குளிர்ச்சியாக இருந்தது. கருகரு என பளபளப்பாக. கருப்புத் தங்கம் என்று பெயர் வைத்திருந்தேன். தங்கம் என்றே அழைக்கத் தொடங்கினோம். எங்கு சென்றாலும் உடன் வரத்தொடங்கியது. என்னைப் போலவே தங்கத்திற்கும் மிகப்பெரிய பயணம் கோவா.

கோவா பயணம் முடிந்து மங்களூரில் இருந்து கேரளா வழியாக சென்னை வந்து கொண்டிருந்தோம். ரயிலில் ஆரம்பத்தில் கூட்டம் இல்லை. கேரளாவின் உள்ளே நுழைய நுழைய கூட்டம் தாறுமாறாக எகிறிக்கொண்டே சென்றது. முன்பதிவு பெட்டிதான் என்றபோதிலும் தினசரி பயணிகள் அது குறித்ததெல்லாம் கவலை கொள்ளவில்லை. அப்பர் பெர்த்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை கூட எழுப்பி அந்த இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்.

பகல்நேரப் பயணம். எனவே அந்த மாலை வேளையில் உறங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இறங்குவோர் ஏறுவோரின் எண்ணிக்கைக் கூடிக் குறைந்துகொண்டு இருந்தது. “ஒரு பத்து டேசனுக்கு இப்டிதான் இருக்கும். அதுக்கப்றம் எல்லாம் காணாம போயிரும். டிடியும் ஒண்ணு சொல்ல மாட்டான்”, என்றார் ரெகுலர் பாசஞ்சர் ஒருவர்.

அப்பர் பெர்த்தில் எங்களுடைய லக்கேஜ் இருக்கிறது. அந்த லக்கேஜ் ஒன்றின் உள்ளே தங்கமும் இருக்கிறது. அவ்வபோது எக்கி எக்கி அதனைப் பார்த்துக் கொண்டேன். “நான் கவனிச்சிக்கிறேன் பதறாத”, என்றார் அதன் அருகில் அமர்ந்திருந்த ஒரு சேட்டன். அந்தக் கூட்டத்தில் அவ்வளவு பெரிய லக்கேஜையாரும் லவட்டிக்கொண்டு போக முடியாது என்றாலும் தங்கத்தை லவட்ட முடியும். ஒருவேளை பைக்கட்டை திறந்து எடுத்துவிட்டால்? அந்த சேட்டனின் பதிலில் மனம் சமாதானமாகவில்லை.

அவர் பேச்சை மதிக்காமல் சிறிது நேரம் கழித்து எக்கிப் பார்த்தால் - சேட்டன் என் பைக்கட்டின் மீது தலையை வைத்துப் படுத்திருந்தார். அவர் தலை வைத்திருந்த இடத்தில்தான் தங்கம் இருக்கிறது. யோவ்.... அவரைத் தட்டி எழுப்பி அந்தப் பையைப் பிடுங்கி வேறுபக்கம் வைத்துவிட்டு அமர்ந்தேன். இப்போது மீண்டும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் உதைக்க எக்கிப் பார்த்தால் என் பைக்கட்டின் மீது ஒய்யாரமாக கால்களை வைத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான் அந்த மாபாவி.

அதன்பின் சென்னை வரும் வரையிலும் தங்கம் என் மடியிலேயே இருந்தது. பின்வந்த எல்லா பயணங்களிலும் தங்கம் என் மடியில்தான் இருக்கும். அப்படிப்பட்ட தங்கத்தை தொலைத்துவிட்டேன் என்பது எத்தனை கொடூரமான செயல்.

கேமரா தொலைந்த அதிர்ச்சி இந்த ஒட்டுமொத்த பயணத்தையும் உருக்குலைக்கக் கூடும் என்பது அதைவிட பயமாய் இருந்தது. விமானம் ஏறும்போது கேமரா என்னிடம் இருந்த நினைவு இருக்கிறது. இறங்கும்போதும் இருந்ததா? ஒவ்வொரு இடமாக லக்கேஜ் மாற்றும் போதும் இருந்ததா போன்ற ஞாபகங்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களாக குழப்ப அதிர்வுகளாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

விமானத்தினுள் நுழைந்த போது கையோடு கொண்டுவந்த லக்கேஜை தலைக்கு மேல் வைத்துவிட்டு, கேமராவை மடியில் வைத்த ஞாபகம் முதலில் வந்தது. அதன்பின் காலுக்கு அடியில் வைத்தேன். பணிப்பெண் அங்கு வைக்ககூடாது என்று சொல்லி மேலே வைக்கச் சொன்னார். இருக்கையில் இருந்து சற்று தள்ளி இருந்த பகுதியில் தங்கத்தை வைத்த ஞாபகம் வந்தது. அதனை வைக்கும்போது அங்கே ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதில் இருக்கும் தண்ணீர் கேமராவை பதம் பார்த்துவிடக் கூடாது என அந்தப் புட்டியை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டே கேமராவை அங்கே வைத்தேன். என் ஞாபகத்தில் முதலில் அசைவு கொடுத்தது தண்ணீர் புட்டியே. அதில் இருந்தே ஒவ்வொன்றாக நினைவுக்கு முன் ஆரம்பித்தன. விமானம் தரையைத் தொட்ட அதிர்ச்சி தாங்காமல் முகில் அழத் தொடங்க, அந்த சமயத்தில் கேமராவை மறந்திருக்கிறேன்.

“எனக்கு நல்லா தெரியும், அது பிளைட்ல தான் மிஸ் ஆகிருக்கு”, என்று மொத்த கதையையும் அவளிடம் கூறினேன். விமானம் குறித்த தகவலை தேடியபோது அது மீண்டும் டாலஸ் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதாகக் கூறியது.

“நீங்க இப்பவே ஏர்போர்ட் போயிட்டு வாங்க”, என்றாள் வர்ஷனா. அத்தனை லக்கேஜையும் எடுத்துக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட் செல்வது ஆகாத காரியும். பாவம் ஏற்கனவே நியூயார்க் நெரிசலில் நொந்து போயிருந்தார்கள்.

“அப்டில்லாம் தனியா விட்டுடுப் போக முடியாது. இன்னொன்னு அந்த கேமரா இப்போ டால்ஸ்க்கு போயிருந்தா? இல்ல வேற யாராச்சும் தூக்கிட்டுப் போயிருந்தா?”, அந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கும் போது வார்த்தையில் தெம்பில்லை. நியூயார்க் திருடர்கள் நிறைந்த பகுதி என்பது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

ரயில் அதளபாதாளத்தில் சென்று கொண்டிருந்ததால் மொபைலில் சிக்னல் விட்டுவிட்டுத் தலையாட்டியது. சாண்டிக்கு அழைத்தேன். நியூயார்க் டாலஸ் நேர வேறுபாடு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. “யோவ் இப்போதான் எந்திக்கிறேன். பசிக்குதே”, என்றார். நிலைமையின் தீவிரத்தைக் கூறினேன்.

“சரி எப்படினாலும் பிளைட் வாறதுக்கு ரெண்டு மணிநேரம் இருக்கு. நான் சாப்டுட்டு ஏர்போர்ட் போறேன்”, என்றார்.

கேமரா விமானத்தில் இருக்க வேண்டும். சாண்டி போய் கேட்கும்போது அவரிடம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதையாவது உறுதி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். விமானத்தில் பொருட்கள் தொலைந்து போனால் என்னவாகும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

பெரும்பாலான பயணிகள் தங்களுக்கு நிகழ்ந்த மிக மோசமான அனுபவத்தையே பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக நான் பயணம் செய்த விமான சேவையைக் கழுவிக் கழுவி ஊற்றியிருந்தார்கள். அதை வாசித்தபோதே பாதி நம்பிக்கை கழன்றுவிட்டது.

எங்களோடு வந்தவர்கள் அனைவரையும் One World Observatoryயினைச் சுற்றிப் பார்க்கும்படி கூறிவிட்டு, சாண்டியோடும் இணையத்தோடும் போராட்டிக் கொண்டிருந்தேன். சாண்டியும் தனக்குத் தெரிந்த தகவல்களை ஒவ்வொன்றாகக் கூறத் தொடங்கினார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

தொடர்ந்த ஆராய்ச்சிக்குப் பின் கஸ்டமர் கேர் நிர்வாகத்தின் பொருட்கள் தொலைந்து போனால் புகார் அளிக்கும் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்தேன். இந்த எண்ணையே ஒரு புதையலைப்போல ஒளித்து வைத்திருக்கிறார்கள். தொடர்ந்த முயற்சி மற்றும் காத்திருப்புக்குப் பின் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும் கதை கேட்டார்கள். கூறினேன். எனக்கிருக்கும் பயம் மற்றும் அந்த பொருள் எனக்கு எத்தனை முக்கியம் என்பதைக் கூறினேன். முதல் சில ஊழியர்கள் வேண்டுமென்றே அழைப்பை துண்டித்தார்கள் அல்லது மீண்டும் அழைப்பதாக சாக்குபோக்கு சொன்னார்கள். விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்தேன். இப்போது ஒரு பெரியம்மா கிடைத்தார். முன்னவர்களை விட மிகக் கனிவாகப் பேசினார். ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறினார்.

“விமானம் ஒரு நிலையைத்தில் இருந்து இன்னொரு நிலையம் நோக்கிப் புறப்படும் முன் அதனை சுத்தம் செய்வோம். அப்போது பயணிகள் தவறவிட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதனை அந்த விமான நிலையைத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம். அப்படி ஒப்படைக்கபட்ட பொருட்களின் விபரங்களை கணினியிலும் ஏற்றிவிடுவோம். இதுபோல் யாரேனும் விசாரித்தால் தகவல்களைக் கூறுவோம். நீ தவறவிட்ட பொருள் இதுவரை கணினியில் ஏற்றப்படவில்லை. அப்படியென்றால் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்”, என்றார்.

என்னிடம் இருந்த நம்பிக்கை முற்றிலுமாகத் தொலைந்திருந்தது. பின் அவரே தொடர்ந்தார். “கனெக்டிங் பிளைட் என்றால் நாங்கள் சுத்தம் செய்ய மாட்டோம். அதாவது இரண்டு மூன்று நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் சமயங்களில் எது கடைசி நிறுத்தமோ அங்கு மட்டுமே இந்த சோதனை நிகழும். நீ கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, நீ பயணித்த விமானத்திற்கு நியூயார்க் கடைசி நிறுத்தம். எதற்கும் அந்த அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிவிட்டு உன்னை மீண்டும் அழைக்கிறேன்”, என்று கூறினார். அவர் நிச்சயமாக அழைப்பார் என்ற நம்பிக்கை வந்தது.

சாண்டி இனி டாலஸ் விமான நிலையத்திற்கு சென்றாலும் அது வீண். அதனால் அவரை அழைத்து இத்தனை நேரம் நடந்த உரையாடலைக் கூறினேன். இடைப்பட்ட நேரத்தில் அந்த பெரியம்மா அழைத்தார் “எங்கள் நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மணி அடிக்கிறது. எடுப்பதற்கு ஆள் இல்லை. உனக்காக நான் ஒரு உதவியைச் செய்கிறேன். அப்படிச் செய்வது சரியா தெரியவில்லை. அந்த அலுவலகத்தின் நேரடி தொடர்பு எண் தருகிறேன். நீயும் தொடர்புகொள்ள முயற்சி செய்”, என்றார். அவர் கொடுத்த எண்ணிற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டதில் என்னுடைய நூறாவது அழைப்பிற்குப் பதில் கிடைத்தது.

“கேமரா பேக் போன்ற ஒன்று எங்களிடம் இருக்கிறது. ஆனால் அது உங்களுடையதா என்றெல்லாம் தெரியாது. பயணிகள் நேரில் வராமல் அது குறித்த மேலதிகத் தகவலை எங்களால் தர முடியாது”, என்ற கடுமையான பதில் கிடைத்தது. லேசான நிம்மதி அவர்களிடம் ஒரு கேமரா பேக் இருக்கிறது.

அது என்னுடைய தங்கம்தானா என்பதை உறுதி செய்வதற்காகப் போராடினேன். அந்தப் பெண் மசியவில்லை. நான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பொருத்தமற்ற பதிலைக் கூறினார். போதாக்குறைக்கு வேறொன்றையும் கூறினார், “இங்க ரெண்டு கேமரா பேக் இருக்கிறது. இரண்டும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கு. என் தலைக்கு மேல் கேமரா இருக்கிறது. ஆக நான் உன்னிடம் இதற்குமேல் பேச முடியாது”, என்று கூறி என் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தார்.

என்னடா லேசா மூச்சு விடுறதுக்குள்ள மூச்ச நிறுத்திட்டீங்க என்று தோன்றியது. அடுத்த வேலை விமான நிலையம் செல்ல வேண்டும். தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம். ஆனால் இங்கிருந்து ஒருமணி நேர தொலைவில் இருக்கிறது விமான நிலையம். உள்ளே சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள் வர நேரமாகும் போல் தெரிந்தது. சூழ்நிலை சாதகமாக அமையுமா? சந்தோஷப்படலாமா கூடாதா என்கிற ரெண்டுங்கட்டான் மனநிலை.

சிறிதுநேரத்தில் ஓர் அழைப்பு. அதே பெரியம்மா. “நியூயார்க் விமான நிலைய ஊழியரிடம் பேசிவிட்டேன். உன் கேமரா பை மிக பத்திரமாக எங்களிடம் இருக்கிறது. உன் பயணச் சீட்டு மற்றும் ஐடி இரண்டையும் காண்பித்து அவர்களிடம் சென்று வாங்கிக்கொள்ளலாம்”, என்று கூறினார். மீண்டும் மீண்டும் அவர் வாயால் அதனை உறுதி செய்வதற்காக வேறுவேறு வழிகளில் ஒரே கேள்வியைக் கேட்டேன்.

“மிக்க நன்றி”, நன்றேன். அந்த விமான நிலைய அதிகாரி என்னிடம் கூறிய இரண்டு பேக் குறித்துக் கூறினேன்.

“அது டகால்டி. உன்னைக் குழப்புவதற்காகச் சொன்ன பதில். நீ வந்த விமானத்தில் உன்னுடைய கேமரா பேக் மட்டுமே கிடைத்ததாகக் கூறினார். கணினி கோளாறு காரணமாக அதனை இன்னும் சர்வரின் ஏற்றவில்லை. இல்லையென்றால் எப்போதோ உன் பதட்டத்தைக் குறைத்திருப்பேன்”, என்றார்.

“உன் பேச்சில் மிக அதிகமான பதட்டம் தெரிந்தது. அதற்காகவே பலமுறை அவர்களைத் தொடர்புகொள்ள முயன்று, மிகத் தெளிவாக மிக நிதானமாக அத்தனை தகவல்களையும் பெற்றேன். அதன்பின்னே உன்னை அழைத்தேன்.”, என்றார். மிக அதிகமாக சிரித்தார். என்னையும் புன்னகைக்க வைத்தார். பேசும்போதே அவருக்கு மூச்சு வாங்கியது.

“உனக்கு ஒண்ணு தெரியுமா?”, என்றார்.

“இன்னிக்கு எனக்கு இங்க கடைசி நாள். அண்ட் யூ ஆர் மை லாஸ்ட் காலர்.”, என்றார்.

Unfortunately you are a lucky caller”, என்றார்.

“நான் கிளம்பிப் போறதுக்கு முன்னாடி உன்னோட சோகத்தையும் சேர்த்து எடுத்துட்டுப்போக விரும்பல. உன் பை உனக்குக் கிடைக்கனும்ன்னு உன்னவிட அதிகமாக பதறினது நான்தான் தெரியுமா?”, என்றார்.

Yes, you are lucky”, என்றார்.

Yes I’m lucky because you listened me”, என்றேன்.

மிகப்பெரிதாகச் சிரித்தார். இப்போதெல்லாம் ஒவ்வொருமுறை அந்த கேமரா பையைப் பார்க்கும்போதும் பெரியம்மாவும் அவர் கூறிய சொற்களும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. தொலைந்து கிடைத்ததற்கான இடைவெளி அசாதாரணமானது. சர்வ சாதாரணமாக்  கடக்கச் செய்தவர் அவர்.. கோடி நன்றிகள் தெய்வமே.  


-    சுபம்

2 comments:

 1. I am lucky because you listened me...
  அருமையான முத்தாய்ப்பு
  இப்போதுதான் பேஸ்புக்கில் படித்தேன்

  ReplyDelete
 2. சிறப்பான விஷயம் அந்தப் பெண்மணி செய்தது. முகநூலிலும் வாசித்தேன்.

  நல்ல வேளை உங்கள் கருப்புத் தங்கம் கிடைத்ததே. அது இல்லாமல் கை ஒடிந்த மாதிரி தானே...

  ReplyDelete