29 Sept 2019

(திரை) அரங்கநாதன்

டிவிடிக்களும் பென்டிரைவுகளும் ஜியோக்களும் நம்மை ஆக்கிரமித்து இருக்காத வரைக்குமான நம் திரையரங்க அனுபவத்திற்கும் அதன்பின்னான அனுபவத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. சிறுவயதிலிருந்து நாம் கொண்டாடிய ஒரு திரையரங்கம் கொடுத்த உள்ளார்ந்த அனுபவம் ஏக்கம் பூரிப்பு இன்னும் நம்முள் மிச்சம் இருக்கிறது. அரங்கம் சென்று படம் பார்க்க வேண்டும் என்பது ஏக்கமாகி கொண்டாட்டமாகிய, கொண்டாட்டமாக்கிய வரலாறைப் பின்னணியாகக் கொண்டவர்கள் நாம். வீட்டில் அனுமதி பெற்று, பின் தெரியாமல், பின் தெரிந்தும் தெரியாமல் என ஒரு திரையரங்கம் நம்மோடு உருவாக்கி வைத்திருந்த தொடர்புகள் ஏராளாம். இன்றைக்கும் அவை நம் நனவோடையில் கிழிந்து போன டிக்கெட்டுகளாக மிதந்து கொண்டுதான் இருக்கின்றன.

திரையனுபவம் என்பதும், சினிமா முழுமையடைதலும் திரையரங்கம் மூலம் மட்டுமே கிடைக்கும் என்று நம்புகிறேன்.

திரையரங்கமே பிரம்மாண்டமான ஒன்றுதான். அதன்பின் தான் அது கொடுக்கக்கூடிய திரை அனுபவம்.

ஒரு சிறுவனாக யானையைப் பார்த்த போது கிடைத்த அதே பிரம்மிப்பு தான் முதன்முதலில் திரையை உணர்ந்துகொள்ள ஆரம்பித்த போதும் கிடைத்திருக்கக் கூடும். மைதானம் போன்ற அந்த இடம், கும்மிருட்டு, தியானக்கூடத்தின் சாந்தமான அமைதி. அங்கங்கே ஓரிருவர் மட்டும் பேசிக்கொள்ளும் சலசலப்பு, கதவுகளைத் திறக்கும் போதோ இல்லை அந்த கவுகளின் மேல் போடப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் துணியை அகற்றும் போதோ வரும் பெரு வெளிச்சம் என எத்தனை அற்புதமான அனுபவத் துகள்கள் அவை. நினைக்கும் போதே பரதன் திரையரங்கினுள் சென்று வந்ததைப் போல் இருக்கிறது. எப்படி இந்த அனுபவம் மனதின் அடியாழத்தினுள் புதைந்து போனதோ அதேபோல் இன்றைக்கு பரதனும் மண்ணோடு மண்ணாகி விட்டது என்பது எத்தனை கவலையான விஷயம். நூறுநாட்கள் ஓடிய பல திரைப்படங்களுக்குச் சொந்தக்காரன் பரதன். இன்றைக்கு பாகம் பிரிக்கப்பட்டு வானம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு திரையரங்கம் அழியும் போது அதைச் சார்ந்த அடையாளங்களும் சேர்ந்தே அழிந்து போகின்றன. பரதன் தியேட்டரின் ஒருபுறம் கிடைக்கக் கூடிய ரோஸ்மில்க் அத்தனை சுவையாக இருக்கும், படம் முடித்துவிட்டு வெளியே வந்தால் நிச்சயம் ரோஸ்மில்க் வேண்டும், திரையரங்க காலம் அழிவின் ஆரம்பித்தில் இருந்தபோது முதலில் அழிந்த கடை அந்த ரோஸ்மில்க் கடையாகத்தான் இருக்க வேண்டும். திரையரங்கினுள் கிடைக்கும் முறுக்கு தனி சுவை. கடலை மற்றும் கிழங்கு மாவில் செய்யபட்ட அந்த முறுக்கை பரதன் தவிர வேறெங்குமே சாப்பிட்டதில்லை. மூத்திரவாடை அடிக்கும் அரங்கின் பின்புறம் ஆட்டுக்கால் சூப்பும், மீன் வறுவலும் பிரமாதமாக இருக்கும். இன்றைக்கு ஆட்டுக்காலும் இல்லை மூத்திரவாடையும் இல்லை. பிணமெடுத்த பின் வெறுமையாகிப் போன சாலையின் ஈரம் மட்டும் மிச்சம் இருக்கின்றது நினைவுகள் என்ற பெயரில்.

பத்மம் திரையரங்கின் நுழைவுச்சீட்டுக்கான வாயில் ஒரு குகையைப் போல வளைந்து வளைந்து பாம்பைப் போல் நகரும். நல்ல பெருங்கூட்டத்தில் அதன் மையத்தில் மாட்டிக்கொண்டோம் என்றால் மூச்சுமுட்டிக்கொள்ளுமோ என்றெல்லாம் பயந்தது உண்டு. அப்படியானதொரு அனுபவம் மன்மதனின் போது நிகழ்ந்தது. யாருமற்ற அந்த குகையினுள் படுத்திருந்த நாய்கள் துரத்திய அனுபவம் 'நேரம்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது நிகழ்ந்தது. ஆன்லைன் டிக்கெட்டிங்கும் மல்டிப்ளெக்ஸ் வளாகமும் வாழ்க்கையின் ஜஸ்ட் லைக் தட் அனுபவங்களை, ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டுவிட்டது.

பரதனை விட மிகப்பெரிய திரையாகப் பார்த்தது பாக்யலக்ஷ்மியை, பாக்யலக்ஷ்மி என்றாலே அதன் பால்கனி தான் கடல் போல் இருக்கும். அதில் மட்டும் குறைந்தது நூறுபேர் உட்கார முடியும். பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் அதைவிட மிகப்பெரிய அரங்கம் தெரியும். அத்தனை கதவுகளும் அடைக்கபட்ட பின், அத்தனை திரைகளும் மூடப்பட்ட பின், அங்கிருக்கும் கும்மிருட்டு, பேரமைதி, ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கான ஆரம்பமாக இருக்கும். மிகப்பெரிய மிகப்பிரம்மாண்டமான அந்த சிவப்புத்துணி மெல்ல மெல்ல மேல் எழும்பத் தொடங்கும் போது கிடைக்கும் அந்த போதை, ஒருவேளை மனம் ஒரு நிலைப்பட்டால் அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறன்.

ஆண்டவா நம்ம முன்னாடி எவனும் தலைய தூக்கிட்டு வந்து உட்காரக்கூடாது என்ற வேண்டுதல்கள் இல்லாது அரங்கினுள் நுழைந்ததே இல்லை. அப்படியும் நமக்கென்றே ஒய்யாரமாய் வந்து உட்காரும் ஜீவ ராசிகளும் உண்டு. இன்றைய மல்டிப்ளக்ஸ் பிள்ளைகளுக்கு அந்த அசௌகரியம் இருகாதென நினைக்கிறன்.

அந்தப் பெரியதிரையில் செய்திகள் முடிந்து, அரசு விளம்பரப் படங்கள் முடிந்து, திரை பிரகாசமாக ஆரம்பிக்கும் போது விசில் சத்தம் பறக்கும், ஆவூ கூக்குரல்கள் முட்டித் தெறிக்கும், இள ரத்தத்தின் வேகம் மிகவேகமாகப் பிரவாகம் எடுக்கும். முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்கம் இப்படித்தான் இருக்கும் என்பதை கில்லி படம் பார்க்கும் போது தெரிந்து கொண்டேன். நாம பெருசான டாக்டர் ஆகணும் இஞ்சினியர் ஆகணும் என்ற கனவுகளை விட முதல்ல விசிலடிக்கக் கத்துக்கணும் என்று மைல்ஸ்-ஸ்டோன் செட் செய்த தலைமுறைகள் நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்.

ஷாக் படம் வெளிவந்திருந்த போது இந்தப்படத்தை தனியாக யாரேனும் அரங்கில் அமர்ந்து பார்த்தால் லட்சம் தருவதாக்க் கூறினார்கள், கோடி கொடுத்தாலும் பார்த்திருப்பேனா தெரியாது அப்படியொரு திகில் அனுபவத்தை அரங்கனைத் தவிர வேறு யாரால் கொடுத்திருக்க முடியும். உள்ளத்தை அள்ளித்தா பார்க்கும் போது ஒட்டுமொத்த அரங்கமும் பேய்ச் சிரிப்பு சிரித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. கிட்டத்தட்ட முண்டாசுப்பட்டி பார்க்கும் போதும் இதே போன்றதொரு அனுபவம் தான். விஸ்வரூபம் பார்த்தால் ஏரோ த்ரீடியில் தான், என்று வெறிபிடித்துத் திரிந்ததெல்லாம் அரங்கனின் மீதிருந்த காதலின் உச்சம். நகநகநக தினதினதின என உலகநாயகன் ஆரம்பிக்கும் போது அப்படியே உணர்வெழுச்சியின் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் கலை, அரங்க்கனை விட்டால் வேறு யாரேனும் தர முடியும் என நினைக்கிறீர்கள்.

கண்டிப்பா இந்தப் படத்தப் பாருங்க என்ற நிலையில் இருந்து கண்டிப்பா இந்தப் படத்தத் தியேட்டர்ல போயிப் பாருங்க என்று கூறும் நிலைக்கு நகர்ந்திருக்கிறோம். சினிமாவும் தன் முகத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த டிஜிடல் யுகத்தில் எத்தனையோ விஷயங்கள் நமக்கும் அரங்கிற்குமான இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருமுறை சினிமா தியேட்டரைக் கடக்கும் போதும் "அடுத்து என்ன படம்" என யோசித்த தருணங்களில் இருந்து "அடுத்த்தடவ வரும்போது இந்த தியேட்டர் இருக்குமா" என்று எண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம். சத்யம் தியட்டரில் படம் பார்க்க வேண்டும் என்பது ஒரு தலைமுறையின் பேராசை என்பது இனிவரும் யாருக்கேனும் தெரியும் என்று நினைகிறீர்கள்?

கலையின் மதிப்பீடுகள், கலைஞர்களின் மீதான மதிப்பீடுகள் என்று அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. விமர்சனங்களின் வீரியம் கூடியிருக்கிறது. நீ எத்தனை கோடிய வேணும்னாலும் சம்பாதி ஆனா என்னோட ஆயிரம் ரூபா ரொம்பவே முக்கியம் என்ற விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. என் பணத்திற்கான நியாயத்தைக் கலை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. எதையும் முரட்டுத்தனமாக நம்ப அவன் தயாராக இல்லை. இது திருட்டு, இது இதில் இருந்து எடுக்கபட்டது, இதனால் இது இப்படி இல்லை, இது இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கக்கூடும் என்று ஆராயும் ஆர்வம் அவனுள் அதிகமாகி இருக்கிறது. இந்த ஆர்வத்தை, இந்த்த் தேடலைப் பூர்த்தி செய்ய கலை தயாராக இருக்கிறதா என்றால்?யாருமற்றப் பெருவெளியில் கலையும் அரங்கனும் எதிரெதிரில் நின்று கொண்டிருக்கிறார்கள். தன்னை மிகவேகமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது காலம் அரங்கநாதனிடமிருந்தும் நம்மிடமிருந்தும். யாருடைய துணையுமின்றி அங்கேயே நின்று கொண்டிருக்கிறது கலை நனவோடையின் சலசலப்புகளோடு.