2 Jul 2019

கோயிந்தா கோயிந்தா


நல்ல உறக்கத்தில் நல்ல பசியில் இருப்பவனை எழுப்பி, யாரேனும் மிளகு பாலும் உப்புமாவும் கொடுத்தால் அவனை எப்படிப் பார்ப்பீர்கள். தெய்வமாக? தெய்வத்தின் தெய்வமாக? அதே தெய்வம் கோயிந்தா கோயிந்தா என உங்களையே தெய்வம் என்றழைத்தால்!

திருப்பதிக்கு வந்து சேர்ந்திருந்த போது நள்ளிரவு, அப்படி ஒன்றும் குளிரில்லை. ஏழுமலையேறும் பேருந்தைப் பிடித்து மலையேறி, மொட்டையடிக்கும் இடம் கண்டுபிடித்து மொட்டையடித்து, குளித்து, பெருமாள் தரிசனத்திற்காக நகரும் போது நேரம் அதிகாலையை நெருங்கி இருந்தது. நல்ல குளிரானது சூடான மொட்டையின் வழியாக மூளைக்குள் புகுந்து தண்டுவடத்தினுள் நுழைந்து பற்களின் வழியே தந்தியடித்துக் கொண்டிருந்தது.

"இங்கயே ரொம்ப நேரம் நிக்க வேணாம். அப்புறம் கூட்டம் ரொம்ப அதிகமாயிரும்" என்று ராகவன் எங்களை இழுத்துக்கொண்டு இலவச தரிசனத்துக்கான கூண்டுக்குள் அழைத்துச் சென்றான். காத்திருப்பு நேரம் குறைந்தது ஆறு மணி நேரம் என்று எழுதியிருந்தார்கள். தூக்கம் கண்ணை சொக்கிக் கொண்டிருந்தது.

நாங்கள் அடைபட்டிருந்த கூண்டு முழுவதும் கோவிந்தா கோஷம். திடிரென யாருள்ளேனும் ஆன்மீக ஊற்று பெருக்கெடுத்தால் 'ஏழுகுண்டலவாடா வெங்கட்ரமணா' என ஆரம்பிக்க, மொத்த கூட்டமும் கோவிந்தா கோவிந்தா என ஆர்ப்பரிக்கும். இதையெல்லாம் கேட்டுகொண்டே இருந்தவன் எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை,

சர்வமும் அமைதியாக இருக்க, திடிரென மொட்டை மண்டையில் டம் டம் டம் என்று அடி விழும் சப்தம். யாரோ காதுக்குள் ஏறி கோயிந்தா கோயிந்தா என்று கத்துவது கேட்டது. அசதி தூக்கம் பசி, எதுவும் கண்களைத் திறக்க விடவில்லை. முகத்தின் மிக அருகில் மொட்டை அடித்த ஒரு பளாபளா நபர், ஆந்திரத் திரைப்படத்தில் வரும் வில்லனைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு கப் நிறைய பாலை என்னிடம் நீட்டினார். நல்ல பெரிய கப். பாதியை குடித்துவிட்டு மீதியை ஆன்டோவிடம் கொடுத்தேன். 

"யாருப்பா அது இப்படி அடிக்கிறான். உன் மண்டைய அடிச்ச அடியில நானே எந்திச்சிட்டேன்" என்றார் ஆன்டோ. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. மிளகுப்பால் இன்னும் அதிக தூக்கத்தை வரவழைத்தது. கண்ணை மூடி ஒரு நொடி கூட ஆகியிருக்காது, மீண்டும் யாரோ, அதே டம் டம் டம். முதலில் கனவு என்றுதான் நினைத்தேன். அடியின் வலி இன்னும் ஓங்கி உறைக்க, கண்களைத் திறந்தால் அதே நபர். கைகளில் தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக் கொண்டு, "கோயிந்தா லெய் கோயிந்தா, தீசுக்கோ கோயிந்தா" என்றார். அருகிலேயே மணிக்குமாரும், ராகவனும் ஒரு தட்டு நிறைய சேமியா உப்புமாவை வைத்துக்கொண்டு, என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்கள்.

மணிதான் கேட்டான், "ஏல யார் அவரு, ஆறு மணிக்கு கொண்டு வந்து பால் கொடுத்தாரு, இப்போ ஒம்போது மணிக்கு உப்புமா கொடுக்காரு, நாங்க பாரு அரை மணி நேரமா க்யுல நின்னு வாங்கிட்டு வந்திருக்கோம்" என்று கூறும்போதுதான் முழுவதுமாக முழித்திருந்தேன். அதுவரைக்கும் நடந்து முடிந்த அத்தனையும் கனவு என நினைத்துக் கொண்டிருந்தது மனம். கோயிந்தாவின் முகம் நன்றாக நினைவில் இருந்தது. அவரைத் தேடினேன். எங்கே இருக்கிறார் என கண்கள் சுற்றும் முற்றும் உருண்டன. பார்க்குமிடமெல்லாம் மொட்டை. மொட்டைகளுக்கு மத்தியில் மொட்டை. கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு சில அடி தள்ளி வெகு அருகிலேயே அமர்ந்து, தன் குழந்தைகளோடு பசியாறிக் கொண்டிருந்தார் என் கோயிந்தா. முகம் வில்லனைப் போல் எல்லாம் இல்லை. அப்பாவியான முகம், நிறைய கருணை பொங்கும் கண்கள். 

அற்புதங்கள் எதுவும் நிகழாத நாட்களில் உன்னையே நினைத்துக் கொள்கிறேன். ஆம் நீயே என் அற்புதம். நானே சாட்சி. சீனு - 7:02

No comments:

Post a Comment