6 Jul 2019

போக்கு லாரி

போக்கு லாரி "அண்ணாச்சி பையன கொஞ்சம் மேல சருவாம வர சொல்லுறியளா, நா வண்டி ஓட்டவா வேணாமா", டிரைவரின் பேச்சில் கிண்டலும் கோபமும் கொஞ்சம் இயலாமையும் இருந்தது. "தம்பி கொஞ்சம் தூங்காம வாரியளா" என்று எத்தனையோ முறை கூறிவிட்டார், என்னால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தகக் குளிரும், லாரியின் குலுங்களும், இளையராஜாவின் வரிகளும் போதுமானதாக இருந்தன, போதையான ஒரு தூக்கத்திற்கு. தூங்கவே கூடாது என கண்களை நன்றாக விரித்தாலும், என்னையே அறியாமல் சாமியாடுகிறேன். "எப்போதும் ஒம்போது மணிக்கெல்லாம் தூங்கிருவான், இப்ப டையம் நடுராத்திரி ஆச்சு, ஏல சீனா தூங்காம வாடே", மாமாவால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? தென்காசியில் இருந்து சென்னைக்குச் செல்லும் போக்கு லாரியில், வீட்டுச்சாமானை ஏற்றிக்கொண்டு திருவள்ளூருக்குப் புலம்பெயர்வதுதான் எங்கள் திட்டம். நண்பனின் அப்பாவின் மூலமாக சென்னை செல்லும் போக்கு லாரி ஒன்றைக் கண்டுபிடித்து, வாடகை கொடுத்து, தேதியும் குறித்தாயிற்று. போக்கு லாரியில் வாடகை குறைவு, சென்னை வரைக்கும் வெற்று வண்டியாகச் செல்லும் என்பதால் லாரி டிரைவரைப் பொறுத்தவரையில் அவருக்குக் கூடுதல் வருமானம். எங்களைத் தவிர வேறுயாரும் கிடையாது, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். எங்களுடைய பொருள் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு சின்ன கட்டில் ரெண்டு பீரோ, ஒரு டிவி இதர பாத்திரங்கள். பாதி லாரி கூடத்தாங்காது. இத்தனை நாட்கள் சென்னைக்குப் புலம் பெயர்வது தான் ட்விஸ்ட்டாக இருந்தது என்றால், சென்னைக்கு அழைத்துச் செல்லும் லாரியிலும் வந்து சேர்ந்தது ஒரு ட்விஸ்ட், திருச்சிக்கு இடம்பெயரும் குடும்பம் ஒன்றும் எங்களோடு வரவிருப்பதாகவும், லாரியில் ஏற்கனவே தாராளமான இடம் இருப்பதால், பாத்திர பண்டங்களோடு அவர்கள் மூவரும் பின்னாடியே இருந்துகொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தார்கள். எங்கள் யாருக்கும் இதில் உடன்பாடில்லை என்றாலும் நாமே போக்கு லாரியில் செல்கிறோம் என்பதால் மறுப்புத் தெரிவிக்க முடியா சூழல். சரியாக மாலை ஆறுமணிக்கு பயணம் ஆரம்பமாகியது. கிளீனர் சீட்டில் ஜம்மென்று அமர்ந்து பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். தென்காசிக்கு விடை கொடுக்கும் உணர்வை விட சென்னைக்கு பயணமாகிறோம் என்ற உணர்வு அலாதியாக இருந்தது. பயணம் ஆரம்பித்து ஒரு மணிநேரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. திடிரென லாரிக்குப் பின்புறம் இருந்து டம்டம் டம்மென பெரும் சப்தம். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, பின்பக்கக் கதவுகளைத் திறந்து பார்த்தால், அங்கிருந்த மூவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கீழேக் குதித்தார்கள். "இன்னும் ஒரு நிமிஷம் கூட இங்க உக்கார முடியாது, பயங்கர கொசுக்கடி, எங்கள முன்ன ஏத்திகோ" என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள் அந்த மூவரும். முன்புறம் இன்னும் ஒருவரை வேண்டுமானால் ஏற்றிக்கொள்ளலாம், அவர்களோ மூன்று பேர். அந்த மூவரும் பேருந்தில் வருவதாகத் தான் கூறியிருக்கிறார்கள். இந்த டிரைவர் காசுக்கு ஆசைப்பட்டு அவர்களிடம் கணிசமான தொகையைப் பெற்றுக்கொண்டு லாரியின் பின்புறம் அமர்ந்து வரும் யோசனையைக் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் கொசுவுக்குத் தெரியுமா என்ன? இடுக்குப்பிடிப்பான, குறுகலான இடத்தில் நான்கு பேர் அமர்ந்திருந்தோம், கிளீனர் சீட்டில் இரண்டு பேர், இருப்பதிலேயே நான் தான் சின்னபையன் என்பதால், கியர்பாக்சுக்கு அருகில் இருக்கும் இடைவெளியில் உட்கார வைத்தார்கள். அடுத்த சில மணி நேரங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இரவு உணவை சாலையோரக் கடை ஒன்றில் முடித்துவிட்டு ஏறியது தான் தாமதம், தூக்கம் கண்களை சொக்க ஆரம்பித்தது. எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டேன் முடியவில்லை. ஏற்கனவே அன்றைய காலையில் இருந்து பயங்கரமான அலைச்சல், TANCET எழுத நெல்லை சென்றுவந்தது, வீட்டினை திருப்பிப் போட்டுக் கவிழ்த்தது என பயங்கர அலுப்பு. அத்தனையும் சேர்ந்து என்னை உருட்டி எடுத்துக் கொண்டிருந்தது. எங்கெங்கோ உடலை நெளித்து ஒருவழியாக படுத்துவிட்டேன். இருப்பதிலேயே சின்னப்பையன் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. எப்போடா திருச்சி வரும் என்று இருந்தது. திருச்சி வந்து அவர்கள் பொருட்களை இறக்கி வைத்ததுதான் தாமதம், நேராக ஏறிச்சென்று க்ளீனர் சீட்டில் அமர்ந்து கொண்டேன். திருச்சியில் இருந்து ஆரம்பமான பயணம் மறக்க முடியாத ஒன்றாக மாறியிருந்தது. க்ளீனரும் மாமாவும் தூங்கியிருக்க, அதற்குப் பிறகான பயணத்தில் டிரைவரை தூங்காமல் பார்த்துக்கொண்டது நானாகத்தான் இருக்கவேண்டும். "நைட் இட்லி தோச சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும், பரோட்டா சால்னா சாப்பிடனும், அதுதான் செமிக்காமா நல்ல உள்ள கெடந்து பொறட்டிக்கிட்டு இருக்கும். அப்போதான் தூக்கம் வராது" என்றெல்லாம் இலவச டிப்ஸ் கொடுத்தார், லாரி டிரைவரான கதையில் இருந்து அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் என அவர் கடந்து வந்த பாதை அந்த இரவு மிக நீளமாக நீண்டு கொண்டிருந்தது. இருந்தும் அவருடைய கதைகள் எதுவும் உவப்பாக இல்லை. ஏதோ ஏமாற்றப்பட்டதைப் போன்ற உணர்வு. விழுப்புரம் நெருங்கும் போது நன்றாக விடிந்திருந்தது. வண்டி நகர முடியாத அளவிற்கு சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன. புதிதாகப் போடப்பட்டிருக்கும் ரயில்வே கேட் ஒன்று பழுதானதால் அதை சரி செய்யும் வரைக்கும் எதுவும் நகராது என்று கூறிவிட்டார்கள். அதனை சரி செய்து, போக்குவரத்து சீராகி அங்கிருந்து கிளம்பும் போது நேரம் நண்பகலை நெருங்கி இருந்தது. "அந்த திருச்சி லோட" ஏத்தி இருக்கவே கூடாதுன்னே என்று மாமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். "இந்தத் தாயோளி வண்டில நாமதாம்ல ஏறி இருக்கக் கூடாது என்று மாமா என்னிடம் புலம்பிக் கொண்டிருக்கும் போது பாத்திர பண்டங்கள் அனைத்தையும் இறக்கிவிட்டு பொதிகை அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தோம்.

2 comments:

  1. இந்தியாவில்தான் டிரைவருக்கு அருகில் உள்ளவர்கள் தூங்க கூடாது என்பதெல்லாம் போலிருக்கிறது இங்கே அப்படி யாரும் சொல்லி கேட்டதுமில்லை.... அதுமட்டுமல்ல நானும் பல இரவுகளில் நீண்ட தூரம் கார் ஒட்டி சென்று இருக்கிறேன் அப்போது மனைவி ,குழந்தை மற்றும் என் நாய்குட்டியும் அருகிலேயே தூங்கி கொண்டிருப்பார்கள் நான் மட்டும் கார் ஒட்டி சென்று இருக்கிறேன் அப்போது எனக்கு தூக்கம் எல்லாம் வந்தது இல்லை

    ReplyDelete
  2. சீனு இன்று பேஸ்புக்கில் யுவர் மெம்மரி என்று இந்த பதிவை காட்டியது அதை பார்த்த பின் நீங்கள் எழுதுகிறீர்களா என்று பார்த்த பின்பு நீங்கள் மீண்டும் எழுத ஆரம்பித்தது தெரியவந்தது

    பேஸ்புக்கில் இப்படியும் ஸ்டேடஷ் போடுகிறார்கள்? http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post.html

    ReplyDelete