14 Feb 2018

பூனை சொன்ன கதை - பா ராகவன்

அன்பின் பா.ரா,

வணக்கம். இந்தக் கடிதம் எதற்கென இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். நிச்சயமாக இதனை ஒரு வாசகர் கடிதம் என்றோ இல்லை வாசகர் விமர்சனக்கடிதம் என்றோ கூட எடுத்துக்கொள்ளலாம். அதற்கான மொத்த உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.

இன்றைக்குத்தான் பூனைக்கதை படித்து முடித்தேன். படித்து முடித்தபின் எழும் நினைவுகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அதனை வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இத்தருணத்தில் என்னருகிலும் அந்தக் கரிய பூனை அமர்ந்திருப்பதைப் போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. அதன் திரண்ட விழிகள் பலநூறு வருடத்துக் கதை கூறுகின்றன. அப்படியே அள்ளி எடுத்து அதன் முதுகை லேசாகத் தடவிக் கொடுக்கலாமா இல்லை நமக்கேன் வம்பு என கண்டுகொள்ளாது விட்டுவிடலாமா என்ற இருவேறு உணர்ச்சிகளுக்கு நடுவே என் எழுத்துக்களுக்கு கருப்பு மை தீட்டிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள் நான் வேண்டாம் என்று நினைத்தாலும் அந்தப் பூனையின் கரிய நிறம் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. சற்றே புன்முறுவல் புரிகிறீர்கள் இல்லையா. அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு அடுத்ததாக நான் சொல்லப்போகும் வரிகள் சற்றே அதிர்ச்சியையோ, வருத்தத்தையோ அளிக்கலாம். அல்லது உங்கள் சமநிலையை குலைக்காமலும் போகலாம். ஒருவேளை அதிர்ச்சியோ வருத்தமோ அடைவீர்கள் என்றால் முன்னதாகவே மன்னிப்பு ஒன்றை சமர்பித்து விடுகிறேன்.

சரி இப்போது கேள்விக்கு வருகிறேன். 'பாரா நீங்கள் நாவல் எழுதுவீர்களா' என்று கேட்டால் எப்படி உணர்வீர்கள். பூனைக்கதையின் அட்டை படத்தைப் பார்த்தபோது அப்படித்தான் உணர்ந்தேன். உங்களை 'பத்தி எழுத்தாளன்' என்றே இதுநாள் வரையிலும் நினைத்திருந்தேன். கதைகள் எழுதுவீர்கள் என்றாலும் அது சின்னத்திரைக்காக மட்டுமே என்று நினைத்தது என் தவறுதான். ஆனால் பாருங்கள் சமயங்களில் நம்தவறு பிறரையும் வருத்தப்படச் செய்துவிடுகிறது. நான் செய்த தவறைப்போல.

நீங்கள் எழுதி நான் படித்த அத்தனை புத்தகங்களிலும் சரி அல்லது புத்தகக் கண்காட்சியில் கண்ட உங்களுக்கான விளம்பரங்களிலும் சரி நீங்கள் எழுதிய சிறுகதைகளோ அல்லது நாவலோ பிரதானமாகத் தெரியாதது என் குற்றம் மட்டும் அல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். பூனைக்கதையை நான் தேர்வு செய்ததன் அடிபடைகூட பா.ரா வின் எழுத்துக்களை பாரா தாண்டி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். படித்தும் முடிதுவிட்டேன். ஒரு நாவலின் முடிவு இன்னோர் நாவலில் சென்று சேர்க்குமா என்றால்? நிச்சயம் ஆம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உங்கள் அத்தனை நாவல்களையும், சிறுகதைகளையும் ஒருமுறையேனும் படித்துப்பார்க்க வேண்டும். அதற்கான வித்து என்னுள் விழுந்தது நிச்சயமாக பூனைக்கதையின் மூலமாகத்தான்.

உங்கள் வாசகர்களிடம் சொல்வதற்கென சில தகவல்கள் என்னிடம் இருக்கின்றன அதை முடித்துவிட்டு மீண்டும் உங்களிடம் வருகிறேன்..

*****

அன்புள்ள பா.ரா வாசகர்களுக்கு,

பூனைக்கதை படித்துவிட்டீர்களா? படித்திருந்தால் மகிழ்ச்சி.

படிக்கவில்லை என்றால் பா.ரா வருத்தப்படுவாரோ இல்லையோ நிச்சயமாக நான் வருத்தப்படுவேன். ஏனென்றால் இது பா.ரா தன் வாசகர்களுக்கென்றே தனிச்சிரத்தை எடுத்து எழுதிய நாவல். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் தன் வாசகர்களின் மனம் பிடித்து ஏதேனும் ஒன்றை விதைத்துக் கொண்டே வருகிறார். அந்த விதைகள் பெரும் விருட்சமென வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கணம் கூடக்கூட மனம் இலகுவாகும் விந்தை நிகழ்ந்தேறுகிறது. அதனால் தான் கூறுகிறேன் இது வெறும் பூனைக்கதை மட்டுமல்ல. உங்களுக்கான கதையும் கூட.   

பூனைக்கதை, ஹரன் பிரசன்னாவுக்கு எனத்தொடங்கும் அந்தப் பக்கங்களில் இருந்தே நாவலின் கணம் கூடிவிடுகிறது என நினைக்கிறன். எங்கெனத் தெரியாத ஓர் இடத்தில் இருந்து எட்டிப்பார்க்கும் சினேகம் ஹரன் பிரசன்னா. பூனைக்கதை தன்னை அறியாமலேயே சுவாரசியம் அடைந்ததற்கு ஹரன் பிரசன்னா என்ற பெயர்கூட காரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஒப்பிட்டுப் பார்த்தால் ஹரன் பிரசன்னா வேறு பூனை வேறு இல்லை என இப்போது தோன்றுகிறது. ஒரேயொரு வித்தியாசம் அது பூனை இவர் ஹரன் பிரசன்னா.

பூனைக்கதை, இவ்வுலகில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துபோக இருக்கும் ஆறு கலைகளைக் காப்பாற்ற அழகியநாயகி புரத்து ஜமீந்தாரும் அவர் கூடவே இருக்கும் பூனை ஒன்றும் பிரயத்தனப்படுகின்றனர். அதற்காக அக்கலைகளின் சூத்திரம் தெரிந்த ஆறு கலைஞர்களை, உலகமே அழிந்தாலும் கலை அழியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை மறைத்துவைத்து கலை வளர ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு அந்தக் கலைஞர்கள் ஒத்துழைத்தார்களா, ஜமீனும் ஜமீன் உடன் இருக்கும் பூனையும் ஔரங்கஜேப்பிடம் இருந்து அந்தக்கலைகளைக் காப்பாற்றினார்களா இல்லையா என்பது பாகம் ஒன்று.

இந்த ஆறு கலைஞர்களும் ஒரு பாதாள அறையினுள் பத்திரமாக அடைக்கப்பட்டு, வெறிகொண்டு வரும் ஔரங்கஜேப்பிடம் இருந்து தலைமறைவாக தங்கவைக்கப்படுகிறார்கள். பாதாள அறையினுள் இருக்கும் ஆறு திண்ணைகளைப் போல ஆறு கலைஞர்களுக்கும் பின் கதை இருக்கின்றன. எழுத்து, நடனம், கூத்து, இசை, ஓவியம், கவிதை என ஆறு வெவ்வேறு கலைஞர்கள் என்றாலும் இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம். அனைவருமே தங்களை சுயம்புவாக உருவாக்கிக் கொண்டவர்கள். ஒரு கலைப்பட்டறையில் சேர்ந்து உருக்கி வார்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் தங்களைத் தாங்களே செதுக்கியவர்கள். செதுக்கபடுகிறோம் என்பதை அறியாமலேயே செதுக்கபட்டவர்கள். இவர்களுக்கான பின்கதைகளும், இவர்களுடைய தத்துவார்த்த தேடல்களும் சூத்திரங்களுமே இவர்கள்.

இந்த ஆறு கலைஞர்களுக்கு மத்தியில் வந்து குதிக்கும் பூனை தன்னாலான சாகசங்களைச் செய்கிறது.

சமயங்களில் அது பூனையா என்பதே சந்தேகமாயிருக்கிறது. பூனைதான். காரணம் பூனை வடிவில் இருக்கிறது. பூனை வடிவில் இருக்கிறது என்பதற்காக அதனை பூனை என்று கூறிவிடமுடியுமா என்ன? ஒருசமயம் தன்னை பூனை என்கிறது. இன்னொரு சமயம் பூனை வடிவில் இருக்கிறேன் என்று புதிர் போடுகிறது. எதை நம்ப? இருந்தும் அதனை பூனை என்றுதான் நம்பியாக வேண்டும். ஏனென்றால் அதன் மூளையின் ஒரு பகுதியில் தான் ஒரு பூனை என்று எப்போதோ பதிவாகிவிட்ட சொல்லை நம்மிடம் ஏற்கனவே கூறியிருக்கிறது. அதனால் அது பூனைதான்.இந்தப் பூனைகென ஒரு குணம் இருக்கிறது. அது இவ்வுலகில் இருக்கும் அத்தனை குணாதிசியங்களும் திறமைகளும் தத்துவார்த்தங்களும் தன்னிடம் இருப்பதாக நம்மை நம்ப வைப்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தப் பூனை கூறும் எல்லாவற்றையும் நாமும் நம்புவோம். பூனையால் முடியாதது என்று எதுவும் இல்லை. இந்தக் கணத்தில் உங்கள் மூளையின் ஏதோ ஓர் நரம்பில் ஒரு சின்ன குறுகுறுப்பு ஏற்படுகிறதா? சர்வ நிச்சயமாக அந்தப் பூனையின் வேலை தான். உங்கள் அந்தரங்கத்தைத் தரம்வாரியாகப் பிரித்தாராய்வதில் அதற்கொரு அலாதி சுகமுண்டு. அந்த சுகம் ஜமீன்தாரை இயக்கி, அவர் மூலம் கலைஞர்களை இயக்கி பின் அக்கலைஞர்களை பித்துநிலைக்குத் தள்ளும் வரைக்கும் ஓயாது பணியாற்றுகிறது. ஒரு பூனையால் இப்படியெல்லாம் செயலாற்ற முடியுமா என்றால் 'யார் சொன்னா நான் பூனை என்று' நம்மை நோக்கி எள்ளி நகையாடுகிறது. பூனையின் திறமைகளை எண்ணி அதனைப் பாராட்டாலாம் என 'இறைவனின் அற்புதமான ஸ்ருஷ்டி நீ' என்றால் 'அப்படியா சொன்னான் அந்த ஆண்டவன்' என கேலி பேசுகிறது. இனி ஆவதற்கெதுவும் இல்லை என்றால் எதற்கும் துணிந்த கட்டை நான் என்கிறது இந்தப்பூனை.     

ஜமீன்தாரிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பூனை எழுத்தாளார் பாராவைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் வைக்கிறது. "பா.ரா பா.ரா நீ பாரா பாராவா எழுதினது போதும். உன்கிட்ட சொல்ல ஒரு கதை இருக்கு. அத எனக்காக நீ எழுதித் தருவியா" என்று கேட்கிறது பூனை. பூனைக்கு சம்மதம் சொன்ன பாரா, பின் பாராமுகமாகி, மயிலைத் தேடி போய்விடுகிறார். இதனால் கடுப்பான பூனை ஆறு கலைஞர்களின் மீது பிரயோகித்த வன்முறையை பாராவின் மீதும் பிரயோகித்துப் பார்க்கிறது. இது பாகம் ரெண்டு.

அதே பூனை கலை விரக்தியில் கலியுகத்தின் நல்லதொரு வெயில் நாளில் மாபெரும் சம்ஹாரத்தில் ஈடுபடுகிறது. இது பாகம் மூன்று. இதில் மூன்றாவது பாகத்தின் கடைசி வரியில் மட்டும் சற்றே அதீத வன்முறை தெறிக்கிறது.

*****

மீண்டும் அன்பின் பா.ரா,

முதலில் உங்களுக்கோர் அழுத்தமான கை குலுக்கல். இப்படியொரு அசத்தலான புனைவை எழுதியமைக்கு.

இக்கதையின் முதல் பாகத்தை மாய-எதார்த்தவாதம் என்று கூறலாமா? அப்படித்தான் தோன்றுகிறது. இப்புனைவின் வழி ஊடாடும் உங்கள் எழுத்தினை ஒரு மாயச்சுரங்கம் எனலாம். அத்தனை தத்துவார்த்த கோட்பாடுகளின் ஊடாகவும் பவனி வருகிறது உங்கள் எழுத்து. எல்லாமும் மிகச்சரியான விதத்தில் கலந்து செய்யப்பட்ட பண்டம் போல. உங்கள் வார்த்தையில் கூற வேண்டும் என்றால் 'ஒரு சாகசத்தின் உச்சத்தில் திளைக்கிற தருணத்தில் தன்னையறியாமல் நிகழ்வது. எதுவாகவும் இருக்கலாம். எப்படியும் இருக்கலாம்'. அதுதான் பூனைக்கதை என்று நினைக்கிறன்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், "மறுபிறப்பெடுத்துவிடும். ஒளியின் மையப்புள்ளியைக் கண்டெடுத்துக் குளிப்பாட்டி வைக்கிற வேலை இது. அழுக்கு போகக் குளித்தபின் அதன் உள்ளார்ந்த இருள் மையத்தை நோக்கி எங்கள் கவனம் நகரும். ஒளியில் இருந்து இருளும், அதிலிருந்து மீண்டும் ஒளியும் மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பதைத் துலக்கிக் காட்டுகிற பெரும் பணி. சொற்கள் மட்டுமே எங்களுடைய ஆயுதங்களாக இருந்தன" என்று கூறும் ஆறு கலைஞர்களைப் போல. அவர்களை உருவாக்கியவரே நீங்கள் தானே. இந்த நாவலின் பெரும்பலமே உங்களின் எழுத்துக்கள் வழியாக பாய்ந்து வரும் அந்தக் கவித்துவம் தான். நாம் நம் வாழ்வில் அனுபவித்துணர்ந்த பல்வேறு கவித்துவங்களை ஒரு புள்ளியில் கோர்ப்பது போல். 'எதிர்பாராத தருணங்களில் ஒரு கவித்துவம் உள்ளது. நான் அதைக் கவனமாக எடுத்து சேமித்து வைப்பேன்'. நீங்கள் சிந்திய முத்துக்களை வைத்தே உங்களுக்கோர் மாலை தொடுக்க முயல்வதுகூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதேநேரம் இதில் கரும்புள்ளி ஒன்று இல்லாமலும் இல்லை.

ஒரு மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய முதல் பாகத்திலிருந்து வெளிவந்து அதைவிட மிகப்பெரிய ஒன்றை எதிர்பார்த்துச் செல்லும் வாசகனுக்கு ஒரு சின்ன ஏமாற்றம் என்றால் அது இரண்டாம் பாகத்தின் சில தருணங்களை கஷ்டப்பட்டு கடக்கவேண்டி வரும் நிலைதான். அதையும் நீங்கள் மென்பகடி ஆக்காமல் இல்லை. 'பாரா எழுதிய மயில்சாமி கதைகள் அல்லது மலச்சிக்கலில் இருந்து விடுதலை' என்று. மிக மிக அற்புதமான களம் ஒன்றினை அமைத்துவிட்டு அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத அல்லது நேரடித்தொடர்பில்லாத இரண்டாம் பாகத்தினை உள்வாங்கிக் கொள்ள சற்றே கடினமாக இருந்தது.

நீண்ட நாட்களாகவே உங்களுக்குள் நீங்கள் பணிபுரிந்து வரும் இந்த சின்னத்திரைத் தொழிற்சாலையைப் பற்றி ஒரு புனைவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கும் என நினைக்கிறன். அந்த ஆசைக்குத் தீனி போடும் களம் பூனைக்கதையாக அல்லது பூனைக்கதையின் இரண்டாம் பாகமாக இருந்திருக்கவேண்டும். அங்கும் கலைதான். இங்கும் கலைதான். அங்கு கலை ஜமீனின் மூலம் வளர்க்க நினைக்கபட்டு ஒரு பூனையின் மூலம் திசைமாறிச்செல்கிறது. இங்கு அதே கலை பல கலைஞர்களின் மூலம் வளர்க்க பிரயத்தனப்பட்டு புண்டரீகாட்சன் போன்ற தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்களின் மூலமாக சூறையாடப்படுகிறது. இதற்கு பலிகடா, அதே துறையில் இருக்கும் வேறு சில கலைஞர்கள். இரண்டாம் பாகத்தில் எனக்குக் கிடைத்த ஏமாற்றம் மொத்தமும் முதல் சில பக்கங்களுக்குத் தான். அதன் பின் தானாக உள்விழுந்துவிட்டேன். காரணம் உங்களின் எழுத்தில் இருக்கும் வசியம். முதல் பாகத்து பூனை வெங்கியாக இங்கே தலைகாட்டும் போது மீண்டும் சுவாரசியம் ஒட்டிக்கொள்கிறது.

சின்னத்திரையில் ஒரு மெகாசீரியல் எடுப்பதில் இருக்கும் கஷ்டங்களை இதுவரையிலும் வேறு யாரேனும் இத்தனை தீவிரமாக, இத்தனை அழுத்தமாக ஆழமாக பேசியிருக்கிறார்களா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை என்றே கூறுவேன். அதன்பொருட்டும் இந்நாவல் முக்கியத்துவம் அடைகிறது. மயில் சந்திக்கும் ஒவ்வொரு தடைகளும் உடன் இருந்து அனுபவிப்பதைப் போல் என்னுள் கடத்தப்படுகிறது. மெகா சீரியலினுள் கவனிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதன் பின் மயில்சாமி போன்றோரின் உறக்கம் தொலைத்த இரவுகள் பல இருக்க வேண்டும்.  இதனை எழுதி முடிக்க நீங்கள் மேற்கொண்ட சிரத்தையை எண்ணி வியக்கிறேன். கொஞ்சம் தவறி இருந்தாலும் இது ஓர் ஆவணமாகியிருக்கும். இப்போது இலக்கியமாகிவிட்டது.

மேலும் அந்த சம்காரம், அந்த இறுதி வரியில் நிகழ்ந்த வன்முறையைத் தவிர வேறு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பூனை தோற்றுப்போயிருக்கும். பூனைக்கதையும் தோற்றுப்போயிருக்கும். நல்லவேளை அப்படியெல்லாம் நடந்துவிடவில்லை.

மனதிற்கு நிறைவளித்த நாவல். என்ன, பாகம் ஒன்றின் தொடர்ச்சி வேறொரு களத்திலும் தொடர வேண்டும் என்ற ஒரு நப்பாசையை மட்டும் அடக்க முடியவில்லை பா.ரா.

நன்றி
நாடோடி சீனு

No comments:

Post a Comment