3 Feb 2018

தூத்துக்குடி - ஆழி சூழ் உலகு

தூத்துக்குடி

தூத்துக்குடியைப் பற்றிய ஞாபகங்கள் என்னிடம் வெகு குறைவாகவே இருக்கின்றன. நன்றாக சுத்த வேண்டும் என நினைத்த ஓர் ஊர், ஞாபகத்தின் அடுக்குகளில் கூட தங்காமல் போனதை நினைத்தால் சற்றே வருத்தமாக இருக்கிறது. நினைவு தெரிந்த நாளை ஆதியாகக்கொண்டு யோசித்தால் மங்கா மாமா மறுவீட்டிற்காகச் சென்ற தூத்துக்குடிதான் முதலில் நிற்கிறது. மறுவீடு முடிந்து கண்காட்சி ஒன்றிற்குக் கூட்டிச்சென்றார்கள். அதுவொரு மிகப்பெரிய அறை. அந்த அறையின் மத்தியில் தூத்துக்குடியின் மாதிரியா இல்லை தூத்துக்குடியின் துறைமுக மாதிரியா எனத் தெரியவில்லை. ஒரு மிகப்பெரிய நிலத்தின் மாதிரியை முப்பரிமாணத்தில் வைத்திருந்தார்கள். கண்ணாடிக்குள் இருந்த அந்த கடலுக்குள் ஒரு சிறிய கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் வரிசையில் இரண்டு கன்னியாஸ்திரிகள் நின்று கொண்டிருந்தார்கள். 'நடங்கடே நடங்கடே'. எங்கிருந்தோ எழும்பிய குரல் அந்த அறையில் இருந்து எங்களை நகர்த்தியது. அவ்வளவு தான் அதற்கு மேல் ஞாபகம் இல்லை. மறுவீட்டில் ஓடியாடித் திரிந்த கணப்பொழுதுகளை எவ்வளவு யோசித்தும் மீட்டெடுக்க முடியவில்லை. 

அடுத்ததாக நான்காம் வகுப்பு இன்பச்சுற்றுல்லா - தூத்துக்குடி. படித்தது கிறிஸ்தவப் பள்ளி என்பதால் முதல் இடமே ஒரு தேவாலயம் தான். ஆனால் அதன் ஆரம்ப சுவடுகள் எதுவும் மீண்டு வருவதாயில்லை. ஒன்று மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. அது ஒரு நல்ல வெயில் நாள். ஆதவன் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தான். பேருந்தின் அத்தனை சன்னல்களும் திறந்து விடப்பட்டிருந்த போதிலும் உள்ளே புழுங்கிக் கொண்டிருந்தது. தண்ணீர் ஏகத்திற்கும் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. வெயிலின் வெம்மை தாங்காமல் பலரும் சுருண்டிருந்தார்கள். எனக்கு அப்படியில்லை. பயணம் வேடிக்கை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுவும் சன்னலோர இருக்கையாக வேண்டும். இன்பச் சுற்றுல்லா என்றால் பெரும்பாலும் பிரபாகரன் சன்னலோர இருக்கையை எனக்கு தந்துவிடுவான். இல்லை கேட்டு வாங்கிவிடுவேன். இல்லை எவ்வித மறுப்பு கூறமாட்டான் என்பதால் என்னுடனேயே வைத்துக்கொள்வேன். 'மக்கா எனக்கு வாந்தி வந்தா மட்டும் ஜன்னல் சீட் கொடுடே' என்பான். 'உனக்கு வாந்தியே வராது. வாரமாறி இருந்தா சொல்லு எழுமிச்ச இருக்கு. மூக்குலவக்கேன்'. 

என்னதான் சன்னலோர சீட் என்றாலும் பெரும்பாலான பொழுதுகளில் பேருந்து முழுவதையும் அளந்துகொண்டே தான் இருப்பேன். 'ஏல சீனு வால பாட்டு பாடுவோம் என்று முன்னால் இருந்து குரல் வரும்'. 'டானஸ் ஆடுவோம் வாடே' பின்னால் இருந்து குரல் வரும். ;இந்த பாட்டுக்கு இன்னும் சவுண்ட் வச்சா இன்னும் நல்லா இருக்கும்லாடே' என்று எவனாது கூறினால். 'நம்ம டிரைவர்தான். இப்போ பாரு எவ்ளோ சவுண்டு வரும்ன்னு' என்று கூறிவிட்டு டிரைவரின் அருகில் நிற்பேன். 

'மக்கா சவுண்ட் போதுமா கேளு' டிரைவர் என்னிடம் கேட்க நான் உள்ளே பார்ப்பேன். 'சூப்பர்ல' என்று பின்புறம் இருந்து சவுண்ட் வரும். இப்படியொரு வாய்ப்பு கிடைத்து டிரைவர் சீட் பக்கம் வந்துவிட்டேன் என்றால் மீண்டும் உள்ளே போக மனமிருக்காது. கண்முன்னே பரந்து விரியும் ஒரு பெரும்சாலை. அதன் ரம்மியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சன்னலோரமாகத் தெரியும் காட்சிக்கும், டிரைவருக்கு அருகே விரியும் காட்சிக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். டிரைவர் அண்ணாச்சி சக்கரத்தை வளைத்து ஒடித்து ஓட்டுவதும் லாரிகளையும் கார்களையும் முந்துவதையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வியர்க்கும் போதெல்லாம் கழுத்தில் கிடக்கும் துண்டை எடுத்து அவர் துடைக்கும் அழகை ஒரு கதாநாயகத் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். 'எம்மா எனக்கு டிரைவர் ஆகணும்' என்று சொல்லியதற்கு பரிகாரமாக அம்மா அடித்த அடி இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 

'ஏலே மக்கா பின்னால வாடே. எம்புட்டு நேரம்தான் அங்கேயே நிப்ப' பேருந்தின் பின்னாலிருந்து குரல் வரும். 'நான் இங்க வந்தம்ன்னா டிரைவர் சத்தத்த கொறைச்சிருவாறு. அதாம்டே அங்கனயே நிக்கேன்' என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் முன்னோக்கி நகருவேன். உறங்கிக் கொண்டிருக்கும் வாத்தி யாராவது கெட்ட சொப்பனத்தில் திடுக்கிட்டு எழுந்து, டிரைவர் அருகில் வந்தால் தோளில்தட்டி உள்ளே போகச்சொல்லுவார். ஆரோக்கிய சார் என்றால் எதுவும் சொல்லமாட்டார். அதற்காக எல்லா பயணங்களிலும் ஆரோக்கிய சாரே வரமுடியுமா என்ன?

தூத்துக்குடி தேவாலயத்தில் இருந்து பேருந்து ஹார்பரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது பேருந்து. பேருந்தே மயான அமைதி. அடித்த வெயிலில் எல்லாவனும் சரக்கடித்ததைப் போல உறங்கிக் கொண்டிருந்தான். ஹார்பர் எப்படி இருக்கும். கப்பல் எப்படி இருக்கும். அம்பிகாக்கா சொன்ன கப்பல் போல் இருக்குமா இல்லை கன்னியாகுமரி பாறைக்குப் போகும் படகைப்போல் ஒன்றைக்காட்டி ஏமாற்றிவிடுவார்களா? கப்பலினுள் போகமுடியுமா. போனால் தொலைந்து போகாமல் இதே பேருந்தினுள் ஏற முடியுமா என்ற எண்ணங்களும் வெளியே தூத்துக்குடியும் நகர்ந்து கொண்டிருந்தன. 

'ஏல ஹார்பரு வரப்போவுது ஹார்பரு வரப்போவுது எந்திரிங்கல' டீச்சர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். 

'ஏல சீனிவாசன் எல்லாரையும் எழுப்புல'. முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்தார். பக்கத்தில் பிரபாகரனும் அவனுக்கு அருகில் முத்துச்சண்முகமும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

'ஏல அந்தா வாயப்பொழந்து இருக்காம் பாரு அவன் வாயில தண்ணிய ஊத்துல. கூவ எந்திக்கானா பாப்போம்' 

தண்ணிரை ஊற்றினேன் எவனும் எழுந்திருக்கும் அறிகுறியே இல்லை. இந்நேரம் பேருந்து ஹார்பரினுள் நுழைய ஆரம்பித்திருந்தது. இவனுகள எழுப்புறத விட ஹார்பர் முக்கியம். சன்னலினுள் முகத்தைப் புதைத்தேன். பெரிய பேருந்து நிலையம் ஒன்றினுள் நுழைந்ததைப் போல் இருந்தது. கழுத்தை எப்படியெல்லாமோ திருப்பிப் பார்த்தேன். கப்பல் தெரியவில்லை. சிமின்ட் மட்டும் பூசி வெள்ளை அடிக்காமல்விட்ட கட்டிடங்கள் கப்பலை மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு மூன்று தலை என் சன்னலுக்கு சண்டை போட்டன. 

'இன்னும் கப்ப வரலடே. வந்தா காமிக்கன்'. ஒரு கப்பலின் உரிமையாளனைப் போல் கூறினேன். பேருந்து ஓரிடத்தில் போய் நின்றது'

'எறங்கு எறங்கு எறங்கு ஹார்பர் வந்தாச்சு' வாத்தி சத்தம் கொடுக்கும் முன் எலியை போல கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து முதல் ஆளாக கீழே இறங்கி இருந்தேன். இந்த இடத்தில் என் அம்மை இருந்திருந்தால் 'பறக்காதல நில்லுல' என முதுகில் ஒன்று விழுந்திருக்கும். 

ஒருத்தன் சீனிவாசன் பின்னாடி நில்லு. இன்னொருத்தன் இங்க வா'. ரெண்டு வரிசையா நில்லு. 

கப்பல் இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு இரும்பு கேட் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வாத்தியார் தன்னிடம் இருந்த தாள்களை எடுத்துக்கொண்டு கேட்டை நோக்கி நடந்தார். வாத்தியாருக்கு பதில் கூறுவதற்கேன்றே கேட்டின் அருகில் நின்றவரிடம் சென்று என்னவோ பேசிக்கொண்டிருந்தார். பொறுமையிழந்த இன்னொரு வாத்தியார் அவரை நோக்கி நடந்தார். ரெண்டு பேரும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வெயில் தன் வேலையை இன்னும் மும்மரப்படுத்தி இருந்தது. 'ஹார்பர்ல ஏதோ யூனியன் பிரச்சனையாம்' என்பது மட்டும் அப்போதைய அறிவுக்கு எட்டியிருந்தது. 

இரும்புக்கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 'என்ன பண்ணுவோம் சார். உள்ள போவ முடியாதாம். சும்மா இங்கன ஒரு நட போவோமா. பயலுவள வர சொல்லட்டுமா' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 'சேரி சார் அப்டியே செய்வோம்'. என்று வாத்தியார் பேசிகொண்டிருக்கும் போது நான் வாத்தியாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். இரும்புக் கதவில் இருந்து தூரத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். 

கதவின் இடுக்கு வழியாக கப்பல் தெரிகிறதாவென எட்டிப்பார்த்தேன். ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சி தெரிந்தது. கதவு திறந்து உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலெல்லாம் பெரிய பெரிய கருப்பு யானைகளைப் போல் வரிசையாக நின்று கொண்டிருந்த கப்பல்கள் கண்ணில்பட்டன. கப்பலின் பிரம்மாண்டம் அதைத் தாங்கி நிற்கும் கடலின் பிரம்மாண்டம் என தூத்துக்குடி ஒரு மிகப்பெரிய நங்கூரத்தை என்னுள் பாய்ச்சியது அன்றைக்குத்தான். 

'ஏல எவனும் கடல்ல சாடிறாதையள. இவனுவள மேய்க்கிறது பெரும்பாடு சார்' கர்சீப்பில் தன் தலையைத் துடைத்துக் கொண்டே எங்களைப் பார்த்தார் வாத்தி. துடைக்க துடைக்க வியர்வை அவர் முகத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது.  

அங்கிருந்து அடுத்ததாகப் புறப்பட்ட இடம் முயல் தீவு. 'நா இன்னிக்கு தான் மொதவாட்டி முயல் பாக்க போறேன்', பிரபாகரனிடம் சொன்னேன். தலையாட்டிக் கொண்டான். ரோஜாக்கூட்டம் போல அங்கே துள்ளி விளையாடும் முயல்களைப் பார்க்கப்போவதில் அப்படியொரு அலாதி. ஹார்பரில் இருந்து கிளம்பி வெகுநேரம் ஆகியும் முயல்தீவு வந்தபாடில்லை. பேருந்து ஒரு முள்ளுக்காடு வழியாக இறங்கி பீக்காட்டின் வழியாகச் சென்று ஒத்தயடிப்பாதை ஒன்றில் நின்றது. 

'அண்ணாச்சி இது முயல் தீவு போற பாத இல்லியே. அது தெக்கால போவனும்' என்று டிரைவரிடம் யாரோ கூறியதை வாத்தியாரும் கேட்டுக்கொண்டிருந்தார்.

'ஏல முயல் தீவு போவ முடியாது போல. டைம் ஆயிருச்சு. அடுத்து கப்ப கோயிலுக்கு போவோம்டே. வந்ததும் எழுப்பிவிடுறேன்' என்று கூறிவிட்டு வாத்தி தலைசாய்த்துவிட்டார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் மயான அமைதி. கூட்டம் கூட்டமாக நகரும் மரங்களை தனியொருவனாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தேன். 

சென்றுசேர்ந்த இடத்தின் பெயர் உவரி. தரைதட்டி நின்ற ஒரு கப்பல் ஒன்றை நடுத்தெருவில் விட்டதைப் போல் இருந்தது அந்த இடம். பின்பு தான் தெரிந்தது நாங்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு தேவாலயம் என்று. அந்தக் கப்பலைச் சுற்றி பல சிறுவர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கப்பலின் மேல் தளத்தில் இருந்து தரைக்குக் குதித்தால் அடிபடவில்லை. சுற்றிலும் கடல் மணல். தூரத்தில் கடல் தெரிந்தது. நேரமாகிவிட்டதால் கடற்கரைக்குக் கூட்டிச்செல்லவில்லை. 

அதன்பின் எப்போதுமே தூத்துக்குடி சென்றதில்லை. பலமுறை திருச்செந்தூர் சென்றிருந்தாலும், திருச்செந்தூர் ஏதோ திருநெல்வேலிக்கும் பாளயங்கோட்டைக்கும் இடையில் இருப்பதைப் போன்ற நினைப்பு. மரமெடுப்பதற்காக தூத்துக்குடி செல்லும்போதெல்லாம் மாமா உடன்போக வேண்டுமென்று தோன்றும். ஆனால் போனதில்லை.. அம்பிகாக்கா ஊருக்கு வரும்போதெல்லாம் சாக்கடையை 'டிச்' என்று தான் சொல்வாள். தூத்துக்குடியில் சாக்கடைக்கு டிச்சாம். அவளிடமும் தூத்துக்குடி கதைகள் நிறைய இருந்தன. சத்யாவுக்குக் கூட தூத்துக்குடிதான். கல்லூரிக்காக தூத்துக்குடியில் சேர்ந்த குமார் கடலோரக் கதைகள் கூறுவான். 'கூட்டுப்போல' என்பேன். 'நீ வாடே, நீ தான் வர மாட்டக்க' என்பான். அதுவும் உண்மைதான். தூத்துக்குடி இன்னமும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறது.     

*****

ஆழி சூழ் உலகு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆமந்துறையில் ஆரம்பிக்கும் கதை தூத்துக்குடி கடலோரக் கிராமங்களின் வழியாக வேறோர் உலகிற்கு என்னை அழைத்துச் செல்கிறது. மீண்டும் தூத்துக்குடி செல்ல வேண்டும். ஆமந்துறைக்கு செல்ல வேண்டும். ஆமந்துறை என்று புனையப்பட்ட உவரியில் இருந்து என் தூத்துக்குடிப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தவிப்பு, ஆர்வம் உள்ளுக்குள் ஒரு காட்டுதீயாய்ப் பரவுகிறது. வாசிப்பு என்ன செய்துவிடக்கூடும் என்று கேட்பவர்களுக்கு அந்தப்பயணத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

நன்றி
நாடோடி சீனு

4 comments:

 1. தமிழகத்தில் நான் செல்லாத பல ஊர்களில் தூத்துக்குடியும் ஒன்று. பதிவு வாசித்ததில் அங்கே செல்லவேண்டும் என்ற எண்ணம். ஆனால் என்னால் செல்ல முடியுமா..... சந்தேகம் தான்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெங்கட் அய்யா நலமா :-) எப்படியேனும் வாய்ப்பை ஏற்படுத்தி தூத்துக்குடி போய்வாருங்கள். நீங்கள் பார்க்க வேண்டிய சுற்ற வேண்டிய இடம்.

   Delete
 2. தூத்துக்குடி ஹார்பரைப் பார்க்கச்சென்றவர்கள் எப்படி உவரி சென்றார்கள்? உவரிக்கும் தூத்துக்குடிக்கும் கிட்டத்தட்ட 75 கி மீ. உவரி டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. திருச்செந்தூருக்கு அருகிலிருக்கும் மணப்பாடுதான் டூரிஸ்ட் ஸ்பாட். கண்டிப்பாக தவறவிடக்கூடாத இடம். நீர்ப்பறவை படம் முழவதும் அவ்வூர்தான்.

  தூத்துக்குடிக்கு செல்லும் பள்ளி குழு பல நாட்களுக்கு முன்பேயே அனுமதி பெறவேண்டும். தனிநபராகச் சென்றால், ஹார்பரில் வேலை பார்க்கும் யாராவது தெரிந்தவர்களாக இருந்தால் அனுமதி கிடைக்கும். எப்போதும் கப்பல்கள் நிற்கும். அதனருகில் சென்று பார்க்கலாம். உள்ளுழைய முடியாது. எப்போதாவது இந்திய அரசு கப்பல் ஒன்று பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். அப்போது ஊரிலிருந்து எல்லாருமே சென்று பார்ப்பார்கள்.

  உவரியில் நீங்கள் பார்த்த கோயிலின் பெயர் செல்வ மாதா கோயில். அல்லது கப்பல் மாதா. ஒரு கப்பல மேல் விமானம் வந்து நிற்பதாகக் கட்டப்பட்டிருக்கும் தேவாலாயம்.

  ஆழிசூழ் உலகு என்ற நாவலை எழுதிய ஜோ டி க்ரூஸ் உவரியில் பிறந்து வாழ்ந்தவர். இப்போது சென்னை வாசம். மீனவகுடும்பம். மீனவர்கள் வாழ்க்கையைப்பற்றி எழுதிய நூல். நான் இன்னும் வாசிக்கவில்லை. வாசித்துவிட்டு பதிவு ஒன்றைப் போடவும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் விநாயகம் ஐயா, பள்ளி கல்விச் சுற்றுல்லா என்பதால் உவரியும் அதில் ஓர் இடமாக இருந்தது. மற்றபடி தென்காசியில் இருந்து வந்தவர்களுக்கு அது திரும்பிப் போகும் பாதை தானே? இல்லையா?

   நிச்சயம் புத்தக விமர்சனம் உண்டு. அனைத்தும் சரி என்றால் அது தான் அடுத்த பதிவாக இருக்கும்.

   Delete