27 Jan 2018

பேட்டை - விமர்சனம்

பேட்டை

அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் புத்தக வெளியீட்டு அரங்கில் அமர்ந்திருக்கும் போதுதான் அண்ணன் கேட்டான், 'உனக்கு தமிழ்ப்பிரபா தெரியுமா?'. அந்தநிமிடம் வரை அப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டது கூட கிடையாது. எந்தப்பக்கமும் தலையாட்டாமல் தெரியாது என்றேன். 'என்னல நீ. எந்நேரமும் பேஸ்புக்ல உக்காந்திருக்க, உனக்கு தமிழ்ப்பிரபா தெரியாதா?'. என் பேஸ்புக்கை இழுக்காவிட்டால் அவனுக்கு தூக்கம் வராது. 'அதான் தெரியாதுன்னு சொல்றேன்ல. யாரு?' என்றேன். 'நல்லா எழுதுவாரு. நீயும் ஃபாலோ பண்ணு.' இப்படித்தான் தமிழ்ப்பிரபா குறித்த அறிமுகம் கிடைத்தது எனக்கு. சில விஷயங்களை அண்ணன் சொன்னால் மறுக்காமல் செய்தாக வேண்டும். அன்றிரவே தமிழ்ப்பிரபாவிற்கு நட்பழைப்பு விடுத்தேன். இங்கிருந்துதான் அவரைத் தொடரவும் ஆரம்பித்தேன். 

வழக்காமான ஜல்லியடிப்பிற்கு மத்தியில் உருப்படியான விஷயங்களை அதுவும் சுவாரசியமாக எழுதுவது தமிழ்ப்பிரபாவின் வழக்கம். எழுத்துக்களில் தெரிந்த தீராக்காதல் அவரை மனதுக்கு இன்னமும் நெருக்கமாக்கியது. தீந்தமிழிலும் அதே நேரம் சென்னைத் தமிழும் கலந்து எழுதும் இவரை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். 'மெட்ராஸ் காளி' பற்றிய பதிவு பசுமரத்தாணி. இவர் மூலம் அறிமுகமாகும் புத்தகங்கள் இன்னமும் செழுமையாக இருக்கும். என்னுடைய கோவா பயணக்கட்டுரைக்கு 'எனக்கும் அப்படித்தான் ரயிலின் மீது ஏறி ஆட்டம் போட வேண்டும் போல் இருந்தது' எனகூறிய மறுமொழி நினைவுகளின் ஓரத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்படிபட்டவர் புத்தக அறிவிப்பு வெளியிட்ட போதே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. அதனை எப்படியாவது அமெரிக்காவிற்கு கடத்திவிட வேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்தில் ஆவி அதனை சாத்தியமாக்கினார். எனக்குள் இருந்த பயமெல்லாம் எங்கே மற்ற புத்தகங்களைப் போல இதனையும் ஓரத்தில் கிடத்தி விடுவேனோ என்பது தான். 

இனி பேட்டைஊர்களும் அவற்றிற்கான பெயர்க்காரணங்களும் எப்போதுமே சுவாரசியமானவை. மிகப்பெரிய வரலாற்றுக் கதையை தம்முள் ஒளித்து வைத்திருப்பவை. பாக்கம், பேரி, பேட்டை, சாவடி, சத்திரம், தாங்கல் என நிலத்துக்கு ஏற்றவாறும் தன்மைக்கு ஏற்றவாறும் பெயரிட்டு மகிழ்ந்தவர்கள். அதனைத் தேடி காரணம் கண்டடைவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அப்படித்தான் சின்ன தறிப்பேட்டை சிந்தாதரிப்பேட்டையாக மருவிய விஷயம் தெரிந்தது. சிந்தாதரிப் பேட்டையை சின்னதறிப் பேட்டையை கற்பனை செய்து பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. எழில் மிகுந்த கூவம், பசுமையான சென்னை கூடவே கருப்பர் நகரம். அடிமை இந்தியா. ஆம் அடிமை இந்தியாவில் இருந்து உருவான கதை தானே சிந்தாதரிப்பேட்டை. சிந்தாதரிப்பேட்டை உருவான கதையிலிருந்து தான் தன் நாவலை ஆரம்பிக்கிறார் பிரபா. ஆக இது பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கும் கதையா என்றால். சின்னதறிப் பேட்டை உருவான கதை மட்டும் தான் பதினெட்டாம் நுற்றாண்டு. பேட்டை உருவாகும் கதை ஐம்பதுகளின் பின் பகுதியில் ஆரம்பித்து இப்போது நீங்கள் இங்கிருக்கும் கணத்தில் நிறைவடைகிறது. ஆக மூன்று தலைமுறைக் கதைகளை உள்ளடக்கி அவர்களின் நினைவுகளின் வழியாக கதை சொல்கிறார் கதாசிரியர். 

ஒவ்வொருமுறை சிந்தாதரிப்பேட்டையினுள் நுழைந்து ரிச்சி ஸ்ட்ரீட் செல்லும் போதும் ஒரு சிறுகதைக்குள் நுழைந்து செல்வதைப் போல் இருக்கும். அவர்களுக்கு வாடிக்கையான விஷயம் ஒவ்வொன்றும் எனக்கு வேடிக்கையாக இருக்கும். 'ன்னா... பாத்துனே நடக்குற... அய்யே' என்று இழுக்கும் ஆயாக்களை, 'ன்னாப்பா ஆர் வேணும்' என்று நெருங்கும் ஏரியாவாசிகளைக் காணும் போதெல்லாம் கால் பரபரப்பாகும். அந்த இடத்தில் இருந்து சீக்கிரம் நழுவிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இனி இந்த வழியா வரவே கூடாது என்று எண்ணிக்கொள்வேன். அதெல்லாம் அடுத்தமுறை வரும்வரைக்கும் தான். எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. 'மவுண்ட் ரோட் வழியா போயிறலாம்' என யாராவது சொன்னாலும் இல்ல இப்டியே நடப்போம். ஐநாக்ஸ் செல்லும்போதும் நடுக்குப்பம் வழியாகத்தான் செல்வேன். இடம் தான் வேறுவேறயேத் தவிர மனிதர்கள் ஒரேபோலத்தான் இருந்தார்கள். இவர்களிடம் இருந்தும் தான் சென்னை தன்னை உருவாக்கியிருந்தது. அந்த வரலாற்றுப் பாசம்.  

ஆக, அப்படிபட்ட பேட்டையும், பேட்டைவாழ் மனிதர்களையும் பற்றிய கதை இது. ஐந்து தலைமுறைகளைப் பார்த்த நகோமியம்மாள், நான்கு தலைமுறைகள் கண்ட ரெஜினா. மூன்று தலைமுறைக்கான அனுபவத்தில் இருந்து தன வாழ்வைத் தேடும் ரூபன் இவர்கள் தான் கூவாற்றின் அருகில் இருக்கும் பேட்டையின் மைய நீரோட்டங்கள். கிளை நதியாக பலர் வந்து சென்றபோதிலும் பேட்டையின் முக்கிய தருணங்களில் எல்லாம் இவைகளே இருக்கிறார்கள். 

கிளியாம்பா எனும் பேட்டைகிழவி, அவர் மகன் குணசீலன், குணசீலனின் மனைவி ரெஜினா, ரெஜினா மகன் ரூபன், பக்கத்து வீட்டு ஆயாவாக இருந்து சொந்த ஆயாவாக மாறிப்போன நகோமியம்மா அவ்வப்போது வந்து செல்லும் சௌமி, பூபாலன், மாசிலாமணி, தவுடாசோறு பாலு, யோசேப்பு, பாஸ்ட்டர் இடிதாங்கி, இவாஞ்சிலின், கிள்ளிவளவன் என பல பேட்டைக்காரர்களை இறக்கி அடித்து ஆடியிருக்கிறார் தமிழ்ப்பிரபா. எங்கெல்லாம் அடித்து ஆடியிருக்கிறார் எங்கெல்லாம் தவறி இருக்கிறார் என்பதை என்வழியாகக் கூறுகிறேன். 

இது வழக்கமான மனிதர்களைப் பற்றிய கதைதான் என்பதால் அதீத கற்பனைக்கோ அடுத்தடுத்த திருப்பங்களுக்கோ வழியில்லாத ஒரு களம். அதனை சுவாரசியப்படுத்த வேண்டிய கட்டாயம் பிரபாவிற்கு இல்லையென்றாலும் ரூபன் சொல்வது போல 'ண்ணாடா காண்டு மாறி பண்ற' என புத்தகத்தை ஓரம் வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவான் வாசகன். அவனைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஓர் எழுத்தாளனுக்கு இருக்கிறது. அதிலும் தமிழ் போன்ற குறுகிய வாசகவட்டத்தைக் கொண்ட எழுத்தாளனுக்கு கத்தி மேல் ஓடும் சாகசம். சிறிது பிசகினாலும் இலக்கிய அந்தஸ்து போய், வாசக மரியாதை கிட்டாது போய்விடும். 

கதை நகோமியம்மா என்ற ஒரு புள்ளியில் ஆரம்பித்து அவள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அங்கிருந்து வேறொரு கதாப்பாத்திரம் வழியாக வேறொரு தளத்திற்கு சென்று, இப்படி வெவ்வேறு கதாபாத்திரம் வழியாக பல்கிப்பெருகி இறுதிவடிவம் கொள்கிறது. இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் கதை வெவ்வேறு தளங்களுக்கு வெவ்வேறு மனிதர்கள் வழியாகத் தாவித்தாவி செல்வத்தின் மூலம் கதையானது தன் சுவாரசியத் தன்மையை இழந்து விடும் வாய்ப்பு அதிகம். இல்லை வாசகனைக் குழப்பி கதையை வேறுவிதமாக புரிந்துகொள்ளச் செய்வதற்கான சாத்தியமும் ஏராளம். இந்த சவாலை முடிந்தளவுக்கு சமாளித்திருக்கிறார் தமிழ்ப்பிரபா என்றே சொல்லவேண்டும். 

சேரியில் வளரும் ஒரு சிறுவன் அவன் எதிர்நோக்கும் மனிதர்கள் சவால்கள் அவர்களுடைய ராவான வாழ்க்கை முறை என்று எவ்வித குறையும் இல்லாமல் சொன்னதில் குறைவே இல்லை. இருந்தும் நாவலின் பின்னடைவாக நான் கருதுவது நாவல் முழுவதும் நிறைந்து காணப்படும் விபரங்களை. நாவல் என்பது வெறும் சம்பவங்களால் தகவல்களால் மட்டுமல்லாது ஒன்றைப்பற்றி தெளிவுறச் சொல்லும் விவரணைகள் மூலமாக நிறைந்து வழிய வேண்டும் என்பது என் எண்ணம். இந்த நாவலில் வரும் ஒரு கதாப்பாத்திரமான கிள்ளிவளவன் கூறுவது போல் 

"நீ எந்த அனுபவத்த எழுதினாலும் அதப் படிக்கவனுக்கு சொல்லக்கூடாது. அந்த அனுபவத்த அவனுக்கும் உணர வைக்கணும். நீ ஐஸ்மலையில ஏறுனத பத்தி எழுதுனா படிக்கவனுக்கும் குளிரனும் கேட்டியா?"

இதே தான் என் வாதமும். கதையில் வரும் மனிதர்கள் அந்த இடம் சார்ந்த விவரணைகள் கதையில் குறைவு. பெரும்பாலான இடங்களில் இல்லவே இல்லை என்று சொல்லலாம். நகோமியம்மாளையும், ரெஜினாவையும், ரூபனையும் மற்ற அனைவரையும் அந்தக் கணங்களில் தரிசிக்க முடியாமல் போனது ஒரு குறை. அதற்குக் காரணம் எங்கே இதையெல்லாம் சொன்னால் நாவல் இன்னும் ஏகத்திற்கும் வளர்ந்து விடுமோ என்ற சவாலாகவும் இருக்கலாம். 

பூபாலனின் கதையை, யோசேப்புவின் கதையை இன்னும் சிலரின் கதைகளை மிக விரிவாக எழுதியிருக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை. அவர்கள் ஒரு சிறுகதையைப் போன்றவர்கள். எவ்விதத்திலும் இந்நாவலில் ஒரு பெரும் தாக்கத்தை எற்படுத்தவேயில்லை. அதேநேரம் கிள்ளிவளவன், குணசீலன், பாலு என்று சுருங்கக்கூறி மனதில் ஆழமாகப் பதிந்து போன கதாப்பாத்திரங்களும் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களைப் போல வந்து சென்றிருக்க வேண்டியவர்கள் பூபாலனும், யோசேப்புவும் இன்னும் சிலரும். இதை நான் கூறுவதன் காரணம் பூபாலன் யோசேப்புவிற்கு செலவழித்த நேரத்தை நகோமி ஆயாவையும் சௌமியையும் ரெஜினாவையும் செப்பனிடுவதில் செலவிட்டிருக்கலாம். அடுத்தடுத்த நாவலில் மற்றவர்கள் இழுத்திருக்கலாம். உன் ஒரே நாவலில் மொத்த கதையையும் கூற முயற்சிக்காதே என்பார் சுஜாதா. முயன்றால் விலை 390 என்பதை மனது ஏற்காமல் அதற்காக சிலபல விஷயங்களை நேரிட்டுப் போகலாம். தமிழ்ப்பிரபாவின் விஷயத்திலும் இந்த சாத்தியகூறுகள் அதிகம் என எண்ணத் தோன்றுகிறது. 

ரூபன், இவாஞ்சிலின் காதல் தருணங்கள் அட்டகாசமான அத்தியாயங்கள் அவற்றை இன்னும் வளர்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஏவாவுக்காக உருகும் ரூபனிடம் நிறைய ஜீவன் இருந்தது. அத்தகைய ஜீவன் தான் நாவல் முழுக்க எதிர்பார்த்த ஒன்று. ஏவாவைப் பெண்பார்க்கச் செல்லும் மூணாறுப் பயணம் இன்னும் அமர்க்களப்படுத்தி இருக்க வேண்டிய தருணங்கள். தகவலாக வந்து செல்வது எழுத்தாளர் தன்னை கவனிக்க வேண்டிய இடங்கள். ஆமோஸ் போலீசில் சரணடைந்தானா இல்லையா என்ற கேள்வி தொக்கி நிற்கக் காரணம் அந்த சம்பவம் முழுமையடையாமல் போனது தான். கிரண்யாவுடனான பிரிவு ஒரு வாக்கியத்தில் நிகழ்ந்து போவது பெருஞ்சோகம். தன்னுடலை சுட்டுக்கொண்ட பூமா என்ன ஆனாள்? கேரம் விளையாட்டைப் பற்றி மிகப்பெரும் தகவல்கள் இருக்கின்றன என எதிர்பார்த்த தடமும் ஏமாற்றமே. புத்தகத்தின் சில பகுதிகள் விகடன் கட்டுரை போல் இருந்தது என்ற வரியை பெருஞ்சோகத்துடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். கட்டுரைக்கும் கதைக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்த பிரபா இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.

இந்த நாவலில் ஒரு கட்டுடைத்தல் நிகழ்ந்திருக்கிறது. அது சரியா தவறா எனத்தெரியவில்லை. ஆனாலும் அது உறுத்தவில்லை என்பதே பெரும் நிம்மதி. நாவல் முழுக்க கதாசிரியரின் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் பகுதிகள், எவ்வித முன்னறிவுப்பும் இன்றி ரூபனின் மனவோட்டமாக தன்னிலை அடைந்து பின் ஆசிரியர் ரூபன் என மாறி மாறி கதையை எழுதி இப்போ யார் இந்தக் கதையை நம்மிடம் கூறுவது என்பதே பெரிய போட்டிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.  

இருந்தும் இந்த நாவலை ஒட்டுமொத்தமாக தூக்கி நிறுத்துவது அதன் சுவாராசியம் மட்டும் தான். தொடர்ந்து வாசித்தால் இரண்டு நாட்களிலும், என்னைப் போல கிடைக்கும் நேரத்தில் வாசித்தால் நான்கு நாட்களிலும், நேரமிருந்தால் ஒரே அமர்விலும் வாசிக்கும் அளவுக்கான எழுத்து உத்தி, எழுத்துச் சுவாரசியம் இதில் இருக்கிறது. அதுதான் பிரபாவின் வெற்றி. காலம் கடந்து நிற்கப்போகும் நாவலை எவ்வித சமரசத்திற்கும் உட்படுத்தாதீர்கள் பிரபா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அந்தத்தருணம் உங்கள் அடுத்த நாவலில் சாத்தியமாகும் என்று நம்புகிறேன். இதுவரை நான் உங்களைப் பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை. ஆனாலும் அன்பு முத்தங்கள்.  

நன்றி
நாடோடி சீனு