21 Jan 2017

அன்புள்ள சக போராளிக்கு

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையே தங்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் அன்புள்ள தமிழ் நண்பர்களுக்கு, 

வணக்கம். களத்தில் இறங்கி உங்களோடு போராட முடியாவிட்டாலும் உணர்வால் உங்களோடு இணைந்திருக்கும் ஒவ்வொரு வெளிநாட்டு வாழ் நண்பர்களின் குரலாக எழுதுகிறேன் இக்கடிதத்தை. உங்களில் ஒருவனாக உங்களோடு நிற்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் உங்களால் பரவிக்கொண்டிருக்கும் ஒரு பெருந்தீ ஏற்படுத்திய பரவசத்தில் எழுதுகிறேன் இக்கடிதத்தை. உங்களோடு ஒருவனாக உங்களில் ஒருவனாக நிற்கிறோம் என்ற பெருமிதத்தில் எழுதுகிறேன் இக்கடிதத்தை. 

உள்நாட்டுச் சட்டமே நம்மை மதிக்காத, நம் குரலுக்கு செவிமடுக்காத நிலையில்! வெளிநாட்டில் அடுத்த நிமிடம் என்னவாகும் என்று தெரியாத நிலையிலும், இங்கிருந்து எங்களால் ஆன ஆதரவைத் தந்து கொண்டிருக்கிறோம். எங்களால் இயன்ற வழிகளிலெல்லாம் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். பல்வேறு தடைகள் இருந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அத்தனையையும் மீறி அனுமதிக்காக போராடி அங்கங்கு போராட்டங்கள் செய்து வருகிறோம். தமிழர்களின் உரிமைக்கான குரலை பதிவு செய்து கொண்டிருக்கிறோம். இது அத்தனைக்கும் காரணம் நீங்கள். 

ஆம் இங்கே நாங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தமிழகத்தில் நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் புரட்சி தான் காரணம். வெயிலிலும் மழையிலும் கடும் பனியிலும் எதைப்பற்றியும் கவலைப்படாது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் உங்களின் உற்சாகம் தான் எங்களையும் களம் காண வைத்திருக்கிறது. எவ்வித பிரச்சனைக்கும் குரல்கொடுக்காத, அரசியல் பேசாத சக நண்பர்கள் தொடர்ந்து பிரச்சனையின் தீவிரம் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் விளைவுகளை ஆராய்கிறார்கள். அடுத்து என்ன செய்யலாம், இங்கிருந்து எப்படி போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று தொடர்ந்து ஆலோசிக்கிறார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் உற்சாகத்தின் தீவிரத்தைக் காண முடிகிறது. ஆன்சைட் களைப்பை மறந்து உணர்வால் ஒன்று கூடுகிறார்கள். தங்கள் வீட்டின் மிகமுக்கியமான நல்லது கெட்டதிற்குக் கூட போக வாய்ப்பில்லாத நண்பர்கள் உடனே தமிழகத்திற்குக் கிளம்ப வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள். போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம் அடுத்த விமானம் ஏறிவிடலாமா என்று. அப்படி ஒரு தீயை பரவ விட்டிருக்கிறீகள் தோழர்களே!

அலங்காநல்லூரில் விதைத்து சென்னையில் ஆழ ஊன்றி இன்று தமிழகமெங்கும் பரவியிருக்கிறது நம் உரிமைக்கான அறப்போராட்டம். ஒரு போராட்டத்தில் நமக்குத் தேவையானவற்றை நாமே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் கோரிக்கையில் இருந்து நமக்கான தீர்வு வரை தெளிவாக இருக்கிறோம். கலவரம் இல்லை. வன்முறை இல்லை. அடிதடி இல்லை. பொருட்சேதம் இல்லை. இவ்வளவுக்கும் மத்தியில் வழிநடத்த தலைவன் இல்லை. குவாட்டருக்கும் பிரியாணிக்கும், தலைவனின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓடிய கோஷம் போட்ட தொண்டர்களுக்கு மத்தியில் இன்றைய இளைய சமுதாயம் ஒரு புதிய சகாப்தம் படைத்துக் கொண்டிருக்கிறது. அதன் அங்கமாக நீங்களும் நானும் இருப்பது ஒரு புதிய சமுதாயத்தின் எழுச்சியாகிறது. மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் பேச ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்தின் தொடக்கமாகிறது. அரசியல்வாதிகளே இல்லாமல் ஒரு அரசியல் போராட்டம் செய்துகொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு வியப்பான உண்மை.

ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் நான்கு தொண்டர்களைக் கூட்டி மைக்கைக் கட்டி முழங்கிக் கொண்டிருந்த அரசியல் கூட்டங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திற்கும் ஓராயிரம் பேர் நின்று செய்து கொண்டிருக்கும் இந்த அறப்போராட்டம் இளைய தலைமுறை நாளைய தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பாடம். அந்தப் பாடத்தின் மூலம் இழுத்த இழுப்பெக்கேல்லாம் ஓடும் அடிமட்ட அரசியல் தொண்டன் எப்படி நடந்திருக்க வேண்டும் என்று வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். 

அரசியல் அடிவருடியாக மாறிவிட்ட பல தமிழ் ஊடகங்களும், கண்டுகொள்ளாமல் விட்டு பின் ஜாடைமாடையாக திரித்துப் பேசிய தேசிய ஊடகமும் இன்றைக்கு போராட்டத்தைப் பார்த்து பயப்படுகிறது. நீ வந்தா வா வராட்டா போ, நாங்க ஒவ்வொருத்தனுமே ஊடகவியலாளன் தான் என்ற சுதந்திரத்தைக் கொடுத்த சமுக வலைதளத்தை மிகக் கச்சிதமாக பயன்படுத்திய உங்கள் புத்திசாலித்தனம் அவர்களை மிரளச் செய்கிறது. 'கரண்ட்ட கட் பண்ணுவியா, போடா' என்று உங்கள் ஒவ்வொருவரின் கைபேசி வெளிச்சமும் புன்னகை புரிந்தபோது உங்களின் சமயோசிதம் கண்டு உலகமே மிரண்டு போனது என்னவோ உண்மை தான். இளைஞர்களிடம் துடிப்பும் வேகமும் மட்டும் தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்திடம் உங்களின் விவேகத்தைக் காண்பித்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். உங்களோடு நாங்களும் நிற்கிறோம். 

கடந்த வரும் பெய்த மழையில் இணைந்த அதே இளைஞர் படை இன்றைக்கு தன் பலத்தைப் பெருக்கி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எதற்குமே வெளிவராத போராடாத ஓ.எம்.ஆர் கூட இன்றைக்கு ஆர்ப்பரிக்கிறது என்பது வரலாற்று உண்மை. காவல்துறை உங்கள் நண்பன் என்பது எழுதப்படாத விதியாக புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இருந்த இடைவெளி குறைய இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாக செயல்பட்டுக் கொண்டிருகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

தொலைதூர தேசத்தில் இருந்து தான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் சமூக வலைதளங்கள் உங்களில் ஒருவனாக எங்களை மாற்றியிருக்கிறது. நீங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள் நீங்கள் கையில் எடுத்திருக்கும் இந்த டிஜிட்டல் போராட்டம் மூலம். ஜல்லிக்கட்டுக்கான இந்தப் போராட்டம் வெறும் போராட்டமாக, வெற்றுக் கூட்டமாக, கூச்சலிடும் களமாக மட்டுமில்லாமல் எத்தனையோ ஆக்கப்பூர்வமான திறமைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறது. பல இளம் திறமைகளின் சங்கமமாக மிளிர்கிறது. சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுற்றுவதும் பறையடிப்பதும் கும்மியாடுவதும் இந்தப் போராட்டம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்த மேடைகள். தானும் கற்றுகொள்ள வேண்டும் என்று சகபோராளிக்குக் கிடைத்த உற்சாகக் கீற்றுகள். ஆக ஒரு தமிழ்க்கலையை அழிக்க நினைத்து பல்வேறு தமிழ்க் கலைகளை மேடையேற்றிக் கொண்டிருக்கிறது இந்தப் போராட்டம். அதுமட்டுமில்லாமல் நாம் இருக்கும் இடத்தையும் நாமே சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நெஞ்சம் நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்ல முடிகிறது - அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது என் இனம். என் சகோதரன் என்று. 

வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று அலங்காநல்லூரில் ஆரம்பித்த முழக்கம் இன்றைக்கு அமெரிக்காவிலும் ஒலிக்கிறது என்றால் அதற்குக் முழுக் காரணமும் நீங்கள் தான். உங்கள் மனவுறுதி தான் என்பதை மீண்டும் மீண்டும் எழுத விழைகிறேன். இது தொடக்கம் தான். இனி எத்தனை பிரச்சனை வந்தாலும் இதே போல் ஒரு அறப்போராட்டம் நம்மால் நடத்த முடியும். நடத்தி வெற்றிக்கான முடியும் என்று இவ்வுலகிற்குக் காட்ட வேண்டும். 

இன்னும்மின்னும் வரிசையாக எத்தனையோ பிரச்சனைகள் இந்த தமிழகத்தில் புரையோடிப் போய் இருக்கின்றன. தீண்டாமை. தலித் பிரச்சனை, சாதிமதப் பிரச்சனை, மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம், குடிநீர்ப் பிரச்சனை, வேளாண் பிரச்சனை, நதிநீர்ப் பங்கீடு, ஆற்றுமணல் கடத்தல் என்று எத்தனையோ தீர்வு கிடைக்காத பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கின்றன. அதன் அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும், அவை குறித்து அதிகம் பேச வேண்டும். விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இவை அத்தனையின் தொடக்கமாக இந்த ஜல்லிக்கட்டு என்ற அறவழிப் போராட்டம் அமையட்டும். 

போராட்டத்தில் இருக்கும் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும், எள்ளி நகையாடும் ஒவ்வொருவரிடமும் கூறிக்கொள்வது ஒன்றே தான் ஒரு பெரிய மாற்றத்தின் விதை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கப்படலாம் அதை நாங்கள் ஜல்லிக்கட்டில் இருந்து ஆரம்பித்திருக்கிறோம். ஒரு போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும், அதை எப்படி வெற்றியடையச் செய்யவேண்டும் என்பதை எவ்வித பரிசோதனை முயற்சியும் இல்லாமல் எங்கள் முதல் முயற்சியிலேயே கனியச் செய்திருக்கிறோம். ஒன்று சேர்ந்தால், குன்றாத உற்சாகம் இருந்தால் சாதிக்கலாம் என்பதை வரலாற்றின் பக்கங்களில் எழுதிவிட்டோம். ஒவ்வொரு இளைஞரின் மனதிலும் அரசியலின் ஆர்வத்தை, சமூக அவலத்தைப் பற்றி பேச வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆழ விதைத்துவிட்டோம். கவலைப்படாதீர்கள். எழுவான் தமிழன் என்று ஊக்கப்படுத்தியவர்களுக்கும், எழுவானா தமிழன் என்று கேலி செய்தவர்களுக்கும் இந்தப்போராட்டம் கூற விழைவது ஒன்றே ஒன்று தான். எழுந்துவிட்டோம். நாளைய அரசியலின் மறுபக்கத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 

நன்றி