9 Apr 2016

மெட்ராஸ் டூ டெக்சாஸ் - புது இடம்! புது மேகம்!

விமானத்தின் ஜன்னல் கதவுகளை உயர்த்தி மெல்ல வெளியில் பார்த்தேன். நல்ல வெளிச்சம். ஒரு இருண்ட குகைக்குள் இருந்து கடுமையான வெளிச்சத்தை பார்பதைப் போல் இருந்தது அந்த உணர்வு. தூக்கம் நிரம்பிய எனது கண்கள் அந்த வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள திணறிக் கொண்டிருந்தன. கண்களை சுருக்கி, மேலும் கூர்மையாக்கி நிலத்தைத் தேடினேன். பரந்து விரிந்த பசுமையான புல்வெளி. அவைகளுக்கு மத்தியில் கூரை வேயப்பட்டதைப் போல கட்டிடங்கள், அங்கங்கே பெரிய பெரிய குளங்கள் என டாலசை பிரதி எடுக்க ஆரம்பித்திருந்தேன். விமானம் மெல்ல தனது உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருந்தது. 


'இன்னும் சில நிமிடங்களில் டாலஸ் விமான நிலையத்தை நெருங்க இருக்கிறோம். லண்டனில் கடுமையான விமான போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், வரும் வழியில் கடுமையான மேகமூட்டம் இருந்த போதிலும் நாம் எதிர்பார்த்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே டாலஸ் விமான நிலையத்தை நெருங்கிவிட்டோம். நாம் தரையிறங்குவதற்கான உத்தரவு கிடைத்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. உங்களுக்கு சேவை செய்ததில் நாங்களும் அமெரிக்கன் ஏர்லைன்சும் மிகவும் பெருமைப்படுகிறோம். நன்றி.' என்ற தகவலை கூறிவிட்டு விமானத்தை ஓடுதளம் நோக்கி சீராக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கேப்டன்.

ஒட்டுமொத்த விமானமும் உறக்கம் கலைந்து அமெரிக்காவில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஜன்னலின் வழியாக விரிந்த அந்த நிலத்தின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பறந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் மீது என்பதையே நம்பமுடியாமல் மிதந்து கொண்டிருந்தேன். அமெரிக்கா வந்துவிட்டேன் என்கிற நிறைவு இருந்தாலும் என்னையே அறியாமல் ஏதோ ஒன்று உள்ளுக்குள் எட்டி உதைக்க ஆரம்பித்தது. மனம் மொத்தமும் சென்னையில் இருக்கும் என்னுடைய வீட்டில். நேற்று வரைக்கும் நான் நடந்து கொண்டிருந்த அந்த தரைகளில் கால்பதித்து நின்று கொண்டிருந்தது. உடல் மட்டும் விமானத்தின் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தது. இன்னும் அடுத்த தேசத்தினுள் கால்பதிக்கவே இல்லை அதற்குள் ஹோம்சிக் - ஆம் இந்த உணர்வினை அப்படித்தான் கூறுகிறார்கள். அது ஒருவித கலவரமான மனநிலை. அம்மாவைப் பிரிந்து முதல்நாள் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையின் மனநிலை. கொஞ்சம் தள்ளி அமரிந்திருந்த மகேஷைப் பார்த்தேன், எனது உணர்வுகளை பிரதி எடுத்தது போல் அமர்ந்திருந்தான். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளக்கூட மனமில்லாமால் வேறுபக்கம் திரும்பிக் கொண்டோம்.

மகேஷாவது பரவாயில்லை பேச்சிலர்ஸ் ரூம். நானோ வீட்டைத்தாண்டி எங்கும் போனதில்லை. வீட்டை என்பதை விட என் அம்மாவைப் பிரிந்து எங்கும் சென்றதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு கண்காணாத தொலைவில், உலக உருண்டையின் வேறோரு மூலையில் இருக்கிறேன். இனி எனக்கான உலகம் வேறு. நான் சந்திக்கப்போகும் மனிதர்கள் வேறு. நான் காணப்போகும் காட்சிகள் வேறு. ஆனால் நான்?

காலையில் கண் விழிக்கும் போது கிடைக்கும் காபியில் இருந்து, 'லேசா உடம்பு வலிக்கி' என்றால் கழுத்தைத் தொட்டுப்பார்க்கும் அம்மாவின் பாசத்தில் இருந்து, நள்ளிரவில் மழுங்க மழுங்க கணினியைப் பார்க்கும் போது 'பாபு தூங்கு டே' என்று அப்பா கூறும் அக்கறையில் இருந்து, இவை கிடைக்காத தொலைதூரத்திற்கு வந்திருக்கிறேன். இனி எனக்கு நானே காபி போட்டுக்கொள்ள வேண்டும், சமைக்க வேண்டும், என்னுடைய வேலைகள் மொத்தத்தையும் நானே கவனித்துக்கொள்ள வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் யாருடைய அனுசரனையும் இல்லாமல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. 

விமானம் மெல்ல வானத்தில் வட்டமடிக்க வட்டமடிக்க தலைக்கு மேல் சில வளையங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அமெரிக்கா சென்றே ஆக வேண்டும் என்று முடிவானபோது பலரும் பயமுறுத்தினார்கள் 'சீனு கண்டிப்பா ஹோம்சிக் வரும். வீட்டு ஞாபகமாவே இருக்கும். தனிம பாடாப்படுத்தும், ஆனா எவ்ளோ சீக்கரம் இத பழகிக்க முடியுமோ பழகிக்கோ.' என்று தான் அறிவுறுத்தினார்கள். இதையெல்லாம் கேட்கும்போது 'ஹெஹ்ஹே எனக்கா, ஹோம் சிக்கா' என்பது போல் சிரித்தேன். நாட்கள் நெருங்க நெருங்க, வேறு வழியே இல்லை விமானம் ஏறியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தபோது தான் என்னுடைய நிலை என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. நேற்று வரைக்கும் எனக்கே எனக்கான கூட்டில் மிகப் பாதுகாப்பாக, மிகப் பத்திரமாக இருந்திருக்கிறேன். இன்றைக்கு கண்கானா தொலைவில்.

'நாம தான் நல்லா ஊர் சுத்துவோமே நமக்கென்ன கவல. ஹோம் சிக்காவது மண்ணாவது' என்பது தான் என் எண்ணமாக இருந்தது. பயணம் முடிவான போதே யாமினி கூறியிருந்தாள் 'அண்ணா இங்க வந்தா உடனே ஹோம் சிக் வரும். இல்ல கொஞ்சநாள் கழிச்சு வரும், ஆனா உடனே வந்துட்டா நல்லது' என்று. அதை நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இருந்தும் முதல்முறையாக வீட்டைவிட்டுப் பிரிந்து வெகுதூரம் பயணிப்பதால் உருவாகும் உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை. திடிரென என் மீது எல்லாருக்கும், எல்லோர் மீது எனக்கும் பாசம் வந்ததைப் போல் இருந்தது. அந்த உணர்வில் இருந்து மீளவே முடியாத தொலைவிற்கு சென்றிருந்தேன்.

ஒரு தூக்கம் தூங்கி எழுந்தால் என்னுடைய வீட்டில், என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்திருக்க மாட்டேனா என்றெல்லாம் சிந்தனை ஓடியது. சில கனவுகள் நிஜமாகலாம். சில நிஜம் என்றைக்குமே கனவாக முடிவதில்லை. எவ்வளவு யோசித்தாலும் மூளையைப் போட்டு கசக்கினாலும் இனி ஒன்றும் ஆவதற்கில்லை. சிலவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உலகம் எவ்வளவு பெரியது என்பதை கூட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் தானே தெரிந்துகொள்ள முடியும். ஆனாலும் ஆனாலும் ஆனாலும் என்ற தொடக்கப்புள்ளி மட்டும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. 

ஒரு நாளைக்கு எவ்ளோ பேர் வெளிநாடு போறாங்க. ரவி எவ்ளோ நாளா அமெரிக்கால இருக்கான். பொண்ணுங்களே சமாளிக்கிறாங்க உன்னால முடியாத என்ற எதிர்வாதமும் என்னிடம் இல்லாமல் இல்லை. முதல்முறை வேலை நிமித்தம் வெளிநாடு வருபவர்களின் மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு நானே சமாதனம் கூறிக்கொண்டேன். 

ரவி அமெரிக்கா சென்றபோது அவனை வழியனுப்புவதற்காக விமான நிலையம் போனதுதான் என்னுடைய முதல் விமான நிலைய அனுபவம். அன்றைக்கு தன் கணவனை வழியனுப்ப வந்த பெண் ஒரு சின்னக் குழந்தையைப் போல் தரையில் விழுந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவரைப் பார்க்கவே அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டது. அவருடைய துயரத்தை எண்ணி பலரும் தங்கள் நிலையை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இருந்தும் பிரிவு எப்போதுமே இரு பக்க வேதனையை தரக்கூடியது. 

கணேஷ் கடைசி வரைக்கும் கேட்டுக் கொண்டே இருந்தான் 'அண்ணா ஏர்போர்ட்ல வச்சு அழுவியானா' என்று. 'அவர் எங்க அழப்போறாரு நல்ல சந்தோசமாத்தான் போவாரு' என்றான் வினோத். நானோ விமான நிலைய காட்சியை கற்பனை செய்துபார்க்கும் துணிவு கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'சீனி சோகமாக இருக்காத சீனி. சந்தோசமா இரு. life has everything' என்று பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கூறத் தொடங்கியிருந்தார் கார்த்திக். என்னவானாலும் எங்கேயும் அழுதுவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். பயணத்திற்கான நாள் நெருங்க நெருங்க இரவும் பகலும் வேகமாக செல்வதைப் போல் இருந்தது. இது தான் உலகின் கடைசி நாள், இனி ஆவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல் பறந்து கொண்டிருந்தது காலம். அதன் இழுப்பில் எந்தப் பக்கம் திரும்புவதெனத் தெரியாமல் காற்றில் அல்லாடும் இறகைப் போல் ஆடிக் கொண்டிருந்தது மனம்,  

ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்னும் மூணு நாள், இன்னும் ரெண்டு நாள், இன்னும் ஒரு நாள் என்பதையே கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை என்று யாரோ எப்போதோ என் அடி மனதில் பதிய வைத்துவிட்டார்கள் போல, மந்திரம் போல அதுவே கண்முன் நிழலாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் கடைசி நாளின் போது கேக் வெட்டும் போது கண்ணைக் குளமாக்கிவிட்டார்கள். கேக் வெட்டக்கூடாது நான் வெட்டமாட்டேன் என்று மறுத்தும் நிகழ்ந்த சம்பவம் அது. ஆனால் அது எவ்வளவு பெரிய உபாயத்தை செய்தது என்பதை என்னால் சென்னை விமான நிலையத்தில் தான் புரிந்துகொள்ள முடிந்தது. சோகமோ கோவமோ உடைந்து வெளிப்பட்டுவிட்டால் போதும் பின் அதனை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அதுதான் அங்கே நிகழ்ந்தது. 

- பறப்போம்


[பின்குறிப்பு : ஹோம்சிக்கில் இருந்து மீண்டுவிட்டேன் என்பது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.]