12 Feb 2016

மனிதன் எனும் கொலை மிருகம்

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்கிறார் ஜி.நாகராஜன். எனக்கென்னவோ நாளாக நாளாக, அறிவும் அவனைச் சுற்றிய உலகமும் விரிய விரிய அவனொரு கொலை மிருகமாக மாறிவிட்டானோ என ஐயமாக இருக்கிறது. தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் ஈவிரக்கில்லாமல் வெட்டி வீழ்த்திவிட்டு, தான் மட்டுமே தனி ராஜாங்கம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் மனிதனை கொலை மிருகமாக அடையாளப்படுத்தாமல் எப்படி ஜீவகாருண்ய சுடராக போற்ற முடியும். கால ஓட்டத்தில் பிற ஜீவன்களில் இருந்து தன்னைத் தனித்து உயர்த்தி ஆறறிவு வாய்ந்தவன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அவன் செய்யும் எல்லா செயல்களையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

எல்லாருக்கும் சமமாகத்தான் எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறது இயற்கை. ஆனால் மனிதன் மட்டும் தன் தேவையையும் மீறி தனக்குத் தேவையானவற்றை இயற்கையிடம் இருந்து பறித்துக் கொள்கிறானோ எனத் தோன்றுகிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கற்பிதம் செய்திருக்கும் மனிதன்தான், தான் புகுந்த எல்லா இடங்களையும் நாசம் செய்து கொண்டிருக்கிறான். தெரிந்தும் தெரியாமலும். புரிந்தும் புரியாமலும். 

காற்றை மாசுபடுத்தி, குடிநீரை சாக்கடையாக்கி, சோலைகளை இல்லாமல் ஆக்கி, உண்ணும் உணவில் எல்லாம் பக்க விளைவுகளை உருவாக்கிவிட்டு யார் வாழ்வதற்காக இந்த பூமியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனும் அவன் இனமும் தான் கூற வேண்டும். 


நேற்றைக்கு மதியம் தென்காசியில் இருந்து இலத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து இலஞ்சி வழியாக குற்றாலம் செல்லும் பாதையில் தான் சில மோசமான கொலைகளைப் பார்க்க நேரிட்டது. அதுதான் இந்த பதிவுக்கான வித்தும் கூட. நூற்றாண்டு காலமாக எவ்வித தொந்தரவும் இல்லாமல் நன்கு வளர்ந்து செழித்து வளர்ந்த மரங்கள் சாலை முழுவதும் வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் காண நேரிட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு. அப்படியொரு நிலையில் அவற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர முடியவில்லை எனக்கு. ஒவ்வொன்றும் வயதில் மூத்த பெரிய பெரிய மரங்கள். அதுநாள் வரைக்கும் பல பறவைகளுக்கு இடம் கொடுத்த உறைவிடங்கள். பல பாதாசரிகளுக்கு துணையாக நின்ற அரண்கள். நொடிபொழுதில் உயிரை இழந்து வீழ்த்தபட்டுக் கிடக்கின்றன. 


பொதிகை மலையாடிவாரத்தில் இருக்கும் தென்காசியில் இருந்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் சாலை முழுவதும் நிழல் நிரம்பி இருக்கும் மரங்களைக் கடந்து செல்ல முடியும். ஊரைச் சுற்றிலும் அவ்வளவு மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என எந்த திசை நோக்கி நகர்ந்தாலும் மரங்கள் சூழத்தான் பாதை விரியும். ஆனால் அதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை மட்டுமே. 

வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மக்களின் தேவைகள் கூட மரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. கடந்த வருடம், தென்காசி ராஜபாளையம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அதில் இருந்த அத்தனை பெரிய மரங்களையும் வெட்டி வீழ்த்திவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு தென்காசி நெல்லை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பெரும்பாலான மரங்களை வெட்டிஎறிந்திருக்கிறார்கள். அவற்றின் எச்சங்களை அகற்றும் முன் இலத்தூர் - இலஞ்சி சாலையில் இருக்கும் மரங்களை வெட்டி எறிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அதுவொன்றும் அவ்வளவு பரபரப்பான சாலையெல்லாம் கிடையாது. குற்றால சீசனின் போது வேண்டுமானால் கணிசமான போக்குவரத்து இருக்கலாம். மற்றபடி ஆள் அரவமற்ற சாலை. பின் ஏன் இங்கு மர அழிப்பு என்றால் - அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது தென்காசி - மதுரை புறவழிச்சாலை அமையவிருப்பது. அதற்காகத்தான் வேக வேகமாக மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தென்காசியின் ஒருபுறம் தொடங்கி சுமார் பத்து கிமீ வயல்வெளிகளின் ஊடாக பயணித்து தென்காசியின் மறுபுறம் வந்து சேர இருக்கிறது இந்த புறவழிச்சாலை. நகருக்குள் ஏற்படும் வாகன நெரிசலையும், கனரக போக்குவரத்தையும் தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு.

ஆனால் இந்த புறவழிச்சாலை மற்றுமொரு அபாயத்தையும் சேர்த்தே கூட்டிவருகிறது. அதவாது புறவழிச்சாலை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்கள் அத்தனையும் வயக்கடாக இருக்கும் - நன்றாக செழித்து வளரும் வண்டல் மண் பூமி. பொதிகை மலையின் மிக அருகில் இருக்கும் வளமான பூமி. 


இந்தப் பகுதியில் புறவழிச் சாலை வந்தால், அப்படி அமைய இருக்கும் புறவழிச் சாலையைச் சுற்றிலும் புதிய நகரம் உருவாகும். இந்தப் புதிய நகரம் அதிகமான விலை நிலங்களையும், வருவாயையும் உருவாக்கும். சுற்று வட்டராத்தில் நடக்கும் விவசாயம் இல்லாமல் போகும். ஏன் இப்போதே புறவழிச் சாலையை மனதில் கொண்டு பல இடங்களில் கட்டுமான பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. பலரும் வீடு கட்டி குடியமர்ந்துவிட்டார்கள். சில பெரிய கல்யாண மண்டபங்களும் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை செழித்து வளர்ந்த வயக்காடுகள் அத்தனையும் இன்றைக்கு விலை நிலங்களாக மாறி இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வயல்வெளிகளைப் பார்த்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் வீடுகளை விதைத்திருக்கிறார்கள். அந்த விதை செழித்து வளர வேண்டும் என்பதற்காக சாலையோரத்து மரங்களை அறுவடை செய்து கொண்டிருகிறார்கள்.  

இன்றைய தேதியில் தென்காசி நகருக்கு புறவழிச்சாலை மிகவும் அவசியம் என்றாலும் மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப சாலைக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரலாம். அப்படி செய்யாமல் இருப்பது இந்த நவீன யுகத்தின் பெரும் பின்னடைவு. இதே புறவழிச்சாலையை பறக்கும் சாலைகளாக கட்டுமானம் செய்தால் இயற்கைக்கு ஏற்படும் மிகபெரும் சேதாரத்தை தவிர்க்கலாம். வயல்வெளிகளை உயிர்ப்போடு வைத்திருக்கலாம். இதையெல்லாம் செய்யலாம் என்றால் செலவுகள் அதிகரிக்கும், பட்ஜெட் இல்லை என்பார்கள். 'நீங்க ஆட்டைய போடுறதுல பாதிய ஒழுங்கா செலவு செஞ்சாலே பட்ஜெட் இடிக்காது' என்றால் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு இன்னும் அவர்களுக்குள் இன்னும் மனிதம் ஊறி இருக்கவில்லை. பெருக்கெடுத்து ஓடும் சுயநலங்களுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது. இயற்கைக்கு எதிராக இது தொடர்ந்தால் இதற்காக நாம் கொடுக்க இருக்கும் விலை மிக அதிகம் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள். என்ன அப்போது திண்பதற்கு எதுவும் இருக்காது. 


சென்னையில் காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவு அதிகரித்து விட்டது என்கிறது சமீபத்திய தரவு. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு இது. இதைக் கண்டுபிடிக்கத்தான் லட்சம் லட்சமாக செலவு செய்கிறார்கள் போலும். நகரைச் சுற்றி இருக்கும் மரங்களை வெட்டி கரியைக் கலந்துவிட்டு காற்று மாசு அடைந்துவிட்டது, சுகாதாரச் சீர்க்கேடு அடைந்துவிட்டது என பிள்ளையையும் கிள்ளிவிட்டு எச்சரிக்கை மணியையும் ஆட்டுகிறார்கள் ஆகச்சிறந்த அதிகாரிகள். இதைத்தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள். இனி என்ன எடுக்கப்போகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. அவர்களைத் தொடர்ந்து வரப்போகும் சந்ததிகளுக்கும் தெரியாது. 

காடுகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சோலைகள் தான் மழையின் ஜீவ ஊற்று. சோலை இல்லாமல் மழை இல்லை. இருந்த போதிலும் நகருக்குள் வளர்ந்து நிற்கும் இது போன்ற மரங்கள் தான் சுற்றுக்சூழல் சமநிலைக்கான மிக முக்கிய காரணி. அவை இல்லாமல் காற்று மாசுபடுவதை தடுக்கவே முடியாது. அப்படியிருக்க போக்குவரத்துக்கு இடையூறு என வெட்டி வீழ்த்திவிட்டு அபாய சங்கு ஊதினால் வெள்ளம் வந்தபின் மாம்பலத்தைக் காப்பாற்றவா முடியும். 


புறவழிச் சாலை இயற்க்கைக்கு புதிய தலைவலி என்றாலும் இப்போவே தென்காசியில் வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது. காரணம் எவ்வித அக்கறையும் இல்லாமல் மரங்களை வெட்டித்தள்ளும் போக்கும், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவாசய நிலங்களும் தான். போதாக்குறைக்கு புதிய வேலைவாய்ப்பைத் தேடித்தந்த காற்றாலைகளும் தான். 

இயற்கையை அழிப்பதோடு சேர்த்து புதிது புதிததாக நோய்களையும் இழுத்து வைத்துக் கொள்கிறோம். மூன்று தினங்களுக்கு முன் தென்காசியில் போய் இறங்கிய அடுத்த நொடி சித்தி எங்களிடம் கூறியது 'தென்காசி முழுசும் டெங்கு தீவிரமா பரவுது. சுட வச்ச தண்ணிய குடி. ஊருக்கு போற நேரத்துக்கு எதையும் இழுத்து வச்சிட்டுப் போயிராத' என்பதுதான். சென்னையில் இருந்து தென்காசி போவதற்கான முக்கிய காரணமே அங்கு கிடைக்கும் அந்த சுத்தமான தண்ணி தான். இப்போ அதுவும் நஞ்சாகிவிட்டது என்பது எவ்வளவு பெரிய அவலம்.   


இன்றைய தேதியில் தென்காசியில் கொசு ஒழிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்குவை ஒழிப்பதன் முதல் படியாக வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து, ஒருவேளை குடிநீர் மாசுபட்டிருந்தால் சுத்தபடுத்தும் வழிகளையும் கூறிவிட்டுச் செல்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள். 

இந்த விஷயம் எனக்கு தெரியாது. முந்தாநாள் மதிய நேரம். வீட்டில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடிரென காதுக்கு மிக அருகில் ஏதோ ஒரு பெரிய இயந்திரம் ஓடும் சத்தம். கண்ணைத் திறந்து பார்த்தால் வீடு முழுவதும் புகை மூட்டம். கெமிக்கல் வீச்சம். மூச்சு முட்ட அடித்துப் பிடித்து வெளியே வந்தால் ஒரு ஆசாமி கையில் பெரிய கொசு ஒழிப்பு இயந்திரத்தை வைத்துக் கொண்டு கதவு வழியாக மருந்தை செலுத்திக் கொண்டிருந்தார். 

'அண்ணாச்சி கதவ தட்ட வேண்டியது தான்' என்றால் 'ஆள் இல்லன்னு நினச்சேன்' என்றார். 'கொசு ஒழிக்கேன்னு கொஞ்ச நேரத்துல ஆள தூக்கிருப்பீரே' என்றேன்.' கொசுவே சாவ மாட்டேங்குது. நீரு எங்கவே சாவ போறீரு' என்று கூறிவட்டு சிரித்தபடியே கடந்தார். அவர் சிரித்துவிட்டுக் கடந்தாலும் அதுதான் உண்மை. நன்மை செய்யும் பூச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வர, தீமை செய்யும் பூச்சிகள் அனைத்தும் தப்பிப் பிழைக்கின்றன. ஆக பரிணாம வளர்ச்சியில் நாம் கொசுவுக்கான உலகத்தைத்தான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோமா என்ற பயமும் வந்து சேர்க்கிறது. டெரா, பெகா என்று கணினித்துதுறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் செல்ல, அதற்கு ஈடு கொடுத்து இப்போது கொசுவும் ஜிகா வரைக்கும் வந்துவிட்டது. அடுத்ததாக ஆண்ட்ராயிடில் பரவும் வைரஸ்களையும் உறுஞ்சி நம்முடம்பில் செலுத்தினால்  கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. சரி கடைசியாக ஒரே ஒரு பாரா எழுதி பதிவை முடித்துக் கொள்கிறேன்.  ஒரே ஒரு மரத்தை அழிப்பது மட்டும் ஒரு நூறு குடும்பத்தை அழிப்பதற்குச் சமம் என்று கண்டுபிடித்த மனிதன், அந்த கண்டுபிடிப்பை தான் அசுத்தபடுத்திய காற்றில் அப்படியே பறக்க விட்டுவிட்டு மேலும் மேலும் அதே பாப செயலை செய்து கொண்டே இருக்கிறேன். இயற்கையின் ஒவ்வொரு கண்ணிகளையும் அவன் அவிழ்த்துவிட அவிழ்த்துவிட கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண்பது அவனைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம் தான் என்பதையாவது புரிந்து கொண்டானா என்றால் மிஞ்சி நிற்பது கேள்விக்குறியும் இயற்கையின் வீழ்ச்சி குறித்த இயலாமையும் மட்டுமே. இதையெல்லாம் புரிந்துகொள்ளாத வரைக்கும் இயற்கையை மட்டுமே நம்பியிருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் மனிதனைக் கொலை மிருகமாகத்தான் பார்க்கும். ஆறறிவு கொண்ட மனிதனும் கொலை மிருகமாகத்தான் பார்க்கப்படுவான். என்ன இயற்கை தன்னை சமநிலைப் படுத்திக்கொள்ள தன்னிடம் இருக்கும் ஆயுதத்தை கையில் எடுக்கும் போது மனிதன் இயற்கையை கொலை மிருகமாகப் பார்ப்பான் என்பதுதான் ஆகச்சிறந்த நகைமுரண். 

4 comments:

 1. எனக்கு சென்னையில் பல இடங்கள பார்க்கும்போது இப்படி வேதனை வரும் ..ஒரு வீடு அதை சுற்றி பெரிய காம்பவுண்ட் இருக்கும் எங்க ஏரியாவில் இப்போ எல்லாமே பிளாட்ஸ் :( நடக்ககூட இடமில்லை மரங்கள் எல்லாம் வெட்டி நகரத்தை நரகம் ஆக்கிட்டாங்க ..இப்போ கிராமங்களையும் விட்டு வைக்கல்லியா :( அந்த மரத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் வாழ்ந்திருக்கும் இப்போ நிர்க்கதியாய் நிற்குமே அந்த ஜீவன்கள் .
  காற்றாலைகள் பல பறவைகளுக்கு இடையூறு அது நிறையபேருக்கு தெரிவதில்லை
  தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் தான் மட்டுமே வாழபோவதாய் அகங்காரம் பிடித்து அலைபவர்களிடம் இதைதான் எதிர்ப்பார்க்கமுடியும் :(

  எல்லாவற்றையும் தன்வசமாக்கி தன இஷ்டத்துக்கு மாற்றியமைத்து திரும்பி பார்க்கும்போது வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும் இந்த சுயநல மிருகங்களுக்கு :( ..ஒருக்காலத்தில் உண்ண உணவும் சுவாசிக்க காற்றுமின்றி மனிதன் cannibal ஆக மாற சாத்தியக்கூறுகள் இப்போவே தெரிகின்றது

  ReplyDelete
 2. ஆதங்கமும் வேதனையும் நிறைந்த ஆழமான பதிவு சீனு. காடழித்தலால் ஏற்படும் கேடுகளைப் பட்டியலிடும் மனிதன் மேலும் மேலும் தப்பைச் செய்துகொண்டே இருக்கிறான். வெட்டப்பட்ட மரத்தைக் கண்டால் எனக்கும் இப்படியான வருத்தமும் சிந்தனைகளும் தோன்றும்.
  இங்கும் இதே நிலைமையைப் பார்க்கிறேன். ஆனால் என்ன பொது மக்களிடம் ஓட்டு எடுக்கிறார்கள், பல தர்க்கங்களுக்குப் பிறகு, இருவருடங்கள் கழித்தேனும் அந்த மரங்கள் சாய்க்கத்தான் படுகின்றன, சாலை விரிவுக்கும், நடை பாதை அமைப்பதற்கும்! ஆஹா! இங்கு இப்படியெல்லாம் கருத்துக் கேட்கிறார்களே என்று அகமகிழ்ந்து சில மரங்களையேனும் காக்கும் ஆவலில் நானும் பங்கெடுத்துப் பிறகு நொந்தும் போயிருக்கிறேன். வாடும் பயிரைக் காணும்போதெல்லாம் நானும் வாடுகிறேன் என்ற வள்ளலாரின் வேதனை நமக்கு வராது, வாடுவதற்குப் பயிர் இருந்தால் தானே!!
  ஒவ்வொரு வரியும் ஆணியடித்தார் போன்று! அதிகாரத்தில் இருப்போர் சிலருக்கேனும் உரைத்தால் நன்று. பதிவை விடப் பின்னூட்டம் பெரிதாகக் போகிறது என்று நிறுத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே என்ற
  கருத்துக்கோர்வையிலே
  பழையன என்னும் சொல்லிலே
  நம் மக்களிடையே குடி கொண்டிருந்த வாழ்வு முறையும் நிலையும்
  ஆதாரமும் இலக்கும் உள் இருந்தன. அவை கழிந்து போனபின் புதியன என்ன வந்தன என்று நினைத்துப்பார்ப்பின்,

  அச்சுறுத்தும் நச்சு தான் என்பதை மட்டுமல்ல,

  கால வகையினாலே என்றிருப்பதால்,

  இந்த தற்போதைய நிலை, எங்கெலாம் எப்படி எல்லாம் நம்மை மாற்றி விடும் அடுத்த சில பத்தாண்டுகளிலே என்றும்

  யோசிக்கவும் வைக்கிறது.
  ஒன்று மட்டும் சொல்லவேண்டும்.
  மனிதன் மட்டும் மாறவில்லை.
  மனிதமும் மாறி இருக்கிறது.

  அணைத்து ச்சென்ற ஒரு மனித வாழ்வு இன்று உலகெங்கும்
  அழித்துக்கொண்டு செல்கிறது என்பதும் உண்மை.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 4. தனித்துவம் வாய்ந்த பதிவுகள் உங்கள் சிறப்பு
  தொடரட்டும்
  ஆமை புகுந்த வீடு ஏன் உருப்படாது ?
  ஆமைகள் பண்டைத் தமிழரின் கடலோடிகள்-அவை கடல் நீரோட்டத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவை. தமிழர்கள் அவற்றின் பாதையில் பயணித்து உலகின் பல நாடுகளில் குடியேறினார்கள்.
  பின்னே வந்த பக்திப் பழங்கள் தங்கள் “சக்திக்கு” ஊறுதரும் என்ற உணர்தலில் தவறாகப் பரப்ப்பட்ட சொலவடை அது...
  ஆதராம் ஒரிசா பாலு அவர்களின் ஆய்வு (முகநூலில் இருக்கிறார்)
  சொல்விளையாட்டு அருமை அய்யா.. விளைநிலம் –விலை நிலம் ஜோர்
  சூழல் சார்ந்த உங்கள் பதிவுகள் தொடரட்டும்
  பதிவு குறித்து இன்னும் எழுதினால் குட்டிப் பதிவாகிடும் என்பதால் இத்துடன்

  ReplyDelete