15 Feb 2016

நாயும் ஆனவன் - சிறுகதை

பூனை வளர்த்து இருந்தீங்கன்னா ஒருவிசயத்த கவனிக்க முடியும். பூனைங்க அதீத பாதுகாப்பு உணர்வு கொண்டது. எவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அதோட அடியாழத்துல அழுத்தமா பதிந்து போன எச்சரிக்கை உணர்வு அத தொந்தரவு பண்ணிட்டே இருக்கும். பூனைய நெருங்குறது அவ்வளவு சுலபம் இல்லை. அதுக்கு அசாத்தியப் பொறுமை வேணும். பூனை ஒரு செல்லக்கிறுக்குன்னு கூட சொல்லலாம். ஆனா நாய் அப்படியில்லை. வெகுளி. ஈஸியா நம்பிரும். ஒருமுறை பழகினா அடுத்தமுறை நாம அடிச்சாலும் வாலட்டிட்டே பக்கத்தில வந்து கொழையும். இதையெல்லாம் நான் தெரிஞ்சிசிக்க காரணமா இருந்தது சென்னையும் பாலாஜியும் தான். சென்னை வந்த பின்னாடி தான் நாய்ங்கள அதிகமா கவனிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு ஆரம்பப்புள்ளி வச்சது கூட பாலாஜிதான். 

திருவள்ளூர்ல நாங்க குடியிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் பாலாஜி. ரொம்ப சின்ன பையன். ஒரு நாய் வளர்த்தான். தெருநாய்தான். ஆனாலும் அது எப்பவும் அவன் வீட்டில தான் இருக்கும். அவனையே சுத்தி சுத்தி வரும். அவன மாதிரியே அதுவும் ஒரு குட்டி. கொஞ்சம் வளர்ந்த குட்டி.

பாலாஜியோட குடும்பம் கொஞ்சம் வித்தியாசமானது. வித்தியாசமானதுன்னு சொல்றத நீங்க எந்தளவுக்கு புரிஞ்சிப்பீங்களோ அத விட வித்தியாசமானது. காரணம் அவன் அம்மாவுக்கு கொஞ்சம் மனவளர்ச்சி குறைவு. 

கழுத்து வரைக்கும் வளர்ந்த முடி. எப்போதும் எதையோ தேடிட்டு இருக்கிற கண்ணுன்னு பார்க்கவே வித்தியாசமா இருப்பாங்க. களங்கமில்லாத முகம்ன்னாலும் கலங்கிப் போன கண்கள். சில சமயம் அதில இருந்து கண்ணீர் வந்துட்டே இருக்கும். எத நினைச்சு அழுறாங்கன்னு யாருக்கும் தெரியாது. 'அது அப்டிதான்னா, வுடுன்னா' என்று கூறிவிட்டு கடந்துவிடுவான் பாலாஜி. 

காலையில சூரியன் உதிக்கும் போது தெருவில் வந்து உட்கார்ந்தா ராத்திரி அவன் அப்பா வார வரைக்கும் அவன் வீட்டு பக்கத்தில் இருக்கிற கரண்ட் கம்பியவே வெறிச்சு பார்திட்டு உட்கார்ந்து இருக்கும் அவன் அம்மா.  அந்த வழியா கடந்து போற சின்ன குழந்தைங்க மொத்தமும் பயந்து அழுங்க. இதனால ஏகப்பட்ட பிரச்சன. 'சொந்த வூடா இருக்காங்காட்டி தப்பிச்சோம். இல்லாட்டி என்னிக்கோ தொர்த்தி விட்ருப்பானுங்கோ' என்பான் பாலாஜி. அக்கம்பக்கத்து ஏச்சு பேச்சுகளுக்கு பயந்தே ராத்திரியில அவன் அம்மாவ வீட்டு உள்ள போட்டு பூட்டிருவாரு பாலாஜியோட அப்பா. 'வாழ்ந்து கெட்ட குடும்பம். இப்போ கெட்டும் வாழ்ந்துட்டிருக்கு' ஹவுஸ் ஓனர் சொன்னாரு. 

பாலாஜி அப்பா ஆட்டோ டிரைவர். காலையில எந்திச்சதும் ஆட்டோவ குளிப்பாட்டி, பாலாஜி அம்மாவ குளிப்பாட்டி, பாலாஜிய குளிப்பாட்டி அப்புறம்தான் வண்டிக்குப் போவாரு. தினமும் காலையில மறக்காம ரெண்டு பாக்கெட் டைகர் பிஸ்கட் வாங்கிக்கொடுப்பாரு. ஒண்ண பாலாஜி சாப்பிட்டு இன்னொண்ண நாய்க்கு கொடுப்பான். அவன் நாய்க்கு பேரு கிடையாது. அவன் மூடப்பொறுத்து அதுக்கு பேரு கிடைக்கும் இல்ல அடி கிடைக்கும். 

'டே டே அத அடிக்காதடா பாவம்' என்று அம்மா கத்தும் போதெல்லாம் 'உனக்கு தெரியாதுக்கா அது இன்னா செஞ்சதுன்னு அது கையிலயே கேளு' என்பான். 'நீ இன்னா செஞ்ச'ன்னு எங்க அம்மாவால எப்படி நாயாண்ட கேக்க முடியும். அம்மா தான் தலையில அடிச்சிக்கும். 

பாலாஜி நாலாங்கிளாஸ் படிக்கிறான். பாதிநாள் ஸ்கூலுக்குப் போகமாட்டான். காரணம் கேட்டா 'பசங்களுக்கு என்ன புடிக்கலக்கா' என்பான். 'உன்ன வேற ஸ்கூல்ல சேர்த்து விடுறேண்டா'ன்னு அம்மா கேட்டால் 'அந்தப் பசங்களுக்கும் என்ன புடிக்கதுக்கா' என்பான். 'ஏண்டா' என்றால் 'என் அம்மாவ திட்டுவாங்கோ லூசும்பாங்கோ, எனக்கு புடிக்காது. சண்ட போடுவேன். அம்மா பாவம்க்கா அது கொழந்த' என்பான். சில சமயம் அழுவான். அதுக்கு அப்புறம் அம்மா பள்ளிக்கூடம் குறித்து கேட்பதையே நிறுத்திட்டா.     

இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. பாலாஜியும் அம்மாவும் தாயும் புள்ளயுமா ஆகிட்டாங்க. சோறு ஆக்குனா அவனுக்கும் சேர்த்து ஆக்கணும். 'க்கா நாய்க்கு கொடேன்' என்பான். 'ன்னோவ் இஸ்கூலு முடிச்சு வரும் போது டைகர் பிஸ்கட் வாங்கினு வருவியா, நாய்க்கு போடணும்' என்பான். 'டே அவன் இஸ்கூலு படிக்கில, காலேஜ் போறான்' என்று அம்மா கூறினால் 'அக்காங் பெரிய இஸ்கூலு. எனக்கு தெரியுமே. ஆவ்டில தான படிக்கிற. இங்க மீரா தியேட்டராண்ட ஒன்னு கீது. உனக்கு அங்க சீட் கிடைக்கலியா. எதுக்கு அவ்ளோ தொல போற' என்பான். பேசிட்டே இருப்பான். 'ன்னா டைகர் பிஸ்கட் வாங்கினுவான்னா' என்றான்.

அவன் நச்சரிப்பு தாளாமால் அம்மா டைகர் பிஸ்கட் வாங்கிக் கொடுக்க 'க்கா என் நாய் பொம்பளிங்கோ கிட்ட வாங்கி துன்னாது, ன்னா நீ கொடுன்னா' என்றான். அம்மாக்கு ஏக கடுப்பு. ஆனால் பாலாஜி சொன்னதும் சரிதான். வீட்டு வாசலில் பொம்பளைங்க சாப்பாடு வச்சா மோந்து கூட பாக்காது. ஆம்பளைங்க நல்ல கடிச்சு தின்ன எலும்பு துண்டு போட்டா வால ஆட்டினு போவும். 'இது இன்னா மேரி நாயின்னு எனக்கே தெரியலக்கா' என்பான்.  

சில சமயங்களில் 'இது எங்கம்மா மேரிக்கா. இன்னா நினைக்குதுன்ன்னு யாருக்கும் தெரியாது' என்பான். அதைக் கொஞ்ச ஆரம்பித்தான் என்றால் அந்த காட்சியைப் பார்ப்பவர்களுக்கு ரெண்டு பேரும் சரசம் செய்றா மாறி இருக்கும். இல்ல கொடுமைப்படுத்ற மாறி. அவன் இல்லாட்டா அந்த நாய் நிலம என்னாகுமோ. அவன் நாய்கூட வெளயாடுறத பார்த்துட்டு அம்மா அப்பப்போ நாய் கத சொல்வா. 'எங்க அய்யா கூட நாய் வளத்தாறு. இவரு தெருவுக்கு வார சத்தம் கேட்டாபோதும், கொலைக்க ஆரம்பிச்சிரும். ஊருக்கு கிளம்புனா விடாது. அதுக்கு தெரியும் அய்யா வயக்காட்டுக்கு போறாரா இல்ல ஊருக்கு போறாரான்னு. ரொம்ப பாசமா இருந்துச்சு. அவருன்னா அதுக்கு உசுரு. அவரு செத்துப் போன ரெண்டாவது வாரமே நாயும் செத்துப் போச்சு' என்று கூறிவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டு 'அந்த ஒரு புள்ள போதும்டா நம்ம வீட்டுக்குன்னு, அடுத்த நாய் வாங்க சம்மதிக்கவே இல்லை உன் பாட்டி' என்று தன்னிடம் இருந்த ஒரே ஒரு நாய்க்கதையை கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

பொதுவாவே எனக்கு நாய் மேல பெருசா விருப்பம் இருந்தது இல்ல, அதே நேரம் வெறுப்பும் இல்ல. எனக்கும் நான் வசிக்கிற தெருவுல இருக்கிற நாய்ங்களுக்கும் ஒரு மானசீகமான உறவு இருந்துட்டே இருக்கும். எந்த தெரு நாய்ங்க என்னை தொறத்தினாலும் என்னோட தெருநாய்ங்க தொரதினதே கிடையாது.  ஆனா மத்த தெருநாய்ங்க அப்டி இல்லையே. அதுனால பொதுவா நாய்ன்னா எனக்கு ஆவாது. அதிலயும் கற்பக விநாயகர் கோவில் சந்து வழியா போனா தொரத்திற அந்த இரண்டு கருப்புநாய்ங்களும் எனக்கும் சுத்தமா ஆகாது. எதோ பொறு ஜென்மத்து பகை எனக்கும் அதுங்களுக்கும் இருக்கு. என்னைப் பார்த்து கொறைக்கும் போது அதுங்க பல்லு ரெண்டும் ஒரு வேட்டை நாய் மாதிரி முன்னாடி துருத்திகிட்டு நிக்கும். பார்க்கவே பயங்கரமா இருக்கும். அதுங்க செய்ற தொந்தரவு தாங்கல. கற்பக விநாயகர் கோவில் சந்து ரொம்ப சின்ன சந்து. அது வழியா போகும் போது அந்த நாய்ங்ககிட்ட மாட்டினா தப்பிச்சு வாறது பெரும்பாடு. ஆனாலும் திருவள்ளூர் பஸ்ஸ்டாண்ட்க்கு அந்த வழியாதான் போயாகனும். வேற ஒரு வழி இருக்கு. ஆனா அது நாலு தெரு சுத்தி போகும். அந்த வழியா போனா காலேஜ்க்குப் போற ஏழு இருவது ரயிலப் புடிக்க முடியாது. லேட் ஆகிரும். இந்த விசயத்த அம்மாட்ட புலம்பிட்டு இருந்தப்ப பாலாஜி கேட்டுட்டான். 

'ன்னா இன்னா பண்ணு, நீ அந்த வயியா போ, நானும் நாயும் வாரோம். அப்புறம் சீனு தான்' என்றான்

'ஏய் ன்னா வெளாடுரியா. அடிங்' என்றேன் ஏற்கனவே இருந்த கடுப்பில்.

'த்தா சொன்னா புத்தி வாராதுனா உனக்கு' என்று நாக்கை மடக்கிக் காட்டிவிட்டு ஓடிவிட்டான். 

பாலாஜி பார்ப்பதுக்கு தான் சின்ன பையன். செயலும் பேச்சும் வயதுக்கு மீறி இருக்கும். அம்மா ஒருமுறை சொன்னாள் 'நம்மால படிக்க வைக்க முடிஞ்சதுன்னா இவன நல்லா படிக்க வைக்கனும் டா' என்று. எனக்கும் அந்த எண்ணம் அவ்வப்போது வந்து போகாமல் இல்லை.

அடுத்தநாள் காலை காலேஜ் கிளம்பி தயராக நின்னபோது 'ன்னா நீ முன்னாடி போ வாறன்' என்றான். அருகே நாய் டைகர் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 'அதான் சொல்றான் இல்ல, போ' என்றாள் அம்மா. 

காலை ஏழுமணி வெயிலில் வியர்வை வழிய விநாயகர் கோவில் சந்தில் திரும்பினேன். சைக்கிள் முழுதாக கூட நுழையல. என்னப் பார்த்த அடுத்த நொடி ரெண்டு கருப்பு நாயும் காட்டுக் கத்து கத்த ஆரம்பிச்சது. அடுத்த நொடி ஒரு நாய் முன்னாடி, இன்னொரு நாய் பின்னாடின்னு என்ன சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சது. தினமும் காலையில இதே நிலைமைதான் என்றாலும், யாராவது துணைக்கு வருவாங்க, அவங்க கூட அப்படியே போயிருவேன். இன்னைக்குப் பார்க்க அந்த சந்தே காலியா இருந்தது. 'அடேய் இப்படி கோர்த்து விட்டுட்டுடியேடா' என உள்ளுக்குள் கருவ, சினிமாவில் கதாநாயகன் ஓடிவருவதைப் போல பாலாஜியும் அவனுக்கு முன்னால் நாயும் ஓடி வந்தார்கள். அப்போவரைக்கும் கருப்புநிற நாய்தான் பலசாலின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இந்த குட்டிநாய் அந்த ரெண்டு கருப்பு நாய்களையும் தொம்சம் செய்ய ஆரம்பிச்சது. சண்டையைப் பார்க்க சின்ன கூட்டமே கூடுனது. 'பாத்துனே நிக்காத, இஸ்கூலுக்கு நேரமாகுதுல. நீ கிளம்பு' என்று விரட்டினான். என்னை ஆணையிட்டுத் தொரத்தும் எஜமானன் போல. அல்லது அந்த இடத்தின் கதாநாயகன் போல. காலையில் நிகழ்ந்த அந்த காட்சியை மறக்கவே வெகுநேரம் தேவைப்பட்டது.  நாயும் நாய்களும் பாலாஜியும் உள்ளுக்குள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  

அதே தினம் சாயங்காலம் நான் எப்போ வருவேன் என காத்திருந்தவன் போல, நான் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி அவனும் வந்தான். வந்தவன் 'ன்னா நாய்க்கு உன்னப் புடிச்சுப் போச்சுனா' என்றான்

'என்னடா சொல்ற' 

'ஆமான்னா அதுக்கு உன்ன புடிச்சு போச்சு'

'எப்படிடா சொல்ற'

'அது என்கிட்ட சொல்லுச்சு'

'ம்மா இவன கொஞ்சம் என்னான்னு கேளு, சும்மா நொய்யு நொய்யுன்னு' 

'க்கா அண்ணா கைல சொல்லுக்கா, நாய்க்கு அண்ணாவ புடிச்சு போச்சுன்னு'

'நீ தான் ஒத்துகோயேண்டா' அம்மா பாலாஜிக்கு சப்போர்ட் செய்தாள்.

'ம்மா உனக்கும் அவன் கூட சேர்ந்து என்னவோ ஆயிருச்சு' 

'இன்னிக்கு காலில என்னா சண்ட தெரியுமாக்கா, நம்ம நாய் வுடலியே. இனி அண்ணா அந்த தெருவாண்ட போன ரெண்டு நாயும் சாலாம் வெக்கும் பாரு' சொல்லிவிட்டு சாலாம் வைத்துக் காண்பித்தான். 

'நூறுவாட்டி சொல்லிட்டாடா, வேற எதுனா சொல்லேன்' அம்மா சிரித்தாள். அத்தனை சொந்தங்களையும் ஊரில் விட்டுட்டு இவ்ளோ தூரம் தள்ளி இருக்கும் திருவள்ளூருக்கு வர அம்மாவுக்கு மனசே இல்ல. வந்த மொதவாரம் முழுக்க பித்துப்பிடிச்சா மாறி இருந்தா. அவளுக்கு ஒரே துணை, பொழுதுபோக்கு பாலாஜிதான். அவன் வந்தபின் எனக்கு கடைக்குப் போக வேண்டிய வேலையும் குறைந்துவிட்டது. அதையும் அவனி பார்த்துக் கொண்டான்.  

'க்கா ஈரோக்கா நம்ம நாயி. ஈரோ' என்றான். 

'ஆமாடா ஈரோதாண்டா'  

'ன்னோவ் ஒரு ஹெல்ப் பண்ணுணா'

'சொல்லுடா'

'நான் செத்து போயிட்டா நாய பாத்துபியானா' எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக கேட்டான்., அம்மாதான் பதறிவிட்டாள்.

'யேய் இன்னா பேச்சு பேசுற, வெளக்கு பொறுத்தின வீட்டில சாவு அது இதுன்னு' அம்மா அவனை அடிக்க கையை ஓங்க 

'போன மாசம் எங்க ஆயா கூடத்தான் பக்கெட்டு ஒடச்சது, அதுக்கு இன்னா பண்ண முடியும்' என்றான் விவரம் போதாமல்.

'புள்ள மாதிரியாடா பேசுற. கொஞ்சமாச்சும் கொழந்ததனம் இருக்கா உன்கிட்ட' அம்மா பாலாஜிகூட பேசிப்பேசியே சென்னை பாஷை பேச ஆரம்பித்திருந்தாள். விட்டால் திருநவேலி எந்தப் பக்கம் இருக்கு என்று கேட்டாலும் கேட்பாள் போல. 

'ன்னோவ் சொல்லுனா, நாய பார்த்துபியா' 

'அவன் பாக்காட்டா நான் பார்த்துகிறேன்டா, டெய்லி ஒரு டைகர் பிஸ்கட் போடணும் அவ்ளோதான' 

'க்கோவ் என் நாய் பொம்பள கையால துன்னாதுன்னு உனக்கு தெரியாது'

'போடா உனக்கு போய் பேசுனம்பாரு. என்ன சொல்லணும்'

'உன்ன யாரு கேட்டா, நீ கம்ம்னு இரு. ன்னோவ் சொல்லுனா நாய பார்த்துப்பியா' இருவரும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம். 

வெளியே பாலாஜி அப்பாவின் குரல் கேட்க 'ப்பா இரு வாறன்' என்று கூறிபடி ஓடினான். ஓடின கொஞ்ச நேரத்தில் 'க்கா க்கா க்கா உடனே வா, உடனே வா' என்று பாலாஜி அலறும் குரல் கேட்டது. எங்கள் வீடு, ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு பின்னால் இருப்பதால் அவன் குரல் மட்டும்தான் கேட்டது. அம்மாவுக்கும் எனக்கும் அல்லு இல்லை. 'என்னாச்சு என்னாச்சு' கத்திகொண்டே ஓடினாள் அம்மா. கூடவே நானும். 

முகம் நிறைய சந்தோசத்தோடும், மகிழ்ச்சியோடும் ஒருமாதிரி படபடப்போடும் துள்ளிகொண்டிருந்தான் பாலாஜி. குதித்தான். மிதந்தான். அவன் அப்பாவுக்கு அதற்குமேல சந்தோசம். அவர்கள் குடும்பம் அப்படி இருந்தது நாங்கள் பார்த்ததே இல்லை. எப்போதும் சூனியம் பிடித்த குடும்பம் போல் இருக்கும். வீடே இருளடைந்து கிடக்கும். அவர்கள் வீட்டைப் பார்த்தால் அந்த வீட்டின் சோகம் நம்மீதும் அப்பிக் கொள்ளும். அப்படி ஒரு ராசி கொண்ட வீடு அது. அப்படியிருக்க இவர்கள் இருவரின் செயலும் புதிராக இருந்தது. 

'ன்னாடா எதுக்கு கத்துன' என்றாள் அம்மா. அவன் போட்ட கூச்சலில் மொத்த தெருவும் வீதிக்கு வந்திருந்தது. 


'க்கா அங்க பாருக்கா' என்றான் பாலாஜி. சந்தோசத்தில் கண்ணீர் விட்டுகொண்டிருந்தான். அவன் முகத்தில் முதன்முறையாக குழந்தைத்தனம் வந்திருந்தது. அவன் காட்டிய திசையில் சற்று தள்ளி நாய் டைகர் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நாய் சாப்பிடுவதற்காக அடுத்த பிஸ்கட்டை நீட்டிக்கொண்டிருந்தாள் பாலாஜியின் அம்மா. அவள் கொடுத்த அடுத்த பிஸ்கட்டை வாங்காமல் அவளின் காலை நக்கத் தொடங்கியது அந்த நாய்குட்டி இதுவரைக்கும் அவர்கள் அறிந்திருக்காத ஒரு புதிய விடியலின் தொடக்கத்திற்காக.

10 comments:

 1. நல்ல முடிவு :-)

  ஒவ்வொருத்தருக்குள்ளையும் ஒரு நாய் இருக்கும்.

  ReplyDelete
 2. ஒரு நாயை மையமாய் வைத்து எழுதிய கதையை ரசித்தேன் நானும் நாய் வலர்த்தவன் என்பதால் நாயின் குணாதிசயங்கள் என்று கூறப்பட்டிருப்பதை அப்ரிஷியேட் செய்கிறேன்

  ReplyDelete
 3. அருமை நண்பரே எழுத்தின் யதார்த்த நடை அழகு
  வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 4. அட்டகாசம் சூப்பரா எழுதிருக்கிங்க !
  படிக்கும்போது மனசு கஷ்டமா போனது சீனு :( பாலாஜி அம்மாவை நினைச்சித்தான்
  //அக்காங் பெரிய இஸ்கூலு. // வெள்ளந்தி மனிதர்கள் ! இன்னமும் நிறையபேருக்கு 16 ,17 வது என்றால்தான் புரியும் :)
  மெட்ராஸ் ஸ்லாங் தெங்காசி பிள்ளைக்கு செமையா வருதே :)
  சின்ஸ் 12 இயர்ஸ் நானும் சென்னை தான் எனக்கே இப்படில்லாம் வராது :)
  சீனு Madras ஈரோதான் :)
  //பக்கெட்டு ஒடச்சது//kicked the bucket என்கிறதை பாலாஜி எவ்ளோ அழகா தமிழ்படுத்தி இருக்கான்
  செம செம :)

  //பூனை ஒரு செல்லக்கிறுக்குன்னு கூட சொல்லலாம்// சரியா சொன்னிங்க // பூனைங்க கொஞ்சம் அலெர்டாதான் இருக்கும் நாயகர்களை விட ,

  it's true that pets can improve our mental health !they help motivate our body and mind ,also they reduce our stress ..பாலாஜி யின் அம்மாவுக்கும் அந்த நாலு கால் ஈரோவினால் நன்மை நடந்திருக்கும் .

  முடிவு கண்கள் பனித்தது !

  ReplyDelete
 5. சீனு உங்களுக்கும் நாலுகால்களுக்கும் ரொம்பவே பூர்வஜென்ம பந்தம் இருக்கு போல....அதுலயும் அந்தக் கறுப்பு நாய்..கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு போல..

  அருமை...பாலாஜியின் அம்மா மனதை ரொம்ப டச் பண்ணிட்டாங்க. அதெப்படி சீனு செமையா சென்னை பாஷைல எழுதிருக்கீங்க..நல்ல அனலிசஸ் பூனை , நாய். பார்க்கப் போனால் இந்த நாலுகால் நண்பர்கள் மன நிலை பிறழ்ந்தவர்களுக்கு நல்ல நண்பர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு நல்ல மனநல மருத்துவர்கள் என்றும் சொல்லப்படுவது உண்டு. முடிவும் அப்படியே...முடிவு மனதை நெகிழ்த்திவிட்டது...

  கீதா

  ReplyDelete
 6. இதை படித்து முடிக்குவறை இது கதை என்றே தெரியவில்லை உண்மை சம்பவத்தைதான் சொல்லி இருக்கிறீர்கள் என நினைத்தேன்.பாராட்ட்டுகள் அழகிய கதையை தெளிவாக சொல்லி சென்றமைக்கு

  மனிதர்களிடம் கூட உறவை எளிதில் முறித்து கொள்ளலாம் ஆனால் நாயிடம் அப்படி பண்ன முடியாது, நாயை வளர்ப்பவன் என்ற அனுபவத்தில் சொல்லுகிறேன் என்னால் யாரை பிரிந்தும் இருக்க முடியும் ஆனால் நாயைப் பிரிந்து இருக்க முடியாது என்றே தோன்றுகிறது

  ReplyDelete
 7. அருமையான கதை. மனம் முழுவதும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்! நானும் நாய், பூனைகளுடன் பழகியவன் அத்துடன் இல்லாமல் பாலாஜி போன்ற சிறுவர்களுடனும் பழகி இருக்கிறேன்! அந்த வகையில் இது கதை போன்ற உணர்வை தராமல் பழகிய ஓர் சம்பவ விவரிப்பாகவே இருந்தது. அருமை! பாராட்டுக்கள்! முடிவும் ஜோர்!

  ReplyDelete
 9. சென்னை மொழி உங்களுக்கு எளிதில் கைவருகிறது..
  தொடருங்கள்..
  தம +

  ReplyDelete