29 Oct 2015

சின்ன காக்கா முட்டை

நேற்றைக்கு சாரதி அழைத்திருந்தான். கூடவே ஒரு சம்பவத்தையும் கூறினான். மேடவாக்கத்தில் நேற்றைக்கு சரியான மழை. நண்பரைப் பார்ப்பதற்காக வேளச்சேரி வரைக்கும் கிளம்பியபோது தான் சம்பவம் நடந்திருக்கிறது. அவனிடம் ஒரு வழக்கம் இருக்கிறது. தல போற காரியமா இருந்தாலும் யாராவது லிப்ட்டுன்னு கேட்டா வண்டிய நிப்பாட்டி எவ்வித மறுப்பும் இல்லாமல் ஏத்திப்பான். அது நல்ல வெயிலா இருந்தாலும் சரி நடுராத்திரியா இருந்தாலும் சரி. நேற்றைக்கு காலை மணி பதினொன்று இருக்கும். பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் இருந்த மாணவன் ஒருவன் கையை நீட்ட லிப்ட் கொடுத்திருக்கிறான். சின்ன காக்கா முட்ட மாதிரியே இருந்தாண்டா அவன். வழக்கம் போல அவன்ட்ட பேச ஆரம்பிச்சேன். 

'எந்த ஸ்கூல்ல தம்பி படிக்கிற'

'தரமணி கவர்மென்ட் ஸ்கூல்ன்னா' 

'தரமணியா? இந்நேரத்துக்கு போற, ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?'

'டென்த்க்கு மாடல் எக்ஸாம் நடக்குது, மதியம் தான் வர சொல்லிகிறாங்கோ' 

'என்ன படிக்கிற'

'நெயின்த்ன்னா'

'ஓ சரி சரி, ஆமா ஏன் பஸ்ல போகல'

'பஸ் பாஸ் இல்லனா' 

'ஏண்டா, பள்ளிகூடத்தில ஃப்ரியாத்தான தாரங்க' இங்கிருந்து தான் சம்பவமே ஆரம்பிக்கிறது. சாரதி எப்போதுமே இப்படித்தான் லிப்ட் கொடுப்பதோடு அவர்களின் ஜாதகம் மொதற்கொண்டு விசாரிப்பது அவன் வழக்கம். அப்படித்தான் இந்த சிறுவனிடமும் பேச ஆரம்பித்திருக்கிறான். 

'கொடுப்பாங்கனா. ஆனா வாங்கத்துக்கு தான் காசு இல்லியே' 

'ஃப்ரீ தானடா. அப்புறம் எதுக்கு காசு' மழை பெய்து சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருந்ததால் மேடவாக்கத்தில் இருந்து வேளச்ச்செரி வரையிலும் செம ட்ராபிக். வாகனம் அனைத்தும் மெல்ல ஊர்ந்து செல்ல, இவ்வளவு பெரிய ட்ராபிக்கிற்கு மத்தியிலும் கண்ணாடியில் தெரிந்த அந்த சிறுவனைப் பார்த்துக் கொண்டே பேசியிருக்கிறான் சாரதி.  

'ஃப்ரீதான்னா. ஆனா போட்டோ எடுக்க, பிரின்ட் போடன்னு நூறு ரூவா கேட்டாங்கோ. எங்க அம்மாட்ட கேட்டேன் துட்டு இல்ல போடான்னு அடிக்கிதுன்னா'.  

'அப்போ அப்பாட்ட கேட்க்க வேண்டியதுதானடா'

'அப்பா இல்லனா. இறந்துட்டாரு' 

'ஓ. என்னாச்சுடா. எப்போ'

'நா பொறக்கதுக்கு முன்னடியேனா. திடிர்ன்னு சொகம் இல்லாம போயிருக்குது. அப்படியே போயிட்டாரு'. ஏண்டா பையன்ட்ட பேச்சு கொடுத்தோம்ன்னு ஆகியிருக்கு சாரதிக்கு. காலைல எந்திச்சதில இருந்தே சாரதிக்கு நிறைய பிரச்சனை. வீட்டவிட்டு வெளியில வந்தா வண்டி ஸ்டார்ட் ஆகலை, வண்டியோடு சண்டை போட்டு கஷ்டப்பட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணினா, பெட்ரோல் இல்ல. ரிசர்வ். மாசக்கடைசி. பர்ஸ்ல சுத்தமா காசு இல்ல.   

'சரி டெய்லி லிப்ட் கேட்டா போற'  

'ஆமான்னா, ஆமா நீ சித்தாலப்பாக்கத்தில இருந்தா வாற'

'இல்லடா எனக்கு மேடவாக்கம். உனக்கு சித்தாலப்பாக்கமா?'

'ஆமான்னா, நீ வந்தா நாளைக்கும் உன்கூடவே வந்திருவேன்'

'ஏண்டா அது உள்ள தள்ளி இருக்கு. ரெண்டு லிப்ட் கேப்பியா'

'ஆமான்னா, யாரும் வேளச்சேரி வர போறதில்ல. அதான் சீக்கிரமே வீட்டில இருந்தே கிளம்பிருவேன்' 

'போன வருஷம் வரைக்கும் பாஸ்க்கு என்ன செஞ்ச'

'போனவருசம் ஆயா காசு கொடுத்திச்சு, இந்த வருஷம் எறந்து போச்சே'

'ஓ..'

'ஆமான்னா, எனக்குதான் சமையல் செஞ்சுட்டு இருந்தது. செய்யசொல திடிர்ன்னு தொப்புன்னு விழுந்தது. ஆட்டோ புடிச்சு சென்ட்ரல் ஆண்ட இருக்கில்ல ஆஸ்பத்திரி அங்க கொண்டு போனோம். ஒரு ஊசி குத்தினாங்க. நல்ல இழுத்து மூச்சு உட்டது. அப்டியே போயிருச்சு' 

'ஓ..'

'இன்னோவ் சித்தாலப்பாக்கம் உள்ள கீதுனா வீடு. ஆம்புலன்ஸ் வரமாட்டேன்னு சொல்லிட்டான். ஆட்டோ புடிச்சு இட்ன்னு போனோம். பாவம்ன்னா ஆயா"

'என்ன ரேங்க் வாங்குற'

'ரேங்க் இல்லனா. கிரேடு. பி கிரேடு'

'ஏண்டா ஏ வாங்க மாட்டியா'

'பொண்ணுங்க வாங்கிருதாங்கோ. அதான்'

'அவங்க படிக்காங்க. வாங்குறாங்க. நீயும் படி'

'பாதிநாள் லேட் ஆயிருது. வாட்சிமேன் தெர்த்திவிடுறான். ன்னா பண்றது. நீ படிக்கிற படிப்புக்கு இவ்ளோதாண்டா வரும்ன்னு வாத்தியார் சொன்னாரு'

'அம்மா என்ன பண்றாங்கடா'

'ஊறுகா கம்பெனிக்கு போதுனா' 

'மேடவாக்கத்திலையா?'

'இல்லனா கோயம்பேடு. டெய்லி போயின்னு வருது'

'ஓ.. எவ்ளோ சம்பளம்'

'நாலாயிரம்ன்னா'

'வாடகை வீடா, சொந்த வீடா'

'வாடகை வீடுன்னா. ஆயிரம் ரூபா வாடகை, மீதிதான் செலவுக்கு'

'சரி வீட்ல செல்போன் இருக்கா. இன்னோவ் பாஸ் எடுக்கவே துட்டு இல்ல. நீ வேற' 

மிகபெரிய யோசனைக்குப் பின் சாரதி கேட்டிருக்கிறான். 'சரி நான் உன் ஸ்கூல்க்கு வந்து பாஸ் எடுக்க துட்டு தாரேன். வாங்கிப்பாங்களா'

'நீ உள்ள வர முடியாதுனா. வுட மாட்டாங்கோ'

'சரி உன்ட்ட கொடுத்தா நீ பாஸ் எடுக்காம செலவு செஞ்சுட்டா' 

'ன்னோவ் அப்டி செய்ய மாட்டேன்னா. அம்மாக்கு தெரிஞ்சா டவுசர் கழரும்'

'துட்டு ஏதுடான்னு கேட்டா ன்னா சொல்வ'

'ஒரு அண்ணா கூட லிப்ட் அடிச்சேன். அவரு கொடுத்தாரு சொல்லுவேன்' 

'உன்ன நம்பி கொடுக்கலாமாடா' 

'இன்னோவ் சந்தேகம்ன்னா வேணாம்ன்னா' 

'உன்ன எப்டி நம்புறது'

'இன்னிக்கு நா நின்ன இடத்தில நாளைக்கும் நிக்குறேன். உண்ட பாஸ காமிக்கிறேன். நீ பாரு' 

'ஒரே நாள்ல வந்த்ருமா'

'போட்டோ எடுத்து பிரின்ட் போட்டா வந்திர போகுது'  

இப்படி பேசிக்கொண்டே வந்ததில் பள்ளிகரணை வந்துவிட்டது. ஏடிஎம் உள்ளே சென்று கார்டை சொருகி இருக்கிறான் சாரதி. சரியாக 267 ரூபாய் இருந்திருக்கிறது. அதில் இருநூறு ரூபாயை எடுத்து நூறு ரூபாய் பெட்ரோலுக்கும் இன்னொரு நூறு அவனுக்குமாக பாக்கெட்டில் வைத்திருக்கிறான். 

'வேளச்சேரில உன்ன விட்டா எப்படிடா போவ'

'தரமணி ஸ்டேசனாண்டதான் ஸ்கூலு. ட்ரெயின் ஏறி போயிப்பேன்'

'ட்ரெயினுக்கு காசு'

'நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்னா. நாங்க ஸ்டுடன்ஸ். ஸ்டுடன்ஸ் டிக்கெட் எடுக்க வேணாம்னு டிடிஆர் சொன்னாரு'.  

'எந்த டிடிஆர் டா'

'ஒருவாட்டி டிக்கெட் எடுத்தேன். டிடிஆர் புச்சாரு. நீ எல்லாம் டிக்கெட் எடுக்க தேவ இல்லடான்னு சொன்னாரு. அன்னில இருந்து எடுக்கது இல்லனா' 

'வேற டிடிஆர் புடிச்சா என்னடா செய்வ'

'வேளச்சேரி டிடிஆர் ஆண்ட இட்னு போவேன்னா' 

'வேளச்சேரி டிடிஆர் மாறிட்டாருன்னா?'

'வேறவயி டிக்கெட் எடுத்துதான் ஆவணும்'

அவனோடு பேசிக்கொண்டே வந்ததில் வேளச்சேரி ரயில்நிலையமும் வந்துவிட, அவனை இறக்கிவிட்டு கையில் நூறு ரூபாயைக் கொடுத்திருக்கிறான் சாரதி. கொடுத்துவிட்டு 'ஒழுங்கா படிக்கணும். படிச்சா இந்த மாதிரி வண்டி வாங்க முடியும். என்ன?'

'படிக்கிறேன்ன்னா'. அப்போதுதான் அவனை ஒழுங்காக கவனித்திருக்கிறான் சாரதி, காலில் செருப்பில்லாமல் சக்தி அப்பியிருக்க. முழங்கால் வரைக்குமே அவன் அணிந்திருந்த பேண்டில் இரண்டு இடத்தில் தையல் போடபட்டிருந்தது. சட்டையில் முதல் பட்டனுக்கும் கடைசி பட்டனுக்கும் பதிலாக ஊக்கு மாட்டபட்டிருக்கிறது. தலையில் என்னை வைத்து பலநாள் ஆனா செம்பட்டை முடி. 

'சரி உன் நோட்டு கொடு. தமிழ் மீடியமா இங்கிலீஷ்மீடியமா'

'தமிழண்ணா' 

'இதுல என நம்பர் எழுதி இருக்கேன். இன்னாத்துக்கு'

'பாஸ் வாங்கிட்டு கூப்புடுவேன்னா'

'எப்படி கூப்பிடுவ'   

'காயின் போன்ல இருந்து கூப்பிடுவேன்னா. தேங்க்ஸ்ன்னா' என்றபடி சந்தோசமாக கிளம்பி இருக்கிறான் அந்த சிறுவன். கிளம்பியவன் 'நீ போன்னா நான் நல்லா படிக்கிறேன்' என்று வழி அனுப்பியும் வைத்திருக்கிறான். 

இந்த சம்பவத்தை என்னிடம் கூறிவிட்டு 'அவனுக்கு காசு கொடுக்கலாமா வேணாம்ன்னு ரொம்ப யோசிச்சேன்டா. சின்ன பையன். தடுமாறுற வயசு. ஆனா ரொம்ப தெளிவா இருக்கான். அவனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய துட்டு'

'அப்புறம் ஏன்டா கொடுத்த'

'மனசு கேக்கலாடா. மொக்க படத்துக்கு போயிட்டு முன்னூறு நானுறுன்னு செலவு பண்றோம். ஒரு நல்ல விசயத்துக்குதான. டெய்லி எவ்ளோ கஷ்டப்படுறான். ஒருகாலத்தில நாமளும் அந்த இடத்தில இருந்து வந்தவங்க தான. எத்தனைபேருகிட்ட எத்தனவாட்டி லிப்ட் கேட்டிருப்போம். ஒவ்வொருத்தனும் லிப்ட் கொடுக்காம போறப்ப நமக்கு எப்படி இருக்கும். கையில காசு இல்லாதப்போ நீயும் நானும் மூணு கிலோமீட்டர் நடந்தே ஸ்கூல்க்கு போயிருக்கோம். ஒருவேள அவன் அதை வேஸ்ட் ஆக்குனா! நாம பார்த்த படம் மொக்கைன்னா என்ன செய்வோம். ஒன்னும் செய்ய மாட்டோம்தான. அவ்ளோதான். விடுடா'

'ம்ம்ம். அவன் கூப்பிடுவான்னு நினைக்கிற'

'ம்ம்ம்.... பார்க்கலாம். ஒருவேள அவன் கூப்பிட்டா அவன மேடவாக்கத்துக்கு வர சொல்லி தீபாவளி ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும்டா'.   

17 comments:

 1. யதார்த்ததை ரசித்தேன், சின்ன காக்கா முட்டையில்.

  ReplyDelete
 2. சிலர் ஏமாற்றுவதும் தெரிந்தே நான் உதவி இருக்கிறேன். பெரிய துணிக்கடையில் 100 ரூபாய் பெறுமான டிரெஸ் 500 ரூபாய்க்கு எடுப்பதாக நினைத்துக் கொண்டு

  ReplyDelete
 3. நெகிழ வைத்த சம்பவம்! அந்த பையன் ஏமாற்றமாட்டான் என்று தோன்றுகிறது! 267ல் 200 எடுத்து அதில் நூறை தானம் செய்த நண்பரின் இளகிய மனசு பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மனம் கனத்துவிட்டது. அந்தப் பையன் ஏமாற்றியிருக்க மாட்டான். உங்கள் நண்பரைப் பாராட்டியதாகச் சொல்லுங்கள். வாழ்த்துகளும். மனிதம் இன்னும் வாழ்கின்றது. சாகவில்லை என்றும் சொல்லுங்கள். வாழ்க உங்கள் நண்பர்.

  ReplyDelete
 5. Hi Seenu! I have been continuously reading all your writings in this blog. You have a good write-up on all the issues. Do post in next writing about the feedback received from that " sinna Kaakkaamuttai". I think your friend Sarathi forgot to ask his name. Awaiting for this... Thanks

  ReplyDelete
 6. அருமையான கட்டுரை அல்லது சிறுகதை சீனு

  ReplyDelete
 7. உதவிய உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கிட்டத்தட்ட இதேபோல, இதே வயதுள்ள ஒரு பையனுக்கு நான் போன மாதம் லிப்ட் கொடுத்தேன். நாலுகிலோமீட்டர் தள்ளி இருக்கும் பள்ளியில் ஏன் படிக்கிற? உன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ரெண்டு பாய்ஸ் ஹை ஸ்கூல் இருக்கே என்றேன். இல்லைக்கா முன்னாடி அந்த ஏரியாவில் இருந்தோம். இப்போதான் போன மாசம் இங்க குடிவந்தோம். இதன நாளா சைகிள்ள தான் போனேன். போனவாரம் அப்பா குடிச்சுட்டு சைகிளை கொண்டே மோதீடாருக்கா என்றான். இத்தனை கஷ்டங்களுக்கு இடையில் கொஞ்சம் முன்னேபின்னே தான் மதிப்பெண் எடுக்க முடியும் என்பதால் தான் ரிசர்வேசன் கேட்கிறோம். அது புரியாம சில க்ரீமி லேயர் அப்பாடக்கர்கள் சட்டம் பேசுகிறார்கள். உங்கள் நண்பர்க்கு என் வணக்கத்தை தெரிவியுங்கள் ஸ்ரீநி, இவர் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அந்த சின்ன காக்க்காமுட்டை வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தால் இன்னும் பலருக்கு உதவுவான் என்பது நிட்சம். எங்கும் மனிதம் மலரட்டும்!

  ReplyDelete
 9. உண்மையில் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. கடந்த ஆண்டு பாஸ் வாங்கி இருந்தால் இந்த ஆண்டு தானாகவே வந்து விடும். பள்ளியில் இருந்து பட்டியல் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக அரசும் கல்வித் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல . முந்தைய ஏபரல் மாதத்திலேயே இதற்கான ஏற்பாடுகள துவங்கப் படுகின்றன. மாணவன் தனக்கு பாஸ் வேண்டுமா வேண்டாமா என்பதை மட்டும் சொன்னால் போதும்.பழைய பஸ் பாஸ் பட்டியலில் சேர்த்தல் நீக்கல் பள்ளியில் இருந்து போக்குவரத்துக் கழகத்திற்கு தரப்படுகிறது..ஜூன் ஜூலைஆகஸ்டு மாதங்களில் இதற்கான ஆய்வுக்கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.14 vவகை நல திட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கே எங்களின் பெரும்பாலான நேரம் செலவிடப் படுகிறது தினந்தோறும்உயர் அலுவலர்களுக்கு பஸ் பாஸ் பெற்ற விவரத்தையும் விண்ணப்பித்து பெறாமல் உள்ளோரின் விவரத்தையும் அப்டேட் செய்ய வேண்டும்.
  இதுபோல போட்டோ எடுக்க இயலாத மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரே செல்போன் மூலம் போட்டோ எடுத்து பிரிண்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் ஆய்வு செய்யும் பள்ளிகளில் கூறி இருந்தேன்.
  மேலும் மேடவாக்கம்மற்றும் பள்ளிக்கரணையில் அரசு மேல்நிலைப் பள்ளியும் சித்தலபாக்கத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த மாணவன் ஏன் தரமணிக்கு செல்லவேண்டும் என்று தெரியவில்லை . சில மாணவர்கள் வீட்டில் இருந்து புறப்படுவார்கள் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் சுற்றி விட்டு மாலையில் வீடு திரும்புபவர்களும் உண்டு. அன்றாட வாழ்க்கைக்கே போராடும் பெற்றோரால் இவர்களை கவனிக்க முடிவதில்லை. அதற்கான ஆர்வமும் காட்டுவதில்லை.
  நண்பரின் இரக்க குணம் பாராட்டத் தக்கதுதான் உண்மையிலேயே அவர் செய்த உதவி பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக மிக நல்ல தெளிவான விளக்கத்தை முன் வைத்தமையால் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அருமை..நண்பர் முரளிதரன்.

   Delete
 10. நாளை அந்தப்பையன் போன் செய்வான் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 11. அடடடா.. நல்ல உள்ளம் கொண்ட உங்க நண்பரை பாராட்டியதாக கட்டாயம் பகிறவும்

  ReplyDelete
 12. நெஞ்சை உருக்கிவிட்டது...

  ReplyDelete
 13. மனசு தொட்ட பதிவு. அந்தச் சிறுவன் மீண்டும் அழைத்திருப்பான் என்று தான் தோன்றுகிறது......

  ReplyDelete
 14. சம்பவம் உண்மையா கற்பனையா என்பதல்ல! முக்கியம்! நடையும் சொன்ன விதமும் கல்மனதையும் கரைக்கும்!ஐயமில்லை! வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. Simple write up but with more values.

  ReplyDelete
 16. sema katha na !, kathaikku vera peru vachurukkalaam :)

  ReplyDelete