28 Sept 2015

மரணத்தின் போர்வாள்

மணி இரவு பத்து இருக்கும். நானும் ஆவியும் அரசனும் - வக்கிர மனம் பிடித்த ஆணாதிக்க சமுதாயத்தை திருத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் இருந்தோம். அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. சம்பவம் நடந்த இடம் சோளிங்கநல்லூர் சிக்னல். 

சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒருவன் செண்டர் மீடியனின் இடைவெளியில் பொத்தென விழுந்தது போல் இருக்க 'தலைவரே அங்க பாருங்க, விழுந்துட்டான்னு நினைகிறேன்' என்று கூறும் போதே போதையில் நெளியும் ஆசாமியைப் போல் தெரிந்தான். தலை நெளிந்து கொண்டிருந்தது. இளைஞன்.


கடந்த சில வருடங்களாகவே சாலையோரங்களில் யோகாசனம் செய்யும் பல குடிமகன்களையும் தாராளமாகப் பார்க்க முடிகிறது. நேற்று மதியம் கூட ஒருவரைப் பார்த்தேன் பெரும்பாக்கம் சாலையோரத்தில் அம்மணமாக புழுதியாசனம் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேஷ்டியும் சட்டையும் ஒரு ஓரமாக பறந்து கொண்டிருந்தன. இந்த அவசர உலகில் குடிமகன்களுக்கு உதவும் ஜீவகாருண்யம் இன்னும் நமக்கு வந்திருக்காததால் அவர் அம்மணத்தை மட்டும் வேடிக்கைப் பார்த்தபடி கடந்து கொண்டிருந்தது சமுதாயம்.

 'தலைவரே போதையா இருக்கும் போல' என்றார் அரசன்.' அப்படித்தான்  இருக்கணும் தலைவரே' என்றேன். திடிரென உள்ளுக்குள் ஒரு பயம். அவன் தலை மட்டும் மீடியனின் இடைவெளி வழியாக தெரிய, உடல் சாலையின் மறுபுறம் கிடக்க வேண்டும். மீடியன் மறைத்துவிட்டதால் ஒன்றும் தெரியவில்லை. திடிரென அந்த மீடியனை ஒட்டியபடி சுமோ ஒன்று பறந்துசெல்ல வயிற்ருக்கும் தொண்டைக்கும் அதே தான. மேலெழும்பி கீழே இறங்கியது. ஆச்சரியம் அந்த ஆசாமிக்கு ஒன்றும் ஆகவில்லை. இன்னும் தலை நெளிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தள்ளாடியபடி எழுந்தவன், அதே தள்ளாட்டத்துடன் சாலையைக் கடந்தபடி அந்தப்புறம் சென்றுவிட்டான். வயிறு மற்றும் கால்களில் ஒட்டிய தூசியை தட்டியவனின் நடையில் நிதானம் வந்துவிட்டது. அவனைப் பார்த்தால் குடித்திருப்பவன் போலத் தெரியவில்லை. அப்படியானால்!    

அவன் விழுந்த இடத்தை கூர்ந்து கவனத்துப் பார்த்தால் எதுவுமே வித்தியாசமாகத் தெரியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்ததால் ஒன்றும் விளங்கவில்லை. இன்னும் கூர்ந்து கவனித்தபோது 'தலைவரே அந்த இடத்தில குழி இருக்குன்னு நினைக்கிறன்' என்றேன். 'ஆமா தலைவரே அப்படியாத்தான் இருக்கணும்'. 'ஒரு ஆள முழுசா உள்ள இழுத்திருச்சுன்னா, அந்த குழி எவ்வளவு பெருசா இருக்கும்ன்னு பார்க்கணும்' என்றபடி சாலையைக் கடந்து குழியை நெருங்கினேன். குறைந்தது ஆறடி இருக்கும். போஸ்ட் லைட் வைக்க வேண்டும் என்பதற்காக வெட்டப்பட்ட குழி. அதன் ஆழமே மிரட்சியாக இருந்தது. 

'யோவ் செம பெருசு. எப்படி அவனா எந்திச்சி போனான்னு தெரியல. செம' என்றபடி மீண்டும் அந்த இடத்தைப் பார்க்க, கீழே விழுந்ததும் போராடி எழுந்ததும் மட்டுமே மீண்டும் மீண்டும் காட்சியாகிக் கொண்டிருந்தது. அடுத்த அடியில் குழி என்பது தெரியாமல் கால் வைத்த அவன் மனநிலையையும், எதுவுமே இல்லது அந்த பரந்த அவன் உடலும், திடீர் அதிர்ச்சியும், அதில் இருந்து அவன் மீண்டதையும் நினைத்தால், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் சிரித்துவிட்டேன். காலம் எங்கே எவனுக்கு எப்படியொரு குழியை வெட்டி வைத்துள்ளதோ! 

***

அதே இடத்தில் வயதான ஒருவர் நடந்து, அங்கே குழி இருக்கும் உணர்வு இன்றி விழுந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அதிலும் விழுந்த அதிர்ச்சியில் மயக்கமாகி இருந்தால் விடியும் வரைக்கும் யாருக்கும் தெரிந்திருக்காது. அடுத்த சில மணி நேரங்களில் அந்த இடமே அடங்கிப் போயிருக்கும். அடங்குவது அவரின் உயிராகவும் இருக்கலாம்.

சட்டென அரசாங்கத்தின் மீது கோவம் வந்தது. ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது என. அதே நேரத்தில் இன்னொன்றையும் கவனித்தோம். அந்த இடத்தை யாரும் கடக்காமல் இருப்பதற்காக சிவப்பு நிற பிளாஸ்டிக் ரிப்பன் கட்டப்பட்டு கிழிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் கட்டப்பட்ட தாள் கிழிபடாமல் இருந்தது. அங்கும் ஒரு குழி. 

அந்த இடத்தில் நின்றபடியே மேலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். குழியை கடக்க நினைத்த சிலரை அலர்ட் செய்தால் 'எங்களுக்குத்தான் தெரியுமே வந்துட்டாரு பெருசா சொல்ல' என்றபடி அலட்சியப்பார்வை பார்த்தபடி கடந்தார்கள். அதை எப்படி அடைப்பது எனப் பார்த்தோம் எதுவும் வழி கிடைக்கவில்லை. 

மிகவும் பரபரப்பான அந்த சாலையில், சாலையைக் கடக்கும் அவசரத்தில் எவனோ ஒருவன் செய்த செயல் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பகல் நேர வெளிச்சத்தில் அதன் அபாயம் குறைவு என்றாலும் இரவில் அது ஒரு மரணக் குழியாக மாறியுள்ளது. அந்த மரணத்தின் தூதுவன் - எதைப்பற்றியும் அக்கறை இல்லாது நம்மோடு உறவாடிக் கொண்டிருக்கும் சகமனிதன். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் செய்வது மட்டுமே சரி என்கிற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக நம்முள் உருப்பெற்று வலுயேறிக் கொண்டுள்ளது. அதன் விளைவுகள் எல்லா நேரங்களிலும் கொடுமையாக இல்லை என்றாலும் அபாயகரமானதாகத் தான் இருக்கிறது. 

இன்று விதைக்கப்படும் ஒவ்வொரு விளைவுகளும் நாளை என்னமாதிரியான சமுதாயத்தை உருவாக்கும் என்பது கேள்விக்குறியே. அலட்சியம் ஒவ்வொருவரின் நாடி நரம்புகளிலும் நுழைந்து ஆட்டிப்படைக்கிறது.  இதனால் பாதிக்கபடுவது சமுதாயமே. சமுதாயம் என்றால் நீங்களும் நானும் தான். இது எங்கு போய் முடியுமோ!


சமாதான சமுதாயத்தைஉருவாக்க முயல்கிறோமோ இல்லையோ சைக்கோக்கள் நிறைந்த சமுதாயம் உருவாகிவிடாமல் பாதுக்கப்பது தான் இன்றைய தேவை. இல்லையெனில் மரணத்தின் போர்வாள் ஒவ்வொருவன் கையிலும் இருக்கும். அதை இந்த சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே களமாடும். காரணம் சமுதாயம் என்பது நீங்களும் நானும் தான். 

5 comments:

 1. ஆணாதிக்கமும் மரணத்தின் போர்வாள்தான்.

  நமது மனம் எப்படி ஒரு கட்டத்துக்குள் (சாலையில் கிடந்தால் குடித்திருப்பான் என்ற எண்ணம்) அடங்கிவிட்டது. இந்நிலையில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அரசு கூவிவிட்டது.

  ReplyDelete
 2. இது போன்ற குழிகள் நெடுஞ்சாலைகளில் அதிகம் ஆகிவிட்டது! தச்சூர் கூட்டுச்சாலையில் இரண்டு வருடமாக ஓர் குழி சரி செய்ய படாமல் மழைக்காலங்களில் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. நானும் ஓர் விபத்தை சந்தித்தேன்!

  ReplyDelete
 3. வணக்கம் நலமா?பதிவர் விழாவிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்,....

  ReplyDelete
 4. பாடல் பெற்ற பதிவர் ஆயிட்டீக.
  புதுகைக்கு வரப்போரீக.
  கலக்கப் போறீக ..

  எல்லாம் ஒ கே .
  ஆனா, குழி மேலே நின்னுகிட்டு
  கிலி கிளப்பும்
  அந்த மண்டை ஓடு ஆளையும்
  கூட்டிக்கிட்டு வரப்போகிறீங்களா ?

  அவர் வந்தாலும் நல்லத்தான் இருக்கும்.
  ஆனா முன்னாலேயே சொல்லிப்போடுங்க.

  அவரு வெஜ்ஜா நான் வெஜ்ஜா ?

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 5. நம் அறிவு ஆணாதிக்க சமுதாயத்திற்கு எதிராக இருக்குமே தவிர ஆழ்மனது ஆணாதிக்கத்தை விரும்பவே செய்யும். இந்த மாற்றம் நிகழ இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
  கண்முன் காணும் அவலங்கள் அறசீற்றத்தை உண்டாக்குவது நல்ல தொடக்கம். இது பரவட்டும்

  ReplyDelete