18 Jun 2015

இரவெனும் புதிர்

மணி நள்ளிரவு ஒன்றை நெருங்கி இருந்ததால் தெருக்கள் ஜனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதும் தொல்லை செய்யும் நாய்கள் மட்டும் அலராம் வைத்தது போல் என்னை எதிர்பார்த்து காத்துக்கிடக்க, வானம் மழை வருவதற்கான சூழலை அவசரமாக உருவாக்கிக் கொண்டிருந்தது. கடந்த ஒருவாரமாகவே நள்ளிரவுகள் வானின் கொண்டாட்டக் களமாக மாறியிருக்கின்றன. ஓயாது அடிக்கும் கடல் காற்று. தூரத்தில் ஏதாவது ஒரு புள்ளியில் வெட்டிச் செல்லும் மின்னல். ஒருசில வினாடிகளுக்கு மட்டும் எட்டிப்பார்க்கும் மழைத்துளி. எங்கும் நிறைந்திருக்கும் நீலமென ஏகாந்தமாக கழிந்து கொண்டுள்ளன இந்த கோடைக்கால நள்ளிரவுகள். வண்டியின் மோட்டார் ஏற்படுத்திய சத்தம் மற்றும் சாலையோர தவளைகள், சுவர்க்குருவிகள் ஏற்படுத்திய சப்தத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

பெரும்பாக்கத்தில் சரவணாவை இறக்கிவிட்டுவிட்டு வண்டி அனிச்சையாக மேடவாக்கம் நோக்கித் திரும்பியபோதுதான் அந்தப் பெரியவரைக் கவனித்தேன். முதலாவது திருப்பத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு தெருவையே வெறித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ஒருஅடி முன்னால் வந்து கை நீட்டின்னார். வயது எழுபது இருக்கலாம். தலையில் குல்லா. பாய். பேன்ட்டை முழங்கால் வரைக்கும் மடக்கி விட்டிருந்தார். குர்தாவா பைஜாமாவா என அடையாளம் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதன் மட்டும் நிறம் வெள்ளை. 

பொதுவாக யார் லிப்ட் கேட்டாலும் தயங்காமல் கொடுத்துவிடுவேன். சில இரவுகளில் சோளிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வரைக்கும் கூட துணிந்து லிப்ட் கொடுப்பேன். இந்தப் பகுதி வளர்வதற்கு முன் சென்னையிலேயே அதிகம் திருட்டு கொலை கொள்ளை நடக்கும் ஏரியா இந்த சாலைதானாம். இப்போது வெகுவாக குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். உள்ளுக்குள் சின்ன நடுக்கம் இருந்தாலும் லிப்ட் கொடுத்துவிடுவேன். இருளடைந்த அந்த ஒரு கிமீட்டரைக் கடந்துவிட்டால் போதும் ஊர்பகுதிக்குள் நுழைந்துவிடலாம். தாத்தாவைப் பார்த்தால் அப்பாவியாக நல்லவராகத் தெரிந்தார். 

'என்ன தாத்தா' என்றேன். சிறிது நேரம் என்னையே உற்றுபார்த்தவர் 'பெரும்பாக்கத்துக்கு புதுசு, ஏரியா மாறி வந்துட்டேன். வழி தெரியல' என்றார்.    

'பெரும்பாகத்தில எங்க?'

'இங்க ஒரு மசூதி உண்டு, அதுக்கு பக்கத்து தெரு' 

'ஆமா மசூதி உண்டு, சமுக நலக்கூடம் பக்கம், அதுவா?' என்றேன்

'சிறிது நேரம் யோசித்தவர். இருக்கலாம்' என்றார்.

'சரி வாங்க, நான் விடுறேன்' என்றேன். ஏறிக்கொண்டார்

எனக்கு மனிதர்களைக் கண்டால் பயம் இல்லை. இந்த நாய்கள் தான். 

நாய்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் வண்டியை மெல்ல செலுத்திக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அவ்வளவாக நாய்களுக்குப் பயப்படுவதில்லை. அவைகளுக்கு அருகில் செல்லும்போதோ இல்லை அவை நம்மை நோக்கி குரைக்கும் போதோ வண்டியை நிறுத்தி முறைத்தால் போதும் தெறித்து ஓடிவிடும் இல்லை குறைப்பதை நிறுத்திவிடும். இது தெரியாமல் இத்தனை காலமாய் பயந்து பதறி சிதறி ஓடியிருக்கிறேன். நாய்கள் துரத்துவதற்கான காரணம் அமானுஸ்யமும் இல்லை ஆவி பேய் பிசாசுகளும் இல்லை வண்டியில் இருந்து வரும் மோட்டாரின் சப்தம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சமீபத்திய அவதானிப்பு. 

தூரத்தில் நான்கு நாய்கள் தெருவை மறித்து யோகாசனம் செய்து கொண்டிருக்க, அவற்றை கோபப்படுத்தி விடக்கூடாதென வண்டியின் வேகத்தை மெல்லக்க் குறைத்தேன். கடைசிப் பேருந்திலிருந்து இறங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் என் வண்டியின் வேகம் குறைவதைப் பார்த்தும் பயந்து, அந்தப் பெண் சட்டென இடம்மாறி கழுத்தில் இருந்த செயினை பத்திரமாக கையில் பிடித்துக் கொள்ள, அவள் கணவன் கேவலமான ஒரு முறைப்புடன் என்னைக் கடந்துசெல்ல அனுமதித்தான். நள்ளிரவில் மனிதர்களின் கண்ணில் சிக்கும் மனிதர்கள் அனைவருமே அயோக்கியகர்கள் தான் போலும். அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நிலைமையை நொந்துகொண்டே தாத்தாவிடம் பேச்சு கொடுத்தேன். 

'மணி ஒண்ணாகுது இந்த நேரத்திலையா வாக்கிங் வந்தீங்க'. சிரித்துக் கொண்டே வண்டியை செலுத்தினேன். தூரத்தில் செவளை நிச்சயம் எனக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். மற்ற எல்லா நாய்களும் வண்டியை நிறுத்தினால் ஓடிவிடும். இந்த செவளை மட்டும் பதிலுக்கு முறைக்கும். உறுமும் அவ்வளவு எளிதில் விட்டுவிடாது. கொஞ்சம் பொறுமையாக கொஞ்சம் கோவமாக கொஞ்சமா தைரியமாக முறைத்தால் மட்டுமே வழிவிடும். 

'நான் மத்தியானமே வீட்ட விட்டு வந்துட்டேன்' என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார். 

அவர் கூறிய பதிலைக் கேட்டு நான் தான் அதிர்ச்சியாகிவிட்டேன். 'என்னது மதியமே வந்துட்டீங்களா?, தேட மாட்டாங்களா?'

'தேடுவாங்க, ஆனா எனக்கு தான் வழி தெரியலையே?' என்றபடி சிரித்தார்.  

'அதான் ரோட்டுல இத்தன பேரு போறாங்க இல்ல, அவங்க யாருட்டயாவது வழி கேக்றதுதான?' 

'எல்லாதுக்கு அவனவன் வேலை தான முக்கியம். யாரு கண்ணுக்கும் நான் தெரியலையே. இந்த ஏரியாவ தான் ரெண்டு மணிநேரமா சுத்துறேன், வீட கண்டுபிடிக்க முடியல' என்றார். 

சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய் வழிதெரியாமல் எங்கெல்லாமோ சுத்திகொண்டிருந்த போது மாமா முதுகில் அடித்து இழுத்துக் கொண்டுபோனது ஞாபாகம் வந்தது. தெருவே களேபரமாகி இருந்தது. தெரு மொத்தமும் வீட்டுமுன் கூடி எனக்கு திருவிழா கொண்டாட காத்துக் கொண்டிருந்தார்கள். அம்மா மட்டும் அழுது கொண்டிருந்தாள். என்னைப்பார்த்த நொடியில் இறுக்கி அணைத்த அன்பின் ஸ்பரிசம் ஒருநிமிடம் கண்முன் வந்து சென்றது. 

'போன் வச்சிகோங்க தாத்தா, பாவம் வீட்டில தேடுவாங்க இல்ல' என்றேன். அவர் எதுவுமே பேசவில்லை. காற்றடிக்கும் போதெல்லாம் அவர் மீதிருந்து ஜவ்வாது வாசம் வந்தது. ஸ்பீட்பிரேக் வரும்போது மட்டும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக செலுத்தினேன். அடுத்த திருப்பத்தில் செவளை எனக்காக காத்திருக்கும். விரைவில் அதனை நண்பனாக்கிக் கொள்ளவேண்டும். இந்த ஏரியாவில் செவளை தான் தாதா. எதிர்பார்த்தது போலவே காத்திருந்தது. குலைக்கவில்லை. முறைக்கவில்லை. மாறாக கூடவே ஓடிவந்தது. செவளைக்கு நல்ல கணீர் குரல். இந்த இரவில் அது குரைத்தால் நான்கு தெருவிற்குக் கேட்கும். இன்றைக்கு அது குறைக்காதது. ஏதோ உறுத்தியது. அந்த இரவை மேலும் நிசப்தமாக்கியது. வண்டியை நிறுத்தி அதனைத் திரும்பிப் பார்த்தேன். அதே முறைப்பு ஆனால் குரைக்கவில்லை. 

'மசூதி இன்னும் வரலை' என்றார் தாத்தா. 'இன்னும் ஒரு தெரு போகணும் தாத்தா' என்றபடி வண்டியை செலுத்தினேன். செவளை நடக்கவும் இல்லை. ஓடவும் இல்லை. ஆனால் ஒரு நான்கடி இடைவெளியில் கூடவே வந்தது. மெல்ல என் தோளின் மீது கைவைத்தார். அவர் மசூதியைப் பார்த்துவிட்டது புரிந்தது. 'அந்த திருப்பத்தில் தான் வீடு' என்றார். திரும்பினேன்.

வீட்டின் முன் பத்து பதினைந்து பைக் நின்று கொண்டிருந்தது. வண்டியில் இருந்து இறங்கிய தாத்தா திரும்பிக் கூடப் பார்க்காமல் நேரே வீட்டினுள் நுழைந்தார். இவ்வளவு தூரம் கூட்டிவந்த என்னிடம் ஒருவார்த்தை கூட பேசாமல் போகிறாரே என்ற வருத்தத்துடன் அங்கிருந்தவர்களை நோக்கினேன். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும் ஒரு திருடனைப் பார்ப்பதைப் போல என்னை நோக்கினார்கள். அவர்கள் கண்களில் நள்ளிரவின் அயற்சி மற்றும் அதையும் மீறிய சோகம் தெரிந்தது. அந்த இடமே நிசபதமாக இருந்தது. அங்கிருந்த அமைதி எனக்குப் புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை. திரும்பி செவளையைப் பார்த்தேன். பேய்முழி முழித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒன்று உறுத்த மெல்ல அனைவரிடம் இருந்தும் விலகி பார்வையை மசூதியின் சுவற்றில் செலுத்தினேன். ஒரு பெரிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டிருந்தது. அதில் தாத்தாவின் மனைவி முறைத்துக் கொண்டிருந்தார். 


பின்குறிப்பு : இந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் 'பார்வையை மசூதியின் சுவற்றில் செலுத்தினேன். ஒரு பெரிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டபட்டிருந்தது. அதில் தாத்தா முறைத்துக் கொண்டிருந்தார்' என்றுதான் எழுத நினைத்தேன். அதனைவிட இந்த முடிவு கொஞ்சம் பொருத்தமானதாக இருந்ததால் மாற்றிவிட்டேன்.  

20 comments:

 1. //எங்கும் நிறைந்திருக்கும் நீலமென..// ராத்திரி வானம் கறுப்பா தான இருக்கும் ;)

  //நாய்கள் துரத்துவதற்கான காரணம் அமானுஸ்யமும் இல்லை ஆவி பேய் பிசாசுகளும் இல்லை வண்டியில் இருந்து வரும் மோட்டாரின் சப்தம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சமீபத்திய அவதானிப்பு. //
  அட !! நல்ல கண்டுபிடிப்பு !!.

  //நள்ளிரவில் மனிதர்களின் கண்ணில் சிக்கும் மனிதர்கள் அனைவருமே அயோக்கியகர்கள் தான் போலும். அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நிலைமையை நொந்துகொண்டே தாத்தாவிடம் பேச்சு கொடுத்தேன். // ம்ம்..

  இது பேய்க் கதைனு நெனச்சுப் பார்க்கல :)

  ReplyDelete
  Replies
  1. //இது பேய்க் கதைனு நெனச்சுப் பார்க்கல//

   இத மொதல்ல பேய்க்கதையாத்தான் நான் நினைச்சுப் பார்த்தேன் :-)

   Delete
 2. //நாய்கள் துரத்துவதற்கான காரணம் அமானுஸ்யமும் இல்லை ஆவி பேய் பிசாசுகளும் இல்லை வண்டியில் இருந்து வரும் மோட்டாரின் சப்தம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய சமீபத்திய அவதானிப்பு. //

  தவறான அவதானிப்பு. மாஸ் படம் பார்க்கவில்லையா சீனு.. அதில், நள்ளிரவில் நம் பைக்கை ஒரு நாய் துரத்திக் கொண்டு வருகிறது என்றால் நம் பின் சீட்டில் ஒரு பேய் உட்கார்ந்திருக்கிறது என்று அர்த்தமாம். வெங்கட் பிரேம்ஜி சொன்னாரு.. :-)

  ReplyDelete
  Replies
  1. மாசு... மொத ஷோ பார்த்து தூசு ஆகிட்டேன். அந்த சீன் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலா இருந்தது. நாட்டுல அம்புட்டு பேரும் அனுபவிக்கிற பொதுவுடைமை தேசியக்கடமை தான் அதுன்னு ;-)

   Delete
 3. நல்லா திகிலா ஆரம்பித்து சஸ்பென்ஸ் உடன் முடித்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நன்றிண்ணே... :-)

   Delete
 4. ஒருவேளை உணமையாக நடந்திருந்தால்...

  நினைத்துப் பார்த்தேன்... ஐயோ...! எந்த போஸ்டரும் கண்ணில் படக்கூடாது...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. //ஐயோ...! // செத்தாண்டா சேகரு...

   Delete
 5. சுவாரசியமாக இருந்தது சீனு! உங்கள் சொந்த அனுபவத்தை தான் எழுதுகிறீர்களோ என்று முதல் சில பத்திகளில் நினைதேன். கதை என்பது பிறகு தான் உறைத்தது. அது சரி, போஸ்டரில் இருந்தது தாத்தாவின் மனைவி தான் என்பது நாயகனுக்கு (உங்களுக்கு) எப்படி நிச்சயமாகத் தெரிந்தது?! :) மற்றபடி, இந்த முடிவு தான் இயல்பாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. //அது சரி, போஸ்டரில் இருந்தது தாத்தாவின் மனைவி தான் என்பது நாயகனுக்கு (உங்களுக்கு) எப்படி நிச்சயமாகத் தெரிந்தது?! //

   சில படைப்புகளில் எழுதாத வார்த்தைகள் அதிகம் கேள்வி கேட்க வைக்கணும்ன்னு சுஜாதா சொல்வார். அப்படி வச்சிக்கோங்களேன்..

   அங்கிருந்த சிலரோட பேச்சு 'பொண்டாட்டி செத்துப் போன நேரத்தில இந்தாளு எங்க போனாரு' என்று வச்சா சுவாரசியம் மட்டுப்படும். உங்களுக்கும் இந்தக் கேள்வி எழாது இல்லையா... :-)

   Delete
 6. உங்கள் எழுத்தில் கவர்ச்சி கூறியிருக்கிறது. கார்த்திக்கின் கேள்வி தான் எனக்குள்ளும் எழுந்தது. தாத்தா போஸ்டர் பொருத்தமானதோ?

  ReplyDelete
  Replies
  1. நன்றி அப்பா சார். எல்லாம் அப்பா சார் மாதிரியா ஜாம்பவன்களின் நம்பிக்கை கொடுக்கும் ஊக்கம் தான் :-)

   Delete
 7. கதை அருமை. கதை என்பதை இருளை வர்ணித்த விதம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. இருளில் தான் பாதிநாள் கழியுது. அதை வருணிக்காமல் இருக்க முடியுமா முரளி சார்...

   Delete
 8. சொந்த அனுபவமோ என்று நினைத்தேன்! கதை கனக்க வைத்தது! எங்கள் நண்பரின் தந்தையும் இப்படி முகச்சவரம் செய்து கொள்ள சென்றவர் தொலைந்து போய் பத்து நாள் கழித்து கிடைத்தார்! அதன் பாதிப்பு கதை படிக்கையில் இருந்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. //எங்கள் நண்பரின் தந்தையும் இப்படி முகச்சவரம் செய்து கொள்ள சென்றவர் தொலைந்து போய் பத்து நாள் கழித்து கிடைத்தார்// பத்துநாள் கழித்தா..? ரியலி பாவம்

   Delete
 9. லேபிளை பார்த்துத்தான் சிறுகதை என்று தெரிந்துகொண்டேன் ...
  நல்லா எழுதுறீங்க..
  கதையை அப்படியே முடித்திருக்கலாம்.
  பின்னர் நீங்கள் செய்த மாற்றத்தை தனிப்பதிவாகவோ அல்லது முகநூல் இற்றையாகவோ செய்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //நல்லா எழுதுறீங்க..// மிக்க நன்றி சார்...

   //பின்னர் நீங்கள் செய்த மாற்றத்தை தனிப்பதிவாகவோ அல்லது முகநூல் இற்றையாகவோ செய்திருக்கலாம். // செய்திருக்கலாம். அப்படியும் யோசித்தேன். அப்புறம் அதற்கென ஒரு பதிவுமே எழுதனுமேன்னு விட்டுட்டேன் :-)

   Delete
 10. பேய்யுடன் தான் போய் இருக்கின்றீங்கள் போல[[[[[[[[[[[[[[[[

  ReplyDelete
 11. நான் இத உண்மைன்னு நம்பிட்டேன் , இது நடந்தது இல்லையா ம்ம்ம் கதையா ?

  ReplyDelete