8 Apr 2015

நாடோடி காடோடி கடலோடி...

சோளிங்கநல்லூர் கடற்கரை நல்லவேளையாக மாநகரின் ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் யாருமற்று தனித்து இருந்தது. விரல் விட்டு எண்ணினால் இருபது பேர் இருப்போம். அதில் இரண்டு மீனவர்கள். 'மீன் வாங்கினு போண்ணா, புஸ்ஸா புச்சது' என்றார். தலை வேண்டாம் என்றது. மனம் அபூர்வமானதொரு அமைதியைத் தேடிக் கொண்டிருந்தது.

இப்படியொரு தனித்த அமைதியான கடலையும் கடற்கரையையும் பார்த்து வெகுநாட்கள் ஆகின்றன. சூரியன் மறைவதற்குள் வந்திருக்க வேண்டும். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆறரைக்காவது வரமுடிந்ததே என்றளவில் சந்தோசபட்டுக் கொள்ளமுடிந்தது. 

கொஞ்சமாய் இருட்டி விட்டிருந்ததால் மனிதர்கள் நிழல்கள் ஆகி இருந்தார்கள். கடற்கரையின் ஓரமாய் இருந்த கட்டுமரம் என்னைத் தாங்கிக் கொண்டது. கடலை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். எப்போதுமே ஒரேமாதிரியான கடல் ஒரேமாதிரியான அலைகள்தான் என்றாலும் கடல் என்றைக்குமே புரிந்துகொள்ள முடியாத புதுமைதான்.

கட்டுமரம் காற்றில் அலைபாய்வதை தவிர்க்க முடியாமல் மணலுக்கு இறங்கினேன். அலுவலகம் முடித்து நேரே கடற்கரைக்கு வந்ததால் ஷூ பாரமாக இருந்தது. கழற்றி வைத்தால் மீண்டும் அணியும் போது நரகத்தினுள் காலை நுழைத்ததைப் போல் இருக்கும். அதற்கு இதுவே பரவாயில்லை. ஈரத்தில் மணல் கொஞ்சம் கெட்டியாகி இருந்தது. தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். ஈரம் வெள்ளைச் சட்டையைக் கடந்து கொஞ்சமாக முதுகில் முத்தமிட்டது. 

ஒரு கால் என் முகத்திற்கு மிக அருகில் வந்து வேகமாக ஓடி தண்ணீரினுள் பாய்ந்தது. தலை தூக்கிப் பார்த்தேன். சிறுவன். வயது ஐந்து இருக்கலாம். கடல் அவனை தன்னுள் சந்தோசமாக வாங்கிக்கொண்டது. நானும்கூடத்தான், மிகச்சிறய வயதிலேயே கடலைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் சரிபாதி கன்னியாக்குமரியில் ஒரு கடற்கரையோர கிராமம். ராஜாக்கமங்கலம். எப்போதும் அலையோசை கேட்டுக்கொண்டே இருக்கும். வீட்டைச் சுற்றிலும் கருவேலங்காடு. அதைத்தொடர்ந்து பெரிய புளியந்தோப்பு. தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் கடல் வந்துவிடும். 

ஒருமுறை பெரிய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருந்தது. பள்ளியில் இருந்து அழைத்துப் போயிருந்தார்கள். அந்தக்காட்சி இன்னும் நினைவில் நிற்கிறது. ஒரு பெரிய மீனை படுக்கவைத்தது போல் நிழலாடுகிறது அந்த நிமிடம். கடல் நீலம். இல்லை வானத்தின் நீலம். அதற்குப் பின் திருச்செந்தூர் கடல். தொடுவானம் வரை நீளும் கடலின் தொடுவானம் தூரம் மாமாக்கள் இரண்டு பேரும் நீந்திச் செல்வார்களாம். எப்போது திருச்செந்தூர் சென்றாலும் கதையளப்பார்கள். 'ஏல சும்மா பிள்ளைகிட்ட அப்படி சொல்லாத, அவன் நிஜம்னும் போயிப் பார்க்கப் போறான்' என்று திட்டுவார். ஆனாலும் நான் மாமாக்களைத்தான் நம்பினேன். அவர்கள் அவ்வளவு தூரம் போயிருக்கக்கூடும் என்று. 

மன அமைதி அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. மனம் என்ன என்னவோ யோசித்துக் கொண்டிருந்தது. நாடோடி காடோடி கடலோடி  இந்த மூன்றும் சுழற்சிமுறையில் வந்துகொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த மீனவரிடம் போய் என்னை கடலுக்குள் அழைத்துச்செல்ல முடியுமாவென கேட்கநினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். 

காற்று பெருஞ்சப்தமாக காதில் அறைந்து கொண்டிருக்க, காலுக்கு சில அடி தொலைவில் அலைகள் முன்னும் பின்னுமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. கண்கள் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி என்னவென்னவோ யோசித்தபடியே இருந்தது. மனம் மெல்ல அமைதியைத் தேடிக் கொண்டிருந்தது. அமைதியைத் தொலைக்கும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும் அமைதியைத் தேடும் அளவுக்கு ஏதொ நடந்துவிட்டதாக மனம் எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு ஜோடி கால் என்னைக் கடந்து கால் நனைக்க சென்று கொண்டிருந்தார்கள்.   

பெசன்ட்நகர் பீச்சில் ஒரு இளைஞன் உண்டு. சுண்டல் விற்பவன். பிரசிடென்ஸி கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டே சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறான். 'அண்ணா வாண்ணா வாண்ணா சூடான சுவையான பேச்சிலர் சுண்டல் டைம் பாஸ் சுண்டல் வாண்ணா வாண்ணா. போனா வராது. வாண்ணா வாண்ணா சுண்டல். லவ்வர்ஸ கூப்பிடாத, தள்ளிட்டு வந்தவன் கூப்பிடாத. ஒன்லி பேச்சிலர் சுண்டல்' என்றபடி சுண்டல் விற்றுக் கொண்டிருப்பான். 


'ஏன்ப்பா லவ்வர்ஸ் மேல உனக்கு அவ்ளோ வெறுப்பு' என்றேன். 'எல்லாம் ஒரு பொறாம தான்னா. குடும்பம் கஷ்டம். அப்பா குடிகாரரு. அம்மா ஒண்டி. ஏதொ சம்பாதிக்கலாம் இங்க வந்தா ஒரே லவ்வர்ஸ் தொல்ல. அதான் லவ்வர்ஸ்க்கு சுண்டல் விக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்' என்றபடி ஆ சுண்டல் சுண்டல் சுண்டல் சூடான பேச்சிலர் சுண்டல் என்றபடி நடக்கத் தொடங்கினான். அதன்பின் நான் பெசன்ட் நகரும் போகவில்லை அவனையும் பார்க்கவில்லை. அடுத்தமுறை அவனைப் பார்ப்பதற்காகவேனும் பெசன்ட் நகர் செல்ல வேண்டும். சோளிங்கநல்லூர் கடற்கரையில் சுண்டல் மல்லிகை தொல்லை எல்லாம் இல்லை. கொஞ்சம் தள்ளி இரண்டு ஐஸ் வண்டி நிற்கிறது. வாங்கிக்கொள்ளலாம்.  

இதுவே மெரீனா என்றால் எண்ணற்ற ஜோடிகளைக் கண்டிருக்கக் கூடும். என்ன எனக்குத்தான் வயிற்றெரிச்சலின் அளவு எல்லை மீறி இருக்கும். அட்டகாசமானதொரு பௌர்ணமி நிலவில் இரண்டு காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி காதலை பரிமாறிக் கொள்ளும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும். அவர்கள் பாக்கியசாலிகள். நின்றபடியே ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மாறிமாறி முத்தங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நல்ல இருட்டி இருந்தாலும் நிலவு அவர்களின் மீது காதலைப் பொலிந்து கொண்டிருந்தது. அருகில் கடல். நான் பௌர்ணமியில் நனைந்து கொண்டிருந்த கடலை காதலித்துக் கொண்டிருந்தேன். 

மெரீனாவைப் பொறுத்தவரையில் காதலர்களுக்கு இடையில் ஒன்று காதல் இருக்கும் இல்லை காமம் இருக்கும் இதைத் தவிர வேறெந்த உணர்வையும் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வருவதில்லை. மெரீனா என்று இல்லை நான் பார்த்த எல்லா கடற்கரைகளுமே அப்படித்தான். இங்கு ஒரு ஜோடி கடற்கரையில் இருந்து விலகி சாலையை நோக்கியும், மற்றொரு ஜோடி நிழல் விழாத இரவினுள்ளும் நுழைந்து கொண்டிருந்தார்கள். நானும், உங்களால் புகமுடியாத என்னுடைய மனதின் ஆழத்தினுள் நுழைய முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். 

அலுவலகம் வீடு வாழ்க்கை எதிர்காலம் உறவினர்கள் நண்பர்கள் புத்தகம் எழுத்து கடற்கரையின் ஓரமாய் நிறுத்தி இருந்த வண்டி தொலைந்து விடக்கூடாதே என்றே தவிப்பு என ஒவ்வொரு எண்ணங்களாக மாறிமாறி வந்தபடியே இருந்தன. மெல்ல தூக்கம் வந்தது. நான் தூங்கிவிடக்கூடும். தூங்கிவிட்டால் என் வண்டி. ஏதோ ஒரு பயம் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. நான் தப்பிக்க முயல்வதும் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பயங்களில் இருந்துதான் போலும். என்றேனும் ஒருநாள் தப்பித்துவிடலாம். அதுவொன்றும் அப்படியொரு முடியாத காரியமில்லை. 


மெல்ல கடற்கரையில் இருந்து வெளியில் வந்தேன். இருபுறங்களிலும் வெள்ளைவெளேர் மாளிகைகள் கடற்கரையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. அத்தனையும் பணங்களில் புரளும் பாக்கியவான்கள் கட்டியது. எனக்கு இதுவெல்லாம் தேவையில்லை. கடல் இருக்கிறது காடு இருக்கிறது. எனக்கே எனக்கான கொஞ்சம் நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன. போதும். பின்னால் திரும்பிப்பார்த்தேன் கடல் ஆமாம் என்பது போல் கண் சிமிட்டியது.

7 comments:

 1. அட, படகோட்டி பாடல்கள் கேட்டுக்கொண்டே கடற்கரையில் இருந்திருக்கலாமே... அசத்திட்டீங்க சீனு.

  ReplyDelete
 2. அட...! கொஞ்ச நாட்கள் பொறுங்க சீனு... ஏக்கங்கள் தீரும்...!

  ReplyDelete
 3. நல்ல அனுபவம்.. படிக்கும்போதே ஏதோ இழந்தது போன்ற பீலிங்... ஆனால் கட்டுமரம் என குறிப்பிடும்போது ஏதோ என் தலைவனை ஓட்டுகிற மாதிரியே தெரிகிறது :-)

  ReplyDelete
 4. Nalla kavithai nadai..... kalyanaa vaaliba vayasu :-)

  ReplyDelete
 5. கலக்கலான நடையில் ஓர் பகிர்வு! அருமை!

  ReplyDelete
 6. இந்த மனிதக் கடலில்
  நான் மட்டும் தீவாய்...

  என்று என்றோ எழுதிய என் கவிதையை நினைவூட்டியமைக்கு நன்றி சீனி!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு சீனு. கடல் என்றைக்கும் அலுக்காத ஒரு விஷயம். அப்படியே கடலோடு கலந்து விடமாட்டோமோ என்று தோன்றும்!

  ReplyDelete