22 Apr 2015

ரயிலோடும் பாதை

மதுரையைக் கடந்து ரயில் அதன் போக்கில் தடதடத்துக் கொண்டிருந்தது. ஆர்.ஏ.சி-யில் பயணம் செய்யக்கூடிய அளவுக்குத்தான் தென்னக ரயில்வே கருணை காட்டி இருந்ததது. தொடர்ந்து உட்கார்ந்தபடியே பயணிப்பது அலுப்பாக இருந்ததால் மெல்ல புட்போர்டுக்கு வந்தேன். ரயிலோ பேருந்தோ புட்போர்ட்டில் அமர்ந்து பயணிப்பது என்பது ஒரு பறவையின் சிறகில் உட்கார்ந்துகொண்டு பயணிக்கும் உணர்வைத் தரக்கூடியது. நல்ல நிறைஞ்ச அமாவாசை. 

யாருமற்ற இரவில்
துணைக்கு 
நிலவு கூட இல்லை

என நான் எழுத நினைத்த கவிதை ஒன்று நியாபகம் வருகிறது.

பொதிகை எக்ஸ்பிரஸ் மெல்ல வேகம் எடுத்துக் கொண்டிருந்தது. காற்று கொஞ்சம் கொஞ்சமாக பெட்டியை நிறைக்கத் தொடங்க ரயிலும் காற்றும் இணைந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தார்கள். இதுவே பகல் என்றால் படியில் அமர்ந்து விடலாம். இரவென்பதால் காவல்துறையிடம் இருந்து மிரட்டல் வரக்கூடும். இப்படி நிற்பதற்கே திட்டுவார்கள். அதுவும் சரிதான். இதுபோன்ற தருணங்கள் மனிதனின் மெல்லிய சைக்கோத்தனங்களை சீண்டிப் பார்ப்பவை. ஒருநிமிடம் போல் ஒரு நிமிடம் நாம் இருப்பதில்லை. இங்கிருந்து குதித்தால் என்னவாகும் என உள்ளிருக்கும் சைத்தான் யோசிக்க ஆரம்பித்தது நம்மைத் தூண்டிவிட்டால் நிலைமை என்னாவது. குறைந்தது ஒருமணி நேரம் நின்றிருப்பேன். பயணம் கொஞ்சம் கூட அலுக்கவில்லை. கொடரோடு ஸ்டேசன் யாருமற்று பச்சை விளக்கை ஏந்தியபடி வழிவிட்டுக் கொண்டிருந்தது. முன்பெல்லாம் கொடரோடில் அரைமணி நேரத்திற்கும் குறைவில்லாமல் ரயில் நின்று செல்லும். இனி அடுத்த நிலையம் திண்டுக்கல் தான். 

இந்தப் பாதையில் ஒரேஒருமுறை தான் பகலில் பயணித்துள்ளேன். அது கொஞ்சம் கடுப்புடன் கிளம்பி கடுப்பைக் கிளப்பிய பயணம் என்பதால் சுவாரசியம் என்று எதுவுமில்லை. அது ஒரு சிறப்பு ரயில். அண்ணா யுனிவர்சிட்டி எடுத்த அவசர முடிவினால் தென்காசியில் இருந்து உடனடியாகக் கிளம்ப வேண்டிய நிலை. நெல்லையில் இருந்து காலை ஏழு மணிக்குக் கிளம்பிய சிறப்பு ரயில் உருட்டி உருட்டி உருட்டி நள்ளிரவு இரண்டு மணிக்கு மாம்பலத்தில் இறக்கிவிட்டான். பக்கத்தில் இருந்த நபர் என் தோளை பாதிநேரம் சோபாவாக பயன்படுத்திக் கொண்டார். மீதிநேரம் படியில் செலவழித்தேன் என்பதைத் தவிர பெரிதாக ஒன்றும் நியாபகம் இல்லை. அப்போது கையில் குமுதமும் விகடனும் மட்டுமே இருந்தது. தீவிர வாசிப்பாளன் ஆவேன் என யாருக்குத் தெரியும். தெரிந்திருந்தால் யாரையாவது துணைக்கு அழைத்திருக்கலாம். 

கொஞ்சம் கூட வெளிச்சமே கிடைக்காத இருளின் இடைவெளிகளின் ஓடாக ரயில் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஆங்காங்கு தெரியும் வெளிச்சப் புள்ளிகள் மக்கள் வாழ்வதற்கான அறிகுறியை காண்பித்துக் கொண்டிருந்தன. எப்போதாவது கடக்கும் சாலை. ஒன்றிரண்டு ரயில்வே கதவு பின் எப்போதும் நிறைந்திருக்கும் இருட்டு அதில் பென்சிலில் கோடு தீட்டியது போல் தெரியும் சித்திரங்கள் என இதுவரைக்கும் பார்க்காத காட்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது இப்பயணம். 

கொடைரோடு கழிந்த சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய குன்று ஒன்று குறுக்கிட்டது. பொதுவாகவே மதுரை திண்டுக்கல் எல்லாம் உறக்கத்தில் கழியும் பகுதிகள். எப்படி இருக்கும் என்பதை ஒருமுறை வைகை எக்ஸ்பிரஸில் வரும்போது பார்த்திருக்கேன். அதுவே அலாதியான ஒரு அனுபவம். அதனை முதன்முதலில் எழுதிய ரயிலோடும் பாதையில் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் இந்தக் குன்றைப் பார்க்கிறேன். குன்றுதானே இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. குன்று தான் சிறப்பே. 

அபிதா-வில் லாசரா ஒரு குன்றைப் பற்றி எழுதி இருப்பார். அந்த நாவலில் அபிதாவுடையது மிகப்பெரிய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையே அங்கு உயர்ந்து வளர்ந்து நிற்கும் குன்றும் அந்தக் குன்றைச் சுற்றி ஓடும் ரயில் பாதையுமே. கிட்டத்தட்ட இதுவும் அப்படி ஒரு குன்று தான். 

முதலில் ரயில் சாதாரணமான வளைவு ஒன்றில் திரும்புவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன், ரயிலோடும் பாதையில் குறுக்கிடும் வளைவுகள் அற்புதமானவை. நாம் பயணிக்கும் ரயில் முழுமையையும் காட்சிக்குள் கொண்டு வருபவை. நம்மை இழுத்துச் செல்லும் இன்ஜினையும் பார்க்கலாம்; துரத்தி வரும் கடைசிப் பெட்டியையும் பார்க்கலாம். இப்போதும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். வளைவு முடிவதாகவே தெரியவில்லை. நாற்பது டிகிரி கோணத்தில் ரயில் வளைந்து கொண்டே இருந்தது. என்ன ஒரு அருமையான காட்சி. ஆம் ரயில் அந்தக் குன்றை சுற்றிக் கொண்டிருந்தது. குறைந்தது மூன்று கிமீ தூரத்திற்காவது ரயில் அந்தக் குன்றைச் சுற்றி இருக்கும். அலாதியானதொரு அனுபவம். நல்ல இருள். ரயில் பெட்டியின் ஊடாகக் கசியும் குறைந்த வெளிச்சம். குன்றினைச் சுற்றி ரயிலோடு பாதை. சில அனுபவங்களை நாமாக அமைத்துக் கொள்கையில் சில அனுபவங்கள் தாமாக அமையும். இது நானாக அமைத்துக் கொண்ட அனுவபத்தில் தானாகக் கிடைத்த அனுபவம். 

திண்டுக்கல் நிலையத்தைக் கடந்து ரயில் ஓடத்தொடங்கிய பொழுது தோளில் ஒரு கை. எனக்கு படுக்கை இல்லை என்று கூறிய டிடிஆரின் கை அது. என்னைப் பார்த்து புன்னகைத்தார். நூற்றில் ஒருவர் தான் இப்படி சிரித்த முகத்துடன் வருவார்கள். இவர் அவர்களில் ஒருவர். 'தூக்கம் வரலியா' என்றார். 'நீங்க தான சீட்டு இல்ல சொன்னீங்க' என்றேன். சிரித்தார். 'கதவ அடைக்கப் போறேன், உள்ள போறீங்களா'. என் பதிலுக்குக் காத்திருக்காமல் கதவை அடைக்கத் தொடங்க, என்னை படியிலேயே விட்டுவிட்டு மெல்ல உள்ளே நுழைந்தேன் ரயில் தனக்கான பாதையில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தது. 

13 Apr 2015

மனிதன் என்னும் கொலைமிருகம்

சூழலியலாளரான தியோடர் பாஸ்கரன் சுற்றுசூழல் மாசடைவதற்காக மட்டும் கவலைப்படாமல் சுற்றுசூழல் சார்ந்த தமிழும் வளராமல் தேங்கியே நிற்கிறது என்ற கோணத்தில் பல பிரச்சனைகளை அலசுவதால் இவரைப்பற்றி இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. 

இன்னமும் தமிழ்ச்சூழலில் சூழலியல் சார்ந்த வாதங்கள் தமிழில் நடைபெறாமல் ஆங்கிலத்திலேயே நடைபெறுவதை காரணம்காட்டி அதனால் மட்டுமே சூழலியல் (Environmental) மக்களிடையே பரவலாக அறியபடாமல் அது மேட்டுகுடிக்கானது என்ற மாயை நிலவுகிறது. இந்தக் கூற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்பே தியோடர் முன்வைத்து இருந்தாலும் நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விசயமே. 


ஆங்கிலவழிப் பள்ளி ஒன்றில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை உதாரணமாக முன்வைக்கிறார்.  காட்டுயிரிகள் சார்ந்த வினாடிவினா நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட தியோடர் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது என்றும் வேங்கைகளும் யானைகளும் என்னவென்றே தெரியாத நிலத்தில் இருந்து வந்த மொழியில் அவற்றைப்பற்றி நடத்தப்படும் வினாடிவினா கேள்விக்குறியானது என்றும் கூறுகிறார். இதனால் காட்டுயிரிகள் சார்ந்த தமிழ் வழக்கு மெல்ல அழியும். அதேசமயம் அத்தனை காட்டுயிர்களுக்குமான தமிழ்ப்பெயர் இன்னமும் கண்டறியப்படவில்லை அதற்கான முனைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். 

யானைக்கு பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் தமிழில் இருக்கிறது ஆனால் ஒற்றைவார்த்தையை மட்டுமே ஆங்கிலம் கற்றுத் தருகிறது. யானையின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறது தமிழ். இவை வழக்கற்றுப் போகும் போது மொத்தமாக மறைந்து மறக்கபட்டுப் போகும் அபாயம் இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார். எப்படி அருவியானது water falls என்ற ஆங்கில தமிழாக்கத்தின் மூலம் நீர்வீழ்ச்சியானதோ அப்படி.  

யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு இவை அத்தனையும் யானைக்கான பிறபெயர்கள் இன்னமும் அதிகமான பெயர்களைக் கூட சங்கத் தமிழ் பதிவு செய்துள்ளது என்பதை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

நமது காடும் காட்டுயிரிகளும் எப்படி வேட்டையாடப்பட்டன பட்டுக்கொண்டுள்ளன என்பதை மிக வருத்ததுடனும் அதே சமயம் வீரியத்துடனும் கூறுகின்றன இவருடைய எழுத்துக்கள். உலகிலேயே போதைக் கடத்தலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருக்கும் கள்ளச்சந்தை காட்டுயிரிகளுக்கானது என்று கூறுகிறார். ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பின் விலை மட்டும் பல கோடிகள். ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் பரந்து இருந்த இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இன்றைக்கு சில நூற்றுக் கணக்கில் மட்டுமே தமது உயிரை தாக்குப்பிடித்துக் கொண்டுள்ளன என்பது நம்பமுடியாத அவலமான தொரு விஷயம். 

நம்மைப் பொறுத்தவரை சிங்கங்கள் இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும்தான் வசிக்கிறது. உண்மையென்னவெனில் ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்திருக்கின்றன. சிங்கம் குறித்து வள்ளுவர் திருக்குறளில் மேற்கோள் காட்டியிருப்பதாக குறிப்பிடுகிறார் தியோடர் பாஸ்கரன். மேலும் வேட்டையடபடுதலின் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் மற்ற மிருகங்கள் புலி மற்றும் வரையாடு. மனிதர்களின் கொடூரத் தாக்குதலைத் தாக்குபிடிக்கமால் இவை எப்போது வேண்டுமானாலும் கூண்டோடு அழிந்துபோகலாம். 

ஜெமோ எழுதிய யானை டாக்டர் கதையில் அடிபட்ட செந்நாய்க்கு வைத்தியம் பார்க்காமல் அப்படியே விட்டுவரும் டாக்டர் கே விடம் நாயகன் கேட்பார் ஏன் அதுக்கு மருந்து போடவில்லை என்று. அதற்கு கே கூறுவார் ஒருவேள அதுக்கும் ஆன்டிபயாட்டிக் செலுத்தினா காட்டில கிமீ ஒரு விலங்கு ஆஸ்பத்திரி வைக்க வேண்டிய சூழல் வந்துவிடுவம் என்று. 

காட்டுயிரிகள் இயல்பாகவே நோய்த்தடுப்பு சக்தி அற்றவை ஆனால் அவைகளால் பெருவலியை தாங்கிக்கொள்ள முடியும். இதனால் அவைகளுக்கு இடையே ஏதேனும் நோய்த் தோற்று ஏற்படும் போது உயிரிழப்பு ஒன்றிரண்டாக அல்லாமல் கொத்து கொத்தாக மடிந்து போவதற்கான வாய்ப்பு அதிகம். சமீபத்தில் மூணாறு சென்றிருந்த போது ராஜாமலை வரையாடுகள் சரணாலயத்தில் இதை வன பாதுகாவலர்கள் அங்குவரும் ஒவ்வொரு சுற்றுல்லாவாசிகளிடமும் மறக்கமால் கூறுகிறார்கள். வரையாடுகளை தொடுவதோ அவைகளைப் பிடிப்பதோ சட்டபடி குற்றமாகும். காரணம் மனிதர்களின் நோய் அவைகளைப் பிடித்துகொண்டாள் பின் அந்த இனத்தைக் காப்பாற்றுவது இன்னும் கஷ்டமாகிவிடும். 

நமது காடுகளில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பே வேட்டையாடுதல் மிகத் தீவிரமாக நடந்திருக்கிறது. அதுவும் இதனை ஒரு சடங்கு போலவே நிகழ்த்தி இருக்கிறர்கள். ஆங்கிலேயர்கள் புலிகளும் யானைகளும் அற்ற நிலபகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு புலி யானைகளின் மீது பயம் இருந்திருக்கிறது. அதனை வெல்வதற்காக இவற்றின் மீது தங்கள் வேட்டையாடலை நிகழ்த்தி குரூரமாக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றிய நமது மன்னர்களும் ஜமீன்களும் வேட்டையில் இறங்கி காட்டுக்குள் மரண ஓலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பல்லுயிர்ச் சுழற்சியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருகிறார்கள். 

அடுத்ததாக மரங்கள். கட்டு விலங்குகள் எப்படி வேட்டையாடப்பட்டதோ அதே போல் கட்டு மரங்களும் ஆங்கிலேயர்களின் வருகைப்பின்னே மொத்தமாக வேட்டையாடப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. தேக்கும் வேம்பும் பலாவும் ஈட்டியும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும் போர்க்கப்பல்கள் கட்டவும் இங்கிலாந்த்திற்கு கடத்தபட்டிருக்கின்றன. கடினை மொட்டையாக்கியவர்கள், நமது நிலத்திற்கு சற்றும் சம்மந்தமில்லாத தைல மரங்களையும் காப்பி தேயிலைச் செடிகளையும் நட்டு காட்டையும் நாசமாக்கி லாபாம் பார்த்திருக்கிறார்கள். இவர்கள் விட்டுப்போனபின் சூழலியல் பற்றிய பிரக்ஞை இல்லாத நம் மக்கள் காடுகளையும் காட்டுயிர்களையும் வேட்டையாடி இருக்கிறார்கள். வேட்டையாடுகிறார்கள்.  

ஆங்கிலேயே அதிகாரிகளிலும் சில நல்லவர்கள் இல்லாமல் இல்லை. அவர்களின் மூலம்தான் எஞ்சிய சில உயிரினங்கள் காப்பற்றபட்டன. மற்றும் இந்திய அரசாங்கத்தின் முனைப்பால் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

காடு மட்டும் அல்ல; நீர்ச்சூழலும் மனிதனின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. அணை கட்டுகிறோம் என்று காடுகளை அழித்தோம், இன்றைக்கு வீடு கட்டுகிறோம் என்று ஆறு ஏறி குளங்கள் என்று பாகுபாடு இல்லாமல் அழித்துக் கொண்டுள்ளோம். காட்டுயிரிகள் நீர்வாழ்வன பறவைகள் என்று ஒரு உயிர் இயக்கத்தை சீரழிப்பதில் பாரபட்சமே காட்டாமல் இயங்கிக் கொண்டுள்ளோம். இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் சூழலியலுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதே இந்த வளர்ந்த நாடுகள் தான் ஆனால் இவை ஏழை நாடுகளைப் பார்த்து உச்சுக் கொட்டிக்கொண்டே அவர்களின் உச்சந்தலையில் கொட்டிக் கொண்டுள்ளார்கள். 

எது எப்படியோ மாற்றம் என்பது எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். உங்களால் சூழலியலுக்கு எந்த தீங்கும் சேதமும் நேரக்கூடாது என்ற உறுதிமொழியை உங்களுக்குள் நீங்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.  

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன் எழுதி இருக்கும் இந்தநூல் நம்முள் காட்டு உயிர்கள் பற்றியும் பறவைகள் நீர்நிலைகள் சுற்றுசூழல் குறித்து ஆழமான விழிப்புணர்வையும் ஆரம்பநிலை கற்பிதத்தையும் நம்முள் ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமானால் நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தமாக இதனைப் பரிந்துரை செய்கிறேன். மேலும் சமீபத்தில் வாசித்த மிக முக்கியமானதொரு கட்டுரைத் தொகுப்பாக இந்த இந்தப் புத்தகப் பார்க்கிறேன்.   

தியோடர் பாஸ்கரன் - தற்போதைய தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானதொரு சூழலியலாளராக அறியப்படக் கூடியவர். 2005-ம் ஆண்டு வரைக்குமாக பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த இவரது கட்டுரைகளை தொகுத்து உயிர்மைப் பதிப்பகம் 2006-ம் ஆண்டு புத்தகமாக வெயிளியிட்டுள்ளது. இவருடைய பெரும்பாலான கட்டுரைகள் உயிர்மையில் வெளிவந்தவை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  

9 Apr 2015

சென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்

மதிய வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இது வெயிலின் ஆரம்பம் தான் மெயின் பிக்சர் அக்னி நட்சத்திரத்தின் வருகைக்காக காத்திருக்கிறது. இபோதாவது பரவாயில்லை வெறும் வெயில். அடுத்த மாதம் வெயிலோடு சேர்ந்து வெக்கைக் காற்றும் சேர்ந்துகொள்ளும். 

மேடவாக்கம் மெயின்ரோடை நெருங்கும் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பதற வேண்டாம். வண்டி பன்ச்சர். அவ்வளவுதான். இதற்கு முன்பும் பஞ்சராகி இருக்கிறது. அப்போதெல்லாம் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தால் மெக்கானிக் அண்ணனுக்குப் பிடிக்காது. 

'ஒரு கால் பண்ணுணா ஊட்டுக்கு வரப்போறேன், இப்டி தள்ளின்னு வராத' என்று திட்டுவார். இப்போ மெயின் ரோடு வரைக்கும் வந்துவிட்டேன். அரைகிமீ தள்ளினால் கடை வந்துவிடும். வீட்டுக்குப் போவதென்றாலும் அதே அரை கிமீ தள்ள வேண்டும். இருநூறு மீ கூட வண்டியை தள்ள முடியவில்லை. எங்கெல்லாமோ தசை பிடித்து இழுத்தது. அதிலும் இடது பக்கம் தோள்பட்டை காலில் விழுந்து மன்றாடியது. இரண்டு சாத்தான்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்திருப்பது போலவும், சாட்டையை சுழற்றி சுழற்றி என் முதுகில் அடிப்பது போலவும் இருந்தது அந்த உணர்வு. ஒருவழியாக் வண்டியும் நானும் போதையில் தள்ளாடியபடி மெக்கானிக் ஷெட்டை வந்து சேர்ந்தோம். 

அவரும் தூரத்திலேயே என்னைக் கவனித்திருக்கிறார் போலும் 'ஏன்னா தள்ளினு வந்த' என்றார். 'தோ இங்க வண்டேன்' என்று கூறிமுடிப்பதற்குள் 'ட்யுப் நாசாமாயிரும், அப்புறம் புதுஸு தான் போடணும், இன்னா புள்ளையோ, ஒரு பத்து நிமிஷம் உக்காரு' என்றபடி பக்கத்தில் இருந்த வண்டியை பாகம் பிரிக்கத் தொடங்கினார். 


நல்ல வெயில். வேர்த்து ஒழுகியது. வறட்சி தொண்டையைக் கவ்வியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தால் கடை முழுவதும் இரும்பாக இருந்ததே தவிர தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி எங்குமே இல்லை. சென்னை முழுவதும் கட்சிக்காரர்கள் மாநகர் முழுவதும் தண்ணீர் பந்தலைத் திறந்திருக்கிறார்கள். அன்றைக்கு ஓ.எம்.ஆரில் வந்து கொண்டிருந்த போது நல்ல தாகம். தூரத்தில் தண்ணீர்ப் பந்தல்  இருப்பது தெரிந்து வண்டியை ஓரங்கட்டினேன். வெறும் பந்தல் மட்டும் இருந்தது. மண்பானையைக் கூட காணவில்லை. காற்றும் அனலும் மாறிமாறி அடித்துக் கொண்டிருக்க என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அங்கேயே இரண்டு நிமிடம் நின்றேன். பந்தலை பிளாஸ்டிக்கில் போட்டிருந்ததால் வெக்கை பிளாஸ்டிக்காக இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தண்ணீர்ப் பந்தலின் மூலையில் நான்கைந்து குவாட்டர் பாட்டில்கள் கிடந்தன. ஒருவேளை தண்ணீர்ப் பந்தல் என்பதை கட்சிக்காரர்கள் தவறாக நினைத்துவிட்டார்கள் போலும். 

'இங்க பாரு எவ்ளோ பெரிய கோடு' மெக்கானிக் அண்ணா காட்டிய இடத்தில் ட்யுப்பின் ஒருபகுதியில் நீளமான கோடு தெரிந்தது. 'இதுக்குதான் வண்டி பஞ்சரானா உருட்டக்கூடாது, இன்னும் கொஞ்சம் உருட்டிருந்த அப்டியே கீச்சிருக்கும்' தஸ்புஸ் என்றவாறு மூச்சை இழுத்துக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் கொஞ்சம் ஏசியின் அளவு குறைந்தால் கூட 'ரொம்ப சப்பகேட்டிங்கா இருக்கு ஜீ ஏசி ஆப்பரேட்டருக்கு போன் பண்ணுங்களேன்' என்று கூறும் பலரையும் பார்த்திருக்கிறேன். எங்களுக்காவது பரவாயில்லை ஏசியின் அளவு குறைந்தால் ஆப்பரேட்டர் இருக்கிறார். இவர்களுக்கு? நிலைமை மிகவும் பரிதாபம்தான். இப்படியே சமுதாயத்திற்காக கவலைப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் நானும் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் கவலைப்பட வேண்டியவர்கள் காதில் பஞ்சை அல்லவா அடைத்திருக்கிறார்கள். 

பைக்கில் இருந்து கண்ணை எடுத்து கொஞ்சநேரம் சாலையை அளக்கத் தொடங்கினேன். மஞ்சள் வெயில் சாலையை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் நிறைத்திருந்தது. சாலை மொத்தமும் வெயிலுக்கு அஞ்சியபடி நடமாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. இன்னும் அக்னியே வரவில்லை. அதற்குள் இப்படியா. 'இந்த வருஷம் வெயில் கொஞ்சம் அதிகம்தான்' மெக்கானிக் அண்ணா கூறினார். அவர் கடை வாசலில் இன்னமும் வெட்டப்படாத வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது இரக்கத்தின் பேரில் கொஞ்சமாக காற்றை வீசிகொண்டிருந்தது. வேப்பமரக் காத்துக்கு ஈடு இணை வேறெதிலுமே இல்லைதான். யோசித்துப் பார்த்தால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாலை ஓர மரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டி வீழ்த்தி இருக்கிறோம். 

'த்தா ஓஎம்ஆர் என்னா மாதிரியான ரோடு தெரியுமா' என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் எதுவுமற்ற கூலித் தொழிலாளிகளும் அன்றாடங்காய்ச்சிகளும் சைக்கிள் ஓட்டிகளும் எங்கு ஒதுங்குவார்கள் என்று யோசித்துப் பார்த்தால் அவர்களை நடுத்தெருவில் நடுவெயிலில் நிப்பாட்டி இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. ஓ.எம்.ஆர் என்று இல்லை, தமிழகம் முழுக்க இந்தியா முழுக்க இதுதான் நிலை. மார்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள். கட்டிடம் கட்டுபவர்கள், சாலைப்பணியாளர்கள், சைக்கிள் ஓட்டிகள் என்று அத்தனை பேருடைய மரநிழல்களையும் பெரிய பெரிய சாலைகளுக்காக வெட்டி வீழ்த்தி இருக்கிறோம். ஆனால் மீண்டும் மரத்தை நட்டோமா என்றால்? 

ஓ.எம்.ஆர் கூட கொஞ்சம் பரவாயில்லை. அருகில் இருந்து வரும் கடல்காற்று வெப்பநிலையை ஓரளவுக்கு சமப்படுத்திவிடும். மாநகரின் மையப்பகுதிகளையும். ஆவடி அம்பத்தூர் போன்ற புறநகர்ப் பகுதிகளையும் நினைத்தால் இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சென்னையின் சாலைகள் மூச்சுவிடக் கூட நேரமின்றி இயங்கிக் கொண்டுள்ளன.   


மிஞ்சிப்போனால் அவருடைய உயரம் நாலரை அடிதான் இருக்கும். டிரை சைக்கிள் நிறைய பிளாஸ்டிக் குடங்கள் வாளிகள் வீட்டு உபயோகப்பொருட்கள் என்று வண்டியை நிறைத்தபடி தன் சைக்கிளை மித்துக் கொண்டிருந்தார். பெடலை மிதிக்கும் அளவிற்கு உயரம் பத்தவில்லை. கொஞ்சம் எக்கி எக்கி மிதித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்களுக்கு முன் பஞ்சரான வாகனத்தையே என்னால் தள்ளமுடியவில்லை ஆனால் அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு ட்ரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார். வெயில் அவருக்கும் பொதுவானது தான். ஆனால் நிழல்? 

சாலையின் ஓரத்தில் சேர்ந்துவிட்ட குப்பைகளை அகற்றியபடி செண்டர்மீடியனில் ஒரு கூட்டம் வெள்ளையடித்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் கடைக்கு வந்து 'ன்னா கொஞ்சம் தண்ணி கொடுனா' என்றார். 'இருந்தா தரமாட்டானா, வேற எங்கனா கேளு' என்றார் மெக்கானிக் அண்ணா. அதே நேரத்தில் ஒரு பெரிய தண்ணீர் வண்டி சாலை முழுவதும் தண்ணீரை விரயப்படுத்தியபடி விரைந்து கொண்டிருந்தது. தண்ணீர் அவருக்கும் பொதுவானதுதான் ஆனால் தவிக்கும் போது? காசு கொடுத்து வாங்கக்கூட வழியில்லாமல் விலையை உயர்த்தி இருக்கிறோம். 

எது எப்படியோ சென்னை மீண்டுமொரு கோரமான வெயில்காலத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

8 Apr 2015

நாடோடி காடோடி கடலோடி...

சோளிங்கநல்லூர் கடற்கரை நல்லவேளையாக மாநகரின் ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் யாருமற்று தனித்து இருந்தது. விரல் விட்டு எண்ணினால் இருபது பேர் இருப்போம். அதில் இரண்டு மீனவர்கள். 'மீன் வாங்கினு போண்ணா, புஸ்ஸா புச்சது' என்றார். தலை வேண்டாம் என்றது. மனம் அபூர்வமானதொரு அமைதியைத் தேடிக் கொண்டிருந்தது.

இப்படியொரு தனித்த அமைதியான கடலையும் கடற்கரையையும் பார்த்து வெகுநாட்கள் ஆகின்றன. சூரியன் மறைவதற்குள் வந்திருக்க வேண்டும். அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆறரைக்காவது வரமுடிந்ததே என்றளவில் சந்தோசபட்டுக் கொள்ளமுடிந்தது. 

கொஞ்சமாய் இருட்டி விட்டிருந்ததால் மனிதர்கள் நிழல்கள் ஆகி இருந்தார்கள். கடற்கரையின் ஓரமாய் இருந்த கட்டுமரம் என்னைத் தாங்கிக் கொண்டது. கடலை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். எப்போதுமே ஒரேமாதிரியான கடல் ஒரேமாதிரியான அலைகள்தான் என்றாலும் கடல் என்றைக்குமே புரிந்துகொள்ள முடியாத புதுமைதான்.

கட்டுமரம் காற்றில் அலைபாய்வதை தவிர்க்க முடியாமல் மணலுக்கு இறங்கினேன். அலுவலகம் முடித்து நேரே கடற்கரைக்கு வந்ததால் ஷூ பாரமாக இருந்தது. கழற்றி வைத்தால் மீண்டும் அணியும் போது நரகத்தினுள் காலை நுழைத்ததைப் போல் இருக்கும். அதற்கு இதுவே பரவாயில்லை. ஈரத்தில் மணல் கொஞ்சம் கெட்டியாகி இருந்தது. தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். ஈரம் வெள்ளைச் சட்டையைக் கடந்து கொஞ்சமாக முதுகில் முத்தமிட்டது. 

ஒரு கால் என் முகத்திற்கு மிக அருகில் வந்து வேகமாக ஓடி தண்ணீரினுள் பாய்ந்தது. தலை தூக்கிப் பார்த்தேன். சிறுவன். வயது ஐந்து இருக்கலாம். கடல் அவனை தன்னுள் சந்தோசமாக வாங்கிக்கொண்டது. நானும்கூடத்தான், மிகச்சிறய வயதிலேயே கடலைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் சரிபாதி கன்னியாக்குமரியில் ஒரு கடற்கரையோர கிராமம். ராஜாக்கமங்கலம். எப்போதும் அலையோசை கேட்டுக்கொண்டே இருக்கும். வீட்டைச் சுற்றிலும் கருவேலங்காடு. அதைத்தொடர்ந்து பெரிய புளியந்தோப்பு. தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் கடல் வந்துவிடும். 

ஒருமுறை பெரிய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கி இருந்தது. பள்ளியில் இருந்து அழைத்துப் போயிருந்தார்கள். அந்தக்காட்சி இன்னும் நினைவில் நிற்கிறது. ஒரு பெரிய மீனை படுக்கவைத்தது போல் நிழலாடுகிறது அந்த நிமிடம். கடல் நீலம். இல்லை வானத்தின் நீலம். அதற்குப் பின் திருச்செந்தூர் கடல். தொடுவானம் வரை நீளும் கடலின் தொடுவானம் தூரம் மாமாக்கள் இரண்டு பேரும் நீந்திச் செல்வார்களாம். எப்போது திருச்செந்தூர் சென்றாலும் கதையளப்பார்கள். 'ஏல சும்மா பிள்ளைகிட்ட அப்படி சொல்லாத, அவன் நிஜம்னும் போயிப் பார்க்கப் போறான்' என்று திட்டுவார். ஆனாலும் நான் மாமாக்களைத்தான் நம்பினேன். அவர்கள் அவ்வளவு தூரம் போயிருக்கக்கூடும் என்று. 

மன அமைதி அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. மனம் என்ன என்னவோ யோசித்துக் கொண்டிருந்தது. நாடோடி காடோடி கடலோடி  இந்த மூன்றும் சுழற்சிமுறையில் வந்துகொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த மீனவரிடம் போய் என்னை கடலுக்குள் அழைத்துச்செல்ல முடியுமாவென கேட்கநினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். 

காற்று பெருஞ்சப்தமாக காதில் அறைந்து கொண்டிருக்க, காலுக்கு சில அடி தொலைவில் அலைகள் முன்னும் பின்னுமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. கண்கள் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி என்னவென்னவோ யோசித்தபடியே இருந்தது. மனம் மெல்ல அமைதியைத் தேடிக் கொண்டிருந்தது. அமைதியைத் தொலைக்கும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும் அமைதியைத் தேடும் அளவுக்கு ஏதொ நடந்துவிட்டதாக மனம் எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு ஜோடி கால் என்னைக் கடந்து கால் நனைக்க சென்று கொண்டிருந்தார்கள்.   

பெசன்ட்நகர் பீச்சில் ஒரு இளைஞன் உண்டு. சுண்டல் விற்பவன். பிரசிடென்ஸி கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டே சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறான். 'அண்ணா வாண்ணா வாண்ணா சூடான சுவையான பேச்சிலர் சுண்டல் டைம் பாஸ் சுண்டல் வாண்ணா வாண்ணா. போனா வராது. வாண்ணா வாண்ணா சுண்டல். லவ்வர்ஸ கூப்பிடாத, தள்ளிட்டு வந்தவன் கூப்பிடாத. ஒன்லி பேச்சிலர் சுண்டல்' என்றபடி சுண்டல் விற்றுக் கொண்டிருப்பான். 


'ஏன்ப்பா லவ்வர்ஸ் மேல உனக்கு அவ்ளோ வெறுப்பு' என்றேன். 'எல்லாம் ஒரு பொறாம தான்னா. குடும்பம் கஷ்டம். அப்பா குடிகாரரு. அம்மா ஒண்டி. ஏதொ சம்பாதிக்கலாம் இங்க வந்தா ஒரே லவ்வர்ஸ் தொல்ல. அதான் லவ்வர்ஸ்க்கு சுண்டல் விக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்' என்றபடி ஆ சுண்டல் சுண்டல் சுண்டல் சூடான பேச்சிலர் சுண்டல் என்றபடி நடக்கத் தொடங்கினான். அதன்பின் நான் பெசன்ட் நகரும் போகவில்லை அவனையும் பார்க்கவில்லை. அடுத்தமுறை அவனைப் பார்ப்பதற்காகவேனும் பெசன்ட் நகர் செல்ல வேண்டும். சோளிங்கநல்லூர் கடற்கரையில் சுண்டல் மல்லிகை தொல்லை எல்லாம் இல்லை. கொஞ்சம் தள்ளி இரண்டு ஐஸ் வண்டி நிற்கிறது. வாங்கிக்கொள்ளலாம்.  

இதுவே மெரீனா என்றால் எண்ணற்ற ஜோடிகளைக் கண்டிருக்கக் கூடும். என்ன எனக்குத்தான் வயிற்றெரிச்சலின் அளவு எல்லை மீறி இருக்கும். அட்டகாசமானதொரு பௌர்ணமி நிலவில் இரண்டு காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி காதலை பரிமாறிக் கொள்ளும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும். அவர்கள் பாக்கியசாலிகள். நின்றபடியே ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மாறிமாறி முத்தங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நல்ல இருட்டி இருந்தாலும் நிலவு அவர்களின் மீது காதலைப் பொலிந்து கொண்டிருந்தது. அருகில் கடல். நான் பௌர்ணமியில் நனைந்து கொண்டிருந்த கடலை காதலித்துக் கொண்டிருந்தேன். 

மெரீனாவைப் பொறுத்தவரையில் காதலர்களுக்கு இடையில் ஒன்று காதல் இருக்கும் இல்லை காமம் இருக்கும் இதைத் தவிர வேறெந்த உணர்வையும் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வருவதில்லை. மெரீனா என்று இல்லை நான் பார்த்த எல்லா கடற்கரைகளுமே அப்படித்தான். இங்கு ஒரு ஜோடி கடற்கரையில் இருந்து விலகி சாலையை நோக்கியும், மற்றொரு ஜோடி நிழல் விழாத இரவினுள்ளும் நுழைந்து கொண்டிருந்தார்கள். நானும், உங்களால் புகமுடியாத என்னுடைய மனதின் ஆழத்தினுள் நுழைய முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன். 

அலுவலகம் வீடு வாழ்க்கை எதிர்காலம் உறவினர்கள் நண்பர்கள் புத்தகம் எழுத்து கடற்கரையின் ஓரமாய் நிறுத்தி இருந்த வண்டி தொலைந்து விடக்கூடாதே என்றே தவிப்பு என ஒவ்வொரு எண்ணங்களாக மாறிமாறி வந்தபடியே இருந்தன. மெல்ல தூக்கம் வந்தது. நான் தூங்கிவிடக்கூடும். தூங்கிவிட்டால் என் வண்டி. ஏதோ ஒரு பயம் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. நான் தப்பிக்க முயல்வதும் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பயங்களில் இருந்துதான் போலும். என்றேனும் ஒருநாள் தப்பித்துவிடலாம். அதுவொன்றும் அப்படியொரு முடியாத காரியமில்லை. 


மெல்ல கடற்கரையில் இருந்து வெளியில் வந்தேன். இருபுறங்களிலும் வெள்ளைவெளேர் மாளிகைகள் கடற்கரையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. அத்தனையும் பணங்களில் புரளும் பாக்கியவான்கள் கட்டியது. எனக்கு இதுவெல்லாம் தேவையில்லை. கடல் இருக்கிறது காடு இருக்கிறது. எனக்கே எனக்கான கொஞ்சம் நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன. போதும். பின்னால் திரும்பிப்பார்த்தேன் கடல் ஆமாம் என்பது போல் கண் சிமிட்டியது.