27 Mar 2015

வழுத்தினாள் தும்மினேன்

தலைவனும் தலைவியும் காதல் புரிந்தபடியே கூடிக் கொண்டிருக்க இந்நேரம் பார்த்து தலைவனுக்கு தும்மல் வருகிறது. அவன் கெட்டநேரமோ என்னவோ வந்தது வந்துவிட்டது. அசடு வழிய தலைவியை நோக்குகிறான். 'அச்சச்சோ தும்மல் வருதே, நீ நீடுடி வாழனும், எப்போதும் நல்லா இருக்கணும்' என்று தலைவனை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறாள். நல்லவேளை தலைவி நல்ல மூடில்தான் இருக்கிறாள் என்ற நினைப்பில் அவளைத் தழுவ முயலும் போது ஹோவென அழத் தொடங்குகிறாள்.   


பதறிய தலைவன் தலைவியிடம் 'கண்ணே என் கனியமுதே என்னடி ஆச்சு உனக்கு, சந்தோசமா இருக்கப்போ ஏன் இப்படி  அழறே' என்று கேட்கிறான்.. 

'அடப்பாவி என்ன எங்கடா சந்தோசமா இருக்க விடுற, உன்னையே நினைச்சு உனக்காகவே ஏங்குற என்னைய சந்தோசமா வச்சிருக்கணும், காலமெல்லாம் காப்பத்தனும்ன்னு கொஞ்சமாது அக்கறை இருக்கா உனக்கு' என்று பிதற்றுகிறாள். 

நடந்தது நடப்பது நடக்கபோவது எதுவுமே புரியாத தலைவன் 'கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன் நான் என்ன தப்பு பண்ணினேன்' என்று கெஞ்சுகிறான். 

போனவாரம் விகடனில் கூட ஒரு ட்வீட் வந்திருந்ததே 'செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டா மனுஷன், செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டா புருஷன்ன்னு. அதுபோலத்தான் நம்ம தலைவனும் என்ன தப்பு என்று தெரிவதுக்கு முன்னமே மன்னிப்பு கேட்க தயராகிறான். 

பொம்மனாட்டியா விளக்கமா சொல்லுவா. அவா தான் செம நாட்டி ஆச்சே. 'அதான் தும்முனியே' என்கிறாள் ரெண்டே ரெண்டு வார்த்தையில்.

'இதுதான் உன் விளக்கமா? நான் தும்மினேன்னு எனக்கும் தெரியும்டி, நீ கூட நல்லா இருன்னு வாழ்த்தினியே. அப்புறம் என்னவாம்' என்று மீண்டும் கெஞ்சுகிறான். 

'நீ இப்ப எதுக்கு தும்மின, எனக்கு காரணம் தெரிஞ்சாகனும்' என்கிறாள் தலைவி. 

இனி தும்முரதுக்குக் கூட உன் கிட்ட பெர்மிசன் வாங்கனுமா என்று மனதினுள் நினைத்துக் கொண்டே 'எனக்கு தும்மல் வந்தது தும்மினேன்' என்று குரலை உயர்த்துகிறான்.

'உனக்கு டஸ்ட் அலர்ஜி கூட இல்லியேடா அப்புறம் எதுக்கு தும்மின, பல வேலைகள் முடிச்சு களைப்பா வந்த உனக்காக எவ்வளவு காதலோடு காத்து இருக்குறேன், ஆனா நீ தும்முற' என்று மேலும் சிணுங்குகிறாள். 

தலைவனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஆனாலும் கோபப்பட முடியாது. தலைவி, தன் காதலி, தனக்கே உரித்தானவள் எதையோ நினைத்து சிணுங்குகிறாள் அவளை அன்பால் கட்டிபோட வேண்டுமே தவிர தன்னுடைய வீரத்தால் அல்ல என்பதை உணர்ந்த தலைவனும் வேறுவழி தெரியாமல் அவளையே சோகமாக பார்கிறான். 

மையிட்ட விழியை நனைத்த கண்ணீர் மெல்ல ஒழுகி பெருமூச்செறியும் அவள் மார்பு வழி இறங்குகிறது. 

தலைவன் மெல்ல தலைவியை நோக்கி நகர்ந்து அவள் தலையில் கையை வைத்து இயல்பு நிலைக்கு கொண்டுவர முயல்கிறான். 'அட அசடே நான் தும்மினதுக்கா இப்படி அழற' ஆக்ச்சுவலா 'அலற' என்று தான் அவன் கேட்டிருக்க வேண்டும். காப்பிய தலைவன் ஆயிற்றே அதான் அழற என்கிறான். 

தலைவனின் அருகாமை அவளை கொஞ்சம் இயல்புக்குக் கொண்டு வந்திருக்க அவனையே உற்றுநோக்கியவள் மெல்ல அவனை கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்குகிறாள். அவளை அணைத்தபடியே தட்டிக் கொடுக்கும் தலைவன் அவளது மௌனம் கலைவதற்காகக் காத்திருக்கிறான். 

தலைவியும் தேம்பியபடியே குழந்தையைப் போல் பேசத் தொடங்குகிறாள் 

'அடே தலைவா, கட்டிய பெண்ணொருத்தி உனக்காக நான் இருக்கிறேன். உன்னையே நினைத்து காதல் வளர்க்கிறேன். நாமிருவரும் கூடும் நேரமிது. இப்படியொரு பொழுதில் நொடி நொடியாக உன் மனம் முழுக்க நான் மட்டுமே நிறைந்திருக்க வேண்டிய தருணத்தில் நீயோ தும்முகிறாய். எனக்குத் தெரியாமல் எவளோ உன்னை நினைக்கிறாள். உன்மீது மையல் கொண்டு உன்னை தும்மச் செய்த அந்த சதிகாரி யார் எனத் தெரியவில்லை. அவளை நினைத்ததும் பயம் வந்துவிட்டது. பயம் அழுகையாக மாறி அழுகை கோபத்தை தூண்டிவிட்டது. அதுதான் என் அழுகைகுக் காரணம். ஊரில் எவனுக்கு வேண்டுமானாலும் ஊர் முழுக்க காதலி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் உனக்கு நான் ஒருத்திதான். எவளொருத்தியும் உன்மீது காதல் கொள்ளக் கூடாது. காதல் என்ன காதல். உன்னை நினைக்கவே கூடாது என்ற எண்ணத்தால் அழுகை பீறிட்டது என்று தன் அழுகைக்குக் வலு சேர்க்கிறாள் தலைவி என்ற விளக்கத்தோடு வள்ளுவன் இந்த குரளை முடிக்கையில் அப்படியே அவனை கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றோ, ஆரத்தழுவி சந்தோசப்பட வேண்டும் என்றோ, காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்றோ தோன்றுகிறது. வள்ளுவனை நினைக்கும் போதெல்லாம் தமிழின் மீதான காதல் கூடிக் கொண்டே இருக்கிறது. 

வள்ளுவனை மொத்தமாகப் படிக்க முடியாவிட்டாலும் காமத்துப் பாலை மட்டுமாவது படித்துவிட வேண்டும் :-)

குறள் 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் 

யாருள்ளித் தும்மினீர் என்று. - திருக்குறள் - 1317.

9 comments:

 1. காமத்துப் பாலை மட்டுமாவது படித்துவிட வேண்டும் :-)// வயசு அப்படித்தான் படியுங்கோ[[[[[[

  ReplyDelete
 2. காமத்துப் பாலை மட்டுமாவது படித்துவிட வேண்டும் :-)// படியுங்கோ[[[[[[ அதனை படித்தபின் தொடர்ந்து எழுதுங்கோ அண்ணாச்சி! வாசிக்க ஆசையில் தும்முவோம்[[[[[[[[[[

  ReplyDelete
 3. 1318 குறள் இன்னும் சுவாரஸ்யம் கூடும்... நுணுக்க நிபுணர் அய்யன்...!

  ReplyDelete
 4. தமிழ்ச்சுவையிலும் அசத்தறீங்க சீனு! கலக்குங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. சீனு அருமை! சங்கத்தையும், திருக்குறளையும், இன்றையகால கட்டம் ட்விட்டையும் இணைத்து அருமையா ரூட் போட்டுட்டீங்க....ரூட் நம்ம புது ஹைவே போல ரொம அழகா ஸ்மூத்தா போகுது.......ரசித்தோம்...

  ReplyDelete
 6. இது ஜல(ச)தோஷம் போல தான்
  ஒரு வித்தியாசம் கவனிச்சிங்களா சீனு
  மூக்கு வழியா ஒழுகினா
  அது ஜலதோஷம்.
  அதுவே வாய் வழியா ஒழுகினா

  அதுதான்
  ஜொள்ளு.

  ReplyDelete
 7. வித்தியாசமான பார்வையில் ஒரு குறள்விளக்கம். நன்று

  ReplyDelete
 8. // வள்ளுவன் இந்த குரளை // குறளை??

  ReplyDelete
 9. அவர் கஷ்டப்பட்டு ஒன்றரை அடியில் அடக்கினத்தை கூட நீங்க ஒன்றரைப் பக்கம் எழுதீட்டீங்களே, நியாயமா பாஸ்! பட் ஐ லைக் திஸ் ஒன்.. இன்னும் நிறைய எழுதுங்க.!

  ReplyDelete