27 Mar 2015

வழுத்தினாள் தும்மினேன்

தலைவனும் தலைவியும் காதல் புரிந்தபடியே கூடிக் கொண்டிருக்க இந்நேரம் பார்த்து தலைவனுக்கு தும்மல் வருகிறது. அவன் கெட்டநேரமோ என்னவோ வந்தது வந்துவிட்டது. அசடு வழிய தலைவியை நோக்குகிறான். 'அச்சச்சோ தும்மல் வருதே, நீ நீடுடி வாழனும், எப்போதும் நல்லா இருக்கணும்' என்று தலைவனை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறாள். நல்லவேளை தலைவி நல்ல மூடில்தான் இருக்கிறாள் என்ற நினைப்பில் அவளைத் தழுவ முயலும் போது ஹோவென அழத் தொடங்குகிறாள்.   


பதறிய தலைவன் தலைவியிடம் 'கண்ணே என் கனியமுதே என்னடி ஆச்சு உனக்கு, சந்தோசமா இருக்கப்போ ஏன் இப்படி  அழறே' என்று கேட்கிறான்.. 

'அடப்பாவி என்ன எங்கடா சந்தோசமா இருக்க விடுற, உன்னையே நினைச்சு உனக்காகவே ஏங்குற என்னைய சந்தோசமா வச்சிருக்கணும், காலமெல்லாம் காப்பத்தனும்ன்னு கொஞ்சமாது அக்கறை இருக்கா உனக்கு' என்று பிதற்றுகிறாள். 

நடந்தது நடப்பது நடக்கபோவது எதுவுமே புரியாத தலைவன் 'கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன் நான் என்ன தப்பு பண்ணினேன்' என்று கெஞ்சுகிறான். 

போனவாரம் விகடனில் கூட ஒரு ட்வீட் வந்திருந்ததே 'செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டா மனுஷன், செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்டா புருஷன்ன்னு. அதுபோலத்தான் நம்ம தலைவனும் என்ன தப்பு என்று தெரிவதுக்கு முன்னமே மன்னிப்பு கேட்க தயராகிறான். 

பொம்மனாட்டியா விளக்கமா சொல்லுவா. அவா தான் செம நாட்டி ஆச்சே. 'அதான் தும்முனியே' என்கிறாள் ரெண்டே ரெண்டு வார்த்தையில்.

'இதுதான் உன் விளக்கமா? நான் தும்மினேன்னு எனக்கும் தெரியும்டி, நீ கூட நல்லா இருன்னு வாழ்த்தினியே. அப்புறம் என்னவாம்' என்று மீண்டும் கெஞ்சுகிறான். 

'நீ இப்ப எதுக்கு தும்மின, எனக்கு காரணம் தெரிஞ்சாகனும்' என்கிறாள் தலைவி. 

இனி தும்முரதுக்குக் கூட உன் கிட்ட பெர்மிசன் வாங்கனுமா என்று மனதினுள் நினைத்துக் கொண்டே 'எனக்கு தும்மல் வந்தது தும்மினேன்' என்று குரலை உயர்த்துகிறான்.

'உனக்கு டஸ்ட் அலர்ஜி கூட இல்லியேடா அப்புறம் எதுக்கு தும்மின, பல வேலைகள் முடிச்சு களைப்பா வந்த உனக்காக எவ்வளவு காதலோடு காத்து இருக்குறேன், ஆனா நீ தும்முற' என்று மேலும் சிணுங்குகிறாள். 

தலைவனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஆனாலும் கோபப்பட முடியாது. தலைவி, தன் காதலி, தனக்கே உரித்தானவள் எதையோ நினைத்து சிணுங்குகிறாள் அவளை அன்பால் கட்டிபோட வேண்டுமே தவிர தன்னுடைய வீரத்தால் அல்ல என்பதை உணர்ந்த தலைவனும் வேறுவழி தெரியாமல் அவளையே சோகமாக பார்கிறான். 

மையிட்ட விழியை நனைத்த கண்ணீர் மெல்ல ஒழுகி பெருமூச்செறியும் அவள் மார்பு வழி இறங்குகிறது. 

தலைவன் மெல்ல தலைவியை நோக்கி நகர்ந்து அவள் தலையில் கையை வைத்து இயல்பு நிலைக்கு கொண்டுவர முயல்கிறான். 'அட அசடே நான் தும்மினதுக்கா இப்படி அழற' ஆக்ச்சுவலா 'அலற' என்று தான் அவன் கேட்டிருக்க வேண்டும். காப்பிய தலைவன் ஆயிற்றே அதான் அழற என்கிறான். 

தலைவனின் அருகாமை அவளை கொஞ்சம் இயல்புக்குக் கொண்டு வந்திருக்க அவனையே உற்றுநோக்கியவள் மெல்ல அவனை கட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்குகிறாள். அவளை அணைத்தபடியே தட்டிக் கொடுக்கும் தலைவன் அவளது மௌனம் கலைவதற்காகக் காத்திருக்கிறான். 

தலைவியும் தேம்பியபடியே குழந்தையைப் போல் பேசத் தொடங்குகிறாள் 

'அடே தலைவா, கட்டிய பெண்ணொருத்தி உனக்காக நான் இருக்கிறேன். உன்னையே நினைத்து காதல் வளர்க்கிறேன். நாமிருவரும் கூடும் நேரமிது. இப்படியொரு பொழுதில் நொடி நொடியாக உன் மனம் முழுக்க நான் மட்டுமே நிறைந்திருக்க வேண்டிய தருணத்தில் நீயோ தும்முகிறாய். எனக்குத் தெரியாமல் எவளோ உன்னை நினைக்கிறாள். உன்மீது மையல் கொண்டு உன்னை தும்மச் செய்த அந்த சதிகாரி யார் எனத் தெரியவில்லை. அவளை நினைத்ததும் பயம் வந்துவிட்டது. பயம் அழுகையாக மாறி அழுகை கோபத்தை தூண்டிவிட்டது. அதுதான் என் அழுகைகுக் காரணம். ஊரில் எவனுக்கு வேண்டுமானாலும் ஊர் முழுக்க காதலி இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் உனக்கு நான் ஒருத்திதான். எவளொருத்தியும் உன்மீது காதல் கொள்ளக் கூடாது. காதல் என்ன காதல். உன்னை நினைக்கவே கூடாது என்ற எண்ணத்தால் அழுகை பீறிட்டது என்று தன் அழுகைக்குக் வலு சேர்க்கிறாள் தலைவி என்ற விளக்கத்தோடு வள்ளுவன் இந்த குரளை முடிக்கையில் அப்படியே அவனை கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றோ, ஆரத்தழுவி சந்தோசப்பட வேண்டும் என்றோ, காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்றோ தோன்றுகிறது. வள்ளுவனை நினைக்கும் போதெல்லாம் தமிழின் மீதான காதல் கூடிக் கொண்டே இருக்கிறது. 

வள்ளுவனை மொத்தமாகப் படிக்க முடியாவிட்டாலும் காமத்துப் பாலை மட்டுமாவது படித்துவிட வேண்டும் :-)

குறள் 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் 

யாருள்ளித் தும்மினீர் என்று. - திருக்குறள் - 1317.

23 Mar 2015

செந்நாய் என்னும் வனமிருகம்

சில நாட்களாகவே அந்த செந்நாயின் முகம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அது ஒரு வெறித்த பார்வையாகவும் இருக்கலாம் அல்லது என்னோடு வா இந்த கானகத்தை சிறிய இடைவெளி கூட விடாமல் சுற்றிக் காண்பிக்கிறேன் என்கிற அன்யோன்யமகாவும் இருக்கலாம். ஆனால் அது அங்கேயே நின்று வெறித்துக் கொண்டுள்ளது. என்னுடைய வருகையின் தீவிரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது.  


சில வாரங்களுக்கு முன் மாஞ்சோலைக்கு சென்றிருந்த போது ரூபக்தான் கேட்டுக்கொண்டே இருந்தான், 'பாஸ் இவ்ளோ தூரம் வந்த்ருக்கோம் ஒரு மிருகத்த கூட பார்க்க முடியல, அட்லீஸ்ட் ஒரு புலிய கூட பார்க்கமுடியல' என்றவாறு வருத்தப்பட்டான். அவன் வருத்தம் என்னை வருத்தமடையச் செய்தது உண்மைதான் என்றாலும் 'அட்லீஸ்ட் ஒரு புலிய கூட பார்க்கமுடியல' என்ற அவனது ஆதங்கத்தைத் தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. புலியைப் பார்ப்பதில் என்னவொரு அசால்ட்டான தைரியம் அவனுக்கு. ஒருவேளை எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கம்பீரமாக வந்து நின்றுவிட்டால். உள்ளுக்குள் அந்த பயமும் இல்லாமல் இல்லை. காரணம் நாங்கள் நடந்து கொண்டிருப்பது சர்வசாதாரணமாக புலிகளும் சிறுத்தைகளும் நடமாடும் பகுதி.

கானகத்தில் நடந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் நம்மை கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இல்லை நாமே கூட நம்மில் இருந்து விலகி நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கலாம். அதுவொரு அசாத்தியமான பாதுகாப்பு உணர்வு. மர்மங்கள் நிறைந்த இடைவெளிகளில் இருந்து ஏற்பட இருக்கும் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான உத்தி. இன்னமும் காடுக்கும் நமக்குமான இடைவெளி குறைந்திருக்கவில்லை என்ற அச்சத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். அதைப் போக்கிக்கொள்ள நாம் காட்டை நெருங்க வேண்டும். ஆனால் இங்கு யாரும் அவ்வளவு எளிதில் காட்டினை நெருங்கிவிட முடியாது. குறிப்பாக மனிதர்கள்.    

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உச்சியான குதிரைவெட்டி சென்றுவிட்டு அங்கிருந்து ஊத்து நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தோம். மணி மதியம் மூன்று. இதுவே சென்னை என்றால் அந்த மூன்று மணி வெயிலில் அரை கிமீ கூட நடக்க முடியாமல் எங்கேனும் சூஸ் குடிக்க ஒதுங்கி இருப்போம். இப்போது நாங்கள் இருப்பது மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியும் என்பதால் கொஞ்சம் கூட வெயில் தெரியவில்லை. அதேநேரம் குளிரவும் இல்லை. அவ்வப்போது மேகங்கள் மூடிக்கொள்ளும் போது மட்டும் குளிர்ந்த காற்று வருடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கு சில இடங்களில் காட்டருவிகளும் ஓடைகளும் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தன. சில பெயர் தெரியாத பறவைகள் மட்டும் தங்கள் இணையோடு காதல் பேசிகொண்டிருந்தன.

குதிரைவெட்டியில் இருந்து ஊத்து நோக்கி எப்படியும் ஐந்து கிமீ நடந்து இருப்போம். தூரம் குறைந்தபாடில்லை. நடக்க நடக்க தூரம் கூடிக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு. 'பாஸ் புலிய பார்ப்போமா மாட்டோமா' என்றான் ரூபக். 'புலி வரட்டும் கேட்டு சொல்றேன்' என்றேன். முறைத்தான். 

அந்த நேரத்தில்தான் சற்று தூரத்தில் இருந்த பாறையின் மீது நாய் ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ரூபக்கை அழைத்து 'ஒரு மிருகத்த கூட பார்க்க முடியலன்னு சொன்னியே, அதான் யாரோ அவங்க வீட்டில இருந்து நாய அவுத்து விட்ருக்காங்க, நல்லா பார்த்துக்கோ' என்றேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தெருநாய் போலத்தான் இருந்தது. அதனை நெருங்க நெருங்க கொஞ்சம் பாலிஷான இதுவரைக்கும் சொறிசிரங்கு எதுவும் பிடிக்காத தெருநாய் போல் இருந்தது. எங்களைப் பார்த்ததும் என்ன நினைத்ததோ தெரியவில்லை திடிரென காட்டினுள் ஓடி மறைந்துவிட்டது. 

மீண்டும் சில நிமிடங்களில் மேலும் பல நாய்கள் அந்த பாறையில் இருந்து இறங்கி சாலையைக் கடந்து மறுபக்கம் ஓடின. அப்போதுதான் அவற்றை தெளிவாகப் பார்த்தோம். சூளையில் வைத்து எடுக்கப்பட்ட சிவந்த செங்கலைப் போன்ற நிறம். உடலில் கொஞ்சம் கூட ரோமங்கள் இல்லை. அவற்றின் வால் மட்டும் ஒரு பட்டுக் குஞ்சம் போல சிவப்பு நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது எங்கள் நடையில் தயக்கம் கூடியிருந்தாலும் அவற்றை பார்த்துவிடும் அவசரத்தில் தயக்கத்தை உதறி வேகமாக நடக்கத் தொடங்கினோம். மேலும் அவை தெருநாய் இல்லை செந்நாய், காட்டு விலங்கு அபூர்வமானது என்பதையும் கண்டு கொண்டோம். இதற்குள் பாதி செந்நாய் அடர்ந்த மரங்களின் ஊடாக ஓடி மறைந்திருந்தன. 

'ச்ச சீனு போட்டோ எடுக்கலியே சீனு, வா வேகமா வா' என்றவாறு முத்து என் கையைப் பிடித்து இழுத்தான். உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுத்தபோது தான் தனித்து நின்று கொண்டிருந்த அந்த ஒரேஒரு செந்நாயைக் கவனித்தேன். உடன் வந்த அத்தனையும் காட்டினுள் ஓடி மறைய இந்த ஒன்று மட்டும் அங்கேயே நின்றுகொண்டு எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் இருந்த தீவிரத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அங்கேயே நின்றுகொண்டு வெறித்துக் கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் அதுவும் காட்டினுள் ஓடிப்போக எங்களோடு வந்த சில நண்பர்கள் மீண்டும் அவற்றைக் காண வேண்டும் அட்லீஸ்ட் ஒரு செல்பியாவது எடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் துரத்திச் சென்றனர். ம்ம்கூஉம் அவற்றை மீண்டும் காண முடியவில்லை.

நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகில் குடிநீர் தேக்கி வைப்பதற்காக வெட்டபட்டிருந்த குட்டை இருந்தது. அக்குட்டையில் நீர் அருந்துவதற்காக அந்த நாய்கள் வந்திருக்கக் கூடும். எங்களைப் பார்த்ததால் ஓடி ஒளிந்துகொண்டு நாங்கள் சென்றதும் மீண்டும் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவை வந்தபாடில்லை. இனி அவை வரவே வராது என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நடக்கத் தொடங்கினோம். எங்களுடைய பேச்சு முழுக்க அந்த செந்நாய்களே நிறைந்திருக்க என் மனம் மட்டும் அந்த ஒரே ஒரு செந்நாயை நினைத்துக் கொண்டிருந்தது. மறக்க முடியாதது அதனுடைய முகம். 

ஊத்தில் இருந்த சில பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது செந்நாயைப் பார்த்தது குறித்து கூறினோம். எவ்வித உணர்வுகளையுமே வெளிக்காட்டாமல் எங்களைப் பார்த்தவர்கள் 'செந்நாய் எப்பவாதுதான் இந்தப்பக்கம் இறங்கும், ரொம்ப வலுவுள்ள விலங்கு. கூட்டமாத்தான் அலையும். இரைய பிடிக்க பெரிய திட்டம் போடும், பார்த்தாக்க பதுங்கி வந்திரணும்' என்றார். முத்துவைப் பார்த்தேன் செந்நாயை துரத்திச் சென்ற கூட்டத்தில் அவனும் உண்டு. 'நல்லவேள சீனு அதுங்க திரும்பி வரல, வந்திருந்ததுன்னு வையி போட்டோ எடுக்கப்போன என்ன போட்டோவிலதான் பார்த்திருப்ப' என்றான். 

சென்னைக்கு வந்ததும் செந்நாய்கள் குறித்துத் தேடினேன். பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், ஜெமோ தன்னுடைய காடு, யானை டாக்டர் மற்றும் ஊமைச்செந்நாய் கதைகளில் இவற்றைப் பற்றி எழுதியுள்ளதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெமோவும் அதையே தான் கூறுகிறார். செந்நாய் அதிகமாக யோசிக்கக் கூடியது. கூட்டமாக மட்டுமே சுற்றித் திரியும். தலைவனின் ஆணைக்கு அடிபணியக் கூடியது. தலைவனின் கட்டளை இல்லாமல் ஒரு முடிவும் எடுக்காது என்று. இவற்றையெல்லாம் பார்த்தால் அன்று எங்களை கூர்ந்து நோக்கிய்து அந்தக் கூட்டத்தின் தலைவனாகத்தான் இருக்கவேண்டும். எங்களில் யாரோ ஒருவர் செய்த புண்ணியத்தால் வந்தவழியே சென்றுவிட்டது. அல்லது மனிதர்களைப் பார்த்து பழகி அவர்கள் நமது இரை இல்லை என்று ,முடிவு செய்தும் விலகி ஓடியிருக்க வேண்டும். நான்கு செந்நாய் நினைத்தால் புலி என்ன யானையையே சுற்றி வளைத்து இரையாக்கி விடுமாம். 

கடந்தவாரம் அலுவலகத்தில் செந்நாயைப் பார்த்த அனுபவத்தை பேசிக்கொண்டிருக்கும் போது ரூபக்கும் கூறினான் அந்த செந்நாயின் முகத்தை அவனாலும் மறக்க முடியவில்லை என்று. எனக்கும் கூட சில நாட்களாகவே அந்த செந்நாயின் முகம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதனுடைய வெறித்த பார்வை என்னுடைய வருகையின் தீவிரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 


படம் - நன்றி கூகுள்

15 Mar 2015

சொக்கன் - சிறுகதை

சுத்தமாகக் கூட்டம் இல்லை, சுவாமி சன்னதியே வெறிச்சோடிக் கிடந்தது என்றாலும் அய்யரும் செக்யுரிட்டியும் மேலும் சில காவல் அதிகாரிகளும் பக்தர்களை 'போறும் போறும் போங்கோ போங்கோ' என்று விரட்டிக் கொண்டிருந்தது எரிச்சலைக் கொடுதத்து. 

கண்களை மூடி நமச்சிவாய உச்சரிக்கலாம் என்றால் எங்கோ முடிக்கிவிடப்பட்ட மந்திரமாக 'போறும் போறும் போங்கோ போங்கோ'வே ஒலித்துக் கொண்டிருந்ததை மனம் வெறுத்தது. மந்திர உச்சாடனத்தைக் கைவிட்டு கருவறையில் திருவுருவாகி நின்ற சொக்கனை அவனுடைய தியானத்தை கூர்ந்து நோக்கத் தொடங்கியிருந்தேன். இந்நேரத்தில் தான் காதருகில் யாரோ ரகசியம் பேசும் சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் குரல் என்று அடையாளம் காண, திரும்பி அவளது முகத்தைப் பார்த்தேன். 

தலையில் எண்ணெய் வைத்துப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும், தாமிர நிறத்தில் இருந்தது. ஒல்லியான தேகம். அப்போது தான் குளித்திருக்க வேண்டும் என்பதால் முகம் மட்டும் கொஞ்சம் பிரகாசமாக இருந்தது. அருகில் அவளுடைய மகன் நின்று கொண்டிருந்தான். இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு. 

'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பெண் இறைவனிடம் மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்தாள். அத்தனையும் தன் குடும்பம் தன் மகன் அவன் படிப்பு வாழ்க்கை குறித்ததாக இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவளுடைய ஜெபம் காற்றாக மட்டுமே வெளிப்பட்டதால் வார்த்தைகள் கேட்கவில்லை. அதேநேரம் 'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் மட்டும் உச்சம் அடைந்து கிட்டத்தட்ட எங்களை திட்டத் தொடங்கியிருந்தது.

அந்தப் பெண்ணோ பொறுமையாக அதேநேரம் மிகக் கவனமாக சொக்கனிடம் தான் கூறவந்தது அத்தனையையும் கூறும் முனைப்பில் இருந்தாள். புறவொலிகள் அவளைப் பதட்டப்பட வைக்கவில்லை. கரம்கூப்பிய வேண்டுதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. 

'எம்மா இப்ப நகரப் போறியா இல்லியா, வந்தமா பார்த்தமான்னு இல்லாம அங்கையே நின்னா எப்டி?' என்ற கணீர் குரல் சந்நிதானத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் ஒருநிமிடம் அசைத்துப் பார்த்தது. அவளுடைய ஜெபத்தில் பாதி கூட நிறைவடைந்திருக்காத நிலையில், சந்நிதானமே வெறிச்சோடிக் கிடக்க தரிசனத்தைக் கெடுக்கும் கரடியான அந்த செக்யுரிட்டியை முறைத்தேன். 'உன்ன மாதிரி ஊருபட்ட பேர பார்த்த ஆளு நானு' என்பது போல் இருந்தது அவருடைய பதில் முறைப்பு. 

இதற்குத்தான் இது போன்ற கோவில்களுக்கே நான் வருவதில்லை. நிம்மதியாக சாமி கும்பிட விடமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாமி ஒரு காட்சிப் பொருள். பார்த்துவிட்டு கன்னத்தில் போட்டுவிட்டு நகர்ந்து விட வேண்டும். காசிருப்பவன் வேண்டுமானால் கூட கொஞ்ச நேரம் நிற்கலாம். வேண்டலாம். கண்ணார கண்டுகளிக்கலாம். செய்த பாவத்தைக் கழுவ அங்கேயே தவம் கிடக்கலாம்.

எனக்கு இருபது நபர் தள்ளி முன்புறம் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தேன். நல்ல தாட்டியான ஆள், உடன் மனைவி மக்கமார். வந்து பதினைந்து நிமிடத்திற்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். சொக்கனை கூடவே இழுத்துப் போவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மீது யாரும் பாய்ந்து பிடுங்கப்போவதில்லை. இது அவர்களுக்கான சந்நிதானம். 

பழமையான கோவில்களுக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. காற்றோடு காற்றாக உறைந்து நிற்கும் அமைதி இருக்கிறது. எப்போது கடவுளை சந்தைப் படுத்தத் தொடங்கினார்களோ அப்போதே அமைதி குறையத் தொடங்கிவிட்டது. வேண்டுமென்றே நூறு கம்பிகளைச் சுற்றிவரச் செய்து, கருவறையில் இருந்து இருபதடி தூரத்தில் தள்ளி நின்று, கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளைக் கண்டு, ச்ச என்னவிதமான ஆன்மிக தரிசனம் இது. சிலசமயம் கடவுள் கருவறையில் இருக்கிறாரா இல்லை கருஞ்சிறையில் இருக்கிறாரா என்ற ஐயம் ஏற்படுகிறது.  

அன்றைய தினத்தில் மக்கள் கடவுளை எப்படி கண்டடைந்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கு நமக்கும் கடவுளுக்குமான இடைவெளியில் கடவுளின் மெய்த்தரகர்களாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பவர்களே கடவுளை அடையவிடாமல் செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மனநிம்மதியை வேண்டி வந்தவனது சிந்தனையை சில சம்பவங்கள் என்ன என்னவோ தொடர்ச்சியான எண்ணங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. கடைசியில் முழுவதுமாக சொக்கனை மறந்து வேறு எங்கு எங்கோ உழன்று கொண்டிருப்பது அயர்ச்சியைக் கொடுத்து. சொக்கன் என்னுள் உருவேறவேயில்லை.

இந்நேரம் செக்யுரிட்டி எங்களை நெருங்கி வந்திருந்தான். அவன் கண்களில் ஒரு ஜென்மத்துக் குரோதம். ஒருவேளை அவன் கைகளில் கொலை ஆயுதம் ஏதேனும் இருந்திருந்தால் சந்நிதானம் என்றும் பார்க்காமல் கடவுளின் கட்டளையே என்று பாசக்கயிறை வீசினாலும் வீசியிருப்பான். 


'ஏம்மா இப்ப நகரப்போறியா இல்லையா' என்று கூடுதல் சப்தத்துடன் அவன் கத்த, சொக்கனைப் பார்த்தபடியே  மெல்ல அடியடியாக நகரத் தொடங்கினாள் அந்தப் பெண். இந்நேரம் அவளுடைய மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சொக்கனைப் பார்த்து ' சாமீ எங்க அம்மா நினைச்சது அத்தனையும் நடக்கணும், நான் நினைச்சதும் நடக்கணும், நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எம்மா நடம்மா சாமிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், பாத்துபாரு' என்றபடி தன் அம்மாவின் கையை இழுத்துக்கொண்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கினான். அவனுடைய வேகத்தில் கடவுளின் தற்செயல் ஒளிந்து கொண்டிருந்தது. 

கூர்ந்து கவனித்தபின் தான் கண்டுகொண்டேன் சொக்கனும் கருவறையில் இருந்து கீழிறங்கி அந்தச் சிறுவனுடன் நடக்கத் தொடங்கியிருந்ததை. உள்ளுக்குள் நமச்சிவாய எனும் மந்திரம் பிரவாகம் எடுக்க வெறும் கல்லை மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமியை எண்ணி சிரித்துக் கொண்டே வெளியில் வந்தேன். சொக்கன் தோளில் கைபோட்டபடி என்னோடு நடக்கத் தொடங்கினார்.