4 Feb 2015

மாஞ்சோலை - நள்ளிரவில் ஒரு திகில் பயணம்

சுற்றிலும் அடர்ந்த காடு. நன்றாக இருட்டி விட்டிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தைத் தாண்டி பார்வை விரிய வாய்ப்பே இல்லை. பகலின் அப்பட்டமான வெளிச்சத்தில் பார்த்து ரசித்த மலையின் மடிப்புகள், ஆள்விழுங்கி பள்ளங்கள் ஒவ்வொன்றும் இருள் நிரம்பிய நீராக தளும்பிக் கொண்டிருந்தன. ரொம்பவே ஆபத்தான வளைவுகளில் கூட சர்வசாதாரணமாக வண்டியை திருப்பிக் கொண்டிருந்தார் டிரைவர். இருளில் எதிர்படும் பள்ளங்களின் ஆழத்தை உணர முடியவில்லையே தவிர அதன் ஆழம் எவ்வளவு அபாயமானது என்பதை கற்பனை செய்து பார்க்கமுடிந்தது. ஒருவேளை எதிரில் ஏதேனும் வாகனம் வந்துவிட்டால்? வேறுவழியில்லை யாரேனும் ஒருவர் ரிஸ்க் எடுத்து ரிவர்ஸ் எடுத்துத்தான் ஆக வேண்டும்.

ஓட்டுனருக்கு இணையாக பேருந்தின் முதல் இருக்கைகள் என்பதால் அந்தப் பயணத்தின் முதல் பார்வையாளர்களாக எங்களை மாற்றி இருந்தோம். எங்களைத் தவிர ஒட்டுமொத்த பேருந்தும் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அது வழக்கமான பயணம். குறிஞ்சிக்கும் முல்லைக்குமான தினசரிப் பயணம். தடங்கல் இல்லாமல் சென்று வந்தாலே போதுமானது. மிகவும் மோசமான வளைவுகளின் வழியே பழுதடைந்த, ஆளரவமற்ற மலைப்பாதையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

அன்றைய தினம் கடைசி பேருந்துக்கு முந்தைய பேருந்து வராத காரணத்தால் கடைசிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.


ஒவ்வொரு வளைவுகளிலும் அதன் விளிம்புகளின் எல்லை வரை சென்று சக்கரம் சுழல, ஒரு தேர்ந்த இசையமைப்பாளரின் கையில் சிக்கிய வாத்தியமாக ஓட்டுனரின் கட்டளைகளுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. சில வளைவுகளில் பாறையில் மோதி விடுவது போலவும், சில தருணங்களில் நேரே பள்ளத்தில் பாய்ந்து விடுவது போலவும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது பேருந்து. ஒரு ரோலர் கோஸ்டரின் ஆனந்தம். அவ்வப்போது முத்துவையும் ரூபக்கையும் மாறிமாறி பார்த்தேன். நாம் ரசிப்பதை அவர்களும் ரசிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல். என்னைவிட அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது முதல் பயணம். எனக்கு நான்காவது முறை. 

மணிமுத்தாறில் இருந்து இருபத்தியிரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். பாம்பே பர்மா ட்ரேடிங் கம்பெனி பல ஆயிரம் ஹெக்டேர் மலைப் பகுதிகளை வளைத்துப்போட்டு தேயிலை மற்றும் காப்பிக் கொட்டைகளை பயிர் செய்து வருகிறது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி போன்ற இடங்களில் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். நாலுமுக்கில் இருந்து பிரிந்து செல்லும் மற்றொரு மலைப்பாதை கோதையாறு அணைக்கட்டு நோக்கி செல்கிறது. கோதையாறு அணையின் மேற்பகுதி நெல்லை மாவட்டம் என்றாலும் அணைக்கட்டு அமைந்திருக்கும் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொந்தமானது.

மாஞ்சோலையில் இருந்து நாலுமுக்கு பத்து கிமீ தூரத்திலும், நாலு முக்கிலிருந்து குதிரைவெட்டி பத்து கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. நாலுமுக்கிற்கும் குதிரைவெட்டிக்கும் இடைப்பட்ட பகுதியான ஊத்து வரைக்குமே தற்போது பேருந்துகள் சென்று வருகின்றன. குதிரைவெட்டி வரை பேருந்துகள் செல்லவேண்டும் என்ற ஆணை இருந்தாலும் சாலை மிக மோசமாக பழுதடைந்து பரமாரிப்பே இல்லாமல் இருப்பதாலும், அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாலும் தற்போது குதிரைவெட்டிக்கு பேருந்துகள் சென்று வருவதில்லை.


ஊத்தில் இருந்து நெல்லை சென்று கொண்டிருக்கும் கடைசிப் பேருந்து அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தது. அந்த சிக்கலான மலைப்பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு சிறுத்தையையும் யானைக்கூட்டத்தையும் எதிர்பார்த்திருந்தோம். ஊத்தில் பார்த்த மான் கூட்டத்தையும், மாஞ்சோலையில் பார்த்த சில காட்டுப் பன்னிகளையும் தவிர வேறு எதுவுமே கண்ணில் சிக்கவில்லை. இருள் மொத்த காட்டையும் தன் வசபடுத்தி இருந்தது. 

மதியம் மிகப்பெரிய செந்நாய் கூட்டம் ஒன்றை எதிர்கொண்டிருந்தோம். அதில் இரண்டு நாய்கள் எங்களை நோக்கி முறைத்த போதிலும் எங்கள் நல்ல நேரமோ என்னவோ எங்கள் மீது தாக்குதலில் ஈடுபடவில்லை. ஊத்து பேருந்து நிறுத்தத்தில் சில பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு பெரியவர் கூறினார் 'வெறும் ரெண்டு செந்நாய் போதும் தம்பி நம்மள கொல்ல'. இதைக் கேட்டபோது முத்துவுக்கு அல்லு இல்லை. காரணம் அதில் ஒரு நாயை தைரியமாக துரத்த நினைத்திருந்தான். மாஞ்சோலை வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஒரு கரடி வந்து செல்வதாகக் கூறினார்கள். புலி சிறுத்தை யானைக் கதைகள் என்று அவர்களிடம் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு அடர்ந்த வனத்தின் அத்தனை மிரட்சிகளையும் மாஞ்சோலை மலைப்பகுதி தன்னுள் ஒழித்து வைத்துள்ளது. 

சரியாக மாஞ்சோலையில் இருந்து ஐந்தாவது கிமீட்டரில் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. சுற்றிலும் அடர்ந்த காடு. நன்றாக இருட்டி விட்டிருந்தது. என்ன பிரச்சனையோ தெரியவில்லை, பேருந்து ஒரு இன்ச் கூட நகரமுடியாமல் அங்கேயே நின்றுவிட்டது. திடீர்க் குழப்பம். அந்தப் பேருந்தில் எங்களையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி எட்டு பயணிகள் இருந்தோம். அவர்களில் சரிபாதி பெண்கள், குழந்தைகள். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. யாரும் உணவருந்தி இருக்கவில்லை. பத்து மணிக்கு அம்பை சென்றுவிட்டால் அங்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்தோம். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இதே பாதையில் ஓடி ஓடி தன் ஜீவனை இழந்திருந்தது. இதற்கு மேலும் ஓடமாட்டேன் என்பது போல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது பேருந்து. 'கிளட்ச் ப்ளேட்டில் ஏதோ பிரச்சனை, கியர் விழுது ஆனால் வண்டி அரஸ்ட் ஆயிட்டு' என்றார் டிரைவர். 

மாஞ்சோலையிலும், நாலுமுக்கிலும் ஒரு பள்ளிக்கூடம், தபால் நிலையம் மற்றும் ஒரு நியாயவிலைக் கடை இருக்கின்றது. அங்கு பணிபுரிபவர்கள் மலைபிரதேசத்தின் வாழ்க்கைக்குப் பயந்து தினசரி வந்துபோய் கொண்டிருக்கிறார்கள். அதுபோக சில உணவகங்களும் காய்கறிக் கடைகளும் இருக்கின்றன. அதற்கான கச்சாப் பொருட்களை அவர்களே கீழிறங்கி வாங்கிவந்தாக வேண்டும். இதுபோக வேறுசில பணி நிமித்தமாக அம்பைக்கும் நெல்லைக்கும் வந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். ஒருநாளைக்கு மொத்தம் நான்கு பேருந்துகள் ஏறி இறங்குகின்றன. இதில் மூன்றாவது பேருந்து வராவிட்டால் கூட சமாளித்துக் கொள்வார்கள். மற்ற பேருந்துகளின் ஓட்டம் மிக முக்கியமானது. அவை ஓடியே ஆகவேண்டும். இல்லை அந்த மலைபிரதேசம் ஸ்தம்பித்துவிடும். அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும். 

'இந்த மாய பஸ்ஸுக்கு இதே வேலையா போச்சு, ரெண்டு நா முன்ன கூட இங்கன தான ரிப்பேரு ஆச்சு' என்று புலம்பத் தொடங்கினார் ஒரு அம்மா. 

'இன்னும் எப்ப ரிப்பேரு பார்த்து எப்ப நாம போவவோ, இதுக்கு எப்ப தான் விடுவுகாலம் பொறக்கப் போவுதோ' ஆங்காங்கு புலம்பல் குரல்கள் கேட்கத் தொடங்கின.  

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, அதுவும் மிகசரியாக அதே இடத்தில் பழுதாகி நிற்பதை தங்களுக்குள் ஆச்சரியமாகப் பகிர்ந்து கொண்டார்கள் உள்ளூர்வாசிகள். என்ன புலம்பி என்ன. ஒன்றும் செய்ய முடியாது, ஒன்று பேருந்து தன்னைத் தானே சேரி செய்துகொள்ள வேண்டும் இல்லை பாபநாசம் பணிமனையில் இருந்து ஆட்கள் வந்தாக வேண்டும். கூடவே அவர்களோடு வேறொரு பேருந்தும் வரவேண்டும் எங்களை ஏற்றிச்செல்ல. வண்டி நட்டநடு சாலையில் அநாதரவாக நின்று கொண்டிருந்தது. 

'யாராது நாலு பேரு இறங்கி தள்ளுங்க, வண்டிய எங்கியாது ஓரமா ஒதுக்கி விடுதேன்' என்று டிரைவர் கூறவும் முத்துவும் ரூபக்கும் முதல் ஆளாக இறங்கிவிட்டார்கள். அவர்களோடு நானும் இறங்க மேலும் நான்கு பேர் இறங்கி வண்டியை மெல்ல உருட்டிவிட்டோம். இறக்கம் என்பதால் தள்ளுவதற்கு எளிதாகவே இருந்தது. என்ன, 'ஓரமா நிப்பாட்டுதேன்' என்று கூறிய டிரைவர் கிட்டத்தட்ட இரண்டு கிமீ தள்ளி அந்த ஓரத்தைக் கண்டுபிடித்திருந்தார் என்பது தான் கொஞ்சம் கொடுமையான விஷயம். 

கும்மிருட்டு. மொபைலில் இருந்த வெளிப்பட்ட கொஞ்சூண்டு வெளிச்சத்தில் பேருந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். நடுங்கவைக்கும் குளிர் இல்லை என்பதே அப்போதையே மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது. பேருந்து பழுதாகிவிட்டதே என்பதையும் தாண்டி உள்ளூர ஏதோ ஒரு ஆனந்தம். ரூபக்கும் முத்துவும் 'ச்சே, மாஞ்சோலைக்கு முன்னாடியே நின்னிருந்தா எவ்ளோ நல்லா இருக்கும், அங்கியே தங்கியிருக்கலாம்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். 

இரண்டு பக்கமும் இலை தழைகளால் அடைத்து வைக்கபட்டது போல் இருந்தது. கண்கள் மெல்ல மெல்ல இருளுக்குப் பழக, அந்த இலைகளின் ஊடாக ஏதேனும் மிருகத்தின் கண் தெரிகிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.  பேருந்தினுள் இருக்கும் போது தைரியமாக எதிர்நோக்கி இருந்த அந்த சிறுத்தையும் யானையும் இப்போது இறங்கிவிட்டால். 'சீனு நாம வந்த்ருகோம்லா, ஒன்னு வராது' என்றான் முத்து. 'புலியக் கூட பாக்க முடியலியே' என்ற வருத்தத்தில் இருந்தான் அவன்.

பேருந்தினுள் இருந்த மொத்த ஆண்களும் இப்போது வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். பெண்களும் குழந்தைகளும் மட்டும் உள்ளே. ஒரு கைக்குழந்தை பசியில் அழத் தொடங்க 'யேம்மா, எப்படியாது அழுகய நிறுத்துமா, உம்புள்ளைய பார்த்து இதும் அழ ஆரம்பிச்சிரும்' என்று கூறியவாறே தன் மடியில் கிடத்தி இருந்த பேத்தியை தூங்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு பாட்டி. இன்னொரு சிறுவன் 'அப்பா பசிக்குது' என்று அவர் சட்டையை இழுக்க 'கூடைக்குள்ள தண்ணி இருக்கு எடுத்து குடி' என்று கூறிக் கொண்டிருந்தார். எங்கள் எல்லார் கண்களிலும் பசி தூக்கம் வருத்தம் எல்லாவற்றையும் கடந்த அயற்சி. 

டிரைவர் தன் பங்கிற்கு தன்னாலான முயற்சிகளை செய்து பார்த்தார், ஒன்றும் வேலைக்காகவில்லை. பாபநாசம் டிப்போவிற்கு போன், மெக்கானிக்கு போன், தங்களுக்கு தெரிந்த டிரைவர்களுக்கு போன் என்று எப்படியாவது யாரையாவது வரவழைத்துவிடும் அவசரத்தில் இருந்தார் நடத்துனர். '

'பத்தரைக்கு மணிக்கு கடைசி பஸ் மல மேல ஏறும், அதில கண்டிப்பா மெக்கானிக் வந்த்ருவார்' என்றார். 

'சீனு நாம வேணா அதில மல மேல போயிருவோமா' என்றான் ரூபக். அவனுக்கு எப்படியாவது எந்த இரவை மலையில் கழிக்க வேண்டும் என்ற ஆவல். 

'அதெல்லாம் போ முடியாது தம்பி, அந்த பஸ்ல நிக்க கூட இடம் இருக்காது, அவ்ளோ கூட்டம் போவும், வேணா உள்ளூர்காரங்க போட்டும், நாம ஊருக்கு போயிறலாம்' என்றார் நடத்துனர். நல்ல தூக்கத்தில் இருந்தார்.   

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு புரட்சியாளர் இருப்பாரே, அப்படியொருவர் எங்கள் கூட்டத்திலும் இருந்தார். வேகமாக எங்களிடம் வந்து 'தம்பி போகும் போது உங்க டிக்கெட்ல பேரு, அட்ரெஸ், போன் நம்பர் எழுதி கொடுத்துட்டுப் போங்க, நாங்க சொன்னா நடவடிக்கை எடுக்கது கிடையாது, நம்புறது கிடையாது, வெளியூர்க்காரங்க நீங்க சொன்னா நம்புவாங்க' கூறியபடி அங்கிருந்த அனைவரிடமும் தன் ஆதங்கத்தை வெளிபடுத்தத் தொடங்கினார். 

நாங்கள் சாலையில் அமர, ஒவ்வொருவராக எங்களைப் பார்த்து அமரத் தொடங்கினார்கள். எனக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது. அமைதியான அந்த வனத்தின் மத்தியில் மனிதர்களின் சலசலப்பான ஒளி மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. முத்துவின் அருகில் இருந்த ஒருவர் ராஜீவ்காந்தி கொலையில் ஆரம்பித்தது இந்திய சுதந்திரம் வரையிலும் பின்னோக்கி நகர செருப்பை தலையனையாக்கி கண்ணயர்ந்து விட்டேன். 

ஒன்னரை மணி நேரம் அடித்துப் போட்டது போன்ற தூக்கம். எழுந்திருக்கும் போது மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. உடல் முழுவதும் வண்டுகளும் பூச்சிகளும் சர்வசாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ ஒருநிமிடம் தான் தூங்கியது போல் இருந்தது. கனவுகளற்ற உறக்கம். இந்நேரம் தாசில்தாரும், காவல்துறை ஆய்வாளரும் தங்கள் குழுவுடன் வந்து சேர்ந்தனர். தாசில்தார் எல்லாருக்கும் வாழைபழம் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொண்டு வந்திருந்தார். பசி. ஒரு சில நிமிடங்களில் அத்தனை உணவுப் பொருட்களும் காணாமல் போயிருந்தன. 

சில வரிகளுக்கு முன்னர் ஒரு புரட்சியாளரைப் பற்றிக் கூறினேன் இல்லையா அவர்தான் இவ்வளவுக்கும் காரணம். அம்பை எம்.எல்.ஏவுக்கு தொலைபேசி அவர் மூலம் இவர்களையும், இவர்கள் மூலம் பழங்களையும் வரவழைத்திருக்கிறார். தாசில்தார் வருவதற்கு முன்னர் வரைக்கும் சோகையாக செயல்பட்டுக் கொண்டிருந்த மெக்கானிக்குகள் இவரைப் பார்த்ததும் அவசரவசரமாக தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். இருந்தும் பேருந்து சரியாகும் என்ற நம்பிக்கையில்லை. உடனடியாக வேறொரு மாற்றுப் பேருந்திற்கு ஏற்பாடு செய்து அப்பேருந்து எங்களை வந்து ஏற்றிச் செல்லும் போது மணி பன்னிரெண்டை நெருங்கி இருந்தது. எங்களுக்குள் இருந்து எங்களுக்காக குரல் கொடுத்தாரே ஒரு காமன்மேன், அவருக்கு கோடி நன்றிகளை கூறிக்கொண்டோம். இல்லையேல் அடுத்தநாள் காலை வரை அங்கேயே தவம் இருக்க வேண்டியதுதான். 


கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஒரே இடத்தில் சிறைபட்டிருந்தோம். நாங்களாவது பரவாயில்லை. அன்றாடப் பயணிகளை நினைத்துப் பார்த்தால் வருத்தமாயிருக்கிறது. இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் அடுத்தநாளும் பணிக்கு வர வேண்டும். வீட்டிற்கு சென்று, உடை மாற்றி மீண்டும் பேருந்தைப் பிடிக்கத் தான் அவர்களுக்கு நேரம் சரியாயிருக்கும். இதற்குப் பயந்தே பலரும் மெடிக்கல் லீவில் சென்று விடுவதாக ஓர் ஊழியர் கூறினார். 

போக்குவரத்துத் துறை தனது பணியை சேவை மனப்பான்மையில் தான் செய்து வருகிறது என்றாலும், செய்யக்கூடிய சேவையை கொஞ்சம் ஒழுங்காக செய்யலாம் என்பது தான் இவர்களது எண்ணம். இன்னும் உள்ளூர் மக்களின் புலம்பல்களை எழுத எவ்வளவோ இருக்கிறது. குறைந்தபட்சம் தேயிலைத் தோட்ட நிர்வாகம் இவர்களுக்கென ஒரு பேருந்தை இயக்கலாம் என்றொரு ஆதங்கமும் இவர்களிடம் இருக்கிறது. மக்களுக்கான அரசாங்கமே செவி சாய்க்காத போது மக்களின் உழைப்பை உறிஞ்சும் நிறுவனமா செய்வி சாய்த்து விடப்போகிறது. 

பாபநாசம் பணிமனை வந்து சேர்ந்த போது மணி ஒன்றரை. பணிமனைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் யாருக்கும் தெரியாமல் பூனை போல் ஏறி அதிகாலை வரை தூங்கி, அதே பேருந்தில் தென்காசி வந்து வீட்டில் அர்ச்சனை வாங்கத் தொடங்கியிருந்த போது மணி ஆறாகியிருந்தது. 

13 comments:

 1. நல்ல அனுபவம் சீனு! நாங்களும் எங்கள் நண்பர்களும் வண்டி எடுத்து மாஞ்சோலை சென்ற நினைவு வந்தது. ரொம்ப கடினமான பாதை. எப்போது வண்டி தடம் புரண்டு விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். ரோடும் குறுகியது. ஏற்றம் வேறு. எற்கனவே ரோலர் கோஸ்டர் நீங்கள் சொல்லி இருப்பது போல! அதிலும் ஒரு இடத்தில் வண்டி ஏறுவதற்கு மிகவும் கஷ்டப்படுமே அதுவும் அது ஒரு வளைவு வேறு...செங்குத்தாக வண்டி ஏறுவது போலத் தோன்றும்...அதனாலே யே ஒரு சில வண்டிகள் தான் செல்ல முடியும் என்று சொல்லுவார்கள். எப்படியோ நாங்கள் சென்ற மெட்டடர் முக்கி முனகி ஏறியது பிழைத்தோம் அதுவரை மரண பயம் வந்ததென்னவோ உண்மை. எங்களுக்கும் நீங்கள் சொல்லி இருக்கும் விலங்குகளைத் தவிர வேறு எதுவும் கண்களில் சிக்கவில்லை. நாங்கள் அங்கு தங்கினோம் அந்த எஸ்டேட் டீ கெஸ்ட் ஹவுசில் அப்போது ஒரு உறவினர் வாங்கித் தந்த பெர்மிஷனால். பின்னர் ஒரு முறை பேருந்துப் பயணம்...தங்கவில்லை ....அருமையான இடம்...மணிமுத்தார் ஃபால்ஸில் குளியல்......திருநெல்வேலி திருநெல்வேலிதான் நம்மூருல்ல...எத்தனையோ ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் தன்னகத்தே கொண்டு...அல்வாவிற்கும், அருவாளுக்கும் மட்டும் பெயரெடுத்து அதைச் சொன்னால் மட்டுமே திருநெல்வேலி தெரிகின்றது என்பது போய் இந்தப் பொக்கிஷங்களை எல்லாம் உலகறிய வேண்டும் சீனு. நான் காட்டிற்குள் பல பயணங்களை மேற்கொண்டுள்ளேன் என்பதால்....---கீதா

  ReplyDelete
 2. பயங்கர த்ரில்லிங்கா இருக்கும் போல!!!!

  ReplyDelete
 3. செம சுவாரஸ்யம்...

  அரசு ஊழியர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது... உண்மையிலேயே மெடிக்கல் (+) லீவு தேவை...

  ReplyDelete
 4. இந்த மாதிரி அனுபவங்கள் பிற்காலத்தில் பேரன் பேத்திகளிடம் சுவாரசியமாகச் சொல்லலாம்

  ReplyDelete
 5. ம்ம்ம்ம் பயங்கரமாத்தான் இருக்கு.

  ReplyDelete
 6. அண்ணே ! இலக்கிய வாசம் பயங்கரமா பிச்சிப்பேத்தெடுக்குது . இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் சீனு இல்லாத அக்கால தமிழ் இலக்கியத்தை சிறிதளவினும் கற்பனை செய்யமுடியாது என்பதை தங்களின் பதிவு விளக்குகிறது . அப்றம் . போட்டோகிராபரா வேற ஆகிட்டிங்க . ஐயகோ ! இப்படி ஒரு பன்முகத்திறம்படைத்த ஒரு கலை , இலக்கிய , புகைப்பட , புரட்சிவாதியுடன் பழகும்போது மிரட்சியாகத்தான் இருக்கிறது ..

  கரடி கதை எனக்கும் நடந்துருக்குது . ஒருமுறை சேர்வராயன் மலைப்பகுதியில் பலா பறிக்கப்போகும் வழியில் கரடி வழிமறித்துவிட்டது . அப்றம் தந்திரமாக அமைதியாக காப்பிச்செடியினுள் ஒளிந்து , நானும் என் மாமன் மகனும் உயிர்தப்பினோம் .

  ReplyDelete
 7. நான் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரியும் போது என்னுடைய மேலதிகாரியாக வெளிநாட்டுப் பெண்ணொருத்தர் இருந்தார். நாங்கள் செய்யும் எந்தவொரு விடயமாக அதில் உள்ள சின்னச் சின்ன விடயங்களைச் சுட்டிக்காட்டி பாராட்டப்பட வேண்டியதாகவிருந்தால் பாராட்டியும் மேம்படுத்த வேண்டிய விடயமாக இருந்தால் எவ்வாறு மேம்படுத்த வேண்டுமென்பதையும் அழகாக சொல்லித்தருவார்.

  பதிவினை வாசிக்கும் போது அவரின் நினைவுகள் வந்துபோயின
  அவரின் பின் என் தனிப்பட்ட வாழ்விலோ இணைய வாழ்விலோ சின்னச் சின்ன விடயங்களை மிக அழகாக அவதானிக்கக் கூடியவராக சீனுவைக் காண்கிறேன் எதைச் சொல்வது பல விடயங்களை மிகவும் நுண்ணிப்பாக அனுபவிச்சு அழகாக சிரமமின்றி புரிந்துகொள்ளும் படியாக எழுதியிருக்கிறீர்கள் தல வாழ்த்துக்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 8. உண்மையிலே திகில் அனுபவமா இருந்தாலும் பேச்சுலர் லைப்ல இதெல்லாம் ரொம்ப என் ஜாயபிளா இருக்கும்! நன்றி!

  ReplyDelete
 9. sir, i have used your photos in my blog..i have given your link in the photo as the credit must go to you...

  http://adummyblogofme.blogspot.in/2013/10/list-of-names-of-waterfalls-in-tamilnadu.html

  ReplyDelete
 10. http://adummyblogofme.blogspot.in/2013/10/list-of-names-of-waterfalls-in-tamilnadu.html

  ReplyDelete
 11. த்ரில்லிங்கான அனுபவம்......

  மக்கள் படும் அவஸ்தைகள் அரசாங்கத்திற்கு புரிவதே இல்லை - புரிந்தாலும் ஒன்றும் செய்வதும் இல்லை......

  ReplyDelete
 12. நான் நினைக்கவே இல்லை சீனு , ரொம்ப தெளிவா அருமையான தமிழ் நடை நாவல் மாதிரி ,,, நீங்கள் எழுத்தாளரோ , மன்னிக்கவும் இப்பொழுதான் வாசிக்கிறேன் தங்களின் எழுத்தை .. அற்புதம் .

  ReplyDelete