21 Feb 2015

நள்ளிரவு நாதாரிகள்

இன்னும் மூன்று நாட்கள் இந்த நட்டநடு நள்ளிரவில் பயணித்தேன் என்றால் நிச்சயமாக நாய்களை வெறுத்துவிடுவேன். எனக்கும் அவற்றிற்கும் எந்த சண்டையுமே இல்லை. சாதாரணமாக பத்தடி தூரத்தில் குறுக்கே வரும் நாயைப் பார்த்தேன் என்றால் இருபதடி தூரத்தில் பிரேக் பிடித்து அவற்றிற்கு வழி விடும் தாராள மனபான்மையாளன். எள்ளளவும் துரோகம் நினைக்காத பண்பாளன். சமயங்களில் சாலையில் அடிபட்டு நைந்து போய் கிடக்கும் நாய்களைப் பார்த்தால் உள்ளுக்குள் அறச்சீற்றம் கொண்டு கதறி அழுபவன். அப்படிப்பட்ட என்னை, எனது நல்ல உள்ளத்தை இந்த பாழாய்ப் போன நாய்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றன. எங்கோ விரிசல் ஏற்பட்டு, இடைவெளி பெருத்து இப்போது எங்களுக்கு இடையில் யுத்தம் நடந்து கொண்டுள்ளது. பகலில் சாதுவாக படுத்திருக்கும் நாய்கள் இரவானால் கொட்டக் கொட்ட முழித்திருந்து என் - தொடர்ந்து ரைமிங்காக எழுத ஆசை தான், ஆனால் எனக்கான பெண் வாசகர்கள் அதிகம், அவர்கள் தவறாக நினைக்கக் கூடும் என என் ஆண்வாசகர்கள் நினைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அந்த ரைமிங்கை தவிர்த்து -  கடிக்கக் கூடாத இடத்தில் கடித்துவிட்டால் என்ன செய்வது. இப்போது தான் தூரத்தில் ஒரு ஒளி தெரிகிறது. 

சரி விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். மூன்று நாளைக்கு முன் புங்கராஜை அவன் வீட்டில் விட்டுவிட்டு ஏரிக்கரை வழியாக வரும்போதுதான் முதல் அசம்பாவிதம் நடந்தது. 

நல்ல செவப்பான செக்கக்செவேல் நாய். புங்கராஜ் வீட்டை நோக்கி செல்லும் போதே துரத்தியது. கொஞ்சம் மேனேஜ் செய்து, இரண்டு கால்களையும் ஹேன்டில்பரில் தூக்கிவைத்து, நிலைகுலைந்து, பின் சமாளித்து ஒருவழியாக அவனை வீட்டில் இறக்கி விட்டேன். 

'ஆமா நாய் தொரத்தும் போது கூட போன நோண்டிட்டே இருந்தியே பயமா இல்லையாடா' என்றேன். 'அது உங்களத்தான பாஸு துரத்திச்சு, எனகென்ன பயம்' என்றான். முறைத்தேன். 'ஆமா அது கடிக்குமோ பாஸு' என்றான். 'அதுக்குள்ள ஏதொ அமானுஷ்ய சக்தி புகுந்து இருக்கு பாஸு, உங்க ஹெல்மெட்ட கழட்டி வச்சுட்டு போங்க, தொரத்தாது' என்று ஐடியா வேறு கொடுத்தான்.

நானும் நல்ல புள்ளையாட்டம் ஹெல்மட்டை டேங்கில் வைத்துவிட்டு பூனை போல என்ஜினை உறுமவிடாமல் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். ஏரிக்கரையின் ஓரமாக ஆங்காங்கு பலநாய்கள் உருண்டு கொண்டிருந்தன. 

ஏரிக்கரையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. நள்ளிரவில் அதுவே ஒரு அமானுஷ்ய பூமி போலத்தான் இருக்கும். ஒரு பக்கம் நல்ல உயர்ந்து வளர்ந்த ஏரிகரை. அதன் மீது வளர்ந்து நிற்கும் பழங்காலத்து மரங்கள். அதற்கும் பின்னால் தற்போது ஜரூராக மணல் அள்ளும் வேலை நடந்து வரும் ஏரி. ஒருமுறையை ஏரிக்கரை மீது ஏறிப் பார்த்தேன். இன்னும் கொஞ்சநாளில் லாவாவை அள்ளி லாரி ஏற்றுவார்கள் போலும். தீயா வேலை செய்கிறார்கள். சரி அமானுஷ்யம் மிஸ் ஆகிறது. மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். எனக்கேன் தேவையில்லாத அறச்சீற்றம். 

நள்ளிரவில் ஏரிக்கரை பகுதியே அமானுஷ்யம் நிறைந்து காணப்படும். அதன் எதிர்ப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமான வீடுகள். இனிமேல் சாலை போட்டால் புதிய பள்ளங்கள் வரலாம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் பழைய பள்ளங்கள். காற்றில் மெல்ல மரங்கள் அசைய. லேசாக பனி விழுந்து கொண்டிருந்தது. தூரத்தில் அந்த நாய். நல்ல சிவப்பான கொழுத்த நாய்.

நடு முதுகுத் தண்டில் லேசான குறுகுறுப்பு. கண்களில் வீரத்தை வரவைத்துக் கொண்டு. கைகளை தயார்ப்படுத்தினேன். பேஸ்மென்ட் நடக்கபோகும் யுத்தத்திற்கு தயாராய் இருந்தது. இந்நேரம் அந்த நாதாரி நாயும் தயார் நிலைக்கு வந்திருந்தது. 

'போயிருடா போயிருடா போயிருடா' மனம் துடிக்க. அந்த நாயைக் கிட்ட நெருங்க ஒரு ஆயிரம் ஹெட்ஸ் சப்தத்தில் லொள் என்றது. நல்லவேளை ஏற்கனவே தயார் நிலையில் இருந்ததால் கையை வலுகொண்டு முறுக்கினேன். மங்கள்யான் வேகத்திற்கு கொஞ்சம்தான் வேகம் அதிகம். பள்ளமான தரை என்பதால் கடலில் மிதப்பது போல இருந்தது. இப்போது அந்த நாய் கண்ணாடியில் இருந்து மறைந்து, கணுக்காலுக்கு மிக அருகில் ஓடிவந்து கொண்டிருந்தது. மெல்ல குனிந்து பார்த்தேன். ஏதொ ஒரு ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ அதற்கு வஞ்சம் செய்திருக்கிறேன். அந்தக் கொலைவெறி அதன் கண்களில் தெரிந்தது. 'தக்காளி இப்ப வா' என்றபடி இன்னும் முறுக்கினேன். 

எவனாவது எதிரில் வந்திருந்தால் இனி அவன் எவன் எதிரிலும் சென்றிருக்க முடியாது. அப்படி ஒரு வேகம். இனி அது என்னைத் தொட முடியாது என்ற நிலை வந்ததும் கொஞ்சம் ஆசுவாசபடுத்தி திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் என்னை வெறித்துப் பார்க்க, அதன் கண்களில் ஒளி வந்து சென்றது. அந்தக் காட்சியே இன்னும் மனதில் இருந்து மறையவில்லை. அதற்கு முன் அடுத்தநாளும் வந்துவிட்டது.

அடுத்தநாள் பகலில் புங்கா வீட்டிற்கு செல்லும் போது அந்த சாலையைப் பார்த்தேன். முந்தைய தினம் நாய் துரத்த ஆரம்பித்த இடத்தில் சிவப்பாக ஏதோ ஒன்று சுருண்டு கிடக்க மனம் பதபதக்க மெல்ல அதனை நெருங்கினால் ஊரின் ஒதுக்குபுற ஏரியா என்பதால் எவனோ அவன் வீட்டு நைந்து போன தபேலா தலையணை தூக்கி எறிந்திருக்கிறான். கருமம் அது கலரும் சிவப்பாகவா இருந்துத் தொலைய வேண்டும். 

அன்றைய தின நள்ளிரவு மீண்டும் புங்காவை இறக்கி விடச் செல்கையில் அதே நாய் தென்படுகிறதா என பார்த்தோம். புங்கா அதை அடிப்பதற்காக ஆயுதம் எல்லாம் தயார் செய்திருந்தான். ஆங்காங்கு சில நாய்கள் சுருண்டு கிடக்க, இரவிலும் அந்த தலையணை என்னை பயமுறுத்தியது என்ற சோகத்தை யாரிடம் சொல்லி அழ. 

வேறொரு சிவப்பு நாய் தன் குடும்பம் குட்டிகளோடு உறவாடிக் கொண்டிருந்தது. எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அவன் வீடு வந்தாயிற்று, இப்போது திரும்பிப் போக வேண்டுமே. மனதில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு மெல்ல சென்றபோது தான் அந்த குள்ளநரி வெளிப்பட்டது. தக்காளி மீண்டும் ஓட்டம். போன ஜென்மத்தில் ஒலிம்பிக்கில் என் எதிரியாய் இருந்து தோற்றிருக்கும் என்று நினைக்கிறன். பந்தம் இன்னும் தொடர்கிறது. நானும் நன்றாக பழகி இருந்ததால், அதன் கண்களில் எளிதாக மண்ணைத் தூவி இம்முறையும் வென்றுவிட்டேன்.

கதை இப்படி என்றால், இன்றைக்கு சரவணாவை அவன் வீட்டில் விட்டுவிட்டு வரும்போது 'இந்த நாயும் துரத்துமா' என்று நினைத்த ஒரு நாய் கூட துரத்த ஆரம்பித்தது. 'எல்லாம் உன் நேரம்டா சீனு' என்றபடி என்னுடைய கிரையோஜீனிக் என்ஜினை    முறுக்கினேன். அது ரோடா, ஸ்பீட் பிரேக் காடா என்று தெரியாத அளவுக்கு வேகத் தடுப்பான்கள் நிறைந்த சாலையில் வண்டி மிதந்தது. வாயில்லா என் வண்டி நிச்சயம் என் மீது சாபம்விட்டிருக்கும். மெல்ல என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே வண்டியை நிறுத்திய போது தூரத்தில் அந்த நாய் ஒரு புள்ளியாகி இருளில் மறைந்திருந்தது. 

'என்னடா சீனு வரிசையா நாய் துரத்துதே ஒரு வேல உன் மேல ஏதும் அமானுஷ்யம் இறங்கிருச்சோ' என்றபடியே பெரும்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி நொந்து கொண்டிருந்தேன். பெரும்பாக்கமாவது பரவாயில்லை நான்கடிக்கு ஒருநாய். இங்கோ இரண்டடிக்கு ஒன்று நின்று முறைத்துக் கொண்டிருந்தது. இவற்றைக் கடந்துவிட்டால் போதும் பத்திரமாக வீடு போய் சென்றது விடலாம். நாளையில் இருந்து பாதுகாப்பிற்கு ஒரு இரும்பு கம்பியை எடுத்துவர வேண்டும்.  

நாய்த் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை யோசித்துக்கொண்டே ரெங்கநாதபுரம் முக்கு திரும்பியது தான் தாமதம், எங்கோ தலையை சொருகியிருந்த நாய் என்னைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து ஓடி வந்தது. 

ஏற்கனவே நான் செம டயர்ட். பேசாமல் ஆண்டவரே என ஒப்புக் கொடுத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டே வண்டியை முறுக்கிய போது வேறொரு ஜந்து குறுக்கே வந்தது. அதை ஏற்றிவிடக் கூடாது என்ற பரிதவிப்பில் சடன் பிரேக் போட்டால் அதன் கண்கள் இரண்டு வைரங்கள் போல் ஜொலித்தன. அதுவும் என்னையே முறைக்கத் தொடங்கியது. நாயா பூனையா கரும்புலியா இல்லை பேயா என்று தெரியாத அளவிற்கு வெல்வெட் கருப்பு. பூனைதான். 'இவ்ளோ நேரம் நாய், இப்போ நீயா' என்று சோகத்துடன் அதை வெறிக்க, இங்குதான் கதையில் ட்விஸ்ட். இதுவரைக்கும் நாய்தானே பூனையைத் துரத்தி கேள்விபட்டிருப்பீர்கள். இங்கே உல்டாவாக அந்த கறுப்புப் பூனை நாயைத் துரத்தத் தொடங்கியிருந்தது. என்னிடம் தன் வீரத்தை காண்பித்த அந்த நாய் இப்போது தெறித்து ஓடியது. 

பூனையின் கண்களில் இன்னும் அந்த ஜொலிப்பு குறைந்திருக்கவில்லை. வண்டியை கிளப்பும் முன் நன்றியுடன் அதைத் திரும்பிப் பார்த்தேன். எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் என்னைக் கடந்து குறுக்கே ஓடியது. முடிவு செய்துவிட்டேன் எனக்கான ஆயுதம் இரும்புக் கம்பி இல்லை. அந்தக் கறுப்புப் பூனை தான். முதலில் அதை ஆட்டையைப் போடவேண்டும். ஆனால் அதற்கு முன் எனது அலுவலகத்தில் அந்தக் கருப்புப் பூனைக்கு ஓர் ஐடி கார்ட் தருவார்களா என கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 

படங்கள் - நன்றி இணையம்

16 Feb 2015

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்


இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்.


14 Feb 2015

கோவை ஆவி இயக்கும் காதல் போயின் காதல் - குறும்படம் டீசர்

இரண்டு நாட்களுக்கு முன்னரே காதல் போயின் காதல் படத்தின் டீசரை அனுப்பிவிட்டார் ஆவி​.  ஆர்வத்துடன் ஓபன் செய்தால் எந்த ஒரு காட்சிக்காக என்னை அனைவரும் கலாய்த்தார்களோ, எந்த ஒரு காட்சியில் 'ஐ வான்ட் மோர் எமோசன் என்றார்களோ அதையே டீசரில் வைத்திருந்தார். 'யோவ் ஏன்யா இப்படி செஞ்சீரு' என்று சட்டையைப் பிடிக்கலாம் என்றால் நான் எதை நினைத்திருந்தேனோ அதையே பதிலாக கூறினார் ஆவி. (என்ன பதில் என்பது ஆப்டர் தி மூவி)

'சரி டீசர் எப்படி இருக்கு' என்றார். 

அவரிடம் வழக்கமாக நான் கூறும் பதில் 'என்னை தவிர எல்லாமே நல்லா இருக்கு பாஸ்'

'யோவ் விளையாடாத, சீரியஸா  கேக்குறேன், எப்படி இருக்கு'

'பாஸு நானும் சீரியசாத்தான் சொல்றேன்' என்று சொன்னதையே மீண்டும் சொல்லவும் மனுஷன் கடுப்பாகிவிட்டார். 

'இல்ல பாஸ். எனக்கு ஏற்கனவே கதை தெரியும், அதுனால கருத்து சொல்றது ரொம்ப கஷ்டம்' என்றேன்.

'இல்ல சொல்லுங்க' என்றார் விடாப்பிடியாக. அப்போதைக்கு 'நன்றாக இருக்கு' என்று கூறினாலும். கதை தெரியாத ஒரு பார்வையாளனாக என்னால் அந்த டீசரைப் பார்க்கவே முடியவில்லை. அந்த டீசர் ஒரு படத்தின் காட்சிகளாக, எதற்கு அடுத்து என்ன வரும் என்பதாகத்தான் என் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது. 

ஆனால், இந்த ஆனால் தான் மிக முக்கியம். டீசர் வெளியாகி அது குறித்து நீங்கள் கூறும் கருத்துக்களை பார்க்கும் போதுதான் என்னாலும் உங்கள் பார்வையில் பார்க்க முடிகிறது. 

டீசரின் வாயிலாக நீங்கள் ஊகித்திருக்கும் கதையின் படி, நாயகி நாயகனை(!) காபி குடிக்க அழைக்கிறார். வேகமாக வரும் ஒரு காரின் சக்கரம் தேயும் சப்தம் கேட்கிறது. நாயகி 'கமல்' என்று கத்துகிறார். coming soon. எழுத்துக்கள் வருகின்றன. 

இதை மட்டும் வைத்து கதைக்குள் ஒரு கதை பின்னினால் கதை வேறொரு பார்வைக்கு செல்கிறது. நிச்சயமாக நான் இப்படி யோசிக்கவில்லை. கதைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கதையின் முக்கியமான எந்த ஒரு விசயமும் இதில் காண்பிக்கப்படவில்லை. காண்பித்திருந்தால் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருந்திருக்குமா தெரியவில்லை. 

ஆனால் ஆவியும் எடிட்டர் முல்லை வேந்தனும் இந்த டீசரின் மூலம் பார்வையாளர்களுக்கு எதை காட்சிகளாக காண்பித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்களோ அதை மிகச் சரியாக மிகத் தேவையான அளவில் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹேட்ஸ் ஆப் டூ யு போத். 

அப்புறம் என்னதான் என்னை சரமாரியாக ஓட்டித் தள்ளினாலும் என்னை எங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்களே எனதாருயிர்த் தோழர்களே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி... 
டீசரின் மற்றொரு சிறப்பான அம்சம் இதன் ஆரம்பத்தில் வரும் குரல். முதல்முறை கேட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அப்படி ஒரு மயக்கும் குரல். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் - நண்பர், எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் கார்த்திக் புகழேந்தி. உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பா...

காதல் போயின் காதல் குறும்படம் பெப்ரவரி 23 ஆம் தியதி வெளிவர இருக்கிறது. 

உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்பார்த்து
காதல் போயின் காதல் குறும்படக் குழு

பின்குறிப்பு : குறும்படம் சார்ந்த விரிவான பதிவுகளில் இனிவரும் பொழுதுகளில் :-) 

10 Feb 2015

டயானா கிழவி

பள்ளிக்கூடம் முடிந்து அரக்கபரக்க ஓடியாந்தால் வாசலில் ஏகப்பட்ட சைக்கிள்கள் நிற்கும், சேமியா ஐஸ், பாக்கு ஐஸ், இழந்த பழம் ஐஸ் வைத்துக் கொண்டு நிற்கும் அண்ணா, அவருக்குப் போட்டியாய் நிற்கும் இன்னொரு தாத்தா, ஊறவைத்த நெல்லிக்கா, மாங்கா, தேன் மிட்டாய் வைத்தபடி அமர்ந்திருக்கும் டயனா கிழவி. டயனா கிழவி. அவருக்கு அந்த பெயரை வைத்தது சாதாத் இல்லை முத்து. நல்ல மூப்பு. என்புதோல் போர்த்திய உடம்பு அவருக்கு. பார்க்கவே பரிதாபமாக உட்கார்ந்திருப்பார். அவ்வளவாக பார்வை கிடையாது. நாம் கொடுத்தது ஐந்து பைசாவா பத்து பைசாவா என்பதை கண்டுபிடிக்கும் முன் நெல்லிக்கா மாங்காயை கை நிறைய அள்ளிவிட்டு சிட்டாய் பறந்திருப்பர்கள் எம் பள்ளிக்கூட சிறுவர்கள். 


மாலை வெயில் அவருக்கு அதிகமாய் கண் கூசும். எப்போதும் ஒரு கையை நெத்தியின் மேல் வைத்து கண்களை சுருக்கியபடி யாவாரம் செய்து கொண்டிருப்பார். இந்நேரம் அவர் அமரர் ஆகி ஆண்டுகள் ஓடியிருக்கலாம். இப்போது நினைத்துப் பார்த்தால் எல்லாமே நேற்று பார்த்தது போல் இருக்கிறது. பள்ளிகூட சிறுவனாய், தோளில் மாட்டிய கூடையுடன் அவருக்கு அருகில் சென்று 'டயானா கிழவி' என்று கத்தி விட்டு  ஓடியது அனைத்தும் நிழலாடுகிறது. 'ஏல ஏல யாவாரம் பாக்க வுடுங்கலே' அவசரமாய் கத்துவார். குரல் நடுங்கிப் போன, வார்த்தை வார்த்தையாய் பேசும் குரல். அவருக்கு ஏன் அந்தப் பெயர் வைத்தார்கள், அவரை ஏன் அவ்வளவு தொந்தரவு செய்தோம் எதுவுமே தெரியவில்லை. ஆனால் அவர் எங்களுக்கு ஒரு பதுமை. வீட்டிலும் அவரை அப்படித்தான் நடத்தியிருக்க வேண்டும் அதான் கூடையை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூட வாயிலில் அமர்ந்துவிட்டார். 

நிச்சயமாகச் சொல்லலாம் அந்தத் தொண்டுக் கிழவியின்  நியாபகத்தில் நாங்கள் இருந்தோம். அவர் அருகில் சென்றாலே தன்னுடைய கைத்தடியை தூக்கிவிடுவார். 'நெல்லிக்கா வாங்கனுமா, வேணாமா' என்றால் 'வாங்கிட்டு பேசாமா போவனும்' என்பார். சிலசயங்களில் ஐஸ் விற்கும் அண்ணா, வெள்ளரி விற்கும் மீசக்காரர் கூட எங்களை திட்டியிருக்கிறார்கள். 'ஏமுல அது தொண்டதண்ணிய வைத்த வைக்கியே, ஓடுங்கலே' என்றபடி துரத்தி விடுவார்கள். 'எங்க டயானா கிழவினே' என்போம். சிரித்துவிட்டு திரும்பிக் கொள்வார்கள். எட்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் அது. 

பள்ளிக்கூடம் நான்கரைக்குத்தான் முடியும் என்றாலும் நாலு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். சமயங்களில் மூன்று மணிக்கே கூட வந்துவிடுவார். ஒரு நூல் சேலையை தன்னுடைய எலும்பைச் சுற்றி சுற்றியிருப்பார். ஒரு கூடை, ஒரு சட்டி, தரையில் விரிக்க ஒரு சிமின்ட் சாக்கு. அவ்வளவுதான் அவருடைய உடமைகள். காசை தன சேலையின் தலைப்பில் முடிந்து கொள்வார். அவ்வளவு சில்லறைகள் தான். நோட்டு கூட ஒரு ரூபாய் இல்லை ரெண்டு ரூபாய்த் தாள்களாகத் தான் இருக்கும்.

எங்களிடமும் எல்லாநாளும் காசு இருக்காது. ஒருவேளை  ஐந்து பைசா பத்து பைசா இருந்தால் கூட நேரே கிழவியிடம் தான் ஓடுவோம். எங்களைப் பார்த்தால் கை நிறைய நெல்லிக்காய் தருவார். கூடவே கைத்தடியையும் தூக்குவார். மதியமே நெல்லிக்காயை உப்பு மிளகாய்பொடி கலந்த நீரில் ஊற வைத்து ஒரு சட்டி நிறைய எடுத்து வருவார். வாயில் போட்டவுடன் கரைந்து விடும். அதிலிருந்து வரும் சாரை வாயிலேயே வைத்திருக்கலாம். சமயங்களில் நெல்லிக்காயின் கொட்டை கூட சுவையாய் இருக்கும். 

பெரும்பாலும் கடைசி பீரியட் கேம்ஸ் பீரியட்டாகத்தான் இருக்கும். அந்த நாட்களில் எல்லாம் நேர கிழவியிடம் சென்று விடுவோம். ஒரு ரூபாய்க்கு நெல்லிக்காய் பர்சேஸ் செய்தால் இனாமாக ஒரு மாங்காத்துண்டு கேட்போம். சில சமயங்களில் கைத்தடியை தூக்குவார். சமயங்களில் ஒன்றுக்கு இரண்டு துண்டுகள் கூடத் தருவார். அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது.  நண்பர்கள் யாருக்கேனும் காத்திருக்க வேண்டும் என்றால் எங்களுடைய மீட்டிங் பாயின்ட் டயனா கிழவி தான். மெளனமாக அவர் அருகில் அமர்ந்திருப்போம் எவ்வளவு அங்கு உட்கார்ந்திருந்தாலும் எதுவும் பேசமாட்டார். கண்டுகொள்ளவும் மாட்டார்.

என் வாழக்கையில் நான் பார்த்த முதல் தொண்டுக் கிழம் அவர்தான் என்றாலும் அதற்கடுத்து அவருக்கு வயது அதிகரிக்கவே இல்லை. அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கும் அப்படியேத்தான் இருந்தார். முகத்தில் எப்போதுமே ஒருவித சோகம் நிறைந்திருக்கும்.  சிதம்பரேஸ்வரர் கோவிலின் ஆர்ச் நிழல் அந்த சோகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் காண்பிக்கும். எதையோ யோசித்துக் கொண்டே இருப்பார். அவர் சிரித்துப் பேசி நாங்கள் பார்த்தது இல்லை.யாருமே வரையாமல் விட்ட ஓவியம் அவர். 

கீழப்புலியூர் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில்தான் அவர் வீடு. விடுமுறை நாட்களில் தெருவில் எங்கேனும் அவரைப் பார்க்க நேர்ந்தால் 'என்ன டயனா இன்னிக்கு லீவா' என்று கத்திவிட்டு ஓடுவோம். ஒருமுறை தற்செயலாய் என் அம்மா பள்ளிக்கு வந்து 'ம்மா டயனா கிழவிட்ட நெல்லிக்காய் வாங்கிகொடுங்க' என்று கேட்டதுதான் தாமதம். முதுகில் மொத்து மொத்து என்று அடி விழுந்தது. அதுவரையிலும் டயனா கிழவியாக இருந்தவர், அதன்பின் எனக்கு மட்டும் டயனா பாட்டியாகிவிட்டார். பெரியவங்களுக்கு பட்டப்பேர் வைக்க கூடாது, கிழவி சொல்லகூடாது என்று தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அடி. டயனா மீது கோவம் கோவமாக வந்தது. எனக்கு விழுந்த அடிக்கு அவர் தான் காரணம் என்று முழுதாக நம்பினேன்.

கொஞ்சம் வளர்ந்து ஊர் சுற்றத் தொடங்கியதும் எங்களுக்கான நெல்லிக்காய் மரங்களை நாங்களே கண்டுகொண்டோம். மதியம் சாப்பாட்டு பீரியடில் நெல்லிக்காய் பறித்து, சத்துணவுக் கூடத்தில் உப்பு வாங்கி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சம்படத்தில் போட்டு ஊறவைத்தால் மதியம் நான்கு பீரியடுக்கும் நெல்லிக்காய் வாயில் அறைந்து கொண்டிருக்கும். வகுப்பறையே நெல்லிக்காய் மணத்தில் நிறைந்து கிடக்கும்.   

ஒருமுறை நன்றாக சளி பிடித்து,  அம்மா அதற்கான காரணம் கண்டுபிடித்த போதுதான் 'அவங்கூடத்தனால உன்னையும் ஸ்கூலுக்கு அனுப்புறேன், நீ மட்டும் விதவிதமா சேட்ட செய்வியோ' என்று அடி விழுந்தது. எப்போதுமே ஒரேவிதமான சேட்டைகளுக்கு அம்மாவிடம் அடிவாங்கியதே கிடையாது. ஒவ்வொன்றும் ஒருவிதம். பின் வீட்டிலேயே நெல்லிக்காய் மரம் வளர்த்தேன் என்பதெல்லாம் வேறு கதை.

இந்நேரம் டயனா அருகில் ஒரு குண்டு கிழவி கடை விரிந்திருந்தார். வில்லி. எங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. டயானாவிடம் நெல்லிக்காய் வாங்காமல் வில்லியிடம் செல்பவர்களை முறைப்போம். நெல்லிக்காய் வாங்கினால் டயானாவிடம் என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்தோம். மீசை முளைக்கத் தொடங்கி, டவுசரில் இருந்து பேண்டுக்கு மாறி, பின் பள்ளிக்கூடம் மாறி கல்லூரி சென்று என்று வாழ்க்கை எங்கெங்கோ இழுத்துச் செல்ல டயானாவை மறந்தேவிட்டோம். 

டயனா எப்போது தன் கடையைக் காலி செய்தார் என்பது நியாபத்தில் இல்லை. ஆனால் எட்டாம் வகுப்பிற்கு உள்ளாகவே அந்த இடத்தை காலி செய்துவிட்டார் என்று நினைகிறேன். எப்போது இறந்தார், எப்படி இறந்தார். அவருடைய இறப்பு எப்படிபட்டது. கடைசி நாட்கள் எப்படி இருந்தன எதுவுமே தெரியாது. அந்த வழியாகக் கடக்கும் போதெல்லாம் டயானாவை பற்றி எங்களுக்குள் பேசிக்கொள்வோம். முத்து கொண்ட இருவரையுமே டயானாவுக்கு மிக நன்றாகத் தெரியும். கொண்ட ஒருமுறை டயானவிடம் அடி கூட வாங்கி இருக்கிறான். எனக்குத்தெரிந்து டயானாவிடம் அடிவாங்கிய ஒரே ஆளும் கொண்ட தான்.


நேற்றைக்கு பார்க்-டவுன் வெளியே ஒரு அம்மாவைப் பார்த்தேன். தட்டு நிறைய ஊறவைத்த நெல்லியைப் பரப்பி விற்றுக்கொண்டிருந்தார். மிளகாய்த் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தது ஒவ்வொரு நெல்லியும். நெல்லி விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் இரண்டு மாங்காய்த் துண்டுகள் வாங்கிய குறுநில மன்னன் ஒருவன் 'ரெண்டு நெல்லி கொடேன்' என்று இனாமாக வாங்கி வாயில் போட்டுக் கொண்டே ரயிலைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தார். நெல்லிக்காய் விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவின் முகம் இப்போது நியாபகத்தில் இல்லை. ஆனால் அவர் விற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு நெல்லியிலும் எங்கள் டயானாக் கிழவியின் வரையபடாத அந்த ஓவியம் நிழலாடிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நிஜம். 

6 Feb 2015

பதிவுலக ஆவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல்...

அன்புள்ள ஆவி அவர்களுக்கு,

வணக்கம். நலமா? எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு சந்தானம் போல் 'நான் நல்லா இருக்கேன்' என்று கூறுவீர்கள். அதனால் நீங்கள் நலம் என்று நம்புவது போல் நம்புகிறேன். இன்றைக்கு இந்த நொடியில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு இல்லாவிட்டால் வேறு என்றைக்கு என ஒரு அபத்தமான கேள்வி எழுந்ததால் எனக்கென இருந்த அந்த கொஞ்சம் வெட்டி-வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தங்களை குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்.       


நன்றாக நியாபகம் இருக்கிறது நமது முதல் சந்திப்பு. புலவர் அய்யா வீட்டில், அவரிடம் பாடம் படிக்க வந்த மாணவனைப் போல் அப்பாவியாய் அமர்ந்திருந்தீர்கள். 'ஹலோ நான் ஆவி' என்று வார்த்தை சிக்கனத்தோடு முடித்துக் கொண்டீர்கள். முதல் சந்திப்பில் அதற்கு மேல் என்ன பேசிவிட முடியும். உங்கள் ஊரில் கோவை ஞானி என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நீங்களோ என்று நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் உங்களுடைய வயது ஐம்பதைத் தாண்டியிருக்க வேண்டும் என்றொரு அசாத்திய நம்பிக்கை எனக்கிருந்தது. நீங்களோ பந்தாவாக ஒரு ஷர்ட், அதில் சொருகப்பட்ட கூலர்ஸ் சகிதம் கல்லூரி மாணவனைப் போல் அமர்ந்திருந்தீர்கள். பேச்சுலர் லுக்.  

அதற்கு அடுத்தநாளே நாம் சைதையில் சந்தித்தோம். அது ஒரு அதிகாலை சந்திப்பு. நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன். சந்திப்பு முடிந்து கிளம்பும் நேரம் 'நான் வேளச்சேரி வரைக்கும் போகணும் என்ன டிராப் பண்ணிற முடியுமா' என நீங்கள் கேட்டிராவிட்டால் இதோ இந்த கடித்தைதையே டிராப்ட் செய்திருக்க மாட்டேன். 

அன்றைய தினம் நீங்களும் நானும் ஸ்ட்ரேஞ்சரஸ். வழிப்போக்கி. பேசிக்கொள்ள வார்த்தைகள் இல்லை. பேசினோம். பதிவுலகம். பதிவர்கள். எழுத்துக்கள் என்று நம்மிருவருக்குமான அறிமுகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். உங்களை நேரில் சந்திக்கும் முன் முதலில் சந்தித்தது வாத்தியாரின் பதிவுகளில் என்றேன். அதை ஆமோதிப்பதைத் தவிர உங்களுக்கும் வேறு வழியில்லை. 

நீங்கள் அமெரிக்கன் ரிட்டர்ன் எனக் கூறியபோது ஆச்சரியமாய் இருந்தது. நம்முடைய முதல் கோப்பை காபி வேளச்சேரி அடையார் ஆனந்த பவனில். குடித்துவிட்டுக் கிளம்பும் போது என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டீர்கள், இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் 'சீனு உங்க லவ்வர் பேரு என்ன?'. இன்றில் இருந்து சரியாக ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிந்த நாட்களில் இருந்து அதுவும் ஒருநாளாகத்தான் கடந்து கொண்டுள்ளது. சரி யாருக்கும் வேண்டாம். என்னுடைய முதல் காதலர் தினத்தைக் கொண்டாடும் போது கூறிவிடுகிறேன் என்னுடைய காதலியின் பெயர் என்ன என்பதை.  

பதிவுலகம் மீதிருத்த உங்களுடைய ஈர்ப்பு அசாத்தியமானது. சென்னையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பிற்காக நீங்களே எழுதி மெட்டமைத்து பாடிய பாடல் அன்றைய தினத்தில் ஒரு கலக்கு கலக்கியது என்பது எல்லாருக்கும் தெரிந்த சேதி. சிறுகதைகள், தொடர்கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவக் கட்டுரைகள் என்று நீங்கள் எழுதாத கட்டுரைகள் இல்லை. ஒரு கட்டத்தில் சினிமா விமர்சனங்களில் தேங்கி இப்போது எதுவுமே எழுதுவதில்லை. நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்ளவும்.   

பயணம் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் ஊர் சுற்றக் கிளம்பி விடுவீர்கள். இப்போது கூட பயணத்தில் தான் இருக்கிறீகள். நானும் பயணங்களின் காதலன். நான் நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் பயணக் கட்டுரை எழுதி வருகிறேன் என்றால் நீங்களோ பயணம் என்ற தலைப்பிலேயே உங்கள் வலைப்பூவை எழுதி வருகிறீர்கள்.

ஆவிப்பா - உங்களுடைய முதல் புத்தகம். நல்லதொரு அனுபவத்தைக் கற்றுத்தந்த புத்தகம். முதல்முறையாக ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதினேன் என்றால் அதுவும் உங்களுடைய புத்தகத்திற்குத் தான். சீனு என்றால் யார் என்றே தெரியாத புத்தக உலகத்தில், உங்களுக்கு முதல் விசிடிங் கார்ட் தேவைப்படும் சந்தர்ப்பத்தில், வேறு யாரையோ எழுத வைத்திருக்கக் கூடிய இடத்தில் என்னை எழுதும்படி கூறினீர்கள். எந்தவொரு விவாதத்திலும் நீங்கள் கூறியதை முதல்முறை ஏற்றுகொண்டதே இல்லை. எவ்வளவோ மறுத்தேன். பின் எழுதிவிட்டேன். 'எழுத்தாளர் சீனு' என்ற அங்கீகாரத்தை வேறு கொடுத்தீர்கள்.  

இன்றைக்கும் அந்த இரவு நன்றாக நியாபம் இருக்கிறது நாம் எல்லாரும் அரியலூர் சென்றிருந்தோம். நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன், ரூபக், ராம்குமார் என்று கழிந்து கொண்டிருந்தது அந்த இரவு. அந்த இரவில் நான் கூறினேன் என்கிற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒருவிசயத்தை விட்டிருந்தீர்கள். சரியாக நூறுநாட்களுக்கு. நூறுநாட்கள் என்பது பெரிய விசயமேயில்லை. நான் கூறினேன் என்று கூறினீர்கள் இல்லையா அதுதான் பெரிய விஷயம். நட்பிற்குக் கிடைத்த மரியாதை.

நீங்கள் ஒரு தீவிர சினிமாக் காதலர். அதிலும் ஹாலிவுட் படமென்றால் உங்களோடு சேர்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரு தேர்ந்த சப்டைட்டில். உங்களுடன்  பார்த்த எந்த ஆங்கிலப் படமுமே இதுவரைக்கும் புரியாது போனதில்லை. ஆனால் இரவுக் காட்சிக்கு மட்டும் உங்களோடு சென்றுவிடக் கூடாது என்பது எனக்கும் அரசனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. டைட்டில் போடும்முன் குறட்டை விட ஆரம்பித்து விடுவீர்கள். லூசி படத்தின் போது முன்னிருக்கையில் ஆண்ட்ரியா அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறிய பின்னரும் நீங்கள் எழுப்பிய குறட்டை ஒலியை நிச்சயம் அருமையான பிஜிஎம் என்றுதான் நினைத்திருப்பார் ஆண்ட்ரியா.

நீங்களும் நானும் மேற்கொண்ட அந்த பெங்களூர் பயணம். இப்போது நினைத்தாலும் உவப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பன்னிரண்டு மணிநேரப் பயணம். சென்னை - பெங்களூரு - சரவணபெலகோலா - பெங்களூரு என்று நீண்ட அந்தப் பயணம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என்பது சந்தேகமே. என்னுடைய வாழ்நாளில் ஒரு கனவுப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று நம்பினேனோ அதை கிட்டத்தட்ட நிறைவேற்றிய பயணம் அது. வார்த்தைகள் இல்லாது போகும் தருணங்களில் இசையால் நிறைந்த பயணம். 

பெங்களூரை உங்களைத் தவிர வேறுயாராலும் இப்படி சுற்றிக் காட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. ஏன் பெங்களூர் குறித்து நன்றாக தெரிந்த ஆசாமிகளால் கூட இதனை இவ்வளவு சிறப்பாக சுற்றிக் காண்பிக்க முடியாது. காரணம் உங்களுக்கும் பெங்களூரு தெரியாது. ராம்குமாரை சந்திக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு ஒரு சாலையை ஒண்ணரை மணிநேரமாய்த் தேடிக் கொண்டிருந்தோம். ஒருவழியாக ராம்குமாரைச் சந்தித்தோம் என்பதும் கூட அன்றைய தினத்தின் மற்றொரு சாதனை. முதல் சாதனை பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீங்கள் கார் ஓட்டியது. அப்போதுதான் நீங்கள் மெலிஸா பற்றிய கதையையும் கூறினீர்கள். 

பெங்களூருக்கு ஊர் சுற்ற சென்ற இடத்திலும் கூட சினிமாவுக்குக் கூட்டிச் சென்ற ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். சிவகாசிக்காரன் ராம்குமார், கடல் பயணங்கள் சுரேஷ், கற்போம் பிரபுகிருஷ்ணா, எங்கள் பிளாக் கௌதமன் சார் என்று நமது ஊர்சுற்றல் கூட பதிவுலகச் சுற்றலாகத்தான் இருந்தது. கேரளாக்காரன் வருணைக் கூட நாம் அன்றைக்குத்தான் முதல்முதலாய் சந்தித்தோம். எத்தனை அற்புதமான ஒரு பயணக் கட்டுரையை இப்படி அநியாயத்திற்கு  எழுதாமல் விட்டிருக்கிறேன். 

அடுத்தது உங்களுடைய மிகப்பெரிய சாதனையாக நினைப்பது நீங்கள் குறும்படம் இயக்கியதைத்தான். பொறுமை. நீங்கள் குறும்படம் இயக்கியதை சாதனையாகக் கூறவில்லை. அந்தக் குறும்படத்தை என்னை வைத்து இயக்கினீர்கள் பாருங்கள் அதைத்தான் சாதனை என்று கூறுகிறேன். நடிக்கவே தெரியாத ஒருவனை, நடிப்பின் வாடையே அறியாத ஒருவனை ஒரு படத்தில் நடிக்க வைத்தது சாதனைதானே. 

வாழ்வில் வேறெதெற்கும் இவ்வளவு மறுப்பு தெரிவித்திருப்பேனா தெரியவில்லை. ஆனால் நீங்கள் என்னைக் குறும்படத்தில் நடிக்கக் கூப்பிட்டதற்கு அவ்வளவு மறுப்பு தெரிவித்தேன். இதுவே வேறு யாரும் என்றால் 'போடா மயிறு' என்று கடந்து போயிருப்பார்கள். நீங்களோ விடாப்பிடியாக நான் தான் நடிக்க வேண்டும் என்று உங்களிடம் இல்லாத அந்த மூன்றாவது காலிலும் நின்றீர்கள். ஒருவேளை விஷப்பரீட்சை என்பார்களே அதனை செய்துபார்க்க துணிந்து விட்டீர்களா என்ன? இப்போதெல்லாம் யாரேனும் குறும்படம் குறித்து பேசினாலே ஜெர்க் ஆகி ஓடிவிடுகிறேன். என்னைத் தவிர்த்துவிட்டு அந்தக் குறும்படத்தைப் பார்த்தால் படம் நன்றாக வந்திருப்பதை உணர முடிகிறது. ஒருவேளை நான் இல்லாதிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ? ஆனாலும் அட்டகாசமான அர்ப்பணிப்பு ஆவி பாஸ். 

ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் என்னிடம் பாக்கி இருக்கிறது. அதையும் கேட்டுவிடுகிறேன். உங்களுடைய அந்த முதல் குறும்படம் இயக்கப்படக்கூடாது எனப் பெரிதும் பிரயாசைப்பட்டவன் நான் ஒருவனே. அதன் காரணமும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அதையும் மீறி வெற்றிகரமாக 'காதல் போயின் காதலை' எடுத்து முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். அதற்காகத்தான் அந்த மன்னிப்பும் கூட. நீங்கள் திரையுலக பாதையில் மென்மேலும் முன்னேற வேண்டும். ஒரு திரைப்படம் இயக்குவது உங்கள் கனவு என்றால் அதையும் நீங்கள் நிஜமாக்கிக் காட்ட வேண்டும் என்று உங்களுடைய இந்த பிறந்தநாள் தினத்தில் வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.


சிறகுகள் மலர்ந்த ஒரு சுதந்திரப் பறவையினால் மட்டுமே பல புதிய இடங்களைக் கண்டடைய முடியும் என்பார்கள். உங்கள் சிறகுகள் அந்தப் புதிய உலகினை நோக்கி சிறகடிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆவி பாஸ். 

பாசங்களுடனும் நேசங்களுடனும்


சீனு, ராம்சங்கர், ரவி, ஸ்ரீ, கௌதம் 
மற்றும் காமெடி கும்மி நண்பர்கள்

5 Feb 2015

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில்

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில் (இனிமே இது ரொம்ப முக்கியமாக்கும்)

அஜீத்

கௌதம் வாசுதேவ் மேனன் - இவருடைய இயக்கம் பிடிக்குமோ இல்லையோ திரைப்படத்தின் காட்சியாக்கம் மிகவும் பிடிக்கும். தன்னுடைய கற்பனையில், தான் நினைக்கும் ஒவ்வொன்றையும் அதனுடைய இயல்பான அல்லது இயல்பை மீறிய அழகுடன் காட்சிப்படுத்துவதில் வல்லவர் கௌதம். இயல்பாகவே அஜீத் அழகு. அந்த அஜீத் கௌதமுடன் இணைந்தால் - அதற்காக மட்டுமே என்னை அறிந்தால் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தேன். அதனால் படம் ஹிட்டு பிளாப்பு போன்ற இத்யாதிகளெல்லாம் எனக்கு அவசியம் இல்லாததாகத்தான் பட்டது. ஏன்னா தல நடிச்சா நான் பார்த்தே தீருவேன்னு எனக்கு தெரியும்.


இது அஜீத்தின் ஒன் மேன் ஷோ என்பதை விட வழக்கமான ஜிவிஎம்மின் ஒன் மேன் ஷோ. அதுதான் இப்படத்தை தூக்கி நிறுத்துவதும் கூட. இயல்பாக ஆரம்பிக்கும் கதை. இயல்பாக நகரும் திரைக்கதை. தேவையான இடங்களில் பாடல். பாடல்களில் கூட தேவையான அளவில் மட்டுமான நீளம். தெளிவான வசனங்கள் என்று என்று ஒவ்வொன்றும் ஈர்க்கிறது. 

பில்லா, மங்காத்தா அஜீத் வேறுவிதமாக இருந்தார் என்றால் இதில் கச்சிதமாக இருக்கிறார். பொதுவாகவே அஜீத்திற்கு மீசை வைத்தால் நன்றாக இருக்காது என்றொரு எண்ணம் எனக்கு உண்டு, கத்தையாக ஏதோ கம்பளிப் பூச்சியை ஓட்ட வைத்தது போல் இருக்கும். கூடவே ஒட்ட வெட்டிய முடியும். பில்லாவிலும் மங்காத்தாவிலும் மூன்று நாள் தாடியுடன் வருவாரே அது அவருக்கு மிக அழகாக இருக்கும். ஆனால் அளவாக வைக்கும் மீசை கூட தனக்கு அழகுதான் என்பதை சத்யதேவ் (அஜீத்) நிருபித்துள்ளார். அஜீத் தனது கழுத்தில் அணிந்திருக்கும் அந்த மாலையை முதலில் வாங்க வேண்டும். அதுகூட அழகாக இருக்கிறது. 

அஜீத்தினுடைய அடுத்த பெரும் குறையாக நான் நினைப்பது வசன உச்சரிப்பு, டயலாக் டெலிவரி. 'செல்லா ஏன் செல்லா அழுவுற' 'ஒளிஞ்சா கண்டான் விளையாடுவோமா' 'மழ நிக்கிறதுக்குள்ள, அது' போன்ற வசனங்களில் எல்லாம் எனக்கு சிரிப்பு தான் வந்தது. போதாகுறைக்கு இதை வைத்து என்னை ஓட்டுவதுதான் எனது அண்ணனின் வேலை. நல்லவேளையாக தனது சமீபத்திய படங்களில் வசனங்களை பார்த்து பார்த்து சிரத்தை எடுத்து உச்சரிக்கிறார். அல்லது அதிகமான வசனங்களை பேசாமல் தவிர்த்துவிடுகிறார். என்னை அறிந்தாலில் அதிகமான வசனங்கள் இருந்தாலும் - கௌதம் படத்தில் வசனங்கள் இல்லை என்றால் தான் ஆச்சரியம்- அதையும் சிறப்பாக பேசியிருக்கிறார். 

கௌதம் - கௌதம் படங்கள் ஒருவித மென்மையான உணர்வைத் தரக்கூடியவை. வன்முறைக் காட்சிகளில் கூட வில்லன்கள் தேவையில்லாமல் கூட உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யமாட்டர்கள். (நான் இன்னும் நடுநிசி நாய்கள் பார்க்கவில்லை என்பதால் சம்முவம் என்னை மன்னிப்பதாக). காதலாகட்டும் அன்பாகட்டும் வீரமாகட்டும் மேலும் எவ்வித உணர்வுகளாகட்டும் கச்சிதமாக வெளிக்கொணர்வதில் வல்லவர். உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர். அன்றைக்கு நண்பர்களோடு பேசிகொண்டிருக்கையில் கூறினேன் சுஜாதாவிற்கு பின் எனக்கு மிகவும் பிடித்த வசனகர்த்தா என்றால் அது ஜிவிஎம் தான். 

அருண்விஜய் - தடையறத் தாக்க படத்திற்குப் பின் இப்படத்தில் மிகவும் கவர்க்கிறார். சில சமயங்களில் முன்னால் வந்துவிழும் முடி மங்காத்தா அர்ஜூனை நினைவூட்டினாலும் அசத்தலான நடிப்பு. 

வசனம் - இந்தப் படத்திலும் வசனங்களுக்குப் பஞ்சமில்லை. டைமிங் காமடியாகட்டும், மிக முக்கியமான பஞ்ச டயலாக் ஆகட்டும். 'சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு' என்பதைக் கூட பொருத்தமான இடத்தில் கோர்த்திருக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் திரிஷா அஜீத் இடையே இடம்பெறும் வசனங்கள் மிகவும் கவர்ந்த்தவை

அனுஷ்கா, த்ரிஷா ஈஷா-  அனுஷ்காவை விட த்ரிஷா அதிகமாக கவர்கிறார். த்ரிஷா மீது இந்தளவிற்கு ஈர்ப்பு ஏற்படவும் ஜிவிஎம் தான் காரணம். விடிவி ஏற்படுத்திய தாக்கம். என்னை அறிந்தாலில் த்ரிஷாவிற்கு இப்படியொரு அறிமுகக் காட்சி இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து அப்படியே த்ரிஷாவின் பாத்திரத்தை வார்த்தெடுத்திருப்பது சபாஷ். த்ரிஷா படம் நெடுக வரவில்லையே என்பதுதான் குறையாக இருக்கிறது. ஈஷாவாக நடித்திருக்கும் அந்தப் பாப்பா கொள்ளை அழகு

கதை திரைக்கதை - வழக்கமான போலீஸ் வழக்கமான வில்லன்களை களையெடுக்கும் முயற்சியில் போட்டுத்தள்ள, அந்த வழக்கமான வில்லன்கள் வழக்கமாக போலீஸின் குடும்பத்தைப் போட்டுத்தள்ள இங்கிருந்து வழக்கமாக ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று எதிர்பார்க்கும் போது கதை வேறொரு கோணத்தில் திரும்பி மீண்டும் அதே நயாகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடந்தது என்ன என்பதுதான் வழக்கமான கதை. ஆனால் இதை வழக்கத்திற்கு மீறிய தனக்கே உரித்தான திரைக்கதையில் கூறியிருப்பதில் ஜிவிஎம் கவர்கிறார்.

மேக்கிங் - ஒளிப்பதிவு, ஆர்ட், காஸ்ட்யும். அஜீத் படமாகட்டும் அல்லது தமிழ் படமாகட்டும் மேற்கூறிய மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேனோ அந்த எதிர்பார்ப்பில் கொஞ்சமும் குறையாமல் அப்படியே...!

என்னை அறிந்தால் - படத்தில் எல்லாமே இருக்கிறது, காதல், அப்பா மகன் பாசம். அப்பா மகள் பாசம், வீரம், வில்லத்தனம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என்று எல்லாமே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை (எனக்கு அப்படித் தெரியவில்லை) என்பதால் ஒருவேளை உங்களுக்குப் பொறுமை தேவைப்படாலம். காரணம் பில்லா மங்கத்தா என்று எதிர்பார்த்து சென்றிறீர்கள் என்றால் நிச்சயம் அப்படியான படம் இல்லை இந்த என்னை அறிந்தால். ஜெமோவின் எழுத்துக்கள் ஒரு மலைப்பாதையின் வழியாக நிகழும் ரயில்பயணம் போன்றது. அதனை உணர வேண்டும் என்றால் அந்த ரயில் மெதுவாகத்தான் சென்றாக வேண்டும். என்னை அறிந்தாலும் அப்படியே. நிச்சயம் இது ஒரு feel good movie.  கொஞ்சம் த்ரில்லரும் இருக்கிறது.

அஜீத் அஜீத் அஜீத் என்பதையும் தாண்டி முழுக்க முழுக்க அஜீத்தின் நடிப்பை நம்பி வெளிவந்திருக்கும் படம் என்பதால் 'என்னை அறிந்தால்' எம்மைப் போன்ற அஜீத் ரசிகர்களுக்கு வராது வந்த தீபாவளி என்பதில் கூடுதல் சந்தோசம்...  

விளம்பரம் : 

4 Feb 2015

மாஞ்சோலை - நள்ளிரவில் ஒரு திகில் பயணம்

சுற்றிலும் அடர்ந்த காடு. நன்றாக இருட்டி விட்டிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தைத் தாண்டி பார்வை விரிய வாய்ப்பே இல்லை. பகலின் அப்பட்டமான வெளிச்சத்தில் பார்த்து ரசித்த மலையின் மடிப்புகள், ஆள்விழுங்கி பள்ளங்கள் ஒவ்வொன்றும் இருள் நிரம்பிய நீராக தளும்பிக் கொண்டிருந்தன. ரொம்பவே ஆபத்தான வளைவுகளில் கூட சர்வசாதாரணமாக வண்டியை திருப்பிக் கொண்டிருந்தார் டிரைவர். இருளில் எதிர்படும் பள்ளங்களின் ஆழத்தை உணர முடியவில்லையே தவிர அதன் ஆழம் எவ்வளவு அபாயமானது என்பதை கற்பனை செய்து பார்க்கமுடிந்தது. ஒருவேளை எதிரில் ஏதேனும் வாகனம் வந்துவிட்டால்? வேறுவழியில்லை யாரேனும் ஒருவர் ரிஸ்க் எடுத்து ரிவர்ஸ் எடுத்துத்தான் ஆக வேண்டும்.

ஓட்டுனருக்கு இணையாக பேருந்தின் முதல் இருக்கைகள் என்பதால் அந்தப் பயணத்தின் முதல் பார்வையாளர்களாக எங்களை மாற்றி இருந்தோம். எங்களைத் தவிர ஒட்டுமொத்த பேருந்தும் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அது வழக்கமான பயணம். குறிஞ்சிக்கும் முல்லைக்குமான தினசரிப் பயணம். தடங்கல் இல்லாமல் சென்று வந்தாலே போதுமானது. மிகவும் மோசமான வளைவுகளின் வழியே பழுதடைந்த, ஆளரவமற்ற மலைப்பாதையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

அன்றைய தினம் கடைசி பேருந்துக்கு முந்தைய பேருந்து வராத காரணத்தால் கடைசிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.


ஒவ்வொரு வளைவுகளிலும் அதன் விளிம்புகளின் எல்லை வரை சென்று சக்கரம் சுழல, ஒரு தேர்ந்த இசையமைப்பாளரின் கையில் சிக்கிய வாத்தியமாக ஓட்டுனரின் கட்டளைகளுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. சில வளைவுகளில் பாறையில் மோதி விடுவது போலவும், சில தருணங்களில் நேரே பள்ளத்தில் பாய்ந்து விடுவது போலவும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது பேருந்து. ஒரு ரோலர் கோஸ்டரின் ஆனந்தம். அவ்வப்போது முத்துவையும் ரூபக்கையும் மாறிமாறி பார்த்தேன். நாம் ரசிப்பதை அவர்களும் ரசிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் ஆவல். என்னைவிட அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது முதல் பயணம். எனக்கு நான்காவது முறை. 

மணிமுத்தாறில் இருந்து இருபத்தியிரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். பாம்பே பர்மா ட்ரேடிங் கம்பெனி பல ஆயிரம் ஹெக்டேர் மலைப் பகுதிகளை வளைத்துப்போட்டு தேயிலை மற்றும் காப்பிக் கொட்டைகளை பயிர் செய்து வருகிறது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி போன்ற இடங்களில் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். நாலுமுக்கில் இருந்து பிரிந்து செல்லும் மற்றொரு மலைப்பாதை கோதையாறு அணைக்கட்டு நோக்கி செல்கிறது. கோதையாறு அணையின் மேற்பகுதி நெல்லை மாவட்டம் என்றாலும் அணைக்கட்டு அமைந்திருக்கும் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொந்தமானது.

மாஞ்சோலையில் இருந்து நாலுமுக்கு பத்து கிமீ தூரத்திலும், நாலு முக்கிலிருந்து குதிரைவெட்டி பத்து கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. நாலுமுக்கிற்கும் குதிரைவெட்டிக்கும் இடைப்பட்ட பகுதியான ஊத்து வரைக்குமே தற்போது பேருந்துகள் சென்று வருகின்றன. குதிரைவெட்டி வரை பேருந்துகள் செல்லவேண்டும் என்ற ஆணை இருந்தாலும் சாலை மிக மோசமாக பழுதடைந்து பரமாரிப்பே இல்லாமல் இருப்பதாலும், அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாலும் தற்போது குதிரைவெட்டிக்கு பேருந்துகள் சென்று வருவதில்லை.


ஊத்தில் இருந்து நெல்லை சென்று கொண்டிருக்கும் கடைசிப் பேருந்து அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தது. அந்த சிக்கலான மலைப்பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு சிறுத்தையையும் யானைக்கூட்டத்தையும் எதிர்பார்த்திருந்தோம். ஊத்தில் பார்த்த மான் கூட்டத்தையும், மாஞ்சோலையில் பார்த்த சில காட்டுப் பன்னிகளையும் தவிர வேறு எதுவுமே கண்ணில் சிக்கவில்லை. இருள் மொத்த காட்டையும் தன் வசபடுத்தி இருந்தது. 

மதியம் மிகப்பெரிய செந்நாய் கூட்டம் ஒன்றை எதிர்கொண்டிருந்தோம். அதில் இரண்டு நாய்கள் எங்களை நோக்கி முறைத்த போதிலும் எங்கள் நல்ல நேரமோ என்னவோ எங்கள் மீது தாக்குதலில் ஈடுபடவில்லை. ஊத்து பேருந்து நிறுத்தத்தில் சில பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு பெரியவர் கூறினார் 'வெறும் ரெண்டு செந்நாய் போதும் தம்பி நம்மள கொல்ல'. இதைக் கேட்டபோது முத்துவுக்கு அல்லு இல்லை. காரணம் அதில் ஒரு நாயை தைரியமாக துரத்த நினைத்திருந்தான். மாஞ்சோலை வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஒரு கரடி வந்து செல்வதாகக் கூறினார்கள். புலி சிறுத்தை யானைக் கதைகள் என்று அவர்களிடம் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஒரு அடர்ந்த வனத்தின் அத்தனை மிரட்சிகளையும் மாஞ்சோலை மலைப்பகுதி தன்னுள் ஒழித்து வைத்துள்ளது. 

சரியாக மாஞ்சோலையில் இருந்து ஐந்தாவது கிமீட்டரில் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. சுற்றிலும் அடர்ந்த காடு. நன்றாக இருட்டி விட்டிருந்தது. என்ன பிரச்சனையோ தெரியவில்லை, பேருந்து ஒரு இன்ச் கூட நகரமுடியாமல் அங்கேயே நின்றுவிட்டது. திடீர்க் குழப்பம். அந்தப் பேருந்தில் எங்களையும் சேர்த்து மொத்தம் முப்பத்தி எட்டு பயணிகள் இருந்தோம். அவர்களில் சரிபாதி பெண்கள், குழந்தைகள். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. யாரும் உணவருந்தி இருக்கவில்லை. பத்து மணிக்கு அம்பை சென்றுவிட்டால் அங்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இருந்தோம். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இதே பாதையில் ஓடி ஓடி தன் ஜீவனை இழந்திருந்தது. இதற்கு மேலும் ஓடமாட்டேன் என்பது போல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது பேருந்து. 'கிளட்ச் ப்ளேட்டில் ஏதோ பிரச்சனை, கியர் விழுது ஆனால் வண்டி அரஸ்ட் ஆயிட்டு' என்றார் டிரைவர். 

மாஞ்சோலையிலும், நாலுமுக்கிலும் ஒரு பள்ளிக்கூடம், தபால் நிலையம் மற்றும் ஒரு நியாயவிலைக் கடை இருக்கின்றது. அங்கு பணிபுரிபவர்கள் மலைபிரதேசத்தின் வாழ்க்கைக்குப் பயந்து தினசரி வந்துபோய் கொண்டிருக்கிறார்கள். அதுபோக சில உணவகங்களும் காய்கறிக் கடைகளும் இருக்கின்றன. அதற்கான கச்சாப் பொருட்களை அவர்களே கீழிறங்கி வாங்கிவந்தாக வேண்டும். இதுபோக வேறுசில பணி நிமித்தமாக அம்பைக்கும் நெல்லைக்கும் வந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். ஒருநாளைக்கு மொத்தம் நான்கு பேருந்துகள் ஏறி இறங்குகின்றன. இதில் மூன்றாவது பேருந்து வராவிட்டால் கூட சமாளித்துக் கொள்வார்கள். மற்ற பேருந்துகளின் ஓட்டம் மிக முக்கியமானது. அவை ஓடியே ஆகவேண்டும். இல்லை அந்த மலைபிரதேசம் ஸ்தம்பித்துவிடும். அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும். 

'இந்த மாய பஸ்ஸுக்கு இதே வேலையா போச்சு, ரெண்டு நா முன்ன கூட இங்கன தான ரிப்பேரு ஆச்சு' என்று புலம்பத் தொடங்கினார் ஒரு அம்மா. 

'இன்னும் எப்ப ரிப்பேரு பார்த்து எப்ப நாம போவவோ, இதுக்கு எப்ப தான் விடுவுகாலம் பொறக்கப் போவுதோ' ஆங்காங்கு புலம்பல் குரல்கள் கேட்கத் தொடங்கின.  

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, அதுவும் மிகசரியாக அதே இடத்தில் பழுதாகி நிற்பதை தங்களுக்குள் ஆச்சரியமாகப் பகிர்ந்து கொண்டார்கள் உள்ளூர்வாசிகள். என்ன புலம்பி என்ன. ஒன்றும் செய்ய முடியாது, ஒன்று பேருந்து தன்னைத் தானே சேரி செய்துகொள்ள வேண்டும் இல்லை பாபநாசம் பணிமனையில் இருந்து ஆட்கள் வந்தாக வேண்டும். கூடவே அவர்களோடு வேறொரு பேருந்தும் வரவேண்டும் எங்களை ஏற்றிச்செல்ல. வண்டி நட்டநடு சாலையில் அநாதரவாக நின்று கொண்டிருந்தது. 

'யாராது நாலு பேரு இறங்கி தள்ளுங்க, வண்டிய எங்கியாது ஓரமா ஒதுக்கி விடுதேன்' என்று டிரைவர் கூறவும் முத்துவும் ரூபக்கும் முதல் ஆளாக இறங்கிவிட்டார்கள். அவர்களோடு நானும் இறங்க மேலும் நான்கு பேர் இறங்கி வண்டியை மெல்ல உருட்டிவிட்டோம். இறக்கம் என்பதால் தள்ளுவதற்கு எளிதாகவே இருந்தது. என்ன, 'ஓரமா நிப்பாட்டுதேன்' என்று கூறிய டிரைவர் கிட்டத்தட்ட இரண்டு கிமீ தள்ளி அந்த ஓரத்தைக் கண்டுபிடித்திருந்தார் என்பது தான் கொஞ்சம் கொடுமையான விஷயம். 

கும்மிருட்டு. மொபைலில் இருந்த வெளிப்பட்ட கொஞ்சூண்டு வெளிச்சத்தில் பேருந்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். நடுங்கவைக்கும் குளிர் இல்லை என்பதே அப்போதையே மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது. பேருந்து பழுதாகிவிட்டதே என்பதையும் தாண்டி உள்ளூர ஏதோ ஒரு ஆனந்தம். ரூபக்கும் முத்துவும் 'ச்சே, மாஞ்சோலைக்கு முன்னாடியே நின்னிருந்தா எவ்ளோ நல்லா இருக்கும், அங்கியே தங்கியிருக்கலாம்' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். 

இரண்டு பக்கமும் இலை தழைகளால் அடைத்து வைக்கபட்டது போல் இருந்தது. கண்கள் மெல்ல மெல்ல இருளுக்குப் பழக, அந்த இலைகளின் ஊடாக ஏதேனும் மிருகத்தின் கண் தெரிகிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.  பேருந்தினுள் இருக்கும் போது தைரியமாக எதிர்நோக்கி இருந்த அந்த சிறுத்தையும் யானையும் இப்போது இறங்கிவிட்டால். 'சீனு நாம வந்த்ருகோம்லா, ஒன்னு வராது' என்றான் முத்து. 'புலியக் கூட பாக்க முடியலியே' என்ற வருத்தத்தில் இருந்தான் அவன்.

பேருந்தினுள் இருந்த மொத்த ஆண்களும் இப்போது வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். பெண்களும் குழந்தைகளும் மட்டும் உள்ளே. ஒரு கைக்குழந்தை பசியில் அழத் தொடங்க 'யேம்மா, எப்படியாது அழுகய நிறுத்துமா, உம்புள்ளைய பார்த்து இதும் அழ ஆரம்பிச்சிரும்' என்று கூறியவாறே தன் மடியில் கிடத்தி இருந்த பேத்தியை தூங்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு பாட்டி. இன்னொரு சிறுவன் 'அப்பா பசிக்குது' என்று அவர் சட்டையை இழுக்க 'கூடைக்குள்ள தண்ணி இருக்கு எடுத்து குடி' என்று கூறிக் கொண்டிருந்தார். எங்கள் எல்லார் கண்களிலும் பசி தூக்கம் வருத்தம் எல்லாவற்றையும் கடந்த அயற்சி. 

டிரைவர் தன் பங்கிற்கு தன்னாலான முயற்சிகளை செய்து பார்த்தார், ஒன்றும் வேலைக்காகவில்லை. பாபநாசம் டிப்போவிற்கு போன், மெக்கானிக்கு போன், தங்களுக்கு தெரிந்த டிரைவர்களுக்கு போன் என்று எப்படியாவது யாரையாவது வரவழைத்துவிடும் அவசரத்தில் இருந்தார் நடத்துனர். '

'பத்தரைக்கு மணிக்கு கடைசி பஸ் மல மேல ஏறும், அதில கண்டிப்பா மெக்கானிக் வந்த்ருவார்' என்றார். 

'சீனு நாம வேணா அதில மல மேல போயிருவோமா' என்றான் ரூபக். அவனுக்கு எப்படியாவது எந்த இரவை மலையில் கழிக்க வேண்டும் என்ற ஆவல். 

'அதெல்லாம் போ முடியாது தம்பி, அந்த பஸ்ல நிக்க கூட இடம் இருக்காது, அவ்ளோ கூட்டம் போவும், வேணா உள்ளூர்காரங்க போட்டும், நாம ஊருக்கு போயிறலாம்' என்றார் நடத்துனர். நல்ல தூக்கத்தில் இருந்தார்.   

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு புரட்சியாளர் இருப்பாரே, அப்படியொருவர் எங்கள் கூட்டத்திலும் இருந்தார். வேகமாக எங்களிடம் வந்து 'தம்பி போகும் போது உங்க டிக்கெட்ல பேரு, அட்ரெஸ், போன் நம்பர் எழுதி கொடுத்துட்டுப் போங்க, நாங்க சொன்னா நடவடிக்கை எடுக்கது கிடையாது, நம்புறது கிடையாது, வெளியூர்க்காரங்க நீங்க சொன்னா நம்புவாங்க' கூறியபடி அங்கிருந்த அனைவரிடமும் தன் ஆதங்கத்தை வெளிபடுத்தத் தொடங்கினார். 

நாங்கள் சாலையில் அமர, ஒவ்வொருவராக எங்களைப் பார்த்து அமரத் தொடங்கினார்கள். எனக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது. அமைதியான அந்த வனத்தின் மத்தியில் மனிதர்களின் சலசலப்பான ஒளி மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. முத்துவின் அருகில் இருந்த ஒருவர் ராஜீவ்காந்தி கொலையில் ஆரம்பித்தது இந்திய சுதந்திரம் வரையிலும் பின்னோக்கி நகர செருப்பை தலையனையாக்கி கண்ணயர்ந்து விட்டேன். 

ஒன்னரை மணி நேரம் அடித்துப் போட்டது போன்ற தூக்கம். எழுந்திருக்கும் போது மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. உடல் முழுவதும் வண்டுகளும் பூச்சிகளும் சர்வசாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ ஒருநிமிடம் தான் தூங்கியது போல் இருந்தது. கனவுகளற்ற உறக்கம். இந்நேரம் தாசில்தாரும், காவல்துறை ஆய்வாளரும் தங்கள் குழுவுடன் வந்து சேர்ந்தனர். தாசில்தார் எல்லாருக்கும் வாழைபழம் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொண்டு வந்திருந்தார். பசி. ஒரு சில நிமிடங்களில் அத்தனை உணவுப் பொருட்களும் காணாமல் போயிருந்தன. 

சில வரிகளுக்கு முன்னர் ஒரு புரட்சியாளரைப் பற்றிக் கூறினேன் இல்லையா அவர்தான் இவ்வளவுக்கும் காரணம். அம்பை எம்.எல்.ஏவுக்கு தொலைபேசி அவர் மூலம் இவர்களையும், இவர்கள் மூலம் பழங்களையும் வரவழைத்திருக்கிறார். தாசில்தார் வருவதற்கு முன்னர் வரைக்கும் சோகையாக செயல்பட்டுக் கொண்டிருந்த மெக்கானிக்குகள் இவரைப் பார்த்ததும் அவசரவசரமாக தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். இருந்தும் பேருந்து சரியாகும் என்ற நம்பிக்கையில்லை. உடனடியாக வேறொரு மாற்றுப் பேருந்திற்கு ஏற்பாடு செய்து அப்பேருந்து எங்களை வந்து ஏற்றிச் செல்லும் போது மணி பன்னிரெண்டை நெருங்கி இருந்தது. எங்களுக்குள் இருந்து எங்களுக்காக குரல் கொடுத்தாரே ஒரு காமன்மேன், அவருக்கு கோடி நன்றிகளை கூறிக்கொண்டோம். இல்லையேல் அடுத்தநாள் காலை வரை அங்கேயே தவம் இருக்க வேண்டியதுதான். 


கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஒரே இடத்தில் சிறைபட்டிருந்தோம். நாங்களாவது பரவாயில்லை. அன்றாடப் பயணிகளை நினைத்துப் பார்த்தால் வருத்தமாயிருக்கிறது. இங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் அடுத்தநாளும் பணிக்கு வர வேண்டும். வீட்டிற்கு சென்று, உடை மாற்றி மீண்டும் பேருந்தைப் பிடிக்கத் தான் அவர்களுக்கு நேரம் சரியாயிருக்கும். இதற்குப் பயந்தே பலரும் மெடிக்கல் லீவில் சென்று விடுவதாக ஓர் ஊழியர் கூறினார். 

போக்குவரத்துத் துறை தனது பணியை சேவை மனப்பான்மையில் தான் செய்து வருகிறது என்றாலும், செய்யக்கூடிய சேவையை கொஞ்சம் ஒழுங்காக செய்யலாம் என்பது தான் இவர்களது எண்ணம். இன்னும் உள்ளூர் மக்களின் புலம்பல்களை எழுத எவ்வளவோ இருக்கிறது. குறைந்தபட்சம் தேயிலைத் தோட்ட நிர்வாகம் இவர்களுக்கென ஒரு பேருந்தை இயக்கலாம் என்றொரு ஆதங்கமும் இவர்களிடம் இருக்கிறது. மக்களுக்கான அரசாங்கமே செவி சாய்க்காத போது மக்களின் உழைப்பை உறிஞ்சும் நிறுவனமா செய்வி சாய்த்து விடப்போகிறது. 

பாபநாசம் பணிமனை வந்து சேர்ந்த போது மணி ஒன்றரை. பணிமனைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் யாருக்கும் தெரியாமல் பூனை போல் ஏறி அதிகாலை வரை தூங்கி, அதே பேருந்தில் தென்காசி வந்து வீட்டில் அர்ச்சனை வாங்கத் தொடங்கியிருந்த போது மணி ஆறாகியிருந்தது.