15 Jan 2015

செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

சிற்றருவியைக் கடந்து செண்பகாதேவியை நோக்கி ,மலையேறத் தொடங்கும் பொழுது மணி ஏழை நெருங்கி இருந்தது. அவ்வளவாக குளிர் இல்லை. சூரியனும் முழுதாக முளைத்திருக்கவில்லை. எங்கும் பரவி இருக்கும் அமைதி, வனத்தின் மௌன சாட்சியாக எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. 

காட்டினுள் பயணிப்பது என்றாலே என்னையும் அறியாத கூடுதல் உற்சாகம் என்னோடு வந்து ஒட்டிக் கொள்ளும். இப்போது வனவிலங்குகள் நிறைந்த அடர் கானகத்தினுள் பயணிக்கப் போவதில்லை என்றாலும் அடுத்த நான்கு கிலோ மீட்டர்கள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பாதைகளின் ஊடாகத்தான் நடக்க இருக்கிறோம். ஆம் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணமில்லாமல் இல்லை. அருவிக்குச் சென்ற இடத்தில் போனோமா குளித்தோமா என்று வராமல் உயர இருக்கும் பாறை மீது ஏறி 'தலைகீழாகக் குதித்து தடாகத்தினுள் இருக்கும் பாறை மீது மோதி அல்பாயுசில் மேலோகம் போனவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறைத் தொடும். 

செண்பகாதேவி

மேலும் செண்பகாதேவிக்கு செல்லும் பாதையில் தான் மெயின் அருவியின் மேற்பக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட 520 அடி உயரம். அங்கு இருந்து எட்டிப் பார்த்தால் பேரருவியின் பொங்குமாங்கடல் தெரியும். மேலும் அங்கிருந்து பொங்குமாங்கடலுக்குச் செல்ல பாறையில் செதுக்கப்பட்ட படிகளும் உண்டு. அதன் வழியாக இறங்கும் போது இறந்தவர்களும், மேலே இருந்து பொங்குமாங்கடலை எட்டிப் பார்க்கிறேன் பேர்வழி என்று தலைசுற்றி கீழே விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நூறைத் தாண்டும். அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கைப் பலகை யாருக்கோ தேவுடு காத்துக் கொண்டிருந்தாலும், அதில் எந்தெந்த வருடங்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளி விபரக் கணக்கைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. இருந்தும் இவற்றையெல்லாம் கடந்து சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படும் இந்த மலையில் இன்னும் ஏராளமான ஆச்சரியம் தரும் சங்கதிகள் இருக்கின்றன.  

மூன்று நாள் பயணமாக அலுவலக நண்பர்களுடன் தென்காசி செல்வது என்று முடிவான போது இரண்டு நாட்களுக்கு தேவையான பயணத் திட்டம் எங்களிடம் இருந்தது. முதல் நாள் குற்றாலம் முழுவதையும் சுற்றுவது பார்டரில் பரோட்டா சாப்பிடுவது. இரண்டாம் நாள் காரையாறு பாநாசம் முடிந்தால் மணிமுத்தாறு அப்படியே தென்காசி பெரியகோவில். மூன்றாம் நாள் திட்டத்தில் தான் மிகப்பெரிய குழப்பம். எங்கு செல்லப்போகிறோம் என்பது குறித்த தீர்மானமான திட்டம் எங்களிடம் இல்லை. உடன் வந்த நண்பர்கள் திருத்தலங்கள் வேண்டாம் என்றதால் ஆரியங்காவு அச்சன் கோவில் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. மாஞ்சோலை முயற்சி செய்தோம் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் 'ஏன் செண்பகாதேவி செல்வதற்கு முயன்று பார்க்கக் கூடாது' என்ற யோசனை தோன்றியது. 

செண்பகாதேவிக்கு அனுமதி இல்லை, உள்ளூர்வாசி என்று கூறினாலும் விடுவார்களா தெரியவில்லை. ஸ்ரீ அண்ணனுக்கு போன் செய்தேன். அவரும் அதையே கூறினார். இருந்தாலும் மேலே செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குச் செல்வோம் அப்படியே குளித்துவிட்டு வரலாம், ஆனால் உடன் வரும் நண்பர்கள் மிகவும் பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும், ஒருவேளை போலீஸ் அனுமதி கொடுக்காவிட்டால் கீழே இறங்கிவிட வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தானும் உடன்வருவதாகக் கூறினார். 

செண்பகாதேவியின் மேற்புறம் இருந்து

வீட்டிலோ செண்பகாதேவி செல்வதாகக் கூறிய அடுத்த நொடி 'ஏம்ல அங்கலாம் போயிட்டு இருக்க, பசங்கள ஊருக்கு கூட்டிவந்த இடத்துல ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டுன்னா என்ன செய்வ' என்று வழக்கம் போல் அர்ச்சனை செய்ய, 'இல்ல ஸ்ரீ அண்ணா தொணைக்கு வாராங்க' என்றதும் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்கள். 'ஸ்ரீ அண்ணாவோ தனக்கு வேறு ஏதேனும் வேலை வந்துவிட்டால் வரமுடியாது' என்று கூறவிட, செண்பகாதேவி பயணத்தின் மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மேலும் தென்காசிக்கு சென்று இறங்கியதில் இருந்து அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் என் நச்சரிப்பு பொறுக்காமல் சரி நாம போறோம். என்னவானாலும் போறோம் என்று சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார். 

செண்பகாதேவி யாருக்கும் அனுமதிக்கப்படாத மலைப்பாதை என்பதால் மிக மோசமாக இருந்தது. சிற்றருவி வரைக்கும் சிமின்ட் ரோடு, அங்கிருந்து செங்குத்தாக ஏறும் சிமின்ட் படிகள். இப்படிகள் உபயோகத்தில் இல்லாமல் இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லதாதாலும் மோசமான நிலையில் இருக்கின்றன. மேலும் செங்குத்தாக வேறு கட்டபட்டிருப்பதால் ஏறுவதற்கும் சிரமமாக இருக்கிறது. இப்படியாக ஐம்பது படிகளை ஏறினால் அங்கிருந்து நீளுகின்ற ஒத்தயடிப்பாதை நம்மை கொஞ்சம் ஆசுவாசபடுத்துகிறது. வனம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கக் கூடிய பிரம்மாண்டமும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.

குற்றாலம் குறித்த பல பயணக் கதைகள் நிலாச் சோறு ஊட்டப்பட்ட காலத்தில் இருந்து சேர்த்தே ஊட்டப்பட்டவை. அம்மாவும் பாட்டியும் மாமாவும் தாங்கள் சென்று வந்த குற்றாலத்தையும் இப்போது இருக்கும் குற்றாலத்தையும் குறித்தும் கதை கதையாகக் கூறுவார்கள். 

செண்பகாதேவியை நோக்கி ஓடிவரும் சிற்றாறு 

இப்போது இருப்பது போல் பயணம் அவ்வளவு எளிதாக மாறி இருக்காத காலத்தில் குற்றாலத்தில் ஐம்பதுக்கும் குறைவான குடும்பங்களே வாழ்ந்திருக்கின்றன. எந்தவொரு அத்தியாவசியத் தேவைக்கும் தென்காசிக்குத் தான் வர வேண்டும். பொழுது போகவில்லை என்றால் தென்காசிக்காரர்கள் சோறுகட்டிக் கொண்டு குற்றாலம் நோக்கி நடக்க ஆரம்பித்தது விடுவார்களாம். எங்கும் சூழ்ந்திருக்கும் வயல்வெளியும், பாதையோர மரங்களும் அவர்கள் பயணத்தை இலகுவாக்கி இருக்கின்றன. மிகவும் அமைதியான சாவகாசமான வாழக்கையை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கோ நம் வாழ்க்கையில் நமக்கு நடந்த சம்பவங்களைக் கூட அசைபோட்டுப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

வனம் அமைதியான மனநிலையை கொடுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீ அண்ணா மேலும் பல கதைகளை, தான் படித்த கேட்ட நிகழ்வுகளை எல்லாம் கூறிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். எங்கும் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சிற்றாறு. மலையின் மீதிருந்து விழும் போது மட்டும் அதன் பெயர் பேரருவியாகயோ ஐந்தருவியாகவோ செண்பகாதேவியாகவோ மாறிவிடுகிறது. தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். என்றைக்கோ ஒருநாள் என் பாட்டனும் பூட்டனும் கதைபேசிக் கொண்டே நடந்த இடத்தின் வழியே நானும் பயணித்துக் கொண்டு இருக்கிறேன் என்பது எத்தனை அலாதியான அனுபவம். கார்த்திக்கும் சரவணாவும் விஜயும் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னரே அருவிக்குச் சென்ற சில குளித்து முடித்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.    

நான்கு கிலோமீட்டர்கள் நடந்ததே தெரியவில்லை அருவியை நெருங்கி விட்டோம். செண்பகாதேவி அம்மன் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அருவியை நெருங்கிய போதுதான் தெரியும் அன்றைக்கு பௌர்ணமி என்று. இங்கு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். திரளான உள்ளூர்க்காரகள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். பௌர்ணமி இரவில் கோவிலில் தங்கி பூஜை செய்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு முன்னரே வந்து சென்றவர்களின் காரணம் புரிந்தது. 

செண்பகாதேவி. வெறும் இருபது அடி உயரத்தில் இருந்து இறங்கும் அருவி என்றாலும் ஆக்ரோசமானது. இப்போது நீர்வரத்து குறைவாக இருப்பதால் அருவியின் ஆர்ப்பாட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நின்று குளிக்கும் இடமும் பாறையால் ஆனது. வழுக்கி விடாமல் இருக்க கொஞ்சம் சிமின்ட் போட்டு மெழுகி விட்டிருக்கிறார்கள். அருவியின் நீர், வேகமாக விழுந்து விழுந்து கைபிடிக் கம்பிகள் வளைந்து போய்க் கிடக்கின்றன. நீர் விழும் இடத்தில் தடாகம் மிகவும் ஆழமானது என்ற போதிலும் முழுவதும் பாறைகளால் ஆனது. நீச்சலிடிக்கும் போதே பாறை இடுக்குகளில் கால் மாட்டி உயிர் இழந்தவர்களும் இருகிறார்கள் காப்பாற்றபட்டவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக பத்து வருடங்களுக்கு முன் அப்போதைய கலெக்டர் வலைகளைக் கொண்டு தடாகத்தை மூடியிருந்தார். நீரின் வேகத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் ஒரே பருவத்தில் அந்த வலைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. வலை இருந்த தடயமாக அவை கட்டபட்டிருந்த இரும்புக் கம்பிகள் மட்டும் ஆங்காங்கு நீட்டிக் கொண்டுள்ளன. 

செண்பகாதேவி

தண்ணீர் குளிர்ந்து போய்க் கிடந்தது. எங்கள் ஐந்து பேரைத் தவிர மேலும் மூன்று பேர் மட்டுமே குளித்துக் கொண்டிருந்தார்கள். குரங்குகளிடம் இருந்து துணிமணிகளைப் பாதுகாத்துவிட்டு மெல்ல அருவியை நோக்கி நடந்தோம். தூரத்தில் பார்க்கும் போது அமைதியாகத் தெரிந்த அருவி நெருங்கிச் சென்றால் மண்டையிலேயே அடித்தது. அவ்வளவு வேகம். அங்கிருக்கும் கைபிடிக் கம்பிகள் மட்டும் இல்லை என்றால் நம்மால் அருவியில் குளிக்கவே முடியாது. அவ்வளவு வேகமாக செண்பகாதேவி கீழிறங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பத்திரமாக கவனமாக குளிக்கத் தொடங்கினோம், நீர் பனிக்கட்டிகளாக எங்கள் மீது பரவிக் கொண்டிருந்தது. முதல் நாள் பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளித்தது திருப்தியாகவே இல்லை எனக்கு. அருவி நம்மீது ஆர்பரித்து இறங்க வேண்டும். உள்ளுக்குள் அதிர்வுகளை உண்டாக்க வேண்டும். இது சீசன் இல்லை என்பதால் எல்லா அருவிகளிலும் நீர் வெண்ணையாக வடிந்து கொண்டிருந்தது. நல்லவேளை செண்பகாதேவி மட்டும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள். அற்புதமான குளியல். பின் கொஞ்ச நேரம் தடாகத்திலும் குளித்துவிட்டு கரை ஏறினோம். 

செண்பகாதேவி அம்மன் கோவிலில் அப்போதுதான் பௌர்ணமி பூஜை முடிந்திருந்ததால் இனிப்பு அப்பம்/அதிரசம் கொடுத்தார்கள். குளியலுக்குப் பின்னான பசியை அது மேலும் கிளறிவிட்டது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக செண்பகாதேவியை மிக அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் அந்த பாட்டியை சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
- தொடரும் 

12 comments:

 1. அருமையான வர்ணனையுடன் புகைப்படங்களும் அழகு

  ReplyDelete
 2. பிரமிக்க வைக்கிறது உங்கள் பயணம் .அருவியைப் பார்க்கும் போதெ நடுக்கம் எடுக்கிறது . இது போல பயிற்சிகள் மனசுக்கும் உடலுக்கும் உற்சாகம் கொடுக்கக் கூடியவை. பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி சீனு. ஸ்ரீ அண்ணா எங்களுக்கெல்லாம் தெரிந்தவரா.

  ReplyDelete
 3. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல, இதுக்கெல்லாம் தொடரும் போட்டா எப்படி

  ReplyDelete
 4. செண்பகாதேவி அருவி செல்வது எல்லாம் சர்வசாதாரணம்... அதற்கு மேலே தேனருவி சென்றதில்லையா...?

  ReplyDelete
 5. விவரித்த விதம் அருமை.அந்தப் பாட்டி என்ன சொல்லப் போகிறார்?

  ReplyDelete
 6. வணக்கம்
  விவரமாக சொல்லியுள்ளீர்கள்.. படித்த போது சென்று வந்த ஒரு உணர்வுதான் பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. பிரமிக்க வைக்கும் பயணம். தொடர்கிறேன்.

  ReplyDelete
 8. "தெரிந்த இடம் , தெரியாத தகவல்களை எதிர்நோக்கி" ஆமாம் நண்பா நானும் அந்த பாட்டியை பார்த்திருக்கின்றேன் ஆனால் பேசும் தைரியம் அப்பொழுது என்னிடம் இல்லை !!!! #வீட்டிற்குதெரியாமல்விசிட்செய்ததன்காரணமாகஉடன்ஒட்டிக்கொண்டிருந்தபதட்டத்தினால்!!!!!!

  ReplyDelete
 9. அருவிக்குளியல் என்றாலே ஆனந்தம்தான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. செண்பகாதேவி அருவி தொடங்கும் பாறை மேலிருந்து (போட்டோ போட்டிருக்கிறீர்களே அந்த இடத்திலிருந்து) கீழே தடாகத்தில் குதித்து நீந்தியிருக்கிறேன், நான் +2 படிக்கும் போது. இப்போது பயமாய் இருக்கிறது.

  ReplyDelete