30 Jan 2015

இசை - அட்டகாசமான த்ரில்லர்

மதியசாப்பாடு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தான் அந்த போஸ்டர் கண்ணில் தென்பட்டது, இசை @ மேடவாக்கம் குமரன் என்று. உடனடியாக மெட்ராஸ் பவனுக்கு போன் செய்தேன் 'சிவா இசை எப்படி இருக்கு, பார்க்கலாமா', 'சீனு கொஞ்சம் வொர்க் இருந்தது. பார்க்க முடியல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க' என்றார். அடுத்த போன் ஆவிக்கு 'பாஸ் இசை' என்றேன். 'சாரி பாஸ் ஈவ்னிங் தான்' என்றார். சரி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை நாமே களத்தில் இறங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஒருவேளை இவர்கள் 'மொக்கையா இருக்கு' என்று கூறியிருந்தால் கூட பார்த்துவிடலாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். காரணம் 'படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டாட்'.நானும் நண்பனும் சரியாக இரண்டு மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்றிருந்தாலும் 'படம் இன்னும் முடியல, வெயிட் பண்ணுப்பா' என்ற பதில்தான் கிடைத்தது. சிவா முன்பே கூறியிருந்தார் 'படம் மூனே கால் மணிநேரம் சீனு, பொறுமைய சோதிக்குதான்னு பார்த்து சொல்லுங்க' என்று. அப்படி இப்படி என்று படம் முடியும் போது மணி மூன்றே கால். கல்லூரி மாணவர்களின் பெரிய பட்டாளம் ஒன்று வந்திருந்தது. அவர்கள் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். காரணம் எஸ்ஜே சூர்யா இளசுகளின் பல்ஸ் அறிந்தவர். நியு, அஆ தென்காசியில் நண்பர்களோடு பார்த்த நாட்கள் நிழலாடியது. 

அரங்கம் நிறையவில்லை என்றாலும் ஒரு நூறு பேர் கூடியிருந்தோம். குமரன் தியேட்டர் குறித்து என் பரதேசி விமர்சனத்தில் ஒருவரி எழுதியிருந்தேன் பரதேசி கதை நடந்த காலத்தில் கட்டப்பட்ட தியேட்டர் என்று. இன்னமும் அரங்கு அப்படித்தான் இருக்கிறது. ஏரியாவின் முக்கியமான பகுதியில் இருக்கும் அரங்கத்தை இன்னும் கொஞ்சம் மோசமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் பெஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் என்று கூறலாம். 

சாதாரண நாட்களிலேயே நான் கதையை எழுதமாட்டேன். அதிலும் இது த்ரில்லர் வகையறா வேறு. தயவுசெய்து எங்கேனும் கதையைப் படித்துவிட்டு படம் பார்க்க சென்று விடாதீர்கள். அப்புறம் ஒரு நல்ல திரைக்கதை அனுபவத்தை இழந்து விடுவீர்கள்.  

இசை திரைப்படம் குறித்து ஒரு செய்தி உலவி வந்தது. இரு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் போட்டி/சண்டையே கதை,  அவ்விருவரும் இளையராஜா ரஹ்மான் என்று. இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை என்பது மிகச்சரியே என்றாலும் தயவுசெய்து அவ்விடத்தில் இளையராஜாவையும் ரஹ்மானையும் பொருத்திப் பார்க்காதீர்கள். சில சம்பவங்கள் படத்தில் வருவது போல் நடந்திருக்கலாம் என்றாலும் அந்த சம்பவங்களின் அதீத கற்பனையாக எஸ்.ஜே.சூர்யா வளர்த்திருக்கும் கதையே இசை. 

சத்யராஜ் குரு, மிக மிக தலைக்கனம் பிடித்த ஆள், அந்த அகம்பாவம் அவருடைய இசைச் சக்கரவர்த்தி நாற்காலியை அவருடைய சிஷ்யன் எஸ்.ஜே.சூர்யா விடம் கொடுக்கிறது. தன்னை மிஞ்சி வளர்ந்து நிற்கும் சிஷ்யனைப் பழிக்குப் 'பலி' வாங்க சத்யராஜ் செய்யும் சாகசமே இசை என்று கதையை ஒற்றை வரியில் சுருக்கலாம்.

சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் போட்டி போட்டுக் நடித்திருகிறார்கள் என்பது நிச்சயம் டெம்ப்ளேட் தான். அதிலும் சத்யராஜின் பாடி லாங்க்வேஜ், செம.     

முதல் பாதி கொஞ்சம் நீளம், இழுவையும் கூட. தேவையில்லாத காட்சிகள் என்று நிறைய இருக்கிறது. சிவாவுக்கும் ஜெனிக்கும் இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் அப்படியே எஸ்.ஜே.சூர்யாத்தனம். இதுபோன்ற குறும்புக் காட்சிகளை வைக்க அவரால் மட்டுமே முடியும். இப்படியான காட்சிகளில் எல்லாம் கல்லூரி மாணவர்களின் விசில் பறக்கிறது என்பது ஆங்காங்கு மானே தேனே பொன்மானே போல் சேர்த்துக் கொள்ளுங்கள். ரொமான்ஸில் வசனம் எப்படி என்பதை என்ன வார்த்தை கொண்டு நிரப்ப என்று தெரியவில்லை, படம் முழுக்கவே வசனம் செம. வசனங்களில் ந்யு பாதி அஆ மீதியாக எழுதியுள்ளார். அதே போல் சத்யராஜை கெட்டவனாக காண்பிக்க பிரயத்தனப்படும் காட்சிகள் கொஞ்சம் ஓவராக துருத்திக் கொண்டு நிற்கின்றன. அதன் நீளத்தைக் குறைத்திருக்கலாம். சில இடங்களில், வெகு சில இடங்களில் மட்டும் இசை இரைச்சலாக இருக்கிறது. சில ரொமான்ஸ் காட்சிகள் ஒரு மெல்லிசான கோட்டிற்கு அந்தப்புரம் இருக்கும் அடல்ட் ஒன்லி காட்சிகள். குழந்தைகளோடு/குடும்பத்தோடு பார்ப்பது உங்களுக்கு நல்லதல்ல!

ஆனால் இரண்டாம் பாதி அப்படியே உல்ட்டா. தேவையில்லாத காட்சி என்று ஒரு காட்சியைக் கூட கூற முடியாது. தேவையில்லாமல் ஒரு பாடல் காட்சி கூட கிடையாது. ரியல் இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா பிரமிக்க வைக்கிறார். சத்யராஜுக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இடையே நிகழும் இசையைப் பற்றிய விவரிப்பு அட்டகாசமான கவிதை. 

இசை இசை இசை என்று வெறியெடுத்து அலையும் சத்யராஜ், இசை இசை இசை என்று அதனைக் காதலிக்கும் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யாவிற்குள் இருக்கும் இசையை அழித்து மீண்டு வரத் துடிக்கும் சத்யராஜ் என்று இரண்டாம் பாதியின் காட்சிகள் பரபரப்பாக நகரத் தொடங்குகின்றன. எஸ்.ஜே.சூர்யாவான சிவாவிற்கு தன்னுடைய ஆட்கள் மூலமாக மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார் சத்யராஜ். அப்பாவி எஸ்.ஜே.சூர்யா இசையைத் தவிர ஏதும் அறியாதவர் என்பதால் தன் மீது திணிக்கப்படும் தொல்லைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக வலு இழக்கிறார். 

ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் தன்மீது செலுத்தப்படும் இயல்பான உளவியல் தொல்லைகளின் மூலம் தன்னையே தான் ஒரு பைத்தியம் என்று நம்பும் அளவுக்கு தொல்லைகள் அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்குகிறார். படம் தன்னுடைய இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இங்கு எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குனராக விஸ்வரூபம் எடுக்கிறார். மொத்த அரங்கமும் எழுந்து நின்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இதுதான் இசை. 


கேமெரா எடிட்டிங் இசை வசனம் இவையெல்லாமே படத்தின் தூண்கள். அதிலும் வசனம் செம கிளாஸ். மிக ரிச்சான ஒளிப்பதிவு பல காட்சிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்தப்படத்தில் சற்றே வித்தியாசமாக ஒரு ஆணைக் கற்பழிக்கும் காட்சி கூட இடம் பெற்றிருக்கிறது. அந்த ஆண் எஸ்.ஜே.சூர்யா தான் என்பதையும் குறிப்பிட வேண்டுமா என்ன! கிட்டத்தட்ட வெகுநாட்களுக்குப் பின் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தி, முதல்பாதியின் சில இழுவைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர அட்டகாசமான த்ரில்லர் இந்த இசை. வேண்டுமானால் டோன்ட் மிஸ் இட் என்ற வரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 

கொசுறு : புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கும் உயிரைக் கொல்லும் என்று நாயகன் பேச வேண்டிய இந்த வசனத்தை எங்க ஊர்க்காரரான எஸ்.ஜே.சூர்யா புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கி உயிரைக் கொல்லும் என்றவாறு பேசும் நெல்லைத் தமிழை கவனிக்கத் தவறாதீர்கள் :-)

13 comments:

 1. //குழந்தைகளோடு/குடும்பத்தோடு பார்ப்பது உங்களுக்கு நல்லதல்ல!//

  ரைட்டு...

  ReplyDelete
 2. நாளைக்கு தான் பார்க்கிறேன்.. பார்த்துட்டு சொல்றேன்.. :)

  ReplyDelete
 3. இங்கன இறங்கிருக்கான்னு பார்க்கிறேன் ....

  ReplyDelete
 4. இனித்தான் பார்க்க வேண்டும்!!

  ReplyDelete
 5. எஸ்.ஜே. சூர்யா கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர்.
  நாயகன் ஆசையால் எல்லாம் இழந்தார்.
  இசை அவரை நிலைநிறுத்தும் என நம்புவோம்...

  ReplyDelete
 6. தல கான்செப்ட் இந்த படத்தில இருந்து எடுத்தது.. http://en.wikipedia.org/wiki/Mudhal_Thethi

  ReplyDelete
 7. எஸ்.ஜே.சூர்யா திரைக்கதை அமைப்பதில் எப்பவுமே கில்லாடிதான். நடிக்க வராம இருந்திருந்தா நல்லா இருக்கும். பட்... அவர் இப்படி இப்படித்தான் இருக்கணும்னு நாம எப்படி எப்படி சொல்ல முடியும்...?

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நான் உங்களை வழிமொழிகிறேன்:))) எப்டி ??? இப்டி ???
   இப்படியான ஒன்றிரண்டு பதிவுகளை படிக்கும்போது தான் உங்கள் வயது தெரிகிறது shining ஸ்டார் அவர்களே:))
   **ஏரியாவின் முக்கியமான பகுதியில் இருக்கும் அரங்கத்தை இன்னும் கொஞ்சம் மோசமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் பெஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் என்று கூறலாம். ** :))))))


   Delete
 8. வசனத்திற்காகவே பார்க்கலாம் போல...

  ReplyDelete
 9. எஸ் ..ஜே .சூர்யா பல வருடம் கழித்து வருகிறார் .மீள் வருகைக்காக வது பார்க்க வேண்டும் :)

  ReplyDelete
 10. எஸ்,ஜே. சூர்யா நடிப்பு எனக்கு பிடிப்பதில்லை. ஒரு எரிச்சலை ஏற்படுத்தும் காரணம் என்னவென்று தெரியாது.
  விமர்சனத்தை பார்க்கும்போது பாரக்கலாம் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 11. உடம்பு சுகமில்லை. இந்த வாரம் எந்த படமும் பார்ப்பதில்லை என முடிவு செய்திருந்தேன். என் முடிவை மாத்திட்டீங்களே சீனு..

  ReplyDelete
 12. படம் பற்றிய உங்கள் பகிர்வு நன்று. இசை பார்க்கும் வாய்ப்பில்லை.....

  ReplyDelete