10 Oct 2014

பெட்'ஸ் நேம் - Pet's Name

நேற்று வரைக்கும் எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது எனக்கும் அலுவலகத்தில் எனக்குக் கொடுத்திருக்கும் மடிக்கணினிக்குமான உறவு. கிட்டத்தட்ட அது என்னிடம் வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒருமுறை கூட அதன் கடவுச்சொல்லை மறந்தது இல்லை. நேற்றைக்கும் மறக்கவில்லை, ஆனாலும் எப்படியோ தப்பாக டைப்பிவிட்டேன். சிவனே என்று அதுவும் அதுபாட்டுக்கு லாக் ஆகிவிட்டது. இதற்கு முன் இப்படி ஆனதே இல்லை. இது தான் முதல்முறை.  

இந்த அலுவலகத்தைப் பொறுத்தவரையில் கடவுச்சொற்களை நியாபகத்தில் வைத்திருப்பது என்பது மிகப்பெரிய இம்சை. அதிலும் மாதம் ஒருமுறை ஒவ்வொன்றையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். மாற்றியதை நியாபகத்தில் வேறு வைத்திருக்க வேண்டும். போதாகுறைக்கு எந்த ஒரு பக்கத்தைத் திறக்க வேண்டுமாயினும் அதற்கென இருக்கும் பிரத்யோக கடவுச்சொல்லை கொடுக்கவேண்டும். அதுவும் முக்கா முக்கா மூணு முறை தான், நான்காவது முறை லாக் ஆகிக்கொ'ல்லு'ம். 

நேற்றைக்கு என்னுடைய மடிக்கணினியில் முதன்முறை மட்டும் தான் கடவுச்சொல்லை தவறாகக் கொடுத்ததாக நியாபகம். என் மேல் என்ன காண்டோ ஒவ்வொரு முறையும் தவறு என்றே கூறி, நான்காவது முறை இறுக்க ஒரு தாழ்ப்பாளைப் போட்டு மூடிக்கொண்டது. 

ஆண்டவன் முன்வாசல அடச்சா பொரவாசல தொறக்காமலா போயிருவான். பாஸ்வேர்ட் ரெகவரி ஆப்சன் என்று நான்கு கேள்விகளைக் கேட்டது. அவற்றிற்கான பதிலை ஒரு வருடம் முன்பு பதிந்தது. முதல் மூன்று கேள்விகளும் வழக்கமான பிறந்த ஊர் எது, பிடித்த கலர் எது, பிறந்த தேதி எது போன்ற கேள்விகள் தான். பதில் மறந்து போகக்கூடிய அளவுக்கு சிரமமான கேள்விகள் அல்ல என்பதால் பிரச்சனை இல்லை.

ஆனால் இந்த நான்காவது கேள்விதான் என்னைப் போட்டு படுத்திவிட்டது. whats your pet's name?. 

'பெட் நேம்', எனக்கென ஒரு ஈமெயில் கிரியேட் செய்யும் போதுதான் இந்த வார்த்தையையே கேள்விபட்டேன். பொதுவாகவே ஆக்ஸ்போர்ட் லிப்கோ போன்ற டிக்ஸ்னரிகளை விரல்நுனியில் வைத்திருப்பவன் தான் என்ற போதிலும், இந்த வார்த்தை இருந்த பக்கம் மட்டும் கிழிந்துவிட்டது போல. எனக்கு ஈமெயில் கிரியேட் பண்ண சொல்லிக்கொடுத்த அந்த அண்ணனிடம் கேட்டேன் 'ண்ணே அப்டின்னா என்னன்னே', 'அதுவாடா உன்ன வீட்ல செல்லம்மா கூப்டுவாங்க இல்ல, அது தான் பெட் நேம்' என்றார். அன்றிலிருந்து எங்கு பெட் நேம் என்று இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு சீனு என்று எழுதிவிடுவேன். அதுவும் ***** என்று தானே காட்டப் போகிறது, அதனால் என்ன எழுதினேன் என்று யாருக்கும் தெரியாது.

ஒரு முறை எதோ ஒரு பாரத்தில் பெட்'ஸ் நேம் என்று இருந்த இடத்திலும் சீனு என்று அடித்துத் தொலைய அதுவும் ****** என்று காண்பிக்காமல் சீனு என்றே காட்டித்தொலைய, அசிங்கபட்டான் சீனு. 'பாஸு பெட் நேம் ன்னு இருந்தா தான் உன் செல்ல பேரு, பெட்ஸ் நேம்ன்னு இருந்தா உங்க வீட்ல வளர்க்குற வளர்ப்புப் பிராணி பேர கொடுக்கணும்' என்றான் மணி. 'இல்ல மணி எந்த இடத்துல பெட் நேம்ன்னு இருந்தாலும் சீனுன்னு தான் கொடுப்பேன், மத்தபடி எனக்கு தெரியும்' என்று சமாளித்தேன். அதன்பின்னும் பெட் என்றாலும் பெட்'ஸ் என்றாலும் சீனு தான். காரணம் எங்கள் வீட்டில் நாங்கள் தான் பெட்டே வளர்க்கவில்லையே. 

ஆவடியில் இருந்த போது இரண்டு வருடம் ஒரு பூனையை வளர்த்தேன். நான் வளர்க்கவில்லை. அதுவாக என்னோடு சேர்ந்து வளரத் தொடங்கியது என்றும் சொல்லலாம். போனால் போகட்டும் என்று எனக்கு சோறு போட்ட அப்பா அதற்கு பால் ஊற்றி வளர்த்தார். அது எங்கள் வீட்டு பெட் இல்லை என்றாலும் அது எங்கள் வீட்டு பெட் தான். வேண்டுமானால் 'பேக் பெட்' என்று வைத்துக் கொள்ளுங்கள். காலையில் அது எழுந்துவிட்டால் நாங்களும் எழுந்து விடவேண்டும். இல்லை என்றால் வீட்டுக்குள் நுழைந்து அதன் அட்ராசிட்டியை தொடங்கிவிடும் அந்தக் குட்டிசாத்தான். அதைப்பற்றி பின்னொரு நாளில் ஒரு பெருங்குறிப்பு வரைகிறேன். இப்போது இந்த அளவில் போதும். 


லேப்டாப் ரெகவரிக்கு நான்காவது கேள்வியான 'யுவர்ஸ் பெட்'ஸ் நேம்' என்று கேட்ட கேள்விக்கு 'சீனு' என்று கொடுத்தேன். முறைத்தது. 'லேப்டாப்' என்று கொடுத்தேன் கெட்டவார்த்தையால் திட்டியது. இதுலும் மூன்று முயற்சியா இல்லை எத்தனை முயற்சி என்று தெரியவில்லை. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை. நன்றாக மூச்சை ஒருமுறை இழுத்து விட்டேன். சந்திரமுகியில் ரஜினி சந்திரமுகியிடம் இருந்து ஜோதிகாவை எப்படி காப்பற்றுவது என்று சிந்திப்பதற்காக தன் கைகள் இரண்டையும் முகத்தின் மீது வைத்து ஆழ்ந்து யோசிப்பரே அப்படித்தான் யோசித்தேன். அப்படியும் என்ன பெட் நேம் கொடுத்தேன் என்று தெரியவில்லை. எப்படியாவது கண்டுபிடித்தே ஆகவேண்டும். இதுவெல்லாம் ஒரு சாதனைன்னு எங்ககிட்ட சொல்றியான்னு நீங்க கேட்கலாம். இது என்னோட வேதனை பாஸ் வேதனை.

ஒருவேளை நீங்கள் அதிதீவிர தமிழ் சினிமா ரசிகர் என்றால் நான் இந்நேரம் என்ன பெட்நேம் கொடுத்து இருப்பேன் என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கலாம். ஏன்னா ஹீரோக்கு தான் படத்தோட ட்விஸ்ட் என்னன்னு தெரியாது. பக்ஷே ரசிகனுக்கு தெரியும். எஸ் மூணாவது தடவ என்னோட ஆழ்மனசோட அடியாழத்துக்கு போய் சரியான பதில கண்டுபிடிச்சிட்டேன். ஐ ரெகவர்ட் மை பாஸ்வேர்ட். 

அப்ப பெட்'ஸ் நேம்ல என்ன பதில் கொடுத்தேன்னு கேட்கறீங்களா, நான் தான் என்னோட பெட்டுக்கு பேரே வைக்கலையே. அதுனால நான் கொடுத்த பதில் 'poonai'. 

இதன் மூலம் சொல்ல வரும் இலக்கியத்தரமான ஆகச்சிறந்த மெசேஜ் :

எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவாரு நான் ஐன்ஸ்டீனுக்குப் பேரனாப் பொறக்க வேண்டியவன் ஆனா அவருக்குப் பேரானாயிட்டேன்னு. அவரு சொன்னது எவ்ளோ உண்மைன்னு எனக்கு நேத்து தான் தெரிஞ்சது.  

10 comments:

 1. :D சூப்பர் ! பாஸ்வேர்ட் ரெகவர் ஆனவுடன் ஜென் நிலை அடைந்திருக்க வேண்டுமே..

  ReplyDelete
 2. அருமை படிக்க படிக்க சுவாரஸ்யம்தான் போங்க!

  ReplyDelete
 3. தம்பி படிச்சி மெர்சலாயிட்டேன் ... சோக்கா கீதுப்பா ....

  ReplyDelete
 4. இந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு. சில இடங்களில் ஒரே மாதிரி கொடுத்து விடுவது நல்லது என்று தோன்றினாலும் பாதுகாப்புக் காரணங்களால் கெடுதி என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்களே.... !

  சுவாரஸ்யமாக இருந்தது உங்கள் கஷ்டம் படிக்க! (என்னா வில்லத்தனம்!)

  ReplyDelete
 5. ஒரு முறை வலைபாயுதேவில் படித்தேன். இன்னொரு காதலி எனக்கு கஷ்டமில்லை, ஆன பாஸ்வோர்டை எத்தனை முறை மாத்துறது# இப்படிப் பட்ட தலைமுறை இளைஞர் ஒரு பெட்டுக்கே வழியில்லாமல் இருப்பது தெரியவரும் போது சீனுவுக்கு பீச் பக்கம் ஒரு சிலை வைக்கலாம் னு தோணுது:)))
  'பாஸு பெட் நேம் ன்னு இருந்தா தான் உன் செல்ல பேரு, பெட்ஸ் நேம்ன்னு இருந்தா உங்க வீட்ல வளர்க்குற வளர்ப்புப் பிராணி பேர கொடுக்கணும்' ** அப்போ உங்கவீட்டுல உங்களைதான் பேட்டா வளர்த்தார்கள் னு சொல்லுங்க:)(ஏன்னா pet என்றால் செல்லம் என்று பொருள் அல்லவா?!)

  ReplyDelete
  Replies
  1. //அப்போ உங்கவீட்டுல உங்களைதான் பேட்டா வளர்த்தார்கள் னு சொல்லுங்க//

   ஹஹாஹா சகோதரி நாங்கள் சொல்ல வந்த ஒன்றை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!!! நன்றி நன்றி!!

   Delete
 6. "Labels: இந்தப் பதிவுக்கு லேபில் ஒன்னுதான் கொறச்சல் :-)"- Ultimate...

  ReplyDelete
 7. சத்தியமா சுவாரஸ்யமான பதிவு சீனு! உங்க கஷ்டம் எங்களுக்கும் நேர்ந்தது உண்டே! அதுவும் இந்த பாஸ்வேர்ட் ஸ்ட்ரெங்க்த் அப்படின்னு எல்லாம் என்னென்னவோ சொல்லி குட்டைய வேற குழப்பும்.....கம்ப்யூட்டர் லாக் ஆகி, பாஸ்வேர்ட் ரெக்கவர் பண்ண முடியாம....அந்தப் பூட்டை உடைக்கப் பட்டக் கஷ்டம்.....திருடன் கூட ஈசிய உடைச்சுருவான் போல...ம்ம்ம்

  ReplyDelete
 8. இன்றைய " கம்ப்யூட்டர் " யுகத்தில் பாஸ்வேர்டு குழப்பத்தில் சிக்கி முழிக்காதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை ! சுவாரஸ்யமான பதிவு !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
 9. இணையத்தில எதுல நுழைஞ்சாலும் ரெஜிஸ்டர் பண்ணு , லாகின் பண்ணுன்னு தொல்லைதான். எத்தனை கடவு சொல்லைத்தான் ஞாபகம் வச்சுக்குறது. ஒரு பாஸ் வோர்டையே ஞாபகம் வச்சுக்க முடியல. ரெகவரிக்காக கேக்கற நிறைய கேள்விக்கு சொன்ன பதிலை எப்படி நினைவுல வச்சுர்க்க முடியும்.
  இதெல்லாம் கடவு(ள்) செய்யற சோதனை .

  ReplyDelete