2 Oct 2014

நவகாளி கலவரம் - மகான் காந்தி மகான் - சாவி


நவகாளி கலவரம் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். ஒருசாரரைக் கேட்டால் கோத்ராவை விட மோசமான கலவரம் என்பார்கள், இன்னொரு சாரரைக் கேட்டால் ஹிந்துக்களுக்கு நிகழ்ந்த அநீதி, இதற்கு பலசாராரும் உடந்தை. காந்தியின் செயல்பாடுகளும் உவப்பானதாக இல்லை என்று கூறுவார்கள். அந்த பஞ்சாயதிற்குள் எல்லாம் நான் நுழைய விரும்பவில்லை. அவரவர், அவரவர் சிந்தனைகளின்படியும் ஆராய்ச்சியின்படியும் எது சரி என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்களோ அதற்கே வந்து கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். இப்போது நவகாளிக்கு வருவோம். 

நவகாளி வங்காளத்தில் இருக்கும் முக்கியமான பகுதி, இங்கு இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. கலவரம் ஆரம்பித்த - நடைபெற்ற -  காந்தி உள்ளே வருவதற்கு முந்தைய பகுதியை உங்கள் வரலாற்று ஆர்வத்திணை வளர்க்கும் பொருட்டு சிரமேற்கொண்டு நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

கலவரம் கட்டுக்குள் அடங்காமல் காட்டுத்தீ போல் பரவுகிறது. போலீசாருக்கு அடங்கவில்லை எனில் வான்வழித் தாக்குதல் மூலம் கட்டுபடுத்துங்கள் என்று பிரிடீஷாரிடம் முறையிடுகிறார் நேரு. கலவரத்தை நிறுத்தக் கோரி அத்தனை இந்தியத் தலைவர்களும் நவகாளிக்கு வந்து குமிகிறார்கள். ஆனாலும் கலவரம் நின்றபாடில்லை. இப்போது காந்தியே களத்தில் இறங்குகிறார், அனைவருக்கும் தெரியும் காந்தி களத்தில் இறங்கினால் நிலைமை கட்டுக்குள் வரும் என்று, நடந்ததும் அது தான். நவகாளி முழுவதும் கலவரம் அடங்க வேண்டி அமைதி ஊர்வலம் நடந்ததத் தொடங்கினார் மகான் காந்தி மகான். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத்தொடங்கியது கலவரம். நிற்க. இனி பேசப்போவது காந்தியைப் பற்றி மட்டும் அல்ல.


இப்போதெல்லாம் செய்தி சேகரிக்கும் பொருட்டு நிருபர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள். அதையெல்லாம் விட அதிகமான ரிஸ்க் எடுத்து நேரடி ரிப்போர்ட் எடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து நவகாளி நோக்கி பயணிக்கிறார் தமிழ்ப் பத்திரிக்கையாளர் ஒருவர். இப்போது இருப்பது போல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நேரடிப் போக்குவரத்து இல்லாத காலம். பேருந்து ரயில் படகு நடை என்று கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்கிறார் அப்பத்திரிக்கையாளர். வங்காளத்தில் சந்திக்கும் தன் நண்பர் மூலம் காந்தியையும் கண்டுபிடித்து விடுகிறார். அவர் வேறு யாருமில்லை. அப்போது கல்கி நிறுவனத்தில் மூத்த பத்திரிக்கையாளராக பணிபுரிந்த திருவாளார் சாவி அவர்களே அந்தப் பத்திரிக்கையாளர். 

தான் காந்தியை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை கடவுள் சந்நிதானத்தில் சயனத்தில் இருக்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டு பேரானந்தம் அடைகிறார் சாவி. அதன்பின் நவகாளியில் காந்தியுடனான பயணத்தில் நிழல்போல் தொடர்கிறார். 

காந்தியின் நவகாளி அமைதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள வந்திருக்கும் இந்தி வங்காளம் ஆங்கிலம் தெரிந்த பத்திரிக்கையாளருடன் ஒருவராக சாவியும் ஐக்கியமாகிறார். அங்கு மாணிக்கவாசகம் என்ற தமிழ் தெரிந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் இருக்கிறார். மாணிக்கவாசகம் தமிழ் தெரிந்த அமெரிக்க பத்திரிகை நிறுவனத்திற்காக வேலை செய்யும் பத்த்ரிக்கையாளர். எனவே அங்கிருப்பவர்களில் சாவி மட்டுமே ஒரேஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளர். சாவியின் எழுத்து நடை ஒரு மெல்லிய குறும்பு கலந்தே வெளிப்படுவது சுவாரசியம்.  

நவகாளி பகுதியில் காந்தியுடன் சேர்ந்து அவர் பயணித்த அனுபவங்களை ஒரு பயணிக்கக் குறிப்பைப் போல எழுதியுள்ளார். வானதி வெளியீடாக வந்த அந்தப் புத்தகம் வாத்தியார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. காந்தி ஜெயந்தியான இன்று தற்செயலாக அதைப் படிக்க நேரிட்டு அதன் தாக்கத்திலேயே இதை எழுதி கொண்டுள்ளேன். 

காந்தி என்பவர் மனிதர் இல்லை, மகான் இல்லை, மகாத்மா இல்லை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவரை ஒரு மாபெரும் சக்தியாக இறைவனுக்கு இணையாக இந்தியா உருவகித்துக் கொண்டிருக்கிறது என்பதை சாவியின் அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கடவுள் ஏதாவது சொன்னார் என்றால் நீங்கள் மறுப்பீர்களா அப்படித்தான் காந்தியை ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். அவர் வாக்கு கடவுள் கொடுக்கும் வரத்திற்கு இணையானது என்கிறார்கள். 

கலவரம் நடந்த ஒவ்வொரு பகுதியிலும் காந்தியின் பிராத்தனையில் கலந்து கொள்ளவும் அவர் பேச்சை (ஹிந்தியில் தான் பேசுவார், மக்களுக்கு ஹிந்தி புரியாது, வாங்காள மொழிபெயர்ப்பாளர் கூடவே சென்றுள்ளார்) புரியாவிட்டாலும் கேட்டு பயனுறவும் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறார்கள் மக்கள்.

அந்தப் புத்தகத்தில் கொசுறாக காந்தி தமிழகத்தில் பங்கு கொண்ட கூட்டங்களையும் அதில் தான் பங்கு கொண்ட விதத்தையும் பற்றி எழுதியுள்ளார். அப்போதே மாம்பலத்தில் இருந்த ஜன நெருக்கடியையும் போக்குவரத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அதாவது இப்போது இருக்கும் நிலைக்கு இம்மி பிசகாமல் அப்போதும் அப்படித்தான் இருந்துள்ளது.  

தென் இந்தியாவில், காந்தி தான் பங்குகொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது வேறொரு விசயத்தையும் குறிப்பிட்டுள்ளார், அது

'மனிதனுக்கு பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப்போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாசையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளுக்கான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியம் அல்ல'   

(மேற்கூறிய அந்த வரிகளை சும்மா ஒரு தகவலுக்காகத்தான் கூறினான். வேறு எதனுடனும் தொடர்புபடுத்தி குழம்பிக்கொள்ள வேண்டாம். :-) )

இந்தப் புத்தகத்தைப் வாசித்த பின் காந்தி மீதான என் மதிப்பு இன்னும் ஒருபடி கூடியிருப்பது நிதர்சனம். இதுபோதாது. காந்தியைப் பற்றி இன்னும் அதிகமாக வாசிக்க வேண்டும். 

12 comments:

 1. நல்ல பதிவு! நவ காளி சம்பவத்தைப் பற்றி சாவி அவர்கள் எழுதியதை வாசித்திருக்கின்றோம்! எப்போதோ. காந்தியைப் பற்றிய நம் ஆதர்சம் விரிவடையும், இந்தப் புத்தகத்தை படித்தால் சாவியின் அருமையான எழுத்துக்களில்.....

  (அப்படியே சாவியின் வாஷிங்க்டனில் திருமணம் வாசித்திருக்கின்றீர்களா சீனு? ஹையோ சிர்த்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்...அந்த அளவு ஹாஸ்யம் அது!)

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி தல தேடிப்படிக்கின்றேன்.

  ReplyDelete
 3. குறுகிய கால அவகாசத்தில் படித்தாலும் கூட ரசித்துப் படித்திருக்கிறாய். ஊன்றி கவனித்துப் படித்திருக்கிறாய் என்பதை இந்தத் திறனாய்வு தெளிவாகப் புலப்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சி. வடநாட்டிலிருந்து தென்னாட்டின் கடைக்கோடி இந்தியன் வரை “காந்தி என்ன சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்’ என்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை விதைப்பது என்ன சாமான்ய விஷயமா...? வாழ்க்கையில் முன்னுதாரணமாக வாழ்ந்து சாதித்துக் காட்டிய மகாபுருஷன் காந்தியார்.

  உன் பதிவில் ஒரு திருத்தம் : சாவி, நவகாளி யாத்திரையை கவர் செய்தது கல்கி பத்திரிகைக்காக அல்ல... ஆனந்த விகடன் பத்திரிகைக்காக. கல்கி அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார். சாவி, மணியன் ஆகியோர் உ.ஆ.க்களாக இருந்தார்கள்.

  ReplyDelete
 4. கடைசியில் சந்திப்பு என்பது மிகச் சில் வார்த்தைகளில் அடங்கி விடக் கூடியதுதான். சாவியின் எழுத்துத்திறமை விரிந்த பதிவாக இருக்கும்.


  'ஹே ராம்' படத்திலும் நவகாளி கலவரம் சம்பந்தப்பட்ட காட்சி இருக்கும்.

  ReplyDelete
 5. காந்தி ஒரு ஆச்சர்யமான மனிதர்.ஐன்ஸ்டீன் போன்றவர்களையும் ஈர்த்தவர்.அவரை பற்றி தெரிந்து கொள்ள முனைவது வரவேற்கத் தக்கது. நானும் அவ்வப்போது காந்தி பற்றிய நூல்களை படிப்பது வழக்கம் கொண்டிருக்கிறேன்.
  காந்தியைப் பற்றி ஏராளமான கட்டுரைகளை ஜெயமோகன் அவர்கள் எழுதி இருக்கிறார். காந்தியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு அற்புதமாக விடை அளித்துள்ளார். அவற்றைப் படிக்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படத்தான் செய்கிறது.

  ReplyDelete
 6. இதுவரை அறிந்திராத செய்தி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. விரிவான கட்டுரை.. காந்தியை போற்றுவோம்..

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள அய்யா திரு.சீனுகுரு அவர்களுக்கு,

   வணக்கம். நவகாளி கலவரம் ஓர் அருமையான பதிவு அய்யா.
   ‘அவரவர் சிந்தனைகளின்படியும் ஆராய்ச்சியின்படியும் எது சரி என்று ஒரு முடிவுக்கு வருகிறீர்களோ அதற்கே வந்து கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். இப்போது நவகாளிக்கு வருவோம்‘.
   -அவரவர் முடிவுக்கு விடுவது நல்ல சிந்தனை.
   ‘ தான் காந்தியை முதன் முதலில் சந்தித்த நிகழ்வை கடவுள் சந்நிதானத்தில் சயனத்தில் இருக்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டு பேரானந்தம் அடைகிறார் சாவி. அதன்பின் நவகாளியில் காந்தியுடனான பயணத்தில் நிழல்போல் தொடர்கிறார்.‘
   ஆசிரியர் சாவி பற்றி உயரிய எண்ணம் வருகிறது.


   காந்தி என்பவர் மனிதர் இல்லை, மகான் இல்லை, மகாத்மா இல்லை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவரை ஒரு மாபெரும் சக்தியாக இறைவனுக்கு இணையாக இந்தியா உருவகித்துக் கொண்டிருக்கிறது என்பதை சாவியின் அனுபவங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கடவுள் ஏதாவது சொன்னார் என்றால் நீங்கள் மறுப்பீர்களா அப்படித்தான் காந்தியை ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். அவர் வாக்கு கடவுள் கொடுக்கும் வரத்திற்கு இணையானது என்கிறார்கள்.
   நல்ல அருமையான கருத்து. படித்துப் பரவசம் அடைந்தேன். மனிதன்தான் கடவுளைப் படைத்தான். ஆனால் இங்கே மனிதன் கடவுளாக காட்சி தருகிறார்.
   அய்யா நானும் மகாத்மா காந்தி பிறந்த நாளுக்காக ஒரு கவிதையும், மீண்டும் மகாத்மா...என்று மற்றொரு கவிதையும் எழுதியுள்ளேன்.
   எனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
   நன்றி.
   -மாறாத அன்புடன்,
   மணவை ஜேம்ஸ்.
   manavaijamestamilpandit.blogspot.in

   Delete
 9. நன்னா போற்றுங்கோ

  ReplyDelete