10 Sept 2014

அழிக்க முடியா நா(யக)ன் - சிறுகதை


இப்போதெல்லாம் கனவில் மிக விசித்திரமான மனிதர்களையே சந்திக்க நேரிடுகிறது, எங்கிருந்தோ வெளிப்படும் சில தெளிவில்லாத பிம்பங்களில் இருந்து வெளிப்படும் அவர்கள் என்னை நெருங்க நெருங்க இன்னும் விநோதமாய்த் தெரிகிறார்கள். இன்னதென்று கூற முடியாத மூர்க்கத்தை அவர்களிடம் காண்கிறேன்.

அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவனாய்ப் பிரிந்து வரும் அவன் கரும்புகை சூழ மிகவேகமாக மிகப்பெரிய சீற்றத்துடன் என்னை நெருங்கி வருகிறான். என்னைக் கொல்லும் முயற்சி, நிர்பந்தம் அவனிடம் தெரிகிறது. எனக்கும் அவனுக்குமான பகை எந்த ஜென்மத்தில் எப்போது எங்கே தொடங்கியது என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் அவன் முகத்தில் தெரியும் கொலைவெறியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இக்கணத்தில் என்னால் ஆகக்கூடிய செயல் என்று ஒன்று உண்டென்றால் அது ஓடுவது தான். அவன் கண்ணில் படாமல், அவன் கண்ணுக்குத் தெரியாத இடம் நோக்கி ஓடுவது.   


கற்பனைக்கே எட்டாத அந்தப் பெருவெளியில் வேகமாக ஓடத்தொடங்குகிறேன், முடிவில்லாத ஓட்டம், அதே நேரம் களைப்படையக் கூடாத ஓட்டம். இருந்தும் ஒரு கட்டத்தில் நான் தோற்றுப் போய்விடுகிறேன். 

என்னை நெருங்கி எனக்கு மிக அருகில் நிற்கும் அவன் முகம் தெளிவாகத் தெரிகிறது. நன்கு அறிந்த முகம், ஆனாலும் இன்னார் என்று அறிந்து கொள்ள முடியாத, மூன்று நான்கு முகக்கலவையில் உருவானதொரு முகம். குரூரத்தின் மிச்சத்தை மட்டுமே அந்த முகத்தில் தெளிவாக அடையாளம் காணமுடிந்தது. களைப்பில் பயத்தில் மூச்சை மேலும் கீழும் இழுத்துவிட்டுக் கொண்டேன். 

அவனுக்குத் தேவை நான். உயிரோடிருக்கும் நான். அதேநேரம் என்னுடைய தேவையும் அதே நான்தான். மீண்டும் ஓடத் தொடங்குகிறேன். ஓட முடியவில்லை. ஏதோ ஒரு சூழ்ச்சி வலை என்னைக் கட்டுண்டது போல, என்னுடைய பலம் மொத்தமும் இழந்து போனதைப் போல ஓர் உணர்வு. இனி ஆவதற்கு ஒன்றுமில்லை. 

என்னில் இருந்து விலகி என்னையே வேடிக்கைப் பார்க்கத் தொடங்குகிறேன். மெல்ல என்னை நெருங்குகிறான், ஒருவித அச்சத்தோடு அவனை எதிர்கொள்கிறேன். இதுவரை பார்த்திரா பூச்சிகள் புழுக்கள் என்னுடலை நெருங்குகின்றன. முகத்தைச் சுற்றிலும் அடையாளம் தெரியாத பூச்சிகளின் ரீங்ககாரக் குரல்கள். அந்த அடர் மௌனத்தில், அவற்றின் ரீங்காரகளுக்கு மத்தியில் வெளிப்படும் அவனுடைய திடீர்ச்சிரிப்பு ஊசியாய் நுழைந்து என் அங்கங்களைத் துளைத்து எடுக்கிறது. ஆயுதமற்ற கைகளுடன் என்னை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனே ஒரு ஆயுதமாய்த் தன்னை மாற்றிகொள்கிறான். இல்லை அப்படி ஒரு பிரம்மையை என்னுள் ஏற்படுத்துகிறான்.   

எதிர்பாராத ஒரு கணத்தில் எனக்கும் அவனுக்குமான இறுதி யுத்தம் தொடங்குகிறது. பெரும் சண்டைக்குப் பின் நான் வீழ்த்தப்படுகிறேன். உடலில் ஓடும் கடைசி ரத்தம் கடைசி மூச்சு கடைசி உயிர் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இனியும் சமயமில்லை. நான் சாகக்கூடாது. சாக வேண்டியது நான் இல்லை. 

நொடியும் தாமதியாமல் என்னில் இருந்து விலகி என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் என் உடலினுள் புகுந்து கொள்கிறேன். இனி நடக்கப்போவது தான் கடைசி யுத்தம். எனக்கும் அவனுக்குமான கடைசி யுத்தம். அதுகுறித்த எவ்வித அச்சமும் அவன் முகத்தில் இல்லை. அதே கொலைவெறி. அந்தக் கரும் இருட்டில் யாருமற்ற பெருவெளியில் இருவருக்குமான யுத்தம் தொடங்குகிறது. தெளிவில்லாத முரட்டுத்தனமான யுத்தம் அது. சுற்றிலும் கரும்புழுதிப்படலாம். மாயைக்குள் மாயைக்குள் மாயையாய் நீளும் மாயை அது . 

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் அவன் மூர்க்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை. ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். மீட்டெடுப்பது வெற்றியை மட்டுமல்ல, என் உயிரையும். 

தொடர்ந்த என் தாக்குதலை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவன் நிலைகுலைவது தெரிகிறது. நம்பக் கூடாது. அதுவும் சூழ்ச்சியாய் இருக்கலாம். எவ்வளவு நேரம் எங்களுக்குள் யுத்தம் நடந்தது எனத் தெரியவில்லை. என் பிடி தளர்ந்த நொடியில், அந்நொடியை எதிர்பார்த்திருந்த கணத்தில், இனி தன்னைக் கண்டே பிடிக்க முடியாதவாறு அக்கரிய இருட்டில் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான். பார்வை செல்லும் தூரம் வரைக்கும் தேடிப்பார்த்து விட்டேன் கண்ணில் சிக்கவில்லை. பேடி. ஒழிக்கப்பட வேண்டியவன். ஒளிந்து கொண்டான்.  


புது ரத்தம் பாயும் உடலில், மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னாக நிரப்பி வழியும் புது உற்சாகத்துடன் என் சிம்மாசனத்தை நோக்கி என் தேரை செலுத்துகிறேன். அவனைத் துரத்திச் செல்ல வேண்டிய கட்டாயமோ அவசியமோ எனக்கில்லை. காரணம் நாளையும் அவன் வருவான். நான் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரமாய்ப் பார்த்து என்னைத் துரத்தத் தொடங்குவான். மீண்டும் இதே போன்றதொரு யுத்தம் நடக்கும். நடந்தே தீரும். அவனுக்குத் தேவை நான். என் உயிர். அது கிடைக்கும் வரை இந்த யுத்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து கொண்டே இருக்கும். 

இப்போது நீங்கள் குழப்பிப் போகலாம். காரணமே இல்லாமல் இவ்வளவையும் உங்களிடம் நான் கூறுவதன் அவசியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு உங்கள் மூளைக்குள் ஏற்படலாம். கூறுகிறேன். காரணமே இல்லாமல் இங்கு எதுவுமே நிகழ்ந்து விடுவதில்லை. எல்லாவற்றிக்கும் காரணம் இருக்கிறது. 

அவன் ஒரு மூடன். என்னைத் துரத்தி வந்து, என்னை அழிக்க நினைத்து என்னை இல்லாமல் செய்யத் துடிக்கிறானே அவன் ஒரு மூடன். அவனுக்குத் தெரியாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அதை அவனிடம் கூறும் சந்தர்ப்பத்தை அவன் எனக்கு அளித்ததே இல்லை. இருந்தும் அதனை அவனிடம் கூறவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். 

ஒருவேளை அவனுக்கு உங்களைத் தெரிந்திருக்கலாம், உங்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை நீங்கள் அவனுக்கு அளித்திருக்கலாம் அல்லது உங்களுக்கும் அவனுக்குமான உறவில் நீங்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அவன் உங்களுக்கு வழங்கியிருக்கலாம். அதனால் தான் அதனால் மட்டும் தான் உங்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் கூறிக்கொண்டுள்ளேன். தயவு செய்து நான் கூறும் ரகசியத்தை அவனிடம் சேர்ப்பித்து விடுங்கள். 

உங்கள் கனவில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் அவனை சந்திக்க நேரும்போது அவனிடம் கூறுங்கள் 'எத்தனை முறை எண்ணத் துரத்தி வந்து அழிக்க நினைத்தாலும், என்றைக்குமே என் கனவில், என் கனவு ராஜாங்கத்தில் அழிக்க முடியா, அழிக்கப்பட முடியா நாயகன் என்று ஒருவன் உண்டு என்றால் அது நான்தான், நான் மட்டும் தான் ' என்பதை. 

- முற்றும்

படங்கள் - நன்றி வெண்முரசு

34 comments:

 1. கனவு ராஜாங்கத்தில் அழிக்க முடியா, அழிக்கப்பட முடியா நாயகன்
  ஒவ்வொருவர் கனவிலும் அவரவர் ராஜாங்கம் கொடிகட்டிப்பறக்குமோ.!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக பறக்கும் :-)

   Delete
 2. உங்கள் கனவுக்கு நீங்கள்தான் நாயகன் என்று நான் சொல்லும்போது அந்த உருவம் நான் 'உங்கள்' என்று சொல்வது தன்னைப் பற்றிச் சொல்வதாக நினைத்துக் கொண்டு விட்டால்... ? அடுத்தமுறை தூங்குவதற்குமுன் நீங்களே ஒரு பேப்பரில் எழுதி அதன் கண்ணில் படுமாறு வைத்து விடுங்கள். பிரச்னை தீர்ந்து விடும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹ அஹா ஸ்ரீராம் சார் பழிக்குப் பழியா :-)

   Delete
 3. கொடுமை

  ReplyDelete
 4. கனவுகள் கனவுகளாக இருக்கும்வரை பிரச்சினையில்லை.

  ReplyDelete
 5. உங்கள் போராட்டங்கள் பயங்கள் எல்லாம் கனவாகிப் போகவும் வெற்றிகள் எல்லாம் நிஜங்களாக மாறிடவும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மாது... அப்படியே ஆகட்டும் :-)

   Delete
 6. // அவனுக்குத் தேவை நான். உயிரோடிருக்கும் நான். அதேநேரம் என்னுடைய தேவையும் அதே நான்தான்.//

  //சுற்றிலும் கரும்புழுதிப்படலாம். மாயைக்குள் மாயைக்குள் மாயையாய் நீளும் மாயை அது .//

  Nice :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹ ஹா நன்றி விஜயன் :-)

   Delete
 7. // யாரும் எதிர்பாராத ஒரு கணத்தி..//

  யாரும் என்கிற. வார்த்தை இல்லாதிருந்தால் நன்றாக. உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. முதல்ல அது இல்லாம தான் எழுதினேன், அப்புறமா சேர்த்தேன்.. இப்போ மறுபடியும் நீக்கிட்டேன்..

   Delete
 8. // ஒழியப்பட வேண்டியவன். ஒளிந்து கொண்டான். ...//

  ஒழிக்கப்பட. வேண்டியவன் ...?

  ReplyDelete
  Replies
  1. அது செய்வினையில் எழுதி செயப்பாட்டு வினைக்கு மாற்றும் போது கவனியாமல் விட்டதால் வந்த வினை :-)

   Delete
 9. உங்களை விரட்டியது யார் அண்ணா!

  கடைசி வரை சொல்லவே இல்லை. நான் சிறு கதை அதிகம் வாசித்தது இல்லை! எனக்குதான் புரியலையா!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா முதல் இரண்டு பத்திகளில் என்னை விரட்டுவது யார் என்பதற்கான பதில் இருக்கிறது தம்பி :-)

   Delete
 10. உண்மையை சொல்லணும்னா ரொம்பவே குழப்புது! நிறைய இலக்கியவாதிகளோட பழகி உங்க ஸ்டைல் மாறிடுச்சோன்னு தோணுது! வேண்டாம்பா இந்த முயற்சி!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இலக்கியவாதியா.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சாமி.. இந்த மாதிரியும் முயன்று பாப்போம்ன்னு ஒரு சிறிய முயற்சி அவ்வளவு தான் :-)

   Delete
 11. ஒழிய வேண்டியவன் அல்லது ஒழிக்கப்பட வேண்டியவன்.. மற்றபடி தமிழ் விளையாடுகிறது - கதை புரியாவிட்டாலும்.

  ReplyDelete
  Replies
  1. அதை மாற்றிட்டேன் அப்பா சார், உங்களுக்குப் புரியும்படி எழுத வேண்டியது தான் என் அடுத்த கடமை :-)

   Delete
 12. அட யாருங்க அது விஜயன்துரை அப்பாதுரைக்கு முன்னால அதே கருத்தை சொன்னது?!

  ReplyDelete
  Replies
  1. ராமேஸ்வரம் தம்பி.. என்னைவிட நல்லா எழுத்வாப்ல :-)

   Delete
  2. நான் தாங்க அப்பாதுரை சார். :)

   Delete
  3. சீனு அண்ணா ! :)

   Delete
 13. அசாத்திய இலக்கிய நடை! தமிழ்! சீனு! சூப்பர்.....நிறைய வரிகளை ரசித்தோம்! ஃபான்டஸி கதைகள் வகைகளில், மிடீவல் பீரியடில் வந்த கதைகள் வகையில் சேர்க்கலாமோ?!!! பார்த்து சீனு ....டைரக்டர் செல்வராகவன் இதைப் படிச்சுட்ட்ட்ட்ட்ட்ட்.....டா??!!!!!!!

  சிறிய தவறுகளை பெரியவர்கள் சுட்டிக் காட்டிவிட்டார்கள்!

  மிக அருமை சீனு!

  ReplyDelete
  Replies
  1. துளசி சார் பொசுக்குன்னு எதோ பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டீங்க.. நான் பாட்டுக்கு ஒரு ஓரமா எழுதிட்டு இருக்கேன் :-)

   தவறுகளை களைந்தாயிற்று

   Delete
 14. கனவுகளிலும் “நான்!”...... :)))

  ReplyDelete
 15. என் கனவுல அவன் வந்தபோது நான் சொல்லியனுப்பியதை அவன் உன்கிட்ட சொல்லலையோ...? இப்டி போருக்கு வந்துட்டானே...? அடுத்த முறை என் கனவுப் பிரதேசத்துல வர்றப்ப காலி பண்ணி அனுப்பிர்றேன்... ‘பேன்டஸி’ வகையில் அழகான ஒரு முயற்சி ரசிக்க வைத்தது சீனு.

  ReplyDelete
  Replies
  1. அவன்தான் என்கிட்ட பேசவே சந்தர்ப்பம் கொடுக்க மட்டன்றானே.. நீங்க சொல்லிருந்தா இந்த பக்கமே வந்தருக்க மாட்டானே.. ஒரு நாலு அடி அடிச்சு சொல்லுங்க :-) இன்னிக்கு ஹெலிகாப்டர்ல வந்து குண்டு போடுறன் :-) விடுவோமா ஹெலிகாப்டர ஹேக் பண்ணி தொம்சம் பண்ணிட்டோம்ல :-)

   Delete
 16. துரத்திக் கொண்டு வந்து பின்னர் உன்னால் துரத்தப்பட்டது கோவை ஆவியாக இருக்குமோ?
  இங்க காணோமே! அதனால வந்த டவுட்டுதான் ஹிஹி

  ReplyDelete
 17. சிறுகதை என்று குறிப்பிடாமல் இருந்தால் இன்னும் கொஞ்சம் குழம்பவைத்து கதைக்கு வலு சேர்த்திருக்கும். நல்ல முயற்சி பாராட்டுக்கள்

  ReplyDelete