20 Sept 2014

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?

மதியம் ஒரு மணி. அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சிறப்புநிலை நோயாளிகளால் நிறைந்திருந்தது. சினிமாவில் காண்பிப்பர்களே அப்படியொரு பணக்காரத்தனமான மருத்துவமனை. ரத்தம் செலுத்துவதற்காக வந்த இடத்தில் அங்கிருந்த நோயாளிகளைப் பார்த்த மாத்திரத்தில் மனம் என்ன என்னவோ சிந்திக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல ரத்ததான படிவத்தை நிரப்பத் தொடங்கியிருந்தேன். ஐ.ஏ.எஸில் கூட இவ்வளவு கேள்விகள் கேட்க மாட்டார்கள் போல. அவ்வளவு நோய்களைப் பட்டியலிட்டு இருக்கிறதா இருக்கிறதா என் கேட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நோய்க்களை வாசிப்பதற்கே பயமாய் இருந்தது. தான் ஷேமமாக வாழ்வதன் நிமித்தம் இத்தனை இழுத்து வைத்திருக்கிறான் மனிதன். இதைப் பார்த்தேல்லாம் கூட மெர்சல் ஆகாத நான் 'உங்கள் ரத்தப் பிரிவு என்ற கேள்வியைப் பார்த்தும் மெர்சலாயிட்டேன்!'. 

இருபத்தி ஆறு வருடங்களாக 'இன்ன ரத்தத்திற்கு சொந்தக்காரன் நீ' என அறியப்பட்ட உங்களை திடிரென ஒருநாளில் 'நீ இந்த ரத்தம் இல்லை வேறொரு ரத்தம்' என்று மாற்றிச்சொன்னால் எப்படியிருக்கும் உங்களுக்கு. நம்பமுடியுமா? அது தான் நடந்தது எனக்கு.

இளநிலை முடிக்கும் வரையிலும் நான் எந்த வகை ரத்தத்தைத் சார்ந்தவன் என்பதை அறியும் தேவை ஏற்பட்டிருக்கவில்லை. முதுநிலை சேரும்போது ரத்தத்தின் பிரிவைக் குறிபிட்டே ஆக வேண்டும் என வற்புறுத்தியதால் ஆங்கோர் பரிசோதனை மையத்தில் சென்று பரிசோதித்தபோது 'தம்பி நீங்க ஓ பாஸிடிவ்' என்று கூறினார்கள். அனைவரிடமும் பெருமையாகக் கூறிக்கொண்டேன் 'நான் ஓ பாசிடிவ் என்று'.

இருந்தும் இதைக் காரணம் காட்டி யாராவது என்னை ரத்ததானம் செய்ய அழைத்தால் பம்மி விடுவேன். காரணம் ரத்தம் கொடுக்க அவ்வளவு பயம். இதற்காக சிலமுறை என்னை நானே கடிந்துகொண்டதும் உண்டு. கடிந்து கொள்வனே தவிர ரத்தம் கொடுப்பதற்கான தைரியம் வரவேயில்லை.

முதுநிலை கல்லூரியில் வருடத்திற்கு ஒருமுறையாவது விவேகானந்தா கழகத்தில் இருந்தோ அல்லது நிவேதிதா ரத்த வங்கியில் இருந்தோ ரத்ததான முகாம் நடத்துவார்கள். அப்படி ஒருமுறை நடத்தும் போது உங்களுடைய ரத்தம் என்ன வகையை சார்ந்தது என் அறியும் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இதுபோதாதா ஓசியில் பரிசோதனை செய்துகொள்ள யாருக்கு வலிக்கும். நான் ஓ பாசிடிவ் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்கள். அரிய ரத்த வகையினனாக இல்லாது இருப்பதில் இனம்புரியா ஆனந்தம். ஓ பாசிடிவ் தான ஈசியா கிடைக்குமே நான் எதுக்கு ரத்தம் கொடுக்கணும் என்ற எண்ணமும் என்னுள் ஏற்பட்டிருந்தது. 

நாட்கள் மெல்ல நகர, கடந்த வருடம் அலுவலகத்தில் நிவேதிதா ரத்த வங்கியில் இருந்து ரத்தம் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். உடன் பணிபுரியும் நண்பர்களும் அனைவரும் ரத்தம் கொடுக்கச் செல்ல என்னுள்ளும் ஆர்வம் பொங்கிக் கொண்டது. உள் இருக்கும் ஆர்வம் என்றாவது ஒருநாள் வெளிபட்டுத்தானே ஆக வேண்டும். இருந்தும் பயம் மட்டும் விலகவேயில்லை. 'இம்புட்டு படிச்சு என்னாத்துக்கு. ஒரு பாட்டில் ரத்தம் கொடுக்க பயப்படுறியே!" என்று என் மனசாட்சி  கிண்டல் கேலியுடன் கெக்கரிக்க ரத்தம் கொடுக்க தீர்மானித்து கிளம்பிவிட்டேன். விதியும் ஜாலியாக என் தோளில் கையைப் போட்டுக்கொண்டு என்னோடு கிளம்பியது. 

ரத்தம் கொடுக்கும் முன் முதல்கட்ட ரத்தப் பரிசோதனை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். நான் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒரு வெள்ளைப்புறா. விரலை நீட்டினேன். 'கண்ண மூடிகோங்க வலி தெரியாது என்றாள்'. பராவாயில்ல என்றபடி அவள் குண்டூசியை சோறுக்க இருக்கும் நொடியை எதிர்பார்த்திருந்தேன். குண்டூசி இறங்கிய அடுத்த நொடி அந்த கண்ணாடித் துண்டில் புள்ளி வைக்கத் தொடங்கியிருந்தது என் ரத்தம். அதில் என்னவெல்லாமோ வேதியல் வினைகளை நிகழ்த்திய அவள் மெல்ல என்னை நிமிர்ந்து பார்த்தாள். 

'சார் அப்ளிகேசன்ல ஓ பாசிடிவ்னு எழுதிருகீங்க, நல்லா தெரியுமா நீங்க ஓ பாசிடிவ் தானா?' 

'ஓ நல்லா தெரியும் நா ஓ பாசிடிவ் தான், இங்க பாருங்க ஐடி கார்ட்ல கூட ஓ பாசிடிவ் தான் இருக்கு' என்றபடி கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை அவள் முன் நீட்டினேன். 

அவள் முகம் முன்பைக் காட்டிலும் தீவிரமடைந்திருந்தது. கொஞ்சம் இருங்க என்றபடி எங்கோ ஓடினாள். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் இன்னொரு சீனியர் வெண்புறாவுடன் வந்து சேர்ந்தாள். இருவரும் என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். 'இன்னொரு தடவ டெஸ்ட் செஞ்சிரலாம்' என்றபடி புதிதாக வந்தவள் என் கையில் ஒரு குத்து குத்தினாள். இப்போது என் கண் அவள் சொல்லாமலேயே மூடிக்கொண்டது. என் மீது அவளுக்கென்ன வஞ்சமோ குத்திய குத்தில் மொத்த ரத்தமும் வெளியில் வந்துவிட்டது போல் இருந்தது.  

'மேடம் என்ன பிரச்சன, ஏன் திரும்பவும் டெஸ்ட் பண்றீங்க' 

'இல்ல சார் ரிசல்ட் ஒழுங்கா வர மாட்டேங்குது, அதான் இன்னொரு தடவ பார்க்கிறோம்' என்றார்கள். 

'என்னடா சீனு உனக்கு வந்த சோதனை' என்றெண்ணியபடி நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

இப்போது புதிதாய் வந்தவள் என்னிடம் 'சார் நீங்க எங்க ப்ளட் டெஸ்ட் பண்ணுனீங்க, ப்ளட் டெஸ்ட் செஞ்சு எத்தன வரும் ஆச்சு, நல்லா டெஸ்ட் பண்ணினாங்களா' என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள். நான் இதுவரைக்குமான என் வாழ்நாளில் ரெண்டு முறை டெஸ்ட் செய்ததையும் அதில் ஒருமுறை உங்கள் நிவேதிதா வங்கிதான் டெஸ்ட் செய்ததும் என்றும் வாக்குமூலம் அளிக்க அவர்களுக்கு என் பதில் திருப்தியாயில்லை. சோதனையும் முடிந்தபாடில்லை, மேலும் இருவர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். 'அடியே ரத்தம் கொடுக்க வந்தது ஒரு குத்தமா?' 

முதல் வெள்ளைபுறா என்னை நோக்கி வந்தாள் 'சார் நாங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவ செக் பண்ணிட்டோம். ஆனா எப்படி இது நடந்ததுன்னு தெர்ல' என்று இழுக்க நான் அவளையே வெறித்துப் பார்த்தேன். 

'சார் உங்க ப்ளட் க்ரூப் ஓ பாசிடிவ் இல்லை, ஓ நெகடிவ்' கடைசி ரெண்டு தடவையும் உங்களுக்கு தப்பா செக் பண்ணிருக்கணும் என்றபடி முதல் குண்டை தூக்கிப் போட்டாள். அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. மேலும் தொடர்ந்தாள் 'எனக்கும் இந்த டெஸ்ட் ரிசல்ட் மேல நம்பிக்கை இல்ல. உங்க பிளட் ஓ பாசிடிவ்வா இருக்கதுக்கும் சான்ஸ் இருக்கு. அதுனால வேற ஒரு நல்லா லேப்ல செக் பண்ணிருங்க. இப்ப ரத்தம் கொடுங்க நாங்களும் எங்க லேப்ல செக் பண்றோம் என்றாள். 'அப்போ நீங்க நல்ல லேப் இல்லையா' என்று கேட்கலாம் போல் இருந்தது.   


இப்போது ரத்தம் கொடுப்பதன் பயம் போய் என் ரத்தம் என்ன வகை என்று தெரிந்து கொள்வதிலான குழப்பம் மேலோங்கி இருந்தது., என்னுடலில் செருகப்பட்ட குழாய் வழியாக ஓ பாசிடிவ் வெளியேறுகிறதா இல்லை ஓ நெகடிவ் வெளியேறுகிறதா என்று எனக்கே தெரியாமல் என் செங்குருதி யாருக்கோ தன்னை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்துக் கொண்டிருந்தது. 

அதிலிருந்து ஆறு மாதங்களில் மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுப்பதற்காக அலுவலகத்தில் அவர்களே முகாம் இட்டார்கள். கடந்தமுறை நடந்த பஞ்சாயத்தைக் கூறினேன். இப்போதும் அவர்கள் குழம்பி விட்டார்கள். மீண்டும் ஒரு பரிசோதனை. முன்பு கூறியதையே அச்சுப் பிசகமால் அப்படியே கூறினார்கள். 'என்னவாவோ இருந்துட்டுப் போறேன்' என்று விட்டுவிட்டேன். என் மனதில் இருந்த குழப்பம் மட்டும் போகவேயில்லை. 

பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி என்பதால் வெளியில் சென்று டெஸ்ட் செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் தான் கடந்த வாரம் அரசன் போன் செய்திருந்தார் 'தலைவரே ஓ நெகடிவ் தேவைப்படுது, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களா' என்றார். 'தலைவரே நான் கூட ஓ நெகடிவ்ன்னு தான் நினைக்கிறன். நான் வேணா தாரேன்...' என்றபடி இழுத்தேன். 'என்னயா இழுக்கிற என்ன பிரச்சன' என்றார். 'பிரச்சனையே என் ப்ளட் க்ரூப் தான். நான் ஓ பாஸிடிவா நெகடிவா தெரியாது', நான் வாறன் நெகடிவ்ன்னா எடுத்துக்க சொல்லுங்க என்றேன்.

அப்போலோவில் கொடுத்த படிவத்தில் 'உங்கள் ரத்தப் பிரிவு?' என்ற கேள்விக்கு மட்டும் பதில் எழுதிக் கொடுக்காமல் இருந்த என்னை நோக்கி 'சார் ப்ளட் க்ரூப் எழுதிகொடுங்க' என்றாள் ரிசப்ஷன் அம்மணி. 

மேடம் அது தெரிஞ்சா எழுத மாட்டேனா, அதுல தான் கன்பீசன், நீங்க செக் பண்ணி சொல்லுங்க' என்றேன். மனதிற்குள் என்னை திட்டியிருக்க வேண்டும், வேகமாக உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் வெளியில் வந்து சார் நீங்க இப்ப டொனேட் பண்ணுங்க, நாங்க அப்புறம் செக் பண்ணிக்கிறோம் என்றாள். 'அதெல்லாம் முடியாது இப்பவே செக் பண்ணுங்க' என்றேன். 'பரவாயில்ல சார் இப்ப டொனேட் பண்ணுங்க, ஒருவேள நீங்க ஓ பாஸிடிவ்ன்னா உங்க ப்ளட்ட ரீப்ளேஸ் பண்ணிக்கலாம்' என்றாள். 'மீண்டும் ஒருமுறை மேடவாக்கத்தில் இருந்து வானகரம் வரைக்கும் அலைய முடியாது என்பதால் 'நடப்பது நடக்கட்டும்' என்று கொடுத்துவிட்டேன். 


இன்றைக்கு அப்பலோ ரத்தவங்கியில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அதில் 'சார் உங்கள் ரத்தம் என்ன வகை என்று அறியும் ஆய்வில் நீங்கள் ஓ நெகடிவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் நீங்கள் அரிய வகை ரத்தப் பிரிவினர் என்பதால் ரத்த தான முகாம்களில் உங்கள் ரத்தத்தைத் தானம் செய்யவேண்டாம். தேவை ஏற்படின் மருத்துவமனைகளில் மட்டும் தானம் செய்யுங்கள். எங்களுக்குத் தேவை எனில் தயங்காது எங்களுக்கு உதவுங்கள். நன்றி'. 

நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டது. ஆம் நான் 'ஓ நெகடிவ்'. அரிய வகை ரத்தமாம். இதைவிட அரிய வகை ரத்தமும் சில இருக்கின்றனவாம். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரு அரிய வகை ரத்தப் பிரிவினன் என்தால். 

நாளுக்குநாள் நடைபெறும் விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சை எண்ணிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் ரத்தத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரோக்கியமான மனிதன் வருடத்தில் மூன்று முறை ரத்ததானம் செய்யலாமாம். உங்களால் முடியுமானால் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ரத்ததானம் செய்யுங்கள். உங்கள் ஒரு பாட்டில் ரத்தத்திற்கு ஒரு தலைமுறையையே கடன்பட்டிருக்கலாம்...!

12 comments:

 1. இருபத்தி ஏழு வருடங்களாக 'இன்ன ரத்தத்திற்கு சொந்தக்காரன் நீ' என அறியப்பட்ட உங்க...//
  //இளநிலை முடிக்கும் வரையிலும் நான் எந்த ரத்த வகையைச் சார்ந்தவன் என எனக்குத் தெரிந்திரக்கவில்லை// இவ்விரு இடங்களும் முரணாய்த் தெரிகின்றன.. ஆமா உங்களுக்கு இப்போ எத்தனை. வயது

  ReplyDelete
  Replies
  1. இளநிலை முடிக்கும் போது நான் எந்த வகை ரத்தத்தை சேர்ந்தவன் என்று அறிந்துகொண்டேன். ஆனால் இருபத்தி ஏழாவது வயதின் ஆரம்பித்தில் என் ரத்தப் பிரிவு அது இல்லை வேறோர்ன்று என்ற முரண் ஏற்பட்டது.. இருபத்தியேழில் இருந்து ஒருவயதைக் கூட்டிக் கொண்டால் என் வயது :-)

   Delete
 2. // குத்திய குத்தியில்// குத்தில் தானே!!

  ReplyDelete
  Replies
  1. அது அது... அதுஉஉஉஉஉ :-))))))))

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வெண்புறா , தாலி :) :) செம

  ReplyDelete
 5. என்னடா இது சீனுவுக்கு வந்த சோதனை..? ரத்த குரூப் தெரியாம இருக்கலாம். ஆனா எதுன்னு இப்படி ஒரு குழப்பம் வந்ததை நான் கேள்விப்படறது இதான் மொத தடவை. (முதல்ல என் ப்ளட் குரூப் என்னன்னு குறிச்சு வெச்சுக்கணும்)

  ReplyDelete
 6. அப்போல்லோவுல , தமிழ்ப்புறாக்கள் நடமாடுவது , கொஞ்சம் ஆறுதல்தான் . பெரும்பாலும் எனக்குத்தெரிந்து , எல்லாம் ஆந்திரப்புறாக்கள்தான் அதிகம் . நான் வேலை செய்துகொண்டிருந்தபோது , ஜூனியர் என்.டி.ஆர் உதவியால் தெரிந்துவைத்திருந்த தெலுகினால் , நல்ல ரிசல்ட் கிடைத்ததெல்லாம் ஞாபமகம் வருகிறது .

  ReplyDelete
 7. முதலில் ரத்த தானம் செய்தமைக்கு வாழ்த்துகள்:) நானும் இதுவரை ரத்ததானம் செய்ததில்லை என்ற குற்ற உணர்வோடு இருக்கிறேன்:( ஆனால் கண் தானத்திற்கு எழுதிகொடுத்திருக்கிறேன். ஏனோ அதில் இருந்து இது இன்னும் நாலு பேருக்கு சொந்தமான கண்கள் என்ற அக்கறை அதிகரித்துள்ளது:)
  வெண்புறா vocabulary கிளாஸ் சகோ!!

  ReplyDelete
 8. ரத்த தானம் செய்தமைக்கு வாழ்த்துகள்.

  பல சமயங்களில் இப்படி குழப்பி விடுகிறார்கள். நானும் சில முறை ரத்த தானம் செய்ததுண்டு. இப்போது சில வருடங்களாக செய்வதில்லை!

  ReplyDelete
 9. எல்லோருமே இன்னொருதடவை அவங்கவங்க ப்ளட் க்ரூப்பை உறுதிப் படுத்திக்கணும் போல இருக்கு.
  சிறந்த தானங்களில் ரத்த தானமும் ஒன்று. வாழ்த்துக்கள்
  //அரிய வகை ரத்தப் பிரிவினர் என்பதால் ரத்த தான முகாம்களில் உங்கள் ரத்தத்தைத் தானம் செய்யவேண்டாம். தேவை ஏற்படின் மருத்துவமனைகளில் மட்டும் தானம் செய்யுங்கள்//
  இது நல்லா இருக்கே

  ReplyDelete