13 Sept 2014

புழுதி பறக்கும் பாரு - சென்னையின் சாலை வலிகள்

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடந்து மேடவாக்கத்தை நெருங்க நெருங்க காற்றின் வேகமும் குளுமையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரவினில் இப்படியொரு சுகமான காற்றை அனுபவித்து வெகுநாளாகிறது. காற்றின் வேகத்திற்கு இணையாக மெதுவாக வண்டியின் வேகத்தைக் குறைத்தேன். பஞ்சை வாரி இரைத்துக் கொண்டிருந்தது. மிதத்தல் என்பது சில தருணங்களில் தான் நிகழும். கிட்டத்தட்ட அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

ஆனால் நேரம் ஆக ஆகத்தான் தெரிந்தது காற்று வாரி இரைத்துக் கொண்டிருந்தது பஞ்சை அல்ல தெருப் புழுதியை என. சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் புழுதியில் இருந்து தப்பிப்பதற்காக தலையை முன்னும் பின்னும் இடமும் வலமும் எப்படியெல்லாமோ அசைத்துப் பார்த்தேன் ம்ம்கூம் தப்பிக்க முடியவில்லை. அடிக்கின்ற காற்றும் நின்றபாடில்லை. மேடவாக்கம் தார் சாலை மொத்தமும் புழுதியால் நிரம்பி இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி ஒரு போராட்டம். எப்படியாவது இதில் இருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று மீண்டும் வண்டியை முறுக்கினால் காதுக்கு மிக அருகில் பெரிய சப்தம். 

விழுந்தது நான் என்று தான் நினைத்தேன். திடிரென அடித்த புழுதிக் காற்றில் நடனம் ஆடிக் கொண்டிருந்தோம். கண் முழுவதும் தூசி, திறக்கக் கூட முடியவில்லை. கண்ணை கசக்கிக் கொண்டே பார்த்தால் சாலையின் ஓரத்தில் ஒரு ஸ்டார் சிட்டி விழுந்து கிடந்தது. நல்லவேளையாக பார்த்துவிட்டேன். வயது நாற்பது இருக்கலாம். எனது வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடக்கும் தலைவரை நோக்கி ஓடினேன், அதற்குள் அவரே சுதாரித்து எழுந்துவிட்டார். பேன்ட் கிழிந்துவிட்டது. கையில் முட்டியின் அருகில் சிராய்ப்பு. ஹெல்மட்டைக் கழட்டியவர் 'தே**** பயலுவ, இந்நேரம் லாரில அடிபட்டு செத்ருப்பேன், ரோடா இல்ல புழுதி மேடா, இப்படி போட்டு வச்சிருக்கான்க தே.ப' என்றபடி கத்தத் துவங்கினார். அவர் உடல் படபடப்பில் நடுங்கிக் கொண்டிருந்தது. நிதனாமாக அவர் வண்டியை நிமிர்த்தி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.    

எல்லாம் நடந்து முடிந்தது சில நொடிகளில் தான் என்றபோதிலும் அவர் முகத்தில் கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டுவிட்ட உணர்வு இருந்தது. அவர் விழுந்த இடத்தில் தான் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலையை நோக்கி திரும்புவதற்காக அத்தனை தண்ணி லாரிகளும் மண் லாரிகளும் யு டர்ன் எடுக்கும். நள்ளிரவு என்பதால் அவற்றின் போக்குவரத்தும் அதிகமாயிருக்கும். ஒருவேளை அவர் விழுந்த நொடியில் பின்புறம் ஏதேனும் லாரி வந்திருந்தாலோ இல்லை அவரைத் தட்டிவிட்டு கவனியாமல் சென்றிருந்தாலோ இந்த நடுராத்திரியில் அவர் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். யோசிக்க முடியா அளவுக்கு இருக்கிறது விடைக்கள்.

அவரை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கிறது, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனது மிச்சம் மீதி நாட்களையும் அவர்களுடன் களிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தனையையும் விட்டுவிட்டு அந்த மனிதன் நடுராத்திரியில் நடுரோட்டில் அம்போ என உயிரை இழக்க வேண்டுமாயின் பிழை நிச்சயம் விதியின் மீது இல்லை, விதியை மதிக்காமல் தன் இஷ்டதிற்கு வாழும் அதிகாரத்தின் உச்சத்தின் மீது இருக்கிறது.  

சமீபகாலமாக ஓ.எம்.ஆரில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நானும் சரவணாவும் பெரும்பாக்கத்தின் பின்புறம் வழியாக செம்மஞ்சேரி சுனாமி குப்பம் கடந்து ஓஎம்ஆரை அடைந்து சிறுசேரி சென்று கொண்டுள்ளோம். ஓ.எம்.ஆர் என்பது பெருமுதலாளிகளுக்காகப் போடப்பட்ட சுங்கச்சாலை என்பதால் அட்டகாசமாக இருக்கும். ஆறுவழிச்சாலையும் கூட. இருந்தும் மழைக்காலத்தில் நீந்தித்தான் செல்ல வேண்டும் என்பது வேறு விசயம். 

இந்நேரத்தில் இந்த பெரும்பாக்கத்தின் பின்புறச் சாலையைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். சுற்றிலும் வானம் பார்த்த பூமி. சுத்தமாக மழை இல்லமால் போனதால் கண்ணுக் எட்டிய தூரம் வரைக்கும் விலை நிலங்கள். ரியல் எஸ்டேட் வியாபாரம் ஜெகஜோதியாய் நடக்கும் சென்னையின் மிக முக்கியமான கான்க்ரீட் காடு. சென்னையில் இருக்கும் மிகபெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மொத்தத்தையும் இந்தப் பாதையில் காணலாம். இன்னுமின்னும் கட்டப்பட்டு வருகின்றன. 

பெரும்பாக்கத்தில் இருந்து தனியே பிரிந்து செல்லும் இச்சாலையில், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன் புதிய சாலை போட வேண்டும் என்பதற்காக தோண்டி வெறும் ஜல்லிக்கற்களை பரப்பி விட்டனர். சாதரணமாகவே அந்தச் சாலை அப்படித்தான் இருக்கும் என்றாலும் இப்போது வெறும் ஜல்லியை நிரப்பியிருப்பதால் வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்ட பெரிதும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. எங்களுக்கோ போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க இதைவிட்டால் வேறு நல்ல வழி இல்லை. ஒரு மூன்று கிலோமீட்டருக்கு பல்லைக் கடித்துக் கொண்டு அந்த கற்கால சாலையின் வழியே பயணித்துவிட்டால் ஓரளவிற்கு நல்ல சாலையைப் பிடித்துவிடலாம். சரியாக அதிலிருந்து ஓரிரு மாதங்களில் சாலை முழுமையையும் சிமின்ட் மணலைக் கொண்டு நிரப்பினர். அப்படியாகப் போடப்பட்ட சிமின்ட் மணலானது காற்றில் பறக்கும் போதெல்லாம் ஒழுங்காக வண்டி ஓட்ட விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தது. அதிலும் மழைக்காலம் என்றால் இன்னும் கொடுமை. 

தேர்தலும் முடிந்து மோடியும் பிரதமரானதன் அடுத்த மாதத்தில், அவசரகதியில் வெறும் மூன்று இரவுகளில் இரவோடு இரவாக மொத்த சாலையையும் போட்டு முடித்தனர். அவ்வளவு தான். அதிலிருந்து ஒரு வாரம் ஒரு மழைக்குக் கூட அச்சாலை தாக்குப் பிடிக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல் அங்கு ரியல் எஸ்டேட் யாவாரம் கொடிகட்டிப் பறப்பதால் கனரக சாமான்களை (கல் மண் இரும்பு தண்ணீர்) ஏற்றிச் செல்லும் அத்தனை லாரிகளும் இவ்வழியாகத்தான் பறக்கும். அவற்றின் எடையையும் வேகத்தையும் தாங்க முடியாத அந்த அப்பாவி சாலை ஒரே வாரத்தில் சீக்கு வந்த கோழியாக மாறி அடுத்த மழையில் எயிட்ஸ் முற்றிய நோயாளி போல் மாறியிருந்தது. எனக்கும் சரவணாவுக்கும் இந்த ரோடு போட்ட காண்ட்ராக்டர்களையும் அரசியல்வாதிகளை தினம் தினம் திட்டித் தீர்க்காவிட்டால் அந்த நாள் சிறப்பாய் இருக்காது. அவ்வளவு சாபத்தைக் கொடுத்திருக்கிறோம். பின்னே யார் பணம். உங்கள் பணமும் என் பணமும் தான். அது எல்லாம் கூட என் வருத்தம் இல்லை. அந்த சாலையைப் போட்ட இரண்டாவது வாரத்தில் அதே சாலையை மறு சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் கண்ணில் ரத்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பத்து நாட்களுக்கு முன் போடப்பட்ட ஒரு புதிய சாலையை ஒட்டுபோட்டுக் கொண்டிருப்பதை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? இவ்வழியாக சென்றால் பார்க்கலாம். சரி அந்த சாலையைக் கடந்து செம்மஞ்சேரி சுனாமி குப்பத்தை நெருங்கினால் அங்கே சிமின்ட் ரோடு என்ற பெயரில் ஒரு ரோடு தென்படும். நீங்கள் நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டும் தான் தெரியும் அங்கே சிமின்ட் ரோடு என்ற பெயரில் ஒன்று இருப்பதே. காரணம் சாலை மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக புழுதி சேர்ந்து மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. என்ன செய்வது அந்த சாலையை உபயோகிக்கும் மொத்தப் பேரும் அன்னடாங்காட்சி. அவனுக்கு இது போதாதா. ஒருவேளை இதுவே அதிகம் என்று நினைத்தாலும் நினைத்திருப்பார்கள். இரவில் மின் விளக்குகள் அற்ற சாலையில் அப்படியொரு அமான்யுஸ்யத்தை அனுபவிக்கலாம். மேலும் இரவில் திருட்டுப்பயம் ஜாஸ்த்தி என்பதால் வீடு திரும்பும் போது மட்டும் அந்தப்பாதையை உபயோகிப்பதில்லை.     

புறநகரின் ஒதுக்குப்புறம் தான் இந்தப் பிரச்சனை என்றால், புறநகரின் மையப் பகுதிகளிலும் இதே பிரச்சனை தான். வெகுசமீபத்தில் தாம்பரம் மேடவாக்கம் இடையேயான சாலையை அகலப்படுத்தி புத்தம் புது சாலை போட்டிருந்தார்கள். கடந்த வாரம் அந்த வழியாகச் செல்லும் போது தான் பார்த்தேன் ஒவ்வொரு பத்து அடிக்கும் ஒரு குழியை வெட்டி வைத்திருக்கிறார்கள் புண்ணியவான்கள். மேலும் சென்னை முழுவதுமே ஒரு நீளமான கோட்டைப் போட்டது போல், ஒரு பெரிய நகத்தால் கீறியது போல் கீறி வைத்துள்ளனர். எதற்காக என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கீறலினுள் பைக்கின் சக்கரம் மாட்டி வெளிவரும் போதெல்லாம் எங்கே ஸ்கிட் ஆகிவிடுமோ என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 'தோண்டுறதுக்கு தான் ரோடு போடுறீங்கன்னா அப்புறம் என்னாத்துக்கு பாஸு ரோடு போடுறீங்க. அப்படியே பேசாம விட்ற வேண்டியது தான'. இதெல்லாம் கூடப் பரவாயில்லை. மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் ஒரே ஒருவருடம் தொடர்ந்து பயணித்தால் போதும் ஆஸ்த்துமா வந்து அஸ்தி ஆவது உறுதி. ஆவடி அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் பூந்தமல்லி என்றால் ஒரே மாதத்தில் ஆஸ்த்துமா உறுதி. அந்த சாலைகளின் வழியே பயணித்து வீடு வந்து சேர்ந்தால் நம்முடலில் இருந்து குறைந்தது ஒரு ஒரு கிலோ புழுதியைப் பிரித்தெடுக்கலாம்.  

சென்னையின் புறநகர் மட்டும் தான் இப்படியிருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. சென்னையில் எங்கெல்லாம் எளிய மனிதர்கள் இருக்கிறார்களோ அந்தப் பகுதிகள் மொத்தமும் அப்படித்தான் இருக்கின்றன. என்ன அவை லுண்டும் குழியுமான சாலையாய் இருந்தாலும் குறைந்தபட்சம் புழுதிகள் குறைந்த சாலையாய் இருக்கும்.

அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் அழகான சாலைகளை அமைத்து சுகமாய்ப் பயணித்துக் கொண்டிருக்க, வரி கட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் ஆஸ்துமாவைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். சென்னையில் நான் கண்ணெதிரே இவற்றைப் பார்ப்பதால் கூற முடிகிறது, நாலு பேரை விசாரித்தால் தெரியும் தமிழகம் மொத்தமும் ஏன் இந்தியா மொத்தமும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும். ம்ம்ம் என்ன புலம்பி என்ன செய்ய ஒரு பக்கம் மனிதவளம் மொத்தமும் முறையாகப் பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்படுகிறது என்றால் மறுபக்கம் மனிதவளத்தின் சக்தி முழுமையும் சாலை நெரிசலிலேயே சிக்கி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இருந்தாலும் பெருமையாகக் கூறிக்கொள்வோம் இந்தியராய்ப் பிறப்பதற்கு என்ன மாதவம் செய்தோமோ!!! 

படங்கள் : நன்றி - இணையம்

18 comments:

 1. கொரட்டூர் - ஆவடி , பெரம்பூர் - ரெட்ஹில்ஸ் , இப்போ , முகப்பேர்ல கூட மெட்ரோ ரயிலுக்குனு பறிச்ச குழிகள்னு , எங்க பார்த்தாலும் இதே பிரச்சனைதான் . இன்னும் முகப்பேர் வெஸ்ட்ல இருந்து , கோயம்பேடு போற வழியெல்லாம் படு மோசமா இருந்துச்சி. இப்போ ரோடு போட்டுருக்கறதா கேள்வி பட்டேன் . பாடி சைட்லாம் வண்டிய ஓட்டனும்னா , ஜெமினசர்க்கஸ்ல தான் ட்ரைனிங் எடுக்கனும் .

  ReplyDelete
 2. தாம்பரம் -மேடவாக்கம் நான் வந்து பலமாசம் ஆச்சு ! அப்போ புழுதிப்புயல்ல சிக்கி தவிச்சிகிட்டே போன ஜீவன்ல நானும் ஒருத்தன் . வேளச்சேரிலாம் வருனும்னாலே , களுக்குனு இருக்கும் எனக்கு .அந்த பக்கம் ட்ராவலிங் எல்லாம் பஸ் தான் பெஸ்ட் . அப்புறம் , 4வருஷத்துக்கு முந்தின அயப்பாக்கம் ரோட்ட தாரளமா சொல்லலாம் . அங்க கிளினிக் வச்ச டென்டிஸ்டும் , ஒரு ஜெனரல் டா்கடரும் , சொந்தமா ஒரே வருஷத்துல அயப்பாக்கத்துலயே நிலம் வாங்கி 3 அடுக்்கு மாளிகை கட்டிட்டாய்ங்க .

  ReplyDelete
 3. பட்ட வேதனை! பதிவில் கண்டேன்! பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது பழமொழி! ஆனால் இங்கே ,இன்று பாதையிலேயே பாய்ந்து ஓய்கிறது போலும்! வாழ்க! பணநாயகம்!

  ReplyDelete
 4. எங்கள் மாம்பலம் பகுதியில் நான் இருக்கும் தெருவிலும் அடுத்த தெருக்களிலும் சிமெண்ட் ரோடு போட்டார்கள். இப்ப பார்த்தால் ரெண்டு பக்கமும் தோண்டி ரோட்டையே சிதைச்சு வெச்சிருக்காங்க. மாம்பலம் பகுதிதான் இப்படியா என்ன... நாலு பேரை விசாரித்தால் தெரியும் தமிழகம் மொத்தமும் ஏன் இந்தியா மொத்தமும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும். ஹி.... ஹி.... ஹி.....

  ReplyDelete
 5. //அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் அழகான சாலைகளை அமைத்து சுகமாய்ப் பயணித்துக் கொண்டிருக்க....//

  நிசமே.

  சுப்பு தாத்தா

  ReplyDelete
 6. சென்னை புறநகர் மட்டுமல்ல! மாவட்ட சாலைகளும் கிராம சாலைகளும் கூட படுமோசமாக இருக்கிறது! எங்கள் ஊர் சாலையில் நிறைமாத கர்ப்பிணி நடந்து சென்றாலே பிள்ளை பெற்றுவிடலாம்! போடுகிறார்கள் போடுகிறார்கள் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! ரெட் ஹில்ஸ் டூ கும்மிடிப் பூண்டி ஹைவேவில் தச்சூர் கூட்டுச்சாலை சுத்த மோசம்! மழை பெய்தால் சாலையில் பள்ளம் எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த சாலையில் ஒருவர் பத்திரமாய் வீடு திரும்பினால் அது அவர் மனைவியின் தாலிபாக்கியமாகவோ அல்லது முன்னர் செய்த புண்ணியமாகவோத்த்தான் இருக்கும்!

  ReplyDelete
 7. இந்த நிலையில் வல்லரசுக்கனவு வேற !ஆட்சியாளர்களும் அதிகாரிகாரிகளும் அறிவிவதில்லை அடிமக்களின் வலிகளை!

  ReplyDelete
 8. நீங்கள் சொல்லிய வழி அல்லாமல் மேலும் மூன்று பாதைகள் உள்ளது OMR செல்லாமல் சிப்காட் செல்வதற்கு. இதில் எந்தப் பாதையும் சரி வர சீரமைக்கப்படவில்லை. சீரமைக்கவும் மாட்டார்கள். சீரமைத்து விட்டால் சீருந்து போக்குவரத்து இந்தப் பக்கம் திரும்பிவிடும். OMR சாலையில் வசூலாகும் சுங்கவரியில் துண்டுவிழும். எல்லாத்துலையும் ஒரு உள்குத்து இருக்கத்தான் செய்யுது.

  ReplyDelete
 9. இங்கே மதுரை செல்லூரில் சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் ரோடு போட்டார்கள் ,சில மாதங்களிலேயே அங்கங்கே பள்ளம் ,தாரினால் பஞ்சர் ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள் !
  த ம 9

  ReplyDelete
 10. வலி சுமந்த வரிகள். இனிய பாராட்டுரைகள்.

  ReplyDelete
 11. //ஆறுவழிச்சாலையும் கூட. இருந்தும் மழைக்காலத்தில் நீந்தித்தான் செல்ல வேண்டும்//
  ஆறு அல்லவா நீந்தித்தான் செல்ல வேண்டும்

  ReplyDelete
 12. சாலை போட Contract எடுப்பவர்கள் பல இடங்களில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதால் Quality என்பது மூட்டைக் கட்டி வைக்கபடுகிறது. இந்த சாலைச் சோகம் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் பிரச்சனை தான் சீனு.

  உத்திரப் பிரதேசத்தின் சில மாவட்டத் தலைநகர்களில் செங்கற்களை குறுக்கு நெடுக்காக வைத்து மேலே மண் தூவி விட்டு, சாலை என்று சொல்கிறார்கள்.... அதில் பயணித்தால் பிரசவம் நிச்சயம்!

  ReplyDelete
 13. வரிகளில் வலிகளை உணர்த்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 14. வணக்கம் சகோதரர்
  உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-

  ReplyDelete
 15. அனைவரும் உணரும் வலியை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 16. சமூக அவலத்தைச்சுட்டிய பதிவு...நன்றி

  ReplyDelete
 17. வணக்கம் சகோதரரே
  உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி.

  ReplyDelete
 18. அறிவாளிகளும், எண்ணிலடங்கா கடவுள்களும் உள்ள நாடு.
  ஆனால் இங்கு எந்த ஒரு துறையும் நீதி நெறியோடு நடப்பதில்லை.
  காரணம் ஒழுக்கமின்மை. சொல்லியபடி செய்திருப்பதே ஒழுக்கமின்மை. எந்த ஒழுங்கீன செயலுக்கும் ஒரு பரிகாரம் வைத்து, தான் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் மக்கள். இங்கு இப்படி தான் இருக்க முடியும்.

  ReplyDelete