26 Sept 2014

கருப்பண்ண சாமி...!


மேடவாக்கத்தின் அந்த பரபரப்பான சாலையில் இருக்கும் சாப்பாட்டுக் கடையை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ரொம்பவே சின்ன கடை. கரி படிந்த டியுப் லைட்யுடன் கடனே என்று சுற்றிக் கொண்டிருக்கும் ஃபேன். அழுக்கேறிய மேஜை நாற்காலி. முந்தாநாள் குளித்தது போல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் ரெண்டு மூன்று சர்வர்கள். மேடவாக்கத்தில் இதை விட நல்ல கடைகள் இருக்கின்றன என்ற போதிலும் அவையனைத்துமே இதைவிட பணக்காரக் கடைகள் அல்லது இதற்கு முன் நான் முயன்று எனக்குப் பிடிக்காமல் போன கடைகள். இது ஒன்று தான் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாக என்னை தத்தெடுத்துக் கொண்டது. 

அலுவலகத்தில் இருந்து கிளம்பு போதே நல்ல பசி. மணிவேறு ஒன்பதைக் கடந்திருந்தது. அப்பா போன் செய்து கேட்ட போது 'கடையில சாப்பிட்டு வாறன்' என்று கூறியிருந்ததால் வீட்டில் சட்டி பானையை கவுத்தியிருப்பார்கள். வேறு வழியில்லை. வண்டியை நேரே இந்தக் கடைக்கு விட்டேன். தோசைக்கு சால்னாவும், சைடிஷ்ஷாக ஆம்லெட்டையும் நினைக்கும் போதே பசி எனக்கு முன்பாக கடைக்குள் நுழைந்து சம்மணக்கால் இட்டிருந்தது. 

பரோட்டா மாஸ்டர் மைதாவைவுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க கல்லாவில் உட்கார்ந்திருந்த முரட்டு மீசை ஆசாமி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மீசைக்கு மட்டும் மூன்று சீப்பு யூஸ் செய்ய வேண்டும் போல, அவ்வளவு தடிமனான முரட்டு மீசை. அது என்னவோ தெரியவில்லை நான் பார்க்கும் முரட்டு மீசை ஆசாமிகள் அனைவருமே எல்லையில் உட்கார்திருக்கும் கருபண்ண சாமி போல் கருத்த ஆசாமிகளாய்த்தான் இருக்கிறார்கள்/தெரிகிறார்கள். நெற்றி நிறைய பட்டையும் இட்டிருந்தார். இப்போது ஓரளவிற்கு அவரை உங்களால் கற்பனை செய்ய முடியும் என்பதால் மேற்கொண்டு நடந்ததைக் கூறுகிறேன். 

கடைக்குள் நுழையும் போது தான் என்னுள் அந்த கேள்வி எழுந்தது. அது என் பர்ஸில் பணம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி. வழக்கமாகவே நான் பர்ஸில் பணம் வைத்துக் கொள்வதை விரும்பாத ஆசாமி, தேவை ஏற்படின் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அண்டார்டிகாவில் புகுந்து அதன் வயிற்றில் அட்டையை சொருகினால் ஒன்று இரண்டு தாள்களை தள்ளிவிடும். போதாகுறைக்கு வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம் என்பது போல தெருவிற்கு ஒரு பெட்டியை வைத்திருக்கிறார்களே. பிறகென்ன கவலை.  

இருந்தும் என்னுடைய ஏ.டி.எம் ட்ரான்ஸ்சேக்சனைப் பார்த்து தான் RBI அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இனி மாதம் எட்டு முறைக்கு மேல் அட்டையை அண்டார்டிகா எந்திரத்தின் வயிற்றில் சொருக்கக் கூடாதாம். பரவாயில்லை எட்டு முறை சொருகலாமே அதுவரைக்கும் ஸ்தோத்திரம்.

கடைக்குள் நுழைகையில் தான் பர்ஸைப் பார்த்தேன், அப்போதுவரை அதில் இருந்த நூறு ரூவாயைக் காணவில்லை, வரும்போது பெட்ரோல் போட்டது நினைவுக்கு வந்தது. எனக்குப் பசித்தால் கூடப் பரவாயில்லை. அந்த கறுப்புக் குதிரை பசிதாங்காது. பர்ஸின் ஓரத்தில் ஒன்றிரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் கண்ணில் பட, கடையின் நடுவாசலில் பப்பரப்ப என்றபடி நின்றுகொண்டே எவ்வளவு இருக்கிறது என எண்ணத் தொடங்கினேன். இதைபார்த்த அந்த மீசைக்கார ஆசாமி/நண்பர்/தாத்தா/கருப்பண்ணசாமி/கடைஓனர் காண்டாகியிருக்க வேண்டும்.

'எப்பா மொதல்ல உள்ள வந்து உக்காந்து சாப்பிடு, அப்புறம் பணத்த என்னிக்கலாம்' என்றார். நிதானமாகத்தான் இருந்தார். ஆனாலும் கண்கள் சிவப்பாய் இருந்தன, கருபண்ண சாமியே தான். 

'இல்லீங்கையா, பணம் இருக்கான்னு தெர்ல, பார்த்துட்டு உள்ள வாறன்' என்றேன் பவ்யமாய். 

'அட அத அப்புறம் பாத்துக்கலாம் மொதல்ல உள்ள போய் உக்காந்து சாப்பிடு'. என் இரண்டு வார தாடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இரண்டு மணி நேரப் பசியை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் போல. 


'இப்ப சாப்ட்டு துட்டு இல்லன்னு சொன்னா விடுவீங்களா, அதான் இப்பவே பாக்குறேன்' என்றேன் சிரித்துக் கொண்டே. என்னிடம் யாராவது இயல்பாய் பேசினால் நானும் அவர்களோடு சேர்ந்து கொள்வேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென்று ஒரு வசனத்தைக் கூறி என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டார். அசந்து விட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த முரட்டு மீசையை கொஞ்சம் ட்ரிம் பண்ணி வெள்ளைச் சாயம் அடித்தால் அப்படியே என் தாத்தா தான். என்ன என் தாத்தா வேற பட்டை அடிப்பார். 

இவர் கூறியது இது தான்,

'எய்யா பசியில இருக்கவன் ஏமாத்தமாட்டான், ஒருவேள ஏமாத்தினான்னு வையி அவன இந்த உலகம் ஏமாத்திருக்க்குன்னு அர்த்தம், அவன் காசு தராட்டாலும் அதப்பத்தி எனக்குக் கவல இல்ல தம்பி. மொதல்ல உக்காந்து சாப்டு, துட்டு இல்லாட்டா நாள கொடு' என்றபடி,எனக்குப் பின் நின்றவரைப் பார்த்து 'சார் உள்ள வாங்க, டேய் தம்பி சாருக்கு என்ன வேணும்ன்னு கேளுடா' கூறிக்கொண்டே கையிலிருந்த தினசரியைப் புரட்டத் தொடங்கினார் கருப்பண்ண சாமி. அவர் கையிலிருந்த தினசரியில் எழுதியிருந்த செய்தி 'நான் மிகவும் விவேகமான இளைஞனைப் போன்றவன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

21 Sept 2014

எழுத்தாளர் ராகவன் - சிறுகதை

முன்குறிப்பு : இது முழுக்க முழுக்க ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாய்க் கொண்டு எழுதப்பட்ட கற்பனை கலந்த கதை. 

அந்த அறையில் வழிந்தோடிக் கொண்டிருந்த மௌனத்தின் ஊடாக மெல்லிய சிகரெட் புகை கசிந்து கொண்டிருந்தது. மங்கிய அந்த புகையின் வழியாக தன்னைவிட்டு விலகி மறைந்திருக்கும் நிம்மதியின் சுவடுகளைத் தேடித் தோற்றுக் கொண்டிருந்தார் ராகவன். அவரது தடித்த விரல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டிருந்த நெருப்புப் பொறியானது யாருமற்ற வனாந்திரத்தில் எதையோ தேடி அலையும் மின்மினிப் பூச்சியைப் போல் தகித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவர் மனமும் பொறி விழுந்த நெருப்பு போல்தான் புகைந்து கொண்டிருக்க வேண்டும். திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியே நெடுநேரமாய் கதை பேசிக் கொண்டிருந்தது நிலா. அவர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பின் பெயர் கூட 'நிலா முற்றத்து காதலி' தான்.

'சார்' எவ்வளவு நேரம் தான் பேசாமல் இருப்பது. அந்த நொடியின் மவுனத்தைக் கலைத்தேன். மெல்ல நிமிர்ந்து பார்த்தார். எதுவும் பேசவில்லை. அன்றைய மாலையில் நடந்த சம்பவங்கள், காட்சிகள் இன்னும் அவரது கண்களில் இருந்து மறைந்திருக்கவில்லை. சம்பவம் நடந்த மாலைவேளையில் இருந்து இதோ இந்த நொடி வரை அவருடனேயே இருப்பவன் என்பதால், அவருடைய வலியின் வீரியத்தை என்னால் உணர முடிந்தது. ஆனால் பங்கிட்டுக்கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அனுதாப மொழியில் ஏதாவது பேசினால் எழுந்து போய்விடக்கூடும் என்பதால் நடப்பது அனைத்தையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் நாம் சந்தித்திராத , சந்திக்கத் தயங்கும் அத்தனைப் பிரச்சனைகளையும் விதிவசத்தால் எதிர்கொண்டவருக்கு என்னால் ஆகக்கூடிய மிகபெரிய ஆறுதல் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தல் மட்டுமே.

அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எண்ணெய் மக்குப்பிடித்த தலைகளும், வியர்வை பிடித்த முதுகுகளும், சாய்ந்து சாய்ந்து அழுக்கு பிடித்திருந்த வெற்றுச் சுவரினையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விடைகாண முடியா ஓராயிரம் கேள்விகள் விடைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டும். கனன்று கொண்டிருந்த சிகரெட்டை மீண்டும் ஒருமுறை ஆழமாய்ப் புகைத்தார். ஒவ்வொருமுறை புகையை இழுத்து விடும்போதும் அதுதரும் நிம்மதி அந்த நொடிக்குப் போதுமானதாய் இருந்திருக்க வேண்டும். வந்ததில் இருந்து இது ஐந்தாவது சிகரெட். 

எழுத்தாளர் ராகவன். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். மூத்த பத்திரிக்கை நிறுவனங்களில் வடிவமைப்பாளராக இருந்தவர். இணையத்தின் அபரிமிதமான எழுச்சியால் அச்சுப் பத்திரிக்கைகள் திடீர் வீழ்ச்சியை சந்திக்க, அப்படியான நல்லதொரு தருணத்தில் வேலையை இழந்தவர். தற்சமயத்திற்கு தன்னைத் தேடி வரக்கூடிய புத்தகங்களுக்கு லே-அவுட் வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்தவரைக்கும் பிரச்சனையே இல்லை. இப்படி வண்டி ஓட்ட ஆரம்பித்ததில் இருந்துதான் புதிது புதிதாக பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கியுள்ளார்.ராப்பகலாக ஒரே இடத்தில் அமர்ந்து, முதுகுவலிக்க புத்தகம் வடிவமைத்துக் கொடுத்தால் ஊழியத்திற்கு ஏற்றே ஊதியம் கொடுக்கமாட்டார்கள். அப்போ இப்போ என்று இழுத்தடிப்பார்கள் புத்தகப்பணியைக் கொடுத்தவர்கள். தனக்கு வர வேண்டிய பணம் கேட்டு பத்துமுறை போன் செய்தால் பதினோராவது முறை பதிலளிக்கக் கூடிய புண்ணியவான்கள். 

அவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை வாழ அவருக்குப் பணம் வேண்டும். பேசியபடி பேசிய பணத்தை வழங்க வேண்டும் என்ற அக்கறை இல்லாத நியாயவான்கள். சமூகத்தை தன் பேனாமுனை கொண்டு வளைக்கத் துடிக்கும் சாகசப் பறவைகள். காரியம் கூடும் வரைக்கும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி 'ஆ அங்கப் பூசு, ஆ இங்கப் பூசு' என்று சந்தனத்தை தடவச் சொல்பவர்கள் புத்தகம் அச்சுக்குப் போய்விட்டால் 'சார் ரேட்டு ரொம்ப அதிகமாயிருக்கு', 'இதுக்கு போய் இவ்வளவு பணம் கேக்குறீங்க', 'சார் இன்னொருத்தரு நாலாயிரம் ரூபாய்க்கு பண்னறாரு, நீங்க நம்ம பிரண்டு ஒரு ஆயிரம் ரூவா கொறச்சுக்கக் கூடாதா?', 'சார் நட்புரீதியா நீங்க என்கிட்டே பணம் வாங்க மாட்டீங்கன்னு நினைச்சேன், இப்ப திடீர்னு பணம் கேட்கறீங்க' என்பார்கள் மனசாட்சியே இல்லாமல். 

மாதாமாதம் மூன்று புத்தகங்கள் முழுதாக வடிவமைப்பு முடிந்து அச்சுக்கு சென்றாலே அது பெரிய விஷயம், நிலைமை இப்படியிருக்க புத்தகம் எழுதிய புண்ணியவான்கள் இவரின் மடியிலேயே கை வைத்தால் பாவம் இவர் என்ன செய்வார், போதாக்குறைக்கு பேஸ்புக்கும் ட்விட்டரும் அச்சுப் பிரதிகளையே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்க அதன்மூலம் ஏற்படக்கூடிய சவால்களையெல்லாம் வசதியாக மறந்துவிடுவார்கள். அவரும் எத்தனை பேரிடம்தான் தொங்குவார். செய்த வேலைக்கு உண்டான கூலியைக் கேட்டால் ஏதோ ஒரு  கடன்காரனைப் போல் பார்க்கும் இவர்கள் பார்வையை எழுத்தில் வடிக்க இயலாது. உணரத்தான் முடியும். இவற்றை எல்லாம் மீறிய ஒரு சம்பவம் தான் இன்றைக்கு நிகழ்ந்தது. விரக்தியின் உச்சத்தில் இருந்தார். 

அன்றைய மாலை அவர் வடிவமைத்திருந்த கட்டுரைப் புத்தகத்தின் வெளியீட்டிற்கு சிறப்புப் பேச்சாளராக அழைக்கபட்டிருந்தார். நானும் உடன் சென்றிருந்தேன். 'சிறப்புரை எழுத்தாளர் ராகவன்' என்று அச்சடித்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தார். இருக்கின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் எப்போதாவது அவர் உணரக்கூடிய சிறிய சந்தோசம். பெருமிதம் என்றும் கொள்ளலாம். 

அண்ணா சாலையில் இருக்கும் 'நேஷனல் புக் பேலஸ்' 'ஆண் என்னும் அரண்' புத்தக வெளியீட்டிற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. ஐந்தரை மணிக்கு நடக்க இருக்கும் நிகழ்விற்கு ஐந்து மணிக்கே சென்றுவிட்டோம் நானும் ராகவனும். எழுத்தாளர் மற்றும் கவிதாயினி மதி முன்னமே வந்திருந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். இது அவருடைய நான்காவது கட்டுரைப் புத்தகம். மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து தன்னை சற்றே மாறுபட்டுக் காண்பிக்கப் போராடும் ஒரு பெண் எழுத்தாளர். 

ஆணாதிக்கச் சமுதாயத்தில் மற்ற பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பெண்ணியம் மற்றும் அவை சார்ந்த கருத்துகளை முன்வைக்க இவர் மட்டும் சற்றே மாறுபட்டு ஆண்களின் உலகம் என்று எதுவும் இல்லை, ஒருகால் அப்படி ஒன்று இருந்தாலும் அதில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கக்கூடிய சுதந்திரமும் ஆணின் மூலம் அவளுக்குக் கிடைக்கக் கூடிய பாதுகாப்பும் போற்றுதற்குரியது, பெண்ணே பெண்ணுக்கு எதிரியான இவ்வுலகில் ஆணின் அரவணைப்பு பெண்ணை முழுமைப்படுத்தும் உந்து சக்தி என்றெல்லாம் ஆணுக்காக பேசக்கூடிய ஒரு எழுத்தாளராக தன்னை மாற்றிக் கொண்டவர். இந்த நிமிடத்தில் எழுத்தாளர் ராகவனுக்கு பேசியபடி பணம் தராமல் டபாய்த்துக் கொண்டிருக்கும் மற்றொருமொரு நபர். 

நேஷனல் புக் பேலசின் உள்ளே நுழைந்த ராகவனைப் பார்த்ததுமே மதி தன்னுள் ஒருவித செயற்கைத்தனமான பரபரப்பை புகுத்திக் கொண்டதை நானும் ராகவனும் கவனிக்கத் தவறவில்லை. எங்களுக்கு முன்பாகவே அங்கு வந்திருந்த கவிஞர் கிருஷ்ணன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். ராகவனைப் பார்த்ததுமே 'வாங்க ராகவன், நலமா' என்றபடி ராகவனின் கையைப் பிடித்துக் கொண்டார். எண்பது வயது முதுமையிலும் நடைபெறும் அத்தனை இலக்கிய நிகழ்வுகளிலும் தவறாது பங்குகொள்பவர். ராகவனின் கவனம் முழுவதும் மதியை சந்தித்து பணம் கேட்பதிலேயே குறியாய் இருந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஐந்தாம் தேதி கொடுத்திருக்க வேண்டிய வீட்டு வாடகையை, தேதி இருபதாகியும் கொடுக்க முடியவில்லை. அம்மாவின் புலம்பல் வீட்டு உரிமையாளரின் ஏச்சுபேச்சு இவற்றிற்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டுள்ளது. இன்றைக்கு மதி பணத்தைக் கொடுத்தால் ஹவுஸ் ஓனரிடம் பணத்தைக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் வந்திருந்தார். அந்த சிறிய வீட்டிற்கு இரண்டாயிரத்து ஐநூறு அதிகம்தான் என்றபோதிலும் சிட்டியின் மையத்தில் இதைவிட வாடகைக் கம்மியான வீடு கிடைப்பது அரிதிலும் அரிது. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் இருப்பதாலோ என்னவோ ஹவுஸ் ஓனர் இன்னும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாமல் இருக்கிறார். ஆனால் அந்த தருணத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவே ராகவனுக்குப்பட்டது.

'மதி' சுற்றிலும் நண்பர்கள் சூழ நின்று கொண்டிருந்தவளை மெல்ல அழைத்தார் ராகவன். அத்தனை பேர் மத்தியில் எப்படிக் கேட்பது என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. தனியே அழைத்துப் பேசலாம் என்றால் அதற்கு அவள் தயாராய் இருப்பது போல் தெரியவில்லை. 

இவர் அழைப்பதைக் கேட்ட மதி 'ஒருநிமிஷம் சார்' என்றவள் அடுத்த பத்து நிமிடத்திற்கு அவர் பக்கம் திரும்பவே இல்லை. தேவை பணம். எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக நின்றார். 

'மதி ஒருநிமிஷம்' பொறுமை இழந்தவர் மீண்டும் ஒருமுறை அழைக்க கூட்டத்தில் இருந்து விலகி வந்தாள். 

'சொல்லுங்க சார்'

'இல்ல இன்னிக்கு பணம் தாரதா சொல்லிருந்தீங்க', தயங்கியபடியே கேட்டார்.

'சார் பங்கசன் முடிஞ்சதும் பணத்தைப் பத்தி பேசுவோமே, நானே சீப் ஹெஸ்ட் வரலைன்னு நகத்த கடிச்சிட்டு இருக்கேன், என் நிலமையவும் கொஞ்சம் புரிஞ்சிகோங்க சார்' எதோ ராகவன் பணத்திற்காக பறப்பது போல் பேசினாள் மதி. 

'இல்லம்மா ஒரு வாரமா கேட்கிறேன், எனக்கு கொஞ்சம் அவசர தேவ, இன்னிக்கு தாரேன்னு சொன்னியே' என்றார். உதட்டில் இருந்து வார்த்தை சன்னமாக அதே நேரம் கொஞ்சம் கோவமாக வந்து விழுந்தது. 

'சார் இத இப்ப பேசக்கூடிய விஷயம் இல்ல சார், பங்சன் முடிஞ்சதும் பேசுவோம்'. விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அருகில் நின்று கொண்டிருந்த எனக்கே என்னவோ போல் ஆகிவிட்ட்டது. 'சார் பணத்த வாங்கிட்டு நீங்க வேலைய ஆரம்பிச்சிருக்கணும், எப்படி பேசிட்டுப் போறா பாருங்க' என் ஆதங்கத்தை வெளிபடுத்தினேன்.

'இந்த வேலையில அப்படி எல்லாம் நாம எதிர்ப்பார்க்க முடியாது தம்பி, நமக்கு புக் வொர்க் கிடைக்கிறதே பெருசு, வெயிட் பண்ணுவோம். என்றபடி முதல் வரிசையில் அமர்ந்திருந்த கவிஞர் கிருஷ்ணன் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். மணி ஆறைக் கடந்து, ஏழையும் கடந்திருந்தது. சீப் ஹெஸ்ட்டாக வந்து புத்தகத்தை வெளியிட வேண்டிய நடிகர் சஞ்சய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் கவிஞர் கிருஷ்ணன். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வேறு எழுதி இருக்கிறார். 

அதுவரை பார்த்துப் பழகியிராத முகங்களாக அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். சரியாக ஏழரை மணிக்கு உள்ளே நுழைந்த நடிகர் சஞ்சய் ஒரு பெரும் பட்டாளத்தையே உடன் அழைத்து வந்திருந்தார். தாமதத்திற்கான மன்னிப்பைக் கேட்டு  தனது பெரியதனத்தையும் நிரூபித்துக் கொண்டார். அவருடன் வந்திருந்தவர்கள் அனைவருமே பேஸ்புக் பிரபலங்கள். உங்களால் ஒரு நிலைத்தகவலுக்கு நூறு இருநூறுக்கு மேல் லைக்ஸ் வாங்க முடிகிறதா நீங்களும் பேஸ்புக் பிரபலமே. விழா தொடங்கியது. 

ஒவ்வொருவராக மதியை வாழ்த்தி புகழ்ந்து கொண்டிருந்த வைபவம் அரங்கேற, 'பேஸ்புக்கில் மதியின் ஸ்டேடஸ் ஒவ்வொன்றும் அனல் பறக்கும்'. 'ஒரு பெண்ணால் எப்படி இவ்வாறு எல்லாம் எழுத முடிகிறது என்பதை எண்ணி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து லைக்ஸ் போட்டுக் கொண்டிருப்போம்'. 'மதியைப் போல் தோழி கிடைப்பது அரிதினும் அரிது'. 'ஆண்களுக்கு சாதகமாக அவர் பேசும் ஒவ்வொரு விசயமும் அப்படியே புல்லரிக்கும்' என்று நடிகர் சஞ்சய் உட்பட பேச வந்தவர்கள் அனைவரும் மதியின் பேஸ்புக் நிலைத்தகவல் குறித்து புளகாங்கிதம் அடைந்தார்களே தவிர அவர்களில் ஒருவர் கூட மதி அவளது கட்டுரையில் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி பேசவே இல்லை. ராகவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். புத்தக நிகழ்வுகளின் முகம் மெல்ல மாறிக்கொண்டு வருவதை எண்ணி வியந்தார். ஒவ்வொருவராக மதியைப் பற்றி பெருமை பேசிவிட்டு சால்வைகளையும் நினைவுப் பரிசுகளையும் வாங்கிபடி இருந்தனர். அழைப்பிதழில் பெயர் குறிப்பிடாத எவர் எவரோ மேடையில் பேச அழைக்கப்பட்டார்கள். சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டார்கள். கடைசிவரை ராகவன் அழைக்கப்படவேயில்லை. கண்டுகொள்ளப்படவும் இல்லை. கருவேல முட்களின் நடுவில் அமர்ந்து இருப்பதைப் போல் உணர்ந்தார். 

விழா முடிந்து ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருக்க, ராகவன் மதியைப் பார்த்துப் பேச வேண்டிய அவசியத்தில் காத்திருந்தார். பேசியதில் பாதித் தொகையைக் கொடுத்தாலும் இருப்பதை வைத்து வாடகையைக் கொடுத்துவிடலாம். காலையில் அம்மாவுக்கும் அவருக்கும் நடந்த சண்டையில் இருவருமே அன்றைய தினம் முழுவதும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வேறு கண்ணை சுழற்றிக் கொண்டிருந்தது. மதி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாளே தவிர இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் கார் வர அதில் ஏறி அவளும் அவர் கணவரும் கிளம்பிவிட, முகத்தில் அறைந்ததைப் போல் உணர்ந்தார் ராகவன். 

ஏதோ பெரிதாய் ஏமாற்றபட்டதைப் போல் இருந்தது அந்த உணர்வு. சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டதை விட பெரிய வலி காத்திருக்கும்படி கூறி கண்டுகொள்ளாமல் விட்டதன் மூலம் ஏற்பட்டிருந்தது. 

அங்கிருந்து நேரே கவிஞர் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றோம். ராகவனுக்காக கிருஷ்ணன் போன் செய்து பேசியதில் 'தான் மதுரைக்குக் கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்ததாகவும், நடிகருடன் வந்தவர்கள் ட்ரீட் தரும்படி கேட்டதால் கையிலிருந்த மொத்த காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், தற்சமயம் கையில் காசு இல்லை, மதுரை சென்று அனுப்புகிறேன்' என்றும் கூறி கட் செய்துவிட்டாள். கவிஞராலும் ஒன்று பேச முடியவில்லை. என்னுடைய பர்ஸைப் பார்த்தேன் மிச்சமிருக்கும் பத்து நாட்களுக்காக நான்கு நூறுரூபாய்த் தாள்கள் பத்திரமாக இருந்தன. அதை வைத்து அவராலும் எதுவும் செய்ய முடியாது. அது இல்லாமல் என்னாலும் நாட்களைக் கடத்த முடியாது. 

விரக்தி தலைக்கேறிய நிலையில் என்னுடைய அறையில் வந்து அமர்ந்தவர் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் வரையிலும் மௌனமாகவே இருந்தார். அனுபவம் கற்றுகொடுத்த பாடங்கள் அவரை இயல்பாய் வைத்திருந்தாலும் மனதில் ஏற்பட்ட போராட்டங்களும் குழப்பங்களும் இயல்பை மீறிய பதட்டத்தைக் கொடுத்திருந்தன. 

ஏதோ ஞாபகம் வந்தவராய் யாருக்கோ போன் போட்டார். அறையில் நிலவிய நிசப்தத்தில், மௌனத்தில் எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பவரின் குரல் தெளிவாகக் கேட்டது.

'சொல்லுங்க ராகவன்'

'.....'

'கொஞ்சம் சீக்கிரம் புக்க டிசைன் பண்ணி கொடுங்க, வாற ஞாயிறு நம்ம புக்க ரிலீஸ் பண்ணிரலாம், சீப் ஹெஸ்ட் ரெடி. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. நீங்க தான் சிறப்புரை கொடுக்கணும் தயாரா இருங்க ராகவன்'

'.....'

'ஓ ரியலி சாரி ராகவன். இது மாசக்கடைசி, அடுத்த மாசம் நாலாந்தேதி பணம் தாரனே, தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்'

அடுத்தநொடி எண்ணெய் மக்குப் பிடித்த தலைகளும், வியர்வை பிடித்த முதுகுகளும், சாய்ந்து சாய்ந்து அழுக்குப் பிடித்திருந்த அந்த வெற்றுச் சுவற்றில் மோதி சுக்குநூறாக சிதறியது அவர் கையிலிருந்த கைபேசி. அடுத்தநொடி ராகவனும் அறையில் இல்லை. 

பின்குறிப்பு : ஒருவேளை இக்கதை சம்மந்தபட்ட நபரை புண்படுத்தியிருக்கும் என்றால், ஆம் இது எதிர்வினையே.

படங்கள் : நன்றி இணையம்

20 Sept 2014

ஓ பாசிடிவ்! ஓ நெகடிவ்?

மதியம் ஒரு மணி. அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சிறப்புநிலை நோயாளிகளால் நிறைந்திருந்தது. சினிமாவில் காண்பிப்பர்களே அப்படியொரு பணக்காரத்தனமான மருத்துவமனை. ரத்தம் செலுத்துவதற்காக வந்த இடத்தில் அங்கிருந்த நோயாளிகளைப் பார்த்த மாத்திரத்தில் மனம் என்ன என்னவோ சிந்திக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல ரத்ததான படிவத்தை நிரப்பத் தொடங்கியிருந்தேன். ஐ.ஏ.எஸில் கூட இவ்வளவு கேள்விகள் கேட்க மாட்டார்கள் போல. அவ்வளவு நோய்களைப் பட்டியலிட்டு இருக்கிறதா இருக்கிறதா என் கேட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நோய்க்களை வாசிப்பதற்கே பயமாய் இருந்தது. தான் ஷேமமாக வாழ்வதன் நிமித்தம் இத்தனை இழுத்து வைத்திருக்கிறான் மனிதன். இதைப் பார்த்தேல்லாம் கூட மெர்சல் ஆகாத நான் 'உங்கள் ரத்தப் பிரிவு என்ற கேள்வியைப் பார்த்தும் மெர்சலாயிட்டேன்!'. 

இருபத்தி ஆறு வருடங்களாக 'இன்ன ரத்தத்திற்கு சொந்தக்காரன் நீ' என அறியப்பட்ட உங்களை திடிரென ஒருநாளில் 'நீ இந்த ரத்தம் இல்லை வேறொரு ரத்தம்' என்று மாற்றிச்சொன்னால் எப்படியிருக்கும் உங்களுக்கு. நம்பமுடியுமா? அது தான் நடந்தது எனக்கு.

இளநிலை முடிக்கும் வரையிலும் நான் எந்த வகை ரத்தத்தைத் சார்ந்தவன் என்பதை அறியும் தேவை ஏற்பட்டிருக்கவில்லை. முதுநிலை சேரும்போது ரத்தத்தின் பிரிவைக் குறிபிட்டே ஆக வேண்டும் என வற்புறுத்தியதால் ஆங்கோர் பரிசோதனை மையத்தில் சென்று பரிசோதித்தபோது 'தம்பி நீங்க ஓ பாஸிடிவ்' என்று கூறினார்கள். அனைவரிடமும் பெருமையாகக் கூறிக்கொண்டேன் 'நான் ஓ பாசிடிவ் என்று'.

இருந்தும் இதைக் காரணம் காட்டி யாராவது என்னை ரத்ததானம் செய்ய அழைத்தால் பம்மி விடுவேன். காரணம் ரத்தம் கொடுக்க அவ்வளவு பயம். இதற்காக சிலமுறை என்னை நானே கடிந்துகொண்டதும் உண்டு. கடிந்து கொள்வனே தவிர ரத்தம் கொடுப்பதற்கான தைரியம் வரவேயில்லை.

முதுநிலை கல்லூரியில் வருடத்திற்கு ஒருமுறையாவது விவேகானந்தா கழகத்தில் இருந்தோ அல்லது நிவேதிதா ரத்த வங்கியில் இருந்தோ ரத்ததான முகாம் நடத்துவார்கள். அப்படி ஒருமுறை நடத்தும் போது உங்களுடைய ரத்தம் என்ன வகையை சார்ந்தது என் அறியும் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இதுபோதாதா ஓசியில் பரிசோதனை செய்துகொள்ள யாருக்கு வலிக்கும். நான் ஓ பாசிடிவ் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்கள். அரிய ரத்த வகையினனாக இல்லாது இருப்பதில் இனம்புரியா ஆனந்தம். ஓ பாசிடிவ் தான ஈசியா கிடைக்குமே நான் எதுக்கு ரத்தம் கொடுக்கணும் என்ற எண்ணமும் என்னுள் ஏற்பட்டிருந்தது. 

நாட்கள் மெல்ல நகர, கடந்த வருடம் அலுவலகத்தில் நிவேதிதா ரத்த வங்கியில் இருந்து ரத்தம் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். உடன் பணிபுரியும் நண்பர்களும் அனைவரும் ரத்தம் கொடுக்கச் செல்ல என்னுள்ளும் ஆர்வம் பொங்கிக் கொண்டது. உள் இருக்கும் ஆர்வம் என்றாவது ஒருநாள் வெளிபட்டுத்தானே ஆக வேண்டும். இருந்தும் பயம் மட்டும் விலகவேயில்லை. 'இம்புட்டு படிச்சு என்னாத்துக்கு. ஒரு பாட்டில் ரத்தம் கொடுக்க பயப்படுறியே!" என்று என் மனசாட்சி  கிண்டல் கேலியுடன் கெக்கரிக்க ரத்தம் கொடுக்க தீர்மானித்து கிளம்பிவிட்டேன். விதியும் ஜாலியாக என் தோளில் கையைப் போட்டுக்கொண்டு என்னோடு கிளம்பியது. 

ரத்தம் கொடுக்கும் முன் முதல்கட்ட ரத்தப் பரிசோதனை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். நான் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒரு வெள்ளைப்புறா. விரலை நீட்டினேன். 'கண்ண மூடிகோங்க வலி தெரியாது என்றாள்'. பராவாயில்ல என்றபடி அவள் குண்டூசியை சோறுக்க இருக்கும் நொடியை எதிர்பார்த்திருந்தேன். குண்டூசி இறங்கிய அடுத்த நொடி அந்த கண்ணாடித் துண்டில் புள்ளி வைக்கத் தொடங்கியிருந்தது என் ரத்தம். அதில் என்னவெல்லாமோ வேதியல் வினைகளை நிகழ்த்திய அவள் மெல்ல என்னை நிமிர்ந்து பார்த்தாள். 

'சார் அப்ளிகேசன்ல ஓ பாசிடிவ்னு எழுதிருகீங்க, நல்லா தெரியுமா நீங்க ஓ பாசிடிவ் தானா?' 

'ஓ நல்லா தெரியும் நா ஓ பாசிடிவ் தான், இங்க பாருங்க ஐடி கார்ட்ல கூட ஓ பாசிடிவ் தான் இருக்கு' என்றபடி கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை அவள் முன் நீட்டினேன். 

அவள் முகம் முன்பைக் காட்டிலும் தீவிரமடைந்திருந்தது. கொஞ்சம் இருங்க என்றபடி எங்கோ ஓடினாள். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் இன்னொரு சீனியர் வெண்புறாவுடன் வந்து சேர்ந்தாள். இருவரும் என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். 'இன்னொரு தடவ டெஸ்ட் செஞ்சிரலாம்' என்றபடி புதிதாக வந்தவள் என் கையில் ஒரு குத்து குத்தினாள். இப்போது என் கண் அவள் சொல்லாமலேயே மூடிக்கொண்டது. என் மீது அவளுக்கென்ன வஞ்சமோ குத்திய குத்தில் மொத்த ரத்தமும் வெளியில் வந்துவிட்டது போல் இருந்தது.  

'மேடம் என்ன பிரச்சன, ஏன் திரும்பவும் டெஸ்ட் பண்றீங்க' 

'இல்ல சார் ரிசல்ட் ஒழுங்கா வர மாட்டேங்குது, அதான் இன்னொரு தடவ பார்க்கிறோம்' என்றார்கள். 

'என்னடா சீனு உனக்கு வந்த சோதனை' என்றெண்ணியபடி நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

இப்போது புதிதாய் வந்தவள் என்னிடம் 'சார் நீங்க எங்க ப்ளட் டெஸ்ட் பண்ணுனீங்க, ப்ளட் டெஸ்ட் செஞ்சு எத்தன வரும் ஆச்சு, நல்லா டெஸ்ட் பண்ணினாங்களா' என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள். நான் இதுவரைக்குமான என் வாழ்நாளில் ரெண்டு முறை டெஸ்ட் செய்ததையும் அதில் ஒருமுறை உங்கள் நிவேதிதா வங்கிதான் டெஸ்ட் செய்ததும் என்றும் வாக்குமூலம் அளிக்க அவர்களுக்கு என் பதில் திருப்தியாயில்லை. சோதனையும் முடிந்தபாடில்லை, மேலும் இருவர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். 'அடியே ரத்தம் கொடுக்க வந்தது ஒரு குத்தமா?' 

முதல் வெள்ளைபுறா என்னை நோக்கி வந்தாள் 'சார் நாங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவ செக் பண்ணிட்டோம். ஆனா எப்படி இது நடந்ததுன்னு தெர்ல' என்று இழுக்க நான் அவளையே வெறித்துப் பார்த்தேன். 

'சார் உங்க ப்ளட் க்ரூப் ஓ பாசிடிவ் இல்லை, ஓ நெகடிவ்' கடைசி ரெண்டு தடவையும் உங்களுக்கு தப்பா செக் பண்ணிருக்கணும் என்றபடி முதல் குண்டை தூக்கிப் போட்டாள். அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. மேலும் தொடர்ந்தாள் 'எனக்கும் இந்த டெஸ்ட் ரிசல்ட் மேல நம்பிக்கை இல்ல. உங்க பிளட் ஓ பாசிடிவ்வா இருக்கதுக்கும் சான்ஸ் இருக்கு. அதுனால வேற ஒரு நல்லா லேப்ல செக் பண்ணிருங்க. இப்ப ரத்தம் கொடுங்க நாங்களும் எங்க லேப்ல செக் பண்றோம் என்றாள். 'அப்போ நீங்க நல்ல லேப் இல்லையா' என்று கேட்கலாம் போல் இருந்தது.   


இப்போது ரத்தம் கொடுப்பதன் பயம் போய் என் ரத்தம் என்ன வகை என்று தெரிந்து கொள்வதிலான குழப்பம் மேலோங்கி இருந்தது., என்னுடலில் செருகப்பட்ட குழாய் வழியாக ஓ பாசிடிவ் வெளியேறுகிறதா இல்லை ஓ நெகடிவ் வெளியேறுகிறதா என்று எனக்கே தெரியாமல் என் செங்குருதி யாருக்கோ தன்னை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்துக் கொண்டிருந்தது. 

அதிலிருந்து ஆறு மாதங்களில் மீண்டும் ஒருமுறை ரத்தம் எடுப்பதற்காக அலுவலகத்தில் அவர்களே முகாம் இட்டார்கள். கடந்தமுறை நடந்த பஞ்சாயத்தைக் கூறினேன். இப்போதும் அவர்கள் குழம்பி விட்டார்கள். மீண்டும் ஒரு பரிசோதனை. முன்பு கூறியதையே அச்சுப் பிசகமால் அப்படியே கூறினார்கள். 'என்னவாவோ இருந்துட்டுப் போறேன்' என்று விட்டுவிட்டேன். என் மனதில் இருந்த குழப்பம் மட்டும் போகவேயில்லை. 

பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி என்பதால் வெளியில் சென்று டெஸ்ட் செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் தான் கடந்த வாரம் அரசன் போன் செய்திருந்தார் 'தலைவரே ஓ நெகடிவ் தேவைப்படுது, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களா' என்றார். 'தலைவரே நான் கூட ஓ நெகடிவ்ன்னு தான் நினைக்கிறன். நான் வேணா தாரேன்...' என்றபடி இழுத்தேன். 'என்னயா இழுக்கிற என்ன பிரச்சன' என்றார். 'பிரச்சனையே என் ப்ளட் க்ரூப் தான். நான் ஓ பாஸிடிவா நெகடிவா தெரியாது', நான் வாறன் நெகடிவ்ன்னா எடுத்துக்க சொல்லுங்க என்றேன்.

அப்போலோவில் கொடுத்த படிவத்தில் 'உங்கள் ரத்தப் பிரிவு?' என்ற கேள்விக்கு மட்டும் பதில் எழுதிக் கொடுக்காமல் இருந்த என்னை நோக்கி 'சார் ப்ளட் க்ரூப் எழுதிகொடுங்க' என்றாள் ரிசப்ஷன் அம்மணி. 

மேடம் அது தெரிஞ்சா எழுத மாட்டேனா, அதுல தான் கன்பீசன், நீங்க செக் பண்ணி சொல்லுங்க' என்றேன். மனதிற்குள் என்னை திட்டியிருக்க வேண்டும், வேகமாக உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் வெளியில் வந்து சார் நீங்க இப்ப டொனேட் பண்ணுங்க, நாங்க அப்புறம் செக் பண்ணிக்கிறோம் என்றாள். 'அதெல்லாம் முடியாது இப்பவே செக் பண்ணுங்க' என்றேன். 'பரவாயில்ல சார் இப்ப டொனேட் பண்ணுங்க, ஒருவேள நீங்க ஓ பாஸிடிவ்ன்னா உங்க ப்ளட்ட ரீப்ளேஸ் பண்ணிக்கலாம்' என்றாள். 'மீண்டும் ஒருமுறை மேடவாக்கத்தில் இருந்து வானகரம் வரைக்கும் அலைய முடியாது என்பதால் 'நடப்பது நடக்கட்டும்' என்று கொடுத்துவிட்டேன். 


இன்றைக்கு அப்பலோ ரத்தவங்கியில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அதில் 'சார் உங்கள் ரத்தம் என்ன வகை என்று அறியும் ஆய்வில் நீங்கள் ஓ நெகடிவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் நீங்கள் அரிய வகை ரத்தப் பிரிவினர் என்பதால் ரத்த தான முகாம்களில் உங்கள் ரத்தத்தைத் தானம் செய்யவேண்டாம். தேவை ஏற்படின் மருத்துவமனைகளில் மட்டும் தானம் செய்யுங்கள். எங்களுக்குத் தேவை எனில் தயங்காது எங்களுக்கு உதவுங்கள். நன்றி'. 

நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டது. ஆம் நான் 'ஓ நெகடிவ்'. அரிய வகை ரத்தமாம். இதைவிட அரிய வகை ரத்தமும் சில இருக்கின்றனவாம். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நானும் ஒரு அரிய வகை ரத்தப் பிரிவினன் என்தால். 

நாளுக்குநாள் நடைபெறும் விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சை எண்ணிக்கைகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் ரத்தத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரோக்கியமான மனிதன் வருடத்தில் மூன்று முறை ரத்ததானம் செய்யலாமாம். உங்களால் முடியுமானால் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ரத்ததானம் செய்யுங்கள். உங்கள் ஒரு பாட்டில் ரத்தத்திற்கு ஒரு தலைமுறையையே கடன்பட்டிருக்கலாம்...!

13 Sept 2014

புழுதி பறக்கும் பாரு - சென்னையின் சாலை வலிகள்

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடந்து மேடவாக்கத்தை நெருங்க நெருங்க காற்றின் வேகமும் குளுமையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இரவினில் இப்படியொரு சுகமான காற்றை அனுபவித்து வெகுநாளாகிறது. காற்றின் வேகத்திற்கு இணையாக மெதுவாக வண்டியின் வேகத்தைக் குறைத்தேன். பஞ்சை வாரி இரைத்துக் கொண்டிருந்தது. மிதத்தல் என்பது சில தருணங்களில் தான் நிகழும். கிட்டத்தட்ட அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

ஆனால் நேரம் ஆக ஆகத்தான் தெரிந்தது காற்று வாரி இரைத்துக் கொண்டிருந்தது பஞ்சை அல்ல தெருப் புழுதியை என. சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் புழுதியில் இருந்து தப்பிப்பதற்காக தலையை முன்னும் பின்னும் இடமும் வலமும் எப்படியெல்லாமோ அசைத்துப் பார்த்தேன் ம்ம்கூம் தப்பிக்க முடியவில்லை. அடிக்கின்ற காற்றும் நின்றபாடில்லை. மேடவாக்கம் தார் சாலை மொத்தமும் புழுதியால் நிரம்பி இருக்க வேண்டும் அதனால் தான் இப்படி ஒரு போராட்டம். எப்படியாவது இதில் இருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று மீண்டும் வண்டியை முறுக்கினால் காதுக்கு மிக அருகில் பெரிய சப்தம். 

விழுந்தது நான் என்று தான் நினைத்தேன். திடிரென அடித்த புழுதிக் காற்றில் நடனம் ஆடிக் கொண்டிருந்தோம். கண் முழுவதும் தூசி, திறக்கக் கூட முடியவில்லை. கண்ணை கசக்கிக் கொண்டே பார்த்தால் சாலையின் ஓரத்தில் ஒரு ஸ்டார் சிட்டி விழுந்து கிடந்தது. நல்லவேளையாக பார்த்துவிட்டேன். வயது நாற்பது இருக்கலாம். எனது வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு கீழே விழுந்து கிடக்கும் தலைவரை நோக்கி ஓடினேன், அதற்குள் அவரே சுதாரித்து எழுந்துவிட்டார். பேன்ட் கிழிந்துவிட்டது. கையில் முட்டியின் அருகில் சிராய்ப்பு. ஹெல்மட்டைக் கழட்டியவர் 'தே**** பயலுவ, இந்நேரம் லாரில அடிபட்டு செத்ருப்பேன், ரோடா இல்ல புழுதி மேடா, இப்படி போட்டு வச்சிருக்கான்க தே.ப' என்றபடி கத்தத் துவங்கினார். அவர் உடல் படபடப்பில் நடுங்கிக் கொண்டிருந்தது. நிதனாமாக அவர் வண்டியை நிமிர்த்தி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.    

எல்லாம் நடந்து முடிந்தது சில நொடிகளில் தான் என்றபோதிலும் அவர் முகத்தில் கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டுவிட்ட உணர்வு இருந்தது. அவர் விழுந்த இடத்தில் தான் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி சாலையை நோக்கி திரும்புவதற்காக அத்தனை தண்ணி லாரிகளும் மண் லாரிகளும் யு டர்ன் எடுக்கும். நள்ளிரவு என்பதால் அவற்றின் போக்குவரத்தும் அதிகமாயிருக்கும். ஒருவேளை அவர் விழுந்த நொடியில் பின்புறம் ஏதேனும் லாரி வந்திருந்தாலோ இல்லை அவரைத் தட்டிவிட்டு கவனியாமல் சென்றிருந்தாலோ இந்த நடுராத்திரியில் அவர் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். யோசிக்க முடியா அளவுக்கு இருக்கிறது விடைக்கள்.

அவரை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கிறது, அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனது மிச்சம் மீதி நாட்களையும் அவர்களுடன் களிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தனையையும் விட்டுவிட்டு அந்த மனிதன் நடுராத்திரியில் நடுரோட்டில் அம்போ என உயிரை இழக்க வேண்டுமாயின் பிழை நிச்சயம் விதியின் மீது இல்லை, விதியை மதிக்காமல் தன் இஷ்டதிற்கு வாழும் அதிகாரத்தின் உச்சத்தின் மீது இருக்கிறது.  

சமீபகாலமாக ஓ.எம்.ஆரில் மிக அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நானும் சரவணாவும் பெரும்பாக்கத்தின் பின்புறம் வழியாக செம்மஞ்சேரி சுனாமி குப்பம் கடந்து ஓஎம்ஆரை அடைந்து சிறுசேரி சென்று கொண்டுள்ளோம். ஓ.எம்.ஆர் என்பது பெருமுதலாளிகளுக்காகப் போடப்பட்ட சுங்கச்சாலை என்பதால் அட்டகாசமாக இருக்கும். ஆறுவழிச்சாலையும் கூட. இருந்தும் மழைக்காலத்தில் நீந்தித்தான் செல்ல வேண்டும் என்பது வேறு விசயம். 

இந்நேரத்தில் இந்த பெரும்பாக்கத்தின் பின்புறச் சாலையைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். சுற்றிலும் வானம் பார்த்த பூமி. சுத்தமாக மழை இல்லமால் போனதால் கண்ணுக் எட்டிய தூரம் வரைக்கும் விலை நிலங்கள். ரியல் எஸ்டேட் வியாபாரம் ஜெகஜோதியாய் நடக்கும் சென்னையின் மிக முக்கியமான கான்க்ரீட் காடு. சென்னையில் இருக்கும் மிகபெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மொத்தத்தையும் இந்தப் பாதையில் காணலாம். இன்னுமின்னும் கட்டப்பட்டு வருகின்றன. 

பெரும்பாக்கத்தில் இருந்து தனியே பிரிந்து செல்லும் இச்சாலையில், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன் புதிய சாலை போட வேண்டும் என்பதற்காக தோண்டி வெறும் ஜல்லிக்கற்களை பரப்பி விட்டனர். சாதரணமாகவே அந்தச் சாலை அப்படித்தான் இருக்கும் என்றாலும் இப்போது வெறும் ஜல்லியை நிரப்பியிருப்பதால் வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்ட பெரிதும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. எங்களுக்கோ போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க இதைவிட்டால் வேறு நல்ல வழி இல்லை. ஒரு மூன்று கிலோமீட்டருக்கு பல்லைக் கடித்துக் கொண்டு அந்த கற்கால சாலையின் வழியே பயணித்துவிட்டால் ஓரளவிற்கு நல்ல சாலையைப் பிடித்துவிடலாம். சரியாக அதிலிருந்து ஓரிரு மாதங்களில் சாலை முழுமையையும் சிமின்ட் மணலைக் கொண்டு நிரப்பினர். அப்படியாகப் போடப்பட்ட சிமின்ட் மணலானது காற்றில் பறக்கும் போதெல்லாம் ஒழுங்காக வண்டி ஓட்ட விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தது. அதிலும் மழைக்காலம் என்றால் இன்னும் கொடுமை. 

தேர்தலும் முடிந்து மோடியும் பிரதமரானதன் அடுத்த மாதத்தில், அவசரகதியில் வெறும் மூன்று இரவுகளில் இரவோடு இரவாக மொத்த சாலையையும் போட்டு முடித்தனர். அவ்வளவு தான். அதிலிருந்து ஒரு வாரம் ஒரு மழைக்குக் கூட அச்சாலை தாக்குப் பிடிக்கவில்லை. ஏற்கனவே சொன்னது போல் அங்கு ரியல் எஸ்டேட் யாவாரம் கொடிகட்டிப் பறப்பதால் கனரக சாமான்களை (கல் மண் இரும்பு தண்ணீர்) ஏற்றிச் செல்லும் அத்தனை லாரிகளும் இவ்வழியாகத்தான் பறக்கும். அவற்றின் எடையையும் வேகத்தையும் தாங்க முடியாத அந்த அப்பாவி சாலை ஒரே வாரத்தில் சீக்கு வந்த கோழியாக மாறி அடுத்த மழையில் எயிட்ஸ் முற்றிய நோயாளி போல் மாறியிருந்தது. எனக்கும் சரவணாவுக்கும் இந்த ரோடு போட்ட காண்ட்ராக்டர்களையும் அரசியல்வாதிகளை தினம் தினம் திட்டித் தீர்க்காவிட்டால் அந்த நாள் சிறப்பாய் இருக்காது. அவ்வளவு சாபத்தைக் கொடுத்திருக்கிறோம். பின்னே யார் பணம். உங்கள் பணமும் என் பணமும் தான். அது எல்லாம் கூட என் வருத்தம் இல்லை. அந்த சாலையைப் போட்ட இரண்டாவது வாரத்தில் அதே சாலையை மறு சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் கண்ணில் ரத்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பத்து நாட்களுக்கு முன் போடப்பட்ட ஒரு புதிய சாலையை ஒட்டுபோட்டுக் கொண்டிருப்பதை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? இவ்வழியாக சென்றால் பார்க்கலாம். சரி அந்த சாலையைக் கடந்து செம்மஞ்சேரி சுனாமி குப்பத்தை நெருங்கினால் அங்கே சிமின்ட் ரோடு என்ற பெயரில் ஒரு ரோடு தென்படும். நீங்கள் நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டும் தான் தெரியும் அங்கே சிமின்ட் ரோடு என்ற பெயரில் ஒன்று இருப்பதே. காரணம் சாலை மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக புழுதி சேர்ந்து மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. என்ன செய்வது அந்த சாலையை உபயோகிக்கும் மொத்தப் பேரும் அன்னடாங்காட்சி. அவனுக்கு இது போதாதா. ஒருவேளை இதுவே அதிகம் என்று நினைத்தாலும் நினைத்திருப்பார்கள். இரவில் மின் விளக்குகள் அற்ற சாலையில் அப்படியொரு அமான்யுஸ்யத்தை அனுபவிக்கலாம். மேலும் இரவில் திருட்டுப்பயம் ஜாஸ்த்தி என்பதால் வீடு திரும்பும் போது மட்டும் அந்தப்பாதையை உபயோகிப்பதில்லை.     

புறநகரின் ஒதுக்குப்புறம் தான் இந்தப் பிரச்சனை என்றால், புறநகரின் மையப் பகுதிகளிலும் இதே பிரச்சனை தான். வெகுசமீபத்தில் தாம்பரம் மேடவாக்கம் இடையேயான சாலையை அகலப்படுத்தி புத்தம் புது சாலை போட்டிருந்தார்கள். கடந்த வாரம் அந்த வழியாகச் செல்லும் போது தான் பார்த்தேன் ஒவ்வொரு பத்து அடிக்கும் ஒரு குழியை வெட்டி வைத்திருக்கிறார்கள் புண்ணியவான்கள். மேலும் சென்னை முழுவதுமே ஒரு நீளமான கோட்டைப் போட்டது போல், ஒரு பெரிய நகத்தால் கீறியது போல் கீறி வைத்துள்ளனர். எதற்காக என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கீறலினுள் பைக்கின் சக்கரம் மாட்டி வெளிவரும் போதெல்லாம் எங்கே ஸ்கிட் ஆகிவிடுமோ என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 'தோண்டுறதுக்கு தான் ரோடு போடுறீங்கன்னா அப்புறம் என்னாத்துக்கு பாஸு ரோடு போடுறீங்க. அப்படியே பேசாம விட்ற வேண்டியது தான'. இதெல்லாம் கூடப் பரவாயில்லை. மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் ஒரே ஒருவருடம் தொடர்ந்து பயணித்தால் போதும் ஆஸ்த்துமா வந்து அஸ்தி ஆவது உறுதி. ஆவடி அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் பூந்தமல்லி என்றால் ஒரே மாதத்தில் ஆஸ்த்துமா உறுதி. அந்த சாலைகளின் வழியே பயணித்து வீடு வந்து சேர்ந்தால் நம்முடலில் இருந்து குறைந்தது ஒரு ஒரு கிலோ புழுதியைப் பிரித்தெடுக்கலாம்.  

சென்னையின் புறநகர் மட்டும் தான் இப்படியிருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. சென்னையில் எங்கெல்லாம் எளிய மனிதர்கள் இருக்கிறார்களோ அந்தப் பகுதிகள் மொத்தமும் அப்படித்தான் இருக்கின்றன. என்ன அவை லுண்டும் குழியுமான சாலையாய் இருந்தாலும் குறைந்தபட்சம் புழுதிகள் குறைந்த சாலையாய் இருக்கும்.

அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் அழகான சாலைகளை அமைத்து சுகமாய்ப் பயணித்துக் கொண்டிருக்க, வரி கட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் ஆஸ்துமாவைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். சென்னையில் நான் கண்ணெதிரே இவற்றைப் பார்ப்பதால் கூற முடிகிறது, நாலு பேரை விசாரித்தால் தெரியும் தமிழகம் மொத்தமும் ஏன் இந்தியா மொத்தமும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும். ம்ம்ம் என்ன புலம்பி என்ன செய்ய ஒரு பக்கம் மனிதவளம் மொத்தமும் முறையாகப் பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்படுகிறது என்றால் மறுபக்கம் மனிதவளத்தின் சக்தி முழுமையும் சாலை நெரிசலிலேயே சிக்கி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இருந்தாலும் பெருமையாகக் கூறிக்கொள்வோம் இந்தியராய்ப் பிறப்பதற்கு என்ன மாதவம் செய்தோமோ!!! 

படங்கள் : நன்றி - இணையம்

10 Sept 2014

அழிக்க முடியா நா(யக)ன் - சிறுகதை


இப்போதெல்லாம் கனவில் மிக விசித்திரமான மனிதர்களையே சந்திக்க நேரிடுகிறது, எங்கிருந்தோ வெளிப்படும் சில தெளிவில்லாத பிம்பங்களில் இருந்து வெளிப்படும் அவர்கள் என்னை நெருங்க நெருங்க இன்னும் விநோதமாய்த் தெரிகிறார்கள். இன்னதென்று கூற முடியாத மூர்க்கத்தை அவர்களிடம் காண்கிறேன்.

அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவனாய்ப் பிரிந்து வரும் அவன் கரும்புகை சூழ மிகவேகமாக மிகப்பெரிய சீற்றத்துடன் என்னை நெருங்கி வருகிறான். என்னைக் கொல்லும் முயற்சி, நிர்பந்தம் அவனிடம் தெரிகிறது. எனக்கும் அவனுக்குமான பகை எந்த ஜென்மத்தில் எப்போது எங்கே தொடங்கியது என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் அவன் முகத்தில் தெரியும் கொலைவெறியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இக்கணத்தில் என்னால் ஆகக்கூடிய செயல் என்று ஒன்று உண்டென்றால் அது ஓடுவது தான். அவன் கண்ணில் படாமல், அவன் கண்ணுக்குத் தெரியாத இடம் நோக்கி ஓடுவது.   


கற்பனைக்கே எட்டாத அந்தப் பெருவெளியில் வேகமாக ஓடத்தொடங்குகிறேன், முடிவில்லாத ஓட்டம், அதே நேரம் களைப்படையக் கூடாத ஓட்டம். இருந்தும் ஒரு கட்டத்தில் நான் தோற்றுப் போய்விடுகிறேன். 

என்னை நெருங்கி எனக்கு மிக அருகில் நிற்கும் அவன் முகம் தெளிவாகத் தெரிகிறது. நன்கு அறிந்த முகம், ஆனாலும் இன்னார் என்று அறிந்து கொள்ள முடியாத, மூன்று நான்கு முகக்கலவையில் உருவானதொரு முகம். குரூரத்தின் மிச்சத்தை மட்டுமே அந்த முகத்தில் தெளிவாக அடையாளம் காணமுடிந்தது. களைப்பில் பயத்தில் மூச்சை மேலும் கீழும் இழுத்துவிட்டுக் கொண்டேன். 

அவனுக்குத் தேவை நான். உயிரோடிருக்கும் நான். அதேநேரம் என்னுடைய தேவையும் அதே நான்தான். மீண்டும் ஓடத் தொடங்குகிறேன். ஓட முடியவில்லை. ஏதோ ஒரு சூழ்ச்சி வலை என்னைக் கட்டுண்டது போல, என்னுடைய பலம் மொத்தமும் இழந்து போனதைப் போல ஓர் உணர்வு. இனி ஆவதற்கு ஒன்றுமில்லை. 

என்னில் இருந்து விலகி என்னையே வேடிக்கைப் பார்க்கத் தொடங்குகிறேன். மெல்ல என்னை நெருங்குகிறான், ஒருவித அச்சத்தோடு அவனை எதிர்கொள்கிறேன். இதுவரை பார்த்திரா பூச்சிகள் புழுக்கள் என்னுடலை நெருங்குகின்றன. முகத்தைச் சுற்றிலும் அடையாளம் தெரியாத பூச்சிகளின் ரீங்ககாரக் குரல்கள். அந்த அடர் மௌனத்தில், அவற்றின் ரீங்காரகளுக்கு மத்தியில் வெளிப்படும் அவனுடைய திடீர்ச்சிரிப்பு ஊசியாய் நுழைந்து என் அங்கங்களைத் துளைத்து எடுக்கிறது. ஆயுதமற்ற கைகளுடன் என்னை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனே ஒரு ஆயுதமாய்த் தன்னை மாற்றிகொள்கிறான். இல்லை அப்படி ஒரு பிரம்மையை என்னுள் ஏற்படுத்துகிறான்.   

எதிர்பாராத ஒரு கணத்தில் எனக்கும் அவனுக்குமான இறுதி யுத்தம் தொடங்குகிறது. பெரும் சண்டைக்குப் பின் நான் வீழ்த்தப்படுகிறேன். உடலில் ஓடும் கடைசி ரத்தம் கடைசி மூச்சு கடைசி உயிர் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இனியும் சமயமில்லை. நான் சாகக்கூடாது. சாக வேண்டியது நான் இல்லை. 

நொடியும் தாமதியாமல் என்னில் இருந்து விலகி என்னை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் என் உடலினுள் புகுந்து கொள்கிறேன். இனி நடக்கப்போவது தான் கடைசி யுத்தம். எனக்கும் அவனுக்குமான கடைசி யுத்தம். அதுகுறித்த எவ்வித அச்சமும் அவன் முகத்தில் இல்லை. அதே கொலைவெறி. அந்தக் கரும் இருட்டில் யாருமற்ற பெருவெளியில் இருவருக்குமான யுத்தம் தொடங்குகிறது. தெளிவில்லாத முரட்டுத்தனமான யுத்தம் அது. சுற்றிலும் கரும்புழுதிப்படலாம். மாயைக்குள் மாயைக்குள் மாயையாய் நீளும் மாயை அது . 

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் அவன் மூர்க்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை. ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். மீட்டெடுப்பது வெற்றியை மட்டுமல்ல, என் உயிரையும். 

தொடர்ந்த என் தாக்குதலை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. அவன் நிலைகுலைவது தெரிகிறது. நம்பக் கூடாது. அதுவும் சூழ்ச்சியாய் இருக்கலாம். எவ்வளவு நேரம் எங்களுக்குள் யுத்தம் நடந்தது எனத் தெரியவில்லை. என் பிடி தளர்ந்த நொடியில், அந்நொடியை எதிர்பார்த்திருந்த கணத்தில், இனி தன்னைக் கண்டே பிடிக்க முடியாதவாறு அக்கரிய இருட்டில் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான். பார்வை செல்லும் தூரம் வரைக்கும் தேடிப்பார்த்து விட்டேன் கண்ணில் சிக்கவில்லை. பேடி. ஒழிக்கப்பட வேண்டியவன். ஒளிந்து கொண்டான்.  


புது ரத்தம் பாயும் உடலில், மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னாக நிரப்பி வழியும் புது உற்சாகத்துடன் என் சிம்மாசனத்தை நோக்கி என் தேரை செலுத்துகிறேன். அவனைத் துரத்திச் செல்ல வேண்டிய கட்டாயமோ அவசியமோ எனக்கில்லை. காரணம் நாளையும் அவன் வருவான். நான் தூங்கிக் கொண்டு இருக்கும் நேரமாய்ப் பார்த்து என்னைத் துரத்தத் தொடங்குவான். மீண்டும் இதே போன்றதொரு யுத்தம் நடக்கும். நடந்தே தீரும். அவனுக்குத் தேவை நான். என் உயிர். அது கிடைக்கும் வரை இந்த யுத்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து கொண்டே இருக்கும். 

இப்போது நீங்கள் குழப்பிப் போகலாம். காரணமே இல்லாமல் இவ்வளவையும் உங்களிடம் நான் கூறுவதன் அவசியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்பு உங்கள் மூளைக்குள் ஏற்படலாம். கூறுகிறேன். காரணமே இல்லாமல் இங்கு எதுவுமே நிகழ்ந்து விடுவதில்லை. எல்லாவற்றிக்கும் காரணம் இருக்கிறது. 

அவன் ஒரு மூடன். என்னைத் துரத்தி வந்து, என்னை அழிக்க நினைத்து என்னை இல்லாமல் செய்யத் துடிக்கிறானே அவன் ஒரு மூடன். அவனுக்குத் தெரியாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அதை அவனிடம் கூறும் சந்தர்ப்பத்தை அவன் எனக்கு அளித்ததே இல்லை. இருந்தும் அதனை அவனிடம் கூறவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். 

ஒருவேளை அவனுக்கு உங்களைத் தெரிந்திருக்கலாம், உங்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை நீங்கள் அவனுக்கு அளித்திருக்கலாம் அல்லது உங்களுக்கும் அவனுக்குமான உறவில் நீங்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அவன் உங்களுக்கு வழங்கியிருக்கலாம். அதனால் தான் அதனால் மட்டும் தான் உங்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் கூறிக்கொண்டுள்ளேன். தயவு செய்து நான் கூறும் ரகசியத்தை அவனிடம் சேர்ப்பித்து விடுங்கள். 

உங்கள் கனவில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் அவனை சந்திக்க நேரும்போது அவனிடம் கூறுங்கள் 'எத்தனை முறை எண்ணத் துரத்தி வந்து அழிக்க நினைத்தாலும், என்றைக்குமே என் கனவில், என் கனவு ராஜாங்கத்தில் அழிக்க முடியா, அழிக்கப்பட முடியா நாயகன் என்று ஒருவன் உண்டு என்றால் அது நான்தான், நான் மட்டும் தான் ' என்பதை. 

- முற்றும்

படங்கள் - நன்றி வெண்முரசு

5 Sept 2014

கற்றது கணிப்பொறியியல் - அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்

நேற்றைக்கு வெகுநாள் கழித்து மீண்டும் ஒருமுறை கற்றது தமிழ் பார்த்தேன். தற்சமயம் நான் பணிபுரியும் மென்பொருள் துறையை கடுமையாகச் சாடி படமெடுத்து இருப்பார் இயக்குநர் ராம். கணிப்பொறியியல் துறையால் ஏற்பட்ட சமூக மாற்றங்களும் அதனால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் மட்டுமே கதையின் மையம். 
2007-ல் வெளிவந்த படம். நானும் மணிக்குமரனும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில், கல்லூரியில் ஹால்டிக்கெட் வாங்கப்போன இடத்தில் - ஹால்டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த ஆபீஸ் அசிஸ்டென்ட் அதனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க, அவருக்கும் எங்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எங்கள் ஒட்டு மொத்த வகுப்பும் அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பின் ஒரு சிறிய பஞ்சாயத்திற்குப் பின் அவசர அவசரமாக ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து நெல்லை சென்று, சென்ட்ரலில் பார்த்த படம் கற்றது தமிழ். நிற்க. நான் இங்கே கற்றது தமிழ் கதையெல்லாம் சொல்லப்போவதில்லை. 

முதல்நாள் முதல் காட்சி என்பதால் அரங்கம் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதைக் கடந்திருந்ததவர்கள். அன்றைய தினத்தில் பாடலும் ட்ரைலரும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. கவிதை போல் நகரும் காதல் காட்சிகள், மயிர்நீப்பின் மானப்பெரிது என வாழும் நாயகன், கேட்க கேட்க சிலிர்க்க வைக்கும் வசனங்கள் என்று படம் முடிந்த போது அப்போதைய அன்றைய தினத்தில் படம் என்ன மாதிரியான தாக்கத்தை, தர்க்கத்தை என்னுள் ஏற்படுத்தியது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தாகத்தை ஏற்படுத்தியது என்பது மட்டும் உண்மை. 

பள்ளியில் படித்த காலத்தில், கல்லூரியில் சென்று படித்தால் அது தமிழ் எம்.மே வாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நடைமுறைச் சாத்தியமாக இருக்கவில்லை. அப்போதைய வேலை வாய்ப்புகள், என் எதிர்காலம் சார்ந்த கேள்விகுறி என்று எவ்வளவோ காரணிகள் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. மேலும் கல்வி சார்ந்த தொலைநோக்குப் பார்வை நம் சமுதாயத்தில் மிகக் குறைவு. அறிவியல் படித்தவனாவது டியுசன் எடுத்து பிழைத்துக் கொள்ளலாம், கலை படித்தவன் பாடு பெரும் திண்டாட்டமே. 

சமகாலத்தில் தொழிற்கல்வியானது மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் கணிப்பொறியியல் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. யாரைக் கேட்டாலும் பில்கேட்ஸின் நேரடி கண்காணிப்பில் வேலை செய்யப்போவதே தனது லட்சியமாகக் கூறுவார்கள். படித்து முடித்த அடுத்தநாளே அமெரிக்காவில் தனக்கொரு இடம் இருப்பதாக கனவு கண்டார்கள். போதாக்குறைக்கு கம்ப்யுட்டர் இன்ஸ்டிட்யுட்கள் தங்கள் பங்கிற்கு சமுதாயத்தின் காதில் வேதம் ஓதியது. பணம் பண்ணும் இயந்திரமாகவே கணிப்பொறியியல் துறையை சமூகம் பார்க்க ஆரம்பித்தது. கற்றது தமிழ் படமும் அதையே கட்டியம் கூறியது. 

நாயகனுடன் படித்தவன், நாயகன் நடுத்ததெருவில் சந்திக்கும் பிபிஓ ஆசாமி என்று அனைவருமே செல்வச்செழிப்பில் வாழ்பவர்கள். பைக்கில் காரில் பெண்களுடன் மட்டுமே வலம் வருபவர்களாக காண்பிக்கப்பட்டார்கள். 

சாதாரணமாகவே ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது என்றால், இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. இந்நேரத்தில் இப்படம் குறித்து மிகப்பெரிய சர்ச்சைகளும் விவாதங்களும் வாக்குவாதங்களும் நிகழத் தொடங்கியிருந்தன. அனைத்து பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கு கணினித்துறையை வறுத்து எடுத்தார்கள், வெகுசிலர் மட்டும் ராமை. 

அதிலிருந்து சில மாதங்களில் பச்சையப்பன் கல்லூரியில் மிகப்பெரிய கலவரம், பஸ்டே கொண்ட்டாட்டம் ஜாதிப் பிரச்சனையாக வெடித்து பின் இரு கல்லூரிகளுக்கு இடையே நிகழ்ந்த வன்முறையாக மாறி இருந்தது. பேனாக்களின் கவனம் மீண்டும் கலை அறிவியல் கல்லூரிகளின் பால் விழுந்தது. தொழிற்கல்வி படித்தவன் ஏதாவது ஒரு வகையில் பிழைத்துக் கொள்வான் ஆனால் கலை அறிவியல் படித்தவன் பாடு பெருந்திண்டாட்டம் இதில் கலவரம் வேறா அய்யகோ என்றார்கள். யோசித்துப் பார்த்தால் அதுதான் உண்மையும் கூட. மேலும் கலை பயிலும் மாணவர்களின் உளவியலைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமான காரியம். இங்கே யாருமே அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றதே கிடையாது. அவர்களும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதே இல்லை என்பது வேறுவிசயம். 

பெரும்பாலும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மத்தியதர, அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் (அதாவது பொருளாதரத்தில்). இவர்களிடம் வாழ்க்கை சார்ந்த புரிதல், தெளிவு, முன்னோக்குப் பார்வை என்பது அதிகம் (அறவே) இருக்காது. இதற்கு சமூகக்காரணிகள் பல. என்னைக் கேட்டால் முதல் காரணியாக அவர்கள் குடும்பச் சூழலையும் இரண்டாவதாக கல்வி நிலையங்களை, முக்கியமாக பள்ளிகள் அதிலும் முக்கியமாக அரசாங்கப் பள்ளிகளையும் கூறுவேன். கலைக் கல்வி கற்போரின் நிலைமை இன்றளவிலும் ஒரே இடத்தில் தான் தேங்கி நிற்கிறது. 

2008 - இந்த வருடத்தை மென்பொருள் துறையில் வேலை பார்த்தவனும், கணிப்பொறியியல் படித்து முடித்து வெளியேறியவனும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இன்றளவும் கூட 2008-ன் தாக்கத்தில் இருந்து மீள முடியாத பலரையும் சந்திக்க முடிகிறது. 

யாருமே எதிர்பாராத ஒருநாளில் ஓரிரவில் அதாள பாதாளத்தை நோக்கி இறங்கிவிட்டது இத்துறை. கொஞ்சம் கொஞ்சமாக ஊதிக் கொண்டிருந்த கணிப்பொறியியல் என்னும் பலூனில் இருந்து மெல்ல காற்று கசியத் தொடங்கியதையே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வேலை இல்லாத் திண்டாட்டம். மென்பொருள் துறையில் பெரும்பான்மையாக அடி வாங்கியது ITIS/ITES என்று சொல்லப்படக்கூடிய மென்பொருள் சார்ந்த துறை தான். அமெரிக்கா மற்றும் அமெரிக்கா சார்ந்த வர்த்தகத்துறைகள் தங்கள் வாடிக்கையாளர் சேவைகளை cost cutting என்ற வகையில் பாதிக்கும் கீழாகக் குறைக்க, அவர்களை நம்பி கீழை நாடுகளில் இயங்கிவந்த அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் இயங்கிவந்த நிறுவனங்களுக்கு பெருத்த அடி. அதுவரையிலும் தாராளமாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் மென்பொருள் நிறுவனங்கள் கூறிய பதில் இனி இவ்வளவு தான் ஊழியம் கொடுக்க முடியும் விருப்பம் இருந்தால் வேலை செய் இல்லையேல் வேறு வேலை தேடிகொள். 

இருபதாயிரம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவனிடம் சென்று இனி உனக்கு பத்தாயிரத்திற்கும் குறைவாகத்தான் சம்பளம் சமாளித்துக்கொள் என்றால் என்ன செய்வான், ஏற்கனவே காஞ்ச மாடு கம்பம் புல்லைத் தேடி வயக்காட்டில் குதித்ததைப் போல் திடிரென சகட்டுமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தவனிடம் 'ராஜா இனி உனக்கு அவ்வளவு சம்பளம் கிடையாது, செலவை குறைத்துக் கொள்' என்றால் என்ன செய்வான். வாங்கும் சம்பளத்தை நம்பி வாங்கிப்போட்ட கார், வீடு, வீட்டு உபயோகப்பொருள் அத்தனைக்கும் கடன் தொகை செலுத்த வேண்டுமே. அது மட்டுமா மென்பொருள் துறையினரை நம்பி பல பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து போய் இருந்தது, இப்போது அதையும் சமாளிக்க வேண்டும். 

அமெரிக்க வர்த்தகத்தில் நிகழ்ந்த திடீர் பணமுடக்கத்தின் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் உற்பத்தி வேலைகளை ஆனது ஆனபடி நிறுத்திவிட்டன, இது மென்பொருள் துறையை குடிசைத் தொழிலாய்க் கொண்டு நடத்தி வந்த மொத்தப் பேரையும் பாதித்து, பெருநிறுவனங்களையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. வளர்ந்த மென்பொருள் நிறுவனங்கள், ஊழியர்களின் பல சலுகைகளைக் குறைத்தும் 'அதுலக் கொஞ்சம் கொற இதுலக் கொஞ்சம் கொற' என்ற வகையில் ஒருவாறு சம்பளத்தில் கைவைத்தும் தாக்கு பிடிக்கத் தொடங்கின. ஊழியர்களும் வேறு வழியில்லாமல் 'தல தப்பினது தம்புரான் புண்ணியம்' என்று ஒரு பெரிய கும்புடு போட்டுக்கொண்டு தொடர்ந்து இயங்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 2009-ன் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்த நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியது சந்தை. ஆனாலும் வீழ்ந்த நிலையில் இருந்து முழுவதுமாக எழ முடியவில்லை. இரண்டாம் உலகப் போரைக் காட்டிலும் மிக மோசமான ரெகவரி இந்த 2008 ரிசஷன் என்று வர்ணித்தார்கள் உலகப் பொருளாதார மேதைகள். 

எல்லாம் சரி ஆனால் மாணவ ஜாதி, மாணவ ஜாதி என்று ஒரு கூட்டம் இருந்ததே அது என்னவாயிற்று? அந்த சுழலில் சிக்கிய மாணவ ஜாதியின் நிலைமை இன்னும் என்ன? பதில் தான் கொஞ்சம் மோசமானது. கணிப்பொறியியல் துறை வளர்ச்சியின் சங்கிலித் தொடரில் இரக்கமே இல்லாமல் அறுபட்டுப் போனது இந்த சோ கால்ட் மாணவ ஜாதி தான். எங்கு பார்த்தாலும் வேலை இல்லாத் திண்டாட்டம், அல்லது அடிமாட்டு சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் எடுத்தல், அதுவும் இல்லையா பத்தாம் வகுப்பு முடித்தவன் செய்ய வேண்டிய வேலையை கல்லூரி முடித்துவிட்டு செய்ய வேண்டியது. எதை நம்பி எந்தக் கனவுகளை நம்பி கணிப்பொறியியல் துறையில் அல்லது தொழிற்கல்வி துறையில் சேர்ந்தார்களோ அந்தக் கனவில் மண் மட்டும் இல்லை கருங்கல் செங்கல் பாறாங்கல் இன்னும் என்னவெல்லாமோ விழுந்தது. ஆறுமாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய ஒரு இடம் காலியாக இருக்கிறது என்றால் அதற்கும் நூறு பேர் க்யூவில் நிற்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதில் இருந்தும் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் இளைஞர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஏற்கனவே வாழ வழி தெரியாமல் தேங்கிப் போய் நிற்கும் கலை அறிவியல் மாணவர்களின் கூட்டம் ஒருபக்கம் நிற்க, தொழிற்கல்விக்காவது வேலை கிடைக்கும் என்று கடன உடன வாங்கி பொறியியல் படித்தால் இன்று அதற்கும் வழியில்லாது மெல்ல தேங்கிக் கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம். போதாகுறைக்கு தரமான கல்வி இல்லை, தரமான கல்விச் சாலைகள் இல்லை, தரமான கல்வி மற்றும் சாலைகள் இருந்தும் அதில் கற்றவர்களின் திறமைக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை என்று எத்தனையோ இல்லைகள் நாட்டில் அதுவும் இளைஞர்கள் மத்தியில் பெருகிக் கொண்டே தான் செல்கிறது. இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் மழுங்கிய மழுங்கடிக்கப்பட்ட இளைய சமுதாயம் முழுவதுமாக உற்பத்தியாக்கபடும் அபாயம் இருக்கிறது. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் கற்றது தமிழ் படத்தின் இறுதிக் காட்சியில் ராம் ஒரு வசனம் எழுதி இருப்பார் 'நீங்க வாழுற இந்த ஊர் ரொம்ப ரொம்ப ரொம்ப மோசமானது, நீங்க சாப்புடுற ஒரு வாய் பீசாக்காக ஷூக்காக கண்ணாடிக்காக கொல செய்யப்படலாம். பண்ணிட்டு இருக்காங்க' என்று சமுதாயத்தை நோக்கி மிரட்டும் தொனியில் ஒரு காட்சி அமைத்திருப்பார். அதை இங்கேக் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.

எதுவுமே அமைதியாய் இருக்கும் வரையில் ஆபத்தே இல்லை. இங்கே சர்வமும் அமைதியாய் இருக்கிறது. இந்த அமைதியைஅரசியல்வாதிகளும் பெருத்த முதலாளிகளும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் மிக முக்கியமான முதுகெலும்புகளான இளைஞர்களின் முதுகில் கூன் விழுந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய அக்கறை இல்லாமல் நாட்டை இயங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு ஆயிரம் கோடி இதற்கு ஆயிரம் கோடி என்று கோடிகோடியாய் சொத்து சேர்த்துக் கொண்டுள்ளார்களே தவிர இங்கு இருக்கும் மனிதவளத்தை எப்படி முறையாக உபயோகபடுத்துவது என்பது பற்றிய எந்த திட்டமிடலையும் யோசிக்கக் கூடக் காணோம். யோசிக்கவே இல்லை எனும் போது எப்போது செயல்படுத்தப் போகிறார்கள்?

ஒருகட்டத்தில் இந்த சமுதாயத்தில் வாழ வழியே இல்லை என்ற நிலை ஏற்படுமாயின் கற்றது தமிழில் ராம் சொல்வது போல் 'அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை' என்ற நிலையம் வரலாம். அப்படியொரு நிலை வராமல் தடுப்பது பல கண்ணிகளை ஒழுங்கில்லாமல் சுழலச் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்டின் பெருந்தலைவர்களிடமும் மெத்தப் படித்த ஆட்சியாளர்களிடமும் மட்டுமே இருக்கிறது. 


பார்க்கலாம் மாற்றம் ஒன்று தானே மாறாதது. மாற்றம் நல்லதாய் அமைந்துவிட்டால் யாருக்கும் பிரச்சனையில்லை. இல்லாது போனால்...