30 Aug 2014

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் - அவர்களும் மனிதர்களே...!


இந்த நட்ட நடுராத்திரியில் வேறு வழியே இல்லாமல் தான் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தேன், பொதுவாக இந்த நேரத்திற்கு எல்லாம் அவர்களை அழைத்தால் உச்சகட்ட உறக்கத்தில் இருப்பார்கள், அதிலும் இரவு பத்து மணியில் இருந்தே 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று பேசத் தொடங்குவதால் பாவம் விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். இது அவர்களுக்கு எத்தனாவது நாள் இரவுப்பணி என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. உறக்கம் தொலைத்த இரவுகளில் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்கள் அவர்கள். 'அதற்குத் தான சம்பளம் வாங்குகிறாங்க' என்ற கேள்வி எழுந்தாலும், உள்ளூர் சேவைக்கெல்லாம் மிஞ்சிப்போனால் எட்டாயிரம் கொடுப்பார்கள் அதற்கு மேல் எதிர்பார்த்தால் வீட்டிற்கு கிளம்பி விடலாம்.  

அலுவலகம் ஓ.எம்.ஆரிலோ அம்பத்தூரிலோ, போரூரிலோ இருக்கலாம். தங்கியிருப்பது நகரின் மூலையில் எங்கோ ஒரு பத்துக்கு பத்து அறையில் தன்னைப் போன்ற ஐந்து பேருடன். ஒவ்வொருவரும் வேறுவேறு ஷிப்டிற்கு சென்று வருவதால் 'உறங்க ஒரு இடம்' என்பது பிரச்சனையே இல்லை. 'வாழ ஒரு வேலை' என்பது மட்டும்தான் பிரச்சனை. கூடவே சாப்பாடு. நல்ல சாப்பாடு என்பது என்றாவது ஒருநாள் அரிதாகக் கிடைப்பது. மற்றபடி சாப்பாடு என்பது பசியை அடக்கினால் போதும். மூன்று வேளையும் சாப்பாடு என்பதெல்லாம் கையில் தாராளமாகக் காசு இருக்கும் நாட்களில் மட்டுமே. காசு இல்லையா, இரண்டு வேளை சாப்பாடு. ஒருவேளை தம். உடம்பை வளர்த்து உயிரை வளர்த்துவிடலாம். 


மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறதோ இல்லையோ மூன்று வேளையும் வேலை நேரம் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும் இந்த வேலை நேரத்திற்கு அவர்கள் தங்களைத் தயராய் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தயாராய் இருந்தாலும் அவர்களுடைய உடல் தயாராய் இருக்க வேண்டும். உடல் தயாராய் இருந்தாலும் எடுத்துக்கொள்ளும் உணவு தயாராய் இருக்க வேண்டும். இத்தனையும் மீறி வேலை பார்க்கும் இடத்திற்கு நள்ளிரவில் வரச்சொன்னாலும் வரவேண்டும், அதிகாலை தூங்கி நண்பகல் வரச்சொன்னாலும் மறுக்காது வரவேண்டும். பெரும்பாலான அலுவலகங்களில் இரவுப்பணி என்றால் வாகனவசதி உண்டு என்றாலும் வீட்டுவாசல் வரை எல்லாம் வரமாட்டார்கள். அருகில் எங்காவது ஒரு கிமீ தொலைவில் வரச் சொல்வார்கள், அங்கு போய் ஏறிக் கொள்ள வேண்டியது தான். 

'பேசிட்டே தான இருக்கணும், இதுல என்ன இருக்கு' என்று நினைத்தால் அதில் தான் பிரச்சனையே, அதை விடப் பிரச்சனை அவர்கள் பேசிக்கொண்டிருப்பது மனிதர்களுடன். பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் என்ற போர்வையில் பேசும் மிருங்கங்களுடன். 'வண்ணாந்துறையில உள்பாவாடை காணாமப் போனக்கூட என்ன தான் புடிச்சு உள்ள போடுறாங்க எசமான்' என்பது போலத் தான் இவர்களின் நிலையம். 

மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது எவனை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டானோ 'அவன்' மீதும் மட்டுமே எளிதில் பாயும். இங்கே இந்த 'அவன்' வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள். உயிர் வாழ்தலுக்காக வேறுவழி தெரியாமல் சிக்கிக்கொண்ட ஆடுகள். அட்டகத்திகளின் வீரத்தை, கழுத்தறுப்பை வேறுவழியே இல்லாமல் தாங்கிக் கொண்டிருப்பவர்கள். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்கள்.

வேலையில் சேர்ந்த முதல் சில வாரங்களுக்கு 'வாடிக்கையாளர்களைக் கையாளுவது எப்படி?' என்பது குறித்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். அதில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் சூத்திரம் 'உன் குடும்பத்தையே திட்டினாலும், சிரித்துக் கொண்டே நன்றி தான் சொல்லணும், கோவப்பட்டு பேசிற கூடாது, தொடர்ப துண்டிக்கக் கூடாது'. இதை என் நண்பன் என்னிடம் கூறும் போது அவன் கண்கள் கலங்கியிருந்தது. 

ஒரு நள்ளிரவில் அவனுக்குப் போன் செய்து கிண்டல் செய்த பெண்ணின் எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு அடுத்த நாள் அழாத குறையாக 'அப்படிச் செய்யாதே' என்று கூறியிருக்கிறான். அவள் பணத்திமிர் அடங்கவில்லை. பதிலுக்கு இவனை மிரட்டியிருக்கிறாள். மறுநாள் ஏதோ ஒரு பாத்ரூம் சுவரில் கிறுக்கிவிட்டு வந்துவிட்டான். அதில் இருந்து சில நாட்களில் அந்த நம்பர் டஸ் நாட் எக்சிஸ்ட். ராஜாராணி படம் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே போன் செய்தான் 'ஜெய் சரியான லூசுப்பய பாஸு, கஸ்டமர டீல் பண்ணத் தெரியல' என்றான். 'ஆனா எங்களையெல்லாம் பார்த்தா எல்லாவனுக்கும் நக்கலா இருக்கு இல்ல', அட்லீ மீது பெருங்கோவம் இருக்கிறது அவனுக்கு.  மொத்த அரங்கமும் ஜெய்யை கிண்டல் செய்து சிரிக்கும் போது தான் மட்டும் அழுது கொண்டிருந்ததாகக் கூறினான். அவ்வளவு எளிதில் யாராலும் உணர்ந்துவிட முடியாத வலி அது.

ஆண்டோ கூறாத கதைகளையா என்னிடம் வேறு யாரேனும் கூறிவிட முடியும். ஒவ்வொரு நாள் வேலை முடிந்து வந்ததும் விரக்கதியின் உச்சத்தில் இருப்பார். வீட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை அங்கே இங்கே என்று திரும்பிய இடத்தில் எல்லாம் பிரச்சனையில் இருந்தவருக்கு கிடைத்த வேலையிலும் பிரச்சனை. பேசும் எந்த ஒரு மனிதரும் நிதானத்தில் இருக்கவில்லை. நிதானம் என்பதை சரக்கடித்தவர்கள் என்ற தொணியில் கூறவில்லை. அடிக்காதவர்களையும் சேர்த்துதான். கோபம் கிண்டல் நக்கல் நையாண்டி எகத்தாளம் திமிர் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையையும் ஓரிரவிலும் ஒவ்வொரு இரவுகளிலும் அனுபவிப்பவர்கள். 

2007ம் வருடம் என்று நினைக்கிறன். ரிலையன்ஸ் கைபேசி பரவலாகிக் கொண்டிருந்த நேரம். என்.எஸ்.எஸ் முகாமில் இருந்தோம். அந்த நேரத்தில் ரிலையன்சில் மட்டும் ஒரு வசதி உண்டு, அது வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்தால் இலவசம். தினமும் நாட்டுநலப் பணிகளை முடித்துவிட்டு பத்து பேர் கொண்ட குழுவாக ஓரிடத்தில் கூடுவார்கள். ரிலையன்சில் கூடுதல் வசதி ஒன்றையும் செய்திருந்தார்கள். அது எத்தனை முறை போன் செய்தாலும் பெண்கள் தான் பேசுவார்கள். இது போதாதா இவர்களுக்கு. வட்டமாக அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பிளான் என்ன, இந்தப் பிளான் என்ன, ஏன் பாப்பான்கொளத்துல ஒழுங்கா சிக்னல் எடுக்க மாட்டேங்குது என்று வரிசையாக பேசுவார்கள். தினசரிப் பேசுவார்கள். ஆரண்ய காண்டத்தில் ஒரு வசனம் வரும் 'ஸ்பீக்கர் போன்ல போட்டு பேசுனா கிடைக்கிற கிக்கே தனி' அதைதான் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நேரம்! தினமும் ஒரே பிள்ளையே சிக்கியது. நான்காவது நாள் ஸ்பீக்கரில் அது அழும் குரல் கேட்டது. 

படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்களிடம் பேசும் போது மட்டுமே வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள் உண்மையான அக்கறையுடன் பேசுவார்கள். 'தலையில செங்கலு சொமந்து சம்பாதிச்ச காசு தம்பி மொத்தமா போயிட்டு', என் வீட்டுக்கராரு வந்த காச என்னடி பண்ணினன்னு போட்டு அடிப்பாரு தயவு செஞ்சு ஏத்தி விட்ருங்க தம்பி' என்று அழுத பெண்களை, பெரியவர்களைப் பற்றியெல்லாம் ஆண்டோ கதைகதையாகக் கூறியிருக்கிறார். 'இவுங்க ஒண்ணா அமுக்கு, இரண்ட அமுக்கு, *** அமுக்குன்னு போன் பன்னிருவாங்க பாவம் டா அவங்க, படிப்பறிவில்லாதவங்க. எதையாது அமுக்கிருவாங்க. தப்பு அவங்க மேல இருக்கது அவங்களுக்குப் புரியாது. அழுவாங்க, நாம எப்படி காச கொடுக்க முடியும்' என்பார். இருந்தாலும் சிலருக்கு இவரது சொந்த காசையே போட்டு ரீசார்ஜ் செய்து கொடுத்த சம்பங்களும் உண்டு.

ஒன்பது மணிநேரம் தொடர்ந்த வேலை. இடையில் அரை மணிநேரம் மட்டுமே இடைவேளை. டார்கெட் அச்சீவ் செய்ய பேசிக் கொண்டே இருக்க வேண்டும். காது எரிய வாய் வலிக்க பேசிக்கொண்டே இருக்க வேண்டும். 

இப்போது நீங்கள் ஒரு வாடிக்கையாள சேவை மைய அதிகாரியோடு பேசுகிறீர்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் சரிபார்க்க சில நிமிடங்கள் ஆகலாம், அந்த சில நிமிடங்களும் அவர்கள் வாய் சும்மா இருக்கக் கூடாது, 'உங்களுக்குத் தேவையான விசயங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று எதையாவது கூறி தான் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதை நிருபிக்க வேண்டும். யாரிடம்? தன்னைத் தொடர்ந்து கண்காணிக்கும் மென்பொருளிடம். ஆம் எல்லாவற்றிற்குமே மென்பொருள் தான். 

அவ்வபோது மேலதிகாரி இதனை ஆராய்ந்து கொண்டே இருப்பார். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசாமல் இருந்ததைக் கண்டுபிடித்தாலோ, வாடிக்கையாளரிடம் கொஞ்சம் நக்கலாக அல்லது அலுப்பை வெளிபடுத்தும்படி பேசினாலோ அவ்வளவு தான். மானம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அதிசியமான பொருளே தவிர அத்தியாவசியப் பொருள் அல்ல. வேண்டுமானால் இணையத்தில் தேடிப்பாருங்கள் இவர்களை கிண்டல் செய்து மகிழ்ந்தவர்கள் மகிழ்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியும். 

வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டால் முப்பது நொடியில் எடுக்க வேண்டும் என்பது விதி. நூறு அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நிமிடத்திற்கு இருநூறு அழைப்பு வரும். தொடர்ந்த மணியோசை கேட்டுக் கொண்டே இருக்கும். அழைக்கும் நமக்குப் பொறுமை இருக்காது. அது நமது கோவத்தை இன்னும் அதிகப்படுத்தும். பாவம் மரத்துப் போனவர்கள். நீங்கள் கூறுவதையும் மறந்து தான் ஆக வேண்டும்.  

ஆனால், ஏதோ வாடிக்கையாள சேவைமைய அதிகாரிகள் தங்களுக்கு அடிமைகள் என்ற நினைப்பிலேயே இங்கு பலரும் அவர்களைக் கையாளுகிறார்கள். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் இதயம் இருக்கிறது, மனது இருக்கிறது தன்மானம் இருக்கிறது கவலை இருக்கிறது எல்லாவற்றையும் தாண்டி அவர்களுகென்று ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். எத்தனையோ விதமான மனிதர்களைக் கையாண்டு கையாண்டு வாழ்வில் மனிதர்களுடன் பேசவே தயங்குகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அப்பாவோ அம்மாவோ அழைத்தால் 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று கேட்கும் பல இளைஞர்களின் மூளை வலு இழந்துவிட்டது.   


இருந்தும் ஏன் இப்படியொரு மோசமான வலையில் போய் விழுந்து தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். சென்னையில் இந்த வேலையாவது கிடைக்காதா என்று அலையும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர். பெருத்த போட்டிக்கு இடையில் கஷ்டப்பட்டுக் கிடைத்த வேலை. அப்படியெல்லாம் எளிதில் விட்டுவிட மாட்டார்கள். தயவுசெய்து எதையாவது ஏற்குமாறா பேசி தங்கள் வேலையை விட்டுவிட வைத்துவிடாதீர்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம்.    

ஒரு காலத்தில் நானும்கூட வாய் வலிக்க வலிக்கவெல்லாம் சண்டையிட்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு மோசமான செயல் அது என்று புரிகிறது. பரவாயில்லை அந்த கடந்த காலத்திற்குப் பிராயச்சித்தமாகவேனும்  இந்தக் கட்டுரை இருந்துவிட்டுப் போகட்டுமே. 

படங்கள் : நன்றி இணையம் 

33 comments:

 1. வாடிக்கையாளர்களாகிய நாம் நிறுவனத்திடம் நேரடியாகப் பேச முடிவதில்லை. பிரதிநிதிகளாகிய இவர்களிடம் தான் பேச முடியும். இருபது ரூபாய், முப்பது ரூபாய் என சில்லறை சில்லறையாகக் கொள்ளையடிக்கும் ஒரு சில தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் நம் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் பணத்தைத் திரும்பப் பெறவும் இவர்களிடம் சற்று கடிந்து பேசினால்தான் கிடைக்கிறது. ஒரு ஊழியர் ஒரு நிமிடம் பேசாமல் இருப்பதைக் கண்காணிக்கும் நிறுவனம் இவர்கள் என்னென்ன மாதிரியான வாடிக்கையாளரிடம் சிக்கி அவஸ்தைப்படுகிறார்கள் என்பதையும் கண்காணிக்கட்டுமே...

  ReplyDelete
  Replies
  1. ஸ். பை, தொலைபேசி கஸ்டமர் கேரில் ஒரு நாளைக்கு ஒருவருக்கே ஆவரேஜ்ஜாக இருபத்தி ஐந்திலிருந்து முப்பது கால் வரும். இதில் அத்தனை பேருடைய கால்களையும் மானிட்டர் செய்ய வேண்டுமானால் அதற்காகவே ஒரு ஆபிஸ் போட வேண்டும். ஒரு அதிகாரியால் அட்டென்ட் செய்ய முடியாத கால்கள் ( வாடிக்கையாளர் கோபமாக பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம்), அப்போது அது அவருடைய மேலதிகாரிக்கு அனுப்பப்படும்.

   Delete
  2. //ஒரு சில தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் நம் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் பணத்தைத் திரும்பப் பெறவும் இவர்களிடம் சற்று கடிந்து பேசினால்தான் கிடைக்கிறது.// இது நிதர்சனம் ஸ்பை. ஏற்றுகொள்ள வேண்டிய உண்மை, அவர்கள் மீது தவறு இருந்து நம் பணத்தை தர தயங்கினால் சண்டையிடுவதில் தவறு இல்லை என்று தான் கூறுவேன், நீங்கள் சண்டையிட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் பணத்தின் மதிப்பு அவர்களுக்கு தெரியும், நம்மில் ஒருவர் தான் அவர்கள்.

   இன்னொரு விஷயம், மேலிடம் அதாவது நிர்வாகம் பணத்தை அவ்வளவு எளிதில் செட்டில் செய்ய விடுவதில்லை. உங்களிடம் பேசிப் பார்க்கச் சொல்லி வாடிக்கையாளரின் நாடி பிடித்துப் பார்க்கக் கற்றுக்கொடுக்கும். இந்த இடத்தில் தான் நாம் பொறுமை இழப்பது... மேலை நாடுகள் போல் வாடிக்கையாளர் சேவை மைய நாடு இந்தியா கிடையாது என்பது மிகபெரிய பிரச்சனை. வாடிக்கையாளர் தெய்வம் என்பதெல்லாம் ஏட்டளவில் தான். நடைமுறையில் எங்குமே கிடையாது... வாங்கும் தண்ணீரில் இருந்து தங்கம் வரைக்கும் இதுதான் நிலைமை.

   வா.சே.மை அதிகாரிகள் தயங்குவதன் காரணம் ஒருவேளை தவறாக செட்டில் செய்துவிட்டால் அவர்கள் பாக்கெட்டில் நிர்வாகம் கை வைத்துவிடுமோ என்ற பயம்.

   நம் மீது தவறு இல்லாத போது சண்டை போட்டு பணத்தை வாங்குவதில் எவ்விவதத்திலும் தவறு இல்லை...

   Delete
 2. என் நண்பன் ஸ்டீவ் அடிக்கடி சொல்வான் "துரை..நாம பீ வாறிட்டிருக்கலாம். இப்படி இந்த வேலைக்கு வந்தது எப்படி விபத்தோ அதே மாதிரி தான் எல்லாமே". ஸ்டீவ் ஒரு மிகப் பெரிய கம்பெனியில் மிகப் பெரிய நிர்வாகி. வாரா வாரம் வேலை பற்றிய புலம்பல் தான். கூடவே பீ வாறமலிருக்கும் ஆறுதல்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்னவோ அந்தே ஸ்டீவே நீங்கள் தானோ என்று தோன்றுகிறது அப்பா சார் :-)

   Delete
 3. 'உங்கள் அழைப்பு ரெகார்ட் செய்யப் படுகிறது' என்று அவர்கள் சொல்வதை நம்பி, அப்படியாவது நம் குறைகள் அந்நிறுவனத்தை அடையாதா என்று பேசுகிறோம். முடிந்தவரை இவர்கள் கஷ்டத்தை உணர்ந்தே இருக்கிறோம். நல்ல பகிர்வு சீனு.

  ReplyDelete
  Replies
  1. சார், வாடிக்கையாளர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து இழந்தவர்.. அந்த கோபத்தில் தான் அவர் பேசுகிறார்.. அவருக்கு அப்படி பேச முழு உரிமையும் இருக்கிறது. கஸ்டமர் கேர் அதிகாரி அவர்களை "கஷ்டமாராக" பார்க்காமல் "கஸ்டமராக" பார்த்தல் வேண்டும்..!

   Delete
  2. எல்லா உரையாடல்களுமே ரெக்கார்ட் செய்யப் பட்டிருக்கும்.. டிரேயனிங் சமயத்தில் அவை புதிதாய் வருபவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும்..

   Delete
  3. ஓஹோ.... ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்!

   Delete
  4. ஸ்ரீராம் சார், கஸ்டமர் நாடிபிடித்துப் பார்ப்பதை ஒவ்வொரு நிறுவனமும் நாள் தவறாமல் செய்து கொண்டே இருக்கும். என்ன மாதிரியான பிரச்சனைகள் அதிகம் வருகிறது, ஏன் ஒரே போன்ற பிரச்சனைகள் வருகிறது என்பது போன்ற தரவுகளை அலசி ஆராய என்றே தனி குழுவெல்லாம் இருக்கும். அதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரின் கருத்தும் பிரச்சனையும் நிர்வாகத்தை நிச்சயம் சென்றடையும். பிரச்சனை என்னவென்றால் புகார் அளிப்பவர்கள் இந்தியர்கள் தானே என்ற நிர்வாகத்தின் எதேச்சதிகார மனநிலை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் வாடிக்கையாளரும், வா.சே.மை அதிகாரிகளும்...

   Delete
 4. 'ஆனா எங்களையெல்லாம் பார்த்தா எல்லாவனுக்கும் நக்கலா இருக்கு இல்ல', ///இதுதான் உண்மை நிலை. வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதோ, வீட்டு விசேஷங்களில் இருக்கும் போதோ வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து கால் வந்தால் பொறுமையாகப் பேசாமல் எரிந்து விழுவார்கள். தங்களுக்கு ஏதேனும் செயல் நடக்கவில்லை என்றாலும் பேசத் துவங்குகையிலேயே அனல் பேச்சுதான். அங்கும் மனிதர்களே என்பதை உணர்தல் மிக அவசியம். இரவுப் பணியின் கஷ்டம் பிறர் உணர்வதும் கஷ்டமே.

  ReplyDelete
  Replies
  1. //அங்கும் மனிதர்களே என்பதை உணர்தல் மிக அவசியம். // இதைத்தான் இதை மட்டும் தான் நான் கூற எத்தனித்தேன் வாத்தியார் :-)

   Delete
 5. மற்றவர்களின் கஷ்டத்தையும் உணர்வோம்

  ReplyDelete
  Replies
  1. அதுதான் இன்றைய தேவைகளில் ஒன்றும்

   Delete
 6. சீனு, உங்கள் நண்பரின் வேதனைகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு சின்ன விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன்.. ஒரு கவர்மன்ட் அலுவலக கிளார்க் ஆக பணிபுரியும் ஒருவர், பெரும்பாலும் தவறுகள் செய்யாத ஊழியர் அவர்.. அவரை அவருடைய மேலதிகாரி எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பார். நேரம் தவறாமல் பணிக்கு வரும் ஆசிரியரை கண்டிக்கும் தலைமையாசிரியர், ஐ.டி கம்பெனியில் எட்ட முடியாத இலக்கை இரண்டு நாட்களுக்குள் முடிக்கவில்லையென கழுவி ஊற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர்.. இப்படி எல்லா பணிகளிலும் நல்லா வேலை செய்தாலும் வசவு வாங்க வேண்டிய கட்டாயம் இந்தியாவில் உள்ளது..

  கஸ்டமர் கேர் எக்ஸிக்யுட்டிவ் ஆக வேலை செய்த அனுபவம் எனக்கும் உண்டு..! உங்கள் நண்பரின் தவறு வாடிக்கையாளர்கள் அவரை திட்டுவதாக எண்ணியது.. அவர்களின் கோபம் அந்த கம்பெனியின் மேல் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தால் இவ்வளவு பெர்சனலாக ( ஜெய் படத்தை பார்த்து அழுவது) எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். தவிர அவரே சொந்தப் பணத்தில் கம்ப்ளைன்ட் செய்தவர்களுக்கு ரீசார்ஜ் செய்ததாக சொன்னீர்கள். அது போன்ற செயல் ரொம்ப தவறு. கஸ்டமர் கேர் பணியின் முதல் பாடமே "எம்பதி" (Empathy) இருக்கலாம். "சிம்பதி" (Sympathy) கூடாது என்பது தான். டிரெயினிங் சமயத்தில் அரைகுறையாய் கற்றுவிட்டு வேலை பார்க்கும் போது அழுது கொண்டிருந்த ஆட்களை தேற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.


  கஸ்டமர் கேர் என்பது ஒரு வேலை அல்ல.. அது ஒரு 'கலை'. துன்பப்படும் மனிதரை சாந்தப் படுத்துவது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்றிருப்பவர்கள் தேர்ந்தெடுக்க உகந்த பணி அல்ல அது. நீங்க இந்த விஷயத்தை சீரியஸாக முடித்ததால் தான் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்க வேண்டி வந்தது. அநேகமாக நேரம் அனுமதித்தால் என் அனுபவப் பதிவும் வரும்..!

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் ஆனந்த்... நானும் தெளிவு பெற்றேன்.

   Delete
  2. ஆவி பாஸ் விரிவான உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறுவது அத்தனையும் ஏற்றுகொள்ளக் கூடிய ஏற்றுகொள்ளவேண்டிய விசயங்களே. இருந்தாலும் நீங்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விளக்கத்திற்கும் ஒரு சிறிய மறுமொழி கீழே :-)

   Delete
 7. மெய் வருத்தம் பாரார்.. கண் துஞ்சார்.

  கருமமே கண்ணாயினார்.  இருப்பினும், இந்த கால் சேவை மையத்தார்,

  இருக்கும் இடத்திலேயே தாம் இருப்பார், உலகில்  இருப்போரை எல்லாம் கதி கலங்க வைப்பார்.

  இல்லாத ஐயத்திற்கேல்லாம் பதில் சொல்வார்.

  கேட்ட கேள்வியை விடுத்து,

  கேளாத யாவற்றையும் பற்றி

  கண்டதை எல்லாம் சொல்வார். இருந்தாலும்,  பாவம். இவர்கள்.  பாலம் இவர்கள்.  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கேட்காத கேள்விகெல்லாம் பதில் சொல்வார் - அவர்கள் விதியே நம் விதியே என்று நொந்து கொள்ள வேண்டியது தான்..

   Delete
 8. படிப்பறிவில்லாத கிராமத்து மனிதர்களிடம் பேசும் போது மட்டுமே வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள் உண்மையான அக்கறையுடன் பேசுவார்கள்.//

  ஆச்சர்யம் தான..!

  ReplyDelete
 9. இங்கே கவர்மென்ட் கிளார்க் மற்றும் ஐடி ஊழியரின் மேலதிகாரி பற்றி கூறியுள்ளீர்கள். நான் வா.சே.மை அதிகாரிக்கு இருக்கும் சவால்களைப் பற்றியும் அவை என்ன மாதிரியான சவால்கள் என்பது பற்றியும் மட்டுமே பதிவு செய்ய விரும்பியுள்ளேன். எல்லா வேலைகளிலும் சவால்கள் இருக்கின்றன. அப்படியென்றால் நீங்கள் ஏன் ஒரு மருத்துவரையும் காவலரையும் ராணுவ வீரனையும் விட்டுவிடீர்கள் அவர்களுக்கு இல்லாத சவாலா இவர்களுக்கு. பதிவின் நோக்கம் வா.சே.மை அதிகாரிகள் பற்றியது மட்டுமே அதனால் ஒப்பீடு வேண்டாம். அதிலும் கவர்மென்ட் கிளார்க் ஹிஹிஹி போங்க பாஸ் அதுவெல்லாம் ஒரு சவாலா, அதன் பெயர் காழ்ப்புணர்ச்சி, அது இல்லாத துறையைக் காண்பியுங்கள்... முகம் தெரியாத ஒரு ஊழியரின் மீது முகம் தெரியாத ஒரு நபர் தொடுக்கும் வன்முறை காழ்ப்புணர்ச்சியை வெறும் சாவால் இல்லை மிகப்பெரிய சவால் (இங்கே வன்முறை எனக் குறிப்பிடுவது - சும்மா அவனுக்கு டைம் பாஸ் ஆக கஸ்டமர் கேர கூப்ட்டு ஓரண்ட இழுப்பது - ஆதாரம் இணையத்தில் பல ரெக்கார்டிங், நண்பர்களின் புலம்பல்).

  //அவர்களின் கோபம் அந்த கம்பெனியின் மேல் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தால் இவ்வளவு பெர்சனலாக ( ஜெய் படத்தை பார்த்து அழுவது) எடுத்துக் கொண்டிருக்க மாட்டார். // இது முதல் பால பாடம், அனைத்து வா.சே.மை அதிகாரிக்கும் கற்றுக் கொடுப்பதே, ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் என்று ஈகோ இருக்கிறது, ஈகோ லெவல் இருக்கிறது. வலிக்காத மாதிரியே நடிப்பது தான் வேலை என்றாலும் மனிதன் என்பவன் இயந்திரம் ஆகிவிடவே முடியாது. அவனது ஆழ்மனதை பாதிக்கும் விஷயங்கள் பல தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அப்படியெல்லாம் பாதிக்கக் கூடாது அது வேலை, என்றெல்லாம் கூறினால் எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும், நீங்கள் ஒரு விஷயத்தை டீல் செய்யும் முறை எனக்கு தெரியும் அதனால் தைரியமாய் சொல்வேன் எல்லோராலும் ஆவியைப் போல் இருக்க முடியாது. அது உங்களுக்குக் கிடைத்த வரம் அல்லது பக்குவம். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. அவரவர்க்கென்று ஒரு சுயம் இருக்கிறது, அது மட்டுப்படும் வேளையில் தன் மீதும் தான் சார்ந்த உள்வட்ட நபர்கள் மீதும் கோபம் வருகிறது. இது அவர்களை பெரிதளவில் பாதிக்கிறது. அதாவது மனவுளைச்சல் சார்ந்த மனவியல் சார்ந்த பாதிப்பு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அத்தனை எளிதில் தாங்க முடியாத சவால். வா.சே.மை அதிகரிகளைப் பொறுத்தளவில் தவிர்க்க முடியாத சவால்.

  //அது போன்ற செயல் ரொம்ப தவறு. கஸ்டமர் கேர் பணியின் முதல் பாடமே "எம்பதி" (Empathy) இருக்கலாம். "சிம்பதி" (Sympathy) கூடாது என்பது தான். டிரெயினிங் சமயத்தில் அரைகுறையாய் கற்றுவிட்டு வேலை பார்க்கும் போது அழுது கொண்டிருந்த ஆட்களை தேற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.// யாருக்குமே தன் காசை, அதிலும் இவ்ளோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசை இழக்க மனமிருக்காது. ஒருவேளை முகம் தெரியா அந்த கிராமத்தானுக்கு ஒரு வா.சே.மை அதிகாரி உதவ நினைக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய உரையாடலை எதிர்கொண்டிருப்பான், அதன் தாக்கம் அவனை எவ்வளவு பாதித்திருக்கும். அது தவறு தான் என்றாலும், கூடாது என்றாலும் உள்ளுக்குள் இருக்கும் அவன் சுயம் அவனை செய்யத் தூண்டுகிறது. இது சரியா தவறா என்றால் ஒரு வா.சே.மை அதிகாரிக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மனநிம்மதி என்று எடுத்துக் கொள்வோமே. யாருக்கோ செய்யும் உதவி என்றளவில்.

  ReplyDelete
 10. //கஸ்டமர் கேர் என்பது ஒரு வேலை அல்ல.. அது ஒரு 'கலை'. துன்பப்படும் மனிதரை சாந்தப் படுத்துவது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்றிருப்பவர்கள் தேர்ந்தெடுக்க உகந்த பணி அல்ல அது.// வெல். அது ஒரு கலையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அந்த கலையை யார் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்தக் கலையை கற்றவர்களை மட்டுமே வைத்துதான் நிர்வாகம் தன் சக்கரத்தை சுழல வைக்கிறதா? இங்கே நான் பதிவு செய்யாத இன்னொரு விஷயம் இந்த சவாலை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி. காரணம் அது எப்படி என்று கூற முடியாத அளவில் சிக்கிக் கிடக்கும் இடியாப்பச் சிக்கல்.

  இங்கே யார் வேண்டும்னாலும் வா.சே.மை அதிகாரியாகி விட முடியும். அப்படித்தான் அந்த வேலையும் இருக்கிறது. தன் தகுதிக்கு திறமைக்கு வேலை கிடைக்காதவர்கள் எல்லாம் அது கிடைக்கும் வரை, கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடைசியாக தேர்ந்தெடுப்பது தான் வா.சே.மை என்ற பணி. (இடையில் ஏற்படுத்திய ஒரு மாயையும் ஒரு காரணி). அதனால் சேவை செய்யத்தான், விரும்பித்தான் வருகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணம் சம்பாதிக்க மட்டுமே, வெயிட் வெயிட் அப்படியென்றால் இந்த சவால்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறுகிறீர்களா, அதைப்பற்றி மட்டும் தான் இந்தப் பதிவில் பேசியுள்ளேன். காரணம்

  இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட பல் சக்கரங்கள் மூலம் சுழலுகிறது, அதில் எத்தனையோ பல் சக்கரங்கள் உடைந்து போய் பல நாட்கள் ஆகிவிட்டன. அதனால் சில இடங்கள் தாறுமாறாக சுழலுகிறது, சில இடங்களில் தன் சுழற்சியை நிறுத்தியே வெகு நாளாகிவிட்டது. இதனை பயன்படுத்திகொள்ளும் தனியார் நிர்வாகங்கள் அவற்றை தங்களுக்குச் சாதகமாக சுழல வைக்கின்றன. அதன் மூலம் வாடிக்கையாளர் மனதும் நோகக்கூடாது தானும் நோகக்கூடாது என்றளவில் வா.சே.மையங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பது இந்தியர்களாகிய நாமும் இந்தியர்களுக்காக வேலை பார்க்கும் நமது இந்தியர்களும். அதாகப்பட்ட சிக்கலில் சிக்கிய நமது சகோதரர்களுக்கு நம்மால் ஆன சிறு உதவி, தேவையில்லாமல் அவர்கள் மீது எரிந்து விழவேண்டாம் என்பது தான்.

  - இங்கே நான் பேசியது உள்நாட்டு சேவை மைய அதிகாரிகள் பற்றி மட்டுமே, அயல்நாட்டு சேவை இன்னும் மோசமாக இருக்கும். அவர்கள் வாயைத் தொறந்தாலே F**k, Shit bloody indian தான். முழு போதையில் நம்மைத் திட்ட வேண்டும் என்றே தொந்தரவு செய்யும் புண்ணியவான்கள். சகித்துக் கொண்டு வேலை செய்யும் பலரின் நிலை சர்வைவல் ஆப் தி பிட்டஸ்டே தவிர சர்வீஸ் கிடையாது.

  (ப்பா இதுவே ஒரு தனி பதிவு ஆயிருச்சு)

  ReplyDelete
  Replies
  1. நேரில் சந்திக்கும் போது நிச்சயம் இதுபற்றி பேசுவோம்.. இதற்கு இங்கே பதிலளித்தால் இந்தப் பதிவை படிப்பவர்கள் நம் மேல் காண்டாகி எரிந்து விழ ஆரம்பித்து விடுவார்கள்..! ;) :)

   Delete
 11. ஏன் பாப்பான்கொளத்துல ஒழுங்கா சிக்னல் எடுக்க மாட்டேங்குது?

  சீனு எங்க ஊர பத்தி தப்பா பேசி இருகிங்க!!! இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்!

  ReplyDelete
 12. //// ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அப்பாவோ அம்மாவோ அழைத்தால் 'வணக்கம் சார் தங்களுக்கு எவ்வாறு உதவலாம்' என்று கேட்கும் பல இளைஞர்களின் மூளை வலு இழந்துவிட்டது ///

  வேதனையின் உச்சம் இந்த வரிகள். அது இருக்கட்டும் வாடிக்கையாளர்கள் செய்யும் இந்த மாதிரியான தவறுகளை தண்டிக்க ஏதும் சட்டங்கள் இல்லையா......?

  ReplyDelete
 13. சபாஷ் சீனு ...! கஸ்டமர் கேர் அதிகாரிகளின் என்னத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள்... நானும் கஸ்டமர் கேர் அதிகாரியாக 2 ஆண்டுகள் இருந்தவன் தான்.. எனக்கும் இந்த வலியின் வேதனை புரியும்...

  மீண்டும் நன்றிகள் !!!

  சில நாட்களுக்கு முன், என் வலைப்பதிவில் இதை பற்றி நான் பகிர்ந்துள்ளேன்..

  http://pazhaiyapaper.blogspot.in/2013/10/blog-post_13.html

  ReplyDelete
 14. அனைத்து துறையிலும் - முக்கியமாக Public Dealing உள்ள அனைத்து இடங்களுமே மிகவும் பிரச்சனையான இடங்கள் தான் சீனு.

  வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் வேலை செய்யும் சில நண்பர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் கேட்கும்போதே கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் இரவு நேரத்தில் தனியாக வீடு வரும் பெண்கள் படும் துயரங்கள் சொல்ல முடியாதவை......

  நல்ல கட்டுரை சீனு. பாராட்டுகள்.

  ReplyDelete
 15. சூப்பர் பதிவு சீனு!

  மனிதர்களின் அறச்சீற்றமானது எப்போதுமே தன்னை விட பலகீனமானவனின் மீதோ அல்லது எவனை அடித்தால் திருப்பி அடிக்கமாட்டானோ 'அவன்' மீதும் மட்டுமே எளிதில் பாயும். இங்கே இந்த 'அவன்' வாடிக்கையாள சேவை மைய அதிகாரிகள். உயிர் வாழ்தலுக்காக வேறுவழி தெரியாமல் சிக்கிக்கொண்ட ஆடுகள்.// இந்த வரிகள் உண்மையே!

  அதே சமயம் பல பின்னூட்டங்களும் யோசிக்க வைக்கின்றன! ஆவியின் பின்னூட்டம், தங்களின் பதில்கள் எல்லாமே!

  பார்க்கப்போனால், கஸ்டமர் கேர் பணி செய்வோர் அவர்கள் மேலதிகாரிகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். ஆனால் நாம் கஸ்டமர்கள் சில சமயம் அவர்கள்தான் அந்த நிறுவனத்தையே கட்டி ஆள்கின்றார்கள் என்றும், அவர்கள்தான் அந்த நிறுவனதின் சொந்தக்காரர் என்றும் கன்னா பின்னாவென்று கத்தி, வார்த்தைகள் உபயோகித்து அவர்களை உண்டு இல்லை என்றும் ஆக்கி விடுகின்றோம். நாம் அந்த சீட்டில் இருந்து பார்த்தால்தான் தெரியும் அந்தக் கஷ்டம். இதில் வின் வின் சிச்சுவேஷன் நன்றாக வொர்கவுட் ஆகும் என்பதுதான் அனுபவம்.

  ReplyDelete
 16. நல்ல பதிவு , சகலரும் சாதரணமாக கடந்து. போகும் விசயத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் தகவல்களை,உணர்வுகளை ,உண்மைகளை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள் அண்ணா

  ReplyDelete
 17. உண்மையான நேர்மையான அலசல்.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete