25 Mar 2014

பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்டு


கோவை ஆவி - பயணம் 

பதிவுலகம் எத்தனையோ விசித்திரமான பதிவர்களை சந்தித்துள்ளது. சீரியஸாக கதை சொல்லும் இலக்கியவாதிகள் ஒரு பக்கம், தற்கால நிகழ்வுகளை எழுத்துகளில் வடிக்கும் கவிஞர்கள் ஒரு பக்கம். பெண்கள் முன்னேற்றம், பெண் அநீதி என காற்றில் கட்டப்பட்ட அடிமை சங்கலியை அவிழ்க்கப் போராடும் பெண்ணியவாதிகள் ஒருபுறம். உண்ணும் உணவு, செல்லும் இடங்கள் ஆகியவற்றை பதிவேற்றி மக்கள் தொண்டு ஆற்றுபவர்கள் சிலர்.. திரைப்படங்களை தரையில் இட்ட அப்பளங்களாய் நொறுக்கி கலைச் சேவை புரிபவர்கள் என சிலர். இப்படி தமிழை வாழ வைக்க, தமிழ்ப் பதிவுலகத்தை தழைத்தோங்கச் செய்ய பலர் இருக்கையிலே பதிவுலகைப் பற்றி நான் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறேன்...


             ஜாலியாக கமென்ட் போட்டேன், கலாய்த்தேன் என்கிறார்கள்.. இரண்டு வரிகளில் இலக்கியம் சொன்னேன், மொக்கை என்கிறார்கள். கண்விழித்து கதை எழுதி கடை விரித்தேன், டுபாக்கூர் என்றார்கள்.. திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றேன் – ஒரு “தல”பட்சம் என்றார்கள், திரைப்படம் சுமார் என்றேன் – சினிமா மொழி தெரியாதவன் என்றார்கள், மோசம் என்றதற்கு நீ கொடுத்த நூற்றியிருபதுக்கு சுறாவா கிடைக்கும், எறாதான் கிடைக்கும் என்றனர். சுறாவா என்று பயந்தபடி மேலும் எழுதினேன். தொடர்கதை என்ற பெயரில் வாழ்வின் சோகங்களை எழுதினேன்.. சிறுகதை என்ற பெயரில் சின்னதாய் ஒரு ட்விஸ்டு வைத்து எழுதினேன்.. கவிதை என்ற பெயரில் கல்லை கொண்டு அடிக்குமளவிற்கு எழுதினேன்.. எழுதினேன் எழுதினேன், கீபோர்ட் உடையும் வரை எழுதினேன்.. சிஸ்டம் ஹேங் ஆனதால் நிறுத்திவிட்டேன்.

              உனக்கேன் இவ்வளவு அக்கறை.. நான் கேட்டதென்ன நீ சொல்வதென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எழுத்து என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் கிறுக்கும் ஒரு கூட்டமும், மகுடத்தின் பின்னால் ஓடும் ஒரு கூட்டமும், இருக்கும் வரை தமிழோ தமிழ் பதிவுலகமோ யாதொரு நன்மையையும் அடையப் போவதில்லை. “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற வாக்கினை தவறாக புரிந்து கொண்ட ஒரு சமூகம் டாஸ்மாக்கிலும், “நூலைப் படி, நல்ல நூலைப் படி” என்ற பாரதிதாசனின் வாக்கை வாசிக்க கூட நேரமின்றி  பீச்சிலும், தியேட்டரிலும் நேரம் செலவழிக்கும் இளங்காளைகளும், பூஞ்சோலைகளும் பதிவெழுத மட்டுமல்ல, படிக்கக் கூட நேரமின்றி சுற்றுகின்றன. இவர்கள் ஏட்டுச் சுரக்காய் மட்டும் கறிக்கு சுவை சேர்க்காது என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இது மாற வேண்டும்.. நான்கைந்து வருடங்களுக்கு முன்பிருந்த பதிவர்கள் இன்று ஓய்ந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை சரியாக உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் முகநூலின் ஆதிக்கமும், கவர்ச்சியும் பதிவுலகத்தின் பால் ஒரு அயர்ச்சியை உண்டு பண்ணிவிட்டதென்றே கூற வேண்டும். அறிவியல் வியாபித்திருக்கும் அமெரிக்காவில் கூட சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்குவதை கண்டு வியந்திருக்கிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் சோட்டா பீமும், போகோ வும் பார்த்து மட்டுமே வளர்கின்றன. அதைவிட கொடுமை தமிழை படிக்கவே தடுமாறுகின்றன.. இந்த அடித்தளமே வீக்காக இருக்கும் போது பதிவுலகம் எனும் கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்.

                   குழந்தைகளுக்கு முதலில் வாசிப்பனுபவத்தை உணர்த்துதல் அவசியம். முன்பெல்லாம் தாத்தா பாட்டி சொன்ன காக்கா கதையோ, தாலாட்டுப் பாடலோ கேட்டு வளர்ந்ததைப் போலவே கதைகள், கவிதைகள், இலக்கியம் என அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் போது நிச்சயம் அடுத்த கட்டமாக எழுத முன்வருவார்கள். பதிவுலகம் மரிக்காம்லிருக்க இது ஒன்றே வழி..!

கே.ஜி.கௌதமன் - எங்கள் பிளாக்    

இன்றையத் தமிழ்ப் பதிவுலகம் பல தீவுகள் கொண்டதாய் விளங்குகிறது. ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு ரசனைக்குத் தீனி. சில தீவு அரசர்கள் மேடைப் பேச்சாளர்கள். தாம் சொல்ல வந்ததை உரத்துக் கூறி, கேட்கின்ற மக்கள் மறுமொழி கூறாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள். 

சிலர் தீவுகளைக் கண்டுபிடித்துவிட்டு, கொஞ்ச காலம் அரசாட்சி செய்து பிறகு நீண்டு படுத்து நித்திரை செய்துவிடுகிறார்கள். அரசியல் எழுதும் தளங்கள் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்வதில்லை. பதிவுகள் படித்துத் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டவர்களும் கிடையாது. இன்னும் சில பதிவுலக பெயிண்டர்கள் உண்டு. கையில் ஒரு பக்கெட் வர்ணக் கலவை, ஒரு பிரஷ். நம் தளத்தில் சிலப் பதிவுகளைப் படித்துவிட்டு உடனே இவர்கள் இதுதான் என்று ஒரு வர்ணம் அடித்துவிட்டு, அடுத்த பதிவைத் தேடிப் போய்விடுவார்கள். 

பதிவுலகம் எப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

சொல்வது யார் என்று பார்க்காமல், சொல்லப்படுவது என்ன என்பதை மட்டும் விவாதம் செய்யவேண்டும். பதிவுகள் இடுபவர்கள் எல்லோருமே படித்தவர்கள். படித்தவர்களுக்கு உரிய பண்புடன், இனிமையான இதமான வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், மறுக்கலாம் - ஆனால், பண்பான வார்த்தைகள் பயன் படுத்தி!

விஜயன் துரைராஜ் - கடற்கரை 

இன்றைய தமிழ் பதிவுலகம்

தமிழ் பதிவுலகை சார்ந்த பதிவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1.பிரபல பதிவர்கள்
2.ப்ராப்ல பதிவர்கள்
3பிற பல பதிவர்கள்

இந்த மூன்றுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன்.

நம் பதிவுலகில் சிறந்த எழுத்துவளம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள், சில
பேர் எதையாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில பேர் சில சமயம் சில நல்ல விசயங்களையும்,பயனுள்ள விசயங்களையும் எழுதுகிறார்கள்., இன்னும் சில பேர் தங்கள் வட்டங்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அரட்டைத்தனமான பதிவுகள் எழுதுகிறார்கள்.

நகைச்சுவை பதிவுகள்,பல்சுவை பதிவுகள்,அனுபவ பதிவுகள் இது பற்றி எல்லாம் No comments … I like them :)

சரி!

சில நேரங்களில் சிலபேர் எழுதிவைத்திருக்கும் சிறந்த,பயனுள்ள பதிவுகளின்
கீழ் கமென்ட் பெட்டி சீண்டுவார் இன்றி காலியாக கிடக்கும், மொக்கை கவிதை
(கவிதை என்கிற பதத்தையே கேவலப்படுத்தும் வகையில் இருக்கும்...) ஒன்றின் கீழ் ஆகோ ஓகோ என புகழாரம் மின்னிக்கொண்டிருக்கும்.அத்தகைய கமென்ட்களை பார்க்கும் போது அவர்களை பொடனியிலேயே அடிக்க வேண்டும் போல தோன்றும் :) , சில நல்லவய்ங்க செம மேட்டர எழுதி வச்சுருப்பாய்ங்க கீழ பார்த்த ஒன்றிரண்டு கமென்ட் இருக்கும் ,இல்லை ஒரு கமென்டும் இருக்காது !

பதிவுலகில் பதிவை முழுமையாக படித்து விட்டு கமென்ட் இடுபவர்கள் குறைவென்றே நம்புகிறேன் . இவர்கள் Skimming, Scanning, Skipping என்று பதிவை பர பர வென பயணிப்பார்கள் ... அதேமாதிரி நீ எனக்கு கமென்ட் இட்டால் நான் உனக்கு இடுவேன் என்ற சம்பிரதாய கோமாளித்தனம் கொண்ட நபர்கள் அதிகம் உலவுகிறார்கள். நாம் அவர்களை புகழ்ந்தால் பதிலுக்கு நம்மை புகழ்வார்கள்... (சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன :) 

என்ன மாற்றம் வேண்டும் ???

(என் கருத்து:)

எழுதுகோல் தெய்வம்... இந்த எழுத்தும் தெய்வம் என்று பாரதி சொல்லி இருக்கிறான் !! எழுதுகிற ஒவ்வொருவனும் எழுத்தை தெய்வெமன மதித்தால்
எழுத்து தெய்வம் தன் ஆசியை கொடுக்கும். தெளிவு மதியோடு தெள்ளத்தெளிவான நடையில் எழுத்து எழுதுகிறவனிடமிருந்து ஜனித்துதிக்கும் !

சில சமூகம் சார்ந்த விசயங்களை பலர் முன்னிலையில் தன் கருத்தாக வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்வு,ஆராய்ச்சி இதெல்லாம் அவசியம் என நம்புகிறேன்.

(கமென்ட்கள் பற்றி...)

டெம்ப்ளேட் கமென்ட் கலாச்சாரம் மீது எனக்கு அளவு கடந்த ஆதங்கம் உண்டு !!

பதிவை முழுசாக வாசிக்காமல் கமென்ட் இடுதல் தவறு

மொக்கைத்தனமான எழுத்துக்களையெல்லாம் புகழ்ந்து கொட்டி அந்த மொக்கை மனிதர்களை அதிகம் எழுத வைக்கும் செயல் ஆச்சர்யமாக உள்ளது...

சுபத்ரா - சுபத்ரா பேசுறேன் 

வலைப்பதிவுகள் டையரிக்குறிப்புகள் போலத்தான். என்ன, டைரியில் எழுதினால் பெர்சனலாக வைத்துக்கொள்ளலாம். இல்லை, நமக்கு வேண்டியவருக்கு மட்டும் படிக்கக் கொடுக்கலாம். வலைப்பதிவுகள் மற்றவர்கள் படிப்பதற்காகவே எழுதப்படுபவை. கூகிள் ஏற்படுத்தித் தந்திருக்கும் இந்தக் கட்டற்ற இலவசச் சேவையை யார் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் எழுத வேண்டும் என்னும் தீராத ஆசையுள்ளவர்கள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை வலைப்பூக்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். 

அவ்வப்போது போட்டிகளை நடத்தி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர். சிலர் தீவிர சமூக நலப் பிரச்சனைகளை ஆராய்ந்து பின்னூட்டங்களின் மூலம் விவாதம் செய்கின்றனர். இது போக சமையல், அழகு, மருத்துவக் குறிப்புகள், புத்தக, சினிமா விமர்சனங்கள் எனத் தமக்கு ஆர்வம் உள்ள விஷயங்களைப் பதிவேற்றுகின்றனர். சிலர் கன்னாபின்னா என்று சண்டையும் போட்டுக்கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை ஜாலியாக மனதிற்குப் பிடித்தவற்றை எழுதிவைப்பதும் பிறர் அவற்றைப் படித்துப் பின்னூட்டமிடுவதும் வலைப்பூக்கள் நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய stress releasing factor.

நாளைய பதிவில் 

கே.ஆர்.பி.செந்தில்
ஹாரிபாட்டர் 
சசிகலா 
ராம்குமார் 

இன்றைய வலைசரத்தில் 

43 comments:

 1. பதிவுகள் இடுபவர்கள் எல்லோருமே படித்தவர்கள். படித்தவர்களுக்கு உரிய பண்புடன், இனிமையான இதமான வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், மறுக்கலாம் - ஆனால், பண்பான வார்த்தைகள் பயன் படுத்தி!//காத்திரமான வார்த்தைகள்.

  ReplyDelete
 2. ஆவி : நச்...

  எங்கள் பிளாக் : பண்பான வார்த்தைகள் வரவில்லை என்றால், கருத்து தவிர்ப்பது சிறந்தது...

  கடற்கரை & சுபத்ரா பேசுறேன் : ஜாலி

  ReplyDelete
 3. கோவை ஆவி ... நல்லாச் சொன்னீங்க.

  'எங்கள்' கேஜிஜியின் கருத்தை வழி மொழிகிறேன்!

  பொதுவாக எல்லாக் கருத்துமே சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம் ஸார்..

   Delete
 4. கௌதமன் ஸார்- விவாதங்கள் என்று நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது.. எழுதிய சப்ஜெக்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் போகும் விவாதங்கள் தான் அதிகம் நடக்கின்றன..

  //டெம்ப்ளேட் கமென்ட் கலாச்சாரம் மீது எனக்கு அளவு கடந்த ஆதங்கம் உண்டு !!//

  விஜயன், நான் இதை (டெம்ப்ளேட் கமென்ட் இடுபவர்களை) ஒருவகையில் ஆதரிக்கிறேன்.. யாருமே வராத தீவுக்கு ஒருத்தன் சும்மா போட்டோ மட்டும் எடுத்துப் போக, தன் கால் அங்கே பதிந்தது என்று காட்டிக் கொல்வதற்காகவாவது வந்து போனால் காலப் போக்கில் அந்த இடம் உண்மையிலேயே எழிலுடையதாயிருந்தால் நிச்சயம் ஒரு நாள் முழுவதும் படிப்பான்.. :) :)

  சுபத்ரா அவர்களிடமிருந்து இன்னும் விரிவான ஒரு பார்வையை எதிர்பார்த்தேன்..

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மட்டும் word limit கொடுத்து எழுத சொல்லிய சீனுவுக்கு என் கண்டனங்கள் :-) (இதுவே போதும்னு நினைச்சிருப்பார் போல)

   எதுக்குனே தெரியாம கேட்டவுடனே சும்மா எழுதிக் கொடுத்தேன்.

   Delete
 5. அனைவரின் பார்வையும் மிக நன்றாக இருக்கிறது.

  கோவை ஆவி.... ஒரு சோடா கொடுங்கப்பா இவருக்கு! இத்தனை நீண்ட வசனம் பேசியதில் உங்களுக்கு தாகம் எடுத்திருக்கும். :)))) சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை.

  கே.ஜி.ஜி: “எந்த கருத்தையும் மறுக்கலாம்.... பண்பான வார்த்தைகள் பயன்படுத்தி” அதே.... அதே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் ஸார்!!

   Delete
 6. என்ன இருந்தாலும் அனுபவத்தின் மதிப்பே தனிதான். என்னாமா சொல்லிக்கினாரு கே,ஜி.ஜி. ஸார்... சாட்சிக் கூண்டில் நிற்காமலேயே வாதிட்ட கோவை ஆவியின் கருத்தையும் மிக ரசித்தேன். என்ளைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு படைப்பையும் முழுமையாகப் படிக்காமல் டெம்ப்ளேட் கமெண்ட்டை வீசிவிட்டு ரயிலைப் பிடிக்க ஓடுகிறவர்கள் போல அடுத்த பதிவைத் தேடி ஓடுபவர்கள் எரிச்சலைத்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஒருக்காலும் நான் அதுபோல் செய்வதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாத்தியாரே..

   Delete
 7. கோவை ஆவி சொல்லும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையே, ஆனால் அவர் சொல்வது போல் குழந்தைப் பருவத்திலேயே வாசிப்பானுபவத்தை நாம் விதைத்து விடலாம். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பதிவர்கள் ஆவார்கள் என்பது சந்தேகமே. மேலும் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் எந்த ஊடகத்தின் வாயிலாக பயணிக்கும் என்பதும் கேள்விக்குறியே.

  பின்னூட்டங்களைப் பொறுத்தவரை ஒரு சிலர் தவிர நாகரீகமாக நல்ல வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் மொக்கைப் பதிவுகளுக்கு ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் நல்ல பயனுள்ள பதிவுகளை யாரும் ஆதரிக்காமல் இருப்பதும் வேதனையே. என்னைக் கேட்டால் நட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஒத்த கருத்துக்கு நன்றி ஸ்பை..

   Delete
  2. ஸ்கூல் பையன் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.

   Delete
  3. ஸ்கூல் பையன் சொல்வது சரியே!

   Delete
  4. நட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது. இதையே நானும் சொல்ல நினைக்கிறேன்.

   Delete
  5. உண்மைதான் அக்கா...

   நட்பின் அடிப்படையில் இல்லாமல் பதிவின் அடிப்படையில் தான் கருத்திடல் வேண்டும்.

   Delete
 8. தம்பி எல்லோரும் நினைப்பதை நினைத்தபடி எழுதியிருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் 50 வார்த்தைக்கு மிகாமல் எழுதச்சொன்னீங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆகா..! உங்களுக்குமா :-) எதுக்கு இந்த ஓர வஞ்சனை சீனூ x-(

   Delete
 9. //ஆனால் அவர்களில் எத்தனை பேர் பதிவர்கள் ஆவார்கள் என்பது சந்தேகமே.//

  பிளான் பண்ணியல்லாம் பதிவராக்கவோ , வாசகனாக்கவோ முடியாது சார் . இயல்பா அந்த ஆர்வம் வரணும் , போட்டு திணிச்சிங்கன்னா கடுப்பு தான் வரும் யுவர் ஆனர் .

  Stress releasing factor ரே சமயத்துல stress creating factor ஆகவும் ஆகிவிடுவதை எனதருமை தங்கச்சிக்கு தெரியப்படுத்த விழைகின்றேன்.

  //அதே நேரத்தில் மொக்கைப் பதிவுகளுக்கு ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் நல்ல பயனுள்ள பதிவுகளை யாரும் ஆதரிக்காமல் இருப்பதும் வேதனையே.//

  எப்படி ஔ பதிவை மொக்கை என்றும் , பயனுள்ள பதிவேன்ரும் பிரித்தறிவதென்பதை அறிய ஆசைப்படுகின்றேன் ...

  ReplyDelete
 10. ஆவி மற்றும் கடற்கரையின் கருத்து ஏற்புடையது. கருத்து வழங்குவதில் சில ரகம் உள்ளனர். ஒருவர் மேம்போக்காக மேய்ந்துவிட்டு கருத்து வழங்குவர். சிலர் வாசிக்காமலே கருத்து வழங்குவர், சிலர் கமெண்ட்ட மட்டும் படிச்சிட்டு கருத்து வழங்குவர், சிலர் முழுவதும் படித்துவிட்டு கருத்திடுவர். பதிவைப் படிக்காமல் கருத்து வழங்குவது முற்றிலும் தவறு. முதலில் அந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.

  நான் வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணனிடம் ஒரு முறை கேட்டேன். ஏன் அண்ணா அதிக இடைவெளி விழுகிறது, தொடர்ந்து சீரான இடைவெளியில் பதிவுகளை வெளியிட வேண்டியதுதானே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், நான் மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படித்து அதற்கேற்ற கமென்ட் போடாதவரை நான் பதிவிட மாட்டேன் தம்பி. பத்து பிளாக் போயி பதிவுகள படித்து கமென்ட் போட்டால்தான் நான் எனது தளத்தில் புதுப் பதிவை வெளியிடுவேன் என்றார். அதுவரை எத்தனை மாத இடைவெளி விழுந்தாலும் நான் பதிவிட மாட்டேன் என்றார்.

  பதிவுலகில் அனைவரும் இப்படி இருந்தால் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். படித்து சரியான நிறை குறைகளை தெரிவிக்க வேண்டும். வாசிக்க முடியலையா என்னாட்டம் கருத்து போடாதிங்க. போலியான கருத்தை வழங்குவதற்கு பதில் கருத்திடாமலே இருப்பது மேல்...

  ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் நண்பர்களே... யாரும் எழுத ஆரம்பிச்சதும், சாணக்யனா ஆகிட முடியாது. எழுத எழுததான் எழுத்து மேம்படும். ஆதலால் தவறுகளை சரியா சுட்டிக்காட்டுங்க. நான் ஒரு சிறுகதை எழுதினேன். கருத்திட்ட பலரும் ஆகோ, ஓகோன்னு கமென்ட் போட்டுருந்தாங்க. கடைசியில் நண்பர் சிகரம் பாரதி கூறினார். இது சிறுகதைக்கான இலக்கணமே இதில் இல்லை. என்று உண்மையைக் கூறினார். அவர் சுட்டிக் காட்டியதனால் தான் என்னால் என் தவறை உணர முடிந்தது.

  தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். படித்துவிட்டு கமென்ட் போடுங்க...

  ReplyDelete
 11. எமது நண்பர் ஒருவர் பிரபல பதிவர். அவரே கூட இந்த கமெண்டை வாசிக்கலாம். ஒருமுறை நான் ஒரு விமர்சனம் எழுதும் போது ஒரு எளிமையான வார்த்தையை தவறாக எழுதிவிட்டேன். அவர் அதனை சுட்டிக் காட்டியும் அதில் உள்ள தவறு தெரியவில்லை. லகர மற்றும் ளகரத்தால் ஆன எழுத்து என்ன தவறு என்று தெரியல என்று கேட்டேன்.

  அதற்கு அவர் என்னிடம் கேட்ட கேள்வி: சரித்திர நாவல் எல்லாம் எழுதற இந்த வார்த்தைய கூட சரியா எழுத தெரியலன்னு?

  இந்த கேள்விக்கான அர்த்தம் எனக்கு இன்னும் புரியல? ஆச்சர்யத்தை தான் கொடுக்கிறது.....

  ReplyDelete
 12. பதிவுலகம் பற்றிய பார்வையும் அதற்கான விவாதமும் சிறப்பாக செல்கின்றது.இந்த விவாதங்கள் பதிவுலகை மேலும் மேம்படுத்தும் என்பதில் ஆச்சர்யமில்லை! மனோகரா வசன பாணியில் ஆவியின் கருத்தும் கே.ஜி சாரின் கருத்தும் கவர்ந்தது. கடற்கரை அவர்கள் பதிவர்களை வகை படுத்திய விதமும் டெம்ப்ளேட் கமெண்ட் குறித்து சொன்னதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நானும் பல தளங்களை வாசிப்பதால் பொதுப்படையாக அருமை, சிறப்பு! என்று கருத்திடுவதுண்டு. ஆனால் வாசிக்காமல் இட்டதில்லை! சில கவிதைகள் எழுத்துக்கள் புரியாதபோது பலமுறை படித்தும் விளங்காத போதும் பொத்தாம் பொதுவாக இப்படி கமெண்ட் போடுவதுண்டு. ( ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ?) மிகவும் பயனுள்ள விவாதம் தொடரட்டும்! நன்றி!

  ReplyDelete

 13. // ஸ்கூல் பையன்25 March 2014 07:37..

  நட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது.///

  //Sasi Kala25 March 2014 10:45

  நட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது. இதையே நானும் சொல்ல நினைக்கிறேன்.//

  //வெற்றிவேல்25 March 2014 13:56

  உண்மைதான் அக்கா...

  நட்பின் அடிப்படையில் இல்லாமல் பதிவின் அடிப்படையில் தான் கருத்திடல் வேண்டும்.//

  இப்படி பல பேர் சொல்லி இருக்காங்க,சொன்னது சரி தான், யாருக்கு சொல்லுறான்ங்க ? மத்தவங்களுக்கு சொல்லுறாங்க,ஏன் சாலச்சிறந்த செயலை அவங்களே செய்து பார்க்க கூடாது?

  செய்ய மாட்டாங்க,ஆனால் மத்தவங்க எப்படி "சாலச்சிறந்த செயல்களை" செய்யனும் என அறிவுறை சொல்ல மட்டும் முன் வருவார்கள்!!!

  நிறைய பேரு இப்படித்தான் "நாட்டுல நல்லவங்களே கொறைஞ்சுட்டாங்க,நல்லவங்களையே பார்க்க முடியலைனு, அப்போ அவங்க நல்லவங்க இல்லையா? எல்லாருமே அடுத்தவன் நல்லவனா இருக்கணும்னு எதிர்ப்பார்க்கிறாங்க, நாம நல்லவனா இருக்கணும்னு நினைப்பதேயில்லை அவ்வ்!

  முதலில் ஒரு நல்லவனை பார்க்கணும் என ஆசைப்பட்டால் "கண்ணாடியப்பாருங்க" நம்ம மூஞ்சே நல்லவனா நீனு கேட்டால் ,அதுக்கு அப்புறம் நாட்டுல நல்லவங்க குறைஞ்சுட்டாங்கனு சொல்லாதிங்க :-))

  அதே கதை தான் 'நட்பு பார்த்து பின்னூட்டம் போடக்கூடாது" என கருத்த சொல்லிட்டு நட்பு பார்த்து மட்டுமே பதிவுகளை படிப்பது ,பின்னூட்டமிடுவது என செயல்படுபவர்கள் ,அடுத்தவர்களிடம் அப்படி எதிர்ப்பார்க்க கூடாது.

  மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் துவங்கணும் ,அடுத்தவரிடம் இருந்து அல்ல!

  அடுத்தவர்களை பொது இடத்தில் புகை பிடிக்காதே என சொல்லும் முன் நாம புகைச்சிட்டிருக்க சிகரட்டை கீழ போட்டு மிதிக்கணும் :-))

  # சிலர் பதிவைப்படிக்காமலே கருத்திடுவதை ஆதரித்து வளர்ப்பதுமில்லாமல், அப்படி செய்வது தவறு எனவும் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள் அவ்வ்!

  -------------------------

  வெற்றிவேல்,

  //அதற்கு அவர் என்னிடம் கேட்ட கேள்வி: சரித்திர நாவல் எல்லாம் எழுதற இந்த வார்த்தைய கூட சரியா எழுத தெரியலன்னு?

  இந்த கேள்விக்கான அர்த்தம் எனக்கு இன்னும் புரியல? ஆச்சர்யத்தை தான் கொடுக்கிறது...//

  அந்தப்பிரபல பதிவர் யார்னு தெரியலை,ஆனால் ரொம்ப தெளிவாத்தான் சொல்லி இருக்கார்,அதுவே புரியலைனு சொல்றிங்களே எப்படி?

  உங்க வானவல்லி படிச்சு பார்த்தப்போ " எதாவது தப்பை சுட்டிக்காட்டினா" சண்டைக்கு வந்திடுவீங்களோனு" கம்முனு போயிட்டேன் அவ்வ்!

  ஏன்னா ஏற்கனவே சில முறை பின்னூட்டமிட்டு இருக்கேன், தவறை மட்டுமே சொல்றார்னு நினைச்சுடக்கூடாதுனு தான்.

  அந்த பிரபலப்பதிவர் சொன்னதன் பொருள் , மொழிஅறிவு வளர்த்துக்கொள்ளாமல் எப்படி "தொடர் கதை ,அதுவும் சரித்திர நாவல்" என்ற பொருளில் ஆகும்.

  டைப்போகிராபிக் தப்பு என்றால் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சிடும், சுட்டிக்காட்டிய பிறகும் அதுல என்ன தப்பு எனக்கேட்டால்" அச்சொல்லோ அதன் பொருளோ கூட தெரியலை, அது கூட தெரியாமலா "சரித்திரநாவல்"னு கேட்டிருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. வவ்வால்,

   //இப்படி பல பேர் சொல்லி இருக்காங்க,சொன்னது சரி தான், யாருக்கு சொல்லுறான்ங்க ? மத்தவங்களுக்கு சொல்லுறாங்க,ஏன் சாலச்சிறந்த செயலை அவங்களே செய்து பார்க்க கூடாது?

   செய்ய மாட்டாங்க,ஆனால் மத்தவங்க எப்படி "சாலச்சிறந்த செயல்களை" செய்யனும் என அறிவுறை சொல்ல மட்டும் முன் வருவார்கள்!!!//

   என்னைப் பொறுத்தவரையில் என்னால் முடிந்த அளவுக்கு பல பதிவுகளுக்குச் சென்று டெம்ப்ளேட்டாக இல்லாமல் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவேளை நீங்கள் மற்றவர்களுடைய தளங்களில் என்னுடைய பின்னூட்டங்களைப் பார்த்தது இல்லையோ? நேரமின்மை காரணமாக சில நாட்களாக நான் பதிவுகளைப் படிப்பதும் எழுதுவதும் குறைந்திருக்கிறது என்பதே உண்மை.

   Delete
  2. ஸ்கூல் பையர்,

   உங்களை டெம்ப்ளேட்டாக பின்னூட்டமிடுவதாக சொல்லவில்லை, பொதுவாக எப்படி பின்னூட்டமிடனும் என சொன்னதை எல்லாம் எடுத்து போட்டு சொல்லி இருந்தேன்.

   உங்க கருத்து , நட்புவட்டம் என பார்த்து பின்னூட்டம் போடக்கூடாது என்பது , எப்படியான வகையில் நீங்க பின்னூட்டம் போடுவது வழக்கம்னு நீங்களே முடிவு சொல்லிக்கலாம்.

   # உங்கள் பதிவு ,மற்றும் பின்னூட்டங்களும் படித்துள்ளேன், கலர் பென்சில் என கூட தொடர் பதிவு எழுதுறிங்க,படித்துள்ளேன்.

   ஒவ்வொரு காலத்திலும் பதிவுலகம் எப்படி செயல்படணும் என "திடீர் என உபதேச மழைகள்" பொழிவது வழக்கம் , அதில் நனைவதும் நமது வழக்கமே :-))

   என்னைப்பொறுத்த வரையில் இன்னார் என பார்ப்பதில்லை, அதில் எழுதி இருப்பதில் "கருத்து" சொல்ல எனக்கு ஏதேனும் இருந்தால் "கண்டிப்பாக" சொல்லிவிடுவேன்.

   பின்னூட்டம் போடணும் என சொல்றீங்க ,பின்னூட்டமே போடாதே ,நான் என்ன எழுதினால் உனக்கு என்னனு கேட்ட 'லூசுங்களும்" இப்பதிவுலகில் உண்டு!!!

   ஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு(ஆபாசம்லாம் இல்லீங்க ,ஆனை,பூனைனு சொன்னதுக்கு) என் மேல சைபர் கிரைமில் புகார் தெரிவிப்பேன்னு மிரட்டிய பெரிய மனுசனும் பதிவர்னு சொல்லிக்கிட்டு இங்கே அலையிறான் ,எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இதுவும் கடந்து போகும்னு போயிட்டு இருக்கேன்.

   Delete
 14. ஒரு சமூகம் டாஸ்மாக்கிலும், “நூலைப் படி, நல்ல நூலைப் படி” என்ற பாரதிதாசனின் வாக்கை வாசிக்க கூட நேரமின்றி பீச்சிலும், தியேட்டரிலும் நேரம் செலவழிக்கும் இளங்காளைகளும், பூஞ்சோலைகளும் பதிவெழுத மட்டுமல்ல, படிக்கக் கூட நேரமின்றி சுற்றுகின்றன. இவர்கள் ஏட்டுச் சுரக்காய் மட்டும் கறிக்கு சுவை சேர்க்காது என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை// தலைவரே எல்லோரும் பதிவெழுத வந்துவிட்டால் பின் எவர்தான் படிக்கிறதாம்... அவரவர் விருப்பம் பாஸ், பதிவை எழுதுவதும், இல்லை வாசிப்பதும் .. அவர்களை நாம் வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது/கூடாது.... அவர்களாக வந்தால் மட்டுமே நிலைத்த்து நிற்பார் ...

  ReplyDelete

 15. சில
  பேர் எதையாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில பேர் சில சமயம் சில நல்ல விசயங்களையும்,பயனுள்ள விசயங்களையும் எழுதுகிறார்கள்., இன்னும் சில பேர் தங்கள் வட்டங்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அரட்டைத்தனமான பதிவுகள் எழுதுகிறார்கள்.// அவ்ர்கள் எப்படியாவது எழுதி விட்டு போகட்டுமே .... தமிழில் தானே எழுதுகிறார்கள் ... எல்லோரும் இலக்கியவாதி ஆகிவிட்டால் நிறைய பிரச்சினைகள் உருவாகும் ... உங்களுக்கு நஸ்ரியா பிடிக்குமென்றால் எனக்கு நமீதா அந்த அளவில் கடந்து போக வேண்டும் ...

  ReplyDelete
 16. பதிவுலகில் அனைவரும் இப்படி இருந்தால் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். படித்து சரியான நிறை குறைகளை தெரிவிக்க வேண்டும். வாசிக்க முடியலையா என்னாட்டம் கருத்து போடாதிங்க//

  தம்பி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ... இந்த பொங்கல் தேவையற்றது ...

  ReplyDelete
 17. பலமுறை படித்தும் விளங்காத போதும் பொத்தாம் பொதுவாக இப்படி கமெண்ட் போடுவதுண்டு//

  பொதுவான கருத்து சொல்லாமல் அவர்களிடம் புரியலை விளக்குங்க என்று கேட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து ...

  ReplyDelete
 18. எழுத்து என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் கிறுக்கும் ஒரு கூட்டமும், மகுடத்தின் பின்னால் ஓடும் ஒரு கூட்டமும், இருக்கும் வரை தமிழோ தமிழ் பதிவுலகமோ யாதொரு நன்மையையும் அடையப் போவதில்லை. ####யோவ் ஆவி ....சுடுதுய்யா .

  ReplyDelete
 19. பதிவுலகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவரவர் விருப்பம். . அதனால் விதிமுறைகளை ஒரு கட்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வர இயலாது. பெரும்பாலானோர் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை சாடும் விதமாகவே கருத்து சொல்லி இருக்கிறார்கள். ஒரு சிலரின் எதிர் கருத்துக்களையே நம்மில் பலரும் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம் , அனைவருமே அதுபோலவே கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தால் பலரும் அதை விரும்பாமாடார்கள் என்பதே உண்மையாக இருக்கும் . கருத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் பொதுவான டெம்ப்ளேட் கருத்துக்களாவது போட மாட்டார்களா என்று மனம் தானாகவே நினைக்க ஆரம்பிக்கும்.
  உங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையே கூட குறைந்து போக ஆரம்பிக்கும்.
  அது போன்ற கம்மென்ட்களை ஒருமாதம் யாரும் போடாமால் நிறுத்திப் பாருங்கள் , பதிவு எழுதுவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும்.
  ஏதோ கிறுக்கி வரைந்திருந்தாலும் இதோ என் ஓவியம்.என்றுகுழந்தை கொண்டு வந்தால் ஆஹா அருமை என்றுதான் சொல்லத் தோன்றும்.
  என்னுடைய கருத்து என்னவெனில் டெம்ப்ளேட் கம்மென்ட்களை ஒரேயடியாக இகழ வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் நம் வலைப்பதிவுக்கு வந்து சென்றார் என்பதே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே.
  நம்மில் யார் ஒருவரேனும் தமக்கு வரும் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை அனுமதிக்காத உறுதி கொண்டவர்களாக இருக்க முடியுமா?

  ReplyDelete
 20. முரளி,

  //நம்மில் யார் ஒருவரேனும் தமக்கு வரும் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை அனுமதிக்காத உறுதி கொண்டவர்களாக இருக்க முடியுமா?//

  உங்களுக்கு அதான் வேண்டும்னா கேட்டு வாங்கிகோங்க, அதுக்கு எதுக்கு யார் ஒருவருக்கேணும் என கேள்விலாம்,.

  முதலில் எல்லாருக்கும் கமெண்ட் போடுறேன் ,அருமைனு சொல்லிக்கிட்டு ஒருவர் அலைவார் ,நானே இந்த வேலையெல்லாம் இங்கே வேண்டாம் ,படிச்சுட்டு பின்னூட்டம் போடுனு சொல்லி விரட்டி இருக்கேன், இங்கேவே இருக்காரு "பேரை சொல்லணுமா"?

  ஒரு ரெண்டு ,மூனு தடவை பொறுமையா பார்த்துட்டு தான் சொன்னேன் ,அவசரப்பட்டு அப்படி சொன்னேனு நீங்களா நினைச்சுடாதிங்க.

  #//அது போன்ற கம்மென்ட்களை ஒருமாதம் யாரும் போடாமால் நிறுத்திப் பாருங்கள் , பதிவு எழுதுவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். //

  உங்களைப்போன்றவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நிகழலாம், ஒரு கமெண்டு கூட வரலைனாலும் தொடராக எழுத ஆரம்பிச்சதை நிறுத்தாமல் எழுதுறவங்க இப்பவும் பதிவுலக இருக்காங்க, உங்களைப்போன்ற "மேம்போக்கா" உலாவுரவங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது :-))

  உங்க மன அபிலாஷைகளை சொல்லுங்க ,அதை ஏன் ஊருக்கே பொதுமை படுத்தி சொல்லிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. வவ்வால்! டெம்ப்ளேட்டே கம்மென்ட் அனைத்தும் படிக்காமலே போடப்படுகிறது என்பது சரியல்ல .
   பல சமயங்களில் பதிவைப் படிப்பதை விட கமெண்ட் போடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அந்த சமயத்தில் இன்னொரு பதிவைப் படிக்கலாம்.ஒவ்வொரு பதிவுக்கும் எதிர் கருத்தை கட்டாயம் பதிவுசெய்தே ஆக வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் விரும்புவதில்லை. பெரும்பாலும் எனது கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையபதிவுகளுக்கு நான் கருத்திடுவதில்லை.

   அதிக பார்வையாளர்களைக் கொண்ட உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் கம்மேன்ட்கள் தேவை இல்லாமல் இருக்கலாம்.

   //உங்களைப்போன்றவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நிகழலாம், ஒரு கமெண்டு கூட வரலைனாலும் தொடராக எழுத ஆரம்பிச்சதை நிறுத்தாமல் எழுதுறவங்க இப்பவும் பதிவுலக இருக்காங்க, உங்களைப்போன்ற "மேம்போக்கா" உலாவுரவங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது //
   அவர்க்கு ஒரே ஒரு கம்மென்ட் போட்டுப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று.

   //உங்க மன அபிலாஷைகளை சொல்லுங்க ,அதை ஏன் ஊருக்கே பொதுமை படுத்தி சொல்லிட்டு இருக்கீங்க?//
   என்னைப் போன்ற சராசரிகள்தான் அதிகம் என்று நினைப்பதால்.விதி விலக்குகள் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் சொன்னேன்

   Delete
  2. முரளி,

   // டெம்ப்ளேட்டே கம்மென்ட் அனைத்தும் படிக்காமலே போடப்படுகிறது என்பது சரியல்ல .//

   உங்க கண்டுப்பிடிப்பு :-))

   #//பல சமயங்களில் பதிவைப் படிப்பதை விட கமெண்ட் போடுவதற்கு அதிக நேரம் செலவாகும்.//

   இன்னொரு அதிநவீன கண்டுப்பிடிப்பு :-))

   எனக்கு தெரிஞ்சு பதிவை விட பெருசா கமெண்ட் போட்டது யாருமில்லை!
   (ஒருத்தர தெரியும் ,ஆனால் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன் அவ்வ்)

   #//அந்த சமயத்தில் இன்னொரு பதிவைப் படிக்கலாம்//

   ஓ அந்த சமயத்தில் இன்னொரு பதிவை படிக்கலாமா? அப்படியே படிச்சு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிடலாமா? அந்த டெம்ப்ளேட் கமெண்ட் போடும் நேரத்தில் இன்னொரு பதிவில் ஒரு பேராகிராப் படிச்சிடலாமே :-))

   #//ஒவ்வொரு பதிவுக்கும் எதிர் கருத்தை கட்டாயம் பதிவுசெய்தே ஆக வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் விரும்புவதில்லை. //

   ஹி..ஹி அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் டெம்ப்ளேட்டாக கருத்து பதிவு செய்தே ஆக வேண்டும்னு கட்டாயமும் இல்லை ,அதனை என்னைப்போன்றவர்கள் விரும்புவதும் இல்லை!!!

   #//பெரும்பாலும் எனது கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையபதிவுகளுக்கு நான் கருத்திடுவதில்லை. //

   அது உங்க இஷ்டம்,ஆனால் இந்த பதிவே உங்க கருத்துக்கு எதிரான கருத்துக்கள்( உங்களுக்கு டெம்ப்ளேட் வேண்டும் தானே) உடையதா தானே இருக்கு? ஒரு வேளை உங்க கொள்கை மறந்து போய் கருத்திட்டுவிட்டிங்களா அவ்வ்!

   # //அவர்க்கு ஒரே ஒரு கம்மென்ட் போட்டுப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று.//

   நீங்க மகிழ்ச்சி அடைவதை பற்றி சொல்லி இருந்தால் அது வேறு ஆனால் முதலில் சொன்னது "இப்படி டெம்ப்ளேட் கமெண்டுகள் இல்லாவிட்டால் பாதிப்பேர் பதிவே எழுத மாட்டாங்கனு", அதுக்கு தான் நான் சொன்னேன்,மகிழ்ச்சி அடைய மாட்டாங்கனா சொன்னேன்?

   அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்காதே?

   # உங்களுக்கு தெரியுமா என தெரியலை,ஆனால் பதிவுலகில் அவ்வப்போது இத்தகைய கருத்துக்களை, அதாவது மொக்கை,கும்மி ,டெம்ப்ளேட் பின்னூட்டம் என வருவதை பற்றி பதிவிட்டு வருந்துவது நடந்துக்கொண்டு தான் இருக்கு , இப்பதிவு முதலும் அல்ல கடைசியும் அல்ல :-))

   #//என்னைப் போன்ற சராசரிகள்தான் அதிகம் என்று நினைப்பதால்.விதி விலக்குகள் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் சொன்னேன்//

   விதிவிலக்காகத்தான் "டெம்ப்ளேட்" பின்னூட்டவாதிகள் இருக்காங்க, அவங்க சராசரியாக அதிகமா இல்லை, நீங்களே விரல் விட்டு எண்ணலாம் ,அம்புட்டு சிறிய எண்ணிக்கை அது :-))

   அந்த சின்னக்கூட்டத்தினை "தமக்கு சாதகமாக" வச்சிக்க சிலர் மட்டுமே ஆசைப்படுறாங்க ,எனவே ஆதரிக்கிறாங்க அவ்வ்!
   ---------------------

   சதீஷ் செல்லதுரை,

   //.பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல.//

   நம்ம அலைவரிசையில இருக்கீங்களே!!!

   நானாக யாரையும் காய்ச்சுவதில்லை ,தானாக அப்படி ஆகிடுது அவ்வ்!

   Delete
 21. டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் தரமான பதிவுகளை தர உதவாது.புதியவர்களை உற்சாகம் செய்ய மட்டுமே இது உதவலாம் .மற்றபடி பிரபலங்களின் பதிவுகளில் வவ்வால் போல் காய்ச்சி எடுக்கணும் .பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல.

  ReplyDelete
  Replies
  1. சதீஷ்! தரமான பதிவுகளுக்கும் டெம்ப்ளேட் கம்மென்ட்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்த கருத்துக்கள் பதிவின் தரத்தை கூட்ட வோ குறைக்கவோ செய்யாது. இப்படிப் போடுகிறார்ளே என்று வருந்தக் கூடிய அளவுக்கு மோசமானதல்ல அ.நாகரீகமாக கருத்திடாதீர்கள் என்று வேண்டுமானால் சொல்லாமே தவிர இப்படித்தான் கருத்திட வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது.
   பல பதிவுகளில் நெருங்கிய நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் பதிவுக்கு தொடர்பில்லாமல் பொழுது போக்காக அரட்டை அடிக்கும் விதத்தில் கருத்துக்கள் இடப்படுவதை பார்க்கமுடிகிறது . இவ்வித கம்மென்ட் பற்றி யாரும் குறிப்பிடவும் இல்லை. கவலைப் படவில்லை. (இவை சரியல்ல என்பது என் கருத்தல்ல) டெம்ப்ளேட் கருத்தை ஏற்காதவர்கள் இவற்றை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை இவற்றை பற்றி பேசாததும் ஆச்சர்யம் அளிக்கிறது.
   //பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல//
   யாரும் இவற்றை எதிபார்த்து எழுதவேண்டும் என்று சொல்லவில்லை . முரட்டுத்தனமாக எதிர்ப்பது சரியல்ல என்பதுதே நான் சொல்ல விரும்புவது. அது பாட்டுக்கும் ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே.
   அவ்வாறு போடுபவர்களின் வலைப்பக்கங்களுக்கு செல்லாமல் இருந்தாலே உங்கள் விருப்பம் நிறைவேறும்.அவற்றை தவிர்த்து விடலாம்.

   Delete
  2. முரளி,

   //யாரும் இவற்றை எதிபார்த்து எழுதவேண்டும் என்று சொல்லவில்லை . முரட்டுத்தனமாக எதிர்ப்பது சரியல்ல என்பதுதே நான் சொல்ல விரும்புவது. //

   இதை எப்படி சொல்லுறிங்க?

   இத்தனை பேரு நல்லா இருக்குனு சொல்லிட்டாங்க (டெம்ப்ளேட்டுகள்) நீ எப்படி குறை சொல்லலாம்னு கேட்கிற அமெச்சூர்கள் இருக்காங்க.

   டெம்ப்ளேட்டாக பின்னூட்டம் போடும் பழக்கம் உள்ளவர்கள் சுமார் 10 பேர்தான் ,ஆனால் அவங்க தான் எல்லாப்பதிவுக்கும் முன்ன ஓடிப்போய் கருத்த சொல்லுவாங்க, 10 பேரு ஒரே மாதிரியா சொல்லிட்டாங்களேனு ,அடுத்து வரவங்களும் மொய் வச்சிட்டு போயிடுறாங்க,இது ஒரு தொத்து வியாதி.

   நீங்க வேண்டும்னா,கோடம்பாக்கம் பிரிட்ஜ் மேல நின்னு சும்மா கீழ எட்டிப்பாருங்களேன், 5 நிமிஷத்துல ஒரு 10 பேரு கூட வந்து எட்டிப்பார்ப்பாங்க :-))

   Delete
 22. இதுவும் சரியாகத்தான் தோன்றுகின்றது! டெம்ப்ளெட் கமென்ட் சில சமயம் என்னடா இது நமது பதிவை வாசிக்காமல் சும்மாவானும் கொடுக்கின்றார்களோ என்று கூடத் தோன்றியதுண்டு, ஆராம் காலத்தில்! நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்படிப்பட்ட கமென்டாவது வருகின்றாதே என்று நினைக்கும் போது தாங்கள் சொல்லியிருப்பது
  //என்னுடைய கருத்து என்னவெனில் டெம்ப்ளேட் கம்மென்ட்களை ஒரேயடியாக இகழ வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் நம் வலைப்பதிவுக்கு வந்து சென்றார் என்பதே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே.//

  சரியென்றே தோன்றுகின்றது! அவர்களையும் நாம் வரவேற்கத்தான் வேண்டும்! நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டியதற்கு மிக்க நன்றி முரளிதரன்!

  ReplyDelete
 23. ஆவியின் கருத்து ஏற்புடையது! அதில் முக்கியமாக
  //அறிவியல் வியாபித்திருக்கும் அமெரிக்காவில் கூட சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்குவதை கண்டு வியந்திருக்கிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் சோட்டா பீமும், போகோ வும் பார்த்து மட்டுமே வளர்கின்றன. அதைவிட கொடுமை தமிழை படிக்கவே தடுமாறுகின்றன.. இந்த அடித்தளமே வீக்காக இருக்கும் போது பதிவுலகம் எனும் கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்.

  குழந்தைகளுக்கு முதலில் வாசிப்பனுபவத்தை உணர்த்துதல் அவசியம். முன்பெல்லாம் தாத்தா பாட்டி சொன்ன காக்கா கதையோ, தாலாட்டுப் பாடலோ கேட்டு வளர்ந்ததைப் போலவே கதைகள், கவிதைகள், இலக்கியம் என அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் போது நிச்சயம் அடுத்த கட்டமாக எழுத முன்வருவார்கள். பதிவுலகம் மரிக்காம்லிருக்க இது ஒன்றே வழி..!//

  மிக நல்ல கருத்து!

  ReplyDelete
 24. எல்லோருடைய பார்வையும் அவரவர் கோணங்களில் நன்றாகத்தான் இருக்கின்றது! விவாதாங்கள் உட்பட!

  சீனு மிக அருமையான ஒரு பதிவையும், விவதங்களையும் ஆரம்பித்து விட்டீர்கள்!

  ReplyDelete