16 Jan 2014

சென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...!

ரண்டு வருடகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி எதிர்புறம் இருக்கும் ஆங்கிலோ இந்திய வழி பள்ளிகூடத் திடலில் நடைபெற்ற புத்தககாட்சிக்கு நேற்றுதான் சென்று வந்தது போல் இருக்கிறது. அட அதுவாவது பரவாயில்லை. கடந்த வருட புத்தக கண்காட்சியின் போது நானும் வாத்தியாரும் அருந்திய தேநீரின் சூடுகூட இன்னுமென் நாவிலிருந்து விலகவில்லை, அதற்குள் சென்னை புத்தககாட்சி - 2014 என்றால் நம்புவதற்கு கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. நம்பமுடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் காலதேவன். யாராவது அவனைப் பிடித்து நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்களேன், அந்த இடைவெளியில் நான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். 


தீபாவளியையும் பொங்கலையும் இழந்துவிட்ட இக்காலத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் ஒரே திருவிழா புத்தகக் கண்காட்சிதான். சென்னைக்கும் பபாசிக்கும் நன்றி. புத்தக கண்காட்சி ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் அண்ணன் ஆவி ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் சென்றுவிட்டாலும் இரவாட்டம் தடுபாட்டம் போட்டதால் முழுவதும் சுற்ற இயலாமல் பணிக்கு திரும்பி விட்டேன். இருந்தும் நேற்று மிக நிதானமாக மற்றொரு ரவுண்ட் அடித்துவிட்டேன்.

கடந்த வருட புத்தகக் கண்காட்சிகளில் எங்கு திரும்பினாலும் 'அவசர வழி ' தெரிந்ததே தவிர அவசரத்திற்கோர் வழி கண்ணிலேயே படவில்லை. நல்லவேளையாக இம்முறை அரங்க நுழைவாயிலின் அருகிலேயே சுத்தமான சுகாதாரமான தற்காலிக கழிப்பிடம் கட்டி வைத்துள்ள பபாசிக்கு யாராவது கோவில் கட்டினால் அதில் என் பங்காக ரூபாய் ஆயிரத்தி ஒன்று தரலாமென உத்தேசம்

எத்தனையெத்தனை புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள்... மலைமலையாய் குவிந்து கிடக்கும் புத்தகங்களையெல்லாம் பார்க்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. எங்கிருக்கிறார்கள் இத்தனை எழுத்தாளர்களும். இப்புத்தகங்களைப் பார்க்கும் போது அராத்துவின் புத்தக வெளியீட்டில் மதன் கூறியது நியாபகம் வருகிறது. மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முடியாது, அதனால் புத்தக தேர்ந்தெடுப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று. இங்கே வாசகனுக்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலும் இதுதான். 

யாரைப் படிப்பது, என்ன மாதிரியான எழுத்துக்களைப் படிப்பது என்பதில் எனக்கென எவ்வித வரைமுறைகளும் இருந்ததில்லை, ஆபத்தும் அதுவே. 'நாங்கள் பதிப்பிப்பது எல்லாமே நல்ல புத்தகங்கள்தான்' என்று மார்தட்டிய சில முன்னனிப் பதிப்பகங்களை நம்பி வாங்கிய புத்தகங்கள், தொடர்ந்து வாசிக்கப் பிடிக்காமல் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. அதனால் இம்முறை மிகவும் யோசித்து, பார்த்துப்பார்த்து, முக்கியமான எழுத்தாளர்களின் சில படைப்புகளை மட்டுமே வாங்கியுள்ளேன்/வாங்கவுள்ளேன். வரும் வருடத்தில் கி.ரா, அசோகமித்திரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் ஆகியோரின் ஒரு நாவலையோ அல்லது ஒரேயொரு சிறுகதைத்தொகுப்பையோ படித்துவிட வேண்டுமென்று முடிவும் செய்துள்ளேன். 

ஸ்டால்களில் அடுக்கபட்டிருக்கும் பல புத்தகங்களின் தலைப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது (அ) ஆயாசப்படுத்துகிறது. 'அதிக உயரம் வளர்வது எப்படி', 'ஆண்குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?' ஷப்பா முடியல. 

ஒரு பதிப்பகத்தில் அந்த வருடத்திற்கான வருமானம் குறைவெனில் உடனே ஒரு மருத்துவர் பெயரில் அந்தரங்க சந்தேகங்களின் தீர்வுகள் குறித்து புத்தகம் வெளியிடத் தொடங்கிவிடுகிறார்கள். எல்லா பதிப்பகங்களிலும் நமது அந்தரங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கிறது. அதேநேரம் இதுபோல் நான்கு புத்தகங்கள் படித்தால், 'ஐந்தாவதை நானே எழுதிவிடுவேனோ?' என ஐயமாகவும் இருக்கிறது. இப்படியான அந்தரங்க புத்தகங்களும் காமசூத்திர புத்தகங்களும் மட்டுமே கண்ணில்பட்ட நிலையில் அந்த ஸ்டாலின் ஒரு அடுக்கில் காமம் + காதல் =கடவுள், நவீன காமசூத்திரம் உங்களுக்காக என்ற புத்தகளுக்கு நடுவே 'செஸ் விளையாட கற்றுக்கொள்வது எப்படி?' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. அட அசிங்கம் புடிச்சவிங்களா இப்படி எல்லாமாடா தலைப்பு வைப்பீங்க என்றபடி மற்றொரு முறை அத்தலைப்பை வாசித்த போதுதான் உணர்ந்தேன் 'க்'கை சேர்த்து வாசித்தது என் தவறு என்று. 

மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா சாண்டில்யன் உட்பட பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.

விகடன் ஸ்டாலினுள் நுழைந்த போது என்னருகே நின்றவர் 'ச்ச என்ன தம்பி புஸ்தகம் ரேட்டு ல்லாம் தாறுமாறா இருக்கு' என்றார் சிரித்துக்கொண்டே. 'அதான் சார் பிரச்சனையே' என்றேன் அமைதியாக. 'இல்ல தம்பி ஒரு புஸ்தகமும் வாங்க முடியலியே என்ன பண்றது' என்றார் தனது ஆதங்கக் குரலில் . 'அதுதான் சார் நம்ம பிரச்சனையே' என்றேன் கொஞ்சம் துடுக்காக, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதன் பின் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 
  
உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பல பதிப்பகங்கள் மீது கோபம் கோபமாக வருகிறது. சாதாரண சிறிய புத்தகத்திற்குக் கூட யானைவிலை குதிரைவிலை. தரம் இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக எல்லா புத்தகங்களையுமே வாசகனானவன் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாப்பான் என எப்படிச் சொல்லமுடியும். ஒருமுறை படிப்பான், சுவாரசியம் மிகையென்றால் மேலும் இருமுறை படிப்பான். அப்படிப்பட்ட புத்தகங்களை மிகத்தரமான அச்சிலும், ஏனையவற்றை சாதாரண அச்சிலும் வெளிக்கொணர்ந்தால் எம்மைப் போன்ற மத்யமர்களின் வாசிப்பின் பரப்பும் விரியுமே? அதே மேடையில் சாரு வருத்தபட்டார் என் போன்றவர்களின் புத்தகங்கள் 1000 பிரதிகளைக் கூட தாண்டி விற்பதில்லை என்று. இவ்வளவு விலை வைத்தால் எவன் வாங்குவானய்யா! நடுத்தர வர்க்கமும் வாங்குபடியான (வி)நிலை வராதவரை தமிழ்ச்சமுதாயத்தின் பெரும்பகுதி தன் நேரத்தையும் பணத்தையும் இலக்கியம் நோக்கி செலவழிக்க மறுக்கிறதென ஒவ்வொரு எழுத்தாளனும் பதிப்பகமும் பொங்கும் உங்களின் பொருமல்கலளில், புலம்பல்களில் இம்மியளவு நியாயமும் இருக்கபோவதில்லை.  

மேற்கூறிய பத்தியில் இருக்கும் என் ஆதங்கத்தின் பெரும்பகுதி முத்திரை பதித்த எழுத்தாளர்களையே சென்று சேரட்டும். ஜெயமோகன், கிரா, எஸ்ரா, பாரா, வண்ணதாசன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், சாரு, வாமுகொமு இன்னும்பலர் என யாருடைய எழுத்துக்களும் மலிவு விலையில் இல்லை. தங்களுடைய மிக முக்கியமான புத்தகங்களையாவது மலிவு விலை பிரசுரமாக பிரசுரித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டுமே என்னிடம் மிச்சமிருக்கிறது. ஒருவேளை அப்படி வெளியிடுவதாய் உத்தேசமிருந்தால் தயவுசெய்து உயிர்மை பக்கம் போய்விடாதீர்கள். அவர்களுடைய அகராதியில் மலிவுவிலை எனப்படுவது நூற்றி ஐம்பதுக்கும் மேல் :-)     

பாரதி புத்தக நிலையம் என்ற ஒன்றைப் பார்த்தேன், தரமான காகிதம், குறைவான விலை நேர்த்தியான அச்சு. என்னவொன்று யாருமே பிரபலமாகாத எழுத்தாளர்கள். என்ன நம்பிக்கையில் வாங்குவது என்றே தெரியவில்லை. இங்கே நிலை இப்படி என்றால், அங்கே நிலை அப்படி. விகடன் கிழக்குப் பதிப்பகங்கள் கிடைத்த தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை சரமாரியாக அச்சிட்டுத் தள்ளியுள்ளன. கிழக்கு போகிற போக்கைப் பார்த்தால் 'எங்கே விக்கிபீடியாவில் இருக்கும் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து விடுவார்களோ' எனப்பயமாக இருக்கிறது. என்னவொன்று அவர்களிடம் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (பத்திரிக்கையாளர் சமஸ் எழுதியிருந்தார் அவர்களை தரவிறக்க மொழி பெயர்ப்பாளர்கள் என்று). 

பாரா, சொக்கன் மற்றும் பலர் என்று பலரும் அங்கே போட்டிபோட்டுக் கொண்டு எழுதுகிறார்கள்ஏதோ ஒன்று. மேலைக் கலைகளை தமிழில் செப்பா விட்டால் மெல்லத் தமிழினி சாகுமென்று சொன்னான் பாரதி. அதற்கேற்ப பல கற்பித்தல்களையும் தமிழில் புகுத்திக் கொண்டிருக்கும் கிழக்கு மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் இப்புத்தகங்களில் இருக்கும் நம்பகத்தன்மை அந்த எழுத்தாளனின் மேல் இருக்கும் நம்பகத் தன்மையே அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே. தற்போது இந்த பட்டியலில் மதி என்ற ஒரு புத்தக நிலையமும் இணைந்துள்ளது. 

இம்முறை ஆங்கிலப் புத்தகங்க ஸ்டால்களின் எண்ணிக்கையும் குழந்தைசார் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எஸ்ரா தன் மகனை கதை கூற சொல்லி அதனை குழந்தைகள் படிக்கும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்களும் அரங்கேறியுள்ளன. குலவிச்சை கல்லாமல் பாகம்ப(டட்)டும்.  

ஜெமோ இணையத்தில் எழுதிய எல்லாவற்றையும் புத்தகமாக்கி விட்டார்கள். விகடனில் ஜோதிஜியின் டாலர் நகரம் கிடைகிறது. இந்த புத்தக சந்தையின் மற்றோர் இன்ப அதிர்ச்சி ரஞ்சனி அம்மா புத்தகம் எழுதியிருப்பது.


கீழைக்காற்று என்னும் கம்யுனிச ஸ்டாலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த போது கீ.வீரமணி என்னருகே நின்று கொண்டிருந்தார். அவருடன் படமெடுக்க ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது. உயிர்மையில் மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்து வாங்க காத்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒரு ஐந்து நிமிடம் அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன், அதற்குள் ஐம்பது பேராவது கையெழுத்து வாங்கியிருப்பார்கள். ஒரு பெண்மணி அவரிடம் வந்து 'என்ன உங்கள ஒரு வாரமா டிவியில பார்க்க முடியல' என்று நலம் விசாரித்தார். மற்றொரு பெண்மணி 'எம்பொண்ணு நல்லா பேசுவா. அவ பேச்சு போட்டியில கலந்துக்குற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லுங்க' என்றபடி டார்ச்சர் செய்ய, தன் மயிரை சிலுப்பிய மனுஷ் வேறொருவருக்கு கையெழுத்து போடுவதில் மும்மரமாகிவிட்டார்.    

டிஸ்கவரியில் வேடியப்பன் செம பிசியாக இருந்தார். வெளியே வா.மணிகண்டனும் விநாயக முருகனும் நின்று கொண்டிருந்தார்கள். வா.மணிகண்டனின் வாயில் நுழையா பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியபோது, அந்த மனிதரின் வெற்றிக்குப் பின்புலமாக இருப்பது அவரது நிசப்தம் வலைப்பூ என்பது கொஞ்சம் பெருமையாக இருந்தது எனக்கு. மேலும் டிஸ்கவரியில் பதிவர்கள் எழுதிய புத்தகங்களை தனியாக ஒரு டேபிளில் அடுக்கி வைத்திருந்தார் திரு.வேடியப்பன்.     

ஸ்பை மற்றும் ரூபகிற்கு மத்தியில் எங்களைப் பிடித்த ஆவி...! 

ஜக்கி வாசுதேவின் புத்தகங்களுக்கு என்றே ஒரு தனி ஸ்டால் திறந்து வைத்துள்ளார்கள். அங்கும் ஒரு கூட்டம் அள்ளுகிறது. நித்தியின் உரைகளை புத்தகமாக எழுதி சாருவும், ஜக்கியின் உரைகளை புத்தகமாக எழுதி சுபாவும் பிரபலமடைந்த நிலையில், எதிர்கால சாமியார் ஒருவரின் இடமும், அவரது உரையை எழுதப்போகும் எழுத்தாளனின் இடமும் இன்றளவிலும் வெற்றிடமாகவே உள்ளது. இதனை எண்ணியெண்ணி வெதும்பிய என் மனதில் கணப்பொழுதில் தோன்றியது அந்த எண்ணம், ஏன் தோழர் அரசனை சாமியாராக்கி அவரது அந்திநேர ஆனந்த உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடக்கூடாது என்று. இதன் மூலம் என் எழுத்தாளனாகும் கனவும் நனவாக வாய்ப்பு இருக்கிறது. தோழர் அரசன் அடுத்த புத்தக காட்சிக்குள் சாமியாராக வேண்டுமென்று நித்தியையும் ஜக்கியையும் வேண்டிக்கொண்டே ஜக்கியின் ஸ்டாலில் இருந்து வெளிவந்தேன்.  

இறைவா இவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் 'நீ எப்ப புத்தகம் எழுதப்போற' என்று என்னை நோக்கி வரும் உசுபேத்தல்களை சமாளிக்கும் வல்லமையைக் கொடு இல்லையேல் இந்த ஜாம்பவான்களோடு போட்டிபோடத் தேவையான ஆற்றலைக் கொடு. இரண்டில் இரண்டுமே நடக்காவிட்டால்... வேண்டாம் அதைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை. 
         
எனது சிந்தனைகளில் இருந்து சிந்தனைகளில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் புத்தக கடலுக்குள் மூழ்கியபோது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள். ஒருகட்டத்தில் சுற்றியிருந்த மக்கள் மறைந்து புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் மட்டுமே தோன்றியபோது நிஜமாகவே அது ஒரு புத்தகாதீனமான அனுபவம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.     

புத்தகம் சரணம் கச்சாமி...! 

26 comments:

 1. // சாருநிவேதிதா கூறியது நியாபகம் வருகிறது. மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முடியாது, //

  இதை சொன்னது சாரு இல்லை மதன்!

  ReplyDelete
  Replies
  1. மெய்யாலுமா ஆவி பாஸ்.. எனகென்னவோ சாருவும் சொன்ன மாதிரி நியாபகம்

   Delete
  2. ஆமா சீனு, மதன் கூறியதாவது: ஜான் கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பு வெளிவந்த நூல்கள் வெகு சில.. ஆனால் அந்த இயந்திரம் கண்டறியப்பட்ட நாளில் இருந்து இன்று வரை வெளியான நூல்களை ஒருவன் மொத்தமும் படிக்க வேண்டுமானால் சுமார் எழுபது வருடங்கள் தினமும் இருபத்தி நாலு மணி நேரமும் படிக்க வேண்டும் என்றார்..

   Delete
  3. செம.. உங்க அறிவைக் கண்டு யாம் வியக்கோம்...திருத்தியாயிற்று

   Delete
 2. தலைப்பு அபாரம்... பதிவு தான் கொஞ்சம் நீளமா போயிட்டு :) எடிட் பண்ணியிருக்கலாம் அல்லது இரு பாகங்களாக வெளியிட்டிருக்கலாம்...

  தி.ரா என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே ? யார் அவர் ? முழுப்பெயர் என்ன ?

  அந்தரங்க சந்தேகங்களுக்கு தீர்வு தரும் புத்தகங்கள் எல்லாம் மிகவும் சிறிய அளவிலேயே விற்பனையாகிறது... நிறைய பேர் வாங்குவதற்கு கூச்சப்படுவார்கள்... தவிர உள்ளே சரக்கும் தன்னம்பிக்கை புத்தகம் மாதிரி தான் இருக்கும்... அதெல்லாம் படிச்சு தெரிஞ்சிக்க வேண்டிய விஷயமா என்ன ?

  புத்தக விலை குறித்த காமன் மேன் புலம்பல் பத்தியை நீக்கியிருக்கலாம் :)

  காலச்சுவடில் சில புத்தகங்கள் குறைந்த தர காகிதத்தில் ஒரு பதிப்பும், கலெக்டர்'ஸ் சீரிஸ் என தரமான தாளில் ஒரு பதிப்பும் வெளியிட்டிருக்கிறார்கள்...

  ரஞ்சனி அம்மா இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறாரா ?

  ReplyDelete
  Replies
  1. //தி.ரா///

   நம்மாளு கி.ரா.வையும் தி.ஜா.வையும் கன்பீஸ் பண்ணிட்டாரு. :-)

   Delete
  2. நினைச்சேன்... ஆனா தி.ரா'ன்னு ஒருத்தர் இருந்து நமக்குத்தான் தெரியலையோ'ன்னு ஒரு சந்தேகம்...

   Delete
  3. மிகசரி 'கி' 'தி' ஆகிவிட்டது... :-)))

   நான் படிக்க வேண்டும் என மனதில் நினைத்த புத்தகம் கோபல்லபுரத்து மக்கள் மற்றும் கோபல்ல கிராமம்

   Delete
 3. வாசிப்புக்கு ஏது தடை நிறைவில் சொல்லிய புத்தகம் சரணம் கச்சாமி...! சரியான கருத்து! ஆமா உங்கள் காதல் கடிதமே ஒரு நவீன புத்தகம் தானே பாஸ்§

  ReplyDelete
 4. //அதில் என் பங்காக ரூபாய் ஆயிரத்தி ஒன்று தரலாமென உத்தேசம்.//

  10% தள்ளுபடி உண்டா?

  அராத்துவின் புத்தக வெளியீடு மதனை வைத்தா?

  //அதேநேரம் இதுபோல் நான்கு புத்தகங்கள் படித்தால், 'ஐந்தாவதை நானே எழுதிவிடுவேனோ?' என ஐயமாகவும் இருக்கிறது.//

  :))))

  //உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பல பதிப்பகங்கள் மீது கோபம் கோபமாக வருகிறது. சாதாரண சிறிய புத்தகத்திற்குக் கூட யானைவிலை குதிரைவிலை.//

  இதைச் சொன்னால்தான் சிலருக்குக் கோபம் வருகிறது! (இதை டைப்பிய பிறகுதான் பின்னூட்டத்தில் காமன் மேன் என்ற அலட்சிய பதத்தைப் படித்தேன்!)

  ReplyDelete
 5. நான் எப்போதாவது ஆட்டோவை (வேறு வழியில்லையேல்) பயன்படுத்துபவன். சென்ற வாரம் ஒரு இடத்திற்கு ஆட்டோவில் சென்றபோது மீட்டர் 24 ரூபாய் காட்டியது. முன்பு அதே தூரத்திற்கு 50 ரூபாய் அழுதிருக்கிறேன். அடிக்கடி ஆட்டோவில் பயணம் செய்ய நேர்பவர்கள் எத்தனை பணத்தை ஆட்டோவுக்குக் கொட்டி அழுதார்களோ...? ஓட்டலில் திங்கப் போனால் ஒரு தோசை 60 ரூபாயா? என்று கேட்பதில்லை... புத்தகங்கள் என்றால் மட்டும், ‘இதுக்கு இவ்வளவு விலையா?’ என்ற கேள்வி வருகிறது. அதற்காக உயிர்மை போன்ற ‘அதிபயங்கர’ விலையுயர்ந்த பதிப்பகங்களை நான் நியாயப்படுத்தவில்லை. என் பள்ளிப் பருவத்தில் ஒரே புத்தகம் தரமான பேப்பரில், கெட்டி அட்டையில் பிலாசபி பிரபாகரன் போன்றவர்களுக்காக விலை உயர்ந்த பதிப்பும், சுமாரான தாளில், சுமாரான அட்டையில் என்போன்ற சுமாரானவர்களுக்காக மலிவுப் பதிப்பும் ஒரே சமயம் வெளிவரும். இந்தப் பழக்கம் இனி மீண்டும் ஆரம்பித்தால் புத்தகத்துறை செழித்து வளரும். அதுசரி... வசதி செய்து கொடுத்த பபாசி இந்த முறை நுழைவுக் கட்டணத்தை 10 ரூபாய் ஆக்கிவிட்டதை சீனு கவனிக்கலையோ?

  ReplyDelete
 6. ஒரு புத்தகத்தின் விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

  ஒரு ஆசிரியரின் சந்தை மதிப்பு கூட கூட வெளியாகும் புத்தக விலையும் கூடவே மேலே செல்கிறது.

  அடக்க விலை என்று பார்த்தால், காகிதம், அச்சிடும் விலை, அதை விற்பனை செய்பவர்களுக்கு கூலி, வெளியிடுபவர்களுக்கு ஒரு நியாயமான லாபம் . ஆனால், விலையோ, இவற்றையும் விட மிகவும் அதிகம்.

  இன்றைய தேதியில், சந்தையில் எவரை ஒரு புத்தகம் சென்றடையும் என்பதை மனதில் கொண்டு அவரது வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டே புத்தக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  புத்தகத்தின் கருத்துக்கள் யாரை சென்று அடைய வேண்டுமோ அவர்களின் வாங்கும் திறனுக்கும் புத்தக விலைக்கும் தொடர்பு இருப்பதில்லை. பெரும்பாலான புத்தகங்கள் அரசாங்கம் தமது நூலகங்களுக்காக வாங்குவர் என்ற எண்ணத்திலும் விலை நிர்னயிக்கப்படுகிறது.

  அண்மையில் நான் பிரின்ஸ்டன் யூனிவர்சிடி நூலகத்திற்கு சென்றேன்.
  அங்கு படிப்பதற்கு என்று இருப்பதைத் தவிர விற்பனைக்கும் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. சில புத்தகங்கள் அண்மையில் தான் வெளியானவை. அவை எல்லாமே அரை டாலர், ஒரு டாலர் என்று கிடைத்தன. புத்தக விலை 70 முதல் 100 டாலர் என்று போட்டு இருக்கிறது.

  எப்படி இது சாத்தியம் என்று கேட்டபோது அங்கு உள்ள நூலக அலுவலர் கொடுத்த விளக்கம் இதுவே:

  ஒரு புத்தகத்தை வாங்கி படித்தபின், அதை யார் படிக்கவேண்டும் என விரும்புகிறோமோ அவர்களுக்கு அதை கொடுக்க சமூகம் முன் வருகிறது. அவர்கள் அந்த விலை கொடுத்து வாங்க இயலாது என்பதால், அதை இலவசமாக முதலில் வாங்கியவர்கள் படித்தபின் தந்து விடு கிறார்கள், நூலகமும் விற்பனை செய்து அதனால் வரும் வருமானத்தை, படிக்க வரும் வாசகர்களின் நலனுக்காக செலவு செய்கிறது.

  பல பல வீடுகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் செல்லரித்து பொய் இருக்கின்றன. வாங்கியவர் மன நிலை அவர் தம் வாரிசுகளுக்கு இல்லை. அதனால், வாங்கிய புத்தகங்கள் பல பல நேரடியாக பழைய புத்தக விற்பனை நிலையங்களுக்கு செல்கின்றன. அங்கேயோ, அதன் அசல் விலையில் பாதி விலைக்குத்தான் இல்லை 75 விழுக்காடு விலைக்குத் தான் தருகிறார்கள். இந்த நிலை .
  மாறவேண்டும்.
  நண்பர் ஒருவர்
  வீட்டுக்கு செல்லும்போது பழங்கள், இனிப்புகள் வாங்கி செல்கிறோம். அந்த வீட்டு மக்கள் படிக்கவேண்டும் என்று நாம் நினைக்கும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக தர முடியுமா ?

  இந்த மன நிலை வருமா ??


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 7. இந்த விசயத்தில் வரைமுறைகளை அனுபவம் கற்றுக் கொடுத்து விடும்... ஆனால் அதற்கு விலை கொடுத்தே தீர வேண்டும்... ஹா... ஹா...

  ரஞ்சனி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. போன வருஷம் ஈரோடு புத்தக கண்காட்சியில் வாங்குன புக்ஸே இன்னும் படிச்சு முடிக்கல! :(

  ReplyDelete
 9. சென்ற முறை புத்தக கண்காட்சிக்கு மிஸ்ஸிங் ஆகிவிட்டது! இந்த முறை திங்களன்று வருவேன் என்று நினைக்கிறேன்! புத்தக விலையை நிர்ணயிப்பதில் பதிப்பகங்கள் சாதாரணர்களையும் மனதில் கொள்ள வேண்டும். சில புத்தகங்கள் அதன் விலையை நினைத்து நான் வாங்காமல் வந்து விட்டதும் உண்டு. பதிவர் திருவிழாவில் கூட அப்படி சில புத்தகங்களை வாங்காமல் விட்டுவிட்டேன்! அருமையான அலசல்! நன்றி!

  ReplyDelete
 10. நீங்கள் எழுதிய பதிவு என்னைபோன்ற வாசகர்களின் உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளிர்கள் எத்தனையோ பேர் புத்தக கண்காட்சியை பற்றி எழுதிஇருந்தாலும் நீங்கள் தான் சுற்றி காண்பித உணர்வு!! ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின் யாரும் அதனை எவ்வளவு தரமாக இருந் தாலும் திரும்பவும் வாசிபவர்கள் குறைவு எப்போது பதிப்பாளர்கள் மலிவு விலை பதிப்பை வெளியிடுவர்காளோ அன்று தான் அதிக எழுத்துகள் வாசகரை சென்று சேரும்

  ReplyDelete
 11. சென்னை புத்தக சந்தைக்கு ஒரு முறை கூட வர முடிவதில்லை! அடுத்த முறை முன் கூட்டியே இந்த நாட்களில் வரவேண்டும்..... பார்க்கலாம்....

  ReplyDelete
 12. வீட்டில் இருந்தபடியே புத்தக கண்காட்சியை ஒரு ரவுண்டு வந்தாச்சு .
  அரசன் சார் சாமியாராகி நீங்கள் எழுத்தாளர் ஆகும் காலத்தில்
  பாரதி பதிப்பகம் போல் ஒன்றில், தாங்கள் புதியவர் என்று யாராவது நினைத்து
  அறியாமல் தங்கள் எழுத்துக்களை படிக்கும் அறியவாய்ப்பை தவறவிட்டாது பயனடைவராக !!

  ReplyDelete
 13. செம ரைட்டிங்... நீங்கள் எழுதியதற்கு ஈடாக வேறு எவரும் எழுதிட முடியாது.... பல விஷயங்கள் நோட் பண்ணியிருக்கீங்க சீனு... சூப்பர்...

  ReplyDelete
 14. அப்புறம் அந்த போட்டோல வெள்ளை சட்டையும் கருப்பு பேன்ட்டும் போட்டு ஒருத்தர் நிக்கிறாரே, அவரு செம ஸ்மார்ட்....

  ReplyDelete
  Replies
  1. இங்க போட்டோ கமென்ட் இல்லையேன்னு வருத்தமா இருக்கு.. ;-)

   Delete
 15. தலைப்பு அருமை
  //செஸ் விளையாட கற்றுக்கொள்வது எப்படி?' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. அட அசிங்கம் புடிச்சவிங்களா இப்படி எல்லாமாடா தலைப்பு வைப்பீங்க என்றபடி மற்றொரு முறை அத்தலைப்பை வாசித்த போதுதான் உணர்ந்தேன் 'க்'கை சேர்த்து வாசித்தது என் தவறு என்று. //
  வயசு அப்படி.

  //எதிர்கால சாமியார் ஒருவரின் இடமும், அவரது உரையை எழுதப்போகும் எழுத்தாளனின் இடமும் இன்றளவிலும் வெற்றிடமாகவே உள்ளது. இதனை எண்ணியெண்ணி வெதும்பிய என் மனதில் கணப்பொழுதில் தோன்றியது அந்த எண்ணம், ஏன் தோழர் அரசனை சாமியாராக்கி அவரது அந்திநேர ஆனந்த உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடக்கூடாது என்று. இதன் மூலம் என் எழுத்தாளனாகும் கனவும் நனவாக வாய்ப்பு இருக்கிறது//
  கனவு நிறைவேற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. இலங்கையில் இந்தியப் புத்தகமொன்றின் விலை அதன் இந்திய விலையைப் போல் ஏறத்தாழ 4 மடங்கு.கடந்த 4 மாதங்களில் புத்தகங்களுக்காக கிட்டத்தட்ட 2500/= செலவழித்தாலும் வாங்க முடிந்ததென்னவோ 5 புத்தகங்கள் தான்.

  ReplyDelete