31 Oct 2013

தீபாவளி : பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டூ

அடுக்களையில் தொங்கும் குண்டு பல்பு வெளிச்சத்தில் விடியும் அந்த நாளுக்கும் சூரிய வெளிச்சத்தில் விடியும் மற்ற நாட்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு


தீபாவளி அன்று காலையில் மெல்ல முழிப்பு வரும்பொழுது சர்வமும் இருளாக இருக்கும், மெட்ராஸில் இருந்து வந்திருக்கும் அப்பா. அடுக்களையில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்பின் அடியில் அம்மிக்கல்லை உருட்டிக் கொண்டிருக்கும் பாட்டி. அதிகாலையிலேயே குளித்து முடித்து தலை காயவைக்கக் கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் அம்மா. இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு விறகடுப்பின் முன் வெந்து கொண்டிருக்கும் தாத்தா. இவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே இவ்வளவு மும்மரமாக செய்து கொண்டிருப்பது நிச்சயம் ப்ராஜெக்ட் பஜ்ஜி அல்லது ப்ராடெக்ட் பஜ்ஜியாகத் தான் இருக்கும். 

பஜ்ஜி சொஜ்ஜிக்களின் மணம் அந்த இடத்தையே நிறைத்திருந்தாலும் எங்கிருந்தோ கேட்கும் அந்த ஒற்றை யானை வெடிச்சத்தம் போதும் என் கைகால்களை பரபரக்கச் செய்யவும் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்கவும். எழுந்த வேகத்தில் அரங்கு வீட்டிற்குள் நுழைந்து எனக்கென பங்கு பிரிக்கப்பட்ட வெடிகளில் இருந்து ஒன்றை எடுத்து வெடியை வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோசமானது எல்லையில் பணிபுரியும் சதீஷ் அண்ணன் தனது எதிரியை வீழ்த்தும் போது அடையக் கூடிய சந்தோசத்திற்கு ஈடாகத் தான் இருக்கும்.  

தீபாவளிக்கு முந்தைய தினத்தில் இருந்து தீபாவளி தொடங்கும் வரையிலான அந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. சிறுவயது தொடங்கி நம்மை அதிகம் சந்தோசத்தில் ஆழ்த்திய, அதிகம் எதிர்பார்க்க வைத்த, அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்த ஒரு பண்டிகை உண்டென்றால் அது நிச்சயம் தீபாவளியாகத் தான் இருக்கும்.

நினைவு தெரிந்து முதன்முதலில் வெடிக்கப் பழகியது ரோல் கேப், ரோல் நிரப்பிய அந்த துப்பாக்கியை கையில் எடுத்தாலே அடுத்த ஒரு வாரத்திற்கு "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்" என்ற பாட்டு தான் நாலாபுறமும் கேட்கும். அந்த பாட்டு எபெக்டிலேயே கண்ணில் படும் அத்தனை தீவிரவாதிகளையும் ஆசை தீர சுட்டுத் தள்ளலாம். 

ரோல் வெடி தீர்ந்து போனால் பொட்டு வெடி, ஆனால் இருப்பதிலேயே கடியைக் கொடுக்கக் கூடியது என்னவோ இந்த பொட்டு வெடிதான், இதனை வெடிக்கவைக்க ஒரு கல் வேண்டும், மேலும் இந்த வெடியை மண்ணில் போட்டு லொட்டு லொட்டு என்று தட்டினால் வெடிக்கவே வெடிக்காது, அதற்கு ஏதுவான ஒரு சிமின்ட் தரையை தேட வேண்டும். சிமிண்ட் தரையே கிடைத்தாலும் ஒரே லொட்டில் வெடிக்க வைக்கும் திறமையெல்லாம் நமக்குக் கிடையாது என்பதால் பக்கத்து வீட்டு கிழவி கொட்டப்பாக்கை தட்டுவது போல் அதனுடன் சேர்ந்து போராட வேண்டும், அதே நேரம் பத்து பொட்டு வெடியை போட்டுத் தள்ளுவதற்குள் சிமெண்ட் தரையில் பாதி பெயர்ந்திருக்கும். சிமிண்ட் தரைக்கு சொந்தக்கார கிழவியும் நம்மைக் கண்டதும் சுட தயாராக காத்திருப்பாள்.

அடுத்தது யானை வெடி, சிகப்பு கலரில் கொஞ்சம் நோஞ்சான் போல் இருக்கும் அந்த வெடிக்கு எவன் யானை வெடி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. நெல்லை தவிர்த்து மற்ற ஊர்களில் அந்த வெடியை பிஜிலி வெடி என்பார்கள், பெயரா முக்கியம்? வெடி தான் முக்கியம். 

டவுசர் போட்ட பால்ய காலங்களில் நம்மை ஹீரோவாக்கும் ஒரே வெடி இந்த யானை வெடி தான். வெடியை கையில் வைத்து வெடிக்கப் பழகும் அத்தனை லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும் யனையார் தான் ஆபத்பாந்தவர். வெள்ளை நிறத்தில் நீண்டிருக்கும் யானையாரின் காதைத் திருகி அதன் வாலில் கங்கை வைத்த பின், பொறிபறக்க, வெடிக்க தொடங்கும் அந்த நொடியில் வானை நோக்கி வீசி எரிய வேண்டும், ஒரு வேலை நாம் தூக்கி எறிந்த வெடி வானில் வெடிக்காமல் தரையில் விழுந்து வெடித்தால் நமக்கு இன்னும் பயிற்சி சரியில்லை என்று அர்த்தம், ஒரு வேளை அந்த வெடி வானத்திலேயே வெடித்து, அந்நேரம் அக்காட்சியை நாம் நோக்கும் பிகர் நோக்கினால்  கன்பார்ம் லவ்வு என்று அர்த்தம், ஒருவேளை மேலே தூக்கி போட்ட வெடி பக்கத்து வீட்டு கிழவி மேல் விழுந்துத் தொலைத்தால் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.    

சமயங்களில் யானை வெடியை ஆல் இன் ஆல் அழகுராஜா போலவும் பயன்படுத்தாலம், யானையாரின் வயிற்றில் ஆபரேசன் செய்து, திரியைப் பற்ற வைத்தால் சங்குசக்கரம், ஆபரேசன் செய்யப்பட்ட அதே வெடியை முக்கோண வடிவில் தரையில் வைத்தால் புஸ்வானம், பலபிஜிலியை குஜிலியாக்கி பற்றவைத்தால் சரவெடி. இதுவே தத்துவார்த்தமான பதிவு என்றால் சரவெடியை சுறுசுறுப்புடன் ஒப்பிடலாம், பாருங்கள் சரவெடி எவ்வளவு சுறுசுறுப்பானது என்று,வாழ்கையை சரவெடியைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பீட்டர் விடலாம். 

நெக்ஸ்ட் லஷ்மி வெடி, என்ன கொஞ்சம் முன்கோபி, பற்றவைத்த வேகத்தில் கோபம் தலைக்கேறிவிடும், கைநடுக்கம் தொடைநடுக்கம் இருப்பவர்கள் அனைவரும் கொஞ்சம் அந்தாண்ட நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டிய வெடி. இந்த வெடி வெடிப்பதில் இருக்கும் ஒரு சுவாரசியம் மற்ற வெடிகளில் கொஞ்சம் குறைவு தான். லக்ஷ்மியாரின் வாகனம் குருவி வெடி, யானைக்கு சீனியர், லக்ஷ்மிக்கு ஜூனியர், கொஞ்சம் நடுத்தரம். நடுத்தரம் என்றாலே பிரச்சனை தானே.

வெடி வகையறாக்களில் ட்விஸ்ட் கொடுப்பவரே இந்த டபுள் ஷாட் தான், எப்போது கவிழ்ந்து எவன் காலில் சென்று வெடிக்குமோ என்று கடைசி நிமிடம் வரை நம்மை  நகம் கடிக்க வைக்கக் கூடிய அத்தனை தகுதிகளையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் இவர் ஒருவர் தான். அமெரிக்க மாப்பிள்ளைகள் போல் சில வெடிகள் உண்டு, பட்டர்பிளை வெடி, பறக்கும் பாம்பு வெடி, ரயில் வெடி, விசில் வெடி என்று ஆனால் பாவம் இவர்கள் எல்லாரும் கடைசி வரை அமெரிக்க மாப்பிள்ளைகளாகவே இருக்க வேண்டியது தான்.          

இவர்களைத் தொடர்ந்து வருபவர் தான் நம் ஹீரோ. மிஸ்டர் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க சரியான நேரம் எது என்று கேட்டால் அது மதியம் மூன்று மணி தான் என்பேன், எல்லாரும் நிம்மதியாக தூங்கத் தொடங்கி இருக்கும் அந்த சொப்பன நேரத்தில் தான் நாம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். அத்தனை கதவுகளும் கண நேரத்தில் திறக்கப்பட்டு "ஏம்ல உசுர வாங்குறீங்க, நிம்மதியா தூங்க விடுங்கல" என்று அவர்கள் கதற வேண்டும் அவ்வளவு பவர்புல் பாம் தான் நம் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க வைப்பது என்பது பொக்ரானில் அணுகுண்டு போடுவது போல சவாலான ஒன்று, தெருவில் வரும் சைக்கிள், பைக், தொடங்கி அந்த இடத்தைக் கிராஸ் செய்யும் பிகர் மொத்தக் கொண்டு நிறுத்தி வைத்து விடவேண்டும். இந்நேரம் நம் சகாக்கள்  மறித்து நிற்பார்கள், ஒருவரையும் எல்லைக்குள் அனுமதித்து விடக் கூடாது.


சிலருக்கு பொறுமை இருக்காது,தைரியமாக பற்றவைத்த அணுகுண்டை கடக்க முயற்சி செய்வார்கள்,  கடந்துவிட்டால் நம் மதிப்பு என்னவாவது இல்லை நாம் வைத்த அணுகுண்டுக்கு தான் என்ன மதிப்பு. "அண்ணே வெடிச்சிரும், நீங்க போம்போது வெடிச்சிருச்சுனா எங்கள சொல்லக் கூடாது" என்று மிரட்ட வேண்டும், அதேநேரம் ஒதுங்கி நிற்கும் கூட்டத்தில் பிகர் ஏதும் நின்றால் "மாப்ள பாத்துடா, அணுகுண்டு டா வெடிச்சிரப் போகுதுடா" என்று உசுபெத்த வேண்டும். இருந்தும் பல நேரங்களில் இந்த அணுகுண்டானது மெகாபட்ஜெட் ஹீரோ போன்றது எப்போது சொதப்பும் என்றே தெரியாது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் நிறுத்திவைத்திருக்கும் நேரம், சிலபல பிகர்கள் குண்டையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும், ஆனால் இந்நேரம் நம் பவர்புல் ஸ்டாரோ பவர் ஸ்டாராகி புஸ் ஆகியிருப்பார். அணுகுண்டு வைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் அது வெடிக்கவில்லை என்றால் அவன் மானம் கப்பலேறும் என்று கற்றது தமிழ் ராம் போல் கவிதை எழுத வேண்டியது தான். 

ராத்திரி நேர டப்பாசுகள். நாம் வாங்கி வந்த வரத்தின் அடிப்படையில் நமக்கு வாய்ப்பது என்னவோ ஒரு புஸ்வானம் டப்பா, ஒரு சங்கு சக்கரம் டப்பா, ஒரு சூரிய காந்தி அட்டை இவ்வளவு தான், இதை எல்லாம் போட்டு தீர்த்துவிட்டு, எவனாவது வானவேடிக்கை காட்டுவான் அதைப்பார்த்துக் கொண்டே கம்யுனிசம் பேசவேண்டியது தான்.

வெடி அத்தனையும் தீர்ந்து போனபின் சோம்பி உட்கார்ந்து விடக்கூடாது, பின் எதற்காக புது டிரெஸ் எடுத்துள்ளோம், நாம் நோக்கும் பிகர்கள் இருக்கும் தெருக்களில் எல்லாம் வலம் வந்து கொண்டே இருபதற்காகத்தானே, நமது வீதிவுலாவை உடனடியாகத் தொடங்கிவிட வேண்டும். அவள் பார்க்கிராளா இல்லையா என்பது வேறுவிசயம், அவளைப் பார்க்கப் போகும் சாக்கில் வேறு எவளாவது நம்மைப் பார்த்து நாமும் அவளைப் பார்த்து, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பாஸ்.    

வெடி புத்தாடை பலகாரம் விடுமுறை மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என்று மிக உற்சாகமாகக் கழியும் அந்த ஒருநாள் எப்போதுமே கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான நாளாகத் தான் இருக்கும். 


சென்னை வந்தபின்பு தீபாவளி என்பது நாளை மற்றொரு நாளே என்பது போலாகிவிட்டது. உறவினர்கள் இல்லை, உற்சாகம் இல்லை, வெடி இல்லை, முக்கியமாக எனது நண்பர்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்குப் பின் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக... இப்போது என்னுள் இருக்கும் இந்த தீபாவளி மனநிலையைக் கூட எப்படி விவரிப்பது என்று தெரியாத ஒருவித தீபாவளி மனநிலையில் தான் நானும் உள்ளேன் காரணம் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக...   

23 Oct 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 23/10/2013

ஒரு தமிழ் ஆராய்ச்சி 

தமிழில் நாம் ஒன்பது என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒன்பது இருக்க வேண்டிய இடத்தில் முறையாக இருக்க வேண்டிய வார்த்தை தொண்டு, அதாவது 

தொண்டு = 9
தொண்டு + பத்து = ஒன்பது 
தொண்டு + நூறு = தொண்ணூறு 
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் 
தொண்டு + பத்தாயிரம் = ஒன்பதாயிரம் (ஒன்பது + பத்தாயிரம்)

கடந்த முறை தென்காசி சென்றிருந்த போது குமார்தான் இதுகுறித்துப் பேசினான். மேலும் இந்த தகவலை தென்காசி நூலகத்தில் இருந்த ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தாகவும்  முடிந்தால் அதனை பிரதி எடுத்து அனுப்புவதாகவும் கூறியுள்ளான், பார்க்கலாம்.  
    
ஏன் அவசரம் என்ன அவசரம்.......

ராஜாராணி திரைப்படம் பார்பதற்காக நான், வாத்தியார், ஆவி, ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் ஐனாக்ஸ் சென்றிருந்த நேரம், படம் ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் முன் ஆவியிடம் "பாஸ் ரெஸ்ட் ரூம் போயிட்டு போயிறலாம்" என்றேன். இருவரும் நுழைந்தோம்.

யாரோ ஒரு புண்ணியவான் இயற்கை அழைப்பை ஏற்றுவந்த இடத்தில் பொழுதுபோகாமால் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அவனிருந்த கதவினுள் இருந்து மெல்லிய சங்கீதம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்படி அவன் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாடலைக் கேட்டதும் ஆவியே தலையிலடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

அந்த புண்ணியவான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் 

"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...?
ஏன் அவசரம் என்ன அவசரம்......."  

நமக்கு மட்டும் ஏன் ஆவி பாஸ் இப்படியெல்லாம் நடக்குது ....!

மதுரை ஆட்டோகாரயிங்க 

வைகையைவிட்டு இறங்கி மாட்டுத்தாவணி செல்வதற்காக நானும் அண்ணனும் மதுரை ரயில் நிலையத்தின் வெளியே பேருந்திற்காக கொண்டிருந்தோம். இரவு மணி பத்தைக் கடந்திருந்தது, மதுரையில் இருந்து தென்காசி செல்வதற்கு இரவு முழுவதும் பேருந்து உண்டு என்பதால் மாநகரப் பேருந்து வரும் வரை  காத்திருப்பது என்று முடிவு செய்து காத்திருந்தோம், ஆனால் பேருந்தோ வந்தபாடில்லை, இந்நேரத்தில் தான் மதுரை ஆட்டோ ஓட்டுனர்களின் அராஜகத்தைக் காண முடிந்தது.

நெல்லையைப் பொறுத்தவரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் கொஞ்சம் துடுக்காக பேசுவார்கள். வாய் கொஞ்சம் ஜாஸ்த்தி, சென்னையைப் பொறுத்தவரையில் மதிக்க மாட்டார்களே தவிர அதிகம் பேச மாட்டார்கள், ஆனால் மதுரையில் நிலைமை கொஞ்சம் வேறுவிதமாக இருந்தது.

பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டிருந்தனர், வரமுடியாது என்றவர்களை பார்வையாலேயே மிரட்டியும், தங்களுக்குள்ளாகவே அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருந்தனர். ஒருவர் இரண்டுபேர் இல்லை அன்றைய இரவில் நாங்கள் பார்த்த அத்தனை ஆட்டோ ஓட்டுனர்களும் இப்படித்தான் இருந்தார்கள்.

தமிழகத்தின் ஒரு முக்கியமான, மிக முக்கியமான மாநகரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வாறு நடந்துகொள்வது உண்மையில் வருத்தமளிக்கக் கூடிய விஷயம். 

ஒசக்கா ஒசக்கா 

கடந்த வாரம் நைட்ஷிப்ட் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு ஓரத்தில் இருந்து மூன்று பெண்களின் பேச்சுக் குரல் கேட்டது, சமீபத்தில் வெளியாகியிருந்த வணக்கம் சென்னை திரைப்படத்தில் வரும் ஒசக்கா ஒசக்கா பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர், அதாவது அந்தப் பாடலில் ஒரு வரியில் "எகன மொகன பாக்காம" என்ற ஒரு வரி வரும், அதைப் பற்றி தான் அவர்களது பேச்சும் இருந்தது.

"ஏய் கன மொகன னா என்னடி" முதலாமவள். 

"ஒசக்கானா என்னடி " இரண்டாமவள். 

"ஒசக்கானா....ம்ம்ம்ம் தெரியலையே..."

"தெரியலையா... இல்ல ஒசக்காக்கு மீனிங் இல்லையா..."

"MAY BEE"

"அதே மாதிரி தாண்டி கன மொகனயும்... அதுக்கும் மீனிங் கிடையாது"        

நல்லவேளையாக இப்போது மூன்றாமவள் பேசத் தொடங்கினாள் 

"ஹே அப்படி இல்லடி, கன மொகனனா எதுகை மோனைன்னு அர்த்தம். இது தமிழ்ல ஒரு டெர்ம்" என்றபடி அதுகுறித்து விளக்கம் கொடுத்தாள். 

மனம் நிம்மதியானது. தமிழ் வாழ்ந்த்ரும்டா கொமாரு வாழ்ந்த்ரும்... நீ கவலபடாத.

இரு பதிவுகள் ஜஸ்ட் கிளிக் - யாரென்று தெரிகிறதா 

பரங்கிமலையில் வைத்து வாத்தியாரை ஜஸ்ட் கிளிக்கியது அடியேன் தான். 
என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்...சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்...

21 Oct 2013

ஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை

நான் படித்தது மிகவும் ஸ்ட்ரிக்டான கிறிஸ்துவப் பள்ளி, அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், (பிளாஸ்பேக் எழுத ஆரம்பிக்கும் பொழுது அப்போது என்ற வார்த்தையை துணைக்கு அழைக்கையில் பிளாஸ்பேக்குடன் ஒரு மெல்லிய ஹாஸ்யமும் வந்து சேர்ந்து கொள்வதை தவிர்க்க இயலாது போகிறது)

சரி சம்பவத்திற்கு வருகிறேன். பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த காலையில் புத்தகக் கூடைக்குள் ஒளித்து வைக்கப்ட்டிருந்த ரேங்க் அட்டையை அம்மா கண்டுபிடித்தது தான் அன்றைய தினத்தின் முதல் அதிர்ச்சி (இது எனக்கு) , கண்டுபிடிக்கபட்ட ரேங்க் அட்டையில் அம்மாவின் கையெழுத்து போடப்பட்டிருந்தது இரண்டாம் அதிர்ச்சி (இது என் அம்மாவுக்கு).

இனி வரப் போவது தான் மூன்றாம் அதிர்ச்சி.

முதல் அதிர்ச்சியை தங்க முடியாத அதிர்ச்சியில் நானும், இரண்டாம் அதிர்ச்சியை தாங்க முடியாத அதிர்ச்சியில் அம்மாவும் நின்று கொண்டிருந்தோம், இதற்குப் பின்னான நிகழ்வுகளில் சேதாரம் எனக்கு மட்டுமே 'சும்மா ஒரு மணி நேரத்துக்கு அந்த பைட் கண்டின்யு ஆனது'. 'அண்ணனப் பாரு, குமாராப் பாரு, அவனப் பாரு இவனப் பாரு' என்ற வகையில் அடுத்த அரைமணி நேரத்திற்கு அட்வைஸ். 

என்ன இருந்தாலும் பெத்த மனம் இல்லையா, சிறிது நேரத்தில் அம்மா சகஜ நிலைக்குத் திரும்ப, மீண்டும் என்னை பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தத் தொடங்கினார். 'இனி இப்படி எல்லாம் பண்ண கூடாது. நல்ல புள்ளையா படிக்கணும்' என்றபடி என்னைக் கொஞ்சி கொண்டே பள்ளிக்கு அழைத்துச் செல்கையில் மணி பத்தைக் கடந்திருந்தது. 

பள்ளியின் வழக்கப்படி 8.30 மணிக்கு பள்ளியினுள் இருக்க வேண்டும் மீறினால் எங்க ஸ்கூல் ரொம்ப ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு... எனக்கு வாய்த்த கிளாஸ் டீச்சரோ அதைவிட ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு... 

"அண்ணனப் பாரு எவ்ளோ நல்ல புள்ளையா இருக்கான், நீ மட்டும் ஏம்ல இவ்ளோ சேட்ட பண்ற" என்றபடி அம்மா புலம்பிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார், என்ன நடக்குமோ என்பதை எண்ணி, என்னை விட அம்மாவுக்கு தான் டீச்சர் மீது அதிகமான பயம் வந்திருந்தது. 

"டீச்சர் கேட்டா என்ன சொல்ல, எதுக்கு லேட்ன்னு கேப்பாங்க, ஏதாது ஐடியா கொடு"  நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்ற கவலை அவருக்கு அதிகமாகி இருந்தது.  

"அம்மா எனக்கு காச்சல்ன்னு சொல்லுங்க, நா மூஞ்ச உம்ம்ன்னு வச்சிக்றேன், தப்பிச்சிரலாம்" என்றேன் அப்பாவியாக.

அதை கேட்டு என் கழுத்தைத் தொட்டுப் பார்த்தவிட்டு, அப்படி ஒன்னும் காய்ச்சல் இல்ல, அப்புறம் பொய் சொன்னது தெரிஞ்சா இதுக்குவேற அடிப்பாங்க, பேசாம உண்மைய சொல்லிருவோமா...?"

"ம்ம்மா, அதுக்கும் அடிப்பாங்க ம்மா" என்றேன் உடைந்த குரலுடன். 

"ஆமா இந்த அறிவு கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி இருந்து இருக்கணும், டீச்சர் மட்டும் நீ பண்ணின காரியத்த கண்டு பிடிச்சாங்க டிஸி தான். நல்ல மாட்டுன போ, அடி வாங்கு, நீ பண்ணுன காரியத்துக்கு உனக்கு நல்லா வேணும்"     

இருந்தாலும் இப்போது என்னைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் அம்மா, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். நான் அடிவாங்க வேண்டும் என்பது அம்மாவின் எண்ணம் இல்லை, குறைந்தபட்சம் அம்மா முன்னிலையில் நான் அடிவாங்கக் கூடாது என்பது தான் அம்மாவின் எண்ணமாக இருந்தது.

3A, இது தான் எனது வகுப்பறை. வகுப்பில் எனது இடம் மட்டும் வெறுமையாய் இருந்தது. வகுப்பறையின் வாசலில் என்னைக் கண்டதும் மாணவர்களிடையே மெல்லிய சலசலப்பு.  என்னை அப்பாவியாய்ப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள் எனது நண்பர்கள், காரணம் தாமதமாக வகுபிற்கு வரும் மாணவனின் நிலை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். அங்கே என்ன நடக்கப் போகிறது மேலும் எனக்கு எத்தனை அடிவிழப் போகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். 

"டீச்சர்" என்றேன்.

மூக்கின் மேல் இருந்த கண்ணாடிக்கும், கண்ணுக்கும் இடையே இருந்த இடைவெளி வழியே என்னைப் பார்த்துவிட்டு மெல்ல என் அருகே வந்தார்.

"டீச்சர்" என்று ஆரம்பித்த என் அம்மாவை இடைமறித்து "நீ சொல்லுடே உனக்கு என்னவாம், ஏன் லேட்டு, தூங்கிட்டியா, இல்ல வீட்டு பாடம் எழுதலையா, படவா, எலேய் அந்த டேபிள் மேல இருக்க ஸ்கேல எடுல"

இதெல்லாம் வழக்கமான பழகிப் போன நிகழ்வுகள் தான் என்பதால் நான் சாதரணமாக, மிகவும் சாதாரணமாக இருந்தேன், பாவம் அம்மாவின் கண்கள் தான் கலங்கிவிட்டன. இப்போது டீச்சரின் கைக்கு ஸ்கேல் வந்திருந்தது. எனக்கு அடிவிழப் போகும் அந்த நொடியைக் காண ஒட்டுமொத்த வகுப்பும் ஆவலுடன் காத்திருந்தது. ஸ்லோமோசனில் டீச்சரின் கையிலிருந்த அந்த ஸ்கேல் என்னை நோக்கி வருவது தெரிந்தது, என் மீது அது படத் தயாரான போது "டீச்சர்" என்றேன், துல்லியமான டைமிங் அடிவிழுமுன் நிறுத்திவிட்டார். ஓங்கிய கையைத் தளர்த்திவிட்டு "என்னல" என்றார்.

"டீச்சர் எனக்குக் காச்சல், டாக்டர்ட போனோம் அவரு வரல அதான் பள்ளிகூடத்துக்கு வர நேரமாயிருச்சு"

சட்டென்று ஸ்கேலை மறு கைக்கு மாற்றிவிட்டு கையைத் தொட்டு பார்த்தார், கழுத்தைத் தொட்டு பார்த்தார், சட்டையைக் கழற்றச் சொல்லி முதுகைத் தொட்டுப் பார்த்தார்.

இந்நேரத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாய் பயந்து போன எனது அம்மா "டீச்சர் அவனுக்கு லேசான காச்சல் தான், அவன உள்ள அனுப்புங்க" என்றார் பயத்துடன். 

இதைக் கேட்டதும் டீச்சரின் முகம் சட்டென கோபத்தில் சிவந்தது 

"புள்ளையா வளக்க புள்ள, மேல பாரு எப்படி தீயா கொதிக்குனு, மொதல்ல அவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போ, பாடம்லா எங்கையும் போயிராது... வீட்டுக்கு போல, நாளைக்கு வரலாம் பள்ளியோடதுக்கு" என்றபடி என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

இது தான் மூன்றாவது அதிர்ச்சி... எனக்கும் அம்மாவுக்குமாய்ச் சேர்த்து. அதிர்ச்சியில் என்னைக் கூட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.    

இந்நேரம் எனது மூளை கொஞ்சம் வேறுவிதமாக சிந்தித்து, சட்டென எனது புத்தகக் கூடையை நோண்ட ஆரம்பித்தேன், அந்த நிமிடம் நான் செய்கிறேன் என்று அம்மாவுக்கும் டீச்சருக்கும் புரியவில்லை. புத்தகப்பையில் இருந்து நிமிர்ந்த வேகத்தில் என் கையில் இருந்த ரேங்க் கார்டை டீச்சரின் முகத்தின் நேரே நீட்டி "ரேங்க் கார்ட்" என்றேன். 

அம்மாவின் முகத்தில் ஈயாடவில்லை. டீச்சரோ அதை வாங்கிப் பார்த்துவிட்டு "பையன நல்ல வளத்த்ருக்கம்மா, பையன் நல்லா வருவான். வீட்டுக்கு கூட்டிப் போ" என்றபடி தன்னிடமிருந்த சாக்லேட்டை என்னிடம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.

இந்த நொடியில் என்னைப் பற்றிய எனது அம்மாவின் மனநிலையை சிறிது எண்ணிப் பார்த்தேன், யாரையாவது திட்ட வேண்டுமென்றால் ராகவன் இதை அடிக்கடி சொல்வான் "சனியன் இதெல்லாம் எங்க திருந்தவாப் போகுது"    

13 Oct 2013

ரயிலோடும் பாதை

வைகை அதிவிரைவு வண்டி மதுரையை நோக்கி உற்சாகத்துடன் தடதடத்துக் கொண்டிருந்தது. 

வானம் ஒரு அவசரமான கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை நிதானமாகத் தொடங்கியிருந்ததுமின்னலும், மின்னலைத் தொடர்ந்த இடியும், இடியும் இடியைத் தொடர்ந்த மின்னலுமாக வானில் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் ஒத்திகையும் அரங்கேற்ற இவர்களோடு சேர்ந்துகொண்டு காற்றும் தன் அங்கம் முழுமையையும் மண்வாசனையால் நிரப்பிக் கொண்டு பவனி வரத் தொடங்கியிருந்ததுகார்மேகங்கள் பலவந்தமாக ஆதவனை அந்தபுரத்திற்கு அனுப்ப முயன்று தோற்க, வானமோ மந்தகாசமாக இருட்டத் தொடங்கியிருந்தது. மேகங்களின் பலவந்தம் ஆதவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். காற்று, கார்மேகம், மழை, மலை, இடி, மின்னல் என தனது அத்தனை நண்பர்களும் ஒன்று கூடியிருக்க, தன்னை மட்டும் "வீட்டிற்குப் போ"  என்றால் அதனால் எப்படிப் போக முடியும். யாரும் தன்னைப் பார்த்திரா வண்ணம் மிகத் தந்திரமாக ஒரு மழை மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வீட்டிற்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. 

முழுச் சூரியனை மேகத்திற்குள் அடைக்க முடியாது என்பதை அந்த அப்பாவி ஆதவனிடம் எடுத்தியம்ப யாருக்கும் தெம்பில்லை, தடுத்து நிறுத்த யாருக்கும் நேரமுமில்லை. இந்நேரம் ஆதவனின் கோபம் தலைகேறியிருக்க வேண்டும். தான் ஒளிந்து கொண்டிருந்த கரிய மேகத்தினூடாகக் தன்னுடைய செங்கதிர்களால் கவிதை எழுதத் தொடங்கிவிட்டான் அந்த அப்பாவி ஆதவன். அவனது அழகிய கவிதை அங்கிருந்த யாரை மயக்கியதோ இல்லையோ நிச்சயம் பூமாதேவியை மயக்கி இருக்க வேண்டும், ஒருநிமிடம் தன் சுழற்சியை நிறுத்தி அந்தக் கவிதையின் அழகை ரசித்துப் பின் சுழலத் தொடங்கினாள்.    

காணற்கரிய இந்த அற்புதக் காட்சியை மட்டும் ஒரு கவிஞன் கண்டு ரசித்திருந்தால் தமிழுக்கோர் புதுக்கவிதை கிடைத்திருக்கும், ஒருவேளை இந்த அழகியலின் தரிசனத்தில் ஒரு ஓவியன் மயங்கி இருந்தால் உலகின் மிகச் சிறந்த ஓவியம் உதயமாகியிருக்கும், ஏதாவது ஒரு புகைப்படக்கண் இக்கண்கொள்ளாக் காட்சியைக் நோக்கிக் கண்சிமிட்டியிருந்தால் கூட அற்புதமான ஒரு புகைப்படம் ஒளிர்ந்திருக்கும். விதி வலியது. பாவம் அதனால் தானோ என்னவோ இவ்வளவு அற்புதமான காட்சி ஒரு மழைநேர மாலைப் பொழுதில் என் கண்ணில்பட்டு அவதிப்படுகின்றது.

யிலின் வாசலில் நின்று கொண்டே வானில் நிகழ்ந்து கொண்டிருந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன். என்றாவது ஒருநாள் இரயிலின் வாசலில் அமர்ந்து கொண்டோ அல்லது அதன் அருகாமையில் நின்று கொண்டோ பயணித்துள்ளீர்களா...? அது ஒரு அற்புதமான அனுபவம். கொஞ்சம் திகில் நிறைந்த அனுபவம் போல் தோன்றினாலும், பயப்படும்படியான மிகப்பெரிய ஆபத்தொன்றும் இல்லை என்று நினைக்கிறன். ஆபத்தென்றால் இந்த வரியோடு விலகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் நாங்கள் தீயைத் தீண்டுபர்கள், சூரியனுக்கே நெடுஞ்சாலையமைப்பவர்கள். சுனாமியில் ஸ்வ்மிங் போட பயிற்சி பெறுபவர்கள்..       

வைகை அதிவேக விரைவு வண்டி என்பதால் அதன் மொத்த வேகத்தையும் என்னுள் உணர்ந்து கொண்டிருந்தேன். இரயில்ப் பெட்டியின் வாயிலில் இருந்த அந்த இரு கம்பிகளையும் பிடித்துக் கொண்டே என்னை மெல்ல ரயிலிலிருந்து வெளிக்கொணர்ந்தேன். மழைமேகங்களால் காற்று மென்மையாயிருந்தது. எவ்வளவு மென்மை என்றால் ஒருபெரிய இலவம் பஞ்சு மூடையை உங்கள்மீது கட்டவிழ்த்துவிட்டால் அதன் மென்மையை எத்தனை சுகமாய் உணர்வீர்களோ அப்படித்தான் இருந்தது எனக்கு. இந்நேரம் காற்றுடன் மழைத்துளிகளும் சேர்நதுகொண்டிருந்தன. ரயிலின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது, என்னுள் இருந்து என்னை இயக்குபவன் திடிரென்று என்னிலிருந்து தன்னை விடுத்துக்கொண்டான். நகரும் தண்டவாளங்களின் மீது துள்ளிக் குதித்து விளையாடத் தொடங்கியவன், ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்தான்.

சுற்றிலும் பந்த வெட்டவெளி, நிறைந்து வழிந்து கொண்டிருந்த மவுனம். அதனை மவுனம் என்று சொல்வதை விட நிசப்தம் எனலாம். ரயிலோடும் சப்தம் கூட தேர்ந்தெடுக்கபட்ட ஒரு சிறந்த இசைக்கலைஞனின் வாத்தியத்தில் இருந்து வெளிப்படும் இசையைப் போல் உணர்ந்தேன்.   


ரியங்காவில் இருந்து தென்காசி திரும்பிக் கொண்டிருந்த கொல்லம் மெயிலில் தான் முதன்முறையாக ரயில்ப்படிகளில் அமர்ந்து பயணித்ததாக நியாபகம், சற்றும் எதிர்பாராதா ஒரு தருணத்தில் என் முதுகில் சுளீர் என்று ஒரு அறை விழுந்தது, கண்களில் நீர் தளும்ப மெல்லத் திரும்பினேன், அம்மாவின் கண்கள் என்னை மிரட்டிக் கொண்டிருந்தன, சத்தமில்லாமல் மக்களோடு மக்களாக சென்று அமர்ந்து கொண்டேன். நல்லவேளையாக இந்தப் பயணத்தில் என்னோடு அண்ணன் மட்டும் தான் பயணிக்கிறான், அவனும் உள்ளே இரா.முருகனின் மூன்று விரல் படித்துக்கொண்டுள்ளான். நானும் ஜேஜேயின் சில குறிப்புகளைத் தான் வாசித்துக் கொண்டிருந்தேன், இருந்தாலும் காற்றில் பரவிய மண்வாசனை என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது.                         

ழையின் வேகம் கொஞ்சம் அதிகமாகியிருந்தது. ரயிலோடும் பாதையை முழுவதாய் இருள் ஆக்கிரமித்திருந்தது. காற்றின் தன்மை மட்டும் மாறவேயில்லை, என் மீது பஞ்சை வாரியிறைத்துக் கொண்டேவந்தது. ஆகாசத்தில் அவ்வப்போது வெட்டிச் செல்லும் மின்னல் மனதினுள் ஏதோ ஒரு ரம்யமான உணர்வைக் கொண்டுதுக் கொண்டிருந்தது. ஆற்றுப்பாலத்தின் மீது பெருஞ்சத்ததுடன் ரயில் தடதடக்கும் ஓசை என்னை எனது ஐந்தாம் வகுப்பிற்கு இழுத்துச் செல்கிறது. ஐந்தாம் வகுப்பில் ஒரு உணவு இடைவேளையில் முதல்முறை அதேபோன்ற ஒரு பெரிய ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றபோது பாதி பாலத்தைக் கடந்த நேரம் எங்களோடு நடந்து கொண்டிருந்தவன் கதறி அழத் தொடங்கிவிட்டான், பின்னர் உயரத்தைப் பார்த்து பயந்து அழுகிறான் என்பதை அறிந்து கொண்டு அவனின் கண்களை கைகளால் பொத்திக் கொண்டே பாலத்தைக் கடக்கச் செய்தோம்.

தாமிரபரணியின் மீது உயர எழும்பி இருக்கும் கல்லிடைக்குறிச்சி ஆத்துப்பாலத்தின் மீது நடக்கும் பொழுது, பாதி பாலத்தைக்  கடந்த நிலையில் ரயில் வர, அங்கிருந்த ஒரு சிமெண்ட் சிலாப் மீது ஏறிக்கொண்டோம். அதன் மீது ஏறிய பின்பு தான் தெரிந்தது அந்த சிலாப் இப்பவோ அப்பவோ என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்ததை, ரயிலின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ரயிலுடன் சேர்ந்து சிமெண்ட் சிலாப்பும் தடதடக்க எங்கள் இதயம் காதுக்கு மிக அருகில் துடித்துக் கொண்டிருந்தது. எங்கள் காலுக்கு கீழே நூறடி பள்ளம்  எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. இதுபோல் மறக்கவே முடியா நினைவலைகள் என்னுள் மோதிக்கொண்டிருந்தன. நிஜம்தான். ஒரே ஒரு ரயில்ப்பயணம் போதும், வற்றிப்போன கற்பனைகளை மீட்டெடுக்கும் ஜீவவூற்றாக மாற்றுவதற்கு. 

யிலானது ஒரு நேரான பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் என்னை இழுத்துக் கொண்டிருந்த பெட்டிகளையும், எனக்குப் பின்னால் இழுபட்டுக் கொண்டிருந்த பெட்டிகளையும் பார்க்க முடியவில்லை. ரயில் பயணத்தில் ரசிக்கத் தகுந்த மற்றொரு விஷயம் உண்டென்றால் அது வளைவான பாதையில் ஓடும் ரயிலின் அழகு தான். அப்படி ஒரு சந்தற்பத்திற்காகத் தான் காத்துக்கொண்டிருந்தேன். ரயிலோடும் பாதையும் என்னை நெடுநேரம் காக்க வைத்துவிடவில்லை. ஒரு மிகபெரிய வளைவில் ரயில் தன்னை திருப்பத் தொடங்கியிருந்தது. இஞ்சின் ரயிலை லாவகமாக இழுத்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் அந்த அழகியக்காட்சி இந்த வரிக்கு உரமேற்றிக்கொண்டிருந்தது. அதற்கு இணையான வேகத்தில் கடைசிப் பெட்டியும் இன்ஜினைப் போட்டிபோட்டுத் துரத்திக் கொண்டிருந்தது. இன்ஜின் அழகா? இல்லை இன்ஜினைத் துரத்தும் கடைசிப்பெட்டி அழகா என்றால், அடர்ந்த இருளில் தனக்கு முன்னால் வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டு மிக உற்சாகமாக எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கும் அந்த இஞ்சின் தான் அழகு என்பேன். இஞ்சின் மறையும் பொழுது பாம்பாட்டியின் மகுடிக்குக் கட்டுப்பட்டது போல தனது எசமானனின் ஆணைக்கு கட்டுப்படும் கடைசிப்பெட்டி கொள்ளை அழகு.

ற்றொரு மிகபெரிய ஒரு வளைவில் ரயில் திரும்பிய பொழுது தான் அதன் உடலை மொத்தமாய்க் கவனித்தேன், அத்தனை பெட்டியிலும் மின்விளக்குகள் வெள்ளை வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன, அந்த வெளிச்சத்தின் மிச்சம் ஜன்னல் வழியாக வழிந்து கொண்டிருந்தது. வேகமாக தடதடக்கும் ரயில், மெல்லிய காற்று, காற்று சுமந்து வரும் மழைத்துளிகள், எதிர்பாராநேரம் வெட்டிச் செல்லும் மின்னல் கீற்றுகள், இந்தக் காட்சியை மிகச் சரியாக வர்ணிக்க வேண்டுமென்றால்அதனை வர்ணிக்க எனக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தான் தேவைப்படுகிறான். இது நிச்சயம் ஹோம்ஸ் பயணிக்க வேண்டிய பயணம் அல்லது ஹோம்ஸுடன் பயணிக்க வேண்டிய பயணம். இது போன்ற இருள் நிறைந்த, மழை நிறைந்த, மின்னல் நிறைந்த பயணங்கள் தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இந்நேரம் இந்த ரயிலில் ஹோம்ஸ் இல்லையே என்பது தான் எனது பெருங்கவலையாக இருந்தது. 

துவரை நான் அறிந்திராத குக்கிராமங்கள் அனைத்தும் ரயில்நிலையமாகிக் கடந்து கொண்டிருந்தன. லால்குடி தாண்டிய சிலநிமிடங்களில் ரங்கநாதரும் அதிலிருந்து சிலநிமிடங்களில் உச்சிப் பிள்ளையாரும் அந்த இருளின் மௌனத்தில் நனைந்து கொண்டிருந்தார்கள். திடிரென்று தோன்றிய ஒரு தொழிற்சாலையின் கொண்டை விளக்கு நெடுந்தூரத்திற்கு என்னிடம் கதை சொல்லிக் கொண்டே வந்தது.  

ழைத்தூறல்கள் பெருமழையாகிப் போனபோது தான் உணர்ந்தேன் ஒட்டுமொத்த ரயிலும் தன்னை அடைத்துக்கொண்டு குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்ததை, காவி வேஷ்டி கட்டியிருந்த அந்த தாத்தா என்னைப் பார்த்து புன்முறுவலுடன் சிரித்தார், அவரது சிரிப்பில் குளிரின் நடுக்கம் இருந்தது. மெல்ல என் அருகில் வந்தவர், "ரொம்ப நேரமா நின்னுட்டே வாறீங்களே, கொஞ்ச நேரம் உக்கார்றது, தாத்தாக்கு குளிருது கொஞ்சம் கதவ அடைக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டார். அவருக்குத் தெரியும் எப்படியும் நான்  அடைத்து விடுவேன் என்று, அது தான் நடந்தது, அந்தக் கதவை அடைத்துவிட்டு எனது இருக்கையில் அமர்ந்து கொண்டேன். 


ங்கிருந்த ஒவ்வொரு பயணிகளின் பயணத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது, அவைதான் காரணி ஆகி அவர்களை இழுத்துச் செல்கிறது, சுகம் துக்கம், பிறப்பு, இறப்பு என எத்தனையோ உணர்வுகளைச் சுமந்து கொண்டு வைகை அதிவிரைவு வண்டி மதுரையை நோக்கி உற்சாகத்துடன் தடதடத்துக் கொண்டிருந்தது. கூடவே எனது நினைவுகளின் வடிவமானவன் அந்தக் கதவருகில் அரூபமாய் நின்றுகொண்டே பயணித்துக் கொண்டிருந்தான் தனக்கான பயணத்தின் காரணத்தை மனம் முழுவதும் சுமந்துகொண்டு.