30 Sept 2013

சிறுகதை எழுதுவது எப்படி? - சிறுகதை

"எலேய் மக்கா நீ எழுதின கதை எல்லாத்தையும் இப்ப தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்... ஆமா ஏன் திடீர்னு கத எழுத ஆரம்பிச்சிட்ட..." முதலியார் தெரு வழியாக பஜாருக்கு நடந்து கொண்டிருந்த பொழுது தான் நான் எழுதிய கதைகளைப் பற்றின பேச்சை ஆரம்பித்தான் குமார்.

அதிலும் என் நண்பனே என்னுடைய திடீர் வாசகனாக மாறியது என்னுள் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் நான் அதனை வெளிபடுத்தவில்லை அல்லது எப்படி வெளிபடுத்த வேண்டும் என்று தெரியவில்லை. 

"பொழுது போகலல.. அதான் எழுத ஆரம்பிச்சிட்டேன்..." 

"சொல்லுல ஏன் எழுத ஆரம்பிச்ச" அவன் விடுவதாயில்லை 

"அதான் சொன்னேம்லால பொழுது போகல, அதான்னு", அதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை.  

"எனக்கும் பொழுது போக மாட்டேங்குது, எனக்கும் கத எழுத சொல்லித் தா"

"கத எழுதுறதுக்கு எவனாவது கிளாஸ் எடுப்பானா.. அதெல்லாம் சொல்லித் தர முடியாது...போல... சரி வேணும்னா உனக்கு சில டிப்ஸ் தாரேன் அத வச்சி கத எழுது என்ன" 

"ம்ம் சொல்லு சொல்லு" உற்சாகமாக தலையாட்டினான், அவனது திடீர் உற்சாகம் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்திப் போகவில்லை. ஒருவேளை என்னை கிண்டல் செய்கிறானோ என்று பார்த்தால், அப்ப்டியெல்லாம் ஒன்றும் இல்லை அவனிடம் இருந்தது நிஜமான ஆர்வம் தான்.      

"எந்த மாதிரியான கதை எழுதப் போற .. காதல் கதையா இல்லாட்டி காதல் மாதிரியான ஒண்ணா?"

எப்போது தென்காசி சென்றாலும் நானும் குமாரும் பஜார் வரை ஒருநடை போய் வருவது வழக்கம், அன்றும் அப்படி நடந்து செல்கையில் தான் சிறுகதை குறித்த எங்கள் பேச்சு ஆரம்பமாகியது. இடை இடையே தெரிந்த முகங்கள் கண்களில் படும் போதேல்லாம் குசலம் விசாரித்தார்கள்.  இந்த ஊரில் பலருக்கும் என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது, பாவம் எனக்குத் தான் சிலரை மறந்துவிட்டது. 

"மெட்ராஸ்க்கு போயும் ஆள் இன்னும் அப்டியேலாடே இருக்க.. குழந்த கனக்கா...", " உம் மொவம் மாறவே மாறாதா..? அப்டியேலா இருக்கு". என்னைச் சந்தித்த பெரும்பாலனவர்களும் என் மீது வைத்த குற்றச்சாட்டு உம் மொவம் மாறவே இல்லையேடே அப்டியேலா இருக்கு என்பதாகத் தான் இருந்தது. 

சட்டென குமாரிடம் கேட்டேன், "லேய் குமாரு, எம்முகம் என்ன மாறாமாலையா இருக்கு, மீசை தாடி எல்லாம் நிறைய வளந்த்ருக்கு தான.. அப்புறம் என்ன?' 

"எல்லாம் சரி டே ஆனா நீ வளந்தியா" கொஞ்சம் கூட வருத்தப்படமால் மிக அவசரமாக என்னை அசிங்கபடுத்தினான் என் பால்ய சிநேகிதன். அப்படியொரு பதிலைக் கேட்டு நான் கடுப்பாவதை உணர்ந்த மறுகணமே தன் பேச்சை மாத்தினான். " சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, நா ஒரு கத எழுதணும்... முடியுமா?... முடியாதா..? "

அந்தக் கணத்தில் இருந்து குமார் பேசிய எதுவுமே எனது காதில் விழவில்லை, எனது மொத்த கவனத்தையும் அந்த கருப்பு நிற பர்தா அணிந்த பெண் தன்னுடன் கடத்திச் சென்று கொண்டிருந்தாள், அவளையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன், எங்கோ எப்போதோ நன்றாக பழகியவள் என்று உள்ளுணர்வு கூறியது, அவளின் பெயர் பாத்திமாவாக் கூட இருக்கலாம், காரணம் இதோ என்னைக் கடந்து போகிறாளே இந்தப் பெண் இவள் மிகச் சத்தியமாக பாத்திமாவைத் தான் நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று பேசலாம் தான், இருந்தாலும் அவளுடைய முகம் கறுப்புத் துணியால் மறைக்கப்பட்டிருந்ததது. என்னுடைய உள்ளுணர்வை நம்பி முகம் தெரியாத ஒரு பெண்ணிடம் அடி வாங்குவதற்கு நான் தயாராயில்லை. அந்த அழகிய பர்தா ஒரு சிறுவனின் கரங்களைப் பற்றிக் கொண்டு பூமி அதிரா வண்ணம் நடை பழகிக் கொண்டிருந்தாள், யாருக்குத் தெரியும் அது அவளுடைய குழந்தையாகக் கூட இருக்கலாம். அவளது குழந்தை என்ற நினைவு வந்ததுமே என் சிந்தனை முழுவதையும் கலைத்திருந்தேன். அதே நேரம் பாத்திமாவிற்கு கல்யாணம் முடிந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

"எலேய் கல்யாணமான புள்ளையப் போய் சைட் அடிக்கியே உனக்கு வெக்கமா இல்லையால லூசுப்பயல?" 

"நான் எங்க சைட் அடிச்சேன், யாரோ தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கேன்னு பார்த்துட்டு இருந்தேன்" என் முகத்தில் நிச்சயம் அசடு வழிந்திருக்க வேண்டும். 

"ஹெக்ஹே உங்கதைய இந்த ஊரு வேணா நம்பும் டே, ஆனா நான் நம்ப மாட்டேன்..சரி அத விடு.. இப்ப நம்ம கதைக்கு வா"

"கத எழுதுறது ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்லல, ஒரு கதைக்கான ஆரம்பம் அல்லது முடிவு எந்த நிமிஷம் வேணும்னாலும் கிடைக்கலாம். இத பத்தி பேமஸான ஒரு QUOTE உண்டு. 'ஒரு சிறுகதை தன்னுடைய முடிவில் இருந்தே ஆரம்பத்தை நோக்கி நகருகிறது'. பெரும்பாலான கதாசிரியர்கள் 'இது தான் முடிவா இருக்கணும்'னு முடிவு பண்ணிட்டுத் தான் கத எழுத ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக எல்லாருமே அப்படிதான்னும் சொல்ல முடியாது, நான்லா ஒரு கதைக்கு ரெண்டு மூணு முடிவு யோசிப்பேன், எது புடிச்சிருக்கோ அத தான் வைப்பேன்.. இதோ இப்ப எழுதிட்டு இருக்கனே இந்த கத மொதக் கொண்டு... ஆனா உனக்கு நான் சொல்லப் போற மொத டிப்ஸ் கதையோட கிளைமாக்ஸ மொதல்ல திங்க் பண்ணு கரு ஆட்டோமேட்டிக்கா கிடைக்கும்"

"இன்னும் கொஞ்சம்  புரியிற மாதிரி சொல்லேன்"

"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பர்தா போட்ருந்த பொண்ணு நம்மள கிராஸ் பண்ணிப் போச்சு பாத்தியா..."

"பார்த்தேன்...பார்த்தேன்..அதையும் பார்த்தேன்.. நீ அத சைட் அடிச்சதையும் பார்த்தேன்"

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு போதும் "

"ஆமா பார்த்தேன்"

"அந்த புள்ள நம்ம கூட படிச்ச பார்த்திமா மாதிரியே இல்ல"

"இல்ல"      

"உனக்கு அடையாளம் தெரியலன்னு சொல்லு அதுக்காக இல்லன்னு சொல்லாத"

"அவளே மொகத்த மூடி இருந்தா... அப்புறம் எப்டி அடையாளம் தெரியும்"

"சரி அந்த பொண்ணு உனக்கு யாருன்னே தெரிய வேணாம், நம்மோளட கதைய பாத்திமாட்ட இருந்து ஆரம்பிப்போம்"

"சரி சொல்லு"

"நம்ம கூட படிச்சதுலையே பாத்திமா தான் சூப்பர் பிகர், அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போது நீ அவளோட அழகுல மயங்குற லவ் பண்ற   "

"என்னது அஞ்சாப்புளையே லவ்வா, அதுவும் ஒரு முஸ்லீம் பொண்ண..."

"அது அதுங்க ஒண்ணாப்புலையே லவ் பண்ணுதுங்க, அஞ்சாப்பு தான... பிராப்ளம் இல்ல..  பண்ணு, அப்புறம் நீ ஒரு இந்து, நீ லவ் பண்ற பொண்ணும் இந்துனா அதுல சுவாரசியம் இருக்காது. அதுநாள உன் லவ்வர் ஒரு முஸ்லீம்"

"எலேய் அரஞ்சம்ணா.. இந்த கத ஏற்கனவே பம்பாய் படத்துல வந்துருச்சு, குமாருக்கு காது குத்தலன்னு நினச்சியா..."

"அப்போ பம்பாய்க்கு முன்னாடியும் பின்னாடியும் ஒருத்தனும் முஸ்லீம் பொண்ண காதலிக்கல கல்யாணம் பண்ணல அப்படித் தான"

"அப்டி இல்ல 

"அப்போ ஒழுங்கா மரியாதையா பாத்திமாவ லவ் பண்ணித்தொல"

"தொலைக்கிறேன் மேல சொல்லு" "கொஞ்சம் கொஞ்சமா பாத்திமாவ லவ் பண்ண ஆரம்பிக்கிற, கிளாஸ்ல அவ பண்ற குறும்புத்தனம், வால்த்தனம் சேட்டை எல்லாமே உன்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுது, அவ கூட பேசுறதுக்கு நூல் விடுறதுக்கு நீ எவ்ளவோ ட்ரை பண்ற ஆனா அவ உன்ன கண்டுக்கதே இல்ல... அப்றமா தான் தெரியுது அவ சும்மா உன்னைய கண்டுக்காத மாதிரி நடிக்கிறா அவளுக்கும் உன் மேல லவ் இருக்குன்னு . இப்போ அவள நினைச்சு நீ எழுதுற ஒரு காதல் கவித உன் கதைல வரணும்.. அதுதான் ஹைலைட்டா இருக்கணும். 

பருவமடையும் முன்னமே 
காதல் பருவத்திற்குள் தள்ளியவளே  
அன்பே பாத்திமா
பர்தா அணிந்தாலும் 
நீதாணடி என் அமராவதிகூரிய விழிகளால் 
காதல் கூறியவளே 
அன்பே பாத்திமா 
உனக்ககாகத் துடிக்கும் இதயத்தைக் 
கொஞ்சம் எனக்காகவும் துடிக்கச் சொல் 

"எலேய் எலேய் நிறுத்து நிறுத்து... இத நீ இந்தக் கதைக்காக எழுதின மாதிரி தெரியலையே.. அல்ரெடி பாத்திமாக்காக எழுதிவச்ச மாதிரிலா இருக்கு" 

ஏனோ தெரியவில்லை அந்த வார்த்தை என்னை அதிகமாக கோபப்படுத்தியது, "இப்ப உனக்கு டிப்ஸ் வேணுமா வேணாமா?"  கோபத்தில் கத்தினேன். 

"ஏ... ஏ... ஏ... கோவப்படாத மக்கா... சொல்லு சொல்லு"

"நம்ம கதப்படி இப்ப பாத்திமாவும் உன்ன சைட் அடிக்க ஆரம்பிக்கிறா... நீ போம்போதும் வரும்போதும் ஓரக்கண்ணாலையே லுக் விடுறா. இந்த இடத்துல ஒரு டயலாக் எழுதுற, அத படிச்சிட்டு பார்த்திமா சொக்குறாலோ இல்லையோ நம்ம கதைய படிக்கிறவங்க அத்தன பேரும் சொக்கிரணும்"

"ம்ம்ம்ம் அது என்ன டயலாக் சொல்லு "  

ஓரக்கண்பார்வை என் மீது படும்போதெல்லாம் ஒரு தேவகுமாரனைப் போல் உணர்கிறேன். அன்பே என்னுடைய மனம் உன்னிடத்தில் நிலைக்கொள்ளாமல் அவசரஅவசரமாக ஒரு நிலைக்கண்ணாடியைத் தேடித் தவிக்கின்றன... காதலியே உன் ஓரக்கண்கள் ரசித்த என்னழகை நானும் ரசிக்க வேண்டுமென்று"

"செம டயலாக்ல அப்புறம்"

"இப்டி பார்வையாலையே காதல் பரிமாறுற நேரத்துல தான் வைக்கணும் ஒரு ட்விஸ்ட்"

"என்னது ட்விஸ்ட்டா"

"ஆமா பின்ன ட்விஸ்ட் இல்லாம ஒரு கதையா"

"என்ன ட்விஸ்ட்"

பஜாரில் வாங்க வேண்டிய பொருட்களைக் வாங்கிமுடித்து வந்தவழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை மெதுவாக மயங்கிக் கொண்டிருந்தது. 

"என்ன ட்விஸ்ட்டு டே சீக்கிரம் சொல்லு"

"நம்ம ஸ்கூல்ல இருந்து பாத்திமாவ மிக்கேல்-ஸ்கூலுக்கு மாத்திருதாங்க"

"ஏம்ல தேவையே இல்லாம அவள ஸ்கூல் மாத்தணும்"

"ஏன்னா நம்ம ஸ்கூல்ல அஞ்சாப்பு வர தான் பொண்ணுங்களுக்கு, அதுனால அவள மாத்திட்டாங்க"

"சோ எங்களைப் பிரிக்கப் போற "

" அதான மக்கா ட்விஸ்ட்டே"

"சரி மேல சொல்லு "

"வேற ஸ்கூல்க்கு மாறினதும், உன்னால அவள அடிக்கடி பார்க்க முடியல, அப்டியே அவளப் பார்த்தாலும் பேச முடியல, கொஞ்ச நாள்ல நீ யாருன்னே தெரியாத அளவுக்கு அவ உன்ன மறந்துருத்தா..."

"கதையில லாஜிக்கே இல்லையே, அவ ஏண்டே என்ன மறக்கணும்"

"ஏன்னா அவ பெரிய பொண்ணாயிட்டா"

"அதெப்படி பெரிய பொண்ணாணா"

"தம்பி இது காதல் கதை. 18+ கதை கிடையாது அதுனால அவ எப்படி பெரியவளானான்னுலா விளக்க முடியாது.. "

"போல சுத்தமா புரியல"

"பெரியவளாகுறதுனா ஏஜ் அட்டென் பண்றதுன்னு அர்த்தம்.. இப்பயாது புரிஞ்சதா.. அவ பெரியவளானது மெச்சுரிட்டி வந்த்ருச்சு..அதுனால உன்ன மறந்துட்டா "

"ம்ம்ம்ம் புரிஞ்சது புரிஞ்சது.. ஆனா காதலுக்கு ஏதுடே மெச்சுரிட்டி .. மேல சொல்லு அப்புறம் என்ன..."

"அப்புறம் படிப்பு காலேஜ் சென்னை வேலைன்னு நீ பிஸியாயிட்ட.. "

"அதாது அவள நானும் மறந்துட்டேன்னு எழுத சொல்ற... இதெல்லாம் ஒரு கத த்தூ.. சரி கிளைமேக்ஸ சொல்லு.. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆச்சா ஆவலையா?"

"கிளைமேக்ஸ் இப்படி எழுது... ரொம்பநாள் கழிச்சு ஊருக்கு வந்த நீ, என்கூட மொக்க போட்டுட்டே பஜாருக்கு நடந்து போற, அந்தநேரம் கையில ஒரு சின்ன பையன புடிச்சிட்டு நடந்துபோற ஒரு பர்தா உன்ன கிராஸ் பண்ணுது, ஒருவேள அவ பாத்திமாவா இருக்குமோன்னு நீ யோசிக்கும் போதே அவ கூட இருக்க அந்த பையன் உன்ன அண்ணான்னு கூப்பிடுறான் அவன் ஏன் உன்ன கூப்பிடறான்னு உனக்கு ஒரு குழப்பம். தயகத்தோட அவன் பக்கத்துல போற, அந்த பொண்ண பாக்குறே.. உன் மனசுக்குள்ள ஆயிரம் மின்னல் வெட்டுது, கூடவே ஆயிரம் கேள்விகளும், அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கக் கூடாதுன்னு உன் இதயம் தவியா தவிக்குது, உன் மீதான காதல் அவளுக்கு இன்னும் இருக்கணும்ன்னு திங் பண்ணுது.. ஆனா அந்தப் பொண்ண பக்கதுல போய் பாக்கும் போது தான் தெரியுது அது பாத்திமாவே இல்ல வேற எவளோன்னு.சோ நீ சோகமா சோலோவா நடக்க ஆரம்பிக்கிற.. இது தான் நம்ம லாஸ்ட் டயலாக்  மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக..." குமாரிடம் கதையைச் சொல்லிக் கொண்டே முதலியார்த் தெருவினுள் நுழையத் தொடங்கிருந்தோம். 

"அண்ணா..." நிஜமாகவே ஒரு சிறுவனின் குரல், குமாருக்கு நான் கூறிய பாத்திமா கதையில் வந்த சிறுவனின் குரல் அல்ல இது, என் எதிரில் நின்று கொண்டிருந்த நிஜ சிறுவனின் நிஜக்குரல், அந்த சிறுவனின் இடது கையை ஒரு பர்தாவின் வலது கை பற்றியிருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

"நல்லா இருக்கியா டே"

"நல்ல இனிமையான குரல், ஆனால் பழக்கமில்லாத புது குரல்.. ஒரு பெண்ணின் குரல்", குமாரைக் கவனித்தேன் அவனும் தனக்குத் தெரியாது என்பது போல் சைகை செய்தான்.

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. முகத்தின் மீது அவளணிந்திருந்த முகமூடியைத் தாண்டி அவளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாயிருந்தது... 

"நல்லா இருக்கியா டே" மீண்டும் அதே இனிமையான குரல் என் மவுனத்தைக் கலைத்தது 

"ஹி ஹி ஹி நல்லா இருக்கேன் நீங்க" அவளை அடையாளம் காணத்தெரியாமல் வழிந்து கொண்டுள்ளேன் என்பது மட்டும் புரிந்தது.

"இப்ப எங்க இருக்க, என்ன பண்ற, ஆனா நல்லா வளந்துட்ட" என்னிடமிருந்து பதில் எதையும் எதிர்பாராமல் தன்னிடமிருந்த கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள்.  

"நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், என்னைய மறந்துட்டியோடே...ஆமா உனக்கு கல்யாணம் ஆயிட்டா"

"சென்னையில இருக்கேன், இல்ல இன்னும் ஆவல, இது யாரு உன் மகனா, அழகா இருக்கான்...என்ன பேரு" கோர்வையில்லாமல் வந்து விழுந்த  வார்த்தைகள் அவளது அன்யோன்யத்தை என் மனம் வெறுக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, அங்கிருந்து அவசரமாக மிக அவசரமாக நழுவ முயன்றேன்.

"என்ன பார்த்தா கல்யாணம் ஆன பொம்பள மாதிரியா இருக்கு, இது எங்கக்கா மவனாக்கும்.." என்றபடி தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த தனது பர்தாவின் முகமூடியை முதல்முறையாக விலக்கினாள், அதே கூரிய கரிய விழிகள், கார்மேகம் மறைத்திருந்த வட்ட நிலா போல் இத்தனை நேரம் மறைந்திருந்து ஒளி வீசிகொண்டிருந்த முகம், அந்தத் துணி விலகியதும் இன்னும் பிரகாசமாய் முழு நிலவாய் ஒளி வீசத்தொடங்கியது. அவள் தான் அவளே தான், என்னையும் அறியாமல் என்னுள் அமிழ்ந்திருந்த நினைவலைகள் பொங்கிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருந்தன...

கூரிய விழிகளால் 
காதல் கூறியவளே 
அன்பே பாத்திமா 
உனக்ககாகத் துடிக்கும் இதயத்தைக் 
கொஞ்சும் எனக்காகவும் துடிக்கச் சொல் 

மவுனம் மவுனம்.. என்னை மட்டும் சூழ்ந்திருந்த திடீர் மவுனம்.. பார்த்திமாவைப் பார்த்த மகிழ்ச்சியில் இந்தச் சிறிய உலகமும் என் பெரிய இதயத்துடன் சேர்ந்து துள்ளுவது போன்ற பிரமை... மீண்டும் என் மவுனத்தைக் கலைத்தாள் பார்த்திமா 

"யே முஸ்தபா  என்னைய மறந்துட்டியோடே ... நான்தான் உன்கூடப் படிச்ச பாத்திமா.." எங்கள் கண்களின் அருகில் நீர்த்துளிகள் காதலாகி கசிந்துருகக் காத்துக்கொண்டிருந்தன... 

மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக...   

25 Sept 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013

பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு 

வேலையற்ற சோம்பலற்ற வியாழக்கிழமை மாலை. புதிய எண்ணிலிருந்து ஒரு அழைப்பு, நான் ஹலோ என்றதும் தன்னுடைய பெயரைச் சொன்னார், அவருடைய பெயரைக் கேட்டதும் என் முகத்தில் ஆயிரம் மின்னல் வெட்டியது போன்ற பிரகாசம், வானத்திலும் மேகங்கள் இடி முழக்கத்துடன் என் சந்தோசத்தை கொண்டாடத் தொடங்கியிருந்தன. "சீனு நான் இப்போ தாம்பரம் வருவேன் உங்களைப் பார்க்க முடியுமா என்றார்". வரம் தருவதற்காக அந்த இறைவனே தாம்பரம் வரை வருவதாக இருந்தால் பக்தன் நான் அதைப் பெற்றுக்கொள்ள தாம்பரம் நோக்கி செல்ல மாட்டேனா என்ன?

லேசான மழையிலும் பொங்கிப் பிரவாகம் எடுத்திருந்த சாலைகளின் ஊடே பயணிக்கத் தொடங்கினேன், சரியாக ஆறரை மணியளவில் சந்தித்தோம். அவரை இதற்கு முன் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் நேரில் பார்பதற்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் இளமையாக இருந்தார். பதிவர் சந்திப்பு மற்றும் பதிவர்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார், எங்களுக்குள் நடந்த உரையாடலில் அவர் கூறிய மிக முக்கிய விஷயம் "ஒரு விஷயம் பதிவு செய்யுறோம்ன்னா அந்தப் பதிவு மேல நமக்கு ஒரு காதல் வரணும், அத யாரும் படிக்கிறாங்க படிக்கல, கமெண்ட் போடுறாங்க போடல, அதப் பத்தி கவலைப் படவே கூடாது, நாம எழுதுற பதிவு முதல்ல நமக்கு மன நிம்மதி கொடுக்கணும்" என்றார்.  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

முப்பது நிமிட அளவிலேயே எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது, அன்றைய இரவே தமிழ்நாட்டில் இருந்து கிளம்புவதால் உடனடியாக சென்ட்ரல் செல்ல வேண்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.  இன்னும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கலாமே என்று என்னுள் தோன்றினாலும் தன்னுடைய அவசர வேலைகளின் மத்தியிலும் என்னை சந்திக்க அழைத்ததே மிக சந்தோசமாக இருந்தது. மிகப் பெரிய மனிதர்களின் நட்பை சம்பாதித்துக் கொடுத்த வலையுலகின் மீதான காதல் இன்னுமின்னும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி சார்.  

இன்னும் இருமாதங்களில் மீண்டும் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது மற்ற நண்பர்களை கண்டிப்பாக சந்திக்கிறேன் அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ஒரு அன்புக் கட்டளையிட்டுச் சென்றார். 

அந்தப் பிரபல பதிவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும் என்பவர்கள் தயவு செய்து அமைதி காக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது நிச்சயம் ஒரு குறியீடு அல்ல.

சென்னையில் ஒரு காவல் தெய்வம் 

அது ஒரு வேலையற்ற செவ்வாய்க் கிழமை. என்னிடம் வசமாக சிக்கியவர் அரசன், "தலைவரே கிண்டில இருக்கேன், பொழுது போகல என்ன பண்ணலாம்" என்றேன், "நீங்க அங்கயே இருங்க தலைவரே இதோ வந்த்ருர்றேன்" என்றவர் அரைமணி நேரத்தில் வந்துவிட்டார், சினிமாவுக்குச் செல்லலாமா இல்லை வேறு எங்கும் செல்லலாமா என்பதில் எங்களுக்குள் பெருங்குழப்பம். 

"தலைவரே பில்லர் பக்கத்துல கிராமத்து எபெக்ட்டுல ஒரு முனீஸ்வரன் கோவில் இருக்கு ஒருதடவ மதுமதி கூட்டிட்டுப் போனார் போவோமா" என்றார். அட இதுதான நமக்கு வேணும் என்றபடி உற்சாகமாக கிளம்பினோம். எப்படியெல்லாமோ சுற்றவைத்தப் பாதை முடிவில் அந்த முனீஸ்வரனின் பிரம்மாண்ட சிலை அருகே கொண்டு சேர்த்தது.

டிபிகல் சென்னைக்கு சொந்தமான பணக்காரத்தனம் அதைத் தொடரும் குடிசைவாசிகள் இவர்களில் இருந்து சற்றே விலகி காட்சியளிக்கிறார் முனீஸ்வரன். அங்காள பரமேஸ்வரி மூலவராக அருள்பாலிக்க வெளியே காவல் தெய்வமாக முனீஸ்வரன். அருகே கூவம் சலசலப்பில்லாமல் வெறும் சாக்கடையாக ஓடிக் கொண்டுள்ளது.     
மிகவும் பிரம்மாண்டமான முனீஸ்வரன். கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம் சென்னையின் அவுட்டோரில் இருந்திருக்க வேண்டிய முனிஸ்வரன் தப்பித்தவறி இண்டோரில் இருப்பதால் அவுட்டோர் செலவை மிச்சப் பிடிக்க பெரும்பாலான கிராமத்துப் படபிடிப்பு இங்கேயே எடுக்கபடுவதாக அரசன் சொன்னார்.  நாங்கள் சென்ற போதும் ஒரு குத்துபாட்டுக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். கோவமான காவல் தெய்வம் வேறுவழியே இல்லாமல் கேவலமான குத்துப் பாடல்களைப் பார்த்துக் கொண்டுள்ளார்.

குறும்படம் - தமிழ் இனி 

சமீபத்தில் வெகுவாக பார்த்து ரசித்த ஒரு குறும்படம் தமிழ் இனி. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்றும் சொல்லலாம். இப்படத்தின் இயக்குனர் திரு.மணிராம் கலிபோர்னியா வாழ் தமிழர். நாளைய இயக்குனர் பைனல்ஸ் வரை முன்னேறி வந்தவர். படம் பற்றி நான் எதுவுமே கூறத் தேவையில்லை காரணம் படமே தேவையான விசயங்களை கூறிவிடும்.


இயக்குனர் மணிராம் அவர்களுடன் 
மேத்யு கார்மெண்ட்ஸ் 

ரங்கநாதன் தெருவுக்கு அருகில் இருக்கு நடேசன் தெருவில் மேத்யு கார்மெண்ட்ஸ் என்ற ஆடவர் ஆடையகம் உள்ளது. இங்கு ஒரு ரெடிமேட் ஷர்ட்டின் விலை 450 ருபாய் மட்டுமே. தரமாகவும் உள்ளது நிறைய வெரைட்டியும் உள்ளது. ஜீன்ஸ் மற்றும் பேன்ட் குறித்து நோ கமெண்ட்ஸ்... 

Mathew Garments

No 21 Uma Complex 1st Floor,Near Mambalam Railway Station, Natesan St, 
CIT Nagar, Thiyagaraya Nagar, Chennai, TN 600017 ‎
044 6632 6091 


உங்களை எல்லாம் ஏண்டி சுனாமி தூக்கல 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்பத் தயாரான போது தான் அவள் அலுவலகம் உள்நுழைந்தாள். வழக்கத்தை விட மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பின்னபடாமல் கலைத்து விட்ட தலையை கோதிக் கொண்டே அவளது தோழி அருகே சென்றவள் பையிலிருந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து அதனை முகம் பார்க்கும் கண்ணாடியாக மாற்றினாள். முகம் தெளிவாக தெரிந்திருக்காது என்று நினைக்கிறன் போனில் முன் பக்கம் இருக்கும் கேமராவை ஆன் செய்து தனது மேக்கப்பை  தொடங்கினாள்.

திடிரென்று "ஆவ்" என்றவளை நோக்கி அவளது தோழி "வாட்" என்றாள்.

"கேப்ல வரும் போது லேசா மழைதுளி பட்டது... ஸீ மை மேக்கப் வெண்ட் ஆப்" என்றபடி மேக்கப் கலைந்த  தனது முகத்தையே மீண்டும் சோகமாக பார்க்கத் தொடங்கினாள். 

அவளுடைய சோகம் என்னையும் ஆட்கொண்டது பாவம் மேக்கப் கலைந்த முகத்துடன் அவளால் எப்படி நைட்ஷிப்டை தொடர முடியும் என்ற பெரும் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்பிய போது மணி இரவு பதினொன்று.   


ஜஸ்ட்கிளிக் 

அரசனுக்குச் சொந்தமான நூலகத்தில்  

23 Sept 2013

தென்காசி - அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து

தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் முன்புறம் இருந்த அந்த வளாகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது,பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களின் படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் ஒட்டபடுவதற்காக நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் காத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் விரும்பிய க்ரூப் கிடைத்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் சில மாணவர்களிடமும், எது எப்படியோ தன்னுடைய மகனுக்கு இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதவிப்பு பல பெற்றோரிடமும் இருந்தது.

திடிரென்று ஒரு சலசலப்பு. வாட்ச்மேன் தன் கையில் இருந்த காகிதங்களை அறிவிப்புப் பலகையில் ஒட்டத் தொடங்கியிருந்தார். அதுவரை மரநிழல்களில் அமர்ந்து ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்த அம்மாக்களிடமும், அமைதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அப்பாக்களிடமும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஓடியாடி விளையாண்டு கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் அறிவிப்புப் பலகையைச் சூழத் தொடங்கினர். ஒவ்வொருவரிடமும் தங்கள் பெயரைக் கண்டுபிடிப்பதற்கான அவசரம் இருந்தது. பள்ளியில் இடம் கிடைத்துவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒருவித ஆர்வம் இருந்தது.

ஒவ்வொரு பிரிவு வாரியாக பெயர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் தேடுவதில் சிரமம் இருக்கவில்லை. கணினி அறிவியல் பிரிவில் என்னுடைய பெயர் இரண்டாவதாக இடம் பெற்றிருந்தது, எனக்கும் மேலே சத்யா இருந்தான், எஸ்.எஸ்.எல்.சி யில் என்னை விட அவன் இரண்டு மதிப்பெண்கள் கூடுதல் எடுத்திருந்தது நியாபகம் வந்தது, குமார் செல்வா ஆனந்த் சுரேஷ் சுப்பையா ரமேஷ் இவர்கள் பெயரையும் தேடினேன்,அங்கங்கே சிதறிக் கிடந்தார்கள், இருந்தாலும் எங்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிட்டது, இப்பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமென்பது எங்களது பலநாள் கனவு, பலித்துவிட்டது. 

எனக்கு இடம் கிடைத்துவிட்டது. நான் கேட்ட கம்புயுட்டர் சயின்சும் கிடைத்துவிட்டது. அம்மாவிடம் இதைச் சொல்வதற்காக அந்தக் கூட்டத்தில் இருந்து விலகி அம்மாவைத் தேடி ஓடும்பொழுது ஒரு கை பலமாக என் சட்டையைப் பிடித்து இழுத்தது, இன்னும் கொஞ்சம் பலமாக இழுத்திருந்தால் என் சட்டை கிழிந்திருக்கும். சட்டென திரும்பினேன். சற்றும் அறிமுகமில்லாத ஒருவர் என்னை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார், முகம் நிறையப் புன்னகை. கண்கள் நிறைய ஏதோ ஒரு தேடல். அவரை முழுவதுமாக கவனித்தேன்.    

அவருடைய கை முழுவதிலும் காய்ந்து போன சகதியின் கறை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்ந்து விழத் தயாராகிக் கொண்டிருந்தன. சவரம் செய்யப்படாத பத்துநாள் தாடி. சீவப்டாத, எண்ணை வாடையில்லாமல் வானம் பார்த்து சலாம் போட்டுக் கொண்டிருந்த அவருடைய தலைமயிர். பழுப்புப் ஏறிப் போன வெள்ளைச் சட்டை, முழங்கால் வரை சகதியின் படிமங்கள், அதற்கு மேல் மடித்துக் கட்டப்பட்ட நீலம் கண்டிராத கசங்கிய வெள்ளை வேஷ்டி. கசங்கிப் போகாத நல்ல திடமான உடல். 

கையிலிருந்த ஒரு காகிதத்தை என்னிடம் காண்பித்து பேசத் தொடங்கினார் "மவன் ஏதோ சோலி விசயமா தின்னவேலி வர போயிருக்கான், இங்க தான் சேக்கணும்னு பாரம் வாங்கி போட்டோம், கிடைச்சதா இல்லையான்னு பாத்து சொல்லுயா, நமக்கு படிப்பு வராது" அந்தத் தாளில் அவரது மகனின் பெயரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எண்ணும் எழுதி இருந்தது, அழகான கையெழுத்து, நிச்சயம் அவரது மகனுடையதாகத் தான் இருக்க வேண்டும். 

அவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நோட்டீஸ் போர்டைச் சுற்றி இருந்த கூட்டத்திற்குள் நுழைந்தேன். அக்ரி க்ரூபில் அவரது மகனின் பெயர் இருந்தது.உடனடியாக அவரை நோக்கி ஓடினேன், நான் சொன்னது எதுவுமே அவருக்கு விளங்கவில்லை, தன் மகனுக்கு இடம் கிடைத்துவிட்டது என்பதைத் தவிர.  "எம்மவனுக்கு இடங்கிடச்ருசில்லா அது போதும், அவென் படிச்சா போதும் ராசா, எம்மவன் தென்காசி பள்ளியோடத்துல படிச்சா போதும்" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். அவர் கண்களில் நீர் தேங்கத் தொடங்கி இருந்தது, இன்னுமின்னும் என்னிடம் ஏதோ சொல்ல வந்தார்,அதற்குள் என்னுடைய பழைய பள்ளித் தோழர்கள் அனைவரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள்.

"ஏம்ல கம்ப்யுட்டர் சயின்ஸ் எடுத்த, உன் மார்க்குக்கு பயாலஜி கிடச்சிருக்கும் லா"

"அவங் கிடக்கான் சீனு, நாம கம்ப்யுட்டர் படிச்சி பில்கேட்ஸ் ஆயிருவோம்னு பொறாம" 

"எலேய் டாக்ட்டருக்கு தாம்ல மதிப்பு மண்ணாங்கட்டி எல்லாம், கம்ப்யுட்டர் வேஸ்ட்"

"ஸ்கூல் என்னிக்கு தொறக்குன்னு தெரியுமா"

"புது யுனிபார்ம் வாங்கணும், நாம எல்லாரும் ஒண்ணா போய் வாங்குவோம்"

"ஸ்கூல் பேக், நோட் இனி எதுவுமே தேவையில்ல"

"எலேய் குமாரு உங்கையா வாறாரு, நாங்க கிளம்புறோம், சாய்ங்காலம் எல்லாரும் சீனு தெருவுக்கு வந்த்ருங்க"

தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் எங்குமே நல்ல தமிழ்மீடியம் பள்ளிகள் கிடையாது, ஆவுடையானூரில் இருக்கும் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி கூட கொஞ்சம் சிறந்த பள்ளி என்றாலும் அங்கே சென்று வர பேருந்து வசதி கிடையாது. இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்ச்ச்சத்திரம், கீழப்புலியூர் இங்கிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மத்தியில் தென்காசிப் பள்ளியே எவ்வளவோ மேல் என்ற எண்ணத்தில் தான் எனது அண்ணனை அங்கு சேர்த்திருந்தனர், அவனுடைய சொந்த முயற்ச்சியால் ஆயிரத்தி ஐம்பது மதிப்பெண் பெற்று சாதனையும் புரிந்திருந்தான். "படிக்கிற புள்ள எங்கிருந்தாலும் படிக்கும்" என்பதை நிரூபித்தவன் அவன்.

என்னதான் என்னுடைய அண்ணன் அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் எனக்கும் அவனுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். நான் நன்றாக படித்துவிடுவேன் என்பதை நம்புவதற்கு என் அம்மா தயாராயில்லை. நான் அரசுப் பள்ளியில் படிக்கக் போவதில் அம்மாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியில்லை, மேலும் எனக்கு அரசுப் பள்ளியில் இடம் கிடைத்த விஷயத்தை எல்லாருமே துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர். என் அம்மாவோ "வேற வழியில்லக்கா, இங்க தான் சேக்க முடிஞ்சது, வாழ்க்கைய நினைச்சு பார்த்து படிச்சா அவனுக்கு நல்லது, நம்மளால படிக்க தான் வைக்க முடியும்" என்று தன் பங்குக்கு மறைமுகமாக எனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். என் வீட்டில் என்று இல்லை பெரும்பாலான நண்பர்கள் வீட்டிலும் இது தான் பேச்சாக இருந்தது.       

ஆனால் எங்களுடைய மனநிலையோ வேறுமாதிரி இருந்தது. பத்தாம் வகுப்பு வரை மிகவும் கண்டிப்பான கிறிஸ்துவப் பள்ளியில் பயின்ற எங்களுக்கு கண்டிப்பே இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி என்பது பூலோக சொர்கம் போன்றது. பத்து வருடமாக கண்களை மறைத்துக் கொண்டிருந்த கடிவாளம் அவிழ்க்கப்பட்ட குதிரைகளின் சுதந்திர மனநிலையில் இருந்தோம். 
இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற வாசகம் பொறித்த பள்ளியின் பிரம்மாண்ட நுழைவாயிலே எங்களைப் பார்த்து வசீகரமாகச் சிரிப்பது போலத் தோன்றியது.

இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கையில் கிடைத்த மிகச் சிறந்த தோழன். எப்படி வாழலாம் என்பதை கற்றுக் கொடுத்ததை விட எப்படி வாழக் கூடாது என்று கற்றுக் கொடுத்தப்பள்ளி. என் வாழ்வின் மிக முக்கியமான சுவாரசிய நினைவலைகளின் ஊற்று இப்பள்ளிக்கூடம் தான்.

நட்பு,சண்டை, காதல், காமம் என்று படிப்பு தவிர்த்த அத்தனை விசயங்களையும் அதே நேரத்தில் வாழ்க்கையையும் கற்றுக் கொடுத்த பள்ளி. அந்த நினைவலைகளை "அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து" என்ற பகுதியின் மூலம் சிறிது அசைபோட்டுப் பார்க்க ஆசை. நீங்களும் தவறாது வாருங்கள் அந்த மாணவனின் நாட்குறிப்பைப் புரட்டிப் பார்ப்பதற்கு.  

20 Sept 2013

ஆவி அவர்களின் புத்தகத்திற்கு நான் எழுதிய புத்தக அறிமுக உரை

ஒரு சிறிய முன்னுரை :

கோவைஆவி என்னும் தளத்தில் அமானுஷ்யமாக இயங்கிவரும் ஆவிக்கு எப்போது அந்த ஆசை தோன்றியது என்று தெரியவில்லை, கடந்தவாரம் நள்ளிரவு ஆவிகள் அலையும் பன்னிரண்டு மணியளவில் ஆவியிடம் இருந்து ஒரு கால் "ஹலோ சீனு" என்றார் "சொல்லுங்க ஆவி" என்றேன்  பின்வருவதை சொன்னார்.

'ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்' புக் எழுதி முடிச்சிட்டேன், இன்னும் ரெண்டு மாசத்துல கோவை புக்பேர்ல அந்த புக்க ரிலீஸ் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிருக்கேன், லாஸ்ட் வீக் வாத்தியார் கோவை வந்தப்போ லேஅவுட் பத்தி கேட்டேன் செஞ்சு தாரதா சொல்லிட்டாரு என்றபடி ஆனந்த் ஒரு ஆனந்த அதிர்ச்சி அளித்தார். "சீனு என்னோட புத்தகத்துக்கு நீங்க தான் அறிமுகவுரை எழுதணும், அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்னு." "ஐயோ ஆவி பாஸ் நான் வெறும் மனுஷன் தான் ஆவி எழுதின புக்குக்கு நான் எப்படி விமர்சனம் எழுத முடியும்"ன்னு ஜகா வாங்கினேன்.

என் மீது தொற்றிக் கொண்ட ஆவி என்னை விடுவதாயில்லை "இப்போ நீ எழுதி தராட்டா சென்னைக்கு பறந்து வந்துருவேன்னு" மிரட்டவே அவருடைய புத்தகத்திற்கு என்னுடைய அறிமுகவுரை எழுதிவிட்டேன்.

அந்த அறிமுகவுரை உங்கள் பார்வைக்கு  

எங்கோ ஓரிடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரின் எழுத்துக்களை மிக அருகாமையில் உணரச் செய்யும் வல்லமை பதிவுலகிற்கு உண்டு, அப்படிப்பட்ட பதிவுலகம் மூலம் நண்பரானவர் ஆனந்த விஜயராகவன். பெற்றோர் வைத்த அழகிய பெயரைத் துறந்து இணையத்தில் ஆவியாக வளம் வந்து கொண்டுள்ளார். ஆவி என்ற வித்தியாசமான பெயரே இவர் மீதான ஈர்ப்பை வெகு இயல்பாக வரவழைத்துவிடுகிறது.

"ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்ற பெயரில் தான் எழுதி இருக்கும் புத்தகத்தின் தலைப்பும் நம்மை வெகுஇயல்பாக ஈர்க்கிறது. தற்காலத்தில் தமிழகமே "ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமகாலத்தில் தனது இஞ்சினியரிங் கல்லூரி வாழ்வின் படிமங்களை பாஸ்கர் ஜீவா கராத்தே சங்கீதா ரமாதேவி காதல் நட்பு என்ற குறியீடுகள் மூலம் தன்னுள் படிந்த விழுமியங்களை மற்றும் நினைவலைகளை பின்நோக்கிப் பார்த்து ஆங்கிலத்தில் காக்டெயில் என்று கூறிவார்களே அப்படியொரு கலவையாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.   நாமக்கல் மாவட்டத்தில் கிராயூர் என்னும் கிராமத்தில் இருக்கும் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நட்பு காதல் நாமக்கல் கிராயூர் என்று கிராமம் கிராமமாக பயணிக்கிறது. 

பல இடங்களில் இவரது இயல்பான அதே நேரத்தில் கொஞ்சம் நையாண்டி கலந்து எழுதும் இவரது நடை நம் உதட்டில் சிறு புன்னகையைப் மலரச் செய்ய தவறுவதில்லை, தன்னுடைய வகுப்பில் தான் அமர நினைத்த செகண்ட் பெஞ்சானது சக மாணவரால் தட்டிப் பறிக்கப்படுகிறது, சிறிது நேரத்தில் தனது வகுப்பாசிரியர் மூலம் மீண்டும் கிடக்கும் பொழுது ஆவி இப்படி எழுதுகிறார்.

செகண்ட் பெஞ்ச் கார்னர் சீட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. என் பக்கத்தில் இருந்த, எனது இடத்தை ஆக்ரமித்த அந்த லேண்ட் மாபியாவை பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தேன்.

தன்னுடைய வகுப்பில் சங்கீதா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் என்றறியப்படும் பொழுது கூட அந்தக் கவலையை ஆவி சந்தோசமாக சொல்கிறார்.


காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ்.
கதையில் திடீர் திருப்பமே சங்கீதா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சங்கீதாவுடன் இன்னும் சில மாணவிகளும் வகுப்பினுள் நுழைகின்றனர். இங்கிருந்து கதையின் திசை மாறுகிறது அல்லது சங்கீதாவின் தோழி ரமாதேவியால் மாற்றபடுகிறது. 

ஆவி எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர் தான், அதனால் தான் ஹீரோயின் அறிமுகப்படலத்தில் சங்கீதாவை அறிமுகம் செய்துவிட்டு ஹீரோயின் தோழி அறிமுகப்படலத்தில் ஹீரோயினை அறிமுகம் செய்து எழுத்துப் புரட்சி செய்துள்ளார். அதிலும் தனது ரமாதேவியை எண்ணி சில இடங்களில் இப்படி சிலாகிக்கிறார்.


ரமாதேவி எனும் பெண் பார்ப்பதற்கு கருப்பு நிற கனகா போல் சாயலில் இருந்தாள்

இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது.

இவரது வித்தியாசமான செயல்கள் இன்னும் நீளுகிறது காதலி அழைத்ததால் தியான வகுப்பு செல்கிறார், அதே நேரத்தில் காதலியுடன் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்கிறார். காதலியுடன் கோவிலுக்குச் செல்வார்கள் என்ற நிலைபாட்டை மாற்றி ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்லலாம் என்ற நிலைபாட்டை ஏற்படுத்தியவர் நண்பர் ஆவியாகத் தான் இருக்கும். அவரது காதலின் படிமங்களை எண்ணி வியந்து கொண்டுள்ளேன்.

ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ.." என்றேன்.
என்றபடி காதலியிடம் காதலையும் சொல்லிவிட்டு, ஏற்றுக்கொள்வாளா மறுப்பாளா என்றபடி ஆவி பரிதவிக்கும் இடத்தில் கச்சிதமான வார்த்தைக் கோர்வைகள் கடைந்தெடுத்த எழுத்தாளனின் எழுத்துக்கள்.

ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.
சில இடங்களில் ஆவியின் காதலியான ரமாதேவியின் செய்கை நம்முள் ஒருவித வியப்பை ஏற்படுத்துகிறது. தன் காதலியுடன் முதல் முறை பேருந்தில் பயணிக்கிறார், இன்னும் காதலை வெளிபடுத்தவில்லை, ஒருவருக்கொருவர் முழுமையாய் அறிமுகம் செய்திருக்கவும் இல்லை அந்நேரம் ரமா ஒரு கேள்வி கேட்கிறாள்,

"உங்க வீட்ல எவ்ளோ பேர்? " என்றாள்..   

அதற்கு ஆவி 
" மூணு பேர்" என்றேன்.
" நீங்க, அப்பா அம்மா மட்டும் தானா?"
" இல்ல, ஒரு தங்கையும், பாட்டியும் இருக்காங்க.."
"அப்புறம் மூணு பேர்னு சொன்னீங்க.."
"ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும் கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." நான் சொல்லவும் அவள் இதழ்களில் பூத்திருந்த புன்னகை என் மனதை என்னவோ செய்தது.
இந்தப் பதிலைக் கேட்டதும் என்னுள் ஒரு ஆச்சரியம். இப்படி ஒரு புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டதும் நானாக இருந்திருந்தால் அப்படியே பேருந்தில் இருந்து  குதித்திருபேன் ஆனால் அப்பெண்ணோ மெலிதாக புன்னகைத்தாள் என்று குறிப்பிடுவதைப் ஆவி கூறுவதைப் பார்த்தால் அந்தப் பெண் எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் தாங்கக் கூடியவள் என்றே அவதானிக்க வேண்டியுள்ளது.

மிக அருமையான ஒரு புத்தகத்தை எழுதி அதற்கு ஒரு பொடியனை அறிமுக உரை எழுதச் செய்த ஆவி அவர்களுக்கு என் நன்றிகள். ஆவி இன்னும் பல புத்தகம் எழுத வேண்டும் அத்தனையும் ஒரு எழுத்துப் புரட்சி உண்டுபண்ண வேண்டும் என்று மனம் எல்லாம்வல்ல அந்த ஆண்டவனை பிராத்திகிறது.

ஒரு சிறிய பின்குறிப்பு 

நம்மள மதிச்சி ஒருத்தரும் அறிமுகவுரைலா எழுத சொல்லமாட்டாங்க... இந்த மாதிரி கற்பனையா எழுதிகிட்டா தான் உண்டு. அறிமுகவுரை என்ற பெயரில் ஆவியின் தொடருக்கு நான் எழுதியது சத்தியமான கற்பனையே 

ஒரு சிறிய குட்டு 

பதிவு முழுவதையும் படிக்கமால் பின்குறிப்பை மட்டும் படித்தவர்களுக்கு. ஏன் பாஸ் நான் பதிவு எழுதினா மட்டும் மொதல்ல பின் குறிப்ப படிக்றீங்க :-)))

ஷொட்டு 

ஆவி அவர்கள் தனது தளத்தில் எழுதிவரும் ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான் தொடருக்கு... உங்கள் தொடர் சமீப காலமாக வரவில்லை, விடாம தொடர்ந்து உற்சாகமா எழுதுங்க ஆவி பாஸ்...