17 Jul 2013

நடுநிசி நாய்கள்

என்னுடைய நைட்ஷிப்ட் பதிவை அலுவலக நண்பர் ஒருவர் படித்துவிட்டு, "பாஸ் இந்த தெரு நாய்த் தொல்லைய பத்தியும் எழுதுங்க தாங்க முடியல... அதுலையும் நடுராத்திரி ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்குள்ள ஷப்பா மிடில... நம்மாளுங்க பாதி பேர் வீட்டு வாசல் வரைக்கும் CABல போறதே இந்த நாய்ங்களுக்குப் பயந்து தான்" என்றார்.   . 

பல நேரங்களில், பல சமயங்களில் தெருநாய்த் தொல்லைகளை அனுபவித்து இருந்தாலும் அப்போது எல்லாம் அவற்றை எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை,ஆனால் கடந்த வாரம் தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எனக்கான அந்த மொமென்ட் வந்தது. 

இரவு மணி பதினொன்று இருக்கும், மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வெறும் மூன்றே மூன்று தெருக்களைக் கடந்தால் வீடு. ஆனால் இந்தத் தெருக்கள் வெறும் தெருக்களாக இல்லாமல், தெரு முழுவதும் ஆபத்து நிறைந்திருந்தால். அந்த ஆபத்தும் நாய் ரூபத்தில் தொடர்ந்தால் ...! 

முதல் தெருவின் முக்கால்வாசியைக் கடக்கும் வரையிலும் நாய்களின் பார்வைகளில் நான் இரையாக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால் அப்போது தான் அந்த சப்தம் ஆரம்பமாகியது. 

"ஊஊஊஊஊஊஊஊ", வேலை வெட்டி இல்லாத ஏதோ ஒரு நாய் எங்கிருந்தோ ஊளையிடத் தொடங்கியது. அவ்வளவு தான் அதுவரை அந்த இடத்தில் அமைதியாகப் படுத்திருந்தவன், அந்த சப்தம் கேட்டதும் உடம்பை சிலிப்பிக் கொண்டு உற்சாகமாக எழுந்து விட்டான்.

அடுத்த நொடியே "ஊஊஊஊஊஊஊஊ" என்று ரெஸ்பான்ஸ் செய்யத் தொடங்கி தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே இருந்தான். 

அவ்வளவு சப்தமாய் கத்தியும் நான் அவனை கண்டு கொள்ளவே இல்லை, அங்கு தான் அவனுக்கு கோபம் பிறந்திருக்க வேண்டும், தனது முதல் ஆயுதமான "வெறித்தனமான லொள்ளை" கையிலெடுத்தான், "லொள் லொள் லொள்" விடமால் குறைத்தான். 

எதிரியை பயமுறுத்தி விட்டால் போதும் பாதி ஜெயித்து விடலாம் என்பது தான் இவர்களது தாரக மந்திரம்.

எப்போது வேண்டுமானாலும் அவன் என் மீது பாயலாம் என்ற நிலையில் சர்வமும் அடங்கி ஒடுங்கியிருந்தது. தற்காப்புக்காக தற்சயம் என்னிடம் இருப்பது முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும் பை மட்டுமே, அதை வைத்து என்ன செய்து விட முடியும், மிஞ்சிபோனால் இரவு நேர புழுக்கத்தை போக்கும் விதமாக, அந்த நாய் முகத்தில் இதமாக காற்று வீசிவிட்டு வரலாமே தவிர அடித்து விரட்ட முடியாது.

எங்கிருந்தது வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்று தெரியவில்லை நொடிபொழுதில் ஐந்து பேர் சேர்ந்து கொண்டார்கள், அவர்கள் என்னை இன்னும் சுற்றிவளைத்திருக்க வில்லை, நானும் நிற்கவில்லை, நடந்து கொண்டே இருந்தேன், எனக்குப் பின்னால், மிக அருகில் "லொள்" தொடர்ந்து கொண்டே வந்தது. எங்கே திரும்பிப் பார்த்தால் கடித்து விடுமோ என்ற பயத்தால் திரும்பவே இல்லை, ஒரு வேளை திரும்பிப் பார்த்திருந்தால் 'அய்யோ பாவம்' என்று கருணை காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவது தெருவையும் கடந்து விட்டேன், தூரத்தில் வாட்டர் டேன்க். அதன் அருகில் பத்து நாய்கள் ஏற்கனவே தயாராகி இருப்பது தெரிந்தது, வாட்டர் டேங்க் அருகே திரும்பினால் மூன்றாவது வீடு, என் வீடு தான்

அந்தோ பரிதாபம் அங்கே ஒரு பெரும் படை எனக்காய் ஆவலாய். பின்னால் ஐந்து நாய், முன்னால் பத்து நாய், அனைத்தும் அட் எ டைமில் குறைக்க ஆரம்பித்திருந்தன,கால்கள் பரபரத்தது, மனம் பரலோகத்தில் உள்ள பரமபிதாவை ஜெபிக்கத் தொடங்கியது.  பத்து பேர் கொண்ட குழுவில் இருந்து மூன்று பேர் மட்டும் பிய்த்துப் பிடுங்கி என்னை நோக்கி ஓடி வர தொடங்கினர். நன்றாக உற்று கவனித்தேன் மூன்றும் வெள்ளை வெளேர் நாய்கள்.  

முன்னொரு முறை முட்டாய் கம்பெனி வாசலில் அண்ணனும் ஒருநாயும் கட்டிப் பிடித்துச் சண்டை போட்டனர், அன்று தான் நாய் என்ற ஜீவன் என் மனதில் முழுதாய் பதிந்தது.  அப்போது எனக்கு ஏழு வயது. சிறுவயதில் அண்ணன் என்னருகில் நின்றானென்றால் நல்லி எலும்பு போல் இருப்பான், அதனால் தானோ என்னவோ நானும் அவனும் ஒன்றாய் நடந்து சென்ற போது என்னை விடுத்து அவனை மட்டும் துரத்தத் தொடங்கியது அந்த நாய். 

இன்றும் கண்முன் விரிகிறது அந்தக் காட்சி, நல்ல வேகமாகத் தான் ஓடினான், இருந்தும் முட்டாய்க் கம்பெனியினுள் நுழைந்து விடலாம் என்று படியேறிய போது நாய் அவனை வளைத்து விட்டது. அன்று நல்ல மூடில் இருந்திருக்கும் போல வெறும் பிராண்டலுடன் விட்டு நிறுத்திக் கொண்டது. ஆனால் ஒன்று மட்டும் சத்தியமாய்ப் புரியவில்லை, கடி வாங்கியது அவன், கடித்தது நாய். இந்த இருவரையும் அடிக்காமல், ஏன் என்னைப் போட்டு அடித்தார்கள் என்று இன்று வரை புரியவில்லை. நாய் என் முதல் எதிரியான தருணம் அது.

டீன் ஏஜுக்குள் நுழைந்திருந்த நேரம்  தெருவில் எங்கு பார்த்தாலும் பஞ்சுமூட்டை சைஸில் பல பொம்மேரியன்கள் யாரையாவது துரத்திக் கொண்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் சாப விமோசனமே கிடையாது. ஒரு எச்சரிக்கை தராது ஒன்றும் தராது, இரையைப் பார்த்த நொடியே தாக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள அவசரக் குடுக்கைகள். 

என் தெருவே சொல்லி வைத்தார் போல் பொம்மெரியனுக்கு மாறியிருந்தது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தார்களோ இல்லையோ ஒரு பொம்மேரியன் வளர்த்தார்கள். வாக்கிங் கூட்டிப் போகிறேன் என்ற பேர்வழியில் இவர்கள் பண்ணும் அப்பாdogகர் வேலைகள் அப்ப்பா தாங்க முடியாது. இவற்றை வளர்பவர்களை எல்லாம் ஸ்கூல் அசெம்ப்ளியில், கொளுத்தும் வெயிலில் முட்டி போடச் சொல்ல வேண்டும்.

இவற்றை எல்லாம் கூட பொறுத்துக் கொள்வேன், ஆனால் பாழாய்ப்போன அந்த நாய்களுக்கு பெயர் வைக்கிறேன் என்ற பேரில் சீனு என்ற பெயரை வைத்து என் மானத்தை வாங்கியதை மட்டும் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. 

" சீனு வாக்", "சீனு ரன்", "சீனு ஸ்டாப்", "சீனு டேக்", " சீனு ...", "சீனு ..."," சீனு ..."

'தெருவுல நான் நடந்து போகும் போது இப்படியெல்லாம் என்ன கடுப்பேத்துனா நான் காண்டாவேனா மாட்டேனா?' பொம்மேரியன் என்னோட முக்கிய எதிரி.       

டியுசன் வாத்தியார் ஒரு நாய் வளர்த்தார், சரியான அம்மாஞ்சி நாய். தூங்குமூஞ்சி நாய். ஆளு தான் வளர்ந்ததே தவிர ஐந்தாவது அறிவு வளரவே இல்லை. நான் டியுசன் போனதே பொழுது போக்குவதற்காக, என்னுடன் முத்துவும், முத்துவுடன் அந்த அம்மாஞ்சியும் சேர்ந்து கொண்டால், தினமும் எங்களுக்கு சம்மர் ஹாலிடேஸ் தான்       

அந்த நாயை வாக்கிங் கூட்டிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு பாடாய்ப் படுத்துவான் முத்து. டியுசன் வாத்தியாரிடம் வாங்கிய அடியை எல்லாம் அதற்கு தானமளித்து விடுவான். வாயிருந்தும் குறைக்காத ஜீவன். அந்த அப்பாவி நாய்க்கு அவன் வைத்த பெயர் 'டைகர்'.

"டைகர் கம், டைகர் கம், டைகர் கம்" இதைத் தவிர அவன் அந்த நாயிடம் எதுவுமே பேசியது கிடையாது, ஏன் என்றால் அது கம்மவே கம்மாது.  ஒரு அடி கூட நகராது. தரதரவென இழுத்துக் கொண்டு போவான். ஒரு வேளை அந்த நாய் முத்து சொல்லியதை எல்லாம் கேட்டிருந்தால் நிச்சயம் இந்நேரம் முத்து ஸ்போகேன் இங்க்லீஷ் படித்திருப்பான்.       

ஒருநாள் வாக்கிங் கூட்டிச் செல்லும் போது அந்த நாயை பலமாக அடிக்கத் தொடங்கினான், சரியான அடி. கிளைமேக்சில் வில்லனிடம் ஹீரோ வாங்குவானே அதுபோல. கடனே என்று அப்பாவியாய் அடி வாங்கிக் கொண்டிருந்தது. எனக்கோ பாவமாய் இருந்தது. ஹீரோவின் தம்பி போல அவனிடம் முத்து ப்ளீஸ் விட்று என்று கெஞ்சினேன். அவன் விடுவதாய் இல்லை. 

டைகருக்குள் எங்கிருந்து அவ்வளவு ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை, நிஜ டைகராக மாறி எங்கள் இருவரையும் துரத்த தொடங்கிவிட்டது. ஓடினோம் ஓடினோம் ஓடிக் கொண்டே இருந்தோம், அது எங்களை விட வில்லை, ஒரு கட்டத்தில் அக்ரகாரத்தில் இருந்த ஒரு சுவற்றில்ன் மீது ஏறிக்கொண்டோம். எங்களை அது ருத்ர பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வளவு நேரம் "டைகர் கம்" என்றவன் இப்போது "டைகர் கோ, டைகர் கோ" என்று கிட்டத்தட்ட அழுது கொண்டிருந்தான், தோம். 

அதற்கு அடுத்த நாளில் இருந்து டைகர் சுறுசுறுப்பாக மாறிவிட்டது, ஆனால் அதனை வாக்கிங் கூட்டிப் போகத் தான் முத்து தயாராய் இல்லை.

( முத்துவைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் )

மேடவாக்கம் வீட்டிற்கு வந்த பொழுது அப்போது தான் பிறந்திருந்த மூன்று குட்டி நாய்கள் ரோட்டில் தவழத் தொடங்கியிருந்தன. மூன்றும் வெள்ளை வெளேர் குட்டிகள், அதனுடைய தாயும் வெள்ளை தான். எப்போதாவது அவற்றிக்கு சோறு போடுவேன், எலும்பு துண்டு போடுவேன். மற்றபடி கண்டு கொள்ள மாட்டேன். இந்த வீட்டிற்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது. சமகாலத்தில் இந்த மூன்றும் எருமை மாடு போல் நன்றாக வளர்ந்தும் விட்டது. 

அவர்களும் அவர்கள் நண்பர்கள் சிலரும், என் வீட்டின் அருகே இருக்கும் வாட்டர் டேன்க்கே கதி என்று கிடப்பார்கள். எப்போதாவது சோறுபோட்டால் வாலை ஆட்டிவிட்டு நன்றி கூறுவார்கள். அந்த மூன்று வெள்ளை நாய்களும் குட்டியாக இருக்கும் போது மற்ற நாய்கள் அவற்றை சாப்பிடவிடாது. அதனால் அந்த மூன்றையும் தனியாக கூப்பிட்டு சாப்பாடு போடுவேன். இதில் மற்றவர்களுக்கெல்லாம் என் மீது கோபம். தற்போது இவர்கள் வளர்ந்து விட்டாலும் இவர்களுக்கு மட்டுமே சோறு போடுகிறேன் (அதுவும் எப்போதாவது, வாரம் ஒருமுறை )

இரவு நேரம் யாரேனும் தெரியாதவர்கள் வந்தால் அவர்களை ஒரு அடி நகர விடாது. இந்த மூன்றும் சேர்ந்து அவ்வளவு அட்டகாசம் செய்யும். அலுவலகம் முடிந்த இரவுகளில் தனியாளாக வரும் பொழுது நடு ரோட்டில் மூன்றும் படுத்துக் கிடக்கும் அசையவே அசையாது, அவற்றின் மீது வண்டியின் சக்கரத்தை ஏற்றுவது போல் திருப்புவேன், அப்போதும் அசையாது. ஆனால் நிச்சயம் மனதிற்குள் நினைத்திருக்கும் "ஓவராப் போற, உனக்கு இருக்கு டி ஒருநாள்"     

சமீபத்தில் வந்த அக்னி வெயில் தாங்க முடியாமல், இந்த மூவரும் எங்கள் வீட்டு வராண்டாவில் வந்து படுக்கத் தொடங்கியிருந்தார்கள். இந்த நேரத்தில் சும்மா இருக்காமல் எங்களது ஷூ செப்பல் என பாரபட்சம் பார்க்காமல் கடித்து குதறத் தொடங்கவே அவர்களை அடித்து விரட்டத் தொடங்கினேன். நிச்சயம் மனதிற்குள் நினைத்திருக்கும் "உனக்கு போடுறேன் டா ஸ்க்கெட்ச் "       

போனவாரம் இந்த மூன்று நாய்களும் சேர்ந்து ஒரு குட்டி பாப்பாவிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தன, அந்த பாப்பா கையிலிருந்த பிஸ்கட் தான் அவற்றின் டார்கெட், அந்த வழியாக நடந்து சென்ற என்னையே அப்பாவியாய் பார்த்தாள் அந்த குட்டிப் பாப்பா, வீரமாய் அந்த நாய்களின் அருகில் சென்றேன், உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, "ஏய் ச்சூ ச்சூ" என்று விரட்டியும் அவை நகருவதாய்த் தெரியவில்லை, கல்லெடுத்து அடிக்கத் தொடங்கியதும் ஓடிவிட்டன, இன்று தான் அவை ஓவராய்க் கடியாகி இருக்க வேண்டும்.        

இந்த மூன்று வெள்ளை நாய்கள் தான் தற்போது என்னை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தன.  

நிற்கவா ஓடுவதா, இல்லை என்ன செய்ய வேண்டும் எதுவும் தெரியவில்லை, மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தேன், தூரத்தில் ஒரு கட்டை கிடந்தது கொஞ்சம் தெம்பளித்தது. பின்னால் துரத்திக் கொண்டிருந்த ஐந்து நாய்களுக்கும் இன்னும் வெறி ஏறி இருந்தது, அவற்றின் குறைப்பு அதிகமாகி இருந்தது.

தற்போது முன்னால் நின்ற மற்ற நாய்களும் ஓடி வரத் தொடங்கின, இன்னும் சிறிது தூரம் நடந்தால் என் வீட்டை அடைந்து விடலாம், ஆனால் வசமாக மாட்டிக் கொண்டேன்.

முன்னால் ஓடி வந்த மூன்று நாய்களில் ஒரு நாய் வேகமாக என் கால்களில் மோதி என்னைத் தாண்டி ஓடியது, மற்ற நாய்களும் என்னைக் கடந்து ஓடின, குழப்பமாய் மெதுவாக பின்னால் திரும்பிப் பார்த்தேன், பக்கத்து தெரு நாய்களுக்கும், இவற்றிற்கும் குருஷேத்திரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, என் வீட்டை நெருங்கும் வரையிலும் மிக பயங்கரமான சண்டை, சண்டையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பக்கத்து தெரு நாய்கள் சிதறி ஓடின.

அது வரையிலும் என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை, நான் தப்பிப் பிழைத்த சந்தோஷத்தில் மெதுவாக என் வீட்டு கதவைத் திறக்கும் போது அந்த மூன்று நாய்களும் வாலாட்டிக் கொண்டே என் பின்னால் வந்து நின்ற போது தான் உணர்ந்து கொண்டேன், சற்று நேரத்திற்கு முன் நடந்த சண்டை எனக்கானது என்று...

அனுபவம் கற்றுத் தந்த பாடம் : எந்த நாயை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம் , ஆனால் தெரு நாயை மட்டும் ம்ம்கும் பகைச்சுக்கவே கூடாது.  

30 comments:

 1. அனுபவம் கற்றுத் தந்த பாடம் அருமை..!

  ReplyDelete
 2. சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். நாய் நன்றி உள்ள மிருகம் என்று சும்மாவா சொல்கிறார்கள்.
  பாடம் - அருமை. :-)

  ReplyDelete


 3. மும்பையிலும் இதே நாய் பிரச்சினைதான் தெரு நாயை ஆறுமாசத்துக்கு ஒரு தரம் தூக்கிட்டு போயி ஊசி போட்டு திரும்பவும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.

  நான் மும்பை போகும் நாளன்று வீட்டில் வீட்டம்மா மட்டன் சாப்பாடு செய்து வைத்துவிடுவாள் ஏன் தெரியுமா ? நான் வீட்டுக்கு வந்ததும் சாப்பிடூ விட்டு அந்த எலும்பு துண்டுகளை அதுகளுக்கு போட்டு விடுவேன், அதுக அப்புறம் குறைக்காது ஆனால் மூன்று நான்கு தெருக்களை தாண்டுவதுதான் கடி"னமான ஒன்று.

  ReplyDelete
 4. நல்ல அனுபவம்தான் சீனு. படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது! (என் கஷ்டம் உங்களுக்கு சுவாரஸ்யமா என்று கோபிக்க வேண்டாம்!) பகல் வேளைகளில் இந்த நாய்களுக்கு அவ்வப்போது ஒரு பிஸ்கட் போட்டுப் பழக்கி வையுங்கள். ஒரு 10 ரூபாய் பாக்கெட் பிஸ்கட் போதும், எல்லா நாய்களுக்கும் பகிர்ந்து போட... அக்கேஷனலாக பன்.. உங்கள் வாசனை தெரிந்து படுத்த நிலையிலேயே வாலாட்டி வழியனுப்பி வைக்கும்! தூக்கம் கலைந்திருந்தால் வீடு வரை கூட வரும்! (இன்று ஒரு பிஸ்கட் கிடைக்குமா என்று!)

  "பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே..." - பழைய TMS பாடல்!

  ReplyDelete
 5. அப்பாடா என்றிருந்தது... 'பய'ங்கரமான பாடம்...!

  ReplyDelete
 6. சிலவற்றை எழுதினால் சுவராசியம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு. இந்த பதிவை படித்ததும் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். அழகாக வந்துள்ளது.

  ReplyDelete
 7. நல்ல அனுபவம்... நானும் தலைதெறிக்க ஓடிய அனுபவங்கள் ஏராளம்...

  ReplyDelete
 8. //பாழாய்ப்போன அந்த நாய்களுக்கு பெயர் வைக்கிறேன் என்ற பேரில் சீனு என்ற பெயரை வைத்து என் மானத்தை வாங்கியதை மட்டும்//

  நாய்க்கு சீனுன்னு பேர் வைக்கிறாங்களா ?

  ReplyDelete
 9. அப்பாdogகர் என்ற வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன். அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிற கலையில் தேர்ந்தவனாகி விட்டாயப்பா... சூப்பர்! நாய்களைப் பொறுத்த வரையில் பயந்து ஓடாமல் எதிர்த்து நின்று மிரட்டினால் அவை விலகிவிடும் என்பது என் அனுபவ சைக்காலஜி!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 10. //அண்ணன் என்னருகில் நின்றானென்றால் நல்லி எலும்பு போல் இருப்பான்//
  //மூன்றும் வெள்ளை வெளேர் குட்டிகள்,அவற்றிக்கு எலும்பு துண்டு போடுவேன்.//
  // முட்டாய் கம்பெனி வாசலில் அண்ணனும் ஒருநாயும் கட்டிப் பிடித்துச் சண்டை போட்டனர்//

  மூணு வாக்கியத்துக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுதே.. நீங்க தப்பிக்கறதுக்காக அண்ணன யூஸ் பண்ணிகிட்ட மாதிரி தெரியுதே..

  ReplyDelete
 11. ////பாழாய்ப்போன அந்த நாய்களுக்கு பெயர் வைக்கிறேன் என்ற பேரில் சீனு என்ற பெயரை வைத்து என் மானத்தை வாங்கியதை மட்டும்//

  விழுந்து விழுந்து சிரித்தேன்.. ரசித்தேன்.

  ReplyDelete
 12. "அப்பா DOG கர்" கள்.. இப்படி ஒரு அருமையான சொல்லை தமிழுக்கு (?!!) தந்த சீனுவுக்கு "ஜூனியர் சந்தானம்" என்ற பட்டத்தை அளிக்கிறேன்..

  ReplyDelete
 13. அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர பாலா சார் போன்ற ஒரு சில பேரால மட்டுமே முடிகிறது அந்த வரிசையில் நீங்களும் அருமை சீனு .......படிக்க படிக்க ஒரு திரில்லர் நாவலை போல இருந்தது .தொடருங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. எங்க ஏரியால, நாய் கூட்டத்துக்கு போட்டியா எருமை மாட்டு கூட்டமும் இருக்கும்...

  டூவீலர்ல போறப்ப நாம தன்னியடிச்சவன் மாதிரி ஓட்டி தான் சமாளிக்கணும்.

  ReplyDelete
 15. "சீனு பதிவு எழுது " ,"சீனு வேலைக்கு போ " இன்னும் எண்ணிலடங்கா இருக்கே மச்சி

  ReplyDelete
 16. யோவ் கண்ணாடி மச்சான் இன்னைக்கு தான்யா உம்ம பதிவ படிச்சி ரொம்ப நேரம் சிரிச்சேன் ...
  நல்லா இருக்கு ... விவரித்த விதம் தேர்ந்த எழுத்தாளரை போல் இருந்தது ... இந்த மாதிரியும் அப்ப அப்ப தொடரவும் ....

  ReplyDelete
 17. மிஞ்சிபோனால் இரவு நேர புழுக்கத்தை போக்கும் விதமாக, அந்த நாய் முகத்தில் இதமாக காற்று வீசிவிட்டு வரலாமே தவிர அடித்து விரட்ட முடியாது.//

  செம செம ....

  ReplyDelete
 18. "டைகர் கம், டைகர் கம், டைகர் கம்" இதைத் தவிர அவன் அந்த நாயிடம் எதுவுமே பேசியது கிடையாது, ஏன் என்றால் அது கம்மவே கம்மாது.//

  தம்பிகிட்ட ஏகப்பட்ட அனுபவம் பொதிந்து கிடக்கு போல...
  அப்படியே கவிதா கூட ஊர்சுற்றி நாய் கடி வாங்கிய கதையையும் போட்டிருக்கலாம் ..

  ReplyDelete
 19. அனுபவம் கற்றுத் தந்த பாடம் : எந்த நாயை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம் , ஆனால் தெரு நாயை மட்டும் ம்ம்கும் பகைச்சுக்கவே கூடாது.//

  உங்க அனுபவம் எனக்கு மாபெரும் பாடம்யா

  ReplyDelete
 20. ஹ ஹா... பாவம் நானும் சின்ன வயசுல நாய எட்டி மிதிச்சி கடி வாங்குன ஞாபகம் எனக்கு இருக்கு... நல்லா எழுதியிருக்கீங்க... நல்ல பாடம்!

  ReplyDelete
 21. ரொம்ப அனுபவிச்சு இருப்பீங்க போல...

  ReplyDelete
 22. நாய் அனுபவம் சூப்பர்! தெரு நாய்களை பகைத்துக் கொள்ள கூடாது! உண்மைதான்! நன்றி!

  ReplyDelete
 23. //"ஊஊஊஊஊஊஊஊ", வேலை வெட்டி இல்லாத ஏதோ ஒரு நாய் எங்கிருந்தோ ஊளையிடத் தொடங்கியது//

  ஹா ! ஹா ! ஹா !

  ReplyDelete
 24. //எந்த நாயை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம் , ஆனால் தெரு நாயை மட்டும் ம்ம்கும் பகைச்சுக்கவே கூடாது.//

  தத்துவம் தந்த தங்கக்கம்பி சீனுவுக்கு "ஊஊஊஊஊஊஊஊ"....!

  ReplyDelete
 25. வாத்தியார் கணேஷின் கோச்சிங் சுப்பர். சீனு நல்லா ஸ்கோர் பண்ணிட்டார்.
  ஸ்ரீராம் சொன்னதை பின்பற்றலாம். நாய் வளர்த்துப் பாருங்கள் எந்த நாயும் நம்மை துரத்தாது.
  நாங்களும் ஒரு நாய் வளர்த்திருக்கிறோம். அது இறந்து விட்டது அதை ஒரு தொடர் பதிவாகக் கூட எழுதி இருக்கிறேன். அதற்குப் பிறகு நாய் வளர்க்க விருப்பமில்லை.
  ஒரு ஏக்கப் பார்வை, ஒரு பாசப் பார்வையால் நம்மை கட்டிப் போடக் கூடியவை.
  எசமானரின் வாகன ஓசையை சற்று நேரத்திற்கு முன்னரே அறிந்து வாசலில் நின்று வரவேற்கக் கூடிய திறமை படைத்தது நாய்.
  நம்முடைய டென்ஷனை குறைத்து விடும். செல்ல நாயின் இறப்புக்கு ஒரு இரங்கல் கவிதையும் ஒரு தொடர் பதிவும் எழுதி இருக்கிறேன்.
  ஜூனோ! எங்கள் செல்லமே!

  ReplyDelete
 26. அட ரொம்பவே அனுபவிச்சு[!] எழுதி இருக்கீங்க சீனு!.....

  ஒரு முறை எனக்கும் நாய்க்கும் ஒரு ரேஸே நடந்திருக்கு.... பொதுவா டூ-வீலர்ல போகும் சிலரைக் கண்டால் நாய்களுக்குப் பிடிக்காது. அதுல நானும் ஒருத்தன்! :)

  புத்தம் புதிய தார் சாலை. அதன் மேலே மணல் தூவியிருக்கிறார்கள். நீண்ட சாலை - கடைசியில் ஒரு பக்கம் திருப்பம் -

  அந்த சாலையில் என்னை துரத்த ஆரம்பித்தது ஒரு நாய் குலைத்தபடியே.... வேகத்தினை அதிகரித்தேன.... நாயும்!

  அதற்குள் திருப்பம் வந்துவிட, அதே வேகத்தில் வண்டியை அந்த மணல் தூவியிருந்த சாலையில் திருப்பவும் முடியாது, வேகத்தினை குறைக்கவும் முடியாது நாயிடம் தப்பிக்க நான் பட்ட பாடு - நாய் பாடு! :)

  இன்றைக்கு நினைத்தாலும் மனதில் ஒரு அதிர்வு!

  ReplyDelete
 27. ரொம்பவே ரசிச்சு படிச்சேன். சீனு டச் ..!!!!!

  ReplyDelete
 28. இவனுக்குள்ள எம்புட்டு தெறம???

  ReplyDelete