1 Jul 2013

சூன்யத்தின் மறுபக்கம் - சிறுகதை


அவனுடைய முகமும் உடலும் பரபரப்பில் நடுங்கிக் கொண்டிருந்தது, நனைந்திருந்தான். எதையோ தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அல்லது தேடிக் கொண்டிருந்தான், ஒவ்வொருவரையாக உற்றுப் பார்த்துக் கொண்டே செய்வதறியாது அங்குமிங்கும் சுழன்று கொண்டிருந்தான் அதிகமான படபடப்பும், யாராலும் கண்டுபிடிக்கமுடியாத ஏதோ ஒரு அவசரமும் அவனிடம் இருந்தது. என்னை நோக்கினான். எதையோ எதிர்பார்த்து மெதுவாக என்னருகில் வருவது தெரிந்தது, இதை உணர்ந்த நான் அவசரமாய் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன்.  

நான் எப்படி இங்கே வந்தேன்...?  

மணி இரவு எட்டரையைக் கடந்திருந்த இரவு நேரம். 


'ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓ' வென்று ஆர்பரிக்கத் தொடங்கிய  கனமழை மேடவாக்கம் சாலையை மகிழ்வித்துக் கொண்டிருந்தது, கனமழையின் ஆரம்ப அறிகுறிகள் என்னுடலை நனைக்க ஆரம்பித்த தருணமே பேருந்து நிறுத்தம் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு, மழை வெடிக்கும் முன் ஒதுங்கிக் கொண்டேன். அதற்காக நான் மழைக்குப் பயந்து ஒதுங்கிவிட்டேன் என்று நினைத்துவிட வேண்டாம். போனவாரம் வாங்கிய இருபாதாயிர  சொச்சத்தி ஆண்ட்ராயிட் நனைந்து விடக்கூடாது என்ற அவசரமான பாதுகாப்பு உணர்வினால் தான் ஒதுங்கினேன்.என்னைத் தொடர்ந்து ராகவனும் அவனைத் தொடர்ந்து இன்னும் பலரும் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்தை நிரப்பத் தொடங்கினார்கள்,  இடம் கிடைக்காத சிலர் அருகிலிருந்த மற்ற ஒதுக்குப் புறத்ததைத் தேடி பதுங்ககினார்கள். ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளும் அளவிற்கு கூட்டம் சேர்ந்துவிட்டது.குளுரிலும் கடுமையான வெக்கை அந்த இடத்தை சட்டனெ சூழ்ந்து மீண்டும் குளுமையைத் தர சிறிது நேரம் எடுத்துக்கொண்டது.

பலத்த மழையிலும் வாகன இரைச்சல் நின்றபாடில்லை, வழிந்தோடும் மழைத் தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறும் அதிசியம் இந்த ஊரில் மட்டுமே காணக் கிடைக்கும். இந்நேரத்தில் சட்டென்று பூமியே அதிரும் அளவிற்கு பலத்த இடி, வெளிச்ச மின்னல். இவைகளுடன் சட்டென்று தொலைந்து போனது மின்சாரம். எதிரில் இருந்த 24 மணிநேர மருத்துவமனை மட்டும் தனது சிவப்புக் கூட்டல் குறியைப் பளிச்சிக் கொண்டு இருந்தது. 

மழைக்கு ஒதுங்கிய எல்லார் முகத்திலும் அவசரம் இருந்தது. அலுப்பு இருந்தது.  இந்த மனநிலையில் மழையை ரசிக்க முடியாமல் வெறித்துப் பார்க்க இவர்களால் மட்டுமே முடிகிறது.

காரணம் இல்லாமல் இல்லை அலுவல் தின முடிவில், வீடு திரும்பும் முன்னிரவில், எரிச்சல் தரக்கூடிய இப்படியொரு மழையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை எதிர்பார்க்கவும் மாட்டார்கள், மனைவியையும் குழந்தையையும் ம்ம்ம் தாயையும் தேடி ஓடிக் கொண்டிருக்கையில் பெய்யும் மழை கடுமையான எரிச்சல் தரக் கூடியது தான்,இருந்தும் மழையைத் திட்டாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது."ரெண்டு நாள் அடிச்சு பெஞ்சா போதும் சார், தண்ணி ஏறிரும், அதுவர கொஞ்சம் கஷ்டம் தான், போர் தண்ணிய கொஞ்சம் கம்மியா யூஸ் பண்ணிகோங்க" எல்லா வாடகைவாசிகளிடமும் ஹவுஸ் ஓனர்கள் புலம்பியிருக்கக் கூடும். அதனால் தான் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தின் மத்தியில் வராது வந்த வருணனை சபிக்காமல் வெறித்த பார்வையுடன் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள் சென்னைவாசிகள்.

மழை நிற்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. எங்கும் இருள், நிசப்தமில்லாமல் சலசலக்கும் இருள். பேருந்து நிறுத்தம்  தன் கொள்ளளவை மீறி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

சில்லென்ற காற்றும் அவை கடத்தி வந்த மழைத் துளிகளும் அத்தனை ஆண்களின் விரல் நடுக்கத்தை அதிகமாக்கியிருந்தது, உடனடி பலன் அத்தனை வாய்களிலும் வெண்ணிற சுருட்டு பஸ்பமாகத் தொடங்கியிருந்தது. பலரும் அவசரமாய் காற்றையும் அவர்களது காற்றடைத்த பையையும் கார்பனாக்கிக் கொண்டிருந்தார்கள். 

ராகவன் வாயில் இருந்த சிகரெட் ரத்தச் சிவப்பு நிறத்தில் கனன்று கொண்டிருந்தது. பற்ற வைத்திருந்த தம்மை ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே என்னிடம் கேட்டான் "டேய், தம்மு", அவன் கேட்டு முடிக்கும்போது மொத்த பேருந்து நிறுத்தமும் புகைமூட்டமாக மாறியிருந்தது.  

நானும் ஸ்மோக்கர் தான், இருந்தாலும் ஏழுமலையானின் பரிசுத்த பார்வை படவேண்டும் என்பதற்காக சில அசுத்தங்களை தற்காலிகமாக விட்டிருப்பவன்.

ஏன் இந்த தற்காலிக தடங்கல் என்கிறீர்களா? பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? உண்டென்றால் வழக்கமான அன்றாடச் செய்தியில் நாங்களும் செய்தியானது பற்றி நிச்சயம் தெரிந்திருப்பீர்கள். ஹலோ, ஒரு நிமிடம். உங்களுக்குத் தான் அது செய்தி எங்களுக்கு அது துக்கம் இல்லையில்லை இழப்பு பேரிழப்பு.

இரண்டு நாட்களுக்கு முன்பு 'காவல்துறை துணை ஆய்வாளர் இல்லத்தில் களவு, எண்பது சவரன் நகை கொள்ளை' என்ற செய்தியைப் படித்த நியாபகம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் என்னை நன்றாக உற்றுப் பாருங்கள், பாதிக்கப்பட்டது எங்கள் குடும்பம் தான், நிம்மதியை சட்டெனத் தூக்கி திருடனிடம் கொடுத்தவர்கள் நாங்கள் தான். 

சூன்யம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?  தெரிய வேண்டுமா? உங்கள் வீட்டிற்குள் திருடனை அனுமதித்துப் பாருங்கள்! இல்லையென்றால் எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா? இந்நேரம் என் அம்மா அழுது கொண்டிருப்பாள், என் அப்பா உடைந்து போன அந்த பீரோவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். சூன்யமாய்த் தான் இருக்கிறது என் வீடு. 

சூன்யம் அமைதியானது, சலனத்தை முழுதாய்க் கொடுத்து நிம்மதியை சுத்தமாய்க் கெடுக்கும் விநோதமானது. விசித்திரமான முடிவுகளை எடுக்க வைக்கும் நிலையிலானது. சூன்யம் மோசமானது.  இருபது வருட வாத்தியார் பணியில் என் அப்பா கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்த நகைகளை, ஓரிரவில் தொலைத்துவிட்டு அநாதரவாய் அழுது கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருக்கிறோம், தொலைந்து போன நகை மீண்டு வருமா, இல்லை மீண்டும் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா என்று. 

ஒருவேளை அந்த சவரன்கள் மீண்டும் கிடைத்தாலோ இல்லை பறிபோன அமைதி மீண்டு வந்தாலோ, அதற்கு அடுத்த நொடியே ஏழுமலையானைத் தேடி வருகிறேன் என்று அம்மா வேண்டுதல், அவருக்காக அல்ப விஷயங்களுக்கு தடா என்கிற ஆன்மீகக் கட்டுப்பாட்டில் நானும்

மழை என்னை தாமதபடுத்தியத்தை வீட்டில் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த இருபதாயிரத்தை வெளியில் எடுத்தேன்,  

இந்த நேரத்தில் தான் அவன் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான், யார் என்கிறீர்களா? முதல் பாராவில் சொன்னேனே. படபடப்பாய் முகம் வைத்துக் கொண்டு, எதையோ தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பெயர் தெரியாத அவன் என்று சொன்னேனே. அவன் தான் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான்.

அவனது சட்டைக்குள் தொங்கிக் கொண்டிருந்த நல்ல தடிமனான தங்கச் சங்கிலி அந்த இருளிலும் மின்னியது, அப்பாவிடம் கூட இப்படி ஒன்று உண்டு, ஆனால் இப்போது இல்லை, இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் அவர்களது நகை தான் கண்ணில் தட்டுப்படுகிறது. அந்த செயினைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முழுவதுமாய் நெருங்கிவிட்டான் நெருங்கியவன் என்னிடம் மெதுவாய் சன்னமாய், 

" பாஸ் எப்படி கேக்குறதுன்னு தெரியல, கொஞ்சம் கூச்சமா இருக்கு, கையில பணம் எடுத்துட்டு வரல" அவன் சன்னத்தில் சற்றுமுன் தூக்கியெறிந்த கிங்க்ஸ் பரவியிருந்தது.   

அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக என்ன காரணம் சொல்லப்போகிறேன் என்பதை மூளை வேகமாய்த் தேடத் தொடங்கியது, இருந்தாலும் அவன் நகையெல்லாம் அணிந்திருப்பதால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். 

"பிரண்ட பார்க்க வந்தேன், மழையில மாட்டிட்டேன், கொஞ்சம் உங்க போன் கொடுத்தா, அவனுக்கு போன் பண்ணி இங்க வர சொல்லிருவேன்" அதிகமாகவே கூனிக்குறுகிப் போயிருந்தான், கெஞ்சலான தமிழ். அட இதைக் கேட்பதற்கா இவ்வளவு வெட்கப்பட்டான், பதற்றப்பட்டான். அவன் கூறிய நம்பரை ஆண்ட்ராயிடில் தடவிக் கொடுத்தேன்.   

அத்தனை பெரிய போனை தன் உள்ளங்கையால் பொத்திக் கொண்டே ரகசியம் பேச ஆரம்பித்தான், பேச ஆரம்பித்ததவன், கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் இருந்து விலகி நகர ஆரம்பித்தான். மனதிற்குள் சந்தேக மின்னல் கீறியது, ஒருவேளை எனது போனை திருடப் பார்க்கிறானோ என்று நினைப்பதற்குள், எனது எல்லையில் இருந்து அவன் தப்பிப் போகாமல் தடுப்பதற்குள், சடுதியில் எனது கண்களில் இருந்து மறைய எத்தனித்தான், எனது அவசரகால நிலையை உணர்ந்து கொண்ட ராகவனும் அவனைக் குறிவைத்தான். 

அவனைப் பார்த்தால் திருடன் போலவே தோன்றவில்லை, எனது எதிர்த்த வீட்டு ஆனந்தைப் போல இயல்பாய் இருந்தான், அவனது அசைவுகள் நகர்வுகள் கூட அவசரமாய் இல்லை ஆனால் படபடப்பாய் இருந்தது, இருந்தாலும் இருபதாயிரம் ரூபாய் ஆண்ட்ராயிடை அத்தனை எளிதாய் விட்டுவிட முடியாதே.அவனுடனேயே நானும் ராகவனும் நகர ஆரம்பித்தோம். 

யாருமே எதிர்பாராத அந்த தருணத்தில், எங்கள் பின்னால் இருந்து பலமாய் வந்த அந்த தள்ளுவிசை எங்களை நிலைகுலயச் செய்தது. என்னிடம் போன் வாங்கியவன் கழுத்தில் மின்னிய தங்க சங்கிலியை அவசரமாய் பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான் எங்கிருந்தோ செயல்பட்ட அவசரத் திருடன். செயின் இழுபட்ட வேகத்தில் நிலை குலைந்து பேருந்து நிறுத்த கான்க்ரீட் தூணில்  மோதி ரத்தம் சொட்ட மயக்கம் போட்டு விழுந்தான் சமீபத்தில் செயினைப் பறிகொடுத்தவன்.

மயங்கியவனை ராகவன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தில் எனது மொபைலை எடுத்துக் கொண்டு அந்த திருடனைத் துரத்த ஆரம்பித்தேன்.

மின்சாரம் இல்லா சாலைகள் மீது கடந்து கொண்டிருந்த கார்கள் வெளிச்சம் பாய்ச்சினாலும், கடும் மழை, தண்ணீர் வழிந்தோடும் சாலை, சாலையோர நெரிசல் என்று எதுவுமே அவனைத் துரத்த உதவவில்லை, என்னைத் தவிர வேறு யாருக்கும் மழையில் நனைந்து கொண்டே அவனைத் துரத்தவும் தயாராயில்லை, தனியொருவனாய் துரத்த ஆரம்பித்தேன், நீல்கிரீஸ் சந்தில் நுழைந்து வேகமாய் ஓடத் தொடங்கினான். சில தூரத்திற்கு சிலரின் டார்ச் வெளிச்சங்கள் அவனைத் துரத்த உதவின.

அவனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற மூர்க்கத்தில் இருந்தேன், சமீபத்தில் நகையைப் பறிகொடுத்ததன் வலி மற்றும் அதனால் ஏற்பட்ட வேதனை, தற்போது எங்களைச் சூழ்ந்திருக்கும் சூன்யம் அத்தனையையும் இதன் மூலமாவது பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இன்னும் ஆவேசமாய் முன்னேறினேன்.
சட்டென எங்கும் நிசப்தம், எங்கும் இருள், சுற்றிலும் கான்கிரீட் ஆடம்பரங்கள், கிட்டத்தட்ட எனது தெருவின் பக்கத்து தெருவில் நின்று கொண்டிருந்தேன், அவனைக் காணவில்லை, ஆனால் அவன் தப்பியிருக்க முடியாது, இங்கே தான் எங்கோ ஒளிந்திருக்க வேண்டும். எனது முதுகு கூட அவனைத் தேடிக் கொண்டிருந்தது. தெருவோர வாகைமரத்தின் பின்னால் மெல்லிய அசைவு தெரிந்தது, மெல்ல மெல்ல அந்த அசைவைப் நோக்கி பம்மிக் கொண்டே செல்லும் போது, 

"லொள்...லொள்லொள்லொள்...லொள்" அறிவில்லாத தெருநாய் திருடனை விட்டுவிட்டு என்னைப் பார்த்து குலைக்க ஆரம்பித்தது, அவன் சுதாரித்துக் கொள்வதற்கு முன், அவன் சட்டையைப் பிடித்து விட்டேன், முகத்தில் ஓங்கி ஒரு குத்து, எனது கன்னம் வலித்தது, லேசாக ரத்தம் எட்டிப் பார்த்த ஈரம் உறுத்தியது. எனது கோவம் இன்னுமின்னும் அதிகமானது, இன்னும் பலமாய் அவனைப் பிடித்து கட்டி உருண்டேன், அவன் கையில் பிடித்திருந்த சங்கிலி அருகில் புதிதாய் தேங்கிய நீரின் அருகில் விழுந்து மறைந்தது, சட்டையைக் கிழித்துக் கொண்டு அவசரமாய் மறைந்துவிட்டான்.

முகத்தாடை வலியெடுத்தது, அவன் கையிலிருந்து நழுவிய சங்கிலியைத் தேடினேன், கையெல்லாம் சகதி, எப்படியாவது அதைக் கண்டெடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அங்கேயே உருண்டு புரண்டேன். திடிரென்று வெட்டிய மின்னலில், மின்னியது அந்த சங்கிலி, நுனிப் புல்லின் மீது வடிவம் இல்லா பொன்னிற அமீபா போல் பரவி இருந்த அந்த சங்கிலியை அவ்விடத்தில் அடையாளம் கண்டதும் என் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.

சூன்யம் அத்தனையும் கழிந்து, புதிதாய்ப் பிறந்தது போல் உணர்வு, உடனடியாய் ராகவனுக்கு போன் செய்தேன், "சங்கிலி கிடைச்சிட்டு, ஆனா மிஸ் ஆயிட்டான்" என்பதுடன் நடந்த அனைத்தையும் சொன்னேன்."மயக்கம் தெளிஞ்சதும் அழுதான். இருக்க சொன்னேன், அவன் கேக்கல, இப்போ தான் கிளம்பி போனான், பரவாயில்ல உடனே 24ஹவர்ஸ் ஹாஸ்பிடல் வா, அவன் ரொம்ப தூரம் போயிருக்க மாட்டான் " என்றான். விரைந்தேன்.

ஹாஸ்பிடல் வாசலில் ராகவனும் எனது அண்ணனும் எனக்காய்க் காத்திருந்தனர், எனது அண்ணன் போலீஸ் சீருடையில் இருந்தான், பள்ளிக்கரனை எஸ்.ஐ. சம்பவம் நடந்த இடைப்பட்ட நேரத்தில் ராகவன் அவனை அழைத்திருக்கக் கூடும், அண்ணன் வந்து சேர்ந்ததும் நல்லதுக்குத்தான், அவசரமாய் என் கன்னத்தைத் தொட்டுபார்த்தான், வலித்தது, என்னிடமிருந்து செயினை வாங்கிப் பார்த்தான், சிரித்தான், பைக்குள் போட்டுக்கொண்டான்.

நாங்கள் மூவரும் அவன் சென்ற வழியில் தொடர ஆரம்பித்தோம், அவ்வபோது பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே அவசரமாய் நடந்தான், அவன் நடையில் மிகத் தீவிரமான அவசரம் தெரிந்தது, எங்கள் நடையில் மிகத் தீவிரமான மௌனம் இருந்தது. வெகு தூரத்தில் ஒரு சந்தினுள் அவன் நுழைந்தான்.

அன்றைய இரவு எப்போதும் போன்ற ஒரு இரவாக முடியவில்லை.

அடுத்த நாள் காலை சஷ்டி கவசம் வழக்கத்தை விட சத்தமாய்ப் பாடிக் கொண்டிருந்தது, அம்மா முகத்தில் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது, அண்ணன் வீட்டில் இல்லை, மேஜையில் இருந்த பேப்பரின் முதல் பக்கத்தையே ஆர்வமாய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. நேற்று என் அண்ணன் கையில் கொடுத்த அந்த தங்கச் சங்கிலி இப்போது அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது, அதனை தன் விரல்களால் வருடிக் கொண்டே அந்த செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார்.

"மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் நேற்று இரவு வளைத்துப் பிடித்தனர், பள்ளிகரணை துணை ஆணையர் தலைமையிலான குழு தொடர் கொள்ளையர்களை கையும் களவுமாகப் பிடித்தது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு கமிஷ்னர் பாராட்டு."

கீழே அச்சிடப்பட்திருந்த புகைப்படத்தில் ராஜா என்ற பெயரில் இருந்தவன் தலையில் கட்டு போடபட்டிருந்தது. அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தான் அந்த ராஜா. எந்த ராஜா என்கிறீர்களா? முதல் பாராவில் சொன்னேனே. படபடப்பாய் முகம் வைத்துக் கொண்டு, எதையோ தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பெயர் தெரியாத அவன் என்று சொன்னேனே. அவனே தான்.சூன்யத்தின் மறுபக்கம் அமைதியானது, சலனமற்ற அமைதியானது, வெளியில் இருந்து பார்த்தால் உணர்ந்துகொள்ள முடியாத அலாதியான மௌனமானது. சூன்யத்தின் மறுபக்கம் அற்புதமானது.

42 comments:

 1. விறுவிறுப்பான சுவாரஸ்யமான கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வைகோ சார், முதல் வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும்

   Delete
 2. நல்லா இருக்குது சீனு.....அறிவில்லாத நாய்....ஹா ஹா சூன்யமான இரவுகளில் இந்த கதை நியாபகத்திற்க்கு வரும். குறும்படமாக மனசுக்குள் விரிகிறது .......

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றிண்ணே

   Delete
 3. mmmm....

  viru viruppu...

  arumai..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சீனி, வெகுநாளைக்குப் பின்னான உங்கள் வருகைக்கு

   Delete
 4. திகிலான திருப்பங்களுடன் ...அருமை.தொடருங்கள் சீனு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கவியாழி, சிறுகதையை திகில் கதையாய் மாற்றியமைக்கு :-)

   Delete
 5. மழையும், படித்த செய்தி ஒன்றும் நல்ல கதை ஒன்றுக்கு உதவின. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் சீனு.

  ReplyDelete
  Replies
  1. அடிகடி படிக்கும் செய்தி சார், மழை தான் போக்கு காட்டுகிறது :-) அதனால் தானோ என்னவோ தேவையில்லாமல் மலையின் வர்ணனை அதிகமாகிவிட்டதோ என்று வருந்துகிறேன், அவற்றை இன்னு கொஞ்சம் எடிட்டி இருந்தால் கதையின் வேகம் அதிகரித்து இருக்கும் என்று நினைக்கிறன்....

   Delete
 6. சீனு!கலக்கலா எழு இருக்க. ஒருசெய்தியை விறுவிறுப்பான கதைய மாத்திட்ட, நரேஷன் அருமை.
  ஊர்ல இருந்து வந்ததும் படிச்ச முதல் பதிவுதான், அசத்தல் ரகம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏழுமலையான் தரிசனம் நல்லா இருந்ததா சார் :-)

   உற்சாகமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

   Delete
 7. சுவாரஸ்யமாக இருந்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி டிடி

   Delete
 8. சுவாரஸ்யமான கதை சீனு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்

   Delete
 9. விறுவிறுப்பான கதை...

  சம்பவம் எல்லாம் நம்ம ஏரியால தான் நடக்கணுமா? டவுட்...

  அடுத்த நாள் காலை நடக்கும் நிகழ்வுகள் சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்க்கும் விதம் பாராட்டுக்குரியது.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. சம்பவத்திற்காக ஏதோ ஒரு இடத்தை தேடி ஓடுவதற்கு பதிலாக, நான் இருக்கும் இடத்தில சம்பத்தை நிகழ்த்தி விட்டால் கொஞ்சம் எளிதாக இருக்குமே, (பயண செலவு மிச்சம் ) ஹா ஹா ஹா...

   மிக்க நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 10. சிறப்பான கதைக்குப் பாராட்டுக்கள்.1

  ReplyDelete
 11. பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை புலப்படும்!
  யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்....
  நல்ல விருவிருப்பான மர்மக்கதையை படித்த திருப்தி.
  மழையிலும் வேர்க்கவைத்த எழுத்தாளுமை நண்பா!

  ReplyDelete
  Replies
  1. //மழையிலும் வேர்க்கவைத்த எழுத்தாளுமை நண்பா!// அட, மிக்க நன்றி சார்

   Delete
 12. சுவாரஸ்யமான கதை...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சங்கவி :-)

   Delete
 13. சூனியத்தின் மறுபக்கம் அற்புதமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் உங்கள் கதை அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. சூன்யத்தின் மறுபக்கம் ஆழ்கடல் போன்ற அமைதியானது, அதை உணரும் தருணம் நமக்கு எபோதாவது தான் வாய்க்கிறது, அதனால் அது அற்புதம் தானே :-) மிக்க நன்றி டினேஷ்

   Delete
 14. வெகுவாய் ரசித்த எழுத்து நடை... உங்கள் எழுத்துடன் காட்சிகளும் ஓடியது... சமீபத்தில் உங்கள் ஆண்டிராய்டு போனை பாதுகாக்க மழைக்கு ஒதுங்கிய போது தோன்றிய கருவோ?

  ReplyDelete
  Replies
  1. அந்த புது ஆண்ட்ராயிடை மழைக்குப் பயந்து எடுத்துப் போகாமல், மழையில் ஒதுங்கிய போது மழையையும், ஆண்டராயிடையும் கொண்டு எழுத வேண்டும் என்று தோன்றி, இறுதி வடிவம் நான் எதிர்பார்க்காதது போல் அமைந்து விட்டது :-)

   Delete
 15. /எனது முதுகு கூட அவனைத் தேடிக் கொண்டிருந்தது.//செம..

  ReplyDelete
  Replies
  1. அந்த வரிகளை ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி சார்

   Delete


 16. கதை நல்ல விறுவிறுப்பாக இருந்தது சீனு... சிறுகதைகள் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது ஒரு தொடர்கதை எழுதுகிறேன் சார், அதை முட்டி மோதியாவது முடிக்க வேண்டும், அதற்க்கு இடைப்பட்ட வேளையில் சிறுகதைகள் எழுத நிச்சயம் முயலுகிறேன், ஆரம்பம் முதலே சிறுகதைகளை உற்சாகப்படுத்துவது மகிழ்ச்சியாய் உள்ளது சார்

   Delete
 17. வெகு இயல்பாய் சொல்லி செல்லும் மென்மையான வார்த்தைகள் ...
  இதுதான் தேவையாய் இருக்கிறது அது இந்த படைப்பில் ஒரளவு வந்ததாக உணர்கிறேன் சீனு ...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் அரசன், அந்த நிலை இன்னும் ஓரளவிற்கு முன்னேற வேண்டும் என்று நினைக்கிறன், நிச்சயம் அந்த பாதையை நோக்கி பயணிப்போம்

   Delete
 18. சீனு உங்களை கலாய்த்து ஒரு பதிவு என் வலைத்தளத்தில் நேரம் இருந்தால் வரவும் http://avargal-unmaigal.blogspot.com/2013/07/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா படித்து வியந்து ரசித்தேன் சார் :-)

   Delete
 19. இத்தனை பேருக்கு புரிந்திருக்கிறதா.. எழுத நினைச்ச கமென்டை மாத்திகிட்டு மறுபடி படிச்சுப் பாக்குறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை சார், உங்கள் வருகையை தேடிக் கொண்டிருந்தேன், புரியாத மாதிரி குழப்பமா எழுதிட்டனா, முதல் பாதி கொஞ்சம் இழுவை போல் தான் நானும் உணர்கிறேன், இன்னும் கொஞ்சம் கட் செய்து இருக்கலாம், இருந்தும் சீக்கிரம் மறுமுறை படித்துவிட்டு உங்கள் பார்வையை பகிருங்கள்

   Delete
 20. இத்தனை பேருக்குப் புரிந்திருக்கிறது. எனக்குப் புரியவில்லை என்று எழுதினால் நல்லா இருக்காது என்று நினைத்துக் கொண்டே வரும்போது, அப்பாதுரையின் காமென்ட் எனக்கு உதவியது. கொஞ்சம் குழப்புகிறதே கதை! ஒரே திருடனா? இரண்டு பேரா? மொபைல் வாங்கியவன் கழுத்துச் செயினை இன்னொரு திருடன் பறித்தானா?

  //படபடப்பாய் முகம் வைத்துக் கொண்டு, எதையோ தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பெயர் தெரியாத அவன் என்று சொன்னேனே. அவனே தான்.// இவன்தானே உங்களிடம் வந்து மொபைல் போன் வாங்கிக் கொண்டு மறைந்தவன்?

  புரியவில்லையே!

  ReplyDelete
 21. காலத்திற்கேற்பவான மனமாறுதல்களைச் சொல்கிற கதை. அந்த விதத்தில் நன்றாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.

  நான் வேறு மாதிரி நினைத்தேன். 'மழைக் களேபரத்தில் அந்த இருபதாயிரம் ஆன்ட்ராய்ட் முக்குளிக்க நனைந்து சவசவத்துப் போனாலும் இழப்பாய்த் தெரியவில்லை. செயினை பறிகொடுத்தவனிடம் சேர்த்த நிம்மதி பெருமிதமாய் மனசில் நிறைந்திருந்தது'-- என்கிற மாதிரி.

  ReplyDelete
 22. சீனு, அற்ப்புதமான சுவாரஸ்யமான கதை... வாழ்த்துகள்...

  ReplyDelete
 23. கதை சொல்லுகிற விதம், வர்ணனைகள், படிப்பவரை உடன் பயணிக்க வைப்பது, அழகான வார்த்தையமைப்பு என்று எல்லா விதத்திலும் சிறுகதையில் தேறிவிட்டாய் சீனு! அசத்தறே! நீளம்தான் கொஞ்சம்கூட. எடிட்டிங்கில்தான் நீ இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கு!

  ReplyDelete
 24. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்!

  ReplyDelete