24 Jul 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 24-07-2013

ஜஸ்ட் ரிலாக்ஸ்

ஜஸ்ட் ரிலாக்ஸ் எழுதி சில மாதங்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறன், இனிவரும் மாதங்களில், மாதம் ஒருமுறையாவது எழுத வேண்டும். எவ்வளவோ பதிவுகள் எழுத நினைத்தும் நேரம் ஒத்துழைக்க மறுக்கிறது. ஒத்துழைக்க மறுக்கும் நேரத்தை எப்பாடுபட்டாவது சிறை பிடிக்க வேண்டும்.

காதல் கடிதம் - போட்டி முடிவுகள் 

காதல் கடிதம் பரிசுப் போட்டிக்கான முடிவுகள் ஆகஸ்ட் இருபதாம் தேதி வெளியிடப்படும். இவை குறித்த விரிவான தகவல்களையும் மொத்த பதிவுகளின் தொகுப்புகளையும் வெள்ளிகிழமை தனியொரு பதிவாக வெளியிடுகிறேன்.

செங்கோட்டை - பிராணூர் பார்டர் 

சிறு வயதில் "மாமா பார்டர்ல பரோட்டோ வாங்கிட்டு வருவாங்க தூங்கிராத" என்று அம்மா சொல்லும் போதெல்லாம் பயங்கர குழப்பமாய் இருக்கும், ரோஜா படம் பார்த்ததில் இருந்து என்னைப் பொறுத்த வரை பார்டர் என்றாலே காஸ்மீர் தான். அதனால் தானோ என்னாவோ யாராவது பார்டர் என்று சொன்னாலே, காஸ்மீர் தென்காசிக்குப் பக்கத்தில் தான் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

செங்கோட்டை தென்காசிக்கு அருகில் இருப்பதால் டெல்லி கூட தென்காசிப் பக்கம் என்று எண்ணிக் கொண்டிருந்த அதிவீர பராக்கிரம புத்திசாலி நான்.

தென்காசியில் எங்கு நின்று பார்த்தாலும் பொதிகைமலை கம்பீரமாய்த் தெரியும், அதனால் நிச்சயம் காஷ்மீர் பொதிகை மலையில் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் கூட சிலசமயம் எண்ணியிருக்கிறேன்.  

சில வருடங்களுக்குப் பின் "பார்டர்னா கேரளா பார்டர், காஸ்மீர் பார்டர் கிடயாது" என்று மாமா தலையில் குட்டி விளக்கினாலும் ஒரு  சந்தேகம் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. தற்போதைய கேரளா பார்டரான புளியரை, தென்காசியில் இருந்து இருபது கி.மீ தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து பத்து கி.மீ தொலைவிலும் உள்ளது. 

"அப்போ புளியரை தான கேரளா பார்டர், ஏன் செங்கோட்டையப் போய் பார்டர்ன்னு சொல்றாங்க" எனக்குள் இருக்கும் சாக்ரடீஸ் எழுப்பிய ஏன் எதற்கு எப்படிக்கு  பதில் "ஏம்ல கேள்வியா கேட்டு உசுர வாங்குற".

ஏன் என்பதன் விடை கடந்த வருடமே எனக்குத் தெரிந்தது. பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் செங்கோட்டை திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. அந்த நேரத்தில் தமிழகம் மற்றும் தென்காசியின் எல்லையாக விளங்கிய இடம் பிராணூர் என்னும் கிரமாம் அல்லது தற்போதைய பிரானூர் பார்டர். 


தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் 

ஜெயமோகனின் அறம். இந்த ஜென்மதிற்குள்ளாவது இந்தப் புத்தகத்தை படித்து முடித்து அரசனிடம் கொடுத்து விட வேண்டும், அரசன் நிச்சயம் இந்நேரம் என்னிடம் அறம் புத்தகத்தை இரவல் கொடுத்ததற்காக இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறன். "டோன்ட் வொரி ராசா, சீக்கிரமா தந்த்ர்றேன்.

அறம் புத்தகத்தில்  நூறு நாற்காலிகள் என்னும் கதை படித்துக் கொண்டுள்ளேன், இதில் வரும் காட்சிகளை கண்முன் கொண்டுவரவே தனி தெம்பு வேண்டும். அத்தனை கொடுமையான சாதீயக் கதை.

சென்னையில் பதிவர் திருவிழா 
இந்த வருடத்திற்கான பதிவர் திருவிழா வேலைகளை உற்சாகமாக தொடங்கியாயிற்று. தேதியும் குறித்தாயிற்று. செப்டம்பர் ஒன்றாம் தேதி பதிவர் சந்திப்பு. நண்பர்களே அவசியம் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவரையும் எதிர்பார்த்து கொண்டுள்ளேன்(ளோம்). 

சந்திப்பு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பதியும் விதத்தில் புதிய வலைபூ ஒன்று தொடங்கியாயிற்று, நீங்களும்  வலைப்பூவில் இணைந்து சந்திப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் தமிழ் பதிவர்களுக்கான முழுமையான ஒரு வலைதளமாக விரைவில் உருவெடுக்கும். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். 

தமிழ் வலைபதிவர்கள் குழுமம்   மற்றும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு 

(ஆ)விபத்து   

கோவையில் ஒரு மழைக் காலம் ஆவிக்கு போதாத காலமாகிவிட்டது. கனமழையில் எதிர்பாராத நேரத்தில் அவரடித்த பிரேக் அவரை நிலைகுலையச் செய்து ஒரு விபத்தில் தள்ளிவிட்டது.அன்று மட்டும் அவர் ஹெல்மட் அணியாதிருந்தால் மிகப்பெரும் சிக்கலை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். எப்படியும் அது பற்றிய தனியொரு அனுபவ(!) பதிவை அவரே எழுதுவார் என்று தெரியும், அதனால் அவ்விசயங்களை அவரே பகிரட்டும்....

ஹெல்மட் அணிவது கட்டாயம் அவசியம். 

ஆவிப்பா 

இந்த ஆவி அடிபட முக்கியாமான காரணம் யாரோ இவரது ஆவிப்பாவைப் பார்த்து கண்ணு போட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறன். முகநூளில் ஆவிப்பா என்ற பெயரில் இவர் செய்து கொண்டிருக்கும் அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சம் அல்ல, இதில் நான்  ரசித்தது.

இதயம் இல்லாதவன் என்று 
குற்றம் சாட்டுகிறாய் - சரிதான் 
நீ எடுத்துச் சென்ற பொருளை 
நீயே மறப்பது நியாயம்தானோ ?

# ஆவிப்பா 

கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்

கொஞ்ச காலம் கடல் படத்தின் அடியே பாடலும் மூங்கில் தோட்டமும், நெஞ்சுக்குள்ள சாங்கும் என்னைக் கட்டிப் போட்டிருந்தன. இப்போது சில நாட்களாக ஆனந்த யாழை மட்டுமே மீட்டிக் கொண்டுள்ளேன். 

உன் முகம் பார்த்தால் தோணுதடி      
வானத்து நிலவு சின்னதடி 

மேகத்தில் மறைந்தே பார்க்குதடி 
உன் முகம் பார்த்து ஏங்குதடி 

இந்த வரிகளைக் கேட்கும் வரை பாடல் வெகு சாதாரணமாய் சென்றது போன்ற உணர்வு, ஆனால் இதற்கு அடுத்த வரியில் தான் நா.முத்துகுமார் கம்பீரமாய் தன் அரியாசனத்தில் ஏறி அமருகிறார்... அந்த வரிகள்... 

அதை கையில் பிடித்து 
ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி 

நிலவுக்கே தன் மகள் தான் ஆறுதல் கூற வேண்டுமாம், FANTASTIC... 


ஜஸ்ட் க்ளிக் 

நடுரோட்ல இந்தக் கம்பத்துக்கு மேல ஏறி மூணு கம்ப நட்டவன தான் தேடிட்டு இருக்கேன். அவன அந்தக் கம்பாலையே அடிக்கணும். 

இடம் - சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா நுழைவாயில்  

  

21 comments:

 1. எல்லாமே கலக்கல்.. அடுத்தாத்து பையன் போலியே எழுதுற..

  ஆவி அண்ணன் குணமாகட்டும்..

  ஆமா யாரியாது.. போர்டு மேல விக்கட் வைச்ச பய..

  ReplyDelete
 2. ஆவி முதல் முதலா என் பிளாக் வந்து கமெண்ட் போட்டார். அன்றுதான் விபத்து நடந்தது. இது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறேன்.,

  ReplyDelete
 3. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்கும்.

  ReplyDelete
 4. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

  ஆவிப்பா குணமடைய வாழ்த்துக்கள்.

  அந்த மூன்று கம்பை அங்கே கொண்டுபோய் நட்டவன கண்டுபிடித்தால் இங்கேயும் பார்சல் செய்யவும் எனக்கும் நாலு அப்பு அப்பனும்போல இருக்கு.

  ஐயம் ரிலாக்ஸ் நௌ....!

  ReplyDelete
 5. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனாலும் குற்றாலம், தென்காசி பார்த்ததில்லை. ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்.

  ஆவி அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். இரண்டு கையுமா? அடப்பாவமே...

  நிஜமாகவே அத மூன்று கம்பு எப்படி வைத்தார்கள் அங்கே? இல்லை ஏதாவது ஃபோட்டோஷாப் வேலையா?

  ReplyDelete
 6. பரோட்டா நன்றாக வேலை செய்து நல்லதொரு தகவலை அளித்து விட்டது... ஹிஹி...

  ஆவி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

  பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ஜஸ்ட் ரிலாக்ஸ் மாதம் இருமுறையாவது தொடரட்டும்...!

  ReplyDelete
 7. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. ரொம்ப நாளைக்குப் பிறகு சூப்பரான ரிலாக்ஸ்....

  நான் கூட எங்க ஊரில் தெரியும் மேற்கு தொடர்ச்சி மலையைப் பார்த்து இமயமலை என்று எண்ணியிருக்கிறேன்... ஹாஹா... நானும் அதிவீர பராக்கிரம புத்திசாலி தான்...

  ReplyDelete
 9. ஜஸ்ட் ரிலாக்ஸ்.... நன்றி.... :)

  பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்... கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை! அலுவலகத்தில் டன் கணக்கில் ஆணி....

  கோவை ஆவி.... விரைவில் குணமடையட்டும்....

  ReplyDelete
 10. அந்த உயரத்துல கம்பு நட்டவனை சீக்கிரம் கண்டுபிடியா சீனு...

  ReplyDelete
 11. ஆமாம் அது என்ன இரட்டை இலை சின்னத்தில் லைட் கம்பம்?
  நம்ம வரி பணத்துல இவுங்க கட்சிக்கு விளம்பரம்! டூ பேட்...

  ReplyDelete
 12. // மாதம் ஒருமுறையாவது எழுத வேண்டும்// வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 13. ரொம்பவும் ரிலாக்ஸ்டாக எழுதி எங்களையும் ரிலாக்ஸ் பண்ணிவிட்டீர்கள்.
  உங்களுக்கும் இருக்கும் 'சாகரடீசை' அறிமுகம் செய்ததற்கு நன்றி!

  கோவை ஆவி (ஆனந்த விஜயராகவன் - அவரது நிஜப் பெயர், இல்லையா?) சீக்கிரம் உடல் நலம் தேறி மறுபடி பதிவுலகில் வலம் வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. நான் இன்னும் பார்டர் பரோட்டா சாப்பிட்டதே இல்லை :(

  ReplyDelete
 15. ரிலாக்ஸ் பதிவு கலக்கல்! நண்பர் ஆவி பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 16. யோவ் பொறுமையாவே படிச்சிட்டு கொடு ... இங்கிட்டு நெறைய பிசி ... புத்தகம் படிக்கும் அளவுக்கு நேரமில்லை ... பார்டர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது ... இந்த ஸ்டம்ப் வைச்ச பசங்க பெயில்ஸ் வைக்க மறந்துட்டாங்க சீனு , கொஞ்சம் வைத்து விடவும் ...

  ReplyDelete
 17. உங்க சிறு வயசு பார்டர் கதை நல்லா இருக்கு. ரசிச்சேன்.

  ReplyDelete
 18. கால் கட்டு போட வேண்டிய வயசுல கைக்கட்டு போட்டு இருக்கும் ”ஆவி” சீக்கிரம் பூரண நலம் அடைய சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்.

  ReplyDelete
 19. ஜஸ்ட் ரிலாக்ஸ் விறுவிறுப்பா போகுது.

  கோவை ஆவி பூரண குணமடைய பிராத்திக்கிறேன்..

  ஆமா எதுக்காக அந்த கம்ப நட்டு வச்சிருக்காங்க..

  ReplyDelete
 20. அப்படியா.. ஆவியுடன் தொலைபேசுகிறேன்..

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பு வெற்றிக்கு வாழ்த்துக்கள்

  நண்பர் குணமாக வாழ்த்துக்கள்

  பதிவு எழுத நேரமில்லை எனினும் ஜஸ்ட் ரிலாக்ஸ் நேரத்தில் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள்

  ReplyDelete