20 Jun 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - குற்றாலம் சுத்தலாம் வாங்க

காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக நகர்த்தத் தொடங்கினார். அப்போது எனது வயது ஐந்ததைத் தொட்டு ஆறை நோக்கி வளர்ந்து கொண்டிருந்தது. எனது முதல் கல்விச் சுற்றுல்லா மற்றும் குற்றாலம் என் நினைவில் பதிந்த முதல் சுற்றுல்லா.

வாழ்வில் முதன்முதலில் பார்த்ததாய் நினைவில் இருக்கும் அன்றைய பழைய குற்றாலம் வெறிச்சோடிக் கிடந்த போதும் முழுமையாய் நினைவில் இருக்கும் அதன் குளுமை. வெள்ளை சட்டை, ப்ளு ட்ரவுசர். "டீச்சர் சேட்ட பயங்கரமா பண்ணுவான், உங்கள நம்பி தான் அனுப்புறேன்" என்று அம்மா சொன்னதற்காகவே எனது கையை விடாமல் பிடித்திருந்த டீச்சர், அதையும் மீறி அருவியைப் பார்த்த சந்தோஷத்தில் ஆர்ப்பறித்து ஓடி அடிவாங்கியதன் வலி. 


கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை என்னையும் மீறி பறித்து உடனடியாய் மரத்தில் ஏறிக் கொண்ட குரங்கு, பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ரூபாய், கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில். அதில் இருந்த மொத்த வெந்நீரையும் தூர ஊற்றி குளுமையான நீரை நிரப்பி திரும்பும் வழியெல்லாம் குடித்துக் கொண்டே வந்த பேருந்துப் பயணம். எதுவும் மறக்கவில்லை. இதற்கு முன்பே என்னை குற்றாலம் அழைத்து சென்றிருப்பார்கள் இருந்தாலும் அந்த இன்பச் சுற்றுல்லாமூலம் சென்ற குற்றாலம் தான் என் நினைவில் வரும் முதல் பயணம்.

அப்போதெல்லாம் சீசன் சமயத்தில் மட்டுமே குற்றாலம் செல்வது வழக்கம். சிறுவயதில் குற்றாலத்திற்கு குளிக்கச் செல்வதே ஒருநாள் இன்ப சுற்றுல்லா தான், கூட்டாஞ் சோறு, லெமன் சாதம் ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு சொந்தபந்தகள் புடை சூழ கிளம்பிவிடுவார்கள். தென்காசியில் எங்கள் வீடு இருக்கும் வாய்க்காப் பாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் யானப்பாலம் வரை நடந்தே செல்ல வேண்டும். கையில் சுமையாக துணிப்பை அல்லது சாப்பாட்டுப் பை. 

ஊர்கதை உலகக்கதை பேசிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒருநாள் பூராவும் நடப்பார்கள். வழித்துணையாக வருவது பரதன் தியேட்டர் போஸ்டர்களும் திடிரென்று அண்ணன் தம்பிகளான எங்களுக்குள் வரும் சண்டைகளும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொருவர் பையை தூக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு சமாதான துணியோ-சாப்பாட்டு பை ஒப்பந்தம் இருக்கும். அதன் எல்லை மீறப்படும் பொழுது சண்டைகளும் திடீர்த் தாக்குதல்களும் நடைபெறும்.

மெயின் பால்ஸ், புதுக் குத்தாலம் பெரிய அருவி என்றெல்லாம் அழைக்கப்படும் அருவி, குற்றாலத்தின் மிக  முக்கியமான அருவி என்றாலும் சிறுவயதில் அதிகமாய் வெறுத்த அருவியும் இது தான். 

ஆண்கள் அருவி பக்கம் தண்ணீர் அதிகம் விழும் என்று குளிக்க விடமாட்டார்கள். பெண்கள் பக்கமும் நாட் அலவுட். சிமிண்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு செயற்கை நீரோட்டப் பாதை அக்காலங்களில் உண்டு, இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை, அதில் இருந்து வேகமாய் வரும் அருவி போன்ற அருவியில் தான் எம் போன்ற சிறுவர் வகையறாக்கள் கும்மாளம் இட வேண்டும். அத்தனை பெரிய அருவி இருந்தும் குளிக்க முடியவில்லையே என்பதால் அந்த அருவியே எங்களுக்கு பிடிக்காது.

ஒருநாள் வலுகட்டயாமாக மெயின்பால்ஸ்க்கு அழைத்துச் சென்றும் குளிக்க மாட்டோம் என்று அடம் பிடித்ததால் புதிதாய் ஒரு அருவிக்கு அழைத்துச் சென்றார்கள். குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ நடக்க வேண்டும், நடக்கத் தான் வேண்டும் என்றாலும் நாங்கள் பெரிதும் விரும்புவது அந்த அருவியைத் தான். காரணம் அதன் பெயரிலேயே இருக்கும்.

புலி அருவி. "இந்த அருவிக்கு போனா புலியப் பாக்கலாம்" என்று தான் அழைத்து சென்றார்கள். புலி வருமோ இல்லையோ சிறுவர்கள் குளிப்பதற்கு மிகச் சிறந்த அருவி குற்றாலத்தில் இதைவிட்டால் வேறு கிடையாது. இப்போது கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் இன்னும் அருமையாக இருக்கும். புலி அருவியினுள்  பொழுதே ஒரு குகை போன்ற அமைப்பு இருக்கும், இங்கு தான் புலி வந்து ஓய்வு எடுக்கும் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். புலி அருவி என்ற பெயருக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமே என்று கட்டிய அமைப்பு அது. 

மெயின் பால்ஸ் - டாப் வியு 

புலி அருவி வெறும் எட்டடி உயரத்தில் இருந்து நீர் விழும் அமைப்பு கொண்டது. அருவியில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் ஒரு பெரிய கிடங்கு உண்டு, அதில் நீர் நிரம்பி பின் வெளியேறும், அதில் குளித்தால் ஒரு ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற உணர்வு, அதற்காகவே அங்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிபோம். சீசன் இல்லாத சமயங்களில் வெறும் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளித்த நாட்கள் உண்டு. 

புலி அருவி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவி, கலைவாணருக்காக என்று நினைக்கிறேன். மிக மிக ரம்மியமான அமைதியான இடம். குற்றாலங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடம். குளித்த முடித்தவுடன் பட்டாணி வாங்கி சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான். பட்டாணி வாங்கிக் கொண்டு வழி நெடுக கொறித்துக் கொண்டு வருவோம்.

பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மிகபெரிய பூங்கா ஒன்று உண்டு. குற்றாலம் செல்கிறோமோ இல்லையோ இங்கு சென்றே ஆகவேண்டும். ஊஞ்சல் தொடங்கி சகலவிதமான விளையாட்டுகளையும் குரங்குகளோடு குரங்குகளாக சேர்ந்து விளையாடலாம். ஊரே இங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும், வனத்தில் இருக்கும் மொத்த குரங்குகளும் இங்கு சுற்றித் திரியும். இப்போது இந்தப் பூங்கா பராமரிப்பு இன்றி அலங்கோலமாக கிடக்கிறது. பூங்காவினுள்ளே சென்று சில வருடங்களுக்கு மேலாகிறது. 

இந்தப் பூங்காவின் அருகில் பாம்புப் பண்ணை ஒன்று இருந்தது அதில் சில முதலைகளைக் கூட வளர்த்தார்கள், பராமரிக்க முடியவில்லை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.

உயர்நிலைப் பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே குற்றாலம் செல்வது வாடிக்கையாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடி விட்டு அப்படியே சைக்கிளை மெதுவாக அழுத்த ஆரம்பித்தால் எனது வீட்டில் இருந்து நான்காவது கி.மீட்டரில் பழைய குற்றாலம். பழைய குற்றாலம் செல்லும் வழி ஏதோ மலைப் பிரதேசத்துக்குள் நுழைவது போன்றே இருக்கும். சில நிமிட உணர்வு தான் என்றாலும், அந்த வளைவுகளில் சைக்கிளையோ பைக்கையோ செலுத்தும் பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது.


பொதுப்பணித் துறையினரால் விவசாயத்திற்காக ஏற்படுத்தப்பட அருவி பழையக் குற்றாலம், நீரின் வேகம் மிக அதிகமாய் இருக்கும், மக்களால் குளிக்க முடியாது. பின்னர் மக்கள் குளிக்க வேண்டும் என்பதற்காக, குளிப்பதற்கு ஏதுவாக வெடிவைத்து தகர்க்கப்பட்டு உருவாக்கியது தான் பழைய குற்றாலம்.எண்ணை தேய்த்து சுகமாய் நெடுநேரத்திற்கு குளித்து வரவேண்டும் என்றால் தென்காசி ஓடுவது பழைய குற்றாலம் நோக்கி தான்.   

கடந்த முறை நண்பர்களுடன் பழைய குற்றாலம் சென்றிருந்த பொழுது அருவியின் அருகில் இருக்கும் காடுகளினுள் நுழைந்து அருவிக்கு மேல் சென்று குளித்து வந்தோம். அங்கெல்லாம் செல்ல வனத்துறை அனுமதி இல்லை, துணிவே துணையென்றானபின் அனுமதி எதற்கு! அது ஒரு வித்தியாசமான அனுபவம். மேலே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. ஸ்ரீ அண்ணிடம் அது பற்றி விசாரித்தேன் அந்த சிவனாரின் பெயர் ஆதி குற்றாலநாதர் என்றும் அங்கு சென்று வழிபட அனுமதி உண்டு என்றும் கூறினார்.

குற்றாலநாதர் கோவிலின் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும்,சம்மந்தரால் பாடபெற்ற தளம். அம்மன் சன்னதியை தேக்கு மரத்தாலான வேலைப்பாடுகளால் வடிவமைத்துள்ளனர். இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.  

குற்றாலத்தில்(மெயின் பால்ஸ்) குளித்துவிட்டு சூடாக மிளகா பஜ்ஜி, பாதம் பால், நேர்த்தங்கா சிப்ஸ், வெங்கடேஸ்வரா நெய் அல்வா என்று அனைத்தையும் ருசித்தால் பசி பறந்துவிடும்.

ஐந்தருவி, சிறுவயதில் இங்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அடிக்கடி செல்வது கிடையாது, இப்போதெல்லாம் முதலில் செல்ல நினைப்பது ஐந்தருவி தான், மிக சுகமான குளியிலைப் பெற வேண்டுமென்றால் ஐந்தருவி தான் எனது சாய்ஸ். ஐந்தருவியில் மூலிகைகளும், விதவிதமான பொதிகை மலைப் பழங்களும் கிடைக்கும். அதற்காக பல பழக் கடைகள் உண்டு.         


பழத்தோட்ட அருவி, செல்லும் வழி முழுவதுமே வனத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டங்கள் தான், குரங்குகளை விட நம்மாளுங்க சேட்டைகள் அதிகமானதால் பல காலம் அடைத்து வைத்திருந்தார்கள், உறவினர் ஒருவர் செல்வாக்குடன் சென்றதுண்டு, குட்டி அருவி தான், இப்போது அனைவரும் செல்ல அனுமதி உண்டு என்று கேள்விபட்டேன். தேனருவியும் மிக சின்ன அருவியே, வழி தெரியாமல் செல்ல முடியாது என்பதால் ஊர்காரர்கள் துணையுடன் செல்லலாம்.


செண்பகா தேவி அருவி. மிக முக்கியமான அருவி, குற்றாலத்தின் ஆதியான அருவி. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உண்டு. தென்காசி பகுதி முழுவதுமே செண்பக வனத்தால் ஆனது என்பதால் தென்காசிக்கு செண்பகவனம் என்றும் ஒரு பெயர் உண்டு. இக்கோவிலில் அவ்வையார் பூஜை பெண்களாலும், மற்றபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்று பௌர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. உள்ளூர் சிவபக்தர்கள் அதிகமான அளவில் பங்கு கொள்வார்கள். சித்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்று கூறுவார்கள். 

செண்பகாதேவி 


செண்பகாதேவி அருவியை சுற்றி இருக்கும் கிடங்கு மிகவும் ஆபத்தானது. பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பதால் தற்போது வலைகட்டியுள்ளனர். செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தற்போது தடைவிதிக்கப் பட்டுள்ளது. மேலும் சரக்கு எடுத்துவிட்டோ அடித்துவிட்டோ சென்றால் தர்ம அடி கிடைக்கும். 

அடர்ந்த காடுகள் வழியே தான் செல்ல வேண்டும், மேலும் மெயின் அருவிக்கு செல்லும் ஒரு நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் அதிகமாக மழை பொழியும் பொழுது செண்பகாதேவிக்கு செல்ல முடியாது. இந்த மலைமேல் இருந்து மெயின் பால்சின் பொங்குமா கடலை பார்க்க முடியும், அப்படிப்ப் பார்க்க வேண்டும் என்றால் பாறை வறண்டு தண்ணீரின்றி இருக்க வேண்டும். ஒரே ஒருமுறை பார்த்ததுண்டு.   

  

பெரும்பாலும் சீசன் சமயங்களில் ஊர்காரர்கள் குற்றாலம் பக்கம் செல்வதில்லை, எங்களுக்கென்று மழை பெய்து புதுவெள்ளம் வரும் போது கூட்டமில்லாத அருவிகளில் ஆனந்தமாய் குளிப்பதுண்டு, கடந்த வருடம் அடைமழை பெய்து கொண்டிருந்த சமயம் தனி ஒருவனாய் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு தவமின்றி கிடைத்த வரம். பெரும்பாலும் ஆண்கள் இரவுகளில் குளிக்க செல்வதே வழக்கம். இரவு நேரம் குளித்துவிட்டு அப்படியே செங்கோட்டை பார்டர் சென்று ரஹ்மத்திலோ பிலாலிலோ பாராட்டோ சாப்பிட்டால் தான் குளித்தற்கான திருப்தி கிடைக்கும்.

எப்போதும் வீசும் தென்றல்,  விடாது தூறும் தூறல், அருவியின் அருகில் சென்றாலே கிடைக்கும் குளுமையும் சாரலும், மெயின்பால்சின் வேகத்திற்கு பயந்து அனைவரும் முன்னால் நின்று தலைகாட்ட அருவியின் உள்ளே புகுந்து யாருமற்ற குளுமையான அருவியின் மற்றொரு முகத்தில் நுழைந்து குளிக்கும் பொழுது கிடைக்கும் ஏகாந்தம்... 

மதியம் சரியாக ஒன்பது மணி வண்டியை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன். சோளிங்கநல்லூர் சிக்னல், சிக்னலுக்காக காத்திருந்த ஐந்து நிமிடத்தில் வியர்வையில் குளித்து, ஹெல்மட்டில் இருந்து ஒழுகும் வியர்வை கண்ணாடியை பாழாக்கி விட உடனடியாய் ரோட்டோரம் ஒதுங்கி கைகுட்டையால் தலைதுடைத்து மீண்டும் அவசர அவசரமாய் அலுவலகம் நோக்கி கிளம்பினேன்.

இன்று பேஸ்புக் முழுவதும் என் நண்பர்களின் குற்றால சீசன் குளியல் படங்கள். அத்தனை ஏகாந்தகங்களும் ஏக்கங்களாய் மாறிவிட்டது. ஊர்ல இருக்குற பசங்கல்லாம் கடுப்பேத்துறாங்க மைலார்ட்!   

பின் குறிப்பு : பதிவெழுத ஆரம்பித்த புதிதில் அண்ணன் சதீஷ் என்னிடம் வெகுநாளாய் கேட்ட பதிவு. ஒருவருடம் கழித்து இன்று தான் அத்தனை நியாபகங்களும் என்னுள் முழுதாய் நிறைந்துள்ளது. சற்றே பெரிய பதிவாய் ஆனதற்குப் பொருத்தருள்க. சொல்லாமல் விட்டவை ஏராளம், முடிந்தால் பின்னொரு பதிவில் பகிர்கிறேன்.    

22 comments:

 1. சீக்கிரம் ஒரு குற்றாலம் சுற்றுலாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க.அங்கே எல்லோரும் சந்திக்கலாம்

  ReplyDelete
 2. மிக நன்றி.இது போலக் குற்றால விசிட் உங்களுக்கும் எங்களுக்கும் வாய்க்கட்டும். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. (எனது சொந்த ஊர் செங்கோட்டைங்க) எனது சொந்தங்க்ள் (குரங்கு) ரொம்ப கேடிங்க.

  எனது குழந்தைப்பருவத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.

  கடந்த முறை நான் இந்தியா வந்த போது குற்றாலத்தில் நான் எடுத்த வீடியோவின் ஒரு பகுதியை நீங்கள் இங்கே http://youtu.be/DShHLXy9nak பார்த்து மகிழலாம்

  ReplyDelete
 4. சீனு பெயரை இணைத்து ஒரு நகைச்சுவை பதிவு இன்று வெளியிட்டு இருக்கிறேன் நேரம் கிடைத்தால் வந்து பார்க்கவும்

  http://avargal-unmaigal.blogspot.com/2013/06/blog-post_19.html

  ReplyDelete
 5. சமீபத்தில் பார்க்காமல், எப்போதோ பார்த்த நினைவுகளே இவ்வளவு சுவாரஸ்யம்.

  நினைவு அருவி பதிவுக் குற்றாலம்!

  சித்தர்கள் நடமாட்டம் அதிகம் என்றால் மோதிக் கொள்ளாமல் நடக்க முடியும் அல்லவா?!

  //மதியம் சரியாக ஒன்பது மணி வண்டியை எடுத்துக் கொண்டு...//

  :)))))))

  ReplyDelete
 6. குற்றாலம் பற்றி விரிவான பதிவு. சுவாரசியமாகவும் இருந்தது சமீபத்தில் சீசன் இல்லாத சமயத்தில் சென்றதால் ரசித்துப் பார்க்க முடியவில்லை.

  ReplyDelete
 7. எனக்கும் பழைய நினைவுகள் வந்துவிட்டன.... சிறுவயதில் அருவியில் குளிக்கப்போய் தொலைந்து போன அனுபவம் உண்டு....

  ஊருக்கு பக்கம் என்றாலும் குற்றாலம் போய் சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன....

  ReplyDelete
 8. சிமிண்ட்டும் உண்டு... அதன் மேலே எப்போதும் போலீசும் உண்டு...!

  புலி அருவி பெண்கள் அதிகம் விரும்புவதில்லை... ஏனென்றால் ஆண்கள் குளிக்கும் அருவிற்கு கீழே பெண்கள் குளிக்கும் அருவி... புலி அருவிக்கு மேலே சிறிது நடந்து சென்றால் குகை (போல்) அருவி உண்டு...

  பழைய குற்றாலம் - காது ஜாக்கிரதை...

  செண்பகாதேவி அருவி மேலே தேனருவி சென்றதில்லையா...? இருப்பதில் அது தானே டாப்...!

  /// அன்புக் கரத்தாலே...
  ஆசை மனத்தாலே...
  அள்ளித் தெளிக்கையிலே...
  ...ம்... சொல்லுங்க...

  பட்டுப்போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது...
  பறக்கும் வண்டுகள் எல்லாம் தேனில் குளிக்குது...
  கட்டறுந்த இளம் மனசு காதலிலே குளிக்குது...
  காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது...!
  காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது...!

  குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா...?
  மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா...?
  மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா...?
  குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா...?

  ஒடம்பு சிலுக்குது... உள்ளம் சிரிக்குது...
  ஒடம்பு சிலுக்குது... உள்ளம் சிரிக்குது...
  கொட்டும் பனி கடலுக்குள்ளே...
  குதிச்சதுப் போல் இருக்குது...!
  கொட்டும் பனி கடலுக்குள்ளே
  குதிச்சதுப் போல் இருக்குது...!

  திரைப்படம் : நல்லவன் வாழ்வான் (1961) ///

  அப்படி பாட்டு பாடாமல் தற்சமயம் சீசன் அமர்க்களம்... வாங்க போயிட்டு வருவோம்...

  ReplyDelete
 9. குற்றாலம் சின்ன வயசுல போனது. பல நினைவுகளை தூண்டியது.

  ReplyDelete
 10. படிக்கும் போதே எவ்வளவு அழகா இருக்கு இடங்கள் கண் முன் காட்சியாகின்றன. ஆமா அவரவர் குடும்பத்துடன் இது போன்ற தளங்கள் சுற்றுளா செல்ல ஏற்பாடு செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 11. மீண்டும் குற்றாலம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விட்டது....

  ReplyDelete
 12. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
  என்பது அல்லார்க்கும் பொதுதாம்பா!
  அதுக்காக நம்ம மெட்ராஸ்ஸ ஏம்பா கொற சொல்றீங்க?
  ஸீஸனே இல்லாமே த்ரீ ஸிக்ஸ்டிஃபைவ் டேஸும் பீச்சு காத்து கீற சென்னதாம்பா நம்ம பெஸ்ட்!

  ReplyDelete
 13. உற்சாகமான குற்றாலப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 14. உங்கள் பதிவு படித்தவுடன், 'ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே' பாடல் நினைவுக்கு வந்தது.
  DD - க்கு வேறு பாடல்! பாடல்கள் கூட வயதுக்குத் தகுந்தாற்போல் வருமோ?

  ஒருமுறை செங்கோட்டை போயிருந்தோம். காலையில் எழுந்து சமையல் செய்துவிட்டு அருவிக்குப் போய்விடுவோம். வந்து சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம்! செங்கொட்டையிலேயே அருவியின் சாரல் அடிக்கும். இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது அந்த அனுபவம்.

  அந்த நாள் ஞாபகம் வந்ததே!

  ReplyDelete
 15. குற்றால நினைவுகள் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 16. போனதே இல்ல ...! ஸ்பான்சர் பண்ணுப்பா சீனு ...!

  ReplyDelete
 17. நானும் போய் இருக்கின்றேன் என் ஆன்மீக குழுவுடன் பலதடவை !ம்ம்சூப்பர் இடம் மச்சி!

  ReplyDelete
 18. Dai antha photo la erukurathu arun thana

  ReplyDelete
 19. குற்றாலத்துக்கு அருகில் இருப்பதாக் என்னவோ அதன் அருமை தெரிவதில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட சாரல் மழை வெளுத்து வாங்குகிறது. மெயின் அருவில குளிக்க முடியலைப்பா..... புலி அருவிக்குத்தான் போய் வருகிறேன்..

  ReplyDelete
 20. குற்றாலம் இன்னும் நான் போகவில்லை சீனு

  ReplyDelete
 21. அருவிகளில் குளித்து மகிழ்ந்தோம்.

  ReplyDelete
 22. குற்றாலம் செல்ல திட்டம் தீட்டியவுடன் உங்கள் பதிவை படித்துள்ளேன், எதிர்பார்ப்பும் ஆர்வமும் கூடியுள்ளது.

  // இரவு நேரம் குளித்துவிட்டு அப்படியே செங்கோட்டை பார்டர் சென்று ரஹ்மத்திலோ பிலாலிலோ பாராட்டோ சாப்பிட்டால் தான் குளித்தற்கான திருப்தி கிடைக்கும்.// மறக்காம வழி சொல்லிடுங்க

  ReplyDelete