24 May 2013

சென்னையும் தென்காசியும்


அந்த நாள் ஆரம்பிக்கும் முன்பே தெரியும் மிக அதிகமான அலைச்சல் இருக்கப் போகிறது என்று.

காலையில் மேடவாக்கம் டூ சிறுசேரி அலுவலகம். பின் வீடு. அங்கிருந்து திருவெற்றியூரில் பிலாசபி பிரபா கல்யாணம். அங்கிருந்து கோயம்பேடு . கிடைக்கின்ற பேருந்துகளில் அப்படியே ஒரு எழுநூறு கி.மீ பயணித்தால் தென்காசி.

சென்னையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்திருந்த வார இறுதி, மதியம் இரண்டு மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பி ஓ.எம்.ஆரைக் கடக்கும் வரை வெயில் சுத்தமாய் வெயில் தெரியவில்லை, கிழக்குக் கடற்கரைக் காற்றில் சுகமாய் பயணித்துவிட்டேன். சோளிங்கநல்லூரைக் கடந்த பின் தான் வெயிலின் உக்கிரம் முழுவதுமாய்த் தெரிய ஆரம்பித்தது. தலையில் ஹெல்மட் 'ஹெல்'மேட் ஆகியிருந்தது, அதைக் கழற்றினால் யாரோ கிலோ கணக்கில் தகிக்கும் கங்கை அள்ளி முகத்தில் வீசுவது போன்ற வெப்பக் காற்று. 

பெயரளவில் கூட மரங்கள் இல்லாத பொட்டல் வெளி. ஒரு காலத்தில் வயலும், மரங்களும் இருந்த இடங்களில் எல்லாம் கட்டிடங்கள் அல்லது கட்டிடங்கள் முளைப்பதற்காக தங்களை தாரை வார்த்துக் கொடுத்த நிலங்கள். பின் எங்கிருந்து காற்றடிக்கும். சென்னையின் அணைத்து மல்டி நேஷசனல் கம்பெனிகளும் பூமித் தாய்க்கு வாரி வழங்கும் குளோரோ ப்ளோரோ கார்பன், நான்கு பேர் செல்ல உபயோகிக்க வேண்டிய நாற்சக்கர வாகனத்தை ஒரே ஒருவர் உபயோகித்து அதனால் பெருத்துப் போன வாகனத்தால் வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு, ஒலி ஒளி மாசுபாடு என்று சென்னையை மக்கள் வாழத் தகுதியுள்ள மிக சிறந்த இடமாக மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் அன்ட் அரசாங்கம்.

வீட்டில் வண்டியை நிறுத்தி விட்டு, நட்ட நடு வெயிலில் (நட்ட நடு வெயில் என்பது சென்னையைப் பொறுத்த மட்டில் காலை ஒன்பது மணியில் தொடங்கி மாலை நான்கு மணி வரை வேலை பார்க்கும் உண்மையான அரசு ஊழியன் எனக் கொள்க) ஒருவாரத் துணி அடங்கிய பையையும் சில பல புத்தகங்கள் அடங்கிய சோல்டர் பேக்கையும் சுமந்து கொண்டு ஒரு கி.மீ தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.    அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கியது இல்லையே தவிர பார்த்திருக்கிறேன், அதன் அருகில் நிற்கும் போது அதில் பரப்பியிருக்கும் கங்கின் அனலை மிகச் சமீபத்தில் சென்று முகர்ந்து பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படி உணர்ந்தேன் அக்னியின் தாக்கத்தை. இந்நேரத்தில் நான் செய்த மற்றொரு விரும்பத்தகாத செயல் குளுகுளு ATஎம்மினுள் சென்றது. என்றைக்குமே வேலை செய்யாத ATM ஏசி அன்றைய தினம் அடம்பிடித்து ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருந்தது. சிட்டி பேங்க் ATM ஏசியை அண்டார்டிக்காவில் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்கள் போல உள்ளே நுழைந்ததும் பனி பிரதேசத்து கரடிகள் எல்லாம் ஒரு நிமிடம் கண்முன் வந்து சென்றது. 

அடிகின்ற வெயிலில் கூட சுகமாய் ஒரு மணி நேரம் சுகமாய் நின்று விடலாம். இது போல் ATMல் நுழைந்து வெளிவந்த பொழுது சகாரா பாலைவனத்தில் தனித்துவிடபட்டது போல் உணர்ந்தேன். நெற்றியில் இருந்து துடைத்த வியர்வை மில்லி லிட்டர் கணக்கு என்றால், முதுகில் சுகமாய் ஒட்டிக் கொண்ட வைக்கிங்கில் நிச்சயம் லிட்டர் கணக்கில் இருந்திருக்கலாம்.  

மேடவாக்கம் டூ திருவெற்றியூர் வெறும் நாற்பதே கி.மீ. மாற வேண்டிய பேருந்துகளின் எண்ணிக்கை மட்டும் குறைந்தது மூன்று. சென்னையின் புறநகர் வாழ்க்கைக் கொடுமையில் இவை எல்லாம் எழுதப்பட்ட 'லா' க்கள். 

சிலரிடம் வழி கேட்டு மூக்கறுபட்டு திருவொற்றியூர் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். சில நேரங்களில் சென்னை மனிதர்களை சுத்தமாய்ப் பிடிப்பதில்லை. அதனாலேயே சென்னையை பல நேரங்களில் பிடிப்பதில்லை.

  

வடசென்னையை முதன் முதலில் அன்று தான் பார்த்தேன், கிழக்குக் கடற்கரை சாலையில் தவறவிட்ட முக்கியமான இடம். கற்களை கடலினுள் அரை கி.மீக்கு நீளவாக்கில் விரித்து வைத்திருந்தார்கள். அங்கு சென்று நின்று கடல் காற்றை அனுபவித்தால் ரம்யமாய் இருக்கலாம். ஒருநாள் நிச்சயம் செல்ல வேண்டும். (யாரேனும் தயாரா, என்னை அழைத்து செல்வதற்கு).

சென்னையின் மிக மிக குறுகலான ரோடுகள். ஹார்பர் வரும் லாரிகள் அந்த ரோட்டின் அகலத்தை இன்னும் பாதியாய்க் குறைத்து சாலை மறியல் செய்வது அதைவிடக் கொடுமை. ஒரு வ(லி )ழியாய் வந்து இருந்து நமது பதிவுலக சிங்கங்களுடன் சேர்ந்து விழாவை சிறப்பித்து கிளம்பும் பொது மணி எட்டு. (இரவு கல்யாண சாப்பாட்டில் எக்ஸ்ட்ரா க்ளோப்ஜாமூன் வாங்கித் தராத அரசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்).

"திருவொற்றியூர் டூ கோயம்பேடு பஸ் ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ இருக்கு அதுல போ"ன்னு சொன்ன அஞ்சாசிங்கம் செல்வின நம்பி முக்கா மணி நேரம் ஸ்டாப்ல நின்னேன். ப்ராட்வே வழி போயிருந்தால் கோயம்பேட்டில் பாதி வழியைக் கடந்திருப்பேன்.     

எனக்கான சுந்தரா ட்ராவெல்ஸ் எம்.டி.சி உபயத்தில் வெற்றிகரமாக அதிகமான பயணிகளை சுமந்து கொண்டு வந்து சேர்ந்தது. அதிலிருந்து மிக சரியாக  அடுத்த ஒன்னரை மணிநேரம் பிரீமியர் பிரஷர் குக்கரில் அமர்ந்து பயணிப்பது போன்ற பீலிங். என் நேரம் அரசாங்க புண்ணியத்தில் அமர்ந்திருந்த விண்டோ சீட் ரிப்பேர். கண்ணாடியை அசைக்கக் கூட முடியவில்லை. வஜ்ரம் சிமிண்ட்ஸ் உபயோகித்திருப்பர்கள் போல, செம ஸ்ட்ராங்.            

பிராந்தி வாடை, துபாய் சென்ட் வாடை, மீன் வாடை,எங்கிருந்தோ வரும் மல்லிப்பூ 'வாசம்' (கவனிக்க), வேலைக்கு சென்று வரும் உழைப்பாளிகளின் வியர்வை நாற்றம். 'அடியே என்ன எங்க நீ கூட்டி போற' பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஒருவழியாய் கோயம்பேடு வந்து சேர்ந்தது. தென்காசி, நெல்லை, மதுரை திருச்சி எதாவது ஒரு பேருந்தில் இருக்காய் கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்த பொழுது மணி பத்து. அனைத்து விரைவு பேருந்துகளிலும் ரஜினி பட டிக்கட் கவுண்டர் போல கண்டக்டரை சூழ்ந்து நின்றது மக்கள் சுனாமி.

"எனக்கிது சரியாப்படலை" என்ற மன நிலையில் ஒரு கி.மீ தள்ளி இருக்கும் தனியார் பேருந்து நிறுத்தம் நோக்கி நகர்ந்தேன், மனசில் இருந்த பாரத்தை விட கையில் சுமக்கும் பாரம் கைவலியை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. இந்நேரத்தில் சொந்தபந்தங்கள் என்னை அட்வைஸ் மழையில் நனைய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை தனியார் பேருந்தில் இடமில்லாவிட்டால் மீண்டும் வந்தவழி நடக்கத் தொடங்க வேண்டுமே என்ற வருத்தம் வேறு. சென்னை வாழ்கையை கிட்டத்தட்ட வெறுக்கத் தொடங்கியிருந்த தருணம்.

'மர்ர மர்ர மர்ர மர்ர' சென்னை சிறுவன் என்னை மதுரைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். 

"டிக்கெட் எவ்ளோ",

 "எயிநூத்தி அம்பது னா"

"என்னது 750 ஆ, வேணாம் பா"   

"ன்னா ன்னு பத்து நிமிசத்துல தொள்ளயிரமாயிரும், வேணா வா" 

இந்நேரம் உள்ளேயிருந்த பெருசுகள் டிரைவருடன் பொங்கத் தொடங்கி இருந்தார்கள்

"யே யா யோவ், ஒன்பது மணிக்கு ஏறினேன்  ஒன்பதரைக்கு எடுக்கேன்னு சொல்லிட்டு இன்னும் எடுக்காம இருக்கியே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா"     

மணியைப் பார்த்தேன் சரியாக 10.45. தக்கல் கூட 400 ஊவாத் தான் அதுவும் தென்காசி வரை. மதுரை 750. மனதை கல்லாக்கிக் கொண்டு ஏறினேன். மீண்டும் ஒருமுறை இட்லி குக்கரில் இருப்பது போல் உணர்ந்தேன்.

சென்னை விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். மக்களே நமக்கு நாமே உலை வைத்துக் கொண்டிருக்கிறோம். என்று மேடை போட்டு புரட்சி போராட்டம் நடத்தலாம் போல இருந்தது. சரியாக 11.30க்கு பேருந்து கிளம்பியது.         

காலை ஏழு மணி மதுரையில் வெக்கை இல்லை. ஆனால் காற்றும் இல்லை. பின் ராஜபாளையம், அங்கு வெயில் கொளுத்தியது, ராஜபாளையத்தில் பேருந்து மாறி ஏறி என் பையைத் தொலைத்த கதையெல்லாம் தனி பதிவே எழுதலாம். அங்கிருந்து சங்கரன் கோவிலில் உறவினர் திருமணம். 

எல்லாம் முடித்து மாலை ஐந்து மணிக்கு தென்காசி சொர்க்கத்தில் கால் வைத்த பொழுது, என்னை வரவேற்பதற்காக பலஅடி உயர எழும்பி என்னை அப்படியே தூக்கிக் கொஞ்சுவது போல் ஒரு குளிர்ந்த காற்று அடித்து பல முறை என்னை சுற்றி சுற்றி வட்டம் போட்டுக் கொண்டே இருந்ததே...! 

"அது தான்யா தென்காசி, இந்தக் காத்து வேற எங்க கிடைக்கும், அப்டியே பாய் தலவாணி இருந்தா அங்கயே படுத்து தூங்கலாம் போல இருந்தது எனக்கு"    

ஊரில் இருந்த ஒரு வாரமும், பலரும் பல தொனிகளில் என்னை நோக்கி சொன்னது "என்னவோ பெருசா சென்னையில இருக்கேன் சொல்றியே, அங்கலா இப்டி ஒரு காத்து கிடைக்குமா டே", அவர்கள் பேச்சில் இருக்கும் மறை பொருளும் எனக்குப் புரியாமல் இல்லை, இருந்தாலும் தென்காசியை உயர்த்திக் கூறியது எனக்குப் பிடித்திருந்தது. 

ஊரில் இருந்த ஒரு வாரமும் சொர்க்கம் . எங்கு சென்றாலும் சுத்தமான குளிர்ந்த காற்று, குளிப்பதில் இருந்து குடிப்பது வரை அனைத்திற்கும் சுத்தமான குற்றாலம் நீர், உறவினர்கள். அமைதியான வாழ்க்கை. சாயங்கலாம் ஆனால்  பெரிய கோவில் பள்ளியறை பூஜையும் கோவில் காற்றும். பால்ய நண்பர்கள். ஏகாந்தமானா வாழ்க்கை. தென்காசிக்கு நிகர் வேறு எந்த ஊரும் கிடையாது என்பது தான் என்னுடைய நிலை.


ஒருவார வாழ்க்கைக்குப் பின் இயந்திரமாவதற்காக மீண்டும் சென்னைக்கு திரும்பும் பொழுது ரயிலில் அருகில் இருந்த சிறுவன் பேசிக் கொண்டே வந்தான், திடிரென்று கேட்டான் 

"அண்ணா உங்களுக்கு சென்னை பிடிசிருக்காண்ணா"

சென்னை பிடிக்கவில்லை என்று சொல்ல மனம் வரவில்லை, என்ன பதில் கூறுவது என்றும் தோன்றவில்லை. சொல்லபோனால் சிலசமயங்களில் தென்காசி அளவிற்கு சென்னை பிடித்துப் போகும். மவுனமாய் சிரித்துவிட்டு மீண்டும் ஜெமோவின் யானை டாக்டரை படிக்கத் தொடங்கினேன். (உபயம் அரசன்

ஜெமோ சொல்வது போல் அறம் சுமக்கும் மனிதர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள். நம் கண்களில் குறைவான அளவிலேயே தென்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனம். 


25 comments:

 1. சென்னை என்று சொல்லப்படும் பல பகுதிகளை நானும் அன்று தான் பார்த்தேன்

  ReplyDelete
 2. உங்களுக்காவது எக்ஸ்ட்ரா தான் கிடைக்கல,எனக்கு ஒண்ணு கூட கிடைக்கல

  ReplyDelete
 3. அறிவியல் வளர்ச்சியெல்லாம் அழிவையே தருகின்றன...இருந்தாலும் அதோடுதான் நம் வாழ்க்கைப்பயணம்...

  ReplyDelete
 4. ஒரு சூடான பயணக்கதை!

  கமெண்ட் க்ளிக் செய்தால் புது 'டேபி'ல் திறப்பது ஏன் சீனு?

  ReplyDelete
 5. விழி பிதுங்கிய அனுபவம்... நானும் பலமுறை அனுபவித்ததுண்டு... குற்றாலம் சீசன் ஆரம்பித்து விட்டதா...?

  ReplyDelete
 6. சென்னையை மக்கள் வாழத் தகுதியுள்ள மிக சிறந்த இடமாக மாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் அன்ட் அரசாங்கம்.

  அனல்காற்றாய் பகிர்வுகள்...

  ReplyDelete
 7. சில வருடங்கள் சென்னையில் இருந்த போதும், எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஊர். மனிதரை மனிதராக மதிக்காத ஊர். பெரும்பாலும் மனிதர் வாழ தகுதி இல்லாத ஊராகவே இருக்கிறது.

  ReplyDelete
 8. எனக்குக்கூட சென்னை பிடிக்குமா சொந்த ஊர் பிடிக்குமா என்று கேட்டால் சொந்த ஊரைத்தான் சொல்லுவேன்.... அங்கே கிடைக்கும் நிம்மதி இங்கில்லை...

  ReplyDelete
 9. சொந்த ஊருக்கு நிகர் வேறில்லைதான்! கடைசி வரிகள் மிகவும் பிடித்தன! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 10. ஊர்ல, (பல வக) தோச கட எப்டி இருக்கு.
  மேலகரம் பஸ் ஸ்டாப் மரத்தடியில, சாயங்காலம் மட்டும் ஒரு இட்லி கட இருக்குமே , அது இன்னும் இருக்கா ....

  ReplyDelete
 11. //அங்கு சென்று நின்று கடல் காற்றை அனுபவித்தால் ரம்யமாய் இருக்கலாம். ஒருநாள் நிச்சயம் செல்ல வேண்டும். (யாரேனும் தயாரா, என்னை அழைத்து செல்வதற்கு).//

  நா ரெடி ஆனா செலவு பூரா ஒன்ணுது .

  //சிட்டி பேங்க் ATM ஏசியை அண்டார்டிக்காவில் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்கள் போல உள்ளே நுழைந்ததும் பனி பிரதேசத்து கரடிகள் எல்லாம் ஒரு நிமிடம் கண்முன் வந்து சென்றது. //

  ஹா ஹா ...! தொடர் கத எழுத ஆரம்பிச்சதுல இருந்து வர்ணனை லாம் பட்டைய கெளப்புது போ ...!

  ReplyDelete
  Replies
  1. அடியேனும் சென்னை செந்தமிழ் நுனி நாவில் பூக்கும் பகுதிகளை உலா வர தயார்

   Delete
 12. பிடிக்குதோ இல்லியோ வயித்து பொழப்புக்கு இருக்கத்தான் வேணும் தம்பி....ஒரு வேளை வெளிநாடு போனால் சென்னையை இன்னும் அதிகமாக பிடிக்க கூடும் ராசா...தொடர் கதையை படிக்க இயலாது ..மன்னிக்கவும்..புக்கா வரும்போது படிக்கிறேன்.ரெண்டு புக் முக நூல் வரலாறு...அப்புறமா இந்த திரில் தொடர்....சீக்கிரம் அதற்க்குண்டான முயற்ச்சிகளை மேற்கொள்ளவும்.காத்திருக்கிறேன்.
  ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னோட பதிவைத்தான் முதலில் படிக்கிறேன்...மெருகேறி கொண்டுதான் உள்ளது உனது நடைகள்....ஹெல் மெட் ...அருமை.அப்பப்ப விழிப்புணர்வு பஞ்சுகளை கோர்த்து விடவும்.....தொடர்கிறேன் சீனு...

  ReplyDelete
 13. ஏம்பா... சீனு... மதுரை வந்திருக்க.... ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல...

  ReplyDelete
 14. சென்னையும் தென்காசியும் ஒப்பிட்டால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். வெளி மாநிலங்கள் சென்ற போது, சென்னை எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய சொர்கம் என்றே ஒரு எண்ணம் எழுந்தது.

  //சொல்லபோனால் சிலசமயங்களில் தென்காசி அளவிற்கு சென்னை பிடித்துப் போகும். மவுனமாய் சிரித்துவிட்டு // நாயகன் பட வசனம் நினைவிற்கு வந்தது.
  "நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?"

  ReplyDelete
 15. சமீபமாக எத்தனை எரிச்சலடைந்தாலும் சென்னையை விட்டுக் கொடுக்கவே முடியவில்லை.
  முப்பது வருடங்களுக்கு முன் தென்காசி போயிருக்கிறேன் - ஒரு மறக்க வேண்டிய நிகழ்வு, சில மகிழ வேண்டிய நிகழ்வுகள்.
  இன்னொரு பயணம் போக வாய்ப்பு கிடைத்தால் கொஞ்சம் சுற்றிப் பார்க்க நினைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. /சில நேரங்களில் சென்னை மனிதர்களை சுத்தமாய்ப் பிடிப்பதில்லை. அதனாலேயே சென்னையை பல நேரங்களில் பிடிப்பதில்லை./

  படுவா ராஸ்கோல். நேர்ல சிக்குன கொத்து பரோட்டாதான்.

  ReplyDelete
 17. பிராந்தி வாடை ,,,, Ethai vanmayaga kandikinren ,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 18. படத்தில் இருப்பது மத்தளம்பாறை குளமா ???

  ReplyDelete
 19. தென்காசி காற்று எம்மையும் இழுத்துக்கொள்கிறது.:)

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 20. எனக்கும் தென்காசி தான். என்னோட சொந்த ஊருக்கு சென்று வந்த ஒரு நல்ல அனுபவத்தை தந்தற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 21. வாழ்ந்தா சொந்த ஊர் ல வாழனும் ல - கீழப்பாவூர் ல இருந்து பிறந்து பெங்களூர் ல தவிக்கும் ஒருவன்

  ReplyDelete
 22. வாழ்ந்தா சொந்த ஊர் ல வாழனும் ல - கீழப்பாவூர் ல இருந்து பிறந்து பெங்களூர் ல தவிக்கும் ஒருவன்

  ReplyDelete