6 Mar 2013

தி அட்டாக் ஆப் 26/11 - படம் இல்லை பாடம்


தி அட்டாக் ஆப் 26/11. மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத்தின் கோரதாண்டவத்தைப் பற்றிய படம். நவம்பரில் படத்தின் முதல் ஏழு நிமிட காட்சிகளை முன்னோட்டமாக வெளியிட்ட பொழுது,  சினிமா சினிமா ராஜ் இந்த திரைப்படம் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார், அப்போது தான் இப்படி ஒரு படம் எடுக்கப்படுவது குறித்து தெரிந்து கொண்டேன். தவறவிடக் கூடாத திரைப்படம் என்று அன்றே அந்த ஏழு நிமிடம் உறுதிபடுத்தியது. 

இயக்குனர் ராம் கோபால் வர்மாவை பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர ஒரு படம் கூட பார்த்தது இல்லை, சமீபத்தில் வந்த ரத்த சரித்திரம் ரத்தத்தைக் குடிக்கும் சரித்திரமாக வெளிவந்ததால் அதைப்பார்க்கும் மனநிலையில் நான் இல்லை.


அட்டாக் ஆப் 26/11, நான் திரை அரங்கில் சென்று பார்த்த முதல் ஹிந்தி திரைப்படம். அதனால் எனது ஹிந்தி பற்றி ஓரிரு வரிகளிலாவது குறிபிட்டே ஆக வேண்டும்.     

சக் தே இந்தியா படம் பார்த்துவிட்டு "கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்", என்று அண்ணன் சொன்ன பொழுது தான் ஹிந்தி படங்கள் பார்க்க வேண்டும் என்றொரு ஈர்ப்பு வந்தது. தமிழ் சப் டைட்டிலுடன் பார்த்த படம் அது. அந்த படம் தந்த உற்சாகத்தில் வரிசையாக ஐந்து படங்கள் பார்த்தேன், அதில் கபி குஷி கபி ஹம் படத்தின் வசனங்கள் மட்டும் சுத்தமாக புரியவில்லை. மேலும் இது வரை நான் பார்த்த ஐந்து ஹிந்திப் படங்களும் எனக்கு எவ்விதமான ஹிந்திப் புலமையையும் பெற்றுத் தந்துவிட வில்லை! இருந்தும் 3-IDIOTS, NEWYORK போன்ற படங்களில் பெரும்பாலும் ஆங்கில வசனங்கள் இருந்ததால் அப்படங்கள் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சவாலாக இல்லை.    

"ஏக் காவ் மே ஏக் கிஸான்" என்ற எனது புலமையை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் முன்பதிவு செய்தேன் என்று தெரியவில்லை, நாவலூர் ஏ.ஜி.எஸ்ஸில் புக் செய்துவிட்டேன். மொழி தான் புரியாதே தவிர காட்சிகள் புரியாமல் போகாது என்ற நம்பிக்கையை முந்திய ஹிந்திப் படங்கள் ஏற்படுத்தியிருந்தன. 

டெங்கு விழிப்புணர்வு குறித்த தமிழக அரசின் அருமையான ஆனால் சிவகுமாரின் காமெடியான செய்திப் படம் முடிந்ததும் திரையில் எனக்கொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. " செவ்வாய் கிழமைகளில் ஹிந்தி படங்கள் சப் டைட்டில்களுடன் திரையிடப்படும்" என்ற அறிவுப்பு பேரரசு படத்தில் பவர் ஸ்டார் நடிக்கப் போவது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று சொன்னால் கூட அந்த உவமை பொருந்தாது.

அசிஸ்டென்ட் கமிஸ்னராக வரும் நானா பட்டேகர் அட்டாக் ஆப் 26/11 சம்பவத்தை விவரிக்கும் விதமாக கதை விரிகிறது.  26/11 மும்பைத் தாக்குதலின் போது அசிஸ்டென்ட் கமிஸ்னராக செயல்பட்டவர் கூறிய உண்மை சம்பவங்கள் அடிப்படையிலேயே இப்படத்தை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. மும்பைத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர் 250கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வெகுசமீபத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த படம் என்பதால் இயல்பாக படத்துடன் ஒன்றிவிட முடிகிறது.

அரியவகை மீன்பிடிப்பதற்காக ஆள் கடலுக்குள் செல்லும் மீனவர்களை கொன்று அதே படகின் மூலம் மும்பையினுள் நுழைகிறது பத்து பேர் கொண்ட பயங்கரவாதக் குழு. தனித்தனிக் குழுக்களாக பிரிந்து தாக்குதல்  நடத்த தயாராகிறார்கள். காசாப் அளித்த வாக்குமூலம் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது. எந்த எந்த இடத்தில் எல்லாம் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள், ஏன் அங்கெல்லாம் தாக்குதல் நடத்தினார்கள் என்பதையெல்லாம் திரைகதை உள்ளதை உள்ளபடியே சொல்கிறது. 

மும்பை மொத்தமும் கூடி இளைப்பாறும் லியோபோல்ட் பார். ஆண்களும் பெண்களும் 'குடி'த்துக் கும்மாளமிடும் ஒரு பரபரப்பான பார். அங்கிருந்து தங்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடங்குகிறார்கள். தீபாவளி துப்பாக்கியை வைத்து ரோல் வெடியை வெடிப்பது போல் மும்பையில் வெடித்திருப்பதை அவ்வளவு தத்ரூபமாக படமாக்கியிருக்கிரார்கள். 


தாஜ் ஹோட்டல். இந்தியாவின் பெருமை மிகுந்த இடம். கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக சுடுவார்கள். கைக்குழந்தையின் தாயை சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள், அக்குழந்தை அதன் அம்மாவில் அருகில் கதறி அழுது கொண்டிருக்கும், அந்த குழந்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டே எல்லாரையும் சுட்டுக் கொன்று கொண்டு இருப்பார்கள். இறுதி வரை அந்தக் குழந்தை என்னவானது என்று அந்த காட்சி சொல்லாது. அந்த குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்து இருந்தது என்று அடுத்த காட்சியை தொடர்வார் நானா படேகர். குழந்தை கொல்லப்படுவதை நாகரிகமாக திரைக்கதையில் இருந்து சொல்லாமல் சொன்ன உத்தி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய தாக்குதலிலும் அவ்வளவு தத்ரூபம். தாக்குதலைப் பார்த்து கதறி அழும் போலீஸ், ரயில்வே பிளட்பார அடியில் இருக்கும் இடைவெளியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மக்கள் என்று பல காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. அங்கிருந்து காமா மருத்துவமனை தாக்குதல், போலீஸ் பயிற்சியின்மை மற்றும் துணிச்சல் என்று அனைத்தும் திரையில். தாஜ் ஹோட்டலை சுற்றி வளைத்த என்.எஸ்.ஜி பற்றி ஒரு காட்சியில் கூட இல்லது மட்டும் ஏமாற்றம் தருகிறது.      

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் இருபது போன்ற உணர்வு படம் முழுவதும் என்னுடனேயே பயணித்துக் கொண்டிருந்து. கம்ப்யூட்டர் கேம் பார்ப்பது போல் நிகழ்ந்து முடிந்திருக்கிறது அந்த கோர சம்பவம். சில காட்சிகளில் துப்பாகிகள் நம்மை நோக்கி வெடிப்பதுபோன்று அமைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் நம் பாதுகாப்பின் கேள்விக்குறியை இன்னும் அதிகமாக்குவது போல் உணர்ந்தேன். மேஜைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் மக்களை எல்லாம் தேடித் தேடி சுட்டுள்ளார்கள். 

இசை பற்றி சொல்லியாக வேண்டும். எங்குமே ஸ்பெஷல் எபக்ட் அதிகமாக உபயோகிக்கப் படவில்லை. துப்பாக்கி சுடும் சத்தம், மக்கள் கதறி அழும் சத்தம் என்று எதையுமே ஸ்பெஷல் எபக்டில் கொண்டு வரமால் பின்னணி இசையிலேயே நம்மை உணர்ந்து கொள்ள வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இயக்குனருக்கு அடுத்த படியாக மிக அதிகமாக உழைத்திருப்பவர் கலை இயக்குனர் உதய்சிங். தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்ததில் அவருக்கும் சமபங்கு இருக்கிறது.  


கசாப்பிடம் இருந்து நேரடி வாக்குமூலம் பெறப்பட்டதால் அவன் சார்ந்த காட்சிகள் அதிகம் வருகிறது. அவன் பிடிபட்டதும், கசாப் முன்வைக்கும் வாக்குவாதம், பின் அதற்கு பதிலடி கொடுக்கும் நானா படேகர் என்று நிச்சயம் இந்தக் காட்சி பெரிதாக பேசப்படும்.

ஜிகாதிகளை மூளை சலவை செய்தவனைப் பற்றி கசாப் வர்ணிக்கும் பொழுதும், உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை, இஸ்லாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது அதானால் ஜிகாத் தேவை, ஜிகாத் போராளி இறந்தாலும் அவன் உடல் மணக்கும், அவர்களை தேவதைகள் சொர்கத்திற்கு கூட்டிச் செல்வார்கள் என்று சொல்லும் காட்சியிலும் கசாப்பாக நடித்தவர் நடிப்பு அருமை. 

கசாப் பேசும் அந்த காட்சி முழுவதும் நானா படேகர் எதுவுமே பேசமாட்டார், கோபத்தில் அவனை கொன்று விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருப்பார். பின்பு மற்ற தீவிரவாதிகளின் சடலங்களை காண்பித்து குரான் பற்றி பேசும் பொழுதும், சடலங்களின் மேல் கசாபின் தலையை அமுக்கி "மணக்கிறதா மணக்கிறதா", என்று கோபப்படும் பொழுதும், இஸ்லாம் மதத்தின் பெருமைகளைப் பேசும் பொழுதும் அவர் நடிப்பும் இடம் பெரும் வசனங்களும் வெகு அருமை.


இறுதியில் காசாப்பை தூக்கில் போடுவதாகவும், அசிஸ்டென்ட் கமிஷ்னருக்கு பதிவி உயர்வு வழங்கப்பட்டதாவும் படம் முடியும். நானா படேகர் கடைசி காட்சியில் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் பொழுது ஒலிக்கும் "ஈஸ்வர அல்லா தேரே நாம்" அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாடல். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தால் இன்னும் அதிகமான தமிழர்களை சென்றுசேர்ந்திருக்கும். 

வாய்ப்பு கிடைத்தால் திருட்டு டிவிடியிலாவது இப்படத்தைப் பாருங்கள், மும்பை அனுபவித்த வேதனையை இன்றும் எத்தனையோ குடும்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையை இப்படம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.   

தி அட்டாக் ஆப் 26/11 மக்களை காக்கத் தவறிய அரசாங்கம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். காரணம் இப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்குப் பின்னால் அமர்ந்திருந்தவன் உயர்திரு பாரதப் பிரதமர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.   

25 comments:

 1. குழந்தை கொல்லப்படுவதை நாகரிகமாக திரைக்கதையில் இருந்து சொல்லாமல் சொன்ன உத்தி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ////

  நல்லா கவனிச்சு விமர்சனம் எழுதியிருக்க சீனு....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிண்ணே... நடுராத்திரியே படிச்சிட்டீங்க போல

   Delete
 2. ஜிகாதிகளைப் பத்தியும், இஸ்லாம் பத்தியும் வருதா? அதும் கசாப் பேசற மாதிரி... இந்தப் படத்துக்கு ஏன் போராட்டம் எதும் வெடிக்கலை? நானா படேகர் நான் எப்பவும் வியக்கற நடிப்பு ராட்சஸன். நீ சொல்லியிருக்கறதை வெச்சுப் பாக்கறப்ப நல்லா பண்ணிருக்கார்னு தெரியுது. படத்தையும், கேமரா கோணங்கள், பின்னணி இசை உட்பட எல்லாத்தையும் ரசிக்க முடியுதுன்னு எழுதியிருக்க. நிச்சயம் தவறவிடாம நானும் பாத்துடறேன்ப்பா!

  ReplyDelete
  Replies
  1. அந்த படத்தை எடுத்தது கமல் இல்லையே!

   Delete
  2. // நானா படேகர் நான் எப்பவும் வியக்கற நடிப்பு ராட்சஸன். நீ சொல்லியிருக்கறதை வெச்சுப் பாக்கறப்ப நல்லா பண்ணிருக்கார்னு தெரியுது. // நிச்சயமா சார் தவறவிடக் கூடாதா படம் கண்டிப்பா பாருங்க

   //அந்த படத்தை எடுத்தது கமல் இல்லையே!// ha ha ha

   Delete
 3. நல்லமுறையில் எடுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா என்று தெரிகிறது. நானா படேகர் நடிப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஆங்கிலச் செய்திச் சேனல்களின் அதிகப் பிரசங்கித் தனம் பற்றிப் படத்தில் ஒன்றுமில்லையா?

  ரங் தே பசந்தி பார்த்திருக்கிறீர்களோ...

  ReplyDelete
  Replies
  1. // நானா படேகர் நடிப்புக்குக் கேட்கவா வேண்டும்? // எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரிந்துள்ளது... அப்பா நான்தான் அவுட்டா...

   ரங் தே பசந்தி பார்க்க வேண்டும், தாரே ஜமீன் பர் உருக்கமான கதை என்று கேள்வி பட்டுள்ளேன், தற்போது வந்த ஹரிதாஸ் கூட அது போன்ற கதை தானே, எனக்கு தெரியவில்லை

   Delete
 4. மற்றும் தாரே ஜமீன் பர் ... பார்க்க வேண்டிய படங்கள்.

  ReplyDelete
 5. பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். உங்க விமர்சனம் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது.. ( நானும் உங்கள மாதிரி தான் ஸார். சினிமா பார்த்து தான் ஹிந்தி புலமையை வளர்த்துக்கிட்டேன். குறிப்பாக ஷாருக்கின் படங்களில் ஒரே மாதிரி கதைகள் என்பதால் வசனம் மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.)

  ReplyDelete
  Replies
  1. // ஷாருக்கின் படங்களில் ஒரே மாதிரி கதைகள் என்பதால் வசனம் மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது.// ரப் நே பனாதி ஜோடி மிகவும் பிடிக்கும்... இன்னும் நிறைய ஹிந்தி படங்கள் பார்க்க ஆரம்பிக்க வேண்டும் சார்

   Delete
 6. படம் எடுத்தது தமிழன் இல்லையே அப்புறம் எப்படி பிரச்னை வரும் .இந்துவா இருந்தாலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரா இருந்தாலும் தமிழன் மட்டுமே தன சகோதரநோடும் சண்டைபோடும் வழக்கமுள்ளவன் அதனால் அங்கு பிரச்னை இல்லை

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதங்கத்திலும் சிறிது நியாயம் உள்ளது சார்

   Delete
 7. எனக்கு கூட அதே ஏக் காவ் மே ஏக் கிஸான் அறிவு தான்... இருந்தாலும் வீட்டம்மாவுக்காக ஒருசில இந்திப் படங்கள் பார்த்ததுண்டு...

  ReplyDelete
  Replies
  1. //எனக்கு கூட அதே ஏக் காவ் மே ஏக் கிஸான் அறிவு தான்//ஹா ஹா ஹா நாமெல்லாம் ஒரே இனம் சார்...

   Delete
 8. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சீனு. இந்த வாரம் தான் படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது. படத்துல ராம் கோபால் வர்மா டச் நல்லாவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. //ராம் கோபால் வர்மா டச் நல்லாவே இருந்தது.// இது தான் நான் பார்க்கும் முதல் படம் என்பதால் எனக்கு அது பற்றி தெரியவில்லை, ஆனால் இயல்பாக கதை சொல்லி இருக்கிறார்...

   Delete
 9. சரியான விமர்சனம்... பார்க்க வேண்டும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்க சார்

   Delete
 10. அட கொடுமையே இந்த படத்திலும் முஸ்லீம்களை தீவிரவாதியாக தான் சித்தரிக்கிறார்களா ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஏன் ஏன் இப்புடி :-)

   Delete
 11. வணக்கம் சீணு.

  மிகவும் சிறப்பாக விமர்சித்து இருக்கீங்க படத்தை.
  படத்தை உடன் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது.

  ஹிந்தி படங்களை பார்த்தது பற்றி குறிப்பிட்டு இருக்கீங்க. ஸ்ரீராம் சொன்ன மாதிரி “ரங் தே பஸந்தி” “தாரே ஜமின் பர்” படங்களையும் பாருங்க. மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் ஆமிர்கான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்.. நிச்சயமா அந்த படங்கள பார்கிறேன்... 3 இடியட்ஸ் படத்தில இருந்து அமீர்கான ரொம்ப புடிச்சுபோச்சு

   Delete
 12. // துப்பாகிகள் நம்மை நோக்கி வெடிப்பதுபோன்று அமைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் நம் பாதுகாப்பின் கேள்விக்குறியை இன்னும் அதிகமாக்குவது போல் உணர்ந்தேன்.// சூப்பர் ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   Delete
 13. நானா படேகர் மிகவும் நல்ல நடிகர். நானும் பார்க்க நினைத்திருக்கும் படம்.... விரைவில் பார்த்து விடுகிறேன்!

  ReplyDelete