7 Nov 2012

சென்னை விமான நிலையம் : பறத்தலும் பறத்தல் நிமித்தமும்

சிறுவயதில் விமானம் செல்லும் சத்தம் கேட்டால் 90 டிகிரியில் இருக்கும் தலையை 180 டிகிரிக்கு கொண்டு வந்து சத்தம் வரும் திசைக்கு ஏற்ப தலையை சுழற்றி வான்வெளியில் சிறு புள்ளியாக தோன்றும் அந்த எந்திரப் பறவையைக் கண்டு பிடித்துவிட்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதில் கிடைத்திருக்கும். சுட்டெரிக்கும் வெயில், உச்சியில் இருக்கும் சூரியன், அண்ணாந்து பார்க்கமுடியாத அளவிற்கு கண்கள் கூசும் பிரகாசம் இவை எல்லாவற்றையும் மீறி நம்மை அண்ணாந்து பார்க்கச் செய்யும் சக்தி விமானம் என்ற மனித படைப்பிற்கு மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். "அங்க பாருல, அந்தாப் பறக்கு பாருல" சிறுபுள்ளியாகப் பறக்கும் விமானத்தைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பான் என்னுடன் விளையாண்டு கொண்டிருக்கும் நண்பன். அவன் கண்களுக்குத் தெரிந்த விமானத்தை நானும் பார்க்காவிட்டால் தூக்கம் வராது, அவன் பார்த்த விமானத்தை நமக்குக் காண்பிக்கா விட்டால் அவனுக்கும் தூக்கம் வராது. ஒருவேளை நாம் பார்த்திராவிட்டாலும் பார்த்ததாகச் சொல்லியாக வேண்டும், இல்லை என்றால் அடுத்த முறை விமானம் பார்க்கும் வரை சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருப்பான். சமயங்களில் தனக்குப் பின் இருகோடுகளை வரைந்து கொண்டே செல்லும் ஜெட்டை ஓடிக் கொண்டே துரத்திச் சென்ற நாட்களும் உண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டே யார் மீதாவது முட்டி அடிபட்டுக் கொண்ட சம்பவங்களும் உண்டு. விமானம் பற்றி நினைவு கூறும் பொழுது நெடுநாளைக்கு முன்பு பார்த்த குறும்படம் ஒன்று நினைவிற்கு வருகிறது, படத்தின் பெயர் தெரியவில்லை, ஆனால் ஐந்து நிமிடத்திற்குள் அற்புதமான ஒரு மேசேஜ் சொல்லி இருப்பார். படத்தில் வசனங்கள் கிடையாது, விமானம் பறக்கும் சத்தம் மட்டுமே இசை. மூன்று கோணங்களாக நகரும் திரைக்கதை. விமானம் செல்லும் சத்தம் கேட்டு விமானத்தை தன் கைக் குழந்தைக்கு காட்டத் தயாராகும் தாய், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் விமானத்தின் சத்தம் கேட்டு அதைப் பார்க்கத் தயாராகும் காட்சி, மூன்றாவது ஒரு சிறுவன், விமானத்தின் சத்தம் கேட்டதும் எங்கோ ஓடுவான், படம் முழுவதும் எதையோ தேடிக் கொண்டு ஓடுவான், விமான சத்தம் அருகில் வர அருகில் வர இன்னும் வேகமாய் ஓடுவான், விமானத்தைப் பார்க்கும் அவசரத்தில் அவன் ஓட்டுவது போன்று காட்சிகள் நகரும், இறுதியில் இடுந்து போன ஒரு கட்டிடத்தினுள் ஒடி, மறைவான இடம் தேடி ஒளிந்து கொள்வான், தன இரு காதுகளையும் தன கைகளால் இருக்க மூடிக் கொண்டு விமான சத்தம் கடக்கும் வரை நடுங்கிக் கொண்டு இருப்பான், இங்கிருந்து விரியும் காட்சி சொல்லும் அவன் ஒரு ஈழத்துச் சிறுவன் என்று, விமானம் பறந்தாலே குண்டுகள் விழப் போகிறது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஈழத்து நிலைமையை மிக அற்புதமாகப் படமாக்கி இருப்பார்கள். 


சிங்காரச் சென்னையில் விமானம் செல்லும் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்துவிட்டால் நம்மை ஊர்நாட்டான் என்று சொல்லிவிடுவார்கள். அந்த அவச் சொல்லுக்குப் (!) பயந்தே பலரும் அந்த சுகத்தை அனுபவிப்பது இல்லை. இருந்தும் ஒய்யாரமாக செல்லும் அந்தப் பறவையைப் பார்த்தே ஆகவேண்டும். இல்லை என்றால் எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது. முதன்முறை  சென்னை  வந்த பொழுது மீனம்பாக்கத்தைகடந்த நேரம் வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களைப் பார்த்த பொழுது, தென்காசி பேருந்து நிலையத்திற்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியக்குறியைத் தவிர!


சென்னைக்கு வந்த பின் விமானம் என்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது, அடிகடி கேட்கும் சத்தம் பழகிப் போய்விட்டது. இருந்தும் சிறுபுள்ளியாக பார்த்த விமானத்தை அதன் முழு உருவமும் தெரியும் அளவிற்குப் பார்ப்பது நல்ல முன்னேற்றம் தான்! அமெரிக்கா சென்ற சித்தி பையனை வழியனுப்புவதற்காகத் தான் முதல் முறை விமான நிலையம் சென்றேன். நுழைவுக் கட்டணம் அறுபது ருபாய். விமான நிலையத்தில் ஏழையும் ஏழை அல்லாதவனும் வித்தியாசப்படுவது இந்த அறுபது ரூபாயில் தான். 

வெளிநாடு செல்லும் தன் மகனை கணவனை அண்ணனை அக்காவை ஏதோ ஒரு உறவு முறையை வழியனுப்பும் பொழுது வித்தியாசமே இல்லாமல் அனைவருக்கும் வருவது சில துளிகள் கண்ணீர் தான். உலகம் சுற்ற செல்பவர்களைக் காட்டிலும் பணி நிமித்தம் பறப்பவர்கள் தான் மிக அதிகம் இருகிறார்கள். ஆயா வேலைக்கு செல்லும் அம்மா வயதுள்ள பெண்கள், வீட்டுவேலைக்கு செல்லும் இள வயது பெண்கள், எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று செல்லும் கனவுகளைத் தொலைத்தவர்கள் அல்லது தொலையாத கனவுகளைத் தேடிச் செல்பவர்கள் என்று பறத்தலும் பறத்தல் நிமித்தமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 


சென்னை விமானநிலையம் சர்வேதச விமான நிலையம் என்பதால் பல்வேறுபட்ட மனிதர்களை காணலாம், வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் செவ்விந்தியர்களையும் திறந்த வாயை மூடமால் வேற்றுக் கிரக மனிதர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பதால் இதுவும் ஒரு மனிதக் கண்காட்சி சாலை தான். வெள்ளைக்காரி கருப்பு சுருட்டை ரசித்து இழுத்து புகைப்பதை பார்க்கும் பொழுது ஹாலிவூட் படத்தை நேரில் பார்ப்பது போல் தான் உள்ளது. விமான நிலைய இரண்டாவது மாடியில் இருந்து ரன்வே நடவடிக்கைகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை லைவாக பார்க்கலாம். பைக் பார்க்கிங் செய்ய பதினைந்து ருபாய், கார் பார்க்கிங் செய்ய அநியாயம் 120 ருபாய். உள்ளே கிடைக்கும் சுவை இல்லாத அந்த காபி டி தண்ணியை குடிப்பதை விட குடிக்காமல் இருக்கலாம், இல்லை வீட்டில் இருந்து பிலாஸ்கில் எடுத்துச் செல்வது நலம். சென்னை விமான நிலையத்தை ரசிக்க நினைத்தீர்கள் என்றால் குடும்பத்துடன் சென்று வாருங்கள், விமானத்திற்கு பெட்ரோல் நிரப்புவது, லோட் ஏற்றுவது, பயணிகள் மற்றும் சரக்கு விமான வருகை புறப்பாடு போன்றவற்றை நேரில் பார்த்து ரசிக்கலாம், அறுபது ரூபாயில் மலிவு விலை சுற்றுலாத் தளம் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்! விமானங்களில் பறக்க வேண்டும் என்பது தற்காலிக ஆசை, ஒருமுறையாவது சென்னையிலிருந்து மதுரை வரை சென்று வந்து விட வேண்டும். பார்க்கலாம் விமானத்தில் செல்லும் நாள் என்று வரப் போகிறது என்று.


ப்ரொஜெக்டில் சேர்ந்த முதல் நாள் எனது டி எல் கார்த்திக் என்னிடம் கேட்டார் 


"ஸ்ரீனிவாசன் உங்களுக்கு எந்த ஊரு""தென்காசி கார்த்திக்"


" எந்தப் பக்கம் இருக்கு"

"திருநெல்வேலி பக்கம்"

" ஓகே உங்களுக்கு மாசம் ரெண்டு நாள் லீவ் கொடுத்த போதும் தான, மதுரை வரைக்கும் ப்ளைட்ல போயிட்டு வந்த்ருவீங்கல்ல "

சீனு  "?????!!!@@@@##$$$$%%%%%"


"நாங்கெல்லாம் இன்னும் அன்ரிசர்வட் கம்பார்ட்மென்ட்ல அடிச்சி புடிச்சி போரவங்கன்னு  உங்ககிட்ட எப்படி சொல்லுவேன் கார்த்திக்" மை மைன்ட் வாய்ஸ். 
விளம்பரம் 

பிளாக்கர் நண்பன் போன்ற  பிரபலங்களின் பதிவுகளுக்கு விளம்பரம் தேவை இல்லை தான், இருந்தும் இந்தப் பதிவை உங்களுக்கு நினைவு படுத்துவதற்காக இங்கே. நீங்கள் இது வரை எழுதிய மொத்தப் பதிவுகள், இனி எழுதப் போகும் போகும் பதிவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில பட்டியலிட வேண்டுமா படித்துப் பாருங்கள், நிச்சயம் பயனுள்ள தகவல்    

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி?


ஒரே ஒரு கேள்வி :  விளம்பரம் பகுதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லுங்கள். நன்றி.  
33 comments:

 1. தம்பி... சிறு வயதில் விமானம பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்த விதம் அருமை. அனைவர் மனதில் அவரவர் இளமைக்காலம் படமாக ஓடியிருக்கும். அந்தக் குறும்படத்தை விவரித்ததும் ரசனையாக இருந்தது. விமான நிலையத்தில் சந்தித்த விதவிதமான மனிதர்களை உன்னித்து எழுதியிருந்ததும் நன்று. எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நீ முடித்திருக்கும் கடைசிப் பாரா. சூப்பர்.

  ReplyDelete
 2. உன் எழுத்து நடை மிக சிறப்பாக இருக்கு சீனு..

  ReplyDelete
 3. >>>>>எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று செல்லும் கனவுகளைத் தொலைத்தவர்கள் அல்லது தொலையாத கனவுகளைத் தேடிச் செல்பவர்கள் என்று பறத்தலும் பறத்தல் நிமித்தமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்<<<<

  quite interesting....... :)

  ReplyDelete
 4. ரசித்தேன். நடை அருமை!

  ReplyDelete
 5. ஓகே உங்களுக்கு மாசம் ரெண்டு நாள் லீவ் கொடுத்த போதும் தான, மதுரை வரைக்கும் ப்ளைட்ல போயிட்டு வந்த்ருவீங்கல்ல "

  சீனு "?????!!!@@@@##$$$$%%%%%"

  விமானத்தில் பறக்க சான்ஸ் கிடைக்குது னு சந்தோசபடறதா
  இல்லே லீவே கொடுக்காமே விட்டுடுவாங்கலோ னு கவலைபடறதா

  எழுத்து நடை நல்லா வருது சீனு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. super.......its refreshing my mind.my best place in chennai is trisulam... chennai airport i can never forget it........ nice .....super

  ReplyDelete
 7. தல, அடுத்த வருஷம் நீங்க தாராளமா புக் எழுதி ரிலீஸ் பண்ணலாம்..

  ReplyDelete
 8. அப்படி புக் எழதி ரிலீஸ் செய்தா அதிலேயும் விளம்பரம்னு எங்களை பத்தி சொல்லுப்பா சீனு நான் பூந்தமல்லியில் இருந்தபோது யாரைபற்றியும் நினைக்காமல் அண்ணாந்து விமானத்தை பார்த்துக்கொண்டே சாலையின் ஒரத்தின் நடந்து சென்றது ஞாபகம் வந்தது இன்று காலையில் கூட ஒரு விமானம் ரொம்ப கிழே எங்க வீட்டை கடந்து சென்றது வீட்டுக்குள்ள டிவி பாத்துக்கிட்டு இருந்த நான் ஒடி வந்து பாத்தேன் ஸ்கூலில் பசங்க கத்திக்கிட்டே ஒடிவந்தார்கள்

  ReplyDelete
 9. எப்பா சீனு கமெண்ட் ஸ்பாம்க்கு போச்சா மொபைல் வழியா கமெண்ட் போட்டேன்

  ReplyDelete
 10. சிறு வயது ஞாபகங்களை நினைவுபடுத்திய பதிவு துணி துவைப்பதையும் விட்டு சோப்பு கையோடு வெளியில் ஓடி வந்து வானத்தை பார்த்து ரசித்த நாட்களின் நினைவில் நான்.
  தற்காலிக ஆசை நிறைவேறட்டும்.

  ReplyDelete
 11. //அமெரிக்கா சென்ற சித்தி பையனை வழியனுப்புவதற்காகத் தான் முதல் முறை விமான நிலையம் சென்றேன்//

  பையன் பேரு ஒபாமாவா?

  ReplyDelete
 12. விமானம், ரயில் யானை ஆகியவை எப்போது, எங்கு பார்த்தாலும் அலுக்காத காட்சிகள். ஊர்நாட்டானாவது, பேர் நாட்டானாவது! யார் வேணா என்ன வேணா சொல்லட்டும்.. இந்த அழகுகள் எப்பவுமே அழகு!

  ReplyDelete
 13. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.....ரசித்தேன்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 14. நல்ல பதிவு மிஸ்டர் சீனு ...

  குறும்படம் ஏற்கனவே கேள்வி பட்ட ஒன்று ,,, பார்க்கணும் லிங்க் இருந்தா இணைக்கவும்
  அப்புறம் அங்க சைட் அடிச்ச அந்த விமான பணிப்பெண்களை பற்றி சுத்தமா சொல்லவே இல்லை
  அதையும் சொல்லி இருந்தால் இன்னும் சுவராசியமா இருந்திருக்கும் ...

  ReplyDelete
 15. " ஓகே உங்களுக்கு மாசம் ரெண்டு நாள் லீவ் கொடுத்த போதும் தான, மதுரை வரைக்கும் ப்ளைட்ல போயிட்டு வந்த்ருவீங்கல்ல "

  சீனு "?????!!!@@@@##$$$$%%%%%"//

  என் இனமைய்யா

  ReplyDelete
 16. ரசிக்க வைக்கும் பகிர்வு...

  ReplyDelete
 17. ezhuththu nadaiyum-
  sonna vithamum pidiththamaanathu...

  ReplyDelete
 18. அட சார்வாளுக்கு நம்மூரு..... சோமா இருக்கீயளா ?? நல்லாவே எழுதரீரு ! ! அடுத்தாப்பல தென்காசிக்கு எப்ப வருவீய ! !

  ReplyDelete
 19. கோர்வையான எழுத்துநடை வருது உங்களுக்கு... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. ரசனையான பகிர்வுகள் !

  ReplyDelete
 21. மச்சி அனுபவத்தை அழகாக எழுதி இருக்கின்றாய்.. எனக்கும் ஏகப்பட்ட அனுபவங்கள் இருந்தாலும் இங்கிலீஷ் விங்க்ளிஸ் போன்ற வெளிநாட்டு அனுபவங்கள் தான் ஜாஸ்தி..

  நாம பேசுறது அவனுக்கு புரியாது அவன் என்ன சொல்றான்னு சத்தியமா எனக்கு புரியவே புரியாது.. அடங்கப்பா..

  ReplyDelete
 22. கமென்ட் மொடரேசன் எடுத்து விட்டால் தங்களை பிரபல பதிவராக மதிக்க மாட்டார்கள்.. தயவு கூர்ந்து வைத்து விடுங்கள்.. இல்லா விட்டால் எதிர்காலம் ஏளனம் செய்யும்

  ReplyDelete
  Replies
  1. //கமென்ட் மொடரேசன் எடுத்து விட்டால் தங்களை பிரபல பதிவராக மதிக்க மாட்டார்கள்.. தயவு கூர்ந்து வைத்து விடுங்கள்.. இல்லா விட்டால் எதிர்காலம் ஏளனம் செய்யும் //

   ம்ஹூம்.. இதே வேலையா போச்சு... கம்மென்ட் மாடரேசன் வச்சா ஏன் வச்சேன்னு கேக்குறது... வைக்கலைன்னா ஏன் வைக்கலைன்னு கேக்குறது...

   @சீனு

   நீங்க கவலைப்படாதீங்க சீனு... ஹாரி என்ன சொன்னாலும் "பிரபல பதிவர்" என்ற பட்டத்தை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது...

   :D :D :D

   Delete
  2. //ஹாரி என்ன சொன்னாலும் "பிரபல பதிவர்" என்ற பட்டத்தை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.../

   சரியாக சொல்லி விட்டீர்கள்.. பதில் கமென்ட் வழங்காதது மேலும் தன்னை தானே தாழ்த்தி கொண்டு பதிவெழுதுவது போன்ற பல சிறப்பு தகுதிகள் அண்ணனிடம் அதிகம்.. ஒத்து கொள்கிறேன். :D

   Delete
 23. வார்த்தைகள் உங்கள் பதிவில் ரசிக்க வைக்கிறது சீனு...! சின்ன வயதில் மட்டுமல்ல, இப்போதும் கூட வானில் விமானம் பறக்கும் போது அண்ணார்ந்து பார்க்கிறேன், எப்போது நாம் அந்த விமானத்தில் ஊருக்கு போவோம் என்று...

  ReplyDelete
 24. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தம்பீ! தம்பீ! கதையின் கரு கண்களைக் குளமாக்கும்!

  ReplyDelete
 25. இனிய பகிர்வு. விமானம் பார்க்க எத்தனை ஆசை சிறு வயதில்....

  சீக்கிரமே நீங்கள் விமானத்தில் பறக்க வாழ்த்துகள்.....

  ReplyDelete
 26. சிறுவயதில் விமானம் செல்லும் சத்தம் கேட்டால்...........
  ///////////////////////////

  நாங்க இப்பவும் அப்பிடித்தான் ஐ மீ ன் சின்னபுள்ளையாவே இருக்கோம்

  ReplyDelete
 27. ஆனாலும் ஏர்போர்ட் அனுபவத்தை அழகாகச் செதுக்கியுள்ளீர்கள் எழுத்தாளர் சீனு அவர்களே..

  ReplyDelete
 28. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
 29. //அறுபது ரூபாயில் மலிவு விலை சுற்றுலாத் தளம் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்!//
  உண்மைதான் சீனு இப்போதுதான் நானும் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete