23 Apr 2012

உணர்ந்ததை உரைக்கிறேன்

     சென்னையிலிருந்து திருச்சி மதுரை தென்காசி வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி 2661 ஏழாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் நேரம் இது.. இந்த அறிவிப்பின் முடிவில் மெதுவாக நகர ஆரம்பித்து நகர்ந்து நகர்ந்து பின் ஒரு கட்டத்தில் இரயில் நிலையத்தில் இருந்து முழுவதுமாக வெளிச்சென்று என் கண்ணில் இருந்து மறையும் வரை பொதிகையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். இரயில் மறைந்து வழியனுப்ப வந்த்தவர்கள் கரைந்து கொண்டிருக்கும் நேரம் பிளாட்பாரமே வெறுமையாகிக் கொண்டிருக்கும் வேளையில் மனதிற்குள் ஏறும் ஒரு இனம் புரியாத பாரம் என்னை நகர விடாமல் செய்யும். 

     இதுபோன்ற ஒரு உணர்வை நீங்கள் அனுபவித்திருக்காவிட்டால், இன்னும் நீங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இக்கணத்தில் வாழ நினைக்கும் ஊரை விட்டுப் பிரிந்து நெடுந்த்தொலைவு செல்லவில்லை என்று அர்த்தம். நெடுந்தொலைவில் இருந்து என் ஊரை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை உங்கள் கண்களுக்கும் தருகிறேன் படித்து ரசித்து விட்டுச்செல்லுங்கள். 


 தென்காசியின் ஐந்து கிலோமீட்டருக்கு முன்னால் வரும் போதே நீங்கள் சுவாசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் தென்காசி மக்கள் அனுபவிக்கும் தென்றல் காற்றை. 'தென்றல் வரும் முன்னே தென்காசி வரும் உடனே'  என்ற சொல் ஒவ்வொறு பயணியும் தவறாது உச்சரிக்கும் வாசகம். 

     இந்தத் தென்றல் காற்றைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு குட்டிக் குழந்தை உங்கள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அதை எவ்வளவு இனிமையாக மென்மையாக ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு மிருதுவாகத் தான் இருக்கும் பொதிகையில் உற்பத்தியாகி மூலிகைகளின் வாசம் சுமந்து தென்காசி மக்களின் சுவாசமாக விளங்கும் இந்தத் தென்றல் காற்று.


     ஒரு பறவையின் பார்வையில் இருந்து தென்காசியைப் பார்த்தோமானால், ஊரின் நடுவே கம்பீரமாக நிற்கும் தென்காசி பெரியகோவிலையும் , அதன் நான்கு ரதவீதிகள் மற்றும் அம்மன் சுவாமி சன்னதி தெருக்களில் வியாபித்திருக்கும் வணிக வளாகங்களையும், அதனைச் சுற்றி மக்கள் வாழும் பகுதிகளும், அவற்றில் இருந்து இன்னும் உயரப் பறந்தால் பச்சைப் போர்வைப் போர்த்தியது போன்ற வயல்வெளிகளும் தென்னந் தோப்புகளும் அவற்றின் நடுவே வளைந்து நெளிந்து ஓடும் சிற்றாறும், இன்னும் இன்னும் உற்று நோக்கிப் பார்த்தால் வயல்களின் நடுவில் குட்டிக் குட்டியாக முளைத்த கிராமங்களும், இவை எல்லாவற்றின் எல்லையாக பொதிகை மலையும் குற்றால அருவிகளும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

     பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட தென்காசி அன்றிலிருந்து இன்றுவரை பல மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டாலும் இன்றும் பசுமை மாறாமல் தான் காட்சியளிக்கிறது. இவ்வூரில் கடற்கரையோ பூங்காவோ கிடையாது. இருந்தும் இந்தக் குறையைப்போக்குவது தென்காசி பெரியகோவில் தான். 

     பொதிகையில் உற்பத்தியாகும் தென்றலை நேரடியாகவும் முழுமையாகவும் அனுபவிக்க வேண்டுமானால் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் தென்காசி பெரியகோவில் தான். அதற்காக பெரிய கோவிலை வெறும் காற்று வாங்குவதற்கான இடமாக மட்டும் நினைத்து விடவேண்டாம், வருபவர்களும் அப்படி நினைத்து வருவதில்லை. மாலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வருபவர்கள் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு எட்டு மணி வரை வெளியில் அந்த இனிமையான வளியில் அமர்ந்து காற்றை ரசித்துவிட்டு பின்புதான் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்

     பரந்துவிரிந்த அந்த கொபுர வெளியில் பல குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் ஆத்திகமும் இருக்கும் நாத்திகமும் இருக்கும். திராவிடமும் பேசுவார்கள் கம்யுனிசமும் பேசுவார்கள், இன்னும் சிலர் குடும்பப் பிரச்சனைகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் விவாதம் எல்லை மீறிச் சென்றாலும் ஒருக்காலும் ஒருவரும் தவறான வார்த்தைகளில் பேசிப் பார்த்தது இல்லை. பலருக்கும் பல விசயங்களில் புரிதலையும், அமைதியையும், தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகத் தான் அந்தக் கோவிலைப் பார்க்கின்றேன். ஒரு ஆலயம் மனிதனின் மனதிற்குக் கொடுக்க வேண்டிய நிம்மதியும் அது தான்.

     தென்காசிக்கான பொதுத்தொழில் என்று எதுவும் கிடையாது, இருந்தும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி தான் உள்ளார்கள். இது போக பீடி சுற்றுதலும் பூ கட்டுதலும், கட்டிட வேலை பார்ப்பவர்களும் அதிகம். சீசன் சமயத்தில் குற்றால மலையில் கடைபோடும் சீசன் வியாபாரிகளும் திடிரென முளைப்பார்கள். 

     அரசாங்க வேலையில் இருபவர்களும், சுய தொழில், குறுந்தொழில், குடிசைத் தொழில் புரிபவர்கள் என்று பலவாராக இருந்தாலும், தனியார் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் வேலைக்காக பெரிய நகரங்களைத் தான் நம்பியிருக்க வேண்டும்.  தென்காசிக்கென ஒரு தொழிற்சாலை கிடைக்காதா, நாமும் அங்கு வேலைக்குச் சேர மாட்டோமா என்பது தான் அங்குள்ள பல இளைஞர்களின் கனவு.

     வருடத்தின் பல மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பல காற்றாலை மரங்கள் புதிதாக முளைத்துள்ளன.  காற்றாலைகளின் வருகையால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் இருந்தும், இந்த 'இருந்தும்' என்ற வார்த்தைக்கான ஆதங்கத்தை கடைசியச் சொல்கிறேன். அத்தியாவசியச் செலவுகள் செய்யவே அதிகம் உழைக்க வேண்டி இருப்பதால் இங்கே அநாவசியச் செலவுகள் செய்வோர் மிகக் குறைவு. ஐந்து கி.மீ தொலைவுள்ள குற்றாலத்திற்கே இன்றும் பலர் சைக்கிள் மிதித்துத் தான் செல்கின்றனர்.

     ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழும் நீர் நம் உடலை நனைக்கும் நேரத்தில் இதமாகி இதம் தருவதாக இருந்தாலும் உடலையும் மனதையும் குளிர்வித்தாலும், குற்றாலம் என்பது இவர்களுக்கு வெறும் காட்சி பொருள் இல்லை. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருப்பொருள். தென்காசியின் ஜீவநாடியே குற்றாலமும் அதிலிருந்து தனக்கென ஒருபாதையைத் தேடிக்கொண்ட சிற்றாறும் தான்.

     இந்த இரண்டும் ஒருமுறை வற்றிய போது தென்காசியும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் தண்ணீருக்காக அலைந்த சோகக் கதையை ஜீவன் இருக்கும் வரைக்கும் யாராலும் மறக்க முடியாது. இன்றும் மழை பொய்த்தாலோ குறைந்தாலோ தாமிரபரணியை தான் நம்ப வேண்டியுள்ளது. இயற்கை தந்த குற்றாலம் என்னும் பெருங்கொடையை அணைகட்டி வருடம் முழுவதற்கும்  உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தெளிவு அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது தென்காசி மக்கள் வாங்கி வந்த சாபமாகத்தான் இருக்க முடியும். 

ஒட்டுமொத்த தமிழகமே மே ஜூன் ஜூலை அதாவது சித்திரை வைகாசி ஆணி மாத வெயிலில் துவண்டு காய்ந்து கருகிக் கொண்டிருக்கும் போது தென்காசியும் அதைச் சார்ந்த பகுதிகளும் குற்றால சீசனின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும். தென்காசியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தவம் செய்யாமல் வாங்கி வந்த வரம் தான் குற்றாலம். 

     மதியம் பன்னிரண்டு மணிக்கு அடிக்கும் உச்சி வெயில், அந்நேரம் திடிரென்று வீச ஆரம்பிக்கும் குளிர்ந்த காற்று, அடிக்கின்ற வெயிலிலும் வீசுகின்ற தென்றலையும் பொருட்படுத்தாது பெய்ய ஆரம்பிக்கும் மழை. இந்த சூழ்நிலை மாற்றத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் தென்காசி குற்றால சீசனை வரவேற்க தயாராகிவிட்டது என்பதை. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மழை பெய்தாலும் மக்கள் யாரும் அதைக் கண்டு எரிச்சலடைவதில்லை மாறாக " சீசன் மழைல நனைஞ்சா அடிக்கிற காய்ச்சல் கூட காத்தோட காத்த போயிரும் டே " என்று தத்துவம் கூற ஆரம்பிப்பார்கள்.     தென்காசியில் இரவு நேர பரோட்டாக் கடைகள் அதிகம். குற்றால அருவியில் குளித்துவிட்டு செங்கோட்டை பார்டர் கடையில் பரோட்டா சாப்பிட்டால் தான்  அருவியில் குளித்ததற்கான பலனை அடைய முடியும் என்பதை தென்காசியின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகனும் அறிவர்.வாரத்திற்கு மூன்று நாட்களாவது பரோட்டா சாப்பிட்டே ஆகவேண்டும். நூறு பரோட்டாக் கடைகள் இருந்தாலும் நூறும் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கும்.  தென்காசி செங்கோட்டையில் தயாராகும் பரோட்டா சால்னாவின் ருசி தமிழகத்தின் வேறெங்கும் ஏன் நெல்லையில் கூட கிடைக்காது.


     இப்படி ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் தென்காசி மக்கள் இனிவரும் காலங்களில் மிகப் பெரிய பிரச்சனையை எதிர்க்கொள்ள தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். வேறொன்றுமில்லை அழிந்து வரும் இயற்கையால் காலம் கடந்து வரும் சீசனும் காலம் குறைந்து பெய்யும் சீசன் மழையும் தான் காரணம். 

     பொதிகை மலைக் காடுககளை அழிப்பது, காடுகளுக்கு தீ வைப்பது ஒரு காரணமாக இருந்தாலும், இருக்கின்ற மரங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடங்களையும் காற்றாலைகளாக்க அனுமதித்த அரசாங்கம் தான் முக்கிய காரணம். 


     காற்றலையின் முக்கிய பிரச்சனை, காற்றலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை மட்டுப்படுத்தி மழை மேகங்களை குளிர்விக்காமல் விட்டுவிடுவதால், மழை மேகங்கள் மலை மேகங்களாக மாறி பொதிகையை அலங்கரிக்க கிளம்பிவிடுகின்றன. பெய் மழை பொய் மழையாகி வரவேண்டிய சீசன் ஊரை ஏமாற்றுகிறது. இதனால் நிலத்தடி நீரும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இயற்கையை அழிப்பதால் இயற்கையாய் நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தல் அழிபதற்கு முன் ஒரு நிமிடம் யோசிக்கவாவது செய்வோம்.   


     வியாபாரமும், வேலைவாய்ப்பும் அதனால் வாழ்க்கைத்தரமும் உயர்கிறது என்றாலும் இதுவரை தரமாக வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு வரப் போகும் அபாயங்களை நாம் எண்ணிப் பார்க்காமலேயே கடந்து விடுகிறோம். இனி வரப் போகும் அபாயங்களை எதிர்க்கொள்ள தென்காசி தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகின்றது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உணர்ந்ததை உரைக்கிறேன். உரைப்பேன்.

37 comments:

 1. பின்னிட்ட போ....!!!!!!!!!!

  ReplyDelete
 2. Namathu Thapa vita Tharunakalin thokupu Ithu...
  Avan avan Valkayil Panam , Payar , Pathavikaka than sontha ooray vidu pira Manilakalil , Nadukali velai parkiran.. Apadi irupavarin yennakalay yeduthraipathaka amaikirathu itha kaddurai...

  Valthukal Seenu... unathu Puthiya muyarchi Vetri aadaya Valthukirayan...


  செல்வா....

  ReplyDelete
  Replies
  1. ஆமா டா செல்வா இன்னும் அந்த மண்ணில் நமக்கான நாட்கள் காத்துக் கொண்டுள்ளன

   Delete
 3. இயற்கையை அழிப்பதால் இயற்கையாய் நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தல் அழிபதற்கு முன் ஒரு நிமிடம் யோசிக்கவாவது செய்வோம்.....semma line

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உற்சாகம் தரும் வார்த்தைகளே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது

   Delete
 4. //வியாபாரமும், வேலைவாய்ப்பும் அதனால் வாழ்க்கைத்தரமும் உயர்கிறது என்றாலும் இதுவரை தரமாக வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு வரப் போகும் அபாயங்களை நாம் எண்ணிப் பார்க்காமலேயே கடந்து விடுகிறோம்.//

  அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் அளிக்கும் வாழ்த்து ஒன்றே பல பாராட்டுகள் கொடுத்த மகிழ்ச்சி தருகிறது. வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 5. //தென்றல் வரும் முன்னே தென்காசி வரும் உடனே//
  இது புதுசா இருக்கே...

  ReplyDelete
 6. ஒரு மண்ணின் மைந்தன் போல் அழகா சொல்லியிருக்கீங்க.கடைசி பாரா செம..செம..செம...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி மணிமாறன். இன்னும் எழுத ஆசை பதிவு பெரிதாகி விடுமே என்ற வார்த்தைச் சிக்கனம் தான்

   Delete
 7. Excellent article..i enjoyed a lot.. Hats off...
  என்னோட சொந்த ஊரை ஞபாக படுத்திட்டேங்க.....செம நரேஷன்..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ராஜ். வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்ததற்கு. இணைந்திருப்போம்

   Delete
 8. பொதிகையில் உற்பத்தியாகும் தென்றலை நேரடியாகவும் முழுமையாகவும் அனுபவிக்க வேண்டுமானால் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் தென்காசி பெரியகோவில் தான்.
  >>
  சில வருடங்களுக்கு முன் தென் காசி தென்றலை பெரிய கோவில் வாழலில் நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு திருமணத்திற்கு போய்விட்டு குற்றாலம் போகலாம்ன்னு நினைச்சோம். அப்போ முன்னிரவு 11 மணி. ஹோட்டல்லாம் ரூம் கேட்டோம் கிடைக்கலை. அதனால் கோவில் வாசலில் ஒரு 20 பேர் படுத்து உறன்கினோம். காத்து சும்மா அள்ளிக்கிட்டு போச்சு

  ReplyDelete
  Replies
  1. குடுத்து வச்சவங்க போங்க அந்த ஊர்ல இத்தனை நாளா இருக்கேன் எனக்கு கூட அந்த வாய்ப்பு கிடைச்சது இல்ல.குற்றாலத்துல இரவு நேரக் குளியல் அருமையா இருக்கும். குற்றாலம் பற்றிய தனி பதிவு போட ஆசை. அதில விளக்கமாகத் தருகிறேன். வருகைக்கு நன்றி.

   Delete
 9. உங்கள் ஊரைப் பற்றி மிக அழகாக, விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி வியபதி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் வருகையால் மகிழ்தேன்

   Delete
 10. அன்புள்ள நண்பர் சீனுவிற்கு உங்களின் பதிவிடலை படிக்கும் போது தென்காசி தூறலில் நனைந்த அனுபவம் வருகிறது . வாழ்துகள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி குரு. மீண்டும் மீண்டும் என் பக்கத்திற்கு வந்து தட்டவோ குட்டவோ செய்யுங்கள்.

   Delete
 11. இந்தத் தென்றல் காற்றைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு குட்டிக் குழந்தை உங்கள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அதை எவ்வளவு இனிமையாக மென்மையாக ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு மிருதுவாகத் தான் இருக்கும்/////////////

  எப்பிடிப்பா உன்னால மட்டும் இப்படி கற்பனை பண்ண முடியுது

  ReplyDelete
  Replies
  1. //எப்பிடிப்பா உன்னால மட்டும் இப்படி கற்பனை பண்ண முடியுது//

   உண்மையிலேயே அந்தத் தென்றல் அவ்வளவு இனிமையாக இருக்கும்

   வந்து ரசித்து என்னை வாழ்த்தியதற்கு நன்றி. இணைந்திருப்போம்

   Delete
 12. பிண்ணிட்டீங்க.....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. சீனு... தென்காசியையும் குற்றாலத்தையும் நான் பலமுறை அனுபவிச்சிருக்கேன். ஆனா புரோட்டா பத்தி எனக்குத் தெரியாது. அடுத்த முறை வர்றப்ப ஒரு கை பாத்துட வேண்டியதுதான். தென்றலைப் போல அழகாய் ஊரைப் பற்றி சொல்லிவந்த நீங்கள், கடைசியில இயற்கையை மனிதன் அழிப்பதைப் பற்றி விரிவாகப் பேசி மனதை கனக்க வைத்து விட்டீர்கள். உண்மையில் மரங்கள் அழிக்கப்படுவதற்கான விலையை மனித இனம் கொடுத்துத்தான் தீர வேண்டியுள்ளது! அருமையாக எழுதுகிறீர்கள். தொடர்கிறேன் நான்!

  ReplyDelete
  Replies
  1. தென்காசி என்றால் சாரல் பரோட்டாக் கடை, செங்கோட்டை என்றால் பார்டர் ரகமத் பரோட்டாக் கடை. இரண்டின் சுவையும் அருமையாக இருக்கும். படித்து தட்டிக் கொடுத்ததற்கு நன்றி // தொடர்கிறேன் நான்! // இந்த ஒரு வார்த்தை போதும் பல பதிவுகளை எழுதலாம். உங்கள் பதிவுகள் தரமாகவும் அழகாகவும் உள்ளன. தயவு செய்து எழுதுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

   Delete
 14. முன்பொரு முறை நான் ஒருவரின் எட்டுப் பதிவுகளை ஒரே நாளில் படித்து கருத்திட்டேன். அதற்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்திருந்தார் அவர். அந்த நெகிழ்வு எப்படியிருக்குமென்பதை இன்று நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். என் தொடரை ஆரம்பத்திலிருந்து சலிக்காமல படித்து, அழகாக கருத்து ச‌ொல்லியிருக்கற உங்க அன்புக்கு... ராயல் சல்யூட்!
  உண்மையில போன வாரத்துலருந்து மனசு கொஞ்‌சம் தடம் புரண்டிருந்தது. வலையை விட்டுப் போயிடலாமான்னு கூட ஒரு நினைப்பு வந்துச்சு. ஒரு தோழி எனர்ஜி டானிக் குடுத்து என்னைப் புதுப்பிச்சாங்க. இப்ப நீங்க குடுத்திருக்கற எனர்ஜி என்னை இன்னும் பல நாள் ஓட வைக்கும். நிரஞ்சனா மூலமா என் ப்ளாக்குக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். நல்ல நட்புக் கிடைக்க வழி‌செய்த நிரூவுக்கும் உங்களுக்கும் ‘நன்றி’ன்னு சொன்னா சம்பிரதாயமான வார்த்தை. என் உணர்வுகளை வெளிப்படுத்த அது பத்தாது. ஆனாலும் சொல்ல வேற வார்த்தை இல்லையேப்பா... So, Thanks! Thanks! Thanks!

  ReplyDelete
  Replies
  1. நான் எல்லாக் பதிவுகளையும் படித்து கருத்துகள் கொடுத்ததை எங்கே அதிகப் பிரசங்கித்தனமாக நினைதுவிடுவீர்களோ என்று பயந்தேன். மாறாக உளம் மகிழ்ந்து பாராட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி. அதையும் உங்கள் அனுபவத்திலிருந்தே கூறியது அதனினும் மகிழ்ச்சி. உம போன்ற பெரியவர்கள் வழிகாட்டுதலும் ஆசியும் வாழ்த்துகளும் தான் எமக்குத் தேவை.

   Delete
 15. எனது பிறந்த மண்ணை (செங்கோட்டை) ஞாபகபடுத்திய உங்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன செங்கோட்டை பார்டரில் கடை வைத்திருக்கும் நிலத்தின் உரிமையாளரை நான் 6 மாதம் முன் அமெரிக்காவில் சந்தித்தேன்

  ஆரம்பத்தில் தென்றலாக வந்து மனதை தாலாட்டி இறுதியில் மனதை கனக்க வைத்துவிட்டீர்கள்.

  உங்கள் பதிவிலும் எனது உறவினர்களின் பின்னுட்டத்தை கண்டேன். அதுதாங்க எனது சகோதரி ராஜி மற்றும் அவரது மற்றோரு சகோ கணேஷ் அவர்கள்தான்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் சொந்த ஊர் செங்கோட்டை தானா?. அவர்கள் உங்கள் உறவினர்கள் என்று நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது. வருகைக்கு நன்றி

   Delete
 16. சீனு நீங்கள் மிக சூப்பர் அஹ ப்ளாக் எழுது ரீங்க . வெரி குட் . தென்காசி பற்றிய பதிவு மிக அருமை .உங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள் . நான் உங்களிடம் நிறைய எதிர் பார்கிறேன் . கீப் இட் up. SEENU Rocks !!!!!!!!!!!!!!

  ReplyDelete
 17. தென்காசி பற்றி சிலாகித்து எழுதியுள்ளீர்கள். குற்றால சீசனை அனுபவித்தவர்களுக்குத்தான் இது தெரியும். வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் அதுவும் உண்மை தான். மிக்க நன்றி. வருகைக்கு நன்றி விச்சு சார்

   Delete
 18. நேற்றுதான் குற்றாலம் போயிட்டு வந்தேன்.பதிவை முன்னமே படிச்சிருந்தால் இன்னும் நல்லா உணர்ந்திருப்பேன்.தென்காசி சாரல்தான் நெல்லைக்கு AC.அதை அப்படியே பதிவுலகில் அளித்ததுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ குற்றாலம்ல நல்ல தண்ணி விழுதாமே. அந்த ஊர் மக்கள் பாக்யசாலிகள். உங்கள வருகையால் மகிழ்ந்தேன் அண்ணா

   Delete
 19. boss kalakitinga nan chennai ku vanthu 2 yrs aguthu..:( bt itha read pannum pothu en nenaivu full ah tenkasi than irunthuchi thnx boss enna mathiri tenkasi ah vitu irukravangaluku ithu oru gift nu than sollanum

  ReplyDelete
 20. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete
 21. Naanum en oorin maanthoppukalaiyum,,thendralaiyum tholaithu vittain, engu selgirom naam??

  ReplyDelete
 22. tenkasi always special place for every one for so many reason. for us no need reason...it is not necessary also

  ReplyDelete