30 Apr 2012

திருவிழாக்களும் தீபிகாக்களும்


   அம்மன் சீரியல் பல்புகளால் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளின் இடைவெளி வழியாக தீபிகாவை துரத்திச் சென்ற பொழுது தான் சிவ பூஜையில் நந்தி குறுக்கிட்டது. அந்தக் கட்டைகளில் ஒன்றின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தார் ஸ்ரீ அண்ணா. திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து வந்தவரை 'வாங்க' என்று கேட்க வேண்டும், தீபிகாவையும் துரத்த வேண்டும். வேறு வழியில்லாமல்
     "வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க? " அவளைத் துரத்தும் அவசரத்தில் கால் படபடக்க விடுவிடுவென அவர்மேல் கேள்விகளைத் தொடுத்தேன். படபடபிற்குக் காரணம் நான் அவளைத் துரத்துவதைப் பார்த்துவிட்டாரோ? வீட்டில் வத்தி வைத்து விடுவாரோ என்ற கவலை தான். இத்தனை கேள்விகள் கேட்டும் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

     அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஏளனச் சிரிப்பா? இந்தப் பொடியனுக்குப் போய் பதில் சொல்ல வேண்டுமா என்ற எகத்தாளச் சிரிப்பா?நான் ரூட் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்த வில்லன் சிரிப்பா? புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரியும் முன் என்னைத் தரதரவென இழுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் ஓடினான் என் நண்பன் முத்து.

     இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் கரைந்த தீபிகாவை எப்படிக் காண்பது? கண்டுபிடிப்பது? என்ற கேள்விகளோடு முத்துவைப் பார்த்தேன். இரவு பத்து மணிக்கு தெருவில் தனியாக நடந்து வரும் பொழுது கடிக்குமா கடிக்காதா என்ற நிலையில் ஒரு நாய் நம்மைப் பார்த்தல் எப்படி இருக்குமோ! அப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் இன்று மூன்றாம் திருவிழா. காலை எழுந்தவுடன் திருவிழவிற்கான பத்திரிக்கையை எடுத்து இன்று என்ன நிகழ்ச்சிகள் உள்ளன என்று நோட்டம் விட்டேன்.

     108 சங்காபிசேகம் காலை ஏழு மணி தலைமை திரு கண்ணன் அக்ரஹாரம்.
இதைப் பார்த்தவுடன் மனதிற்குள் சொல்ல முடியாத அவசரம். அதே வேகத்துடன் சைக்கிளை முத்துவின் வீட்டை நோக்கி செலுத்தினேன்.

     யாரவது எழுப்பினால் தான் விடிந்ததே அவனுக்குத் தெரியும். அதிலும் காலை ஏழு மணியை எல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது கூட கிடையாது. மணியோ ஆறு. அவசர அவசரமாக அவனை எழுப்பினேன். எழுப்புவது நான் என்பதால் எழுந்துவிட்டான். தூக்கம் கலைவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூட அவனுக்கு நான் நேரம் கொடுக்கவில்லை.

     "இந்தா, இந்த நோட்டிச பாரு. 108 சங்காபிசேகம், தலைமை தீபிகா தாத்தா, கண்டிப்பா அவளும் வருவா." சொல்லச் சொல்ல புரிந்து கொண்டான்.

     "நீ வீட்டுக்குப் போய் குளிச்சு ரெடியா இரு, ஏழு மணிக்கு கோவில்ல பாப்போம்"      சிரித்துக் கொண்டே எழுந்தான். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் பொழுது " ஒரு நிமிஷம் என்றான்".

     "இன்னிக்கு ஸ்கூல் லீவ் போடணும் அவ்ளோதான" அவன் கேள்வி கேட்க்கும் முன்னே பதிலளித்து விட்டு எந்த இடத்தை விட்டகன்றேன். 

     இவ்வளவு துடிப்போடு செயல்படுவதால் தீபிகாவை சைட் அடிப்பது நான் என்று நினைத்து விடவேண்டாம். இடுக்கண் களைவதாம் நட்பு என்று எப்போதோ படித்த குறளை சொல்லிக்காட்டி நட்பு நட்பு என்று வெருப்பேற்றுகிரானே இந்த முத்து அவனுக்காகத் தான் இவ்வளவும்.

     6.45க்கு கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். என்னையே என்னால் சரியாக பார்க்க முடியாத அளவிற்குக் கூட்டம். இதில் அவளை எங்கே தேடுவது என்ற படியே பார்வையை அங்குமிங்கும் மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்பொழுது காலை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

"என்ன?" என்றேன்.

     "அங்க பாரு, அவ தாத்தா பக்கத்துல உக்காந்த்ருக்கா பாரு" கண்டுபிடித்த பெருமிதத்தில் கத்த ஆரம்பித்தான். ஒட்டு மொத்த கூட்டமும் எங்களை முறைத்து விட்டு மீண்டும் அய்யரின் 'ஓம் க்ரீம் க்லீம்' க்குள் ஐக்கியமாகியது.அவளைப் பார்த்து விட்ட சந்தோசத்தடன் அவனைப் பார்த்தேன், அவன் முகமூ வாடிப் போயிருந்த்தது.  

     "அதான் பாத்தாசுல்ல அப்புறம் என்ன?"  
   "ஒழுங்காப் பாரு, அவ யுனிபார்ம் போட்ருக்கா" அவன் சொன்னதன் பின்தான் அவளை ஒழுங்காகப் பார்த்தேன்.

     "அப்போ ஸ்கூல்க்கு லீவ் போட்டது வேஸ்ட்டா!"

     "படிச்சா மட்டும் கலெக்டரா ஆகப் போறோம்! நீ ஏழா ரேங்க், நா ரெண்டு அவுட்" அந்த நேரத்திலும் தத்துவம் சொல்ல ஆரம்பித்தான்.

     மணி எட்டு சங்காபிசேகம் முடிந்து எல்லாரும் சாமியைப் பார்க்கச் சென்ற பொழுது நானும் அவனும் மட்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கமாகச் செல்லும் பாலத்தின் அருகே சென்றோம்.

     நாங்கள் அங்கே செல்லவும், தீபிகா அவள் அப்பாவுடன் M-80 யில் அந்த இடத்தைக் கடக்கவும் சரியாக இருந்தது. எப்போது அந்த இடத்தைக் கடந்தாலும் முத்துவைப் பார்த்து சிரித்துவிட்டு, கண்ணடித்துவிட்டுத் தான் செல்வாள். அந்த போதை தரும் மயக்கதிற்காகவே இந்த பேதையிடம் இன்று காதலை வெளிப்படுத்தி விடவேண்டும் என்ற தைரியத்தில் இருந்தான். இருந்தோம்.

     பள்ளி முடிந்து அவள் மீண்டும் திருவிழாவிற்கு வரும் வரை திருவிழா சுவாரசியம் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்ததது.   எல்லாரும் பொங்கல் வைக்க ஆரம்பித்திருந்தார்கள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி ஆயிரம் முகத்தாளைப் பற்றி எப்போதோ பாடியதை ராமு சவுண்ட் சர்வீஸ் இப்போது பாட வைத்துக் கொண்டிருந்த்தார். பத்தாம் வகுப்பு தாண்டிய பையன்கள் ராட்டினத்தில் சுற்ற அனுமதி இல்லாததால் தாவணியில் வரும் தேவதைகளை சுற்றத் தொடங்கி இருந்தார்கள்.

     மாரியப்பனை கோவிலுக்கு வர விழாக் கமிட்டியார் அழைத்துக் கொண்டிருந்த வேளையில்தான், வானத்தில் இருந்த செஞ்சூரியனே தரையில் நடந்து வருவது போல சிகப்பு நிற பட்டுப் பாவாடை அணிந்து திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தாள் தீபிகா.நாங்களோ ராமன் செலுத்திய அம்பு போல அவள் பின்னால் செலுத்தி விடப்பட்டோம், இடையில் நின்ற ஸ்ரீராம் அண்ணனால் தடுத்து நிறுத்தப்பட்டோம். மீண்டும் அவளை எப்படிக் காண்பது என்று தெரியாமல் இவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்து விடப்பட்டோம்.

     அவள் குடும்பம் பொங்கல் வைக்குமிடம், ராட்டினம் சுற்றுமிடம், கலை நிகழ்ச்சிகள் நடக்குமிடம், பலூன் வளையல்கள் விற்குமிடம், இப்படி எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. என்னால் தான் அவளைத் தொலைத்துவிட்டோம் என்ற கோபத்திலேயே எதுவும் பேசாமல் வந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அவளை கண்டுபிடித்துவிட்டோம். அவள் வயதையொத்த பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் முத்து அவள் நின்றதற்கு எதிர் திசையில் ஓடினான். திரும்பி வரும் பொழுது கையில் ஒரு பலூன் இருந்தது. 

     அவளுக்கான திருவிழாப் பரிசு அது. பார்வையாலேயே பழகி இருந்ததாலும், திருவிழா கொடுத்த தெம்பும், எங்களை தடையில்லாமல் அவளருகே அழைத்துச் சென்றது. அவளருகே சென்றதும் கொடுக்காமலேயே அவன் கையிலிருந்த பலூனைப் பறித்தாள். எனக்கு அந்த இடத்தில் நிற்பதற்கே கஷ்டமாக இருந்தது. பொறாமையாகவும் இருந்தது. இரண்டு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், கிளம்பலாம் என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.

     "ஒரு நிமிஷம்" அழைத்தது அவள் தான். "உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்றாள். அந்தக் கேள்வியை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சந்தோஷத்தில் அவளையே நோக்கினோம். இதழில் புன்னகை சுமந்து மெதுவாக 

     "டெய்லி அந்த பாலத்துக்குப் பக்கத்துலயே நிக்ரீங்களே யாரையும் ரூட் விடறீங்களா அண்ணா" என்றாள் அப்பாவியாக. நெஞ்சின் மீது யானை ஏறியது போல, காதுக்கு மிக அருகில் இடி விழுந்தது போல இருந்தது. காரணம் அந்த வார்த்தை 'அண்ணா'.

     "என்னது அண்ணனா, குட்ரீ பலூன" கோபத்துடன் அவள் கையிலிருந்த பலூனை பிடுங்கினான், பிடுங்கும் போதே பலூன் வெடித்தது. உடைந்த பலூனை ஒரு கையிலும், என்னை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு உடைந்து போன இதயத்துடன் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். இன்னது என்று சொல்ல முடியாத நிலையில் நானும் அவனைத் தொடர்ந்தேன்.

     பத்து வருடம் கழித்து சென்னையிலிருந்து இன்று திருவிழாவிற்காக வந்துள்ளேன், அம்மன் விஸ்வரூபம் எடுத்திருந்த கட்டைகளுக்கு அடியில் காத்திருந்த பொழுது, ஒரு சிறுமியும் பின்னாலேயே இரண்டு சிறுவர்களும் என்னை கடந்து கொண்டிருந்த்தார்கள். அவர்களில் ஒருவன் அவசரமாக என்னிடம் கேட்டான், "வாங்கண்ணா, எப்போ வந்தீங்க, எப்டி இருக்கீங்க? " .

     அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு விடையாக புன்னகையை பதிலளிக்கும் பொழுது தான் புரிந்தது அன்று ஸ்ரீ அண்ணா எனக்களித்த புன்னகைக்கான பதில்.

      திருவிழாக்கள் இருக்கும் வரை தீபிகாக்கள் அழிவதில்லை.

பின் குறிப்பு : இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே  

பின் குறிப்பில் மற்றுமொரு குறிப்பு : இது கதையே!

27 Apr 2012

சிரிக்க மூன்று + சிந்திக்க ஏழு


சிரிக்க மூன்று 


1. ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி நான் பேசாதிருக்கும் வரை.....

2. வீட்டை சுத்தப் படுத்துவதற்காகவே பண்டிகைகளை    

      கண்டுபிடித்துள்ளான்     தமிழன் .


3. வெயில் காலத்திற்கும் பனி  காலத்திற்கும் நூல் அளவு தான் 

    வித்தியாசம். 

    எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்... 

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்...

    # போதி தர்மனின் முந்தைய வாரிசு
சிந்திக்க ஏழு 1.கடந்ததை நினைத்துக் கலங்காமல் 

   கடக்கப் போவதை நினைத்துக் கடமையாற்றுவோம். 


2.முடிந்தால் முன்னேறு ...

   முடியாவிட்டால் முன்னேற விடு .


3.நான் பூஜ்யமாக இருக்க விரும்பவில்லை... 

   பூஜ்யத்தில் இருந்து தொடங்க விரும்புகிறேன்...

   காரணம்  

   கணிதமும் கணினியும் தங்கள் பயணத்தை... 

   தொடங்குவது பூஜ்யத்தில் இருந்து தான்...


4.வெற்றியிடம் வெற்றியைச் சந்திப்பது போல 

   தோல்வியிடம் தோல்வியைச் சந்திப்பதிலும் 

   பெருமிதம் அடைகிறேன்...


5.குற்றங்களைப் பார்க்கும் பொழுது துரியோதனன் ஆகவும்

   நன்மைகளைப் பார்க்கும் பொழுது துரோணன் ஆகவும் இருக்கும்    
   
   நாம் 

   குற்றங்களைச் செய்து விட்டு நல்லவனாக நடிக்கும் பொழுது 

   மட்டும் சாணக்கியனாக இருக்கின்றோம் 

   #சாணக்கியன்


6.அதிஷ்டம் அதுஇஷ்டம் ஒரு விளக்கம் 

   புகலிடம் பெற நினைத்தவன் புகழிடம் சிக்கினால் 

   - அதிஷ்டம்

   புகழிடம் பெற  நினைத்தவன் புகலிடம் கூட கிடைக்காமல் 

   சிக்கினால்

   - அதுஇஷ்டம்7. சில நேரங்களில் என்னை எனக்கு
    
    அறவே பிடிபதில்லை !!!

    இருந்தும் உயிர் வாழ்கின்றேன்

    என்னுள் இருப்பவனை பல நேரங்களில்
    
    பிடித்துப் போவதால் !!!


மேற்கூறிய பத்தும் எனது முகநூலில் எழுதியவை. இங்கே பதிவாக உங்கள் பார்வைக்கு  


                                                                                    உணர்ந்ததை உரைக்கிறேன். உரைப்பேன்.

23 Apr 2012

உணர்ந்ததை உரைக்கிறேன்

     சென்னையிலிருந்து திருச்சி மதுரை தென்காசி வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு வண்டி 2661 ஏழாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் நேரம் இது.. இந்த அறிவிப்பின் முடிவில் மெதுவாக நகர ஆரம்பித்து நகர்ந்து நகர்ந்து பின் ஒரு கட்டத்தில் இரயில் நிலையத்தில் இருந்து முழுவதுமாக வெளிச்சென்று என் கண்ணில் இருந்து மறையும் வரை பொதிகையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். இரயில் மறைந்து வழியனுப்ப வந்த்தவர்கள் கரைந்து கொண்டிருக்கும் நேரம் பிளாட்பாரமே வெறுமையாகிக் கொண்டிருக்கும் வேளையில் மனதிற்குள் ஏறும் ஒரு இனம் புரியாத பாரம் என்னை நகர விடாமல் செய்யும். 

     இதுபோன்ற ஒரு உணர்வை நீங்கள் அனுபவித்திருக்காவிட்டால், இன்னும் நீங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இக்கணத்தில் வாழ நினைக்கும் ஊரை விட்டுப் பிரிந்து நெடுந்த்தொலைவு செல்லவில்லை என்று அர்த்தம். நெடுந்தொலைவில் இருந்து என் ஊரை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை உங்கள் கண்களுக்கும் தருகிறேன் படித்து ரசித்து விட்டுச்செல்லுங்கள். 


 தென்காசியின் ஐந்து கிலோமீட்டருக்கு முன்னால் வரும் போதே நீங்கள் சுவாசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் தென்காசி மக்கள் அனுபவிக்கும் தென்றல் காற்றை. 'தென்றல் வரும் முன்னே தென்காசி வரும் உடனே'  என்ற சொல் ஒவ்வொறு பயணியும் தவறாது உச்சரிக்கும் வாசகம். 

     இந்தத் தென்றல் காற்றைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு குட்டிக் குழந்தை உங்கள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அதை எவ்வளவு இனிமையாக மென்மையாக ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு மிருதுவாகத் தான் இருக்கும் பொதிகையில் உற்பத்தியாகி மூலிகைகளின் வாசம் சுமந்து தென்காசி மக்களின் சுவாசமாக விளங்கும் இந்தத் தென்றல் காற்று.


     ஒரு பறவையின் பார்வையில் இருந்து தென்காசியைப் பார்த்தோமானால், ஊரின் நடுவே கம்பீரமாக நிற்கும் தென்காசி பெரியகோவிலையும் , அதன் நான்கு ரதவீதிகள் மற்றும் அம்மன் சுவாமி சன்னதி தெருக்களில் வியாபித்திருக்கும் வணிக வளாகங்களையும், அதனைச் சுற்றி மக்கள் வாழும் பகுதிகளும், அவற்றில் இருந்து இன்னும் உயரப் பறந்தால் பச்சைப் போர்வைப் போர்த்தியது போன்ற வயல்வெளிகளும் தென்னந் தோப்புகளும் அவற்றின் நடுவே வளைந்து நெளிந்து ஓடும் சிற்றாறும், இன்னும் இன்னும் உற்று நோக்கிப் பார்த்தால் வயல்களின் நடுவில் குட்டிக் குட்டியாக முளைத்த கிராமங்களும், இவை எல்லாவற்றின் எல்லையாக பொதிகை மலையும் குற்றால அருவிகளும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

     பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட தென்காசி அன்றிலிருந்து இன்றுவரை பல மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் உட்பட்டாலும் இன்றும் பசுமை மாறாமல் தான் காட்சியளிக்கிறது. இவ்வூரில் கடற்கரையோ பூங்காவோ கிடையாது. இருந்தும் இந்தக் குறையைப்போக்குவது தென்காசி பெரியகோவில் தான். 

     பொதிகையில் உற்பத்தியாகும் தென்றலை நேரடியாகவும் முழுமையாகவும் அனுபவிக்க வேண்டுமானால் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் தென்காசி பெரியகோவில் தான். அதற்காக பெரிய கோவிலை வெறும் காற்று வாங்குவதற்கான இடமாக மட்டும் நினைத்து விடவேண்டாம், வருபவர்களும் அப்படி நினைத்து வருவதில்லை. மாலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வருபவர்கள் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு எட்டு மணி வரை வெளியில் அந்த இனிமையான வளியில் அமர்ந்து காற்றை ரசித்துவிட்டு பின்புதான் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்

     பரந்துவிரிந்த அந்த கொபுர வெளியில் பல குழுக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் ஆத்திகமும் இருக்கும் நாத்திகமும் இருக்கும். திராவிடமும் பேசுவார்கள் கம்யுனிசமும் பேசுவார்கள், இன்னும் சிலர் குடும்பப் பிரச்சனைகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் விவாதம் எல்லை மீறிச் சென்றாலும் ஒருக்காலும் ஒருவரும் தவறான வார்த்தைகளில் பேசிப் பார்த்தது இல்லை. பலருக்கும் பல விசயங்களில் புரிதலையும், அமைதியையும், தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகத் தான் அந்தக் கோவிலைப் பார்க்கின்றேன். ஒரு ஆலயம் மனிதனின் மனதிற்குக் கொடுக்க வேண்டிய நிம்மதியும் அது தான்.

     தென்காசிக்கான பொதுத்தொழில் என்று எதுவும் கிடையாது, இருந்தும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி தான் உள்ளார்கள். இது போக பீடி சுற்றுதலும் பூ கட்டுதலும், கட்டிட வேலை பார்ப்பவர்களும் அதிகம். சீசன் சமயத்தில் குற்றால மலையில் கடைபோடும் சீசன் வியாபாரிகளும் திடிரென முளைப்பார்கள். 

     அரசாங்க வேலையில் இருபவர்களும், சுய தொழில், குறுந்தொழில், குடிசைத் தொழில் புரிபவர்கள் என்று பலவாராக இருந்தாலும், தனியார் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் வேலைக்காக பெரிய நகரங்களைத் தான் நம்பியிருக்க வேண்டும்.  தென்காசிக்கென ஒரு தொழிற்சாலை கிடைக்காதா, நாமும் அங்கு வேலைக்குச் சேர மாட்டோமா என்பது தான் அங்குள்ள பல இளைஞர்களின் கனவு.

     வருடத்தின் பல மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பல காற்றாலை மரங்கள் புதிதாக முளைத்துள்ளன.  காற்றாலைகளின் வருகையால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் இருந்தும், இந்த 'இருந்தும்' என்ற வார்த்தைக்கான ஆதங்கத்தை கடைசியச் சொல்கிறேன். அத்தியாவசியச் செலவுகள் செய்யவே அதிகம் உழைக்க வேண்டி இருப்பதால் இங்கே அநாவசியச் செலவுகள் செய்வோர் மிகக் குறைவு. ஐந்து கி.மீ தொலைவுள்ள குற்றாலத்திற்கே இன்றும் பலர் சைக்கிள் மிதித்துத் தான் செல்கின்றனர்.

     ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழும் நீர் நம் உடலை நனைக்கும் நேரத்தில் இதமாகி இதம் தருவதாக இருந்தாலும் உடலையும் மனதையும் குளிர்வித்தாலும், குற்றாலம் என்பது இவர்களுக்கு வெறும் காட்சி பொருள் இல்லை. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருப்பொருள். தென்காசியின் ஜீவநாடியே குற்றாலமும் அதிலிருந்து தனக்கென ஒருபாதையைத் தேடிக்கொண்ட சிற்றாறும் தான்.

     இந்த இரண்டும் ஒருமுறை வற்றிய போது தென்காசியும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் தண்ணீருக்காக அலைந்த சோகக் கதையை ஜீவன் இருக்கும் வரைக்கும் யாராலும் மறக்க முடியாது. இன்றும் மழை பொய்த்தாலோ குறைந்தாலோ தாமிரபரணியை தான் நம்ப வேண்டியுள்ளது. இயற்கை தந்த குற்றாலம் என்னும் பெருங்கொடையை அணைகட்டி வருடம் முழுவதற்கும்  உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற தெளிவு அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது தென்காசி மக்கள் வாங்கி வந்த சாபமாகத்தான் இருக்க முடியும். 

ஒட்டுமொத்த தமிழகமே மே ஜூன் ஜூலை அதாவது சித்திரை வைகாசி ஆணி மாத வெயிலில் துவண்டு காய்ந்து கருகிக் கொண்டிருக்கும் போது தென்காசியும் அதைச் சார்ந்த பகுதிகளும் குற்றால சீசனின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருக்கும். தென்காசியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தவம் செய்யாமல் வாங்கி வந்த வரம் தான் குற்றாலம். 

     மதியம் பன்னிரண்டு மணிக்கு அடிக்கும் உச்சி வெயில், அந்நேரம் திடிரென்று வீச ஆரம்பிக்கும் குளிர்ந்த காற்று, அடிக்கின்ற வெயிலிலும் வீசுகின்ற தென்றலையும் பொருட்படுத்தாது பெய்ய ஆரம்பிக்கும் மழை. இந்த சூழ்நிலை மாற்றத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் தென்காசி குற்றால சீசனை வரவேற்க தயாராகிவிட்டது என்பதை. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மழை பெய்தாலும் மக்கள் யாரும் அதைக் கண்டு எரிச்சலடைவதில்லை மாறாக " சீசன் மழைல நனைஞ்சா அடிக்கிற காய்ச்சல் கூட காத்தோட காத்த போயிரும் டே " என்று தத்துவம் கூற ஆரம்பிப்பார்கள்.     தென்காசியில் இரவு நேர பரோட்டாக் கடைகள் அதிகம். குற்றால அருவியில் குளித்துவிட்டு செங்கோட்டை பார்டர் கடையில் பரோட்டா சாப்பிட்டால் தான்  அருவியில் குளித்ததற்கான பலனை அடைய முடியும் என்பதை தென்காசியின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகனும் அறிவர்.வாரத்திற்கு மூன்று நாட்களாவது பரோட்டா சாப்பிட்டே ஆகவேண்டும். நூறு பரோட்டாக் கடைகள் இருந்தாலும் நூறும் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கும்.  தென்காசி செங்கோட்டையில் தயாராகும் பரோட்டா சால்னாவின் ருசி தமிழகத்தின் வேறெங்கும் ஏன் நெல்லையில் கூட கிடைக்காது.


     இப்படி ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து வரும் தென்காசி மக்கள் இனிவரும் காலங்களில் மிகப் பெரிய பிரச்சனையை எதிர்க்கொள்ள தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். வேறொன்றுமில்லை அழிந்து வரும் இயற்கையால் காலம் கடந்து வரும் சீசனும் காலம் குறைந்து பெய்யும் சீசன் மழையும் தான் காரணம். 

     பொதிகை மலைக் காடுககளை அழிப்பது, காடுகளுக்கு தீ வைப்பது ஒரு காரணமாக இருந்தாலும், இருக்கின்ற மரங்களை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடங்களையும் காற்றாலைகளாக்க அனுமதித்த அரசாங்கம் தான் முக்கிய காரணம். 


     காற்றலையின் முக்கிய பிரச்சனை, காற்றலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை மட்டுப்படுத்தி மழை மேகங்களை குளிர்விக்காமல் விட்டுவிடுவதால், மழை மேகங்கள் மலை மேகங்களாக மாறி பொதிகையை அலங்கரிக்க கிளம்பிவிடுகின்றன. பெய் மழை பொய் மழையாகி வரவேண்டிய சீசன் ஊரை ஏமாற்றுகிறது. இதனால் நிலத்தடி நீரும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இயற்கையை அழிப்பதால் இயற்கையாய் நாமும் அழிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தல் அழிபதற்கு முன் ஒரு நிமிடம் யோசிக்கவாவது செய்வோம்.   


     வியாபாரமும், வேலைவாய்ப்பும் அதனால் வாழ்க்கைத்தரமும் உயர்கிறது என்றாலும் இதுவரை தரமாக வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு வரப் போகும் அபாயங்களை நாம் எண்ணிப் பார்க்காமலேயே கடந்து விடுகிறோம். இனி வரப் போகும் அபாயங்களை எதிர்க்கொள்ள தென்காசி தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகின்றது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

உணர்ந்ததை உரைக்கிறேன். உரைப்பேன்.

17 Apr 2012

தொலைந்து போன நாட்கள்


[ குறிப்பு : இந்தக் கதையை நீங்கள் மீண்டும் ஒருமுறை வாசிப்பீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி] 

உன்னோடு பழக ஆரம்பித்த நாட்களில் நீயும் நானும் மணிகணக்கில் பேசிக் கொண்டிருப்பபோம். நிமிடத்திற்கு ஒரு மெசேஜாவது அனுப்புவோம். இன்றோ எல்லாமே படிப்படியாக குறைந்து நம் மீது நமக்குள்ள காதலும் குறைந்து விட்டதோ என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகின்றாய் என்று முடிவெடுத்த பின் உன்னைத் தடுப்பதற்கு நான் யார்?
இருந்தும் உனக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் வேடிக்கையான பொறுப்பை என்னிடம் ஒப்படைதுள்ளதால் மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு இத்துடன் அந்த பொருத்தமான மாப்பிள்ளையின் படத்தை இணைத்துள்ளேன். இவன் தான் உனக்கு ஏற்றவன். திருமணம் செய்துகொள் வாழ்த்துக்கள்.'

***********

     மஞ்சள் நிறக் கதிர்களை ஆதவன் உற்பத்தி செய்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுது, ரம்யமான அந்த மண்டபத்தில் மையமாய் வீற்றிருந்த மணமேடையின் மேல் ஏறினாள் மணப்பெண்ணாக. மஞ்சள் நிறத்தில் அவள் கட்டியிருந்த சேலையும், தங்க ஆபரணங்களால் ஏற்பட்டிருந்த ஜொலிப்பும், அழகை இன்னும் அழகாக்கியிருந்த ஒப்பனைகளும், என்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் உணர்வுகளை, எனக்கும் அவளுக்குமான உணர்வுகளை, எப்படிச் சொல்லப் போகின்றேன் என்று தெரியாத ஒரு நிலையில் இருந்து சொல்கிறேன், நான் தொலைந்து போன நாட்களை.

     கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள் தான் நாங்கள். அவளுடன் படித்த அந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட அவளிடம் பேசியது இல்லை. மூன்றுவருடப் படிப்பு முடிந்து அதிலிருந்தும் மூன்று வருடங்களுக்குப் பின் வகுப்புத் தோழி ஒருத்தியின் திருமணத்தில் சந்தித்தேன். இன்று மணப்பெண்ணாக நிற்பவள், அன்று மணப் பெண்ணின் தோழியாக நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்தமாத்திரத்தில் என்னிடம் வந்து பேசினாள். அன்று எங்கள் இருவருக்குமே தெரியாது, நாங்கள் நட்பாகி காதலாகி கசிந்துருகுவோம் என்று. 

     நட்புடன் பழகி, காதலித்து, பின் ஜென்ம விரோதியாகி இப்படி மூன்று நிலைகளைக் கொண்ட காதலில், மூன்று நிலைகளையுமே முழுமையாகப் பரிசளித்தவள் அவள். அதிலும் அந்த மூன்றாம் நிலையை மட்டும் அதிகமாகப் பரிசளித்து அழகு பார்த்தாள்.

     எப்போது சண்டை வரும். எதற்காக சண்டை வரும், என்றெல்லாம் எதிர்பார்கவே முடியாது. சில சமயங்களில் எதற்காக சண்டை போட்டோம் என்று தெரியாமலேயே எங்கள் சண்டை சமாதானத்தில் முடிந்துள்ளது. சந்தோசத்திற்கும் அழுவாள். சண்டைக்கும் அழுவாள். கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவள் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள். பின்னொரு நாள் அதே கடற்கரையில் ஏன் என் கை பிடித்து நடக்கவில்லை என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

     இப்போது மணமேடையில் கூட கலங்கிய கண்களுடன் நிற்கின்றாள். இந்த கண்ணீருக்கு காரணம் என்ன? எனக்குத் தெரியவில்லை ஆனால் அவளிடம் பதில் இருக்கும். ஒரு ஓரமாக நின்று இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் குனிந்து கொண்டாள். இத்தனை நாள் இல்லாத வெட்கம் இந்த நொடியில் ஏன் வந்திருக்க வேண்டும். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதாலா? இருக்கலாம். அந்த ஒரு பார்வைத் தீண்டலுக்குப் பின் அவள் என்னைப் பார்கவே இல்லை.

     மிகவும் தைரியமானவள். இருந்தும் அவளுக்குள் ஏற்பட்ட வெட்கம் அவள் தைரியத்தை குறைத்திருக்க வேண்டும். கடற்கரையில் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது போலீஸ் எங்களை பிடித்துக் கொண்டது. எனக்கோ பயத்தில் வயிற்றினுள் நூறு பட்டம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

     அவளோ தைரியமாக பேச ஆரம்பித்தாள். " இவன் என் காதலன். இவனைத் தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன். இது என் அப்பாவின் நம்பர் வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள்" என்றாள் அசாதாரணமாக. அந்தப் போலிசும் பல முறை முயற்சித்துப் போனை யாரும் எடுக்கவில்லை என்ற எரிச்சலில் எங்களை விடுத்துச் சென்றார். 

     தப்பித்தால் போதுமென்று வேகமாக நடக்க ஆரம்பித்த என்னிடம் " உன் போன் நம்பரத்தான் அவருக் கிட்ட கொடுத்தேன், அப்புறம் அவரு போன் பண்ணினா நான் கேட்டதாச் சொல்லு" என்று சொல்லிக் கொண்டே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். அவளுடன் இருக்கும் நேரத்தில் போனை சைலெண்டில் வைப்பது தான் வழக்கம், அதை அறிந்து சமயோசிதமாக செயல்பட்ட அந்த தைரியம் இன்று என்னைப் பார்த்ததும் வெட்கத்தில் ஒளிந்து கொண்டதோ? 

     சுபமுகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருப்பதை நாதஸ்வரமும் மேளமும் உற்சாகமாகக் கூறிக் கொண்டிருந்ததன. அவளும் நானும் எந்த திருமனதிற்குமே முகூர்த்த நேரத்திற்கு சென்றது கிடையாது. முகூர்த்தம் முடிந்து மண்டபமே காலியாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் மண்டபத்தினுள் நுழைவோம். காரணம் வெறிச்சோடிய , மண்டபத்தில் தான் நாங்கள் தனியாக உட்கார்ந்து பேச முடியும். " நம்ம கல்யானதுக்காவது நாம சரியான முகூர்த்த நேரத்திற்கு வரணும்" என்று கிண்டலாக சொல்வாள். இதோ இன்று முகூர்த்த நேரத்திற்கு முன்னமே மணமேடைக்கு வந்துவிட்டாள். 

     மூன்று மாதங்களுக்கு முன் என்னிடம் " எங்க வீட்ல என்ன உடனே கலயாணம் பண்ணிக்க சொல்றாங்க. அவங்க பாக்ற மாப்பிள்ளை எல்லாரையும் பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேன். சீக்கிரமா எங்க வீட்ல பேசு. டெய்லி அம்மா அழுறாங்க அவங்கள என்னால சமாளிக்க முடியல" என்றாள் அழுதுகொண்டே. எனக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவளை உடனடியாக கல்யாணம் செய்து கொள்ளும் நிலையிலும், வேலையிலும் நான் இல்லை. இது அவளுக்கும் தெரியும். 

     "கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, இப்ப நான் பண்ற ப்ராஜெக்ட் கண்டிப்பா சக்சஸ் ஆகும், அதோட ரிசல்ட் வந்ததும் நானே உங்க அப்பாகிட்ட வந்து பேசுறன்" இதை தவிர வேறு எதையும் என்னக்கு சொல்லத் தெரியவில்லை. 

     அன்று சிரித்துக் கொண்டே தலையாட்டியவள் அதிலிருந்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு மெயில் அனுப்பினாள். ' இதில் மூன்று போட்டோக்கள் இனைத்துள்ளேன், மூன்றுமே எனக்காக என் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைகளின் போட்டோக்கள். இதில் எனக்குப் பொருத்தமானவன் யார் என்று கூறு" என்று கேட்டிருந்தாள்.

    இதற்கு முன்பும் இதேபோல் என்னிடம் கேட்டுள்ளாள், நானும் வந்த புகைப்படங்களைப் எல்லாம் பார்காமலேயே ' உனக்குப் பொருத்தமானவன் யாரும் இதில் இல்லை வேண்டாமென்று கூறி விடு' என்றுள்ளேன். அவளும் அதைத் தான் எதிர்பார்ப்பாள்.அவளுக்குப் பொருத்தமானவன் என்னை விட்டால் வேறு யாரும் கிடையாது என்பது போலத் தான் எங்களை நாங்கள் பழக்கி வைத்துள்ளோம். 

     ஆனால் இம்முறையோ அவள் என்னிடம் கேட்ட விதம் வேறு. நானும் உறுதியாக முடிவெடுத்து விட்டேன். எத்தனை நாள் தான் வாழ்வா சாவா என்று போராடுவது. இருப்பதிலேயே ஓரளவிற்கு அழகான புகைப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நொடியில் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் எழுத்துக்கள் ஆக்கினேன். 

     'உன்னோடு பழக ஆரம்பித்த நாட்களில் நீயும் நானும் மணிகணக்கில் பேசிக் கொண்டிருப்பபோம். நிமிடத்திற்கு ஒரு மெசேஜாவது அனுப்புவோம். இன்றோ எல்லாமே படிப்படியாக குறைந்து நம் மீது நமக்குள்ள காதலும் குறைந்து விட்டதோ என்ற சந்தேகத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகின்றாய் என்று முடிவெடுத்த பின் உன்னைத் தடுப்பதற்கு நான் யார்? 

     இருந்தும் உனக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் வேடிக்கையான பொறுப்பை என்னிடம் ஒப்படைதுள்ளதால் , மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு இத்துடன் அந்த பொருத்தமான மாப்பிள்ளையின் படத்தை இணைத்துள்ளேன். இவன் தான் உனக்கு ஏற்றவன். திருமணம் செய்துகொள் வாழ்த்துக்கள்.'

     அது நான் ஒரு வேகத்தில் எடுத்த முடிவு. என்ன செய்வது என்று தெரியாமல் என் நிலை மறந்து, அவசரத்தில் எடுத்த முடிவு. அந்த முடிவு இவ்வளவு சீக்கிரம் திருமணம் வரை வந்துவிடும் என்று இம்மியளவு கூட எதிர்பார்க்கவில்லை. எதிரில் பார்க்கும் இந்தக் காட்சியை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

     தொலைந்து போன நாட்களை சிந்தித்துக் கொண்டே இருந்த நேரத்தில் அவள் அப்பா என்னை நெருங்கி வருவதைக் கண்டதும் என் பார்வையை திசை மாற்றினேன். அருகில் வந்தவர் என் கைகளைப் இருக்கப் பற்றி இழுத்தார். " என்ன மாப்பிள்ள மேடையையே பார்த்திட்டு இருக்கீங்க, முகூர்த்த வேளை நெருங்குது, சீக்கிரம் தயாராகுங்க போங்க போங்க" என்று கூறி கொண்டே என்னைத் தள்ளிக் கொண்டு சென்றார் மணமகன் அறைக்குள். 
  
     என்ன புரியவில்லையா ! தெளிவாகச் சொல்கிறேன். அன்று ஒரு வேகத்தில் அவளுக்கு ஒரு மெயில் அனுபியதாகச் சொன்னேன் இல்லையா, அந்த மெயிலில் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையின் புகைப்படமாக இணைத்திருந்தது என் படத்தைத் தான். அவளில் நான் தொலைந்து போன நாட்களை அவளால் மட்டுமே திருப்பித் தர முடியும் என்ற வேகத்தில் நான் அனுப்பிய மெயில் அது. 

     அந்த மெயிலை துரதிஷ்டவசமாகவோ இல்லை அதிர்ஷ்டவசமாகவோ அவள் அண்ணன் படித்துவிட்டான். எங்கள் விஷயம் இருவீட்டாருக்கும் தெரிந்து, பல சண்டைகள், பல சமாதனங்களுக்குப் பின் இருவீட்டார் அழைப்போடு எங்கள் திருமணம் இனிதே நடைபெற உள்ளது. வந்து வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள்.  

13 Apr 2012

ஸ்ரீராமனும் சீனுவும் நித்தியானந்தாவும்      ஸ்ரீராமன் மைக்கின் முன்னால் நின்று கொண்டு இருந்தார். கல்யாண ராமனாகவோ பட்டாபி ராமனாகவோ காட்சி அளிக்கவில்லை. அன்னையின் ஆணையை ஏற்றுக் கொண்டு காவி உடை அணிந்த சாதாரண ஸ்ரீராமனாகவே காட்சியளித்தார்.

     நெஞ்சம் நிமிர்த்தி,வலுவான தோள் மற்றும் ஒளிவீசும் கண்களுடன்  அமைதியாக நின்று கொண்டு இருந்தார். முகத்தில் இருந்த தேஜஸ் அழகுக்கு அழகு சேர்த்தது. நிரம்பி வழிந்த அந்த பெரிய அரங்கம் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. தெய்வீகமான அமைதி அந்த அரங்கம் முழுவதும் பரவி இருந்தது. 

     தன் திருவாய் மலர்ந்த ஸ்ரீராமன், ராம பஜனை செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் உணர்ந்தேன் நிற்பது ராமன் இல்லை. ராமனின் பிம்பம். மக்கள் அனைவரும் ராமனுடன் சேர்ந்து ராம நாம சங்கீர்த்தனம் பாட ஆரம்பித்தனர். மிகவும் பரிச்சியமான பாடல். ஆனால் அதன் வரிகள் எனக்குத் தெரியவில்லை புரியவுமில்லை.

     ராமன் தலையசைத்துப் பாடிக் கொண்டிருக்க மக்களும் அவனைப் போலவே தலையசைத்துப் பாடிக்கொண்டு இருந்தார்கள். நானும் பாட முயற்சித்தேன் முடியவில்லை, தலை மட்டும் என்னை அறியாமல் அசைந்து ஆடிக் கொண்டு இருந்தது. உடல் முழுவதும் ஆனந்த அதிர்வுகள் ஆட்கொண்டிருந்தது. கண்ணீர் வருவது போல் இருந்தது வரவில்லை.

     பக்கத்தில் அமர்ந்திருந்த என் அண்ணனைப் பார்த்தேன், எந்த சலனமும் இல்லாமல் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எந்த ஆக்சனுக்கு எப்போது ரியாக்சன் செய்யவான் என்பதற்க்கான வேதிச் சமன்பாட்டை அந்த ஸ்ரீராமனால் கூட எழுத முடியாது.

     இந்த ஆனந்தத்தைக் கெடுக்கும் படியான ஒரு குரல்,

      " திருச்சிக்கு டிக்கெட் எடுத்தது யாருப்பா? திருச்சி வந்தாச்சி, எந்திரி, எந்திரி" 

  " யோவ் அண்ணாச்சி திருச்சி வந்தாச்சி எந்திரியும். உம்மோட பெரும் பாடுய்யா, டிக்கெட் எடுத்தது லேட்டு, பஸ்சுக்கு வந்தது லேட்டு, இப்பவும் லேட்டு" எரிச்சலில் கத்தினான் அந்த ஆசாமி.

     " டிக்கெட் வாங்கியசுன்னா எல்லாருமே ' லேட்டு ' தானய்யா" .

அண்ணாச்சியின் சிலேடை புரியாமல் தலையில் அடிதுக்க் கொண்டான் அந்த ஆசாமி.

     அண்ணாச்சி கூறியது சிரிப்பாக இருந்தது, இருந்தாலும், இளவதிலேயே 'லேட்' ஆக விரும்பாததாலும், அருமையான கனவு கலைக்கப் பட்டதாலும் சிரிக்கும் மனநிலையில் நான் இல்லை.

     அப்போது தான் உணர்ந்தேன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாத அளவிற்கு அனைத்து கண்ணாடி ஜன்னல்களும் அடைக்கப் பட்டிருந்தன. வியர்வைத் துளிகள் முதுகில் மூன்றாம் உலகப் போரையே நிகழ்த்திக் கொண்டிருந்தன. உடனடித் தேவை ஆக்சிஜன்.

     எல்லா சாமியையும் மறந்திருந்தேன். நினைவுக்கு வந்த ஒரே ஒரு சாமி நித்தியானந்தா சாமி தான். 

"கதவைத் திற காற்று வரட்டும்" .

10 Apr 2012

எச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல

"நானே எழுந்து விட்டேன் உனக்கென்ன இன்னும் தூக்கம்" என்பது போல் என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது இளஞ்சூரியனின் வெப்பம். செல்போனை எடுத்தேன். அதில் மணி தெரிகின்றதோ இல்லையோ அவளின் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு மட்டும் தவறாமல் தெரியும். 

காலை நான் எழுவதற்கு முன்பே எழுந்து, இரவில் என்னை உறங்க வைத்துவிட்டுப் பின் உறங்கும் ஒரே ஜீவராசி அவளாகத் தான் இருக்கும். என் கனவில் அவள் வந்தாளா இல்லையா என்ற விசாரணையில் இருந்து தான் என் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டுள்ளது. அந்த அளவிற்கு என்னைக் காதலிக்கிறாள்.

காதல் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா? தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரியும், நான் இல்லாமல் அவள் கடிகாரம் கூட அடுத்த நொடியைக் காட்டாது.

அவள் அனுப்பிய குறுந் தகவலைப் படித்தேன் " ஹாய் டா குட் மார்னிங் . உன் கூட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், உடனே போன் பண்ணு."முக்கியமான விஷயம் என்பதற்கு அவளது அகராதியில் வேறு பெயர் ஒன்றுக்கும் உதவாத மேட்டர் என்பதே.   

முக்கியமான விஷயம் என்று போன் செய்தால் "இன்னிக்கு என்ன கலர் டிரஸ் போட்ருக்க, இன்னிக்கு வெள்ளிகிழமை இந்த கலர் போடு" என்று சொல்லி விட்டு வைத்துவிடுவாள். அவளுக்கு எப்போதாவது நியாபகம் வந்தால் " போனவாரம் என்ன பொண்ணு பார்க்க வந்தாங்க" என்று சொல்லுவாள். "ஏன் இதை முன்னமே சொல்லவில்லை" என்று கேட்டால் " இது என்ன அவ்ளோ முக்கியமான விஷயமா" என்பாள். பெண்பாலை புரிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது ஒவ்வொரு ஆண்பாலுக்கும் தெரியும். 

நான்கு வருடங்களுக்கு முன்பு காதலை முதலில் வெளிப்படுத்தியது நான் தான். எவ்விதமான மறுப்போ போராட்டமோ செய்யாமல் ஏற்றுக்கொண்டாள். காதலிக்க ஆரம்பித்த நான்காவது வாரமே " நம் கல்யாணம் எப்போ?" என்றவளிடம் வேலைக்குச் சென்றதும்" என்றேன். அன்றிலிருந்து படிப்பை விட வேலையை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள். ஆனால் விதியோ வேறு விதமாக யோசித்தது. 

படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் படித்த படிப்பிற்க்கான வேலை கிடைக்கவில்லை. வேறு வழியே இல்லாமல் ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். படிப்பிற்கும் வேலைக்கும், வேலைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத வேலை அது. 

வேலையில் சேர்ந்து விட்டேன் ஆனால் மாதம் வெறும் ஐந்தாயிரம் தான் சம்பளம் என்ற என்னிடம்  "ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். எப்போ எங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கபோற" என்றாள் மனசாட்சியே இல்லாமல். தன் வீட்டு கார் டிரைவருக்கே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நான் என்ன சொல்லி பெண் கேட்பேன். 

"நல்ல வேலை கிடைக்கட்டும்" என்றேன். கோபப்பட்டு ஒரு மணி நேரம் பேசாமல் இருந்தாள். விசித்திரமானவள். அவள் கோபம் கலைய 60 வினாடிகளிலிருந்து 60 நிமிடங்கள் போதும். நல்ல வேலை கிடைக்க ஒரு வருடத்திற்கும் மேலானது. அதுவரை வேலை பார்த்து வந்த அலுவலக எம்.டி.க்கோ என்னை விட மனமில்லை. இருந்தும் படிப்பிற்கேத்த வேலை, கை நிறைய சம்பளம் என்றதும் உற்சாகத்துடன் விடை கொடுத்தார். 

என்னவளிடம் கூறினேன். என்ன பதிலுரைத்திருப்பாள் என்பது உங்களுக்கே தெரியும். அதையே தான் கூறினாள். ஆனால் இம்முறை சற்று பிடிவாதமாகவே கூறிவிட்டாள். " இந்த மாதத்திற்குள் என் அப்பாவிடம் நீ பேச வேண்டும்" என்று. எனக்கும் வேறு வழி இல்லாததால் சரி என்று கூறிவிட்டேன். அவள் வீட்டில் பேசுவதற்கு முன் என் வீட்டில் சொல்ல வேண்டுமே . சொன்னேன். பயங்கர கோபத்துடன் சிறிது சந்தோசத்தையும் கலந்து சரி என்றார்கள்.

அவள் அப்பாவிடம் பேசுவதற்க்கான நாளையும் அவளே குறித்துக்  கொடுத்தாள். என்ன சொல்வரோ என்ற பயத்திலேயே அவள் வீட்டினுள் நுழைந்தேன். வீடு எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாக இருந்தார் அவள் அப்பா. இவரைக் கூட சமாளித்து விடலாம், ஆனால் வெடித்து விடுவது போல் துடித்துக் கொண்டிருந்த என் இதயத் துடிப்பை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அகோரப் பசி கொண்ட முயல் சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்தேன். 

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவளை அந்த வீட்டு இளவரசியை பார்த்தேன். எனக்கு உதவுவற்காக "அப்பா"  என்றாள். ஒரு விரலை உயர்த்தி அவள் வார்த்தைகளை வார்த்தையாக்க விடாமலேயே தடுத்து நிறுத்திவிட்டார். அவர் என்னைப் பார்த்த பார்வை ஏளனமாக இல்லை என்றாலும் என்னை அவர்  ஏளனமாகப் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.  

எடுத்த எடுப்பிலேயே கூறினார் " என்னக்கு எல்லாமே தெரியும் தம்பி! நீங்க ரெண்டு பேரும் நாலு வருசமா லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வாரத்துல நானே உங்கள கூப்பிட்டு பேசலாம்னு இருந்தேன்.ஆனா நீங்க முந்திட்டீங்க. ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க, என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கறதா வேணாம்னு சொல்லறேன்" என்றார். என்னை எதுவுமே பேச விடவில்லை அந்த இடத்தில இருக்கவும் விடவில்லை.மனம் நிறைய கேள்விகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். 

வெளியில் வந்ததுமே அவளுக்கு போன செய்தேன். " உங்க அப்பாகிட்ட நம்ம விசயத்த சொல்லிட்டதா என்கிட்ட சொல்லவே இல்ல" என்றேன். அவளோ " இல்ல நான் சொல்லவே இல்ல. எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கும் தெரியல" என்றாள். அவளும் தன் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தாள். 

நாம் செய்யும் பல விஷயங்கள் பிறருக்குத் தெரிவதில்லை என்று நாம் நினைக்கின்றோம், ஆனால் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரிவதில்லை. இன்று தான் அவள் அப்பா தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்த நாள். அவள் என்னிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்த முக்கியமான விசயமும் அது பற்றியாகத் தான் இருக்க வேண்டும். ஏதேதோ எண்ணி கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து போன் வந்தது. போனை உயிர்ப்பித்தேன்.

"என்ன முக்கியமான விஷயம்" என்றேன்.

" நீ வெளியூர் பையன்றதால உன்ன பத்தி விசாரிக்க அப்பா ஒரு டிடெக்டிவ்ட போயிருக்காரு, இன்னிக்கு அந்த டிடெக்டிவ் கொடுக்கப் போற கேரக்டர் ரிப்போர்ட் வச்சு தான் நமக்கு கல்யாணம் நடக்குமா இல்லையான்னு தெரியும்.  மவன ஏதாது தப்பான ரிப்போர்ட் மட்டும் வந்தது அவ்வளோ தான். நான் ஜெயிலுக்கு போகனுமா வேண்டாமான்னு நீ தான் முடிவு பண்ணனும் சொல்லிட்டேன்."  இன்னும் எப்படி எல்லாம் மிரட்ட முடியுமோ மிரட்டிவிட்டு போனை வைத்து விட்டாள். 

ஏற்கனவே இருக்கின்ற குழப்பம் போதாதென்று புதிதாக வேறுஒரு குழப்பம் . மீண்டும் செல்போன் சிணுங்கவே எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தேன், இதற்க்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் எம் டி தான் அழைத்தார். அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையுடன் பேச ஆரம்பித்தேன். 

வழக்கமான விசாரணைகளுக்குப் பின் "என்ன கிருஷ்ணா லவ் லாம் பண்ற போல கல்யாணம் வேற பிக்ஸ் ஆகப் போகுது என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டியே" என்று இவரும் தான் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தார். 

" லவ் பண்றது உண்மை தான் சார் ஆனா இன்னும் கல்யாணம் பிக்ஸ் ஆகல, ஆகுமான்னே தெரியல" என்றேன் விரக்தியுடன்.

" கொஞ்சம் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா கிருஷ்ணா" என்றார். 

" கண்டிப்பா வரேன் சார். ஏன் ஏதும் விசேஷமா" என்றேன் ஆவலுடன்.

" எல்லாம் உன் கல்யாண விசயமாத்தான். உங்க மாமனார்கிட்ட இன்னிக்குதான் கேரக்டர் ரிப்போர்ட் சப்மிட் பண்ண போறேன் அப்போ நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும், அதான் உன்னையும் கூப்டறேன். எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நேர்ல வா மீட் பண்ணலாம்" என்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார் சென்னையின் மிகப் பிரபலமான துப்பறியும் நிபுணர் திரு மணிவண்ணன்.