26 Sep 2014

கருப்பண்ண சாமி...!


மேடவாக்கத்தின் அந்த பரபரப்பான சாலையில் இருக்கும் சாப்பாட்டுக் கடையை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ரொம்பவே சின்ன கடை. கரி படிந்த டியுப் லைட்யுடன் கடனே என்று சுற்றிக் கொண்டிருக்கும் ஃபேன். அழுக்கேறிய மேஜை நாற்காலி. முந்தாநாள் குளித்தது போல் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் ரெண்டு மூன்று சர்வர்கள். மேடவாக்கத்தில் இதை விட நல்ல கடைகள் இருக்கின்றன என்ற போதிலும் அவையனைத்துமே இதைவிட பணக்காரக் கடைகள் அல்லது இதற்கு முன் நான் முயன்று எனக்குப் பிடிக்காமல் போன கடைகள். இது ஒன்று தான் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாக என்னை தத்தெடுத்துக் கொண்டது. 

அலுவலகத்தில் இருந்து கிளம்பு போதே நல்ல பசி. மணிவேறு ஒன்பதைக் கடந்திருந்தது. அப்பா போன் செய்து கேட்ட போது 'கடையில சாப்பிட்டு வாறன்' என்று கூறியிருந்ததால் வீட்டில் சட்டி பானையை கவுத்தியிருப்பார்கள். வேறு வழியில்லை. வண்டியை நேரே இந்தக் கடைக்கு விட்டேன். தோசைக்கு சால்னாவும், சைடிஷ்ஷாக ஆம்லெட்டையும் நினைக்கும் போதே பசி எனக்கு முன்பாக கடைக்குள் நுழைந்து சம்மணக்கால் இட்டிருந்தது. 

பரோட்டா மாஸ்டர் மைதாவைவுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க கல்லாவில் உட்கார்ந்திருந்த முரட்டு மீசை ஆசாமி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மீசைக்கு மட்டும் மூன்று சீப்பு யூஸ் செய்ய வேண்டும் போல, அவ்வளவு தடிமனான முரட்டு மீசை. அது என்னவோ தெரியவில்லை நான் பார்க்கும் முரட்டு மீசை ஆசாமிகள் அனைவருமே எல்லையில் உட்கார்திருக்கும் கருபண்ண சாமி போல் கருத்த ஆசாமிகளாய்த்தான் இருக்கிறார்கள்/தெரிகிறார்கள். நெற்றி நிறைய பட்டையும் இட்டிருந்தார். இப்போது ஓரளவிற்கு அவரை உங்களால் கற்பனை செய்ய முடியும் என்பதால் மேற்கொண்டு நடந்ததைக் கூறுகிறேன். 

கடைக்குள் நுழையும் போது தான் என்னுள் அந்த கேள்வி எழுந்தது. அது என் பர்ஸில் பணம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி. வழக்கமாகவே நான் பர்ஸில் பணம் வைத்துக் கொள்வதை விரும்பாத ஆசாமி, தேவை ஏற்படின் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அண்டார்டிகாவில் புகுந்து அதன் வயிற்றில் அட்டையை சொருகினால் ஒன்று இரண்டு தாள்களை தள்ளிவிடும். போதாகுறைக்கு வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம் என்பது போல தெருவிற்கு ஒரு பெட்டியை வைத்திருக்கிறார்களே. பிறகென்ன கவலை.  

இருந்தும் என்னுடைய ஏ.டி.எம் ட்ரான்ஸ்சேக்சனைப் பார்த்து தான் RBI அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இனி மாதம் எட்டு முறைக்கு மேல் அட்டையை அண்டார்டிகா எந்திரத்தின் வயிற்றில் சொருக்கக் கூடாதாம். பரவாயில்லை எட்டு முறை சொருகலாமே அதுவரைக்கும் ஸ்தோத்திரம்.

கடைக்குள் நுழைகையில் தான் பர்ஸைப் பார்த்தேன், அப்போதுவரை அதில் இருந்த நூறு ரூவாயைக் காணவில்லை, வரும்போது பெட்ரோல் போட்டது நினைவுக்கு வந்தது. எனக்குப் பசித்தால் கூடப் பரவாயில்லை. அந்த கறுப்புக் குதிரை பசிதாங்காது. பர்ஸின் ஓரத்தில் ஒன்றிரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் கண்ணில் பட, கடையின் நடுவாசலில் பப்பரப்ப என்றபடி நின்றுகொண்டே எவ்வளவு இருக்கிறது என எண்ணத் தொடங்கினேன். இதைபார்த்த அந்த மீசைக்கார ஆசாமி/நண்பர்/தாத்தா/கருப்பண்ணசாமி/கடைஓனர் காண்டாகியிருக்க வேண்டும்.

'எப்பா மொதல்ல உள்ள வந்து உக்காந்து சாப்பிடு, அப்புறம் பணத்த என்னிக்கலாம்' என்றார். நிதானமாகத்தான் இருந்தார். ஆனாலும் கண்கள் சிவப்பாய் இருந்தன, கருபண்ண சாமியே தான். 

'இல்லீங்கையா, பணம் இருக்கான்னு தெர்ல, பார்த்துட்டு உள்ள வாறன்' என்றேன் பவ்யமாய். 

'அட அத அப்புறம் பாத்துக்கலாம் மொதல்ல உள்ள போய் உக்காந்து சாப்பிடு'. என் இரண்டு வார தாடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இரண்டு மணி நேரப் பசியை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் போல. 


'இப்ப சாப்ட்டு துட்டு இல்லன்னு சொன்னா விடுவீங்களா, அதான் இப்பவே பாக்குறேன்' என்றேன் சிரித்துக் கொண்டே. என்னிடம் யாராவது இயல்பாய் பேசினால் நானும் அவர்களோடு சேர்ந்து கொள்வேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென்று ஒரு வசனத்தைக் கூறி என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டார். அசந்து விட்டேன். சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த முரட்டு மீசையை கொஞ்சம் ட்ரிம் பண்ணி வெள்ளைச் சாயம் அடித்தால் அப்படியே என் தாத்தா தான். என்ன என் தாத்தா வேற பட்டை அடிப்பார். 

இவர் கூறியது இது தான்,

'எய்யா பசியில இருக்கவன் ஏமாத்தமாட்டான், ஒருவேள ஏமாத்தினான்னு வையி அவன இந்த உலகம் ஏமாத்திருக்க்குன்னு அர்த்தம், அவன் காசு தராட்டாலும் அதப்பத்தி எனக்குக் கவல இல்ல தம்பி. மொதல்ல உக்காந்து சாப்டு, துட்டு இல்லாட்டா நாள கொடு' என்றபடி,எனக்குப் பின் நின்றவரைப் பார்த்து 'சார் உள்ள வாங்க, டேய் தம்பி சாருக்கு என்ன வேணும்ன்னு கேளுடா' கூறிக்கொண்டே கையிலிருந்த தினசரியைப் புரட்டத் தொடங்கினார் கருப்பண்ண சாமி. அவர் கையிலிருந்த தினசரியில் எழுதியிருந்த செய்தி 'நான் மிகவும் விவேகமான இளைஞனைப் போன்றவன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.